Wednesday, January 31, 2024

சாமி

 சாமி என்ற சொல்லின் பெண்பால் பெயரைக் கவிஞர் இரவாக் கபிலன் தன் முகநூல் பக்கத்தில் கேட்டிருந்தார்.அந்தச் சொல் பால் குறிக்காச் சொல். அதற்கு இரண்டு பொருள்கள் உண்டு. ஒன்று இறைப்படிமம், இன்னொன்று துறவி. (ஆணாகவும், பெண்ணாகவும் இருக்கலாம்.) 

முதலில் இறைப் படிமத்திற்கு வருவோம். அது மரம், மண், கல், மாழை என்று பலவற்றால் அமையும். எதில் செய்தாலும் பளபள என்று ஒளி தரும் படி, இருட்டிலும் ஓரளவு தெரியும்படி, தேய்த்துப் பளபளப்புக் கூட்டியே செய்வர். சொல்>சொலித்தல், சொலுத்தல் போன்றவை ஒளியோடு இருக்கும் நிலையைக் குறிக்கும். சொல்>சொலுவம் = படிமம். சொலுவத்தைச் சொருபம் என்று சங்கதம் ஆக்கும். 

இனி ஒளிக்கு வருவோம். சூரியன் சாயும் நேரததில் வெள்ளொளி தெறித்து வெவ்வேறு நிறங்கள் பிரிந்து மறுபளித்தோ, ஒளிமுறித்தோ காட்டும். சாயும் நேரத்தை சாயுங்காலம் என்பார். அந்நேரத்தில் சூரியன் சாம்புகிறது. பொழுது (சூரியனுக்கு இன்னொரு பெயர்) சாயும் காலத்தைச் சாம்பும்> சாமும் காலம் என்றும் சொல்லலாம். 

மாலை மங்கும் நேரத்தில் சாம்பி> சாமித் தெரியும் சொலுவம் சாமி என்று அழைக்கப்பட்டது. இன்றும் கோயில் கருவறை இருட்டில் வெறும் அகல் விளக்கு ஒளியில் இறைப் படிவம் மங்கலாய்ச் சாமித் தெரிவதால் அது சாமி என்றும் அழைக்கப்பட்டது. எல்லா இறைப் படிமங்களுக்கும் இது பொதுவான சொல்.  

சாமி என்ற சொல் இந்தையிரோப்பியனில் கிடையாது. சங்கதம், பாகதம் சேர்ந்த வடபுல மொழிகளில் தமிழ் சார்ந்த கோயில் பண்பாட்டால் பயனாகிறது.அது அங்கு கடன் சொல். “இந்து மதம்” என்று இன்று சொல்லப்படும் கலவை மதப்பெயர் உண்மையில் தென்னக ஆகம மரபையே குறிப்பிடுகிறது. எல்லாவற்றையும் ஆரியம் என்பது அறியாமை.

இனித் துறவிகளுக்கு வருவோம். பொ.உ.மு. 2500 க்கு முன்னால், தனிச்சொத்து ஏற்படுவதற்கு முன்னால், நிலைத்த மருத, நகர வாழ்க்கைக்கு முன்னால், துறவு என்ற சிந்தனை மாந்தருள் எழ வாய்ப்பேயில்லை. சொத்தின் நேரெதிர்ச் சிந்தனை துறவாகும். கண்ணை மூடிக்கொண்டு சம்மணம் கொட்டிச் சிந்தனையை ஒன்றுகூட்டித் தானிப்பது தானம் ஆனது. தானத்தைத் தான் சங்கதம் த்யானம் என்றாக்கும். சம்முதல் என்பது 2 கால்களையும் ஒன்றேபோல் கூட்டி உட்காருவது. இச் சமநிலையில் இருந்துசெய்யும் தானம் சமதானம்  இது சமயம் எனப்பட்டது. இச்சிந்தனை நிலைப்பைக் கடவுளை நம்புபவனும் செய்யலாம். கடவுளை நம்பாது தன்மனத்தை ஒருங்குபடுத்த விழைபவனும் செய்யலாம். சமயம் என்பது ஓர் ஒருங்குபட்ட சிந்தனை. அவ்வளவு தான்.

