Monday, August 20, 2018

யாளி

யாளி மிருகம், தமிழரின் கற்பனைவளமா இல்லை தெலுங்கு மன்னர்கள் உடையதா? தமிழருடையதாய் இருப்பின் இலக்கியத்தில் யாளிபற்றி குறிப்புள்ளதா?" என்றதொரு கேள்வி சொல்லாய்வுக்குழுவில் ஒருமுறை கேட்கப்பட்டது. இக்கேள்வி ஆழமானது. இதற்கு நீளமாகத்தான் விடையளிக்க முடியும். ஆனால் சொல்லாய்வுக்குழுவில் நீள விடையிறுப்பதைப் பலரும் விரும்பியதில்லை. எனவே என் காலக்கோட்டிலும், மடற்குழுக்களிலும், விடைபதிந்தேன். இப்பொழுது சேமிப்பு கருதி வலைப்பதிவில் இடுகிறேன்.
----------------------------------------
யாளி, முதற்சொல்லல்ல. ஆளியே முதல். ஆளல்/ஆள்தல் என்பது அதிகாரங் குறிக்கும் வினை. ஆட்சி, ஆட்டம், ஆடலென 100க்கும் மேற்பட்ட சொற்களை ஆல்>ஆள் என்ற வேர் உருவாக்கும். நிலத்தை, வித்தையை ஆள்பவன் ஆளன்/ஆளி. பரி 8-64 இல் முருகனையே கூட ஆளியென்பார். இன்னொரு வகையில் ஆளி என்பது தோழி, மனைவியைக் குறிக்கும். நிலத்தலைவன் ஆளியானது போல் காடாளுஞ் சிங்கமும் ஆளியானது. ஆழ்ந்துபார்க்கின், விலங்குலகில் அரசனுக்கு இணைச்சொல் ஆளியே. யானையளவிற்குப் பெருவிலங்கையும் அடித்துண்ணும் வலிகொண்ட சிங்கம் காட்டை ஆள்வதாய் இந்தியப் புரிதலில் ஒரு தொன்மமுண்டு.

இன்று கூர்ச்சரம் போல் இடங்களில் மட்டும் சிங்கம் வதிந்தாலும், சங்க காலத்தில் நம்மூரிலுமிருந்தது. (அரி, ஆளி, பூட்கை, வயமா, மடங்கல் என்று பல பெயர்களில் சிங்கம் சங்கநூல்களிற் பேசப்படும். சிங்கம் என்றசொல் சங்க நூல்களில் இல்லைதான். ஆனால் சங்கநூலிற் பழகாது மக்களிடை காலங் காலமாய்ப் புழங்கிவந்த தமிழ்ச்சொற்கள் மிகப்பல. சங்கநூற்களை நான் அகரமுதலிகள்போல் என்றுங்  கருதியதில்லை. அக்காலத் தமிழின் ஒரு பகுதியை மட்டுமே அவை பதிவுசெய்தன. அவ்வளவு தான். புலி மட்டுமே தமிழர் விலங்கு, சிங்கம் நமக்கு அயலென அறியாமையிற் கதை கட்டுவதையும் நான் ஏற்பதில்லை. 2000 ஆண்டுகளுக்கு முந்தைய விலங்குப் பரம்பலை, இன்று போற் கருதுவது சரியல்ல. சிங்கங் குறித்து ஒரு சேரப் புழங்கிய யாளி, ஆளியின் சங்கச் சொல்லாட்சிகளை இங்கு கீழே விவரிக்கிறேன். முதலில் நாம் காணப்போவது பெரும்பாணாற்றுப்படை 258-260 வரிகளில் வரும் யாளி..

[ஒர் இடைவிலகல். ’முக’வெனும் தமிழ்ச்சொல்லிடை வழக்கம்போல் ரகரம் நுழைத்து ம்ருகவெனும் சங்கதச்சொல் கிளைக்கும். முக>ம்ருக>மிருக. அதை மீளக் கடன்வாங்கி மிருகமெனத் தமிழிற்பயிலாது, முக>மக>மா என்ற தமிழ்ச் சொல்லையே பயிலலாம். காண்க முகன்>மகன்>மான்; முகள்>மகள்> மாள். ஆளிக்கு இன்னும்வேறு பொருட்பாடுகளுண்டு. குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது linseed ஐக் குறிக்கும் ஆளி விதை. ஆளி நெய் நம்மூரில் இல்லாவிடினும், குளிர் நாடுகளில் அது பெரிது. ஆளி நாரிற் செய்த ஆளித் துகிலும் (linen), எகிப்தியன், சுமேரியன், பாபிலோனியன், கிரேக்கம் போன்ற விடங்களில் பெரிது. நம்மூர் பருத்திக்கு மாற்றாய் பட்டோடு ஆளியும் பழந்தமிழகத்தில் இறக்குமதியானது.] பாட்டிற்கு வருவோம்.

அணங்குடை யாளி தாக்கலின் பலஉடன்
கணம்சால் வேழம் கதவுற்றா அங்கு
எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை

இப்பாடல் வரிகள் ”யானைக்கூட்டத்தில் இருந்தவொரு யானைமேல் மீவிலங்கு மூர்க்கமாய்த் தாவிப்பாயுஞ் சிங்கங் (”அணங்குடை யாளி”) கண்டு அச்சுற்று விரைந்தோடும் யானைகள் போல் கரும்புச் சாறுபிழி எந்திரங்கள் விரைந்தசைந்து என்றுங் குறையாத ஓசையை எழுப்புகின்றனவாம். யாளிகள் தாக்க முடிவுசெய்தால், அணங்கு தம்மேல் ஏறியதுபோல் எழுச்சியுற்று இரைகளின்மேற் பாயுமென்பது இங்கு சொல்லப்படும் செய்தி. அதென்ன, “அணங்குடை யாளி” ?

[அணங்குக் கருத்தீட்டைப் புரிந்துகொள்வதில் பல தமிழறிஞர் தடுமாறி யுள்ளார். பெண்முலைக் காம்பில் அணங்கு இறங்குகிறதென்று கூடத் தவறாகப் பொருள் சொல்வார். நானறிந்தவரை, அணங்கைச் சரியாக, விரிவாக விளக்கியவர் முனைவர் வி.எஸ்.ராஜம் மட்டுமே.]

நம்வாயுள் மேலிருப்பது அண்ணம். நமக்கு மேல்/முன் இருப்பவன் அண்ணன். அண்ணுதல்/அணங்குதலுக்கு மேலேறுதலென்று பொருள். (முகநூல் சொல்லாய்வுக் குழுவின் நிருவாகி சுரங்கம் பற்றிய வேறொறு இழையில் ”ங்க” என முடியும் சொற்களெலாம் தமிழ்ச்சொல்லாய்த் தெரியவில்லை” என்றொரு போடுபோட்டார். அதிர்ந்துபோனேன். என்னவாயிற்று இவருக்கு? நன்றாகத்தானே இருந்தார்?- என்றெண்ணிக் கொண்டேன்.

ஆழ்ந்து பார்த்தால் ”அங்கு” எனும் ஈற்றில் முடியும் தமிழ்ச்சொற்கள் கணக்கற்றவை. ”சுரம்” பற்றிச் சொல்லாத பாலைப்பாட்டுக்களே இல்லை. (153 குறிப்புகள் சங்க நூல்களில் உண்டு. சங்கப்பாட்டுகளில் 50% க்கும் மேலானவை பாலைப் பாட்டுக்களே.) உட்டுளை குறிக்கும் சுரமும் சுரங்கமும் தொடர்பு உடையவை. சுரங்குதல்= உள்துளைத்தல். ’அந்த மேலையர், இந்த மேலையரெ”ன இசைப்பாட்டு பாடுமுன் இவர் போன்றோர் தம் அரிய நேரத்தைச் செலவழித்து தமிழ் இலக்கியங்களை ஆழப் படிக்கப் பரிந்துரைப்பது தவிர வேறொன்றும் சொல்ல முடியாது. சுரங்கம் தமிழ்ச் சொல்லென நொதுமலாருக்கு உறுதியாகச் சொல்லலாம். அணங்கும் அது போன்ற ஈறு கொண்டதே. அணங்கு பற்றிய 150 குறிப்புகளாவது சங்கநூல்களிற் காணலாம்.

சிலகுறிப்பிட்ட நேரங்களில் மனம்பேதலித்து, தன்னையே (கும்பிடும் சாமி, அல்லது ஏற்கனவே இறந்த யாரோவொரு முன்னவரென) வேற்றாளாய்க் கருதி பேசவும் செயற்படவும் ஒருவர் தொடங்கினால், “என்னவாச்சு இவருக்கு? சாமி கீமி வந்துருச்சா?” என்கிறோமில்லையா? இக்கால உளவியலில் இதை மீமாந்த நிலையென்றும், schizopherenic state களில் ஒன்றென்றும் சொல்வார். நம் ஆன்மாவிற்கு மேல் இன்னோர் ஆன்மா ஏறியதாய் உணரப்படும் இந்நிலையை நாட்டுப்புறங்களில் (குறிப்பாகச் சிவகங்கைச் சீமையில்) ”சாமி வந்தது” என்பார். தென்பாண்டி நாட்டில் இது வழமை. முருகனுக்குக் காவடி எடுத்துப்போகிறாரே? செடிலில் தொங்குகிறாரே? ஐயனார் கோயில், அம்மன் கோயில் விழாக்களில், பூக்குழி நெருப்பின் மேல் நடக்கிறாரே அதெல்லாம் இந்தச் சாமி வந்த நிலையில் நடப்பது தான். (இவற்றை அறிவியல் பார்வையில் காண்பதும், படியாதார் பார்வையில் காண்பதும் அவரவர் உகப்பு.)

திருவிழாக்களிலும், முன்னோர்க்குப் படைக்கையிலுங் கூடச், ”சாமி வருவது” நடக்கும். இன்னார்க்கு மட்டுமே சாமி வரும் என்றில்லை. நிகழ்விற் கூடிய இரு பாலரில் யாரோ ஒருவர் நிகழ்ச்சியோடு ஒன்றி, மீமாந்த உள உந்தலில், மறைந்த முன்னோர் பேசுவது போலோ, தொழப்படும் சாமியே வந்தது போலோ செயற்படத் தொடங்குவதைப் பலமுறை கண்டிருப்போம். அப்போது “சாமி வந்திருச்சு;” என்றுசொல்லி பொதுமக்கள் நாடு, குமுகம், குடும்பமென எதிர்காலம் பற்றிக் குறிகேட்பார். குறிநடக்குமா, நடவாதா என்பது வேறுகதை. இன்றைக்குநாம் “சாமி” என்பதையே சங்ககாலத்தில் “அணங்கு இறங்கியதாய்ச்” சொன்னார். அணங்கு என்றசொல் தான் வழக்கில் மறைந்தது. 2000 ஆண்டுப் பழக்கம் இன்றும் நம் வாழ்வில் நீடிக்கிறது. அணங்கென்பது மாந்தர்மேல் மட்டுமின்றி, விலங்குகள்மேலும்  ஏறலாமென்பது சங்ககால நம்பிக்கை. அப்படித்தான், “அணங்குடை யாளி” என்ற சொல்லாட்சி பிறந்தது..

இன்றுவரை நம்மூர்க் கோயில்களிலுள்ள யாளிச்சிற்பங்கள் பாய்ந்து தாக்கும் பொதிரையே (posture) பெரிதுங் காட்டும். அணங்கை உணர்த்த, யாளிச் சிலைகளின் வாயிலிருந்து முறுக்கிய தண்டொன்று வெளிவருவதாய்க் காட்டுவர். அதைப்பலரும் யானைத்துதிக்கையோடு ஒப்பிடுவர். உருவகம் புரியாச் சிற்பிகள் அதைத் துதிக்கையாக மாற்றியதுமுண்டு. (ஆனால் உண்மை மாறாது. பழஞ்சிற்பங்களிலும் வெவ்வேறு சிற்பப்பள்ளிகளுண்டு. ஒருபள்ளியின் விதப்பை முழுச் சிற்பக்கலைக்கும் பொதுமையாக்க முடியாது. தமிழர்மனத்தை ஆட்கொண்ட உறுப்பு துதிக்கையாகும். பிள்ளையார்மேல் நாம்கொள்ளும் ஈர்ப்பும் துதிக்கையாற்றான் வந்தது.) ”வாயில் வெளிவருந் தண்டு” என்பது ஒருவித மீமாந்த உள்ளமையை (surrealistic) சிற்ப வழி உணர்த்தும் உத்தி. தண்டு என்பது யாளியோடு சேர்ந்த உள்ளமை (realstic) உறுப்பில்லை. தண்டை/துதிக்கையை ஒதுக்கின், யாளி, கற்பனையுருவுமல்ல. அடிப்படையில் அதுவொரு பாயுஞ் சிங்கம்.    .

(இது போன்ற கலையுத்திகள் இன்றுங்கூட மீமாந்த உள்ளமைகொண்ட வண்ணப்படங்களிலும் சிற்பங்களிலும் (surrealistic paintings/scluptures) வெளிப் படும். முகனப் (நவீன/modern) படங்களில் உணர்வு வெளிப்படுத்த படத்தில் வரும் உருக்களைச் சிதைப்பதும், இல்லாத அலங்காரங்களை ஏற்றுவதும் உண்டு. காட்டாக விகடன் நிறுவனம் வெளியிடும் ”தடம்” இதழில் கதைப்பட மாந்தரின் கழுத்து பெரிதும் நீட்டிக் காட்டப்படும். அதன்வழி பேசும்மாந்தரை ஓவியர் உணர்த்துகிறாராம். நாளைக்கு இந்தப் படங்கள் 100 ஆண்டுகள் கழித்துக் கிடைத்தால், தமிழர் நீண்டகழுத்துக் கொண்டிருந்தார் என்று சொல்லி விடுவோமா? என்ன மடத்தனம்? கொஞ்சம் பகுத்தறிவோடு நாம் புரிந்துகொள்ள வேண்டாமா?

உள்ளமையை அப்படியே அச்செடுக்கும் கலைக்கு மாறாய், உணர்வுகளை வெளிக் கொணரும் உத்திகள் எல்லாக் காலமும் இருந்துள்ளன. நம்மூர்க்கோயில் யாளிச்சிற்பங்களின் வாய்களிலும் இதுவுண்டு. யாளியின் கொடுரத்தை வெளிப்படுத்தத் தண்டு அடையாளம் ஆனது. சீனத்து நீர்ப்பாம்பின் வழி திராகன் எனும் விலங்கை உருவகிக்கையில் இதேபோல் வாயில் நெருப்பு வெளிவருவதாய்ப் படங்களிலும் சிற்பங்களிலுங் காட்டுவர். அந்நெருப்பும், யாளித்தண்டும் மூர்க்க உணர்வை வெளிப்படுத்துகின்றன. உணர்வு வெளிப்பாட்டையும், உள்ளமை உறுப்பையும் நாம் குழப்பிக்கொள்ளக் கூடாது. Art appeciation என்பது ஒரு திறமை. அடுத்து பொருநராற்றுப்படை 139-142 வரிகளைப் பார்ப்போம்.

ஆளி நன்மான் அணங்குடைக் குருளை
மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி
முலைக்கோள் விடாஅ மாத்திரை ஞெரேரென
தலைகோள் வேட்டம் களிறு அட்டாஅங்கு 

சில்= நுண்ணிய துண்டு. இது இழை, மயிராகவும் இருக்கலாம். சிலிர்த்தல் = துளிர்த்தல். மயிர் துளிர்ப்பதும் சிலிர்த்தலே. உடம்பு சிலிர்த்தல் = மயிர்க் கூச்செறிதல். சில்>சில்கு>சிலுக்கு= துளையிற் புகுதல், மாட்டிக் கொள்ளுதல். சிலுக்கு>சிக்கு = எளிதில் சீவமுடியா, தாறுமாறாய் மாட்டிய கேசம். இதற்கு குடுமியும். உச்சிப்பொருளும் சொல்வர். சிக்கு>சிக்கை>சிகை. சிக்கு>சிங்கு>சிங்கம் = சிகையுள்ள ஆண்விலங்கு. இதுவே சிங்கம்>சிம்ஹ என வடக்கே சொல்லப்பெறும். சிகையால் மதர்ப்புத் தோற்றங் கிடைப்பதாய் இந்தியத் துணைக்கண்டத்தில் பலருங் கருதுவர். சிங்கமே இன்று பொதுப் பெயர். சங்ககாலத்தில் அரி/ஆளி.

நன்=நளினம். நங்கை=பெண். நன்மான்=பெண்விலங்கு. ஆளி நன்மான்= பெண்சிங்கம். ”ஆளி நன்மான் அணங்குடைக் குருளை”= தாயின் அருகுள்ள சிங்கக்குட்டி. குருளை (girlஇன் இந்தையிரோப்பியன் சொல் இதற்கிணை)= குட்டி (விதப்பாகப் பெண்குட்டி). இங்கு புனிற்றிளங் கரிகாலனுக்கு உவமை சொல்வதால் குருளை சிறுவனைக் குறிக்கிறது. ”பால்குடிமாறா மாத்திரத்து அணங்குடைக் குருளை, தன் பெருமைமிக்க தோளில் மிகுவலிசெருக்கித் தன் முதல்வேட்டையிற் களிற்றையடித்தது போன்ற” காட்சி இங்கே விவரிக்கப் படுகிறது. இச்சிங்கம் போல் இளமை மாறாக் கரிகாலன் களிறு போன்ற தம்முறவுப் பகைவர் மேற் பாய்ந்தானாம். இங்கும் ஆளி என்பது உள்ளமை விலங்கே. கற்பனையல்ல. அடுத்தது ஆரியவரசன் பிரமதத்தனுக்குச் (இவன் மகத அரசனென்றே நான் எண்ணுகிறேன். வேறிடத்தில் பேசவேண்டும்) சொன்ன குறிஞ்சிப்பாட்டு 252-253 ஆம் வரிகள்.
   .
அளைச்செறி உழுவையும் ஆளியும் உளியமும்
புழற்கோட்டு ஆமான் புகல்வியும் களிறும்

இதில் கொலைவெறி மிகுந்த புலியும், ஆளியும், உளியமும் (கரடியும்), துளைக் கொம்பு கொண்ட காட்டுமாடுகளின் ஆணும், ஆண்யானையும் பேசப் படுகின்றன. இயல்விலங்குகளோடு ஓர் கற்பனை விலங்கு சேர்த்துப் பேசப் படுமா? கபிலர் போன்ற பெரும்புலவர் அத்தகைய தவற்றைச் செய்வாரோ? எனவே ஆளி என்ற சொல் இந்தியாவில் தசையும், எலும்புமான உள்ளமை விலங்கே. இனி நற்றிணை 205, 1-5 வரிகளைப் பார்ப்போம்.,

அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்து
ஆளி நன்மான், வேட்டுஎழு கோள்உகிர்ப்
பூம்பொறி உழுவை தொலைச்சிய, வைந்நுதி
ஏந்துவெண் கோட்டு, வயக்களிறு இழுக்கும்
துன் அருங் கானம் என்னாய்,

”அருவி ஓசையெழும் பெருங்குன்றின் அடுக்கத்தில் வேட்டையில் போட்டிக்கு வந்த கொள்நகம்கொண்ட, உடம்பெலாம் பூப்போல் புள்ளிகொண்ட சிறுத்தையை அங்கிருந்து தொலைத்த ஆளிநன்மான், தானடித்துக்கொன்ற, கூர்த்தந்தங்களுடைய வலியயானையை இழுத்துப்போகும் அருமையான காடு” என்பது இதன்பொருள். பூம்பொறி உழுவை, இங்கு சிறுத்தையைக் குறிக்கும். யானைவேட்டையில் சிறுத்தைக்கும் ஆளிக்கும் இங்கே போட்டி நடந்திருக்கிறது. சிறுத்தையை விரட்டி, யானையைக் கொன்று, உணவாய் இழுத்துப் போனது கற்பனையா? உண்மை விவரிப்பா? இன்னுமா இதில் ஐயம்? ஆளி என்பது ஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால் சிங்கமே. (அம்மரத்தில் பேய் இருக்கிறது, இம்மரத்தில் பூதம் இருக்கிறது என்போருக்கே கற்பனை விலங்குகள் உதிக்கும்.) அடுத்தது அகம் 78, 1-6 வரிகள்..

நனந்தலை கானத்து ஆளி அஞ்சி
இனம் தலைத்தரூஉம் எறுழ்கிளர் முன்பின்
வரி ஞிமிறு ஆர்க்கும், வாய்புகு, கடாத்து
பொறிநுதற் பொலிந்த வயக்களிற்று ஒருத்தல்
இரும்பிணர்த் தடக்கையில் ஏமுறத் தழுவ
கடுஞ்சூல் மடப்பிடி நடுங்கும் சாரல்

”நிறைசூலியான பெண்யானை அகன்ற காட்டில் ஆளியையஞ்சி, தன் கூட்டத்தை நாடிவந்து தழுவ, வண்டுகள் சுற்றி ஓசையெழுப்ப, மதநீர் சொட்ட, புள்ளிமிகு நெற்றி பொலிந்திருக்க, வலி மிகுத்ததால் முன்னும்பின்னும் அசைந்தபடியிருக்கும் வயக்களிற்று ஒருத்தல் தன் கருங்கோங்கிலவு மரம் போன்ற துதிக்கையால் ஏமமுறும் படி அணைக்கும், சாரல்” என்பது இதன் பொருள். ஒருத்தல்= கூட்டத்தில் தனித்துச் செம்மாந்து தெரியும் விலங்கு. இங்கு ஆண்யானை. ஏமம்= safety. ஆளி கண்டு அஞ்சிய நிறைசூலி யானையை ஏமத்திற்காக வயக்களிற்று ஒருத்தல் தழுவுகிறது. அதன்பின்னும் பெண் யானை நடுங்குகிறது. இதுவும் ஓர் இயற்கை விவரிப்பே. இதில் கற்பனை யாளி எங்கு வந்தது? யானையைச் சிங்கமடிப்பதும், கொல்வதுமே குறிப்பால் உணர்த்தப்படுகிறது. அடுத்தது அகம் 252, 1-4 வரிகள்.

இடம்படுபு அறியா வலம்படு வேட்டத்து
வாள்வரி நடுங்கப் புகல்வந்து, ஆளி
உயர்நுதல் யானைப் புகர்முகத்து ஒற்றி
வெண்கோடு புய்க்கும்

புலிபற்றிய ஓர் அவதானம் தமிழகத்திலுண்டு. புலி எப்போதும் தனக்கு வலப் பக்கத்து இரையையே பாய்ந்தடிக்குமாம். இடப்பக்க இரையை அடிக்காதாம். அப்படி அடிக்கவேண்டுமெனில் சுற்றிவந்தே செய்யுமாம். அச்செய்தியே இங்கு மேலே சொல்லப்படுகிறது. (இதைப் போய் துணுச்சாரை (dinasaur), அது இது என்று சிலர் சொல்வது அறிவியலில் ஆழாத பேச்சு. துணுச்சாரைகளின் காலத்தில் மாந்தருங் கிடையாது, தமிழுங் கிடையாது. அவற்றின் மிச்ச சொச்சம் தான் இன்றுள்ள பறவைகள். உடலியல் தெரிந்தோர் இதற்கு விளக்கந் தரலாம். தமிழார்வலர் சற்று நிதானத்தோடு, விளக்கங்களைக் கூறுமாறு வேண்டிக்கொள்கிறேன்.)

படுத்தல்= அடித்தல் “இடம்படுப்பை அறியாத, வலம்படு வேட்டையை விரும்பும், வரிப்புலி நடுங்கும்படி உள்வந்து, உயர்நெற்றி கொண்ட யானையின் புள்ளிமுகத்தில் ஆளியடித்து வெண் தந்தத்தைப் பிய்க்குமாம்:” இவ்வரிகளில் வருவதும் ஓர் இயல் விவரிப்பே. ஆளி ஒரு கற்பனை விலங்கு அல்ல. கற்பனை சிலரின் மனத்திலுள்ளது. பொதுவாகச் சங்கநூல்களில் மீமாந்த/ மீவிலங்குக் கற்பனை மிகக்குறைவு. (பிற்காலக் கற்பனைகளை முற்காலத்திற் செலுத்துவது சரியல்ல.) அடுத்தது அகம் 381- 1-4   

ஆளி நல்மான் அணங்குடை ஒருத்தல்
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப.
ஏந்தல் வெண்கோடு வாங்கி, குருகு அருந்தும்
அஞ்சுவரத் தகுந ஆங்கண்,

”தனித்துச் செம்மாந்துவரும் அணங்குடைய பெண்சிங்கம், குட்டியானையைக் கொன்று அதன் முளைத் தந்தம் விலக்கி, சதையுண்ணுவது கண்டு, நெடுந் தளர்ச்சியோடிருக்கும் வலியபெண்யானை புலம்பி நிற்பதைக் கண்டு யாருக்கும் அச்சம் வரும்படி அவ்விடம் இருந்ததாம்.” ஒரு தாயின் குட்டியை இன்னொரு தனிப்பெண் சாப்பிடுகிறாள். இது கொடிய இயற்கை. ஆனால் கற்பனையல்ல. யாளியைக் கற்பனை விலங்கென்போர், எவ்வளவு பெரிய கொடுமையையும் ஒருமாதிரி sanitize செய்து விடுகிறார். தாமரையிலைத் தண்ணீராய் எவ்வுணர்வும் நம்மைப் பாதிக்காது நாமும் படித்து நகர்கிறோம். சிங்கமென ஆளியை நகமுஞ் சதையுமாய் உணர்ந்தாற்றான் நமக்கது உறுத்துகிறது. அடுத்தது புறம் 207, 6-9 வரிகள்.

மீளி முன்பின் ஆளி போல
உள்ளம் உள்ளவிந்து அடங்காது வெள்ளென
நோவாதோன் வயின் திரங்கி
வாயா வன்கனிக்கு உலமரு வோரே

”தானே கனியாத காயின் பொருட்டு, உள்ளவிந்து அடங்காது, நம்மேல் வெளிப்பட இரங்காதவனிடம் நின்று திரங்கி, வலிய விலங்கின் முன்பின் அசையும் ஆளி போல், உலமருகலாமோ?” என்பது இதன் பொருள். ”கனியாத விலங்கின் தசை வேண்டிச் சிங்கம் தான் சுற்றிச்சுற்றி வரும். தானே கனியாதவனிடம் நாம் வேண்டிநிற்கலாமோ?”. என்பது இங்கே புலவரின் குறிப்பு. இதைப் படித்தபிறகுமா ஆளி ஒரு கற்பனை விலங்கென்போம்?

இதேபோல் சிலப்பதிகாரம் காட்சிக்காதையில் “ஆளியின் அணங்கும், அரியின் குருளையும்” என 48 ஆம் வரியில் வருவதும் சிங்கமே. ஆளியின் அணங்கு என்பது பெண்சிங்கக் குட்டி, அரியின் குருளை என்பது ஆண்சிங்கக் குட்டி சில உரையாசிரியர் நினைப்பது போல் இங்கு வரும் ஆளி கற்பனை விலங்கல்ல. அப்படிச் சிலர் கருதுவது இடைக்காலத்து வந்த சங்கத ஊடாட்டத்தாலாகும். தமிழில் இருப்பதையெல்லாம் சங்கத வழி வந்ததாய்ச் சொல்லும் போக்கு.

அடுத்து வேட்டுவ வரியில் வெட்சிப் புறநடைப் பாட்டின் ”கொள்ளுங் கொடி எடுத்துக் கொற்றவையுங் கொடுமரமுன் செல்லும்போலும்” என்ற 4 ஆம் வரிக்கு “ஆளிக்கொடி உயர்த்துங் கொற்றவை”என அடியார்க்கு நல்லார் பொருள்சொல்வார். கொற்றவைக்குச் சிங்கக் கொடியையே நம்மூரில் கற்பிப்பார். சிங்கந்தான் அவளுக்கான வையம். (= wagon, வாகனம்; அகராதிகளில், சிலம்பில் பயனுற்ற இந்த ’வையம்’ எனும் நற்றமிழ்ச் சொல்லை அருள் கூர்ந்து பயனுறுத்துங்கள். மீண்டும் மீண்டும் ’வாகனம்’ வேண்டுமா)? (ஆளிபோக ஆளரி என்ற சொல் ஆண்சிங்கத்தையும், கூடவே நரசிம்மனையும் குறிக்க நாலாயிரப் பனுவலில் பயன்படும். ’கோளரி’ என்பது சிங்கத்தைக் குறிப்பதாய்ச் சொல்வர்.)

சங்க இலக்கியங்கள் போக திருக்கோவையார், இறையனார் அகப்பொருளுரை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், நக்கீரதேவரின் பதினோறாந் திருமுறை, பெரியபுராணம், திருக்குற்றாலத் தலபுராணம் எனப் பல்வேறு நூல்களில் இருந்தும் சான்றுகாட்டலாம். நான் புரிந்துகொண்டவரை இவை எல்லாவற்றிலும் சிங்கப்பொருளேயுண்டு. உரைகாரர்சொல்வதால் மட்டுமே அவற்றைக் கற்பனை விலங்குகளாய்ச் சொல்லமுடியாது. மூலங்களைப் பார்த்தால் அப்படித் தோன்றவில்லை. பாடல்களுக்குப் பொருள் சொல்வதில் உரைகாரர் பங்கு பெரிதெனினும், அவர் சொல்வதை அப்படியே ஏற்கத் தேவையில்லை. மூலத்தின் ஒத்திசைவு பார்த்து ஏற்கலாம். இக்கால அறிவியல், நுட்பியல் செய்திகளோடு கொஞ்சமாவது பொருத்திப் பார்க்கலாம். ஒவ்வொரு காலகட்டத்திற்குமாய் ஒரு புனைவு இருக்காதா, என்ன? படித்துப் பார்த்தால், சங்ககாலப் புனைவென்பது குறைந்த அளவோடிருக்கும். இடைக்கால, இக்காலப் புனைவுகளோ தறிகெட்டுப் பறக்கும். (நாகரிகம் வளர, வளரக் கற்பனை கூடுவது எங்கும் இயல்பு.)

வேண்டுமானால், சென்னையை அடுத்த சோழிங்கநல்லூருக்கு வாருங்கள். அங்குள்ள பெருத்தங்கா (ப்ரத்யங்க்ரா-கொற்றவை. சங்கத ரகர, யகர, வகர நுழைவுகளால் நாம் தடுமாற, நம் சொற்களே நமக்குப் புரியாதபடி மாயங் காட்டும். இங்கே திருமாலின் தங்கையே கோயில் மூலத்தி) கோயிலில் நாம் நினைத்துப் பார்க்காத அளவிர்குப் புதுப்புனைவுத் திருமேனிகளைச் செய்து வைத்திருப்பார். குறி சொல்வதும் அங்கு நடைபெறும். நாளெலாம் கவலும் இற்றைமாந்தர் “எத்தைத் தின்றால் பித்தந் தெளியும்?” என்றலைவதால், கூட்டமங்கு நிரம்பிவழியும். ”அந்த யாகம், இந்த யாகம்”என விதவிதமாய் நடைபெறும். இதையெலாம், 1000/2000 ஆண்டுகளுக்கு முந்தையக் கதைகள் என்று சொல்லிவிட முடியுமா? புதுப்புதுப் புனைவுகள். வெளிப்பாடுகள் என்றுதானே சொல்லமுடியும்?

இன்றுதானே வியந்தகைப் (fantasy) படங்கள் நம்மூரில் பெருத்துப்போயின? மக்களை வியக்கவைக்க தோட்டாத் தரணிகள், சாபு சிரில்கள், எந்திரன்கள், பாகுபலிகள், ஆன்மேற்றங்கள் (animation), வரைகலை (graphics) முயற்சிகள், நகர்வுக் கட்டுகை (Motion capture). என்ன தான் இல்லை இக்காலத்தில்? விதம் விதமான நுட்ப முயற்சிகள் எழயெழ, வியந்தைக் கதைகள் நம்மிடை கூடத் தானே செய்யும்? ஆரி பார்ட்டார் போன்ற புதினங்கள் ஆங்கிலத்தில் மட்டும் இன்றி எல்லாமொழிகளிலும் கூடிவருகின்றனவே? புதினங்களைச் செய்வதிலும் மாகை உள்ளமை (magical realism) என்ற புதுமுயற்சி கூடுகிறதே? புதினங்களின் போக்கிலும் கற்பனை கூடுகிறதே?. 8000-22000-100000 என்று சொலவம் பெருகிய மாபாரதம் 1500 ஆண்டுகளில் பெருவளர்ச்சி கண்டதல்லவா?. இன்றோ ”வெண்முரசு”என்ற பெயரில் செயமோகன் 16 நூல்களை எழுதுகிறார். முடிக்கும் போது எத்தனை நூல்கள் எழுதுவாரோ? மொத்தத்தில் மாபாரதப் புனைவு அனுமார் வால் போல் வளர்ந்துகொண்டே போகிறது.

ஆளிப் புனைவும் அப்படித்தான். சிங்கம்> (சிங்கம்+யானை) > (சிங்கம்+ யானை+நாகம்) > (சிங்கம்+யானை+நாகம்+அரசாளி) என்று விரிந்து கொண்டே போகிறது. கற்பனைக்கு அளவென்ன? இவற்றையும் யாரோ ஒருவன் கதையெழுதுவான், படமெழுதுவான்; சிலைவடிப்பான். அவற்றைப் பற்றி நம் கொள்ளு/எள்ளுப் பேரன்/பேத்திகளும் பேசிக்கொண்டிருப்பார். நான் சொல்லவந்தது மிக எளிது. யாளியின் தொடக்கம் இயற்கை சார்ந்தது. பின் கூடியது கற்பனை வளம். இதில் தமிழரசர்/தெலுங்கரசர் என்பதெல்லாம் முகன்மையில்லை. சங்கத ஊடாட்டம் கூடியதும், புராணப்புளுகு கூடியதுந் தான் காரணம்.

அரசாளி (=வல்லூறு) பற்றி நண்பர் மணிபாரி பேசினார். அது பேரரசுக் காலத்தில் அரசக்குறியீடாய் மாறியது. (இற்றை அமெரிக்க அரசின் குறியீடும் அதுவே.) ஆலுங் காரணத்தால் அது எழவில்லை. (ஆலல்= சுற்றல்; ஆலா= சுற்றிச் சுற்றிவரும் கடற்பறவை) நானறிந்தவரை, ஆளிக்கு பறவைப் பொருள் எந்த நூலிலும் சொல்லப்படவில்லை. முதன்முதல் அதைப் பார்த்தது இன்று வந்த செயமோகனின் ”ஆனைக்கல் துளிச்சொட்டு சாஸ்தா” என்ற பதிவே (http://www.jeyamohan.in/106894#.WojLwzbrbIU). இதிலொரு சாமியார் அகளி எனும் பறவைபற்றிக் குறிப்பிடுவார். அகளி, ஆளியென்று திரியலாம்.

உகள்> உவள்>உவளை என்பது தமிழில் எழக்கூடிய சொல்லே. (உவளல்= உயரல் என்பது அகரமுதலியிலுண்டு. ”உவளை” இல்லை. ’உவணம்’ உண்டு.) உவள்>உவண்>உவணம்= கழுகு, கருடன். உயரப் பறக்கும் வல்லூறு. உவளை இந்தையிரோப்பியன் eagleக்கு இணையாகலாம். ஆனால் தோற்றந் தெரியவில்லை என்றே இந்தையிரோப்பியன் சொற்பிறப்பு அகரமுதலிகள் சொல்லும். பெரிய கருநிறப் பறவை என்றே அதற்குப் பொருள் சொல்வார். தமிழில் கருளன்>கருடன், கள்>கழு>கழுகு, கழு>கழுளன் ஆகிய சொற்களெல்லாம் பொருள்வழி, கருநிறப் பறவையையே குறிக்கும்.

ஆளற்பொருளின் நீட்சி. ஆளிகளுக்கு அரச ஒப்பீட்டில் எழுந்தது. காடுலவும் விலங்குகளுக்கு சிங்கம் ஆளியானதுபோல், பறவைகளையுஞ் சேர்த்த மொத்த விலங்குகளுக்கு அரசாளியானது போலும்.இக்கற்பனை, யாளியோடு சேர்வது இயல்பு தான். பல அரசுகளின் இலச்சினையாக அரசாளி இருந்தது. அண்டபேரண்டம் என்பதெல்லாம் இதற்கும் அதிகமான கற்பனை வளர்ச்சி. (அரசாளியின் தொடக்கம் ஆளி என்பதே. கற்பனை கூடாதென நான் எப்போதுஞ் சொல்லவில்லை. எது அடிப்படை, எது மேலொட்டு, எது கற்பனை எனப் புரிந்துகொள்ளுங்கள் என்றே வேண்டுகிறேன். )

 முடிக்குமுன் ஆளி என்ற சொல் யாளியானது பற்றிச் சொல்லவேண்டும். ஒருசிலர்க்கு இதைச் சங்கதமென்று சொல்லாவிடின் தலை வெடித்துவிடும் போற் தோன்றுகிறது, இல்லாவிடில் இவரின் “ஜன்மம் சாம்பல்யம் அடையாது”  போலும். இவர் போன்றவர் மோனியர் வில்லியம்சு அகரமுதலியைப் பார்த்து நிலையைப் புரிந்துகொள்ளவும் மாட்டார். நான் பார்த்த வரை, சங்கதத்தில் ”யாளி, யாடி, யாதி”என்ற எச்சொல்லுக்கும் இப்பொருள் கிடையாது. ”வ்யாடி” என்றே முதற்சொல் காட்டுவார். (அதற்குச் சிங்கமென்ற பொருளும் வராது. ”கொடூர விலங்கு” என்று மட்டுமே வரும்.) ’வியாலி/வ்யாளி’என்ற வடிவைத் திரிசொல்லாகவே சங்கதங் காட்டும். வ்யாடி என்பதை வி+அட் என 2 சொற்களிலிருந்து எழுந்ததாய்க் காட்டுவார்.

व्याड
(H1) व्याड [p= 1036,3] [L=209669] mfn. (said to be fr. 3. वि+- √अड् ; cf. व्याल) malicious , mischievous L. (with loc. , g. शौण्डा*दि)
(H1B) व्याड [L=209670]    m. a beast of prey MBh. R. Ma1rkP.
(H1B) व्याड [L=209671]    m. a snake L.
(H1B) व्याड [L=209672]    m. " a rogue " or " a jackal " (= वञ्चक) L.
(H1B) व्याड [L=209673]    m. N. of इन्द्र L.

வி என்பதற்கு ”பலதிசைகளில் பரந்த” என்று பொருள்சொல்வர். இச்சொல் தமிழிலும் உண்டு. விய்தல்= விரிதல். விய்வம்>வியுவம்>விசுவம் என்றால் விரிந்த பேரண்டமென்று பொருள். இதுவும் சங்கதம் போகும். விசுவநாதனென்று சிவனுக்குப் பெயர் சொல்கிறோமே? விய்யில் தொடங்கும் தமிழ்ச்சொற்கள் 40/50 ஆவது உண்டு. ”அட்” என்பதற்குச் சரியான பொருளை சங்கதத் தாது பாடத்தில் நான் காண முடியவில்லை. endeavour என்ற பொருளை அட் என்ற சொல்லின் பொருளாய்ப் பார்த்தேன். இவையிரண்டுஞ் சேர்ந்து எப்படி வியாடியாய் மாறியதென்று புரியவில்லை. யகர உடம்படுமெய் தமிழிலுண்டு. சங்கதத்திலுண்டோ? கேள்விப்பட்டதில்லை. இங்கே கூட்டுச் சொல்லில் யகர உடம்படுமெய் வந்துள்ளதே? சங்கதச் சொல்லாயின், அது இயலுமா? யாராவது சொல்லுங்கள்.

வியாடியிலிருந்து வியாளி வந்ததென்பது தலைகீழாகத் தேடுவதையொக்கும். தமிழுக்கும் பாகதத்திற்கும் தெலுங்கே இடைமொழி என்பார் பாவாணர். ’சோழ’  என்ற தமிழ்ச்சொல் தெலுங்கில் ’சோட’ஆகும். சற்று கலிங்கம் போனால் ’சோர’வாகும். வடக்கே சோட/சோர என இரண்டும் புழங்கும். இது போல் ள/ட/ர திரிவு பலசொற்களில் உண்டு. வியாளியிலிருந்து வியாடி ஏற்படுவதே இயல்பான திரிவு. தெலுங்கையும் ஒடியத்தையும் உணராதோரே தலைகீழாய்ச் சொல்வர். வியாளியைத் திரிசொல்லாய் மோனியர் வில்லிய்ம்சு ஏற்றுக்கொண்டதே நமக்கு அதன் ஊற்றைக் காட்டுகிறது. வியாளியை விய்+ஆளி என்றுபிரித்தால் வினைத்தொகை அதனுட்புகுந்து விளையாடுவது புரியும். விய்ந்த ஆளி, விய்கிற ஆளி, விய்யும் ஆளி.  இக்காலத் தமிழில் விய்தலைக் காட்டிலும் வியல்தலே விழைவோம். வியல்ந்த ஆளி, வியல்கிற ஆளி, வியலும் ஆளி. ஆளிமான் காடுமுழுதும் நகர்ந்துகொண்டேயிருக்கும். தனக்கு உணவு கிடைக்கும் பெரும்பரப்பில் பரந்துகொண்டே இருக்கும். வியாளி நல்ல தமிழ்ச் சொல்.

சரி, யாளி என்பது எப்படி? யாக்கல்/ஆக்கல், யாக்கை/ஆக்கை, யாடு/ஆடு, யாண்டு/ஆண்டு, யாமை/ஆமை, யாய்/ஆய், யார்/ஆர், யாறு/ஆறு, யானை/ஆனை என்ற இணைகள் எப்படிஆனதோ, அதே படிதான் தமிழில் இது காலகாலமாய் இருக்கும் பழக்கம். இதை விய்யாளி என்றாலும் வியாளி என்றாலுஞ் சரிதான், வடக்கே இச்சொல் தான் போயிருக்கிறது.அப்புறம் ”சிங்கம் சங்ககாலத்தில் தமிழகத்திலில்லை”, என்று சிலர் சொல்வது கூடைச்சோற்றுள் பூசனியை மறைப்பது போலாகும். சிங்கமென்பது ஆளி மட்டுமல்லாது அரி, அறுகு, பூட்கை, வயமா,மடங்கல் என்று பல்வேறு பெயர்களில் சங்கநூல்களில் ஆளப்பெற்றுள்ளது. பூசனியை மறைப்பவர் எந்த விலங்கியல் சான்றை இங்கு காட்டியுள்ளார்? சும்மா, போன போக்கில் இப்படிச் சொன்னால் எப்படி? நான் சங்க நூல்களை நம்புகிறேன். அதிலுள்ள செய்திகள் அக்காலப் பட்டகைகள் (facts), புரிதல் (understanding) என்றே நம்புகிறேன். பட்டகைகளை ஒதுக்கித் தான் புகலும் தேற்றே (theory) சரியெனும் கற்பனைவாதி நானல்ல. யாளி பற்றிய என் தொடர் முடிந்தது. பொறுமையுடன் படித்த எல்லா நண்பருக்கும் என் நன்றி.

அன்புடன்,
இராம.கி.



Wednesday, August 15, 2018

துரு-தல்

"துர்நாற்றத்தில் உள்ள துர் தமிழ்ச்சொல்லா?" என்றொரு நண்பர் சொற்களம் முகநூல் குழுவில் கேட்டார், இன்னொரு நண்பர், “அது வடசொல்” என்றார். நம் பள்ளியாசிரியர் dur என்றே சொல்லிக் கொடுத்ததால் இது வட மொழித் தோற்றங் காட்டுகிறது. (ஜலம் தமிழா?) ஆனால் அதனுள்ளே தமிழ் வேர் உண்டு. இன்னுஞ் சொன்னால் ஏராளம் இணைச்சொற்கள் அதில் மறைந்துள்ளன. அதேபொழுது தமிழ் வினைச்சொற் பகுதி ”ர்” என முடியாது. வரு/வா, என்பதை வர் என்போமோ? துர்நாற்றத்திற்கு மாறாய்த் துருநாற்றம் எனில் முழுச்சொல்லும் வினைத்தொகையாகும். துரு-தல், அல்லது துருவு-தல் = துளைத்தல். “என்னப்பா இது? கூவம் பக்கம் காலார நடந்து வந்தாலே நாற்றம் மூக்கைத் துருவுதே?” "என்ன செய்யுறது? மூக்கை மூடிக்க” என்ற உரையாடல் உங்களுக்குத் தெரியாதா, என்ன?

துல் என்பது துளைக் கருத்து வேர். துல்>துன்>துன்னுதல் = உழுதல், கிண்டுதல், துன்னூசி = கலப்பைக் குத்தி. இன்பம் என்பது இனிப்பானது. இங்கே நாக்குச் சுவையோடு ஒப்பிட்டு ஒரு நிகழ்வைச் சொல்கிறோம். இன்பத்தின் எதிரான துன்பம் என்பது மூக்கின் வழி முகர்ந்து பார்ப்பதோடு ஒப்பிட்டுச் சொல்லப் படுவது. சில மணங்களை நுகரும்போது மூக்குச் சவ்வில் எரிச்சல் ஏற்படுகிறது அல்லவா?? அது துளைப்பதுபோல் உள்ளதாம். துன்பம் தீரும்வரை துளைச்சலும் இருக்கும். துல் என்பது துல்> (துள்)> (துய்)> (தய்)> தை என்ற படியும் திரியும். முள்தைத்தல் = முள் உள்ளிறங்குதல். இன்னுஞ் சொன்னால்

துல்> துள்> துழ> துழவு> துழாவு = கிண்டுதல்;
துல்> துள்> தொள்> தொய்; தொய்தல் = உழுதல்.
துல்> துள்> துற> துறப்பு = திறவு; துறவை = திறந்த வெளியிடம்;
துல்> துள்> தூள்> தூணி = தோண்டப் பட்ட கலம், 
துல்> துள்> தொள்> தொழுவை = மடு;
துல்> (தள்)> தழு> தாழ்> தாழ்வு.
துல்> துள்> தொள்> தொடு. தொடுதல் = தோண்டுதல்;
தொள்> தோள்> தோண்டு> தோண்டி; தோண்டு> தோணி = தோண்டபட்ட மரக்கலம்
தேடு> தேட்டம் = தேடுதல்.

இது மட்டுமல்ல. துல்>துரு>துரி>தூரியம்= குடைந்து செய்யப்பட்ட இசைக் கருவி. இரும்பில் ஏற்படும் pitting corrosion ஐத் துரு என்றும், அதில் ஏற்படும் இரும்பு அஃகுதையை (Iron oxide) துருவு என்றுஞ் சொல்வோம். துருவு என்பது துருசு என்றுஞ் சொல்லப்படும். துருந்துதல் = துளையைப் பெரிது ஆக்குதல். ஆராய்தல். துல்> துள்> துர> துரப்புதல் = துளைத்தல், தேடுதல்; துர> திர> திரக்குதல் = தேடுதல். துருவும் வேலைக்குப் பயன்படும் கருவி துரப்பணம் எனப்படும். துரப்பு = மலையிற் குடையப்பட்ட பாதை. தோட்டந் துரவு = தோட்டத்தில் தோண்டப்பட்ட கிணறு. பெருங் கிணறு. மணற் கேணி. துருவம் = ஒரு கோளத்தில் தோண்டினால் கிடைக்கும் ஆகப் பெரிய chord. இதைத்தான் முப்பரிமான விட்டம் என்கிறோம். புவியின் துருவமும் இதே பொருள் தான். தேங்காய்த் துருவல்/ = தேங்காய்க் கொப்பறையைத் துருவி உண்டாக்கும் துருவு. துருவு மணை, திரிமணை என்றும் பேச்சுவழக்கிற் சொல்லப்படும், துருவுதல் = தேடுதல், ஆராய்தல், துளைத்தல், கடைதல், தேங்காய் முதலியன கடைந்து சீவுதல், துன்புறுத்தல்

மூக்கை எரிச்சல்பட வைக்கக்கூடியது ”கெட்டது” எனப் பொருள் கொள்ளப் பட்டது. இது விதப்பு நிலையை பொதுமைப்படுத்தியதாகும். நாளாவட்டத்தில் துல்லுவது, துள்ளுவது, துருவுவது, துய்வது என எல்லாவற்றிற்கும் கெடுதல் பொருள் வந்து சேர்ந்தது, முன் சொன்ன துய் என்பது திய்> தீய எனத் திரிந்து இன்னும் பல சொற்களைக் “கெட்ட” என்ற பொருளில் உருவாக்கும். பலரும் ”தீய” என்பதும் தீ(ய்)மை எனும் நெருப்போடு தொடர்புள்ளதென்று தடுமாறுவர். அப்படிக் கிடையாது. அது தவறான முடிபு. தீய என்பது துல்> துள்> துய்யோடு தொடர்புடையது. பார்ப்பதற்குத் தீ என்ற நெருப்போடு தொடர்பு காட்டுகிறது. தீஞ்சுவையில் வரும் தீ நெருப்போடு தொடர்பு உடையதா? இல்லையே? அது தேனோடு தொடர்புடையதல்லவா? இங்குவரும் தீய என்பது துல்> துள்> துய்யோடு தொடர்புற்றது.

முடை என்பதும் கெட்ட என்றே பொருள் கொள்ளும்.  துருநாற்றம், தீயநாற்றம் என்பதற்கு மாறாய் முடைநாற்றம் என்றுஞ் சொல்லலாம். (மீண்டுஞ் சொல்கிறேன். துருவை (thuru) துர் (dur) என்று சொல்லி வடசொல் ஆக்காதீர்.   துருக்கடம்> துர்க்கடம் = இடர்ப்பாடு. துருக்கதன், துருக்கதி, துருக்கந்தம், துருக்கருமம், துருக்குணம், துருக்குறி, துருச்சன், துருநாள், துருத்தெய்வம், துருநடத்தை, துருநாற்றம், துருப்புத்தி, துருமரணம், எனப் பலவும் ருகரத்தை மெய்யெழுத்தாக்கி வடசொல்லாய்ப் புரிந்து கொள்ளப் பட்டன. கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால், துரு> துர் என்பதன் பொருள் கெட்டது என்றும். அது துளைப் பொருளில் கிளைத்தது என்றும், புரியும். இப்போது அறுபுலன் சொற்களாய்த் தெரிபவை (கெட்ட என்ற பொருள்கொண்ட துர் இதிலொன்று) எல்லாம் ஒரு காலத்தில் ஐம்புலனச் சொற்களில் இருந்து கிளைத்தனவென்று திரு. டி. பக்கிரிசாமி கூறியதை என் முந்தையக் கட்டுரைகளில் பலதடவை கூறியுள்ளேன். நல்லது என்பது அறுபுலச்சொல். அதன் ஐம்புலன் அடிப்படை நல்>நெல் என்னும் ஒளிப்பொருளே. ஐம்புலன்/ அறுபுலன் சொற்களையும் அவற்றின் பொருள்களையும் ஒருமுறை விளக்கவேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

Friday, August 10, 2018

அளவைகளும் சாரியைகளும் - 3

சென்ற பகுதியில் 6 அளவை முறைகளை சற்று விரிவாகப் பேசி ஏழாவது அளவைமுறையைத் தொட்டோம். இனி அதில் தோய்வோம். எண்ணி அளத்தலுக்கு வந்தபின்னால் எண்களைப் பேசாதெப்படி? தமிழிய, வட இந்திய, மேலை மொழிகளின் எண்ணுச் சொற்களிடையே வியத்தகு ஓரிமை இருப்பதாகவே நான் உணர்கிறேன். சொற்கள் வேறாயினும், உள்ளிருக்கும் செலுத்தமும் (process) பொருளும் (meaning) ஒன்றுபோற் காட்டும். தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பியனுக்கும் முன்தொடர்பு இருக்குமென நான்சொல்ல இதுவுமொரு காரணம். தமிழில் எண்கள் எழுந்தவகை சொல்ல ஏராளம் உண்டு. (சில எண்களின் பெயர் விளக்கத்தைச் சங்கமெனும் தொடர்கட்டுரையில் விளக்கினேன். முகநூலில் அதையும் வெளியிடுவேன்.)

சுழியில் தொடங்கி (அருள்கூர்ந்து பூஜ்யத்தைத் தொலையுங்கள்! இதைப் பழகப்பழகக் சுழிக்கருத்தே நமக்குத்தெரியாதென வெளியார் எண்ணுவார்), ஒன்று, இரண்டு, மூன்று, நாலு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, நூறு (நூறி வந்தது நூறு, பொடியாய்ச் சிதறியது), ஆயிரம் (ஐ>அய்>அயிர் = நுண்மை அயிர்த்து வந்தது ஆயிரம். இது தமிழே. இலக்கம் (நொய்யிற்பிறந்த நொய்தல்> நெய்தல் எனும் அழகிய பெயரும் இதற்குண்டு. வடக்கே நொய்தம்>நெய்தம்> நியுதம்), கோடி (குவளை>குவளெ> குவடெ>கோடே>கோடி என்றாகும். வடக்கே க்ரோரே.) என்ற முழு எண்களை (whole numbers) வைத்தே எண்ணியல் தொடங்கியது. இதற்குமேலும் ஆம்பல், சங்கம், தாமரை, வெள்ளம், ஊழி எனத் தமிழில் எண்களுண்டு. இவற்றைவிடுத்து பல்வேறு சங்கதப்பெயரைத் தமிழ் எண்களாய்ச் சொல்லிப் பீற்றிக்கொள்ளும் கூத்தும் இணைய வலைத்தளங்களில் நடக்கிறது. என்று நம் தமிழர் விழிப்பாரோ, தெரியாது. முழு எண்களுக்குப் பின் அரை, கால், வீசம், மா, காணி, முந்திரி என்ற பின்னங்கள் எழுந்தன. முந்திரிக்குக் கீழும் பின்னங்கள் உண்டு. அவற்றை விரிப்பின் பெருகும்.

சுழியை முதலிற் பயன்படுத்திய ஆவணம் பொ. உ. 459 இல் ஆகத்து மாதம் 25 திங்கட் கிழமையில் காஞ்சிபுரத்தில் எழுந்த ”லோகவிபாக” என்ற செயின நூலாகும். (Penguin நிறுவனம் Georges Ifrah எழுதிய The Universal History of Numbers-இன் 3 தொகுதிகளை வெளியிட்டது. எண்ணியல் தோற்றத்தை அறிய விழைவோர் கட்டாயம் படிக்கவேண்டிய நூல்கள் இவை.) 1000 ஆண்டுகளுக்கு முன் கேரளத்திற் கணிதம் வளர்ந்ததெனில் தமிழர்க்கும் அது பெருமை இல்லையா? சோழ, பாண்டியரைத் தவிர்த்து சேரர் மட்டும் தனியே கணிதத்தை வளர்த்தாரா, என்ன? அங்கு எழுதிவைத்த நூல்கள் சங்கத மொழியில் இருக்கலாம். அதற்கென்ன? இந்தியாவெங்கணும் அக்காலத்தில் படித்தோர் மொழி சங்கதமே. இக்காலத்தில் ஆங்கிலத்தில் பலரும் எழுதுகிறாரே, அதுபோல இதைக் கொள்ளுங்கள்.

பதின்மமுறை (=தசமமுறை) இந்தியாவில் தோன்றியதாகவே பலருஞ் சொல்கிறார். அதேபொழுது சுன்னமோ, பதின்மமுறையோ, தமிழில் இருந்ததற்குச் சான்றில்லையென Georges Ifrah சொல்வார். பதின்ம முறைக்கு முந்திய நிலையே தமிழரிடமிருந்து என்று அவர் சொல்வார். பின் எங்கிருந்து தான் இந்தியாவில் இது புறப்பட்டது?- என்பதற்கு அவரிடம் விடையில்லை. பாழெனுங் கருத்தீடு பரிபாடலில் வருவது இர்வாவிற்குத் தெரியாதுபோலும். (பரிபாடற் காலம் பொ.உ.மு. 50 என “சிலம்பின் காலத்திற்” சொல்லி இருந்தேன். பரிபாடற் காலத்தைப் பொ.உ.5 ஆம் நூற்றாண்டெனத் தள்ளும் போக்கைக் கேள்வி கேட்போர் குறைந்துபோனார்.) சங்க இலக்கியங்களில் இன்னும் 2,3 இடங்களில் சுழி பற்றிய சிந்தனையுண்டு. தமிழருக்கும் பதின்ம முறைக்குமான தொடர்பில் சரியான ஆய்வு தேவை. அதைச் செய்யத்தான் இங்கு ஆளில்லை. (என் புரிதலின் படி சுழியக்கருத்து சங்ககாலத்தில் தமிழர் அறிந்தது தான்.)

இன்னொரு செய்தியுஞ் சொல்லலாம். 1/20ஐக் குறிக்கும் மாவெனும் பின்னம் தெலுங்கு, கன்னட மொழிகளிலில்லை. வடக்கே உள்ளதாயுந் தெரியவில்லை. மேலை மொழிகளிலுங் கிடையாது. தமிழிலும், மலையாளத்திலும் மட்டுமே யுண்டு. நம்மைவிட்டால் மாயன், எசுடெக் நாகரிகங்களிலுண்டு. சுமேரிய, பாபிலோனிய நாகரிகங்களில் 1/60 உண்டு. 1/20 என்றபின்னம் புழங்கியவருக்கு 1/10 யைக் கண்டு பிடிக்க முடியாதா, என்ன? தமிழர் ஏன் 20, 80, 320 என்ற மடக்குகளை கீழ்வாயிலக்கத்திற் பேசினார்?. இதை ஓர்ந்துபார்க்க வேண்டாமா? 1/20, 1/80. 1/320  என்ற சிந்தனை நம்மருகிலிருந்த மற்ற மொழியாளருக்கு வரவே இல்லையே? அவரெல்லாம் வீசம், அதன் மடக்கு என்றேதானே இருந்தார்? பொதுப்புத்தியில் எங்கோ இடிக்கிறதே? உண்மையிலேயே தமிழருக்குப் பதின்மமுறை தெரியாதா?

முழு எண்களும் பின்னங்களுஞ் சேர்ந்து அரிதையெண்கள் (rational numbers) ஏற்பட்டு, சங்ககாலத்தில் இயலெண் (natural number) சிந்தனை வளர்ந்தது. நெடுங்காலத்திற்கும் முன் வட்டம், விட்டம், ஆரம், சுற்றவரை (circumference), பரப்பெனும் போது அரியொணா எண்கள் (irrational numbers) கிரேக்கரோடு, நமக்கும் எழாதா? pi -இருப்பும், குத்துமதிப்பும் பழந்தமிழாவணங்களில் இருந்ததா? சான்று தேடுகிறேன். உள்ளமை எண்களின் (real numbers) கருத்தீடு எப்போது எழுந்ததென்று சொல்லமுடியவில்லை. நொகையெண்களும் (negative numbers), அமைகண எண்களும் (imaginary numbers), பலக்கெண்களும் (complex numbers) மேலையர் தொடர்பால் வந்தன. முடிவிலி, வரம்பிலி, கந்தழி (infinity) போன்றவை இயலெண் வளர்ச்சியாய், சங்க இலக்கியத்திற் தென்படுகின்றன.

இப்பொழுது கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தலெனும் அடிப்படைச் செய்முறைகளுக்கு வருவோம். இவை ஒவ்வொன்றிற்கும் இணைச் சொற்களை இலக்கியத்திற் பயில்வார். அவற்றைத் தொகுத்துக் கூறுவதும் பெரியவேலை. கூட்டலின் இன்னொரு சொல்லான சேர்த்தல்/சார்த்தலை மட்டுமிங்கு குறிப்பிட விரும்புகிறேன். சார்+இயை= சாரியை என்பது additive பொருளுடைய இலக்கண உருபாகும். சாரியையில்வரும் இயையெனுஞ் சொல்லாக்க ஈறு வலுவானது. நேரியை (instant, n.), எதிரியை (opposite, n.), மாறியை (variable,n.), நிலையை (constant, n.) போன்ற பல்வேறு அறிவியற் சொற்களை உருவாக்கலாம். மொழியாக்க நண்பர்கள் இதன் திறனுணர்ந்தால், அறிவியற்றமிழ் பழந்தமிழோடு தொடர்ச்சி காட்டும். அப்படியின்றேல், செருமானியச் சரச்சொற்கள் போல் நீளநீளக் கூட்டுச்சொற்களே தமிழில் நிறைந்து வழியும். ஓர்ந்துபார்த்தால் அது நல்லதல்ல. தமிழ் விக்கிபீடியாக் கட்டுரைகளில் கூடக் கூட்டுச்சொற்கள் சிறிதுசிறிதாய் மிகுந்துவருகின்றன. நண்பர்கள் என்னைக் கோவிக்கவேண்டாம். பொதிவான கிடுக்கமாய் (positive criticism) நான்சொல்வதைக் கொள்ளுங்கள். தமிழ்க் கலைச்சொல்லாக்கத்தில் நமக்கின்னுங் கவனந் தேவை.

இனிப் 10 ஆம் எண்ணுக்கப்புறம் சாரியைகள் வருவதைக் கவனிக்கலாம். மாறிவரும் எண்களை மட்டுமே இங்குநான் அழுத்திச்சொல்கிறேன். ஒழுங்கான எண்களைச் சொல்கையில் சற்று விரைவாய்ப் போவேன். படிப்போர் பொறுக்க. ஆழ்ந்துபார்த்தால், 1 முதல் 10 வரை எண்களில் ஒன்று, இரண்டு, மூன்று, கை>கைது>ஐது>ஐந்து>ஐய்ஞ்சு>அஞ்சு, பல்து>பத்து/பஃது என்பவையே தமிழில் முதலெழுந்த எண்கள். இவற்றின் வளர்ச்சியான ஆறு, ஏழு, எட்டின் சொற்பிறப்பை இங்குநான் சொல்லவில்லை. (ஆறு, ஏழு, எட்டுள் உம்மைத் தொகையுண்டு. வேறு கட்டுரையில் பின்னாற் பார்ப்போம்.) நாலும், ஒன்பதும் கை, பத்து>பஃது>பது எண்களின் குறையாய்க் கிளர்ந்தன. நலிந்த கை (=குறைந்த கை), நால்ங்கை>நான்கை>நான்கு என்றும், [இடை மூக்கொலி குறைத்துப் பயிலும் தென்பாண்டி வழக்கால்] நாலிகை>நால்கை>நால்கு> நாலு>நால் என்றும் பயிலும். இதேபோல் ஒல்லிந்த பத்து (= கழித்தலைக் குறிக்கும் மெலிந்த பத்து), அதாவது 10-1= 9, ஒன்பத்து>ஒன்பதாகலாம். (துவண்டதாய்ப் பொருள் உணர்த்தும் ”தொண்டு” என்பதை வேறிடத்திற் பார்க்கலாம்.) எண்களில் முகன்மையான சுழிக் கருத்து தொல்காப்பிய, சங்க இலக்கியத்திற்கு முன்னே இங்கு ஏற்பட்டிருக்கலாம். 

ஒரு/ஓர், இரு/ஈர், மு/மூ, நால்/நான், ஐ, அறு, எழு, எண் என்ற குறு வடிவங்களையும் பழங்காலத்தில் பயின்றுள்ளார். பத்திற்கு மேல்வரும் எண்களெல்லாமே கூட்டல்/சார்த்தல், பெருக்கல் போன்ற அடிப்படை முறைகளை ஒட்டியே எழுந்ததைக் கவனிக்கலாம்.. சார்த்தல் முறையின் ஊடே வரும் சாரியைகளின் பங்கு பெரியது. 10+1 = பத்து-இன்-ஒன்று. இதில் இன் என்பது + என்ற குறியீட்டைக் குறிக்கும்..மேலும் த் கெட்டு பதினொன்று ஆகும். அதேபோல 10+3 = பத்து-இன்-மூன்று.>பதின்மூன்று. இப்படியே பதினாலு, பதினைந்து, பதினாறு, பதினேழு, பதினெட்டில் இன் சாரியை பயின்றுவந்து ஒரு கூட்டொழுங்கை உணர்த்தும். இதே முறையில் பதினிரண்டு என்னாது பன்னிரண்டு என்றானதும், பதினொன்பது என்னாது பத்தொன்பது என்றானதும் பேச்சுவழக்கின் சிதைவாகவே தோன்றுகிறது.

இனி இன்னொரு வகையான பெருக்கலைப் பார்ப்போம். 1*1= 1 இதில் முதல் ஒன்றை குறும்பெயர் கொண்டும், இரண்டாவதை நெடும்பெயராகவும் பெரும்பாலும் அழைப்பார். சிலபோது குறும்பெயரும் பயனாகிறது. பெருக்கல் வாய்ப்பாட்டில் ஓரோன் ஒன்று என்றே சொல்வோம். ஓரொன்று என்றுஞ் சொல்வதுண்டு. ஓரிரண்டு இரண்டு, ஒருமூன்று மூன்று. ஓரொன்பது ஒன்பது, ஒருபத்து பத்து என்று முதலெண்ணை குறும்பெயர் வைத்தழைப்பதெ பெருக்கற் செயலைக் குறிப்பதாகிறது. இதே பாவனையில் 2-ஆம் வாய்ப்பாட்டில், ஓரிரண்டு (1*2) இரண்டு, ஈரிரண்டு (2*2) நாலு, மூவிரண்டு (3*2) ஆறு, நாலிரண்டு (4*2) எட்டு, ஐயிரண்டு (5*2) பத்து, ஆறிரண்டு (6*2) பன்னிரண்டு, ஏழிரண்டு (7*2) பதினாலு, எண்ணிரண்டு (8*2) பதினாறு, ஒன்பத்திரண்டு (9*2) பதினெட்டு என்றாகிறது.

3-ஆம் வாய்ப்பாட்டில் ஒருமூன்று மூன்று, இருமூன்று ஆறு, மும்மூன்று ஒன்பது, நால்மூன்று பன்னிரண்டு, ஐமூன்று பதினைந்து, அறுமூன்று பதினெட்டு; 4-ஆம் வாய்ப்பாட்டில் ஒருநாலு நாலு, இருநாலு எட்டு, முந்நாலு பன்னிரண்டு, நா(ல்)நாலு பதினாறு; 5-ஆம் வாய்ப்பாட்டில் ஓரைந்து ஐந்து, ஈரைந்து பத்து, மூவைந்து பதினைந்து; 6-ஆம் வாய்ப்பாட்டில் ஓராறு ஆறு, ஈராறு பன்னிரண்டு, மூவாறு பதினெட்டு; 7-ஆம் வாய்ப்பாட்டில் ஓரேழ் ஏழு, ஈரேழ் பதினாலு; 8-ஆம் வாய்ப்பாட்டில் ஓரெட்டு எட்டு, ஈரெட்டு பதினாறு; 9-ஆம் வாய்ப்பாட்டில் ஓரொன்பது ஓன்பது, ஈரொன்பது பதினெட்டு;. 10-ஆம் வாய்ப்பாட்டில் ஒருபத்து பத்து, இருபத்து இருபது, முப்பத்து முப்பது, நாற்பத்து நாற்பது.... இங்கே த் எனும் இடையெழுத்து விலகி பெருக்கலெண்கள் 80 வரை போகும்.

இருபதிற்குமேல் எண்களைச் சொல்கையில், இன் சாரியைக்கு மாறாக ’இ’ பயன்படுத்திச் சார்த்தல்முறையில் பெறப்படுகின்றன. காட்டாக, இருபது+ ஒன்று= 2*10+1 = இருபத்தியொன்று என்றாகும் இகரச்சாரியை பற்றிச் சிலசெய்திகள் சொல்லவேண்டும். பொருளதிகாரம் புணரியல் 120 ஆம் நூற்பாவில்,

அவைதாம்,
இன்னே வற்றே அத்தே அம்மே
ஒன்னே ஆனே அக்கே இக்கே
அன்னென்னெ கிளவி உளப்படப் பிறவும்
அன்ன என்ப சாரியை மொழியே

என்பார். இ-எனுஞ் சாரியை இதிற் “பிற”கணக்கில் வருவதாகத் தோன்றுகிறது. அன்றேலது இன்னின் இடைக்குறையா? அன்றி 165 ஆம் நூற்பா பேசும் ஏகரச்சாரியையின் திரிவா என்றுஞ் சொல்ல இயலாதுள்ளது. தமிழரில் மிகப்பலரும் பேச்சுவழக்கில் அழுத்திவிளக்கிச் சொல்கையில் இகரச் சாரியைக்கு மாறாய் ஏகாரச்சாரியையிட்டே சொல்கிறார். இகரச்சாரியை இன்னும் ஆய்வுற்கு உள்ளாகும் கருத்தாகிறது. இகரச்சாரியை புழங்குவதை இழிவாய்க் கருதுவோர் மீத்திருத்தவாதிகளாகி இருபத்தொன்று என்பார். [எத்தனை தமிழாசிரியர் இப்படித் திருத்துகிறார் தெரியுமோ?!] பேச்சுவழக்கு போகக் கல்வெட்டுக்களிலும் பலவிடங்களில் இகரச்சாரியை தவிர்க்கப் படுகிறது, இகரச்சாரியை தவிர்ப்பது மதிப்புப்புரிதலிற் குழப்பத்தையே உருவாக்கும். இகரச்சாரியை தவிர்த்தால், ”ஒரு பெரிய எண்ணுள் பெருக்கலும் சார்த்தலும் என்ன ஒழுங்குமுறையிலுள்ளன? எது பெருக்கல்? எது சார்த்தல்?“ என்று விளங்கிக்கொள்ள முடியாது. இருபத்தொன்றென இகரம் ஊடுவராது சொன்னால் 2*10*1 = 20 என்றுகூடப் பொருள் மாறிவிடுமே? எனவே ஏரணஞ் சரிப்படநிற்க (இடைவருவது பெருக்கலா, சார்த்தலா என்றறிய) உரிய இடங்களில் இகரச்சாரியை வந்தே தீரவேண்டுமென்று புரிந்துகொள்ளலாம்..

இக்காலத்தில் இகரச்சாரியையின்றிப் பேச்சில் தொனிவேறுபடுத்தியோ, சொற்கூட்டை அழுத்தியோ சரியானபொருளை வெளிப்படுத்தலாம். எழுதும் போது சொற்களிடையே வெளி ஏற்படுத்தியும் பொருள் புரியவைக்கலாம். அக்காலம் ஓலைச்சொற்களிடை வெளிகிடையாது. எனவே வேற்றுத்தியாய்ச் சாரியைகள் இருந்தன.. தமிழ்க்கணிமை பயிலும் இக்காலத்தில் இகரச் சாரியைகளின் தேவையை அழுத்தக் காரணமுண்டு. மாந்தரெனில் ஒரு வேளை இடம், பொருள், ஏவல் பார்த்துப் புரிந்துகொள்ளலாம். கணியாற் செய்வது கடினம். இலக்கணமும் கணிபோல் நெறிப்பட்டது. எல்லாம் இங்கு விதிகள். நீக்குப் போக்குகளிருந்தால் இலக்கணத்தில் வரையறுக்கவேண்டும். இருபத்தியொன்று போலவே இருபத்தியிரண்டு, இருபத்திமூன்று (2*10+3), முப்பத்திநாலு (3*10+4), நாற்பத்தியைந்து (4*10+5), ஐம்பத்தியாறு (5*10+6), அறுபத்தியேழு (6*10+7), எழுபத்தியெட்டு (7*10+8), எண்பத்தியொன்பது (8*10+9) போன்றவையும் பொருட்குழப்பம் வாராதிருக்க, இகரச் சாரியை கொண்டு ஏரணத்தோடு அமையவேண்டும்.

