Monday, October 04, 2021

கொலுவிருத்தல்

சொல்லாய்வுக் குழுவில் “celebrity என்ற ஆங்கிலச்சொல்லுக்கு விக்சனரி "புகழ்பெற்றவர், புகழாளர், இயவுள், பிரமுகர்" என்ற சொற்களைப் பரிந்துரைக்கிறது. உற்சவர் என்றுங் கூடச் சொல்லலாம். ஆனால் புகழ்முகங்களைக் கொண்டாடும் தமிழகத்துக்கு இவற்றைக் காட்டிலும் சிறப்பான சொல் தேவை." என்று கேட்கப்பட்டது. என் விளக்கங்களை அங்கு சொல்வதில் எனக்குத் தயக்கமுண்டு. அதே நேரத்தில் அச்சொல்லுக்கு இணையாய் ஏற்கனவேயுள்ள பழந்தமிழ்த் தரவுகளிலிருந்தும் சொல்லைப் பெறலாம். இப்படி நான்சொல்வது சிலருக்கு வியப்பாய் இருக்கலாம். celebrate என்பதற்கு origin unknown என்றே ஆங்கிலச் சொற்பிறப்பியலில் போட்டிருப்பார். பொதுவாக இலத்தீன் வழி வரும் ஸ் ஒலி அதற்கு முந்தைய கிரேக்கம் போன்ற மொழிகளில் க் என்றே ஒலிக்கும். கூடவே பல இந்தையிரோப்பியன் மொழிகளில் v என்பது b ஆக ஒலிக்கும். உகரம், எகரம்/ஏகாரம் ஆவது கூட அங்கியல்பு. எனக்கென்னவோ, கொலுவிருத்து என்பதே celebrate ஆனதோ என்ற ஐயமுண்டு. கொஞ்சம் பொறுமையோடு பார்ப்போம். 

தமிழில் உல்லெனும் வேரில் ’உல்>உல>உலக்கு’ எழும். உலக்கல் என்பது குத்தலுக்கான தொழிற் பெயர். உலக்கு>உலக்கை= குத்துந் தடி; பூணிட்ட, அழகுத் தடி. இக்கருவிப்பெயரே கால காலமாய் அரசரின் அடையாளம். அடுத்து, உலக்கு>ஒலக்கு>ஓலக்கு>ஓலக்கம் என்பது உலக்கையோடிருந்த அரசவையைக் குறிக்கும். உல் போலவே குல் வேரும் குத்தல் தொழிற் பெயர் குறிக்கும். குல் வழிப் பிறந்த கொல்லே குத்தலுக்கு இன்னொரு பெயர். கொல்>கொலு= குத்துந் தடி. இன்னொரு வளர்ச்சியில் கொல்>கோல்= குத்துந் தடி. பேச்சு வழக்கில் ’கொலு’ என்பது நெடுங்காலமிருந்தது. சங்க காலத்தில் ’கோல்’ என்ற சொல் வழக்குப் பெற்றிருக்கலாம்.. கொலுவும் கோலும் அரசர் அடையாளங்களே ஓலக்கம் போலவே கொலுவும் அரசவையைக் குறிக்கும். கொலுவிருத்தல்= அரசன் அவையிருத்தல்; கொலுவிருத்தம்= கொலுவிருக்குஞ் செயல். வீற்றிருந்தல்= மற்றவரிலும் பார்க்கச் சற்று உயரமாய் தனித்திருத்தல். இதைச் சிறப்போடு இருத்தலென்பார். கொலுவீற்றிருத்தல்= அரசன் தன் அவையில் சிறப்போடு இருத்தல். அரசனுக்கு மட்டுமின்றிக் கிழாருக்கும் தனிக் கொலுக்களுண்டு. கொலுக்களின் இலச்சினைகளை வைத்தே அவற்றை அடையாளங் காணமுடியும். 

