Sunday, October 28, 2018

தூங்கெயில் - 3

அவலோகிதனை இப்படி ஐயுறத்தொடங்கிய நாம், இத்தொடரில் மணிமேகலை வாழ்வையும் துறவையும் பேசாது (அது பென்னம் பெரிய வேலை; வேறோரிடத்திற் செய்யவேண்டும்). ”தூங்கெயிலெறிந்த தொடித் தோட் செம்பியன்” பற்றி அலசப் போகிறோம். என் இப்போதையப் புரிதலில் இப்பெயர் விதப்புக் குறிப்பும், குடிப்பெயருஞ் சேர்ந்தது. அக் காலத்தில் தோளுக்கடுத்த மேற்கையில் இரு பாலரும் அணியும் தொடிவளை இங்கு விதப்பான அடையானது ஏனெனப் புரியவில்லை. அதற்கான விவரம் எங்குங் கிட்டவில்லை. யாரோவொரு சோழ முன்னவன் தூங்கெயிலெறிந்த விவரிப்பு இன்னுஞ் சில நூல்களிலும் பேசப்படுகிறது. முதலில் நாம் காண்பது இதையும், புறாவிற்கென செம்பியன் உடம்புத் தசையை அரிந்து கொடுத்ததையுங் குறிக்கும் சிலம்பு 27, 164-171 வரிகளாகும். கீழே படியுங்கள்.

வெயில்விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப
எயில்மூன்று எறிந்த இகல்வேற் கொற்றமும்
குறுநடைப் புறவின் நெடுந்துயர் தீர
எறிதரு பருந்தின் இடும்பை நீங்க
அரிந்துடம் பிட்டோன் அறந்தரு கோலும்
திரிந்துவே றாகுங் காலமு முண்டோ
தீதோ இல்லைச் செல்லற் காலையுங்
காவிரி புரக்கும் நாடுகிழவோ னென்று
அருமறை முதல்வன் சொல்லக்கேட்டே

இதில் இந்திரன் அரணத்தைக் காத்து, உயர்விசும்பின் 3 தூங்கெயில்களை சோழனெறிந்தது பேசப்படுகிறது. இதையும், "திறல்விளங்கு அவுணர் தூங்கெயில் எறிந்த, விறன்மிகு முரசின் வெல்போர்ச் சோழன்” (தொல்.கள. சூ.11. நச்.மேற். இதைப்பற்றிக் கீழே விரிவாய்ப் பேசுகிறேன்.) எனக் குறித்ததையும் பொருத்தினால், அவுணர்/அசுரர் விண்ணிலமைத்த 3 மாய அரண்களையும், செஞ்சடைக்கடவுள் எரித்த திரிபுரங்களையும், சோழன் தூங்கெயில் எறித்ததோடு போட்டு வேதநெறி சார்ந்து உரையாசிரியர்கள் குழப்புவது புரியும்.

அவுணரென்பார் உண்மையிலேயே அசுரரா? அல்லது உவணரெனும் மலைக் குடியாரா?- என்று புரியவில்லை. (மறந்துவிடாதீர்கள். உவணம்= உயரத்தில் உள்ள இடம், எனவே மலை. வானப் பொருளும் உவணத்திற்கு உண்டு. உவணர்>ஊணர்>ஔணர்>அவுணர் என்ற திரிவையும் எண்ணிப்பாருங்கள். வரலாற்று மிலேச்சரான ஹூணராய் இவரிருக்க வழியில்லை. அவர்காலம் பொ.உ.5 ஆம் நூற்றாண்டு.) பொதுவாக வெளியாரைக் குறிக்குஞ் சொற்கள் நம்மிடந்திரிவது இயற்கை. ”கன்வ” எனும் மகதகுலச் சொல் கனகவென நம்மவர் வாயில் திரிந்ததே?.(செங்குட்டுவன் தோற்கடித்த கனகவிசயன் ஒரு மகத அரசனாக இருக்கலாமென என் ”சிலம்பின் காலத்திற்” சொன்னேன். அம்முகன்மையை நம்மிற்பலரும் இன்னும் உணரவில்லை.) அயொனியர் நமக்கு யவனரானாரே? விண்ணெனில் அது அந்தர ஆகாயமா? மேலும், விண்தொடுங் கட்டிடம் ஆகாயந் தொடுமா? தடுமாறுகிறதல்லவா? ஒரே கதை; 3 வடிவில் தோற்றுவதால், தொன்மமெது; வரலாறெது?- என்று நமக்குப் புரியவில்லை. 

இதே சிலம்பின் 29ஆம் காதை 16ஆம் பாட்டு- அம்மானை வரியும் சோழன் தூங்கெயிலெறிந்ததை விவரிக்கும். [2 வேந்தர், 7 மன்னரோடு போரிட்டு சோழ வளநாட்டைச் செங்குட்டுவன் கைப்பற்றித் தன் மாமன்மகனான கிள்ளி வளவனைப் பட்டமேற்றியது சிலம்பின் வஞ்சிக்காண்டத்திற் பெறப்படும்.[வஞ்சிக்காண்டம் புரியாமற்றான், தமிழர் வரலாறு நமக்கெல்லாந் தடுமாறுகிறது. சிலம்பைக் கற்பனை நூல் என்னுமளவிற்குச் தொல்லாய்வர் நாகசாமி போன்றோர் போவார். இன்னொரு பக்கம் சந்து கிடைக்கும் இடம் எலாம் ஊடு வந்து சேரரின் குடவஞ்சியைக் கொங்கு வஞ்சியோடு (கரூரோடு) குழப்பி அதனால் கொங்கு நாட்டிற்குப் பெருமைசேர்க்க திரு. நா.கணேசன் போன்றோர் முயல்வார். 2,3 ஊர்களுக்கு ஒரேபெயர் அமைவது தமிழரிடை மிகச்சாத்தாரம். கொங்கின் பெருமையை வேறுவகையில் உணர்வதல்லவா தமிழர்க்கு நல்லது? பார்க்க: இராம.கி.யின் “சிலம்பின் காலம்”, தமிழினிப் பதிப்பகம்.]

[ஒரு பேச்சிற்குக் கேட்பேன். தெற்கத்தியாகிய நான் என் வட்டாரப் பற்றால் ”எல்லாமே தெற்குச்சீமை” என முழங்கித் தள்ளினாற் சரியாகுமோ? அவரவர் வட்டாரம் அவரவர்க்கு உயர்த்தியன்றோ? மீண்டும் சேர, சோழ, பாண்டியர் ஆகித் தமிழராகிய நாம் மீண்டுங் கொங்கிற்காக அடித்துக் கொள்வோமா, என்ன? பாழாய்ப்போன குறுங்குழுப் பெருமையும் ஓற்றுமைக் குலைவும் தானே வரலாற்றில் தமிழர்க்கு பேருலை வைத்தன? சேர, சோழ, பாண்டியர் சண்டைகளை விட்டால் தமிழர்க்குத் துளி வரலாறாவது மிஞ்சுமா? பங்காளித் தகறாறிலும் மாமன்/மச்சான் சண்டையிலும் பேரளவிற்கு ஓய்ந்து போன கூட்டம் வேறெங்கேனும் உண்டா? “தேவர்மகன்” திரைப்படம் அப்படியே தமிழரை உரித்துக் காட்டுவதாய் நான் சொல்வதுண்டு. உட்பகை தமிழரை அழித்ததுபோல் வெளிப்பகை, சேதம்விளைத்து இருக்கிறதா? இன்றும் ”ஐயா, அம்மா” என்று சொல்லி இரு பெருங் கட்சிகளைக் கட்டிச் சீரழிகிறோமே? இதுவும் ஒருவகைச் சோழ, பாண்டியத் தகறாறு தானே? யாரார் எதுவென்று உங்களுக்கே புரியும். இத்தகராறுகளை ஒதுக்கித் தமிழருக்கு நல்லது தேடினாலென்ன?] சரி, தூங்கெயிலுக்கு வருவோம். சிலம்பின் வாழ்த்துக் காதையில் அம்மானை வரியின் முதற்பாட்டில்,

வீங்குநீர் வேலி யுலகாண்டு விண்ணவர்கோன்
ஓங்கரணங் காத்த உரவோன் யார் அம்மானை?
ஓங்கரணங் காத்த உரவோன் உயர்விசும்பில்
தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை

என்றுவரும். தூங்கெயில் எறிந்ததற்கு இன்னுஞ்சில மேற்கோள்களுண்டு. கீழேவருவன சிறுபாணாற்றுப்படை  79-83 ஆம் வரிகள்.

...................................................ஒன்னார்
ஓங்கெயில் கதவம் உருமுச்சுவல் சொறியும்
தூங்கெயில் எறிந்த தொடிவிளங்கு தடக்கை
நாடா நல்லிசை நல்தேர்ச் செம்பியன்
ஓடாப் பூட்கை உறந்தையும் வறிதே......

அடுத்து வருவன குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடும் மாறோக்கத்து நப்பசலையாரின் புறம் 39, 46-47 ஆம் வரிகளாகும்.

------------------------------சார்தல்
ஒன்னா ருட்குந் துன்னருங் கடுந்திறல்
தூங்கெயில் எறிந்த நின் ஊங்கணோர்  நினைப்பின்
அடுதல் நின்புகழும் அன்றே ..........

அப்புறம் பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து 31 ஆம் பாடலில் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனார்,

கடவுள் அஞ்சி வானத் திழைத்த
தூங்கெயிற் கதவங் காவல் கொண்ட
எழூஉ நிவந்தன்ன பரேர் எறுழ் முழவுத்தோள்

என்றவரிகளால் தூங்கெயிற் கதவத்தின் காப்பாய், தலைவன் அஞ்சியின் ஆணையால் உலர்ந்த அடிமரத்தை இழைத்துச்செய்த கணையம் உயர்ந்து நிற்பதுபோல் நார்முடிச்சேரலின் தோளைச் சொல்வார். வானமென்பதை அகர முதலியிற் பார்த்தால் உலர்ந்தமரம் என்ற பொருளுமுண்டு.. அது இழைக்க முடியாத ஆகாயமல்ல. (ஆகாயமென்று புரிந்து கொண்டோரே தமிழறிஞரில் மிக அதிகம்.) இம் முகனை வரிகளால் ”செம்பியன் யாருடைய தூங்கெயிலை எறிந்தான்?” என்ற கேள்விக்கு ஆகாயத்திலன்றி, மண்ணிலேயே நல்ல விடை கிடைக்கலாமென்று புரிகிறது. இங்கே குறிப்பிடப்படுவோன் அதியமான் நெடுமான் அஞ்சியோ, அன்றி அவன் முன்னோனோ ஆகலாம். கடவுள்/பகவான் என்றாலே எல்லாம்வல்ல இறைவன்-தேவர் என்பது இக்காலப் புரிதல். சங்ககாலத்தில் அப்படியல்ல. அன்று ’கடவுள்’ என்பது தலைவன்/பெரியவனையே குறித்தது. கோதமபுத்தரும், வர்த்தமானருங்கூட அற்றைப் புரிதலிற் கடவுளரே. (பகவான் புத்தர், பகவான் மகாவீரர் என்கிறோமே?) வேதநெறி சாராது பலவிடங்களிற் தமிழிலக்கியத்தைக் காணமுடியும். வெவ்வேறு காலங்களிற் சொற்பொருள் மாறுபடும் என்பதை மறக்க வேண்டாம். .

அன்புடன்,
இராம.கி.

Saturday, October 27, 2018

தூங்கெயில் - 2

அவலோகிதன் யார்? தமிழில் அவன் பெயரென்ன? என்பது அடுத்தகேள்வி. உல்>ஊல்>ஊள்>ஊளை= ஆந்தையோசை. உல்லுகம்>உலூகம், பாலியில் ஆந்தையைக் குறிக்கும். ஊளை, ஊளி, உலூக, owl- என்பவை தொடர்புள்ளவை. (இரவில் உணவுதேடுந் துறவியை வேதமறுப்பாளர் ஆந்தையரென்பார். இன்றும் இரவில் அலைவோரை தமிழரும் ஆந்தை என்போம். அதேபொழுது, இரவுணவைச் செயினநெறி ஏற்காது. ’அந்தை’க்கு அச்சனென்றும் ”அந்தன்> அந்தனர்>அந்தணர்= பெரியவர்” என்றும் இரா.இளங்குமரன் சொல்வார்.) உலூக>உலூகித என்பது ஔலோகித>அவலோகித என்று வட மொழியில் திரியும். தமிழ்ச் சொல்லான உதாரம் சங்கதத்தில் ஔதார்யம் ஆனது போல், உயர்ந்த மலையனைக் குறிக்கும் சொல், உவணன்>ஊணன்>ஔணன்> அவுணன் என்றானது போல், இதைக் கொள்ளுங்கள். உங்களுக்கு நேரமும் பொழுதும் இருந்தால் ஓர் அகரமுதலியின் ஔகாரச் சொற்களை எடுத்து வைத்துத் துழாவுங்கள். சங்கத இடையூற்றாற் பலவும் நம்மிடங் கண்ணா மூச்சி காட்டும். வியந்துபோவீர்கள். ஆயினும் ’சங்கதம் தமிழிடமிருந்து சொல் கடன்பெற்றது என்பதைச் சங்கத அபிமானி’கள் ஏற்கவே மாட்டார்’:-)) )

{அந்தணர் என்பது பார்ப்பாரைக் குறித்தது மிகப்பிந்தைப் புரிதல். பெருமான்> பெருமானர்>ப்ராமணர் என்பது தமிழ்வழிப் பிறந்ததே. இதை வடசொல்லாய்க் காண்பது சொற்பிறப்பியல் அறியாப் பேச்சு. ’சிவபெருமான்’ என்பது ’சுப்ரமண்ய’ என்றாவதைக் கண்டால் பெருமான்>ப்ரமண் திரிவு சட்டென விளங்கும். வெள்ளமாய்க்கூடிய தொன்மப்பெருக்கில், தொல்காப்பியச் சேயோனே தந்தையும் மகனுமாய்ப் பிற்காலத்தில் பிரித்தறியப் பட்டார். ’சிவ’ எனுந் தமிழ்ச்சொல்லே சு எனுஞ் சங்கத முன்னொட்டாகி, ’நல்ல’வெனும் பொருள் கொள்ளும். சிவ மங்கலியே சுமங்கலியானாள். சங்கவிலக்கியம் படித்து இந்தியவியல் ஆய்வில் ஈடுபடும் பல மேலையரும், ஏன் பல தமிழறிஞருங்கூடத் தமிழ்ச்சிந்தனைகளை வடவர் தொன்மங்கள்/பழனங்களைக் கொண்டே விளக்குவார். அந்த அளவிற்குச் சங்கதம்->தமிழ் எனும் ஓரப்பார்வை இருக்கும்வரை தமிழரின் மரபுத்தொடக்கம் புரியாது. அண்மையில் ஓராய்வாளர் கீறல் விழுந்த இசைத்தட்டுப் போல், சிவனெனும் மழுவாள் நெடியோனை வருணனின் திரிவாய்த் தொடர்ந்து காட்டிவருகிறார். அவரை வேறிடத்தில் இதுபற்றிக் கட்டாயம் மறுப்பேன்.} 

இளங்கீரந்தை, பொதுக்கயத்துக் கீரந்தை, எயினந்தை, கோட்டியூர் நல்லந்தை, சாத்தந்தை என்ற சங்ககால அந்தைப் பெயர்களையும், அஞ்சிலாந்தை, ஓதலாந்தை, சிறைக்குடியாந்தை, பிசிராந்தை எனும் ஆந்தைப்பெயர்களையும் பார்த்தால், அந்தை>ஆந்தையென்ற இயற்சொல்வளர்ச்சி ஆதன்+தந்தை= ஆந்தை என்பதைவிடப் பொருந்துவதாய்த் தோன்றுகிறது. இன்றுங்கூடக் கிறித்துவப்பாதிரியை அச்சன் என்றே மலையாளத்தில் சொல்வர். அதே மரபில், பிசிராந்தையார் ஏன் பிசிரைச் சேர்ந்த  ஐயனார் கோயிலின் ஆன்மத் தந்தையாய், அற்றுவிக அறிவராய், ஆகக்கூடாது? ஓர்ந்துபாருங்கள். ஆந்தையார் என்பது இயற்பெயர், தொழிற்பெயர் என்பதுபோற் தெரிய வில்லை. இது ஒரு வேளை உறவுப்பெயராய், மதிப்புப்பெயராய் இருக்கலாமே? ஒருமுறை அப்படி எண்ணிப்பார்ப்போமே? பார்வை மாறுமே? 
[ஆந்தைப்பெயர் கொண்ட புலவர்களின் சங்கப்பாடல்களில் அற்றுவிகப் பார்வை தொனிப்பதை நான் காண்பதை இன்னொரு தொடரில் விளக்குவேன்.]

பிள்ளைகளோடு தனக்கேற்பட்ட மோதலில் மனங்கலங்கி இனிமேலும் இவ்வாழ்விற் பொருளில்லையென நோன்பேற்றுத் தன்வாழ்வை அற்றுவித்துத் (முடிப்பித்துத்) திருவரங்கத்திற் பள்ளிகொண்ட (?!:-)) கோப்பெருங்கிள்ளிச் சோழன் பிசிராந்தையார் மேல் மதிப்புக்கொண்டது புறநானூற்றால் நமக்குத் தெரியும் (புறநானூற்றை ஆழ்ந்துபடித்தால் கோப்பெருங்கிள்ளியின் பின் திருவரங்கம் உள்ளது நமக்குப் புரியும்.) திருவரங்கக் கோயிலொழுகை இதோடு பொருத்தினால், அற்றுவ>அறுவ> அறவச் சோழனைச் சங்கதவழி, ’தருமவர்மா’ என்றாக்கி, அவன்வழிவந்த கிள்ளிச்சோழரைக் கிளிச்சோழர் என்றாக்கிய தொன்மமும் நமக்கு நன்கு புரியும். திருவரங்கக் கோயிலொழுகை எந்தத் தமிழறிஞர் படிக்கிறார்? சொல்லுங்கள். அது “வைணவாளுக்கு அல்லவா ஆனது?” - ஏன்று ஒதுக்குவாரே மிகுதி.)

அதேபோது, கிள்ளிகள் காலத்திலேயே திருவரங்கன் கோயிலிருந்ததற்குச் சிலம்பே சான்று பகரும். [ஆயினும் திருவிண்ணவரோ அதைக் கொஞ்சமும் எடுத்துக் காட்டமாட்டார். கிள்ளிகளுