Wednesday, September 28, 2005

சில துளிப்பாக்கள்


அன்புடையீர்,

அண்மையில் "மூன்று நிகழ்ச்சிகளும் ஒரு ஹைக்கூவும் (அ) இதுவா ஹைக்கூ?" என்ற தலைப்பில் திரு நந்தன் http://mkannadi.blogspot.com/2005/09/blog-post.html சில குறிப்புக்கள் குறித்திருந்தார்.

முதலில் அவர் பதிவை அப்படியே இங்கு வெட்டி ஒட்டி இருக்கிறேன். பின் என் பங்களிப்பு.
---------------------------------
எல்லாரும் குஷ்பு தங்கர் பச்சான் மற்றும் தமிழ் கற்பு பண்பாடு பற்றி தீவிரமான கருத்தாலோசனை செய்து கொண்டிருக்கும் போது, நான் S/W engineerக்கே உரித்தான ஒரு புனித (?!) ஸ்தலத்துக்கு யாத்திரை சென்றிருந்தேன். பயனத்தில் மூன்று காட்சிகள் (நிகழ்ச்சிகள்) மனதில் நின்றன. ஹைக்கூ என்பது முரண் அல்லது ஆச்சரியம் கொண்ட ஒரு நிகழ்வை படம்பிடிப்பது - Snapshot என்று எங்கேயோ படித்த ஞாபகம். அதனால் முதல் காட்சியை அப்படி கொடுத்துள்ளேன் (நன்றாய் கிழிபடுவேன் என அறிந்தே!)

1.
ரயிலடி நொண்டி பிச்சைக்காரனின்
கட்டைக்காலில் உடைந்திருந்தது
சுண்டுவிரல்.

இன்னும் சரியாக வரவில்லை என நினைக்கிறேன். இரண்டாவது வரியிலேயே வரும் முரண்/ஆச்சரியம் கடைசி வரியில் தான் வரவேண்டுமோ? (பேசாமல் "உடைந்திருந்தது" எடுத்து அடுத்த வரியில் போட்டுடலாமா?:-) )

மற்ற இரண்டும் சரியாய் பிடிபடவில்லை, அதனால் அப்படியே...

2.
ரயில் பிடிக்கும் அவசரத்தில் ஒரு குடும்பம். அவர்களுடைய அவசரங்களுக்கு ஆட்படாமல் அந்த நிமிடத்தில் மட்டும் வாழ்வது போல் ஒரு சின்ன பெண் -பாதி காலியான ஒரு கோன் ஐஸ்கிரிமை சுவைத்துக்கொண்டு அப்பா பின்னால் சென்றுக்கொண்டிருந்தாள். ஐஸ்கிரிம் ஆர்வத்தில் அடிக்கடி பின் தங்கிவிடுகிறாள். அப்பா 2-3 முறை திட்டிவிட்டார். மறுபடியும் அந்த சின்ன பெண் பிந்தங்கிவிட, சற்று முன்னால் சென்றுவிட்ட அப்பா திரும்பி வருகிறார். வந்தவர் சட்டென்று அவளிடம் இருந்த ஐஸ்கிரிமை பிடுங்கி வாயில் போட்டுக்கொண்டார் (அவளை அடிக்கவோ அல்லது தூக்கிக்கொண்டு போவார் என்றே எதிர்பார்த்தேன்) பின் விறுவிறுவென நடக்க ஆரம்பித்தார். ஒரு நிமிடம் ஒன்றும் புரியாத குழந்தை, சுதாரித்து அவர் பின்னால் அழுதவாறே ஓடலானாள்.

3.
புனித ஸ்தலம் என்றேனே அது Chennai US counselate- தான்.
வேலை முடிந்து வெளியே வந்து சாலையை கடக்க முயன்றேன்.
"ஹலோ" திரும்பி பார்த்தால் ஸ்டென் -கன் சகிதம் ஒரு போலிஸ்காரர். சற்று பயந்தபடி அருகில் போனேன்.
"தமிழா?" - அவர்
"ஆமாங்க"
"வேலையெல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா"?
"முடிஞ்சுதுங்க"
"படிக்க போறியா? வேலை பாக்கவா?"
"வேலைக்காக"
நல்லது. ஆல் த பெஸ்ட்
தாங்ஸ்
"நம்பள கொஞ்சம் கவனிச்சுட்டு போறது.."
அதுவரை இருந்த பயம் கலந்த மரியாதை சட்டேன மறைந்தது. பதில் சொல்லாமல் திரும்பி நடக்க ஆரம்பித்தேன்.
"தம்பி...ஹலோ" என என் பின்னாலிருந்து வந்த குரலை வாகனங்களின் சத்தம் அமர்த்திவிட்டது.

முதல் ஹைக்குவை(?) திருத்துங்கள், முடிந்தால் மற்ற இரண்டுக்கும் எழுதுங்கள்! மூன்றாவது முடியாது என்றே தோன்றுகிறது. இங்கே கவிஞர்களுக்கா பஞ்சம்?

பி.கு: எழுத்து பிழைகள், குறிப்பாக ண/ன மாற்றி உபயோகிப்பது இருந்தால் (இருக்கும்) எனக்கு அஞ்சலில் அனுப்பவும். மிக்க நன்றி!

ந.ந்.த.ன் - 1:46 AM

--------------------------------------------
இனி இராம.கி.யின் பங்களிப்பு:

துளிப்பா (haiku) என்பது தமிழுக்குப் புது வடிவம். ஓரளவு அதன் உள்ளடக்கம் பலருக்குப் புலப்பட்டாலும், உருவில் இன்னும் சோதனை நடந்து கொண்டுதான் இருக்கிறது.

துளிப்பா என்பது ஒரு கணநேரப் படப்பிடிப்பு. காட்சிகளின் தொடர்ச்சியாய் ஒன்றை விவரிக்கும் போது ஒன்றிற்கும் மேற்பட்ட துளிப்பாக்களில் தான் விவரிக்க இயலும். அதிலும் ஒரு சிக்கனத்தைக் காட்ட இயலும் தான். குறைந்த காட்சிகளில் கதையைக் கொண்டு வரலாம். துளிப்பாத் தொடரில் தேர்ந்த தொகுப்பு இருக்க வேண்டும்.

என்னால் முடிந்ததைச் செய்திருக்கிறேன். கீழே வருவதில் இருவுள் என்பது rail என்பதைக் குறிக்கிறது. ஆங்கிலத்தில் rail என்பது இரும்பால் ஆன தண்டவாளத்தைக் குறிக்கிறது. இருவுள் என்ற சொல்லும் அப்படிப் பிறந்த சொல் தான். கவணை = gun; இங்கே நந்தன் கூறியது போல் sten gun. "hello" என்பது தென் மாவட்டங்களில் கடற்கரைகளில் கூறப்படும் "எல்லா" என்பதற்கு இணையானது. எல்லன் என்பவன் தோழன்.

என் துளிப்பாக்கள்.

1.
இருவுள் நிலையப் பிச்சைக் காரன்
நொண்டி யடிக்கும் கட்டைக் காலில்,
உடைந்து கிடப்பது சுண்டு விரலோ?

2.
இருவுள் பிடிக்கும் குடும்ப அவசரம்;
கவலை இன்றி, கையில் கூம்புடன்,
பனிக்குழை சுவைக்கும் பாலகி பின்னால்!

சின்னவள் பின்னுறச் சினமுறத் திரும்பி,
சட்டெனக் கூம்பைச் சடுதியிற் பிடுங்கி,
தன்வாய்க் குள்ளே தள்ளிடும் அப்பா!

விரைநடை அப்பா விழுங்கலைப் பார்த்து
ஒருகணக் குழப்பம்; ஓவெனக் கூவியே,
ஓடித் தொடரும் புரியாக் குழந்தை!

3.
நுழைமதி கிடைத்து வெளிவரும் மகிழ்ச்சியில்,
"தம்பி" என்னுமோர் கவணையர் அழைப்பு;
சட்டெனக் குமிழ்ந்தது திகைப்பும் பயமும்.

பதறிப் பக்கலில் போனதும் கேட்டது:
"வேலையா, படிப்பா, நுழைமதி கிடைத்ததா?"
காவல் கவணையர் ஆற்றுப் படுத்தலோ?

ஆர்ந்த கனிவில் பயத்தை விடுத்துத்
திரும்பினேன்; இம்முறை குழைவுப் பேச்சு;
"நம்மையும் கொஞ்சம் கவனிச்சுப் போறது"

பயமும் மதிப்பும் சட்டெனக் கரையச்
சாலை விரைந்தேன்; வண்டி இரைச்சல்;
"எல்லா" என்பதாய் அவரொலி கேட்டதோ?

அன்புடன்,
இராம.கி.