இக்காலத்தில் அரசர்களில்லை. ஆனால் பல்வேறு கொலுவிருத்திகள் (celebrities) உள்ளார். கொலுவிருத்தம்=  celebration. மன்னன் கொலுவிருக்கையில் மந்திரிகளும், அமைச்சரும், படைத்தலைவரும். அம்பலக்காரரும், விருந்தினரும், பொதுமக்களும் கூடியிருக்கலாம். அவையில் கோத்தொழில் (அரசவிவகாரத்தைச் சிலப்பதிகாரத்தில் இப்படித்தான் சொல்வர்.) போகச் சில போது கலை நிகழ்ச்சிகளும் நடக்கலாம். இப்படி நடப்பதையே “கொண்டாட்டம்” என்கிறோம். இன்றோ, celebration க்கு ”கொலுவிருத்தம்” என்ற கருத்தீடு மறைந்தே போயிற்று. ”கொண்டாட்டமே” மிஞ்சியுள்ளது. எங்கெலாம் ”celebration”. வருகிறதோ, அங்கெலாம் ’கொண்டாட்டத்தையே” பயன் உறுத்துகிறோம். எதை முதன்மைப் படுத்த வேண்டுமோ, அதைச் செய்யாது “கலியாட்டம்= ஆரவாரம்”, ”களியாட்டம்= மகிழ்ச்சி கொள்ளல்” போன்றவற்றை நமக்குச் சொல்லுகிறார். குறைப்பட்ட மொழியாக்கம் என்பது இதுதான். நம் சிந்தனைப் போக்கையே மாற்றுகிறது.

எண்ணிப்பாருங்கள். தை முதலில் பொங்கல் விழா வருகிறது. இந்நாளில் ”பொங்கல் என்னும் கருத்தீடே முகன்மை. அதுவே நம்முன் கொலுவிருக்கிறது”. அதை மறந்து கொண்டாட்டம் மட்டும் பேசினால் எப்படி? Pongal celebration என்பதைப் ”பொங்கல் கொலுவிருக்கிறது” என்று சொல்லாது ”பொங்கல் கொண்டாட்டம் என்றால் எப்படி? அதேபோல் ”விடுதலைநாள் கொண்டாட்டம்” என்பது சரியா? ”விடுதலை நாள் கொலுவிருத்தம்” சரியா? இற்றைத் தமிழில் ஏன் இப்படி ஓரப் பார்வையே பார்த்துக் கொண்டுள்ளோம்? கமலகாசன் ஒரு கொலுவிருத்தர். இரசினிகார்ந்த மற்றொரு கொலுவிருத்தர். தாமே கொலுவிருக்க விழைபவர். அவரைப் ”புகழ்முகம்” என்பது சரி வருமா? கொலுவிற்கு இருக்கும் வலிமை புகழுக்கு உண்டா?

celebrant = கொலுவேற்றி

celebrate = கொலுவிருத்து

celebration = கொலுவிருத்தம்

celebrity = கொலுவிருத்தி 

இன்னுங் கொஞ்சம் அசைபோட்டபோது, ”இருத்தல் என்பதை இங்கு சொல்லத்தான் வேண்டுமா? அதுவன்றி மேலிருக்கும் 4 சொற்களை இன்னுஞ் சுருக்கலாமே?” என்று தோன்றியது.

celebrant = கொலுவேற்றி

celebrate = கொலுவேற்று

celebration = கொலுவு

celebrity = கொலுவர் 

அன்புடன்,

இராம.கி.


1 comment:

ந.குணபாலன் said...

🙏🏾நல்லதொரு விளக்கம்,சிந்தையைத் தூண்டும் எடுத்துக்காட்டு.
தமிழைக் கொலுவேற்றும் பணியில் உங்கள் வழிகாட்டல் இன்னுமின்னும் சிறக்கட்டும். மெத்தப் பெரிய உபகாரம் ஐயா!