சமயத்தில் ஆழ்ந்தவன் சமயி. சம்முதலின், சமயுதலின் நீட்சி சாமுதல். சாமுகிறவன் சாமி. தானம் செய்பவன் என்று அதற்குப் பொருள் அமையும். மற்கலியும், வர்த்தமானனும், புத்தனும் சாமிகள். அதனால் தான் பகவான் என்றும் அவர் அழைக்கப்பட்டார். சாமி என்ற இத் தனிச்சொல் பால் ஏற்காது. பால் ஏற்க வேண்டுமெனில் கூட்டுச்சொல் வேண்டும் துறவேற்ற சாமிகளில் ஆண் சாமியும் உண்டு. பெண் சாமியும் உண்டு.                                

Sunday, January 21, 2024

பெண்பாற் சொற்கள்

 அண்மையில், “மாந்தன், மன்னன், அமைச்சன், புலவன், கவிஞன், கலைஞன், சிற்பி, கஞ்சன், ஒற்றன், தச்சன், வணிகன், காப்பாளன், வீரன், அறிஞன், மூடன், தொண்டன், சீடன், தளபதி, ஆசான், பங்காளி - இவற்றின் பெண்பாற் சொற்கள் என்ன?” என்று திரு. தாமரைச்செல்வன், தமிழ்ச் சொல்லாய்வுக் களத்தில் கேட்டிருந்தார்.

நான் பின்பற்றும் முறை கீழே வருகிறது. 

----------------------  

பொதுவாய், அன் ஈற்றை எடுத்தபின், மிஞ்சிய பகுதி: 

1. கு,சு,டு,து,பு,று என முடிந்தால், அள் ஈறும் (காட்டு: அமைச்சள், ஆசாள். ஒற்றள், கஞ்சள், சீடள், தச்சள், தொண்டள், மாந்தள், மூடள், வணிகள்),    

2. கு,சு,டு,து,பு,று என முடியேல், மெய்ம்மயக்கம் கண்டு, ஐகார மெய்யும் (காட்டு: அறிஞை, கவிஞை, கலைஞை, புலவை, மன்னை, வீரை) 

சேர்க்கலாம். மூன்றாம் முறையாய், எல்லாவற்றிற்கும் அன் ஈறு எடுத்துப் பின் அத்துச் சாரியை + இகரம் இட்டும் சொல்லலாம்.

சிற்பி, (தள)பதி, (பங்கு)ஆளி  போன்றவை பால் குறியாச் சொற்கள்.

காப்பாளன் என்று சொல்லாது காப்பாளி என்பது சிறப்பு. 

Thursday, January 18, 2024

ஐயடிகள் காடவர்கோன்.

தேவாரம் 11 ஆம் திருமுறையில் உள்ள. சிவத்தளி வெண்பா (அல்லது சேத்திரக் கோவை) எனும் இவர் நூலில் 24 வெண்பாக்கள் உள்ளன. இவ் வெண்பாக்கள் யாவும், ‘யாக்கை  நிலையாமையை உணர்ந்து, இன்றே, இப்போதே தலங்கள் தோறும் சென்று சிவனை வழிபட்டு உய்தல் வேண்டும்’ என அறிவுறுத்தும். 

ஐயு-தல் = இதுவோ, அதுவோ எனத் தடுமாறல். 

ஐயம்/ ஐயப்பாடு ஐயு-தலின் வழி எழுந்த பெயர்ச்சொற்கள். 

ஐயப்பாட்டின் காரணமாய் எழுந்த கூர்த்த சிந்தனையால் இவர் பாக்கள் எழுந்ததால், இவர் ஐ அடிகள் எனப்பட்டார். ஐ = கூர்மை. ஐ-த்தல் = கூர்த்தல்/.

ஐயு-தல், ஐ-த்தல் என்னும் 2 வினைகளுமே இவரின் துறவுப்பெயரின் கீழ் பொருந்தும். காட்டாக, இவர் நூலின் 4 ஆம் பாட்டைப் பார்க்கலாம். 

காளை வடிவொழிந்து கையறவோ(டு) ஐயுறவாய்

நாளும் அணுகி நலியாமுன் - பாளை

அவிழ்கமுகம் பூஞ்சோலை ஆரூரற்(கு) ஆளாய்க்

கவிழ்கமுகம் கூம்புகஎன் கை.

காளைவடிவு ஒழிந்து உன் கை செயலற்ற நிலையில், ”ஆகா, இறையை இதுவரை நினையாது இருந்தோமே என நாளும் அணுகி நலியாமுன், ஆரூரர்க்கு ஆளாய், முகங்கவிழ்த்து, கைகூப்புக” என்கிறார் ஐயடிகள்.

இவர் மிகுந்த கோயில்களைப் பாடவில்லை. இவர் காலத்தில் மிகக் குறைந்த கோயில்களே இருந்திருக்கலாம். இவர் பாடிய கோயில்கள்.

1.தில்லைச் சிற்றம்பலம் (காவிரி வடகரை)

2.திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம் (காவிரி தென்கரை) 

3.திருவையாறு (காவிரி வடகரை)

4.திருவாரூர் (காவிரி தென்கரை)

5.திருத்துருத்தி (காவிரி தென்கரை)

6.திருக்கோடிகா (காவிரி வடகரை)

7.திரு இடைவாய் (காவிரி தென்கரை)

8.திரு நெடுங்களம் (காவிரி தென்கரை)

9.திருக் குழித்தண்டலை / திருத் தண்டலை நீள்நெறி (காவிரித் தென்கரை)

10.”கடியிலங்கு தோடேந்து கொன்றையந்தார்ச் சோதி” என்ற விவரிப்பு உள்ள ஊர் எதுவென்று சொல்ல முடியவில்லை. 

11.திருவானைக்கா (காவிரி தென்கரை)

12.திருமயிலை புன்னையங்கானல் (தொண்டை)

13.உஞ்சேனை மாகாளம் (உச்செயினி)

14.வளைகுளம்/வளர்புரம் (தொண்டை) - வைப்புத் தலம்.

15.திருச்சாய்க்காடு (காவிரி வடகரை)

16.திருப்பாச்சில் ஆச்சிராமம் (காவிரி வடகரை)

17.திருச்சிராமலை (காவிரி தென்கரை)

18.திருமழபாடி (காவிரி வடகரை)

19.திரு ஆய்ப்பாடி (கொள்ளிடத் தென்கரை, காவிரி வடகரை))

20.திருக்கச்சி ஏகம்பம் (தொண்டை)

21.திருப்பனந்தாள் (காவிரி வடகரை)

22,திருவொற்றியூர் (தொண்டை)

23.திருக்கடவூர் (காவிரி தென்கரை) 

24.திரு மயானம் (இது கச்சி மயானமா, கடவூர் மயானமா, நாலூர் மயானமா? - தெரியாது. 

முன்னே சொன்னது போல், இவர் பாடல்கள் எல்லாம் நிலையாமையையே பேசுவதால் ஐயடிகள் என்னும் இவரின் துறவுப்பெயர் இவருக்கு முற்றும் பொருத்தமே. காடவர் என்பது 6ஆம் நூற்றாண்டிற்குப் பின்வந்த பல்லவ நாட்டு மன்னரையும் குறிக்கும். காடவர் எனும் பெயரின் காரணத்தைப் பின்னர்  வேறு இடத்தில் கூறுகிறேன். 

சிம்ம விண்ணுவின் தந்தை சிம்ம வர்மன் (பொ.570-585) தான் ஐயடிகள் காடவர் கோன் என்று ஒரு சிலரும், இரண்டாம் நரசிம்மவர்மனின் (கழற்சிங்கனின்) தந்தையான முதலாம் பரமேச்சுரவர்மன் (பொ.உ.670-695) தான் என்று வேறு சிலரும் குறிப்பர். இருவருக்கும் இடையே ஏறத்தாழ 100 ஆண்டுகள் இடைவெளி உண்டு. ”யார் உண்மையில் ஐயடிகள்?” என்று சரியாக நிறுவ, கல்வெட்டுகள் உதவலாம். ஆர்வமுள்ளோர் தேடுக.  

[ஐயடிகள் என்பதை ”5 பாதங்கள்” என்று தவ்றாய்ப் பொருளைப் புரிந்து கொண்டு, சிம்மவர்மனைச் சிம்ஹாங்க, பாதசிம்ஹா, பஞ்சபாத சிம்ஹா எனச் சில வரலாறு திருத்தியர் வடமொழி வழி அழைத்துள்ளார். இதுபோன்ற தவறான மொழிபெயர்ப்புகள் கோயில்கள் தொடர்பாய் அதிகம். வட மொழியில் இருந்து தமிழுக்குப் பெயர்த்ததாய் இதையும் விக்கிப்பீடியா தலைகீழ்ப் பாடம் சொல்லும். இதையெலாம் யாரும் எப்போதும் சரி செய்ததில்லை.]


Sunday, January 07, 2024

விசாரணை

 இது தமிழ் தான்.

அள்> அண்= மேல்.

அண்> அண்ணம்= மேல்வாய்

அண்ணுதல்= மேலுதல், நெருங்குதல்;

அள-த்தல்> அண-த்தல்= மேல்நோக்குதல், மேலறிதல்

அணவு, அணம், அணை= மேலும் அறிந்தது. தடுத்தது, காத்தது


ஆர்-தல்= நிறை-தல். முழு-தல்

ஆர்+ அணை= ஆரணை முழுதாய் மேலறிந்தது


விள்> விய்> விய்யு-தல்= விரி-தல்; விய்யம்> வியம்= விரிவு;

விய+ ஆரணை= வியாரணை= விரிவாய், முழுதாய், மேலறிந்தது.

வியாரனை> விசாரணை. இது வடக்கே விசாரண் என்று போகும்


Friday, January 05, 2024

புகார் நகர அடித்தளச் சிந்தனை.

அண்மையில் வெனீசு நகரம் பற்றிய ஒரு விழியத்தை என் முகநூல் பக்கத்தில் முன்வரித்தேன். அது என் சிந்தனையைத் தூண்டியது. இத்தாலிய வெனிசு நகரம் மரத்தூண்களின் மேல்  அமைந்தது போல் புகாரின் ஒரு பக்கமும் மரத்தூண்களின் மேல் அமைந்திருக்கலாம். அது நடக்கக் கூடியதே. ஏனெனில் புகாரின் ஒரு பகுதியும் சதுப்பு நிலத்தின் மேல் அமைந்ததே.  

(அங்கிருந்து வெளிவந்த நகரத்தார் நீரழிவிற்குப் பயந்து செட்டிநாட்டில் தரையில் இருந்து 6 அடிக்கும் மேலுயர்ந்து காட்சியளிக்க்கும் வீடுகளைக் கட்டிக் கொண்டு இருக்கிறார். 

புகாரின் பெரும் செல்வந்தர் வீடுகளுக்கு முன்னால் ஆண்டு முழுதும் நீர் (அது ஆறோ, கடலோ, மொத்தத்தில் ஒரு கழி நிலம்) இருந்துகொண்டே இருக்கும். வீட்டிற்குள் நீர் வந்துவிடாமல் இருக்க இவ்வளவு உயரம் வேண்டுமாம். தவிர வீட்டிற்குள் நுழைய ஏழெட்டுப் படிகள். படகு வந்தால், அதைச் சீராய்க் கட்டி நிறுத்துதற்குத் தோதாய், வீட்டுவாசலில் 2 தூண்கள். தூண்களில் படகைக் கட்டி படிகளில் இறங்கி வீட்டிற்குள் போகவேண்டும். நெய்தல் நகரத்திற்கான ஒரு கட்டிட அடவு , இன்று சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டப் பாலை நிலத்தில் முற்றிலும் முரண் தோற்றத்தில் காட்சியளிக்கும். 

நகரத்தாருக்குத் தெரிந்த ஒரே அடிப்படைக் கட்டட அடவு (design) அது போலும்.  20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் நாட்டு விடுதலைக்கு அப்புறம் தான் இந்த அடவை அவர் மாற்றினார். அதுவரை எங்கு நோக்கினும் புகார் அடவு தான். 

ஒரு காலத்தில் ”நகரம்” என்றால் புகார் தான்.  1950 களில் “பட்டணம்” என்றால் சென்னை  என்பது போல் இதைக் கொள்ளலாம். ”எம் புள்ளை பட்டணம் போயிருக்கான்.”  

புகார்ச் செல்வந்தர் வீடுகளின் எச்சம் இன்றும் செட்டிநாட்டில் மிஞ்சுகிறது. கூடவே பெரிதும் அழிந்து வருகிறது. பராமரிக்கச் செல்வமில்லை; ஆட்களும் இல்லை. கால காலமாய்த் தொகுத்துச் சேர்த்த பட்டறிவும் செல்லரித்துப் போய்விட்டது. வீட்டு மேங்கோப்பைப் (superstructure) உபிரித்து, தேக்கு மரத் தூண்கள், உத்தரங்கள், பட்டைகள் , பலகைகள் ஆகியவற்றை விற்று, சுவர்களை இடித்து, நிலத்தை மனைகளாக்கி விற்கத் தொடங்கிவிட்டார். நிலத்தின் விலையும் கன்னாப் பின்னா என்று போகிறது.   

புகார் நகரத்தில் இருந்த மற்றோரின் கட்டமைப்பு காவிரிப் புலத்தின் கால்வாய்கள் ஓரத்தில் அங்கும் இங்குமாய் இன்றும் சிறிதளவு வெளிப்படும். புகாரின் ஒருங்கு சேர்ந்த நகரமைப்போ இன்றும் நம் யாருக்கும் தெரியாது. நுட்பியல் தெரிந்த வரலாற்றாய்வாளர் யாரும் பிச்சாவரம், முத்துப்பேட்டை, திருமறைக்காடு போன்ற இடங்களில் அலையாத்திக் காடுகளுக்கிடையே தூண்களின் மேல்நிற்கும் கட்டுமானத்தைச் செய்துபார்க்க முயன்றதில்லை. இதுபோல் செய்து பார்த்து உண்மை தேரும்  வெள்ளோட்டக் கட்டுமானங்களில் நமக்கு ஆர்வமும் இல்லை. 

மேலையரும், 20 ஆம் நூற்றாண்டு ஆசிரியரும் எழுதிய வறட்டு வரலாறே  நமக்குப் போதும் போலும். அவர் எழுதியதைப் பின்பற்றி, தமிழர் வரலாற்றைப் புறக்கணித்து, ”அசோகர் சத்திரம் கட்டினார், சாவடி கட்டினார், சாலையின் இரு மருங்கும் மரங்கள் நட்டார்” என்று நெட்டுருப் போட்டு வரலாற்றுத் தேர்வில் கேட்கப்படும் கேள்விக்கு ஒரு விடைத்தாளில் கொப்பளித்தால் நமக்குப் போதும். “2 மார்க்” கிடைத்துவிடும். இதுபோல் 35 மதிப்பெண்கள் கிடைக்கத் தான் நாம் எல்லோரும் வரலாறு படிக்கிறோம். அதற்கு மிஞ்சிய ஆர்வமெல்லாம் நம்மிடம் இல்லை. தமிழர் நாகரிகமாவது ஒன்றாவது? இவர் எக்கேடோ கெட்டுத் தொலையட்டும்.) 

இற்றைக் கொச்சி, எரணாகுளமும் கூடப் பழங்காலப் புகார் போலத் தான். பல இடங்களில் மரத்தூண்களின் மேல் பல்வேறு கட்டுமானங்கள் இருக்கும். கொற்றவை புதினத்தில் புகாரின் இதுபோன்ற கட்டுமானத்தை எழுத்தாளர் செயமோகன் மிக நன்றாய் விவரித்திருப்பார். (அது படிக்க வேண்டிய, குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய, ஒரு புதினம். செயமோகனைத் திட்ட மட்டும் செய்யாமல், அவர் எழுதிய இது போன்ற நல்லதையும் நாம் போற்றலாம்.)

தொல்லியலார், வரலாற்றாய்வர் போன்றோர் இதுபோன்ற கட்டுமானத்தை ஆய்ந்து மேலும் தம் களப்பணியால் கடலுள் தேடினால், ஒருவேளை மாய்ந்த புகாரைக் கண்டுபிடிக்க முடியலாம். 


Tuesday, January 02, 2024

Gig workers = கறங்குழையர்

”ஏன் கிக் தொழிலாளர் என்று பெயர்வைக்க வேண்டும்? அலுவல் சாராத் தொழிலாளர் எனலாமா?அல்லது வேறுசொல் வழக்கில் உண்டா?” என 3 நாட்கள் முன் திரு.Neechalkaran Raja “ தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்” குழுவில் கேட்டார். என் பரிந்துரை கீழே: 

அதற்கு முன், ”காலங்கள்” தொடரில் 2 ஆம் பகுதி ”புவியாடும் கிறுவாட்டம்” எனும் இடுகையைப். (https://valavu.blogspot.com/2003/09/2.html) படித்து விடுங்கள்.  அதிலிருந்து தேவையானதை வெட்டிக் கீழே ஒட்டியுள்ளேன். 

--------------------------------

பத்து, பன்னிரண்டு அகவையில் பம்பரம் விளையாடி இருக்கிறீர்களோ?

அட நீங்க ஒண்ணு, யாருங்க இப்பவெல்லாம் பம்பரம் விளையாடுறா? இப்பத்தான் எங்கு பார்த்தாலும் மட்டையும் பந்துமா, ஆங்கிலக் கிட்டிப்புள் அல்லவா ஆடுகிறார்?

”எத்தனை இளையருக்குப் பம்பரம் சொல்லித் தருகிறோம்? " - என்கிறீரோ? நீர் சொல்வதும் சரிதான், மொத்தத்தில் இன்னொரு பண்பாட்டுச் சின்னம் போயே போச்சு!

பம்பரத்தை நூலோடு பிணைத்து சொடுக்கித் தரையில் குத்தும் போது, 4 வித இயக்கங்களைக் காட்டும். முதலில், கூரான அச்சில் இருந்தவாறே தன்னைத் தானே உருட்டிக் கொள்ளும். (பம்முதல் = நூலோட்டுதல்) 2 ஆவதாகத் தரையில் பரவி (பம்புதல் = பரவுதல்) ஒரு முழு வலயமோ, பாதியோ போடும். இதுபோக 3 ஆம் இயக்கமும் காட்டும். கிறுவாட்டம் (gyration) எனும் இதை வாழ்வின் பல காலங்களில் பார்த்துள்ளோம். கீழே விவரமாகப் பார்ப்போம். 4 ஆம் இயக்கம் தலையாட்டுவது; அதை நெற்றாட்டம் (nutation) என ஆங்கிலத்தில் குறிப்பர்.

சில போதுகளில் தலை கிறுகிறுக்கிறது என்கிறோம் அல்லவா? குறிப்பாக உருளைக் கூட்டைகளில் (roller coaster) ஏறியிறங்கிச் சுற்றி விளையாடி , அது முடிந்தபின் ஏற்படும் கிறுகிறுப்பு இக் கிறுவாட்டத்தால் ஏற்படுகிறது. (கிர்ரென்று சுற்றுகிறது, கிறுவுதல், கிறுக்கு, கிறுக்காட்டம், கிறங்கு, கறங்கு போன்றவை இதனோடு தொடர்புடைய சொற்கள்.)

ஊரிலே தென்னம் பாளையைக் குடத்திலிட்டு அம்மனுக்கு மதுக்குடம் எடுக்கிறார்; இதுபோல, முருகனை நினைந்து பழனிக்குப் பால்குடம், காவடியாட்டம் எடுத்துப் போகிறார்; இப்பொழுதுகளில் சிலருக்கு மெய்ம்மறந்த நிலையில் கிறுவாட்டம் வருகிறது; தன்னினைவு உள்ளபோது ஆடமுடியாத கிறுவாட்டம் மெய்ம்மறந்து முருகனை நினைக்கையில் தன்னுளே ஈடுபட்டுச் சட்டென வந்துவிடும். அதிலேதோ துரித கதி, தாளக் கட்டு, மொத்தத்தில் ஒரு கிறுகிறுப்பு. இக் கிறுகிறுப்பிலும் குடம் கீழே விழாது நிற்கிறது.காவடி அசராது நிற்கிறது.

கிறுவாட்டத்தில் கூடக்குறையத் தலையாட்டுவதைத் தான் நெற்றாட்டம் என்கிறோம். (நெற்று = nut, இந்த nut -ல் இருந்துதான் nucleus, nuclear science எல்லாம் பிறந்தன. தமிழில் நெற்றுழை என்ற சொல்லே nucleusஐ மிகச் சரியாகக் குறிக்கும். தேங்காய் நெற்றை எண்ணிப்பார்த்தால் நான் சொல்லிம் நெற்றுப்பொருத்தம் புலப்படும். நெற்றுழை அறிவியல் = nuclear science. நெற்றுவதைத் தான் பேச்சுத்தமிழில் நொட்டுவது என்கிறோம்.)

சூரியனைச் சுற்றி வரும் புவியும் தன்னுருட்டல், வலைத்தல், கிறுவாடல், நெற்றாடல் என 4 இயக்கங்கங்களைக் காட்டுகிறது.

---------------------

இனி gig இற்கு வருவோம். ஆங்கிலத்தில் 2 விதப் பொருள்கள் சொல்வர். ஒன்று பம்பரம் பற்றியது. gig (n.1):"light, two-wheeled carriage, usually drawn by one horse" (1791), also "small boat," 1790, perhaps imitative of bouncing. There was a Middle English ghyg "spinning top" (in whyrlegyg, mid-15c.), also "giddy girl" (early 13c., also giglet), from Old Norse geiga "turn sideways," or Danish gig "spinning top." Similar to words in continental Germanic for "fiddle" (such as German Geige); the connecting sense might be "rapid or whirling motion."

அடுத்தது இன்றுள்ள பொருள். Definitions of gig - a job, especially a temporary job. type of: business, job, line, line of work, occupation.

இதன் தொடர்ச்சியாய் Gig workers are independent contractors, online platform workers, contract firm workers, on-call workers, and temporary workers. Gig workers enter into formal agreements with on-demand companies to provide services to the company's client என்றும் சொல்வார்.

இதில் அடிப்படையைப் புரிந்துகொள்வது.  குறிப்பிட்ட வேலையைக் கிறுகிறு என்று சுற்றிச் சுழன்று கருமமே கண்ணாய் இருந்து சட்டுப்புட்டென அதே பொழுதில் குறிப்பிட்ட காலத்தில் முடிப்பதாய்ச் சொல்லும் வேலை gig ஆகும். நாம் பம்பரத்தைப் போல்மமாக்கி இச்சொல்லைக் ”கறங்கு” எனலாம். எச் சிக்கலும் பயன்பாட்டில் எழாது ஆங்கிலச் சொல்லின் சாற்றை ”கறங்கு” என்பதால் கொண்டுவந்து விடலாம்.

gig workers: கறங்கு உழையர் = கறங்குழையர்.  (தொழிலாளர், உழைப்பாளர் என நீட்டுதற்கு மாறாய் உழையரென்று சுருங்கச் சொல்ல விழைவேன்.)