இப்படியே இருபது, முப்பது, நாற்பது, ஐம்பது,. எண்பதென வளர்த்தி, பெருக்கல், சார்த்தலால் எண்பத்தியொன்பது வரை வரலாம். இதற்கு அடுத்த எண் நூறில் துவண்டதாய் தொள்நூறு = தொண்ணூறு = 100-10 என்று 90ஐக் குறிக்கும். துவள்>தொள்; துவண்டு>தொண்டு என்பது குறைப்பொருளையும் கழித்தற் செயலையுங் குறிக்கும். துவளும்நூறு மதிப்பிற்குறைந்த நூறு(100-10)எனப் பொருள்கொள்ளும். தொண்ணூற்றியொன்று,... தொண்ணூற்றியொன்பதென இகரச்சாரியைபெற்று அடுத்த எண்களை உருவாகும். நூறென்பது இன்னொரு கருத்தீடு. நூற்றிற்கப்புறம் எண்ணூற்றி எண்பத்தியொன்பதுவரை எக் குறையுமின்றி ”பெருக்கல், இன்-வழி, இ-வழிச் சார்த்தலால்” எண்களைக் கட்டலாம். அடுத்தது தொள்ளாயிரம். இதுவும் குறைப்படும் ஆயிரம் (1000--100). மீண்டும் ஆயிரம்வரை முன்போல் நகரலாம்.

இதற்குமேல் ஒவ்வொறெண்ணாகப் பார்க்கவேண்டாம். கோடிவரை ஒரே தாவலிற் போகலாம். பத்தென்ற சொல்லிற்கு இன் சாரியை ஆயிற்று. இருபது.....எண்பது வரை இகரச்சாரியை. தொண்ணூறு, நூறு போன்றவற்றிற்கும் றகரம் இரட்டி இகரச்சாரியை வரும். ஆயிரத்திற்கு அத்துச்சாரியையும், இகரச்சாரியையும் வந்து ஆயிரத்தி என்றாகும். தொள்ளாயிரம் தொடங்கி எண்பத்தொன்பதாயிரம் வரை இவ் வழக்கந் தொடரும். அடுத்துத் தொண்ணூறாயிரம் அத்துச்சாரியையும், இகரச் சாரியையும் பெற்று நூறாயிரம்வரை வரும். நூறாயிரத்திற்கு இன்னொரு பெயர் இலக்கம். (இதன் சொற்பிறப்பை நானிங்கு கூறவில்லை. விளக்கம் நீளமானது இருப்பினும் இது தமிழே.) இதுவும் மகரத்தில் முடிவதால் அத்து, இகரச் சாரியைகளின் பயன்தொடரும். சிலபோது மிகப்பெரிய எண்களைக் கூறுகையில் (குறிப்பாக இலக்கத்திற்கு அடுத்து எகரம், ஏகாரம் வருகையில்) ஏகாரச்சாரியை ஊடுவதைக் கண்டுள்ளேன். (ஒருவேளை ஒலிப்புத்தடையோ?) தொண்ணூறிலக்கத்தை ஏரணப்படி தொள்கோடி எனலாம். ஆனால் பேச்சுவழக்கில் கேட்டதில்லை. காரணம் தெரியவில்லை.

மேற்கூறிய எழுத்ததிகாரம் தொகைமரபு 165 ஆம் நூற்பாச்செய்தியின் படி, கோடியில் ஏகாரச்சாரியை புழங்கத் தொடர்கிறது. கீழே ஓரெண்ணை குறியீட்டாலும், எழுத்தாலும் எடுத்துக் காட்டுவோம். 15,67,84,293 = 15*10^7+67*10^5+84*1000+293 = பதினைந்து கோடியே அறுபத்தியேழு இலக்கத்தே எண்பத்திநாலு ஆயிரத்தி இருநூற்றித் தொண்ணூற்றி மூன்று. இங்கே ஏ சாரியை 2 இடங்களிலும், இ சாரியை 5 இடங்களிலும், இன் சாரியை ஓரிடத்திலும் வருவதைக் காணலாம். இச்சாரியைகள் வருவதாலேயே எண்ணைப்புரிந்துகொள்வதில் குழப்பமில்லை. ஆகச் சாரியைகளைப் புழங்கினால், தமிழெண்கள் சீர்படும். அதோடு, சீரிய தமிழ்க்கணிமைக்குச் சாரியைவிதிகள் கணிக்குச் சொல்லப்படவேண்டும். தமிழ்ச் சொவ்வறையாளருக்கும் (Tamil software writers) இவ்விதிகள் புரியவேண்டும். மாந்தர் எண்ணெழுதுகையில் என்ன தப்பிருந்தாலும் விளக்கஞ் சொல்லி சரி செய்யலாம். கணிக்கோ, ஓரெழுத்து, ஒருசாரியை மாறினும் பொருள் மாறி விடும். காட்டாக எண்பத்திநாலு ஆயிரத்தி என்பதை எண்பத்துநாலு ஆயிரத்தி என்றெழுதின் சொல்லுங்கருத்து புரியாதுபோகும். கோடிக்குமேலும் ஏரணத்தோடு எழுதலாமெனினும், அடிப்படைபுரிய இதுபோதும், .

இனிப் பின்னம் எழுதுவதைப் பார்ப்போம். முதலில் நாம் எடுத்துக்கொள்ளும் பின்னம் 251/320= 3/4+1/40+1/320. இதை முக்காலே அரைமாவே மும்முந்திரி எனலாம்.. இன்னுஞ்சிக்கலாய் 87653/102400 ஐ எடுத்தால், இதையும் 3/4 + 1/10 + 1/320+ (1/320)*[(3/4) + (3/20)+ (1/80)+ (1/320)] என்றுபிரித்து, முக்காலே மாவே முந்திரியே கீழ்முக்காலே கீழ்மும்மாவே கீழ்க்காணியே கீழ்முந்திரி எனலாம். மறவாதீர்; கால், மா, காணி, முந்திரி என எல்லாவற்றிற்கும் (+) யைக்குறிக்க ஏகாரச்சாரியை இங்கு பயில்கிறோம். வீசத்திற்கு மட்டும் இகரச்சாரியை பயிலலாம். ஒருசில இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் அரைக்கும் ஏகாரம் தான். விலக்கான இடங்களை

அரையென வரூஉம் பால்வரை கிளவிக்குப்
புரை தன்றால் சாரியை யியற்கை
 
எனும் தொல்காப்பிய நூற்பா 166 சொல்லும். SII Vol III part IV p 473/4 என்பதில் மூன்றாம் குலோத்துங்க சோழன் அளித்த திருக்களர் செப்பேடு கொடுக்கப் பட்டிருக்கும். அதில் ஏகாரம் வந்தும் அரைக்குமுன் வாராமலும் வரும் வாசகங்கள் படிக்கவேண்டியவையாகும். இதில் மாறி, மாற்று என்றசொற்கள் தங்கத்தின் நுண்ணியத்தைக் (fineness) குறிப்பவை. இக்காலக் caratற்கு நிகர் ஆனவை. 10 1/2 மாற்று என்பது தமிழில் ஆணிச்செம்பொன்னைக் குறிக்கும். செப்பேட்டில்வரும் தொடர்களை கீழே கொடுத்திருக்கிறேன்.

8 5/8 மாறி பொன் நூற்றொரு கழஞ்சரை, வெள்ளி பதினாற் கழஞ்சே முக்கால், 8 1/2 மாறி பொன் பன்னிரு கழஞ்சு, 8 1/2 மாறி இருகழஞ்சே நாலு மஞ்சாடியும் ஆறு மா, 8 3/4 மாறி பொன் 3/4 (கழஞ்சு), 8 1/2 மாறி பொன் இருகழஞ்சே கால், 8 1/4 மாறி பொன் அறுபத்துநாற்கழஞ்சரை, வெள்ளி பத்தொன்பதின் கழஞ்சரையே நாலுமஞ்சாடியும் ஆறுமா, செப்பாணி எடை ஆறரை பலம், பொன் கழஞ்சு, வெள்ளி அரைக்கழஞ்சு, பொன் எழுகழஞ்சே கால், பொன் இரண்டு மஞ்சாடியும் நாலுமா இது மாற்று 8 1/2, வெள்ளி கால், 9 மாறி பொன் இருகழஞ்சு, 8 5/16 மாறி பொன் இருநூற்றைம்பது ஐங்கழஞ்சே காலே மூன்று மஞ்சாடியும் அஞ்சுமா, 9 1/2 மாறி பொன் பதினாறு கழஞ்சரை, 9 1/4 மாறி பொன் நாற்கழஞ்சே முக்காலெ இரண்டு மஞ்சாடியும் எழுமா, 8 1/4 மாறி பொன் முக்கழஞ்சு, 8 1/2 மாறி பொன் பதின் கழஞ்சு, 8 1/2 மாறி பொன் இருகழஞ்சே கால், 8 1/2 மாறி பொன் இருகழஞ்சு,

8 1/2 மாறி பொன் கழஞ்சரை, 8 1/3 மாறி பொன் கழஞ்சே இரண்டு மஞ்சாடியும் நாலுமா, 8 1/2 மாறி பொன் இருகழஞ்சு, 8 3/4 மாறி பொன் நாற்கழஞ்சு, 9 மாறி பொன் பதினைஞ்கழஞ்சரை, 8 1/2 மாறி பொன் ஐங்கழஞ்சே கால், 8 1/2 மாறி பொன் கழஞ்சு, 9 மாறி பொன் கழஞ்சு, 9 மாறி பொன் இருகழஞ்சே முக்காலே மஞ்சாடி, வெள்ளி முக்காலே (கழஞ்சு) இரண்டு மஞ்சாடியும் மூன்று மா,
வெள்ளி முக்காலே (கழஞ்சு) இரண்டு மஞ்சாடி, 8 1/2 மாறி பொன் அரைக் கழஞ்சு, 8 3/4 மாறி பொன் கழஞ்சரை, 9 மாறி பொன் இருகழஞ்சு, 9 மாறி பொன் முக்கால் (கழஞ்சு), பொன் முக்காலே (கழஞ்சு) நாலு மஞ்சாடியும் ஆறு மா, பொன் கழஞ்சே முக்காலே இரண்டு மா

மேலே இரு பத்திகளில் வாசகங்களை வெட்டியெடுத்துக் கொடுத்தது நீளமான செப்பேட்டில் இருப்பதாகும். இதில் பொன், வெள்ளி, செப்பு மாழைகளால் ஆன அணிகலன்கள் பேசப்பட்டுள்ளன. சில இடங்களிற் கழஞ்சு என்பது இல்லாமல் இருக்கும். அவ்விடங்களில் பிறைக்கோடு போட்டு கழஞ்சைக் குறித்திருக்கிறேன். சில இடங்களில் ஏகாரச் சாரியைக்கு மாறாக உம்மும் பயின்றுவருகிறது. பேச்சுத் தமிழில் அப்படியும் சொல்கிறோம். ”7 உருவாயும் 50 காசும் தந்தான்” என்று இக்காலத்திற் சொல்வதில்லையா? பொதுவாகக் கல்வெட்டுக்கள் படித்தால் சாரியைகளுக்கு ஏராளமான காட்டுக்களைத் தரமுடியும். இச்சாரியைகள் வெறும் எண்களின் ஊடே மட்டும் பயில்வதில்லை. பல்வேறு அளவைகளின் ஊடேயும் பயனாகியுள்ளன.

இளம்பூரணர் தம் உரையில், ”உழக்கேயாழக்கு, கலனேபதக்கு, தொடியேகஃசு, கொள்ளேஐயவி, காணியேமுந்திரி, காலேகாணி” என்றுஞ் சொல்லுவார்  ஏகாரம் பெறாததாய் “குறுணி நா(ல்)நாழி” என்று எடுத்துக்காட்டு தருவார். முடிப்பில் அரை வரும் எடுத்துக்காட்டாய் 166 ஆம் நூற்பாவிற்கு “உழக்கரை, தொடியரை, ஒன்றரை” என்பவற்றைச் சொல்வார்.

அளவுப்பெயர்க்கு நடுவே சாரியைப் பயன்பாட்டைச் சொல்லும் கல்வெட்டு எடுத்துக்காட்டுகள் ஏராளமுள்ளன. கல்வெட்டு வாசகங்களால் இக் கட்டுரையை மூழ்கடிக்க விரும்பவில்லை. 3 அடிப்படைகள் மட்டுமே சொன்னேன். கூடவே 3 நூற்பாக்களுக்கு சொற்பொருள் விளக்கந்தர நான் முற்படவில்லை. இளம்பூரணர், நச்சினார்க்கினியர் உரைகளைப் பார்த்தாலே அவற்றை உணர்ந்துகொள்ளலாம். இக் கட்டுரை எழுதியகாரணம் சாரியை விதிகளைப் புரிந்துகொள்வதும், தொல்காப்பியவழி தமிழ்க்கணிமைக்கு வழிகாண்பது மட்டுந்தான். தொல்காப்பியம் என்பது ”தமிழறிஞர் சடங்குபோல் மேடைகளில் ஓதுவதற்கல்ல”. தொல்காப்பியம் என்பது ”வேதம் போல் பாராயணம் செய்வதற்குமல்ல”. Tholkaappiyam makes sense, if we read it properly and apply it to Tamil computing.

அன்புடன்,
இராம.கி.

அளவைகளும் சாரியைகளும் - 2

ஏழு அளவைமுறைகளை இப்பகுதியில் பார்க்கப்போகிறோம். படிப்போருக்குச் சற்று பொறுமை வேண்டும். ஒழுங்கான அளவைமுறை இல்லையேல் அறிவியல் இல்லை.

1. நிறுத்தளத்தல் (அல்லது எடுத்தளத்தல்) என்பது எடையளைவைக் குறிக்கும். நிறையும், எடையும் தமிழில் ஒன்றுதானே? பொன்னளவை, பண்ட அளவை என 2 வித நிறுத்தளத்தற் பயன்பாடுகள் உண்டு. நெல்(லெடை), மா(வெடை), பிளவு, குன்றிமணி, மஞ்சாடி, பண(வெடை), கழஞ்சு, வராக(னெடை), கஃசு, பலம், சேர், வீசை, தூக்கு, துலாம், மணங்கு, பாரம் போன்ற அளவைகள் இரு வேறு நிறுத்தலில் வரும் எடையளவைகளாகும். (இப்பொழுது இவை யெல்லாம் மறைந்துபோய்ப் பலருக்கும் கிலோ, கிராம், டன் என்றாகிப் போயின.) இன்னுஞ் சில அளவைகளும், நிறுத்தற் சமன்பாடுகளும் உண்டு. நாம் பயன்படுத்திய நாணய அளவைகளுங்கூட இதிற் கிளர்ந்தவையே. (மாடை, காசு போன்றவை இன்னும் விதப்பானவை.) ஒவ்வொன்றையும் பற்றி நீள எழுதவேண்டும் என்பதால், அவற்றை இங்கு நான் பேசவில்லை. (வாய்ப்பு இருப்பின் இன்னொரு நாள் பார்ப்போம்.) இங்கே சொல்லவேண்டியதை மட்டும் சொல்வேன்..

2. பெய்தளத்தல் என்பது நீர்மப் பெருக்கையும், வாழ்வின் வெவ்வேறு சமயங்களிற் குறிப்பாக வேளாண்மையில் விளையும் கூலப் பெருக்கையும் (திண்மப் பொடிகள், தூள்களுக்கும் இது வளர்ந்தது.) குறிக்க எழுந்தது. செவிடு, ஆழாக்கு, உழக்கு உரி, படி, மரக்கால் (=குறுணி), பறை, கரிசை, பதக்கு, தூணி என்பன தமிழரின் பெய்தளவைகள். இன்று யாருக்கும் பெய்தற்கருத்து நினைவுக்கு வருவதே இல்லை. மாறாக, அதை முகத்தளவை என்கிறோம். (இலிட்டர் கணக்கு வந்ததால் எல்லோர்க்கும் மற்றவை மறந்துபோனது.) நாழி என்பது பெரும்பாலும் படியையும், சிறுபால் உரியையும் குறிக்கும். ஒரு படியில் அரிசியளக்கையில் படியின் விளிம்போடு பெய்த கூம்பு குலையாது (அரிசியை மட்டப் படுத்தாது) அளந்து போடுவர். திண்மத்துகள்களை எப்படி ஒரு கலத்தில் நெறித்து அடைக்கிறோம் - how do we pack solid powders? - என்பதைப் பொறுத்து ஏற்படும் பருமச் சிக்கலை (volume defects) நாளாவட்டத்தில் அறிந்ததால், தேங்க முகத்தளத்தல் என்றமுறையைத் திண்மத் துகள்களுக்கு எனப் (solid particles) பின்னால் பழந்தமிழர் கையாண்டார். அதைக் கீழே பார்ப்போம்.
 .
3. நீட்டியளத்தலில் விரற்கிடை, பெருவிரல், சாண் (இதை அடி/பாதம் என்பர். தமிழ்முறைப்படி, 1 அடி என்பது இன்று பலரும் அறிந்த 8.25 அங்குலமாகும். இதைக் கொடுமுடி சண்முகம் தன் ஆய்வுப் பட்ட நூலில் நிறுவியிருப்பார். வடமுறைப்படி இது 9 அங்குலம். 1 ஆங்கில அடி, 12 அங்குலமாகும். இக் காலத்தில் ஆங்கில அடியையும் மீறி மீட்டரென்று அளவீடு பயில்வதால் நம் ஊற்றுக்களிற் புதைந்துகிடக்கும் செய்தியைப் பலரும் மறந்துவிட்டார். கலைச்சொல் புரிவதற்காக அடி, ஆங்கில அடியை நான் பிரித்தெழுதுகிறேன்.), முழம், சிறுகோல், கோல், பெருங்கோல் (=தண்டம்), கயிறு, கூப்பீடு, காதம், யோசனை என்ற அளவைகள் நீட்டளவையில் அடங்கும்.1 கோலென்பது ஓராளுயரம் அதை 5 ஆங்கில அடி, 5 1/2 ஆங்கில அடி, 6 ஆங்கில அடி என வெவ்வேறு வகையில் நம் நாட்டிற் புரிந்துகொண்டுள்ளார்.

1 கோலுக்கு 5 ஆ.அடி என்பது ஆரியபட்டாவின் அளவுகோலாகும். 5 1/2 ஆ.அடியென்பது தமிழர்வழிப் புரிதல். 6 ஆ.அடியென்பது வடபுலத்துப் புரிதல். வடக்குப்புரிதலே மேலையாசியா, மேலை இரோப்பிய நாடுகளிற் சென்றது. (இன்னும் முடியாத “பழந்தமிழர் நீட்டளவை”த் தொடரை என் வலைப்பதிவில் தேடிப் படிக்கலாம்.) நாமுங்கூட விசயநகர ஆட்சிக்குச் சற்றுமுன், சிறிது சிறிதாக வடவர் அளவைகளுக்கு ஆட்பட்டு விட்டோம். இன்று நம் பிள்ளைகளுக்குத் தமிழரளவைகள் எதுவுமே தெரியாது. அவற்றைச் சொல்லிக் கொடுக்கவும் நாம் அணியமாயில்லை. காலம்போகும் போக்கு அப்படி இருக்கிறது. எங்கு பார்க்கினும் globalization; becoming orphans; without moorings என்ற நிலை நிலவுகிறது. எண்சாண் உடம்பு, நாலுமுழ வேட்டி, கோலாட்டம், கயிறுகட்டியளத்தல், கூப்பீட்டுத் தூரம், கங்கை குமரியிடை 700 காதம் - என்ற பழக்கங்கள், கருத்தீடுகள், சொலவடைகள் எங்கேயென்று கேட்கவேண்டி யுள்ளது. இதையெலாஞ் சொல்லும் இராம.கி. போன்றோர் மடையராய்த் தெரிகிறார்.
 
மேற்சொன்ன அளவை முறைகளில் பரப்பளவையைக் காணாது ஒருகாலம் வியந்திருக்கிறேன். ஆய்ந்துபார்த்ததில் ”நீட்டளவை வழியாகவே பரப்பளவை எழுந்தது” என்பது புரிபட்டது. சதுர வடிவத்தை அடிப்படை வரையறையாகத் (Basic definition) தமிழர்கொண்டதால் இம்மாற்றுப்புரிதல் வந்தது. 1 குழியென்பது 1 தண்டச்சதுரம் (தமிழரின் பழம்புரிதலின் படி இது 121 சதுர ஆங்கில அடிகள். வடவர் முறையில் 144 ச.ஆ.அடிகள். ஆரியபட்டா அளவையில் 100 ச.ஆ.அடிகள்) என்று வரையறுப்பார். வரலாற்றிற் பலவிடங்களில் இந்நுணுக்க வேறுபாடு புரியாது பரப்பளவை, நில அளவைகளில் தவறான சமன்பாடுகளைத் தெரிவிக்கிறார். இக்காலத்தில் விவரம்புரியாது வடவர் அளவையையே தமிழ்ச்சிறார்க்கு நாம் கற்பிப்பதால், நம் மரபுகளையுந் தொலைக்கிறோம். குழியோடு குண்டு (குண்டும் குழியுமாக என்பது சொலவடை), மா, வேலி, பாடகம் என்று நீட்டளவையிற் கிளர்ந்த பரப்பளவைகளுமுண்டு. அம்முறையின் பரிமானத்தை இளம்பூரணர் உரைவழி நாம் உணரவில்லை.

இன்னொன்றையும் சொல்லவேண்டும். பரப்பளவையை நீட்டளவை நீட்சியாக்கிய தமிழர் பருமவளவையை நீட்டளவையின் 3 ஆம் பரிமான நீட்சியாய்க் கொள்ளவில்லை. இற்றை அறிவியலில் 1 litre = 1000 cubic centimetre என்று சொல்லும் நாம், உழக்கிற்கும் விரற்கிடைக்குமான சமன்பாட்டை நேரடிப் பழஞ்செய்திகளாற் சொல்வதில்லை. சுற்றிவளைத்து முக்கைத் தொடுவதுபோல், மேலைப்புரிதலுக்கு வந்தே மறுமொழி சொல்கிறோம். [காட்டாக, 1 விரற்கிடை = 11/16 அங்குலம் = 1.74625 செ.மீ; எனவே, 1 பரும விரற்கிடை = 5.3249957 cubic centimetre; அப்படியெனில், 1 உழக்கு = 336 cubic centimetre = 63.098643 பரும விரற்கிடை என்று சுற்றிவளைத்துச் சொல்வோம்.) பரும விரற்கிடை/சாண்/முழம்/கோல் போன்ற அலகுகள் நம்மிடம் ஏற்படவேயில்லை. இது பெய்தளத்தலுக்கும், கீழே வரும் தேங்க முகத்தளத்தலுக்கும் பொருந்தும்.   .

4. தெறித்தளவை பற்றி முன்னிருந்த கேள்விகளில் இப்போது எனக்குத் தெளிவு ஏற்பட்டுள்ளது. நீர்/மணற் கடிகையை வைத்தே சங்ககாலத்தில் கால இடைவெளியை அளந்தார். ஞாவகங் கொள்க! கால இடைவெளியை நாம் அளக்கலாம், முற்றைக் காலத்தை (absolute time) அளக்கமுடியாது. அதுவொரு தேற்றக் கட்டுமானம் (theoretical construct). எப்படி ஒரு, இரு பரிமானங்கள் இயல்புநிலை மீறிய தேற்றக்கற்பிதக் கட்டுமானங்களோ, அப்படியே தனிப்பட்ட காலப்பரிமானமும் எழுந்தது. நால்-பரிமான இருப்பு அப்படி நம்மைக் கட்டிவைத்தது. பூதியலார் (physicist) ஐன்சுடீன் சொல்லும்வரை நமக்கிது புரியவில்லை. மேலுங்கீழுமாய் இரு குடுவைகளும், இரண்டிற்கும் நடுவே ஒடுங்கிய நாளமும் இருக்கும் நீர்க்கடிகை, (இல்லாவிடில் பெரிய குடுவையிலுள்ள நீரில் அமிழும் சிற்றாழங் கொண்ட கிண்ணம் அல்லது வட்டில்போன்ற நீர்க்கடிகை)க் கருவியை வைத்தே அக்காலத்தில் கால இடைவெளியை அளந்தார். இரண்டாம்வகை நீர்க்கடிகையே/நாழிகை வட்டிலே நம்மூரில் மிகுந்திருந்தது. செய்முறையிலும் இரண்டாம் வகை எளிதானது.

முதல்வகைக் கடிகையில் மேலிருக்கும் நீரோ, மணலோ ஒடுங்கிய நாளத்தின் வழி கீழிறங்கித்தங்கும். இரண்டாம்வகைக் கடிகையில் துளைவழிக் கசியும் நீரால் கிண்ணம்/வட்டில் பெருங்குடுவை நீரில் அமிழும். இரண்டு கடிகைகளுக்கும் வெவ்வேறு அடவுகளுண்டு (designs). அவற்றின் அடவிற்குத் தக்கக் காலநேரம் மாறும். முதல்வகை நீர்க்கடிகையில் கீழ்க்குடுவை நிறைந்து மேற்குடுவை வெற்றும் வரையுள்ள நேரம் குடுவைக் கொள்ளளவையும், நாளக் குறுக்குவெட்டையும் பொறுத்தது. இரண்டாம் வகைக் கடிகையில் கிண்ணத்தின்/வட்டிலின் கொள்ளளவையும், கிண்ணத்தின்/வட்டிலின் அடியிலுள்ள நாளக் குறுக்குவெட்டையும் பொறுத்து அடவிய நேரம் மாறும். நாளத்தால், நேரங் கடியுங் (கணக்குச் செய்யும்) கருவியைக் கடிகையென்றும், நேரத்தை நாளிகை/நாழிகை என்றுஞ் சொல்வர்.

பொதுவாக ஒருநாழிகையையோ, சிறுபொழுதையோ (10 நாழிகை) காணுங் கருவிகளைச் செய்வார். (அடுத்தடுத்து நாழிகைகளை அறிவிக்குமிடத்தில் 7,8 நீர்க்கடிகைகள் இருந்தாற்றான். தொடர்ந்து நாழிகளைகளைக் கணக்கிட முடியும். நாழிகைக் கணக்ரென்ற வேலையாட்கள் கடிகைக் கூடத்திலிருப்பார். அக்காலத்தில் 60 நாழிகைக்கும் நேரங்காணுவது என்பது மாந்தவுழைப்பு மிகுந்தது. இன்று ஆளேயின்றி எல்லாவற்றிற்கும் எந்திரங்கொண்டு செய்யும் நுட்பம் வந்துவிட்டது.) பாகதம்/சங்கதத்திற் கடிகை என்றசொல் கடிகாவாகிக் நேரத்தையும், கருவியையும் சேர்ந்தே குறித்தது. கண்ணிமை, கைநொடி, மாத்திரை, விநாழிகை, நாழிகை, சிறுபொழுது, பொழுது, நாள், வாரம், பக்கம், மாதம், பெரும்பொழுது, அயனம், ஆண்டு என்பன காலத்தைக் குறிக்கும் அலகுகள்.

அறிவியலில் தடநிலை (state), செலுத்தம் (process; தொடர்நிகழ்ச்சி) என இரண்டுமே முகன்மையானவை.

”இறப்பே நிகழ்வே எதிரது என்னும்
திறத்தியல் மருங்கின் தெரிந்தனருள்ளப்
பொருள்நிகழ்வு உரைப்பது காலமாகும்”

என்று தொல்காப்பியர் பொருளதிகாரம் செய்யுளியல் 202 ஆம் நூற்பாவிற் காலத்தைச் செலுத்த வழி வரையறுப்பார். (இதற்கு முந்திய 201ஆம் நூற்பாவில் கரும நிகழ்வு நடப்பதன் வழி இடத்தை அவர் வரையறைசெய்வது இன்னொரு விதப்பு. ஐன்சுடைனுக்கு முன், space-time ஐ இப்படி வரையறுத்தவர் யாருமிலர். நம்சிறப்பு நம்தமிழருக்கே தெரிவதில்லை.) தொல்காப்பியரின் வாசகப்படி, Time is perceived through narration of event-sequence. சுணக்கம், தங்கல், தாமதம், தோயம்/தாயம் [ஒவ்வோரிடத்தும் தோய்ந்துதங்கி நகருகிற ஆட்டம் தாயக்கட்டம் (time-slot game) எனப்படும். தாயம் என்பது தங்கல், time என்னும் ஆங்கிலச்சொல் இதுதான்] போன்ற சொற்களெல்லாமே இருப்பிற்கு நேரங்கழியும் ”செலுத்தத்தைக்” குறிப்பன. தொல்காப்பியரின் வரையறை நேரங்கழியும் நிகழ்வுத் தொகுதிகளைக் குறிக்கும். மாறாக, ஒளிப்படக் கருவியால் ஓராயிரம் உறைபடங்களாய் (event freezes) நிகழ்வுகளைப் பதிக்கும்முறை 2-ஆவதாகும். நேரம், கணம், காலம், சமயம் போன்ற குறிப்பிட்ட instant ஐக் குறிக்கும் சொற்கள் 2ஆம் முறையைச் சார்ந்தவை. 2 முறைகளுமே காலத்தைப் புரிந்துகொள்ளும் வழிமுறைகள் தாம். கணக்கற்ற கலைஞரால் உறைபடங்கள் உருவாக்கி camera graphics மூலந் தொகுத்து, கண்முன் நிகழ்வு நடந்ததுபோல் ஓட்டிக்காட்டுவது இக்காலத்திற் ”பாகுபலி” போன்ற திரைப்படங்களில் நடக்கிறது. .

நாளாவட்டத்தில் ஒருசெயலை விடாது திருப்பிச்செய்யும் அதிர்வுகளின் துடிப்பை எண்ணுவதன்மூலமே நேரத்தை அளக்கமுற்பட்டனர். இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் தெறித்தளத்தல் என்றது கண்ணிமை, கைநொடி போன்ற அதிர்வு நேரங் குறித்ததே. ஒரு விநாழிகை நேரத்தில் (1 விநாழிகை = 0.4 minutes = 24 seconds; இக்கால விநாடியோடு விநாழிகையைக் குழப்பிக்கொள்ளக் கூடாது.) 100 முறை கண்ணிமைக்க/நொடிக்க முடியும் என்று கொண்டார். (எனவே 1 கண்ணிமை = 0.24 seconds) அகரமுதலியின்படி, இசைக்கருவியின் நரம்பைத்தெறித்து (=சுண்டி) செவியருகேவைத்து அளப்பது தெறித்தளத்தலாகும். இம்முறையில், செவியருகே அதிர்வேற்படுத்தி அதிர்வெண்ணையோ அல்லது அதிர்வின் நேர அளவையோ கண்டுபிடிக்கிறாரென ஊகிக்கலாம்.

மேற்சொன்ன கால அளவைகள் போக, வடவர் பழக்கத்தால் முழுத்தம் (= 2 நாழிகை; இதைத்தான் முகூர்த்தமென்று சொல்கிறார். தென்பாண்டிநாட்டில் முழுத்தமென்ற நல்லதமிழே புழங்கும்.), சாமம் (= 3 மணி; யாமமென்ற தமிழ்ச்சொல் இரவு 10 மணியிலிருந்து 2 மணி வரையுள்ள நேரத்தைக் குறிக்கும். கும்மிருட்டை அது குறிப்பதால் முன்னால் ஸகரஞ்சேர்த்துச் மாலை 6 மணியிலிருந்து விடியல் 6 மணிவரை குறிக்குஞ்சொல்லாகச் சங்கதங்கொண்டது. 12 மணியை 4ஆல் வகுத்தால் ஒருசாமம் = 3 மணி என்றசமன்பாடு கிடைக்கும். 1 இரவு = 4 சாமம் என்பது வடமொழிவழக்கு.), இருது (= இரு மாதம்; இதில் இகரத்தைத் தொலைத்து ருது என்று சங்கதங்கொள்ளும்.) போன்ற அளவைகளும் நம்மிடையே ஏற்பட்டன. இக்காலத்தில் விநாடி, நிமிடம், மணி என்ற அளவுகளும் புழக்கத்திலுள்ளன.

5. தேங்க முகத்தளவை என்பது கூலங்கள், திண்மத்துகள், பொடிகளை அளக்கையில் புரைகளை (pores) நெறிப்பது குறித்தது. ஆழ்ந்து பார்த்தால், இது திண்மத்துகளின் பருமனை அளப்பதிற் சரியான ஒழுங்குமுறை அளத்தல் ஆகும். திண்மத்துகளைக் கொட்டுகையில், எப்படியடைக்கிறோம் என்பதைப் பொறுத்து வெவ்வேறு புரைமைகள் (porosities) குவியலுக்கு ஏற்படும். அரிசிப் புரைமையும், அரிசிமாப் புரைமையும் ஒன்றா? இல்லையே? தவிர தேங்க முகத்தளத்தலில் படியின்மேற் குவியும் கூம்பை மட்டத்தோடு வழித்துப் பின் தட்டித்தட்டி, அமுக்கி மீண்டும் திண்மத்துகளால் நிரப்பி, பன்முறை செய்து (iteration) இறுக்கம் ஏற்பட்டபிறகே அளப்பார். துகள்களுக்கு இடையிருக்கும் இறுக்கத்திற்குத் தக்கப் பெய்தளந்த பருமன் வேறுபடும்.

பெய்தளத்தலில் பெய்திணிவோடு (pouring density) அளந்தால், இங்கே நெறித் திணிவோடு (compact density) அளக்கிறோம். தேங்குதலென்பது அடைதலையும், இறுக்கத்தையும் (compaction) குறிக்கும். திண்மப்பொடியை தேக்கிமுகந்து அளக்காவிடில், இயல்பான புரைமையோடு (natural porosity) கூடிய வெள்ளத்தையே (volume) அளக்கமுடியும். இற்றை அறிவியலில் மெய்த் திணிவு (true density), மொத்தைத் திணிவு (bulk density), பெய் திணிவு (pour density), இறுக்கத் திணிவு (compact density) என வெவ்வேறு திணிவுகளை, திண்மப் பொடிகளையொட்டிப் பேசுவர். தேங்க முகத்தளத்தலென்பது தமிழரின் அறிவியற் சிறப்பாகும். வேறெந்த மரபினரிடம் இந்த அளத்தல் முறை கிடையாது. நாம்தான் மற்றார்க்கு இச்சிறப்பைச் சொல்லாதுள்ளோம். (அதுசரி, நமக்கே முதலில் விளங்கவேண்டுமே?)

மேலேசொன்ன அறிவியற் சிறப்பிற்கு இன்னொரு பக்கமுமுண்டு. அதாவது, தேங்க முகத்தளவையையும், பெய்தளவையையும் ஒன்றிற்கொன்று இணைக்கத் தவறிவிட்டோம். புரைமையுள்ளதை உணர்ந்த நாம், அதைத் தனிப்பட வரையறை செய்து, பல்வேறு வாகைகளை (phases) விளக்கி, திண்மத்துகள் என்பது வெறும் திண்மம் மட்டுமல்ல, திண்மமும் காற்றுஞ் சேர்ந்த இருவாகைப் பொதி (a body with two phases) என்பதை அறிவியல் பூர்வமாய் விளக்கத் தவறிவிட்டோம். இதற்கும் மேலையர் புரிதலுக்கே நாம் காத்து நிற்க வேண்டியதாகிவிட்டது.   

6. சார்த்தியளத்தல் என்பது ஒன்றை இன்னொன்றோடு சார்த்தி ஒப்பிட்டு அளப்பதாகும். கண்ணிமைக்கும் நேரம், விரல் நொடிக்கும் நேரம் என்று சொல்கிறோமே, அவையெல்லாம் ஒப்பீட்டளவுகள் தாம். நேரம், காலம் என்பவை ஒருவகையில் relative units. இளம்பூரணர், நச்சினார்க்கினியரின் படி, கண்ணிமைக் காலமும் சார்த்தியளத்தலே. வேறொரு எடுத்துக்காட்டும் தரமுடியும். இதள் தெறுமமானியைப் (Mercury thermometer; தெறுதல் = சுடுதல்) பயனுறுத்தி அளக்கும்போது, வெம்மை (temperature) கூடக்கூட, இதள் தண்டின் நீட்டங் கூடுகிறதல்லவா? இங்கே இதளின் நீட்டத்தை வெம்மையிற் சார்த்தி, அளக்கிறோம். ஆலி (ice), உறைபனி (frigid), சிந்து (snow), சிலிர் (chill); சிலிதை (sleet), குளிர் (cold), வெதுமை (warm), இளஞ்சூடு (mild hot), கடுஞ்சூடு (very hot), கொதி (boiling) என்று பல்வேறு சூட்டு நிலைகளுக்கும் நீரைக் கொண்டு ஓர் எண்ணைத் தொடர்புறுத்துகிறோமே அதெல்லாம் சார்த்தியளத்தலே.

இன்னுஞ் சொன்னால், இற்றை அறிவியலில் மின்சார, காந்தப் புலங்களில் அளக்கப்படும் மின்னோட்டம், மின்னழுத்தம், மின்னாற்றல், காந்தவோட்டம், காந்தவழுத்தம், காந்தவிசை போன்ற பல்வேறு அலகுகளும் சார்த்தியளத்தல் முறையிலே அளக்கப்படுகின்றன. ஒருவகையிற் பார்த்தால் சார்த்தியளத்தல் முறையில்லாவிடில், அறிவியல், நுட்பியல் வளர்ந்தேயிருக்காது எனலாம். இன்னுஞ் சொல்லக் கூடிய சார்த்தியளத்தலின் விரிவு இங்கே முகன்மை இல்லையென்பதால் விடுக்கிறேன்.
.
7. எண்ணியளத்தல் என்பதும் நேரத்தை, அதிர்வெண்ணை, பயன்படுத்துவது போலத்தான். அறிவியல், நுட்பியற் துறைகள் மேற்சொன்ன 6 முறைகளைப் பயன்படுத்தி எல்லாவற்றையும் எண்ணியல் மயமாக்கி 7ஆம் முறைக்கு மாற்றிவிடுகின்றன. நீரின் உறைநிலை செண்டிகிரேடுப் பாகையில் 0 எனும் போது, அவ்வெண்ணே நமக்குப் பலவற்றையும் உணர்த்துகிறது. இங்கிருந்து ஓரிடம் எத்தனை தொலைவு? 350 கிலோ மீட்டர் என்றால், ஏதோ புரிகிறது அல்லவா? ஒருநாளைக்கு எவ்வளவு பால் வாங்குவீர்கள்? 1 இலிட்டர். இப்படி எல்லாவற்றையும் எண்மயப்படுத்துவதே இற்றை அறிவியல் வழியாகிறது.

அன்புடன்,
இராம.கி.

அளவைகளும் சாரியைகளும் - 1

சொல்லின் கடையெழுத்துக்கள் வருமெழுத்துக்களோடு இணைவதைப் பற்றி எழுத்ததிகாரம் புணரியலிற் கூறும் தொல்காப்பியர், விதப்பான புணர்ச்சி வகைகளைத் தொகைமரபிற் பேசுவார். இவ்விரு பகுதிகளிலும் ஒருகூறாகச் சாரியைகளும் பேசப்படும். இதன் தொடர்பில்,

உயிரும் புள்ளியும் இறுதி யாகி
அளவும் நிறையும் எண்ணுஞ் சுட்டி
உளவெனப் பட்ட எல்லாச் சொல்லும்
தத்தம் கிளவி தம்மகப் பட்ட
முந்தை வரூஉம் காலந் தோன்றின்
ஒத்த தென்ப ஏயென் சாரியை

என்ற 165 ஆம் நூற்பாவின்வழி, ”அளவு, நிறை, எண்ணுப் பெயர்ப்புணர்ச்சியை எப்படிப் புரிந்துகொள்வது?” என்று அமெரிக்காக் கலிபோர்னியாவிலிருக்கும் பேரா. இராசம் தமிழ்மன்றம் மடற்குழுவில் ”தொல்காப்பியத்தில் தசமமுறை” என்ற தலைப்பிற் கருத்துக்கேட்டார். [நான்மதிக்கும் தமிழறிஞரில் பேரா. இராசம் ஒருவர். ஆங்கிலத்தில் இராசமெழுதிய “சங்க இலக்கியத்திற்கான இலக்கணம்” என்ற நூல் ஓர் அருந்தவ முயற்சி. குடத்திலிட்ட விளக்காய் நிலவும் பேரா. இராசத்தைக் குன்றின் மேலிறுத்தித் தமிழுலகம் பாராட்டும் நாள் கூடிய விரைவில் மலரட்டும்.]

அளவைப் பெயர்களுக்கும் எண்ணுப் பெயர்களுக்கும் இடையே ஓரிமை யுண்டு. அறிவியல் வளர வளர, எல்லா அளவைகளையும் எண்வழி உணர்வதே வளர்ச்சியென ஆனது. தடுக்கிய இடமெலாம் தோயல் (digital) கருவிகள் புழங்கும் இக்காலத்தில் சாரியைகள் ஊடுவரும் அளவைகளின் புணர்ச்சியைப் புரிந்தாள்வது தமிழ்க்கணிமைச் சிந்தனையை வளர்க்கும். பேராசிரியர் கேள்விக்கு நேரடியாக மறுமொழிக்காது சற்றே சுற்றிவளைத்து, எழுத்ததிகாரம் 7 ஆம் நூற்பாவில் தொடங்கி, பல்வேறு அளவை முறைகளைப் பேசி, சாரியைக்கு வந்து, அளவைகளுக்கும் சாரியைகளுக்குமான உறவாடலைச் சொல்ல முற்படுகிறேன். சாரியைகள் இல்லாவிடில் எண்களுமில்லை; அளவைகளுமில்லை. வெவ்வேறு பாவு நூல்களாய்க் (warp threads) அளவைகளைக் கொண்டால் ஊடு நூலாய்ச் (weft thread) சாரியை அமையும். பாவையும் ஊடையும் ஒழுங்குறப் பிணைத்து நெய்ய வில்லையேல் அடர்-துகிலைக் கட்டமுடியாது. முதலில் அளவைகளைப் பார்ப்போம்.

"கண்ணிமை நொடி என அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே"

எனும் நூற்பாவிற்கு உரைசொல்லும் இளம்பூரணர், “நிறுத்தளத்தல் (weighing), பெய்தளத்தல் (measuring liquid volumes), நீட்டியளத்தல் (length measurement), தெறித்தளத்தல் (time measurement), தேங்க முகந்தளத்தல் (measuring powder volume), சார்த்தியளத்தல் (measurement through relative means), எண்ணியளத்தல் (counting)” என 7 முறைகள்கூறி, மாத்திரையளந்ததைச் சார்த்தியளத்தல் முறையென்று சொல்வார். நச்சினார்க்கினியரும் வரிசைமாற்றி இம்முறைகளைப் பதிவார். [பிறைக்கோட்டிற்குள் ஆங்கிலப்பெயர் கொடுத்தது என் புரிதல்/முயற்சி]

இம்முறைகள் பற்றி 2006 இல் ”அளவைகள்” எனுந் தலைப்பில் (http://valavu.blogspot.in/2006/04/blog-post_12.html.) வலைப்பதிவிலும் மடற்குழுக்களிலும் கேள்விகள் எழுப்பினேன். 9 1/2 ஆண்டுகளில் என் புரிதலில் மேலும் தெளிவேற்பட்டு இடுகைப்பிழைகளைத் திருத்தினேன். இன்னொரு பணியில், ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு (Unicode Consortium) திரு. சிறீரமணசர்மா சமர்ப்பித்த பின்ன, சின்ன முன்னீட்டிற் (proposal on fractions and symbols) தவறான குறியீடுகளும் சமன்பாடுகளும், செய்திகளும் நிறைந்ததுகண்டு, அவற்றைத் தடுத்துநிறுத்த நண்பர் நாக.இளங்கோவனோடும், கல்வெட்டியலார் சிலரோடுஞ் சேர்ந்து மாற்றாவணம் உருவாக்கவேண்டியிருந்தது. (அம்முயற்சியை வேறிடத்திற் பேசவேண்டும்.) இப்பணிக்காக South Indian Inscriptions தொகுதிகளின் பல்வேறு கல்வெட்டுக்களையும் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்படிக் கற்றதின் வழி எழுவதே ”அளவைகளும் சாரியைகளும்” எனும் இப்பதிவாகும்.

[நம்மவர் பலரும் இலக்கியம் பயின்றால் கல்வெட்டுப் படிப்பதில்லை; கல்வெட்டுப் படித்தால் இலக்கியம் பயில்வதில்லை. இரண்டும் ஒன்றிற்கொன்று சேரமுடியா எதிரிடைகள் (mutually exclusive) என்று எண்ணிக் கொள்கிறார். இதன்விளைவாய்ப் பெரும்பாலான தமிழறிஞர் கல்வெட்டியலாரை மதிப்பதில்லை; ”கல்வெட்டெல்லாம் கொச்சைத்தமிழ்; சங்க இலக்கியமே உயர்த்தி” என்பர். கல்வெட்டியலாரோ தமிழறிஞரைச் சீண்டுவதேயில்லை. தற்செயலாய்த் தமிழ்மேடைகளில் இருவரும் இருப்பதோடு சரி; இந்நிலை எதிர்காலத்தில் மாறவேண்டும். இருவருமே தமிழுக்குத் தேவையானவர்.. வலக்கண்ணால் மட்டுமே பார்த்து, இடக்கண்ணிற் திரைகட்டி, நாம் ஒதுக்கிவைக்க முடியுமோ? ஒதுக்கின், ஒரு மாந்தனுக்கு ஒருங்கான பார்வை எப்படி வரும்? மாந்தனுக்கு ஏன் 2 கண்கள்?] சரி அளவைகளுக்கு வருவோம். இவை பெரும்பாலும் மாந்தவுடலில் தொடங்கி வேளாண் பயிர் விளைப்பில் ஊடுருவிப் பின் போக்குவரத்தில் வளர்ந்து முடிவில் வானில் நிலைத்துள்ளன.

அன்புடன்,
இராம.கி.

Thursday, August 09, 2018

சங்கம் - 8

’சங்கச்’ சொல்லிற்கான வளைவுப் பொருளையும், கூட்டப் பொருளையும், அவற்றின் படியாற்றங்களையும் இதுவரை பார்த்தோம். இனிக் கூட்ட நீட்சியாய் எண்ணிக்கைப் பொருள் பார்ப்போம். இதன்வழி. "படையிலொரு தொகை" என்றவொரு பொருள் குறிப்பிடப்பட்டுள்ளது. படையும், படைத் தொகையும் எனப்பார்த்தால் அது பெரிய புலனம். இதன் விவரங்கள் சங்க இலக்கியங்களில் நேரடி கிடைப்பது அரிது. ஏனெனில் அடிப்படையில் சங்கநூல்கள் அகப், புற நூல்களாகும். புறமென்றாலுங்கூடப் பரணிநூல்கள் போல் போரை நேரடியாக விவரிப்பனவல்ல. வடபுல நூல்களைச் சார்ந்தே இச்செய்திகளை அணுகவேண்டியுள்ளது. இதனாலேயே தமிழ்நூல்கள் பின்வந்தவை என்றுசிலர் கருதலாம். வேர்ச்சொற்கள் பார்த்தால் அப்படித் தோன்றவில்லை. பொ.உ.மு.600 - பொ.உ.200 வரைக்கும் வடக்கிலும் தெற்கிலும் படை தொடர்பாக பல இடையாற்றங்கள் இருந்ததாகவே சொல்ல முடிகிறது. என்னால் முடிந்தவரை, படைத்தொகைச் செய்திகளை, கீழே சுருங்கச் சொல்கிறேன்.

மரஞ்செடிகளின் தண்டுபோலவே மாந்தனுக்கும் கால்களுண்டு. குத்திநிற்பதை நட்டநிற்பதாய்ச் சொல்வர். ’நடை’ச் சொற்பிறப்பை என்றேனும் நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா? ஒருகாலை முன்நகர்த்திப் பின்நட்டு, இரண்டாங் காலை முன்நகர்த்திப் பின்நட்டு,, அடுத்தடுத்துத் தொடர்வதே நடப்பதாகும். இதிலெங்கு தவறினும் விழவேண்டியதுதான் ஆக, நடுவதில் விளைவது நடை. 70000 ஆண்டுகள் முன் ஆப்பிரிக்காவிலிருந்து நடந்துவந்து இந்தியத் துணைக்கண்டத்துள் மாந்தர் நுழைந்தார். இனி நிலம்படும் பாதத்திற்கு வருவோம். நடந்துவந்த பாதையிற் சுவடின்றி யாரும் நடக்கமுடியுமோ? படு>படி>பதி என்பது ”பதம்>பாதத்தின்” தொடக்கம். பாதம் படுவதுபோல் மற்ற செயல்களில் மாந்தர் படிவதையும் படுதலென்பார். பட்டுவ வாக்கியங்களிற் (passive voice) இதைப் பயன்படுத்துவோம். ”பொத்தகம் என்னால் படிக்கப் பட்டது”. தன் வினையிலும் ’படு’ என்பது துணைவினையாகும். ”அவன் செயற்பட்டான்”. ஒருவகையிற் பார்த்தால் படுதல் என்பது ஒரு கட்டகச்சொல் (systemic word).

ஒரு வேட்டையில் 4 ஆட்கள் போவதாய் வையுங்கள். ஆட்களோடு, ஆயுதங்கள் (படைக்கலன்கள்), துணைப்பொருட்கள் (தளமாடப் பயனுறும் தளவாடம்). என எல்லாமுஞ் சேர்ந்தாற்றான் வேட்டை ஆடமுடியும், குறிப்பிட்ட செயலைச் சாதிக்கும் இதை வேட்டைக் கட்டகமென்போம். இதுபோல் படுதலைச் செய்யுங் கட்டகம் படை. இதுவொரு பொதுமைச் (generic) சொல். வேட்டை, நிலந்தோண்டல், இன்னொரு மாந்தக்கூட்டம் அழித்தல் என்பன எல்லாமும் படைச்செயல்களே. ஓர் இனக்குழுவின் நிலைப்பென்பது எப்போது சிக்கலாகிறதோ, அப்போது இனக்குழுவிற்காகப் படை ஏற்பட்டே தீரும். நாளாவட்டத்தில் காவல், தாக்கல், அழிவென்ற கண்ணோட்டங்கள் இதனுள் வரும். விலங்காண்டி காலத்திலிருந்து இன்றுவரை படையளவு கூடியுள்ளதே தவிர, கருத்தீடு மாறவில்லை.

துணைக்கண்டத்தின் நெய்தலிலும், அடுத்தடுத்துள்ள திணைகளிலும் மாந்த நகர்ச்சிக்கு நெடுநாட்கள் நடையே வழியானது. நடைக்கு அடுத்த நகர்ச்சி சகடங்களால் விளைந்தது. விலங்காண்டி நிலையிருந்து வளர்ந்தபின், குறிப்பிடத்தக்க நுட்பியல் மாற்றமாய்ச் சக்கரம், சகடம், சகடை, தேர், உருளம்> உருடம்>உருதம்>ரதம் போன்றவை குமுகத்தில் உருவாகின. இவை எப்பொழுது எங்கு முதலில் உருவாகின என்பது இன்னுந் தெரியாது. ஆனாற் சிந்து சமவெளியில் இவையிருந்ததற்குச் சான்றுகளுண்டு. [தொடக்கத்தில் காளைகளே சகடங்களை இழுத்திருக்கலாம். கால்>காள்>காளை; கால்நடை என இன்றும் சொல்லப் படுவதே ”காளையின்” சொற்பிறப்பைக் காட்டும்]. இதேபோன்ற சான்றுகள் எகிப்திய, சுமேரிய நாகரிகங்களிலும் கிடைத்துள்ளன.

பொ.உ.மு.9000-1800 வரை சிந்துசமவெளியில் குதிரைப்புழக்கம் இருந்தது போல் தெரியவில்லை. இத்தனைக்கும் ஆவ்க்கனித்தான், இரான், நடு ஏசியா போன்ற மேற்குநாடுகளில் குதிரை உலவியது. ஆரியருக்கும் குதிரைப் பழக்கமுண்டு. இட்டைட், மித்தனி போன்ற நாகரிகங்களில் குதிரை / குதிரை வண்டி கொண்டே ஆரியர் முன்னிலைக்கு வந்தார். சிந்துவெளி நாகரிக முடிவில் குதிரைத் தாக்கம் இந்தியாவில் ஏற்பட்டிருக்கலாம். பாரசீகம், அரேபியா போன்ற நாடுகளிலிருந்து நிலம் மூலம் வடக்கேயும், நருமதைத் துறைகள் தொடங்கி தீவகற்பம் முழுதும் கப்பல் மூலம் தெற்கேயும் குதிரைகள் இறக்கப்பட்டன. இதன் பின்னர் சுமைவண்டிகளைக் காளைகளும், வேகவண்டிகளைக் குதிரைகளும் இழுத்தன. இந்திய நாகரிகத்தில் பொ.உ.மு.2000/1800க்கு அப்புறமே படைவேலைகளுக்குக் குதிரை பயன்பட்டது. குதிரையையும், வண்டிகளையும் இணைத்த பின்னாற்றான் சாலைகளிற் கல்லைப் பாவும் பழக்கமும், மேடுபள்ளமில்லாது சாலைகளை அமைக்கும் நுட்பமும் இந்தியாவிற் பரவியது.
.
இதேநேரத்தில் இந்தியாவில் யானைகளும் மாந்தவேலைக்கு உதவியாய்ப் பழக்கப்பட்டு வந்தன. அவற்றை வைத்து எதிரிக் கோட்டைகளை அழிப்பது பொ.உ.மு.2000க்கு முன்னாலும் இருந்திருக்கலாம். இப்பழக்கம் எப்போது ஏற்பட்டதென உறுதியாய்ச் சொல்லமுடியவில்லை. பொ.உ.மு. 1800க்கு அப்புறம், சகடங்களும், யானைகளும், குதிரைகளும் போர் உத்திகளில் சேர்ந்து பயன்படத் தொடங்கின. போரையொட்டிய இலக்கிப்பு முயற்சியில் (logistic effort. இலக்கு= குறிப்பிட்ட இடம்; இலக்கிப்பு= குறிப்பிட்ட இடத்திற்குக் கொண்டு போய்ச் சேர்த்தல்.) தேரும், யானையும் ஒன்றுபோல் கருதப்பட்டன தேரை நகர்த்துவதும், யானையை நகர்த்துவதும் அவற்றின் எடை கூடக்கூட ஒரே யளவு மாந்தமுயற்சி கொண்டவையாகக் கருதப்பட்டன. சதுரங்கத்திலும் கூட rook ஐச் சிலர் தேரென்பர். வேறு சிலர் யானையென்பர். இவற்றிற்கிடையே ஒற்றுமைகளும் இருந்தன, வேற்றுமைகளும் இருந்தன. (இரண்டையும் நடத்துவோர் நம்மூரில் ஒரே மாதிரியாய்ப் பாகரென்றே சொல்லப்பட்டார்.)

படையின் முதலலகு பட்டி/பண்டி/பத்தி/பந்தி என்றழைக்கப்பட்டிருக்கலாம். (இவற்றுள் சரியான சொல் ஏதென்று இங்கே சொன்ன இயலுமைகளுக்குள் என்னாற் சொல்லமுடியவில்லை.) இன்றும் பட்டி என்பது கால்நடைத் தொகுதியையும், கால்நடைகள் கட்டும் இடத்தையும் குறிக்கிறது. (முல்லை நில ஊர்கள் பட்டியென அழைக்கப்பட்டன.) ’பண்டி’ வண்டியையும், யானையையுங் குறித்தது. வடபுல நூல்களிலும் (மோனியர் வில்லியம்சு அகரமுதலி, மகாபாரதம், அல்பெருனியின் பயணக்குறிப்புகள்), தமிழ் நிகண்டுகளிலும், அகரமுதலிகளிலும், இலக்கியங்களிலும் குதிரை கட்டுந் துறை “பந்தி” என்றழைக்கப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டு சேர்ந்த பெரும்பற்றப் புலியூர் நம்பி எழுதிய திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில் இச்சொல் வரும். இக்கட்டுரையில் இப்போதைக்குப் பட்டியென்றே பயில்கிறேன். மற்ற சொற்களை இன்னும் ஆய்ந்து சரியான முடிவிற்கு வரவேண்டும். 

மகாபாரதப் படி ஒரு பட்டியில் 1 தேர், 1 யானை, (தேரை/யானை சுற்றி) 3 குதிரைகள் (தேரும், யானையும் குதிரைக் கணக்கில் ஒன்றுபோலவே கருதப்பட்டன), ஒவ்வொரு குதிரையையுஞ் சுற்றி 5 காலாள்கள் இருந்ததாய்ச் சொல்வர். குதிரைகளுக்கும் ஆட்களுக்குமான மொத்தக் கணக்கைச் சரியாய்ப் புரிந்துகொள்ளவேண்டும். (அரபுப்பயணி அல்பெருனி இதில் தவறினார்.) 1 தேரிழுக்க 4 குதிரைகளெனில் பட்டியில் மொத்தம் 4+3+3= 10 குதிரைகள் இருந்தன. ஆட்களைக்கணக்கிட்டால் தலைவன், முன்னால் யானைப்பாகன், பின்னால் துணை யானைப்பாகன், தலைவன் வேல்வீச யானை மேலிருந்து உதவும் 2 வீரர், யானையோடு கீழோடிவரும் உதவியாளென 1 யானைக்கு 6 பேருண்டு. இதுபோல் தலைவன், தேர்ப்பாகன், மெய்க்காவலன், தலைவனுக்குத் தளவாடம் கொடுத்துதவும் 2 வீரர், தேர்ப்பழுது பார்க்கும் தச்சனென 1 தேருக்கும் மொத்தம் 6 பேருண்டு. எனவே மகாபாரதப் படி, 1 பட்டியில் 2*[6+3*(1+5)] = 48 ஆட்களிருந்தார். எனவே ஒரு பட்டியில் தேர், யானை, குதிரைகள், ஆட்களின் விகிதம் (1:1:10:48). சனபதங்களுக்குச் சற்று முன்னிருந்த குரு, பாஞ்சால அரசுகளில் இதுவே வழக்கம் போலும்.

மாறாகக் குடிலரின் அருத்தசாற்றப் படி பார்த்தால், 1 தேர் அல்லது 1 யானையைச் சுற்றி 5 குதிரைகள், 1 குதிரை சுற்றி 6 காலாட்கள் என்றுவரும். இக்கணக்கின் படி தேர்:யானை:குதிரைகள்:ஆட்கள் ஆகியோரின் விகிதம் 1:1:(4+5):.2*[6+5*(1+6)] = (1:1:14:92) ஆகும். மகத அரசில் இதுவே பழக்கம் போலும். (பாரதக் காப்பியம் பொ.உ.மு. 1000-800 ஐ ஒட்டிய கதையைச் சொல்லும். அக்காப்பியம் பொ.உ.மு.400 களில் எழுதப்பட்டு படிப்படியாக இடைச் செருகல்கள் பெற்று பொ.உ.400 வரை எழுதப்பட்டுக்கொண்டே வந்தது. படை பற்றிய விரிவான குறிப்புகள் பெரும்பாலும் இக் காலகட்டத்தின் பிற்பகுதியில் வரையப்பட்டிருக்கலாம்) பட்டிக்கு மேலும் அக்காலத்தில் படையணிகளுண்டு. இவற்றைக் கீழே கொடுத்துள்ளேன். சங்கதப் பெயர்கள் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ் விக்கிப்பீடியாவில் சங்கதப் பெயர்களே உள்ளன. தமிழ்ப்பெயர்களை பெருமாய்விற்கு அப்புறமே என்னால் அடையாளங் கண்டுகொள்ள முடிந்தது. அவற்றைக் கீழே சொல்லியுள்ளேன்.

3 பட்டிகள்      = 1 படைமுகம் [சேனாமுகம். மகாபாரதக் கணக்கு (3:3:30:144),           அருத்தசாற்றக் கணக்கு (3:3:42:276)];
3 படைமுகங்கள் = 1 குழுமல்    [குல்ம.      மகாபாரதக் கணக்கு (9:9:90:432),           அருத்தசாற்றக் கணக்கு (9:9:126:828)];
3 குழுமங்கள்    = 1 கணம்     [கண,       மகாபாரதக் கணக்கு (27:27:270:1296),       அருத்தசாற்றக் கணக்கு (27:27:378:2484)]);
3 கணங்கள்     = 1 வானி      [வாகினி.    மகாபாரதக் கணக்கு (81:81:810:3888),        அருத்தசாற்றக் கணக்கு (81:81:1134:7452)];
3 வானிகள்     = 1 தானை     [ப்ரிதனா    மகாபாரதக் கணக்கு (243:243:2430:11664)     அருத்தசாற்றக் கணக்கு (243:243:3402:22356)];
3 தானைகள்    = 1 குமம்       [சமூ       மகாபாரதக் கணக்கு (729:729:7290:34992)     அருத்தசாற்றக் கணக்கு (729:729:10206:67068)];
3 குமங்கள்     = 1 சேனை     [அனீகினி   மகாபாரதக் கணக்கு (2187:2187:21870:104976) அருத்தசாற்றக் கணக்கு (2187:2187:30618:201204)];
10 சேனை      = 1 அக்கவானி. (அக்க்ஷௌகினி அல்லது அக்குரோனி).

இக்கணக்கை மனத்துள் அசைபோட்டுப் பாருங்கள், திகைப்பாயிருக்கும். ஒரு சேனையில் 2187 யானை/தேர்களென்பது சாத்தார எண்ணிக்கையல்ல. இதிலுள்ள 2187 யானைகளைப் பழக்கவேண்டுவதும் பெரிய வேலையே. அருத்தசாற்றப்படி நேரடித்தொடர்பிலா ஆள்பேர் அம்பென இன்னும்பலர் படையொட்டி வேலைசெய்திருப்பார். மொத்தநாடே எங்குபார்த்தாலும் படைமயமானது போலும். ஏறத்தாழ 3 சேனைகளைக் குறிக்கும் 6000 யானைகளை நந்தர் வைத்திருந்தாரென அலெக்சாந்தர் காலக் கிரேக்கக் குறிப்புகள் சொல்லும். [பல்வேறு நாடுகளைப்பிடித்த பின்னால், அலெக்சாந்தர் சிந்தாற்றங்கரைக்கு வந்தபோது, பெருமாண்ட நந்தர் படையில் 6000 யானைகளுக்குமேல் இருந்ததாகவும், கிரேக்கர் அதை வெல்லமுடியாதென்று கருதியும், வீடு விட்டுத் தொலைவுவந்த தம்வீரர் பல்வேறு போர்களாற் சோர்ந்தாரென்பதாலும், ”இனிமேலும் இந்தியாவிற்குள் நகரவேண்டாம், ஊருக்குத் திரும்புவோம்” என அலெக்சாந்தர் முடிவுசெய்தானாம் போகும்வழியில் பாபிலோனில் நோய்ப்பட்டு இறந்தானாம்.]

நந்தரை வென்று, பேரரசுருவாக்கிய மோரியர் இன்னும் ஓரிரு சேனைகள் அதிகம் கொண்டிருக்கலாம். வேந்தரின்கனவு சேனையாற் கூடியது பொ.உ.மு.400- பொ.உ. 0 என்றுதெரிகிறது. மோரியருக்கு அப்புறம் சுங்கர், கனகரிடம் சேனைகள் குறைந்தன. 1 சேனையளவு படைகொண்ட செங்குட்டுவன் வடக்கே போகையிலிருந்த கனகர் நலிந்து போனவர். (செங்குட்டுவனுக்கு முன் தமிழ்வேந்தர் யாரும் சேனைகள் வைத்திருந்தது போல் தெரியவில்லை. அப்படியேதும் சங்கநூல்களிற் குறிப்பில்லை. நான் படித்தவரை 1 சேனையை முதலில் வைத்தவன் ச்ங்குட்டுவன் போலவே தெரிகிறது. அதுகாறும் படைதிரட்டலில் அவனை மிஞ்சிய அரசன் தெற்கே இருந்ததுபோற் தெரியவில்லை.) தவிர, இந்தியாவில் எவரும் 10 சேனைகள் வைத்திருந்ததாய் வரலாற்றில் எந்தக் குறிப்புகளுமில்லை. மேலேவரும் அக்கவானி போன்றவை முற்றிலுங் கற்பனை உருவகங்களாகவே எனக்குத் தோற்றுகின்றன. உயர்வுநவிற்சியின் உச்சகட்டமாய் கௌரவர் பக்கல் 11 அக்கவானிகளும், பாண்டவர் பக்கல் 7 அக்க வானிகளும் மகாபாரதத்திற் பேசப்படும். மேலேயுள்ள கணக்குகளை வைத்துப் பார்த்தால், இத்தகைய படையைக் குருச்சேந்திரம் தாங்கியிருக்குமா என்பதே பெருங்கேள்வி. எனவே தான் பார்தப்போர் என்பது கற்பனைப்போர் என்று சொல்லவேண்டியுள்ளது. The paraphernalia is too much to consider. Hence the war described could be purely imaginary. 

அடுத்தது அக்கவானி. போர்நடுவே படையினருக்கு ஆணையிடச் சங்கூதும் அளவிற்குப் பெரிதான வானி எனும்பொருளில் பெரும்படையணிக்கு இப்படிப் பெயரிட்டார் போலும். சங்கத்தின் முதற்குறை அங்கம். அங்கத்தின் வலித்த ஒலிப்பு அக்கம். சங்கம்>அங்கம்>அக்கம். வளைவுப்பொருளிலிருந்து கூட்டப் பொருளை முன்கொண்டதுபோல், சங்கிலிருந்து இங்கும் எண்ணிக்கைப் பொருள் எழுந்தது. அக்கவானி என்ற சொல்லே கற்பனையை உணர்த்தும். மகாபாரதந் தவிர்த்து ’அக்ஷௌகினி’ வேறெங்கும் பயின்றதுபோல் தெரியவில்லை. சங்க இலக்கியங்களில் தானையே பெரிதும் பேசப்படும். (தானைக்குத் தண்டமெனும் பெயருமுண்டு.) தானைபயிலும் சங்கநூல் வரிகளைப் பேசினால் கட்டுரை நீளும். எனவே சேனை பேசும் பழைய நூல்வரிகளை மட்டும் இங்கு விவரிக்கிறேன். .

”இகல்வேந்தன் சேனை” என்பது கலி 108 -1 இல் வரும் சொல்லாட்சி. சிலம்பின் 19 ஆம் காதை முடிவில் வரும் வெண்பாவில் ”விற்பொலியும் சேனை” என்றகூற்று வரும். இவ்வெண்பா பிற்காலப் புலவரால் இடைச்செருகப் பட்டதென வேங்கடசாமிநாட்டார், உரையிற் கூறுவார். காதைகளின் இடைவரும் வெண்பாக்கள் இளங்கோ எழுதியதல்ல என்று “சிலம்பின் காலம்” நூலில் நான் சொன்னேன். “வட்கர் போகிய வான்பனந் தோட்டுடன் புட்கைச் சேனை பொலியச் சூட்டி” என்பது சிலம்பு 25 ஆம் காதையின் 146-147 ஆம் வரிகள். ”தண்டத் தலைவரும் தலைத்தார்ச் சேனையும் வெண்டலைப் புணரியின் விளிம்புசூழ் போத” என்பது சிலம்பு 26 ஆம் காதையில் 80-81 ஆம் வரிகள். குடவஞ்சியிலிருந்து வடக்கேகிய படைகள் கடல்விளிம்பைத் தொட்டுப்போந்தனவாம்.

அதே 26 ஆம் காதையில் செங்குட்டுவன் நூற்றுவர் கன்னரின் சஞ்சயனுக்குச் (= தூதனுக்கு) சொல்வதாய் 162-165 ஆம் வரிகள் வரும். ”கூற்றங் கொண்டுஇச் சேனை செல்வது நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி யாங்குக் கங்கைப் பேர்யாறு கடத்தற்கு ஆவன வங்கப் பெருநிரை செய்க தாம்” என்றுவரும். செங்குட்டுவன் வெறுந்தானைகளைக் கொண்டிருந்த மன்னனல்லன். பெருஞ்சேனையைக் கொண்டு, கனகரைப் பொருதுமளவிற்கு வடக்கே போனவன். மேலும் சிலம்பு 25ஆம் காதையில் 191-194ஆம் வரிகள் ”தாழ்கழல் மன்னன் தன்திரு மேனி வாழ்க சேனாமுகம் எனவாழ்த்தி இறைஇகல் யானை எருத்தத்து ஏற்றி அறைபறை எழுந்ததால் அணிநகர் மருங்கென்” என்றுவரும்.

”தம்பெருஞ் சேனையொடு வெஞ்சமம் புரிநாள்” என்பது மணிமேகலை 8.59. இருபெரும் மன்னர் மணிபல்லவப் புத்தபீடிகையை தாமே கொள்வதற்காக தம்பெருஞ் சேனைகளால் சண்டையிட்டாராம் அடுத்து, சேர, பாண்டியரின் யானை, தேர், குதிரை மாவொடு, வயவர் நிரம்பிய சேனைகளோடு வஞ்சியிற் பொருதி சோழன் காரியாற்று மாவண் கிள்ளி அடைந்த வெற்றி பற்றி, 

வஞ்சியினிருந்து வஞ்சி சூடி
முறஞ்செவி யானையும் தேரும் மாவும்
மறங்கெழு நெடுவாள் வயவரும் மிடைந்த
தலைத்தார்ச் சேனையொடு மலைத்துத்தலை வந்தோர்
சிலைக்கயல் நெடுங்கொடி செருவேற் றடக்கை
ஆர்புனை தெரியல் இளங்கோன் தன்னால்
காரியாற்றுக் கொண்ட காவல் வெண்குடை
வலிகெழு தடக்கை மாவண் கிள்ளி
ஒளியொடு வாழி ஊழிதோ றூழி.

என்று மணிமேகலை 19, 120-128 வரிகள் சொல்லும். இவைபோக, சேனைத் தலைவர் பற்றி நாலாடியார் 3 ஆம் பாட்டும், சேனை, சேனாபதி பற்றி நான்மணிக் கடிகை 52, 55 உம், கார்நாற்பது 20 உம் கூறும். இக்கூற்றுகளைப் பார்க்கும்போது சேனையளவிற்குத் தமிழர் படைதிரட்ட முடிந்தது பொ.உ.மு.200க்கும் அப்புறமென்றே தெரிகிறது. பொ.உ.மு.462 க்கு அருகில் முதற்கரிகாலன் சேனைகொண்டு படையெடுத்து அசாதசத்துவின் மகன் உதயபட்டனோடு பொருதினானா அல்லது ஒரு சில தானைகளைக் கொண்டு பொருதினானா என்பது தெரியவில்லை. சேனைகளுக்கான ஆள்-அம்பு வலுவைப் பார்க்கும்போது அவ்வளவு முந்தைய காலத்தில் பெருஞ்சண்டை நடந்திருக்குமா என்றும் ஐயப்படவேண்டியுள்ளது. இதேபோல் தான் மகாபாரதப் போர்ச்செய்திகளும் பின்னால் சேர்க்கப்படவையோ என்று ஐயுறுகிறோம். படைகள்பற்றி வேறொரு கட்டுரையில் விரிவாய்ப் பார்க்கலாம்.

இதுகாறும் சொன்னவற்றால், வளைவு, கூட்டம், எண்ணிக்கை எனும் 3 பொருள்களின் வழியே பார்த்தால், சங்கம் என்பது அடிப்படையில் தமிழ்ச்சொல்லாகவே தெரிகிறது.

அன்புடன்,
இராம.கி. 

சங்கம் - 7

சங்கமென்ற சொல்லிற்கான பொருள்வரிசையில், மூன்றாவதாய் அமைவது ”கூட்டநீட்சியான” எண்ணிக்கை. இதன்வழிப் பொருட்பாடுகள் "இலக்கங் கோடி, படையிலொரு தொகை" என்பன. தமிழிய, வட இந்திய, மேலை மொழிகளின் எண்ணுச்சொற்களிடையே வியத்தகு ஓரிமையிருப்பதாகவே நான் உணர்கிறேன். சொற்கள் வேறாயினும், உள்ளிருக்கும் செலுத்தமும் (process) பொருளும் (meaning) ஒன்றுபோற் காட்டும். தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பியனுக்கும் முன்தொடர்பு இருக்குமென நான்சொல்வதற்கு இதுவுமொரு காரணம். தமிழில் எண்கள் எழுந்தவகை சொல்ல ஏராளம் உண்டு. அதேபொழுது இந்த நீள்தொடரை மேலும் நீட்டுவது முறையல்ல என்பதாற் சுருங்கச் சொல்கிறேன். முதற்கருத்தீடு ’ஒன்றைப்’ பற்றியது.

விலங்கியல், மாந்தவியல் அறிவின்படி, மாந்தனின் உணவுப் பழக்கமே அவனைக் குரங்கிலிருந்து வேறுபடுத்தியது என்பர். பல்வேறு மாந்தக் குரங்குகளில் இறைச்சி சாப்பிடத் தொடங்கியவன் அவனே. ஒருகாலத்தின் அவன் மூளை கிடுகிடுவென வளரத்தொடங்கியதும் இறைச்சி சாப்பிடத் தொடங்கியதாற்றான். இன்றைக்கு மரக்கறியுணவை வலியுறுத்தும் பலருக்கும் இது வியப்பாகலாம். ஆனால் அது உண்மை. ஒந்நு/ஒந்து/ஒண்ணு/ஒண்டு எனுஞ் சொற்கள் (ஒன்னு/ஒன்று என அதன்பின்னும் ஏற்பட்ட திருத்தங்கள்) எல்லாம் பெரும்பாலும் வாயுட்புகும் இறைச்சியால் ஏற்பட்டனவோ என்றே ஐயுற வேண்டியுள்ளது. ஊனிற்கும் ஊணிற்குமான எழுத்துப்போலி இந்த ஊகத்தை நமக்கு எழுப்புகிறது. இதன் விளக்கத்தை இங்கு நான் கூறவில்லை. வேறுதொடரிற் பார்க்கலாம்.

இரண்டென்பது ஊனை ஈரும், இரளும் வினையில் எழுந்ததாய்த் தோற்றுகிறது. ஈர்தல்= இரளுதல்= வெட்டுதல், பிரித்தல். துமி>துவி என வட இந்திய, மேலை மொழிகள் கையாளும். (துமித்தலும் கூட ஈர்தலே.) முன்று என்பது முன்வந்து காட்டும் மூ>மூக்கு, இதை நூ>நுதி>நுசி>நாசி, தூ>துயி>துதி (ஒருபொருட் சொற்கள்) என்றுஞ் சொல்வர். (வடவிந்திய, மேலை மொழிகள் வழக்கம்போல் ரகரத்தை உள்நுழைத்து துயியைத் த்ரயி>three என்றாக்கும். உலகின் பல பழங்குடிகளும் (1,2, பல) என்றோ, (1,2,3, பல) என்றோ, எண்ணுவதில் தேங்கி நின்றார். இன்னுஞ் சிலகுடிகள் கைவிரல் கொண்டு, ஐந்து எனும் கருத்தீட்டுக்குள் வந்தார். ஐ, ஐது, ஐந்து, அய், செய் என்றும் தமிழிற் சொல்லப்படும் அள்>அய்>ஐ என்று இச்சொல் வளரும். அள்ளுதல் = சேர்த்தல். ஐந்து விரலும் சேர்த்தே அள்ளுகிறோம். அஞ்சென்பது ஐந்து> அய்ந்து> அய்ஞ்சின் பேச்சுவழக்கு. இன்னும் வளர்ச்சியடைந்தோர், 4,6,7,8 ஆகியவற்றை ஊடே எண்ணி வளர்ந்துள்ளார்.

நால்கை என்பது நலிந்த கையைக் குறிக்கும். ஐந்திற் குறைந்துபோன கை. நால்கை> நால்கு> நான்கெனத் திரியும். கையிலாத நால்/நாலும் பழக்கத்தால் 4 ஐக் குறிக்கும். ”ஆறு, ஏழு, எட்டு” என்பவை 1,2,3,5 என்ற அடிப்படைகளைக் கொண்டு கூட்டப்பொருளில் எழுந்தன. சற்று நீளமான அவற்றின் சொற் பிறப்புக்களை இங்குநான் சொல்லவில்லை. ’பல’வெனுங் கருத்தும் முன்னேறிய பழங்குடிகளிடம் இருந்துள்ளது. 10 எனும் அளவிற்கு எண்ணிக்கையில் முன்னேறியவர் புதுக்கற்கால நிலையில் இருந்திருக்கலாம் என மாந்தவியற் குறிப்புகள் சொல்கின்றன. பல என்ற சொல்லை வரையறுத்து 10 ஐக் குறித்தது சிந்தனை வளர்ச்சி தான். தொடக்கத்தில் பல், வெளுப்பு நிறத்திற் பிறந்து, பொருள்நீட்சி பெற்று, வாய்ப்பல் குறித்தது. மேலும் பொருள்நீட்சியில் பன்மையைக் (many) குறித்து, முடிவிற் பல்து> பஃது> பத்து என்றாகி 10 ஐ வரையறுத்தது. மேலைமொழிகளின் ten னுங் கூடத் தந்தம்/பல்லையே குறித்தது. ஈரைந்து என்பதைத் ’துவிசெய்’ ஆக்கி தச எனத்திரித்து வடபுலத்தில் ஆள்வர்.

10 வந்தபின், 9 ஏற்படுவது இயல்பு. துவள்ந்து>துவண்டு போன பத்து, தொண்பது ஆனது, தொண்பது>தொன்பது>ஒன்பது ஆயிற்று. தொள்ளும் ஒள்ளும் ஒரே பொருளன. எப்படிக் கையைத் தொகுத்து நால்/ நாலு, நான்கைக் குறித்ததோ, அப்படித் துவள்>தொள்>தொண்டு என்பது ஒன்பதைக் குறித்தது. நமுத்தல்> நவுத்தல்>நவத்தலும் குறையைச் சுட்டும். நவமென்ற வடபுலச்சொல் அப்படியெழுந்தது. இங்கும் மொழிகளிடை ஒரே சிந்தனை தென்படுவதைக் காணலாம். கூர்ந்துபார்த்தால், ஊனில் தொடங்கி, பின் ஈர்ந்து, அடுத்து மாந்தரை மையமாக்கி (anthropocentric) 3,5,10 ஆகிய எண்களைச் செய்துள்ளார். பல்வேறு மொழிகளைப் பார்க்கையில் இவையே அடிப்படை எண்களாய்த் தெரிகின்றன. இவற்றை வைத்தே, 4,6,7,8,9 என்ற வழிபடு (derived) எண்களை உருவாக்கியுள்ளார்.

அடுத்தது நூறு. இதைச் செய்கையில் மாந்த உறுப்புச் சிந்தனை போதாமல் ஆனது. சில குடிகள் கைவிரல் 10 ஐயும், கால்விரல் 10 ஐயுஞ் சேர்த்து 20 எனும் அலகை உருவாக்கி எண் கட்டகம் (numeric system) செய்தார். (தென்னமெரிக்க மாயன்கள் இவ்வகையினர்.) சுமேரியர் போன்றோர் 60 ஐ வைத்து எண்ணு முறை உருவாக்கினர். ஒரு மணிக்கு 60 நுணுத்தம் (minutes), ஒரு நுணுத்தத்திற்கு 60 துளிகள் என இன்றுஞ் சொல்கிறோமே, அது சுமேரியர்வழி வந்தது. பெரிதும் 10 ஐயும், சிறுபால் 60 ஐயும் அடிப்படையாகத் தமிழர் கொண்டார். ஒரு நாளுக்கு 60 நாழிகை. ஒரு நாழிகைக்கு 60 விநாழிகை என்பதும் சுமேரியர்மாதிரிச் சிந்தனை தான். அதேபொழுது 10 இன் சிந்தனை தமிழரிடம் மறையவில்லை. இருபது, முப்பது, ......எழுபது, எண்பது என்று அமைவதும் நம் மரபு தான். தமிழர் எட்டின் அடிப்படையைக் கொண்டார் என்பது பிழையான புரிதல்..

அடுத்த வளர்ச்சி மாந்தவுடலிலிருந்து புவியிற்காணும் கல், மண் என நகரத் தொடங்கியது. உடையக்கூடிய (கல் போன்ற) ஏதோவொன்றைக் கீழே போடுகையில் ஒன்று பலதாவதுபோல், வலிந்து கீழிட்டு நுறுக்கும்> நொறுக்கும் போது நூறாகிறது. பொடிப்பொடியாகிறது. நூறெனும் சொல்லிற்கு சங்க இலக்கியங்களில் இப்பொருள் நெடுகவுள்ளது. நூறு>நீறு=பொடி. நுறுக்குவதற்கு இன்னொருசொல் சதைத்தல்> சதாய்த்தல். “போட்டு சதாய்ச்சிட்டான்பா” என இன்றுஞ் சொல்வோம். சதைத்தலின் இன்னொரு வடிவம் சாத்துதல். சதைத்தலிலெழுந்த வடசொல் சதம். சங்க காலத்தில் தமிழருக்கு வடக்கே (இற்றை மராட்டியக் கோதாவரிக் கரையில் ஔரங்காபாது அருகில்) படித்தானத்தைத் (Paithan) தலைநகராய்க் கொண்ட நூற்றுவர் கன்னர் (பாகதத்தில் சதகர்ணி) ஆண்டார். தமிழகத்தையும் மகதத்தையும் வணிகத்தால், இடையாற்றங்களால், இணைத்தவர் இவரே. எதிரிகளை நூறும் அடைப்பெயரை இவர் பெற்றார். கன்னர் (= கருநர்) என்பது சேரர்/சோழர்//பாண்டியர் போல் ஓர் இனக்குழு அடையாளம். 

தமிழிய, வடவிந்திய மொழிகளிடையே எண்களில் இணைச்சிந்தனை நிலவியது நெடுகவும் உண்மை. அவை தனித்தனியே தேர்ந்துகொண்ட சொற்கள் தாம் வேறு. மேலைச்சொல்லும் நூறுதல். சதைத்தல் போலவே அமையும்..100 க்கான மேலைச்சொற்கள் கொத்தற் கருத்தில் எழுந்தவை. ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகரமுதலி பொருள்கூறாது வெறுமே சொல் இணைகளை மட்டுங் காட்டும். Old English hundred "the number of 100, a counting of 100," from Proto-Germanic *hundratha- (source also of Old Frisian hundred, Old Saxon hunderod, Old Norse hundrað, German hundert); first element is Proto-Germanic *hundam "hundred" (cognate with Gothic hund, Old High German hunt), from PIE *km-tom "hundred," reduced from *dkm-tom- (source also of Sanskrit satam, Avestan satem, Greek hekaton, Latin centum, Lithuanian simtas, Old Church Slavonic suto, Old Irish cet, Breton kant "hundred"), suffixed form of root *dekm- "ten. கொத்தலும் சாத்தலும் ஒருபொருள் கொண்டன. சகரமும் ககரமும், ஹகரமும் மேலைமொழிகளில் போலிகள். ஒரு பக்கம் ககரம் சகரமாக, இன்னொரு பக்கம் ககரம் ஹகரமாகும். பொருள் ஏதோ ஒன்றுதான்.

நூறென்ற எண்ணுப்பொருள் சொல்லாட்சி சங்க இலக்கியங்களில் பல இடங்களில் வந்துள்ளது. “நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறுபல் வேள்வி முற்றிய வென்று” (திரு.155-156), “நூற்றிதழ்த் தாமரை” (ஐங்.20-2), ”பதிற்றுக்கை மதவலி நூற்றுக்கை ஆற்றல்” (பரி 3-40), “மையிரு நூற்றிமை உண்கண் மான் மறி தோள் மணந்த ஞான்று ஐயிருநூற்று மெய்ந்நயனத்தவன் மகள் மலர் உண்கண் மணிமழை தலைஇயென” (பரி 9-8,9,10), “நூற்றிதழ் அலரின் நிரை கண்டன்ன” (புறம் 27-2), ”புரிபுமேல் சென்ற நூற்றுவர் மடங்க, வரிபுனை வல்வில் ஐவர் அட்ட” (கலி 104 57,58), “மறம்தலைக் கொண்ட நூற்றுவர் தலைவனை” (கலி 52-2), “பன்னூறு அடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம்” (புறம் 62.10),”நூறுசெறு வாயினும் தமித்துப்புக் குணினே” (புறம் 184.3) என்பன அவையாகும்.

அடுத்தது ஆயிரம். நுறுக்குவதற்கும் கீழே, விடாது துவட்டி/தவட்டி எடுக்கையில் கல், தவடு>தவிடு பொடியாகிறது. தவட்டுதல்= சிறு பொடியாக்குதல். துவையலும் சிறுபொடியாக்குவதே. என்ன? ஈரஞ் சேர்ந்து பொடியாக்குவது. தவட்டுதல்>தவடு>தவிடு என்பற்கும் மேலைமொழிகளின் thousand ற்கும் தொடர்புள்ளதுபோல் தோற்றுகிறது; தவிடு பொடியாதல்; தவட்டுதல், தென்மாவட்டங்களில் சவட்டுதல் ஆகும். சவடென்பது வண்டல் மண்ணையும், ஆற்றுமணலையுங் குறிக்கும். (ஊரெலாம் காணும் ஆற்று மணற் கொள்ளை சவட்டுமணற் கொள்ளையே.) இதேபருமையில் ஆனால் கடற்கரையிற் கிடக்கும் மணல் சற்றேதிரிந்து, உப்பையுணர்த்தி, சவடு>சவர் என அழைக்கப்படும். சவத்தலே சவர்த்தலாயிற்று. சவ்வு>சவ்விரம்> சவிரம்> சாவிரம்>சாயிரமென இச்சொல் திரியும். கன்னடத்தில் சாயிரம் = ஆயிரம். (கன்னடச்சொல் தெரியாவிடின் ஆயிரத்தின் சொற்பிறப்பறிய நாம் தடுமாறியிருப்போம்.) இதற்கு இணையாய்த் தமிழில் அயிரம்/அயிரை = நுண்மணல், கண்ட சருக்கரை. அயிர் = நுண்மை.

சாயிரம்>சகயிரமாகி, பின் சகஸ்ரமாகி, சங்கதத்திற் புழங்கும். இதைத் தலைகீழாய் ஓதி ”சகஸ்ரமே ஆயிரமாயிற்று” என்றும் சிலர் சொல்வர். சவட்டுதலின் தொடர்பான சவளுதல் = துவண்டுபோதல், சவித்துச் சவலையான பயிர் சாவி,. சவித்தழிந்த உடல் சவம். சாவட்டை= சாவிப்பயிர், சாம்பிப்போதல்>சாவிப்போதல்= ஒடுங்குதல் போன்ற சொற்களைப் பாராது இவர் சொல்கிறார். சவைத்தலின் இன்னொரு வெளிப்பாடு அவைத்தல்; அரிசி குற்றலைக் குறிக்கும். அவல்= flattened rice. இவற்றையும் சங்கதத்தார் கவனிப்பதில்லை. ஆயிரம் தமிழில்லையெனில் இத்தனையும் தமிழில்லை என்றாகும். ஒரு சொல்லைத் தனித்துப்பாராது, சொற்றொகுதியாய்ப் பார்க்கும்படி நான் சொல்வது இதற்கே. ஆயிரம்போலவே இன்னொருசொல் அயிர்தம். சகஸ்ரத்தை ஆயிரத்திற்கு வைத்து, அயிர்தம்>அயுதத்தை வட புலத்தார் பத்தாயிரத்திற்குப் பயனுறுத்தினார். சாயிரம் புழங்காத தமிழரோ அயிர்தமும், ஆயிரமும் ஏறத்தாழ ஒன்றாய் ஒலிப்பதால், குழப்பந் தவிர்க்க, அயிர்தத்தைப் பத்தாயிரமென்கிறோம்..

’ஆயிரம்’ பழகிய சங்கச்சொல்லாட்சிகள் ”அடையடுப்பறியா அருவி ஆம்பல் ஆயிரவெள்ளம் ஊழி வாழி, ஆத வாழிய பலவே”  (பதி.63.19-21), “ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள” (பரி.3-42), ”ஆயிர அணர்தலை அரவவாய்க் கொண்ட” (பரி 3-59), “அந்தர வான்யாற்று ஆயிரம் கண்ணினான் இந்திரன் ஆடும் தகைத்து” (பரி.தி.2-95-96), ”சாலிநெல்லின் சிறைகொள்வேலி ஆயிரம் விளையூட்டாக” (பொரு. 247-248), “தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய” (மது 11), “ஆயிரவெள்ளம் வாழிய பலவே” (பதி 21.38), “ஆயிரம்விரித்த அணங்குடை அருந்தலை” (பரி 1.1), “மாசில் ஆயிரம் கதிர் ஞாயிறும் தொகூஉம்” (பரி.3.22), “மின்அவிர் சுடர்மணி ஆயிரம் விரித்த கவைநா அருந்தலைக் காண்பின் சேக்கை” (பரி 13.27-28), “அணங்குடை அருந்தலை ஆயிரம் விரித்த” (பரி.தி.1.79), “அணங்குடை வச்சிரத்தோன் ஆயிரம் கண் ஏய்க்கும்” (கலி.105.15), ”வளஞ்சால் துளிபதன் அறிந்து பொழிய வேலியாயிரம் விளைக நின் வயலே” (புறம் 391.19-21) என்பனவாகும். ஆயிரமென்ற எண்ணிற்கு மேற்பட்ட சொல்லாட்சிகள் தமிழிற்குறைவு. ஆனால் இல்லாதில்லை. நிகண்டுகளிலும், ஒருசில காட்டுக்களிலுமுண்டு. (மறவாதீர். சங்க இலக்கியங்கள் அகரமுதலிகள் அல்ல.)

அயிர்தலுக்கும் கீழே பொடித்து நொய்வது நொய்தலாகும். ”நொய்>நொசி” ஆங்கிலத்தின் nice ஓடு இணைகொண்டது. ”அம்மண்னைத் தொட்டுப்பார், நொய்யாக இருக்கும்.” நொய்தல், நெய்தலென்று திரிந்து 100000 (=10^5) த்தைக் குறிக்கும். இலவுதல்>இலகுதலும் நொய்தலைக் குறிக்கும். இலகல்= நொய்ம்மை. இலகுதல் தன்வினை. இலக்குதல் பிறவினை.. இலக்கலிற் பிறந்த இலக்கம், முற்றிலும் தமிழே. இலக்கத்தைச் சங்கதம் இலக்ஷ என்னும். பிறகு, ”தமிழ் அங்கிருந்து கடன்வாங்கியது” என்பர். ”நெய்தலும் குவளையும் ஆம்பலும், சங்கமும் மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய செய்குறி ஈட்டம் கழிப்பிய வழுமுறை” என்று பரி. 2.13- 15 ஆம் வரிகளிற் பயிலும். ஆயிரத்திற்கு மேற்பட்டு அடுத்தடுத்துயரும் எண்களாய் கால எண்ணிக்கை சொல்லப்படும். இலக்கமும் (10^5) நெய்தலும் ஒன்றென வடபுல நூல்களைப் பார்த்தே நான் அறிந்தேன். நெய்தலை வடக்கெ ந்யுதமென்பார். (தமிழாய்வர் கொஞ்சமாவது பாகதம், சங்கதம் படிக்கவேண்டும். நம்மூர்ச் சிந்தனை வடக்கே பெயர்ந்து கிடக்கிறது. வேரிங்கே விளைவங்கே. நாம் விரும்புகிறோமோ, இல்லையோ, தமிழாய்வாளர் உண்மையறிய சங்கதப் படிப்பு கட்டாயந்தேவை. இந்தக்காலத் தமிழ்ப்படிப்பில் இதை ஒதுக்கியது பெரிய தவறு.) நெய்தல், இலக்கத்தோடு நூறாயிரமும் நம் வழக்கிலுண்டு. “நூறாயிரம் கை ஆறறி கடவுள்” என்பது பரி. 3.43.

அடுத்தது கோடி. நுணுகிய துகள்களைக் குவ்விக் குவிப்போம். குவ்வியது குவலும்/குவளும். 10^7 எனும் எண்ணுணர்த்தி குவளை என்ற பெயர்ச்சொல் உருவாகும். (இதில் கூடிய எண்ணிக்கை என்ற உட்பொருள் இதிலுள்ளது.) குவளை குவளியாகி தெலுங்கிற் குவடியாகி முடிவிற் கோடியாகும். வடக்கே கோடியே புழங்கியது. ’குவளை’ அங்கில்லை. தமிழில் இரண்டும் உண்டு. ஆனால் கோடியே மிகுதி. “ஒன்று பத்தடுக்கிய கோடிகடை இரீஇய பெருமைத்தாக நின் ஆயுள் தானே” (புறம் 12.5-6), “கோடியாத்து நாடுபெரிது நந்தும்” (புறம் 184-6), “கோடிபல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய” (புறம் 202-7) ஆகியவை இதற்கான சொல்லாட்சிகள். (குவளை= கோடி என்ற இணையைத் தமிழருக்குப் புரியவைத்தவர் சொல்லறிஞர் இரா.மதிவாணன். [அவருடைய கட்டுரையை அடையாளங் காட்ட பரணில் தேடினேன். இப்போது கிட்டவில்லை. தெலுங்குமொழி பலவகையில் பாகதத்திற்கும் தமிழுக்குமான பாலமே. நூற்றுவர் கன்னர் ஆட்சியில் ஏற்பட்ட விளைவு இது. (இற்றைத் தமிழாய்வோர் குறைந்தது இன்னொரு திராவிட மொழியையும் கட்டாயம் படிக்கவேண்டும்.)]   

நெய்தல், குவளை என்றசொற்கள் குவிந்த நுண்துகள்களாய் காட்சி அளித்தாலும், நீர்ப்பூக்களெனும் மாற்றுப்பொருளுமுண்டு. அகப்பாட்டுக்கள் பலவற்றில் அப்படியே ஆளப்படும். அந்த மிகுதியே நம்மை எண்ணுப்பொருள் காட்டவிடாது தடுக்கும்.) ஒவ்வோர் எண்ணுக்கும் ஏழெட்டு நிகர்ச்சொற்களை மரபுகருதி மறைப்பாகப் புழங்குவது இந்தியாவெங்கணும் நடைமுறையாகும். காட்டாக வானம்= 1, கை= 5, திசை= 8, கைத்திசை=  58. இப்படிப் பல்வேறு சொற்களையும் சொற்கூட்டுகளையும் வட்டார மரபுக்கேற்பப் புழங்குவர். குழூஉக்குறி புரியாதோர் விளங்காது நிற்பர். [”நாலுபேர் சொல்வாங்க” என்ற மரபுப்பேச்சிற்கு ”நாலுதிசையிலும் உள்ளவர் சொல்வர்” என்பதே பொருள். ”4 ஆட்கள் சொல்வர்” என்பதல்ல.] இலக்கத்திற்கு நெய்தலும், கோடிக்கு குவளையும் அடையாளமாய்க் கொள்ளப் பட்டன. நெய்தலையும், குவளையும் இப்படிப் புழங்கியபிறகு ஆம்பலையும், தாமரையையும் தமிழர் விட்டுவைப்பாரா, என்ன? ஆம்பல், சங்கம், தாமரை என்ற எண்சொற்களும் கூடப் பிறந்தன.

நூறுகோடி = 10^9 என்ற எண்ணைக் குறிக்க ’ஆம்பல்’ புழங்கியுள்ளது. அவைத்தல் பற்றி முன்சொன்னேன் அல்லவா? அவல்மட்டுமின்றி அவமென்ற பெயர்ச்சொல்லும் அதிற்கிளைக்கும். அதற்கும் மிக நுண்ணிய பொருளுண்டு. ஒருபொருளை அவத்திவிட்டால் (10^9 பங்காக்குவது என்பது பின்னென்ன?) அழிந்தே போகும். எனவே அவத்திற்கு அழிவுப்பொருளும் வந்தது..அவம்>ஆம் எனத் தொகும். ஆம்புதல், ஆமுதல் போன்ற வினைகளை எழுப்பும். ஆம்பல் பேச்சுவழக்கில் ஆம்ப என்றாகும். சங்கதத்தில் ஆம்ப்ய ஆகி, மகரந் தொலைத்து ஆப்ய என்றாகும். யகரமும் ஜகரமும் வடசொற்களில் பல இடங்களிற் (மேலைமொழிகளிலும் போலி/) ஆப்ய>ஆப்ஜ ஆகும். வட நூல்களில் இதேபொருளில் இச்சொல் புழங்கியது. இதைக் குமுதம்>குமுத> சமுத>சமுத்ர என்றுஞ் சொல்வார். வடபுலத்திலும்  10^9 என்பதே இதன் பொருளாகும். ஆம் என்பதற்கு நீரென்ற பொருளுமுண்டு. கொஞ்சங் கொஞ்சமாய் எண்ணுப்புலம் என்பது கல்>மண்>மணலென நீருக்குள் வந்து விட்டது பாருங்கள். இன்னொரு வகையில் அம்பல்>ஆம்பல். அம்புதல்= கூம்புதல் என்பதால் அல்லியைக் குறிக்கும். அல்= இரவு. பகலிற் கூம்பி, இரவில் மலரும் அல்லிக்கு ஆம்பல் பெயர் ஏற்பட்டது.

அடை/இலை பக்கத்தில் உள்ளது நீராம்பல் பூ. ”அடையடுப்பறியா அருவி ஆம்பல் ஆயிரவெள்ளம் ஊழி வாழி” என செல்வக்கடுங்கோ வாழியாதனை பதி.63.19-21 இல் கபிலர் அழகுறப்பாடுவார். ”அடையடுப்பறியா நீராம்பல் பூ” = 10^9. பூத்த வஞ்சி/ பூவா வஞ்சி என்ற இணையை இங்கு எண்ணிக் கொள்ளுங்கள். 10^9 ஆண்டுகள் செல்வகடுங்கோ வாழியாதன் வாழவேண்டுமாம். (இதில் வரும் வெள்ளத்தின் பொருள் இன்னும் பெரிய எண்ணைக் குறிக்கும். கீழே பாருங்கள்.) என்னவொரு ஆசை கபிலருக்கு வந்தது பாருங்கள்? ”நெய்தலும் குவளையும் ஆம்பலும், சங்கமும் மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய செய்குறி ஈட்டம் கழிப்பிய வழுமுறை” என்று பரி. 2.13-15 ஆம் வரிகளில் அடுத்தடுத்த பெரிய எண்ணாய் ஓர் ஒழுங்கு முறையைக் காட்டும். இதுவரை பார்த்த படி, நெய்தல்/இலக்கம்/நூறாயிரம்= 10^5. குவளை/கோடி= 10^7. ஆம்பல்/நூறுகோடி= 10^9.. இனிச் சங்கத்திற்கு வருவோம். இதன்மதிப்பு இன்னுங்கூட. தமிழரைக் குறைத்து மதிப்பிடாதீர் தோழர்களே!

சங்குபற்றி முன்சொல்கையில் 1000 இடம்புரிச் சங்கிற்கு 1 வலம்புரிச் சங்கு கிடைக்குமென்ற பெருதகை (probability) சொன்னேன். அதுபோல் 1000 வலம்புரிச் சங்கிற்கு 1 சலஞ்சலம். ஆயிரம் சலஞ்சலத்திற்கு 1 ஐஞ்சுன்னம். இதைப் பெருக்கிப்பாருங்கள். 1000* 1000* 1000 = 10^9 என்றாகும். (இதைத்தான் ஆம்பல் என்று சொன்னோம்.) இதற்குமேலும் இதே பெருதகையில் ஓரெண் வேண்டும் எனில் அது 10^12 தான். சங்கமென்ற சொல்லுக்கு இதையே வழிப்பொருள் ஆக்குவர். வடநூல்களில் இதேபொருள் சொல்வர். 10^12 என்பதை 10^5 * 10^7 = இலக்கங் கோடி என்று சொல்லலாம். தமிழ் அகரமுதலிகளில், நிகண்டுகளில் இப்பொருளுள்ளது. இப்போது புரிகிறதா, சங்கத்தின் எண்ணுப்பொருள்? அடுத்தது நூறு சங்கம் 10^14. இதை வெள்ளமென்று குறித்திருக்கிறார். சங்கதத்தில் ஜலதி என்பர். இதுவரை சொன்னதில் தாமரை விட்டுப்போனது. அது சங்கத்திற்கும் வெள்ளத்திற்கும் இடைப்பட்டதெனப் பரி. 2.13-15 ஆம் வரிகள் சொல்லும். எனவே பத்துச்சங்கம் = 10^13 = தாமரை ஆகலாம். என்னால் உறுதியாய்ச் சொல்லமுடியவில்லை. வேறு ஏதேனும் விளக்கம் தோன்றினால் பின்னர் சொல்கிறேன். . 

இனி முடிவிற்கு வந்துவிட்டோம். அடுத்த பகுதிவரை பொறுங்கள்.

அன்புடன்,
இராம.கி.

சங்கம் - 6

70000 ஆண்டுப் பழங்குடிகளின் மிச்சசொச்சமாய்த் தமிழர் இருந்திருக்கலாம் என எண்ணுதற்கு இன்றுமுள்ள சங்குப்பயன்பாடும் விளக்கங்களும் காரணமாகும். கூட்டம் பெரிதானபின், சங்கின் பயன்பாடு ஓசையெழுப்பப் பயன்பட்டிருக்கலாம். ஒருவேளை கூட்டக்கருத்தேகூட இதன்வழி எழுந்ததோ, என்னவோ?. விரைந்த நகரவாழ்வில் இன்றிது அரிதாகினும், தென்பாண்டி நாட்டுப்புறவீடுகளில் பொங்கல் நாளில் தங்கள்வீட்டிற் “பால் பொங்குவதைச்” ஊரார்க்குத் தெரிவிக்கச் சங்குமுழங்குவது நம்மைச் சிந்திக்கவைக்கும். ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குக் குறுஞ்செய்தி தெரிவிக்கச் சங்கூதுவதும் முரசு அறைவதும் மேலையர் காலம் வரையிலும் இங்கிருந்த பழக்கம். கட்டபொம்மன் காலையுணவு அருந்துமுன் திருச்செந்தூரில் முருகனுக்கு பூசையாயிற்றா என நாளுமறிய விழைவானாம். ஒரு கல்லிற்கு ஒருக்காய் செந்தூரிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு முரசறைவித்துச் சங்கும் ஊதுவராம். இதுபோற் செயற்பாடுகள் தமிழகத்தில் ஏராளம். ”குழந்தை பிறந்தபோது ஊதப்படும் முதற்சங்கம், திருமணத்தின் போது ஊதப்படும் இரண்டாஞ்சங்கம், வாழ்நாள் முடிகையில் ஊதப்படும் மூன்றாஞ்சங்கம்” பற்றிப் பட்டினத்தார் பாடுவார்.

முதற்சங் கமுதூட்டும்; மொய்குழலார் தம்மை
நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் - கடைச்சங்கம்
ஆம்போ ததுவூதும்; அம்மட்டோ? இம்மட்டோ?
நாம்பூமி வாழ்ந்த தலம்.

இதுபோன்ற செயல்கள் வழக்கிலிருந்தவை தாம். பிறந்த பிள்ளைக்கு சங்கின்வழி மருந்தூட்டுவதுகூட அண்மைக்காலம்வரை நாட்டுப்புறங்களில் இருந்த பழக்கமே. நெய்தலிலிருந்து மற்றதிணைகளுக்கு இது போன்ற சங்குப்பயன்பாடுகள் விரிந்தனபோலும். ஆனால் சங்கின் கூட்டப்பொருள் இதே சொற்பிறப்பின்வழி ஏற்பட்டதாவென்பது வேறுகேள்வி. அடிப்படையில் இருவேறு சொற்பிறப்பில் உருவாகி ஒரேமாதிரி ஒலிக்குஞ் இருபொருட் சொற்களாகவே இவை தோன்றுகின்றன. விரிவாய்ப் பார்ப்போம்.

உம்முதலெனில் பொருந்தல், கூடுதலென்று பொருள்கொள்ளும். ”அவனும் நானும், இனியனுமாய் பள்ளிசென்றோம்.” இங்கே உம் உருபு கூட்டப்பொருள் குறிக்கிறது. உம்>அம் ஆகி, அம்முதலுங் கூடத் தமிழில் பொருந்தலைக் குறிக்கும். அம்>அமை; அமைதல்= பொருந்தல். தெலுங்கில் அம்முதல்= "ஒருபொருளின் மதிப்பில் உடன்பட்டு விற்றல்". அம்முதலில் வந்ததே அங்காடி. தெலுங்குச்சொல் தெரியாதிருந்தால், ’அங்காடி’ எப்படி வந்ததெனத் தெரியாமலே போயிருக்கும். உம்முதலின் முன் சகரஞ் சேர்த்தும் அமையலாம். சும்>சும்மை என்பது மிகுதி குறிக்கும். சும்மைக்கு முந்திய ’சும்முதல்’ வினைச்சொல் (கும்முதலைப் போல்) மிகுத்தலைக் குறித்திருக்க வேண்டும். [மிகுத்தலிலிருந்து கூட்டப் பொருளும் பருத்தற் பொருளும் இயல்பாக வரும்.] சும்முதல் தொடர்பான பெயர்ச் சொற்களைப் பதிந்த அகரமுதலிகள் வினைச்சொல்லைப் பதிவாக்கவில்லை. வியப்புறுகிறோம்.] சும்மையொட்டி, சுமை, சுமடு, சும்மாடு, சுமத்தலென்ற சொற்களும் அகரமுதலிகளிற் பதிவாகியுள்ளன.

சம் என்ற சொல்லிலிருந்து சமமென்ற சொல்லுமெழும். சமம் போன்ற அடிப்படைச் சொல்லைத் தமிழ் கடன்வாங்கியிருக்க வழியில்லை. சம்முதல், சமத்தல், சமலுதல்= ஒன்றைப்போல் இன்னொன்றாய் ஒருங்கிருத்தல் என்பதற்கான வினைச்சொல் இந்தையிரோப்பியனிலும் நேரடியாயில்லை. same என்ற பெயர்ச்சொல் மட்டுமே சுற்றிவளைத்துக் கூடுதல், உடனிருத்தல் பொருளில் எழுந்துள்ளது. உடன் இருப்பன ஒன்றுபோல் இருக்கவேண்டுமே என்று நாம் புரிந்துகொள்கிறோம்.
.
perhaps abstracted from O.E. swa same "the same as," but more likely from O.N. same, samr "same," both from P.Gmc. *samon (cf. O.S., O.H.G., Goth. sama; O.H.G. samant, Ger. samt "together, with," Goth. samana "together," Du. zamelen "to collect," Ger. zusammen "together"), from PIE *samos "same," from base *sem- "one, together" (cf. Skt. samah "even, level, similar, identical;" Avestan hama "similar, the same;" Gk. hama "together with, at the same time," homos "one and the same," homios "like, resembling," homalos "even;" L. similis "like;" O.Ir. samail "likeness;" O.C.S. samu "himself"). O.E. had lost the pure form of the word; the modern word replaced synonymous ilk (q.v.).

இதே கருத்தைச் சமமென்ற சொல்லை மட்டுமின்றி, இன்னும் பல சொற்களைச் சேர்த்து ஒட்டு மொத்தமாக ’சமயம்’ என்ற தலைப்பில் நண்பர் ஆசீப்பின் வேண்டுகோளுக்கிணங்கி அவர்களின் கானல் சிறப்பிதழில் எழுதினேன். பின் அதை என் வலைப்பதிவிலும் பதிந்தேன். கீழே சுட்டிகள் கொடுத்திருக்கிறேன்.
 
http://valavu.blogspot.com/2006/03/1.html
http://valavu.blogspot.com/2006/03/2.html
http://valavu.blogspot.com/2006/03/3.html
http://valavu.blogspot.com/2006/03/4.html
http://valavu.blogspot.com/2006/03/5.html
http://valavu.blogspot.com/2006/03/6.html

இக்கட்டுரைத் தொடரிற்சொல்லியதை மீண்டுஞ்சொல்வதிற் பொருளில்லை. எனவேதான் சுட்டிகள் கொடுக்கிறேன். 'சம'த்திற்கு இணையாகத் திராவிட மொழிகள் பலவற்றிலும் [சமம்- மலையாளம், சம- கன்னடம், படகர், சமமு-தெலுங்கு] சொற்களுள்ளன. சமத்தை ஒட்டிய பலசொற்களும் மற்ற திராவிட மொழிகளிலுண்டு. அவற்றில் சிலவற்றை பர்ரோ-எமெனோ பதிவுசெய்வார். வெறும் ஒற்றைச்சொல் மட்டும்பார்க்கும் பழக்கத்தை அருள்கூர்ந்துநிறுத்தித் தொடர்புடைய சொற்களைத் திராவிடமொழிகளிற் பார்க்கப்பழகுங்கள். இத்தனைமொழிகளில் கருத்தும், வளர்ச்சியுமிருந்தால்  முந்து திராவிடத்திலும் அது இருந்திருக்குமென அறிவூகம் (intuition) சொல்லும். [முந்துதமிழென நான்சொன்னால் பலருமேற்கார்.. பொதுவாகப் புகர்நிறத்தார், கருப்பர் சொல்லை மற்ற தமிழர்/இந்தியர் கேட்பதில்லை:வெள்ளை நிறம் எனில் அதிலேதோ இருப்பதாய் நம்புவது நம்மவர் வழக்கம்.-))] அப்படியான முந்துதிராவிடக் காலத்தில் வேதமொழி இந்தியாவினுள் நுழையவில்லை என்றே வரலாற்று மொழியியல் சொல்கிறது.

அப்படியும் மீறி முந்துதிராவிடத்திலும், இந்தையிரோப்பியத்திலும் ஒரே பொருளில் ஒருசொல் அமையுமானால் அது பழஞ்சொற்களின் மிச்சசொச்சம் என்பதே அறிவிற்குகந்தது. திராவிட மொழிகளுக்கும், இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் இடையே ஏதோ உறவு முந்துபழங்காலத்தில் நாகரிகந் தோன்றிய காலத்தில் இருந்திருக்குமென்று கருதுகோள்கொண்டால் இதுபோல் ஒப்புமைகளை ஆயலாம். [நான் அப்படியொரு கருத்துக் கொண்டவன்.] மாறாக ஒப்புமைப்பொருள் சொல்லத் தமிழருக்குச் சொல் கிடையாதென்று அச்சடித்தாற்போல் வேதமோதி, ”வடமொழி மேடு, தமிழ் பள்ளம், மேட்டிலிருந்து நீர் பள்ளத்திற் பாய்ந்தது” என்று கிளிப்பிள்ளைபோல் கூச்சலிட்டு முட்டுச்சந்திற்குள் முன்னும் பின்னும் போய்வந்து கொண்டிருக்கலாம். I take சமம் as common stock of Dravidian and Indo-European. Period. Such common stock is to be ascertained over a long period of research. முடிவாக same = சம என்றே நான் கொள்ளுகிறேன்.

சமம், சமன், சமல் என்பவை பல்வேறு ஈறுகளில் முடியும் ஒருபொருட் சொற்களில், சமம் என்பதையே பெருவாரியாகப் பயன்படுத்தி மற்ற இரண்டையும் இற்றைத்தமிழில் நாம் துறந்து கொண்டுள்ளோம். கும்முதல்= கூடுதல் போலவே சம்முதல்= கூடுதல் என்பதும் பிறந்தது. கூடும்பொருட்கள் ஏதோவகையில் ஒரேமாதிரி இருக்கும் காரணத்தால், ”ஒன்றுபோலிருந்தல்” என்ற வழிப்பொருள் பிறந்தது. முதற் பொருள் இங்கு கூடுதலே. இரண்டாம் பொருளே ’ஒன்றுபோலிருத்தல்’. சம்மோடு தொடர்புடைய செம்முதலையும், அதையொட்டி செ, செம், செவ், செய் போன்ற முன்னொட்டுக்களையும், அவை உருவாக்கிய சொற்களையும் இங்கே எண்ணிப்பார்க்கலாம். அம்முதல்= பொருந்துதல்; அம்>அங்கு>அங்கம்= பொருந்திய உறுப்பு; கும்முதல்= குற்றுதல்; கும்>குங்கு= குன்றியது; கும்முதல்>கொம்முதல் = குவிதல்; குங்கு> கொங்கு= குவிந்த மேடான பகுதி; மலைகளையும், குன்றுகளையும் ஓதுக்கி நிரவலாய்ப்பார்த்தால் தமிழகத்தில் கொங்குப்பகுதியே மேட்டுநிலம். சும்முதல்= தொகுத்தல்; சும்>சுங்கு= ஆடையின் கொய்சகம். சுருங்குதல்> சுங்குதல்; சுங்குடிப்புடவை= சுங்கிய இடங்களில் சாயந்தோய்த்துப் புதுத் தோற்றங்கொண்ட புடவை. இப்படிப் பல்வேறு இணைகளைப்போல், சம்முதல்=  கூடுதல்; சேர்தல்; சம்>சங்கு>சங்கம்= கூட்டம் என்றசொல் எழுந்தது புரியும்.

கூட்டப்பொருள் என்பது ஈறாறு கூடுமிடம், ஆறு கடலோடு கூடுமிடம் ("சங்குமுகம் ஆடி சாயாவனம் பார்த்து, முக்குளமும் ஆடி முத்திபெற வந்தானோ" என்று எங்களூர்ப் பக்கம் ஒரு தாலாட்டு வரி போகும். சங்கு முகத்தைத் தொகுத்துச் சங்கமமாக்கிச் சங்கதம் எடுத்துக்கொள்ளும். அதை மீண்டுங் கடன்வாங்கிச் சங்கமித்தலென்று சிலதமிழர் உருவாக்குவார்), சேர்க்கை, அவை, புலவர் கூட்டம், முச்சங்கங்கள், செயின புத்த சங்கங்கள், அன்பு, புணர்ச்சி முதலிய பொருட்பாடுகளைக் குறிக்கும். சங்கமென்றசொல் தமிழிலக்கியத்தில் கூட்டப்பொருளில் முதன்முதல் ஆளப்பட்டது. மணிமேகலையின் (7.113-114) ”வலம்புரிச்சங்கம் வறிதெழுந் தார்ப்ப, புலம்புரிச் சங்கம் பொருளொடு முழங்க” என்ற வரிகளாகும். புலம்புரிச்சங்கம் என்பது கூட்டபொருளில் அமைந்ததே. இதைக்காட்டிக் மணிமேகலை காலத்திற்றான் ’சங்கம்’ கூட்டப்பொருளில் எழுந்ததென்பது பெருந்தவறு. முன்சொன்ன காரணங்களால் சங்கத்திற்குக் கூட்டப்பொருள் முன்பே ஏற்பட்டிருக்கலாம்.   

[(இடைவிலகலாயினும்) மணிமேகலை காலம்பற்றி இங்கு சொல்ல வேண்டும். சிலம்பும், மணிமேகலையும் ஒரேகாலத்தில் அடுத்தெழுந்த நூல்களென்றே பலருங்கொள்வார். அப்படிக்கொள்வதால் தமிழர் வரலாறும், தமிழிலக்கிய வரலாறும் தடுமாறிப் புரிந்துகொள்ளப்படும். பெரும் ஆய்வாளாரே இதில் தடுமாறியுள்ளார். ஆழவாய்ந்தால் கதைநடந்த காலத்திற்கருகில் 2,3 ஆண்டுகளுக்குள் சிலம்புநூல் எழுந்திருக்கவே வாய்ப்புண்டு. அதில் வரலாறு மிகுந்தும், புனைவு குறைந்தும் உள்ளதை உணரலாம். என் ஆய்வின் படி சிலம்பின் காலம் பொ.உ.மு.75 ஆகும். ”அரைசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்” என்ற உண்மைகளோடு, சோழ, பாண்டிய, சேர இனக்குழுக்களை விதப்பாய்ப் பாராது மொத்தத்தமிழரின் சிறப்பையும் தேசியநோக்கிற் பேசவந்த நூல் சிலம்பாகும். தவிர, எல்லாச் சமயங்களையும் குறையின்றி விரித்துப் பேசிய அந்நூலை வெறுமே செயினச் சமயநூலென்று குறுக்குவதும் சரியல்ல.

மணிமேகலையோ, ஒருசில சிலம்புக் கதைமாந்தரை தன் கதைமாந்தராய் எடுத்து, அளவிற்கதிகம் புனைவுசேர்த்து பல்வேறு காலநிகழ்வுகளைக் கலந்து, கதையாக்கிச் சிலம்பிற்கப்புறம் 500 ஆண்டுகள் கழித்து (பெரும்பாலும் பொ.உ.425 இல்) தமிழகத்தில் புத்தமுயர்ந்த களப்பிரர்காலத்து நூலாகும். (இதற்கீடாக செயினப்பெருமை பேசும் நீலகேசியைச் சொல்லலாம்.) எப்படி விக்கிரமனின் ’நந்திபுரத்து நாயகியும்’, கல்கியின் ’பொன்னியன் செல்வனும்’ ஒன்றுமற்றதின் தொடராய் அதேபொழுது தத்தங்காலங்களில் வேறாய் எழுந்தவையோ, அதுபோற் சிலம்பையும், மணிமேகலையும் கொள்ள வேண்டும். இதைச்செய்யாது ஆய்வுக்குழப்பத்தால் சிலம்பை வலிந்து கீழிழுத்துப் புதினமென்பது முற்றிலும் தவறான போக்கு. இதுபோல் தவறு ஏறத்தாழ 100 ஆண்டுகளாய் நடந்துவருகிறது.]

அன்புடன்,
இராம.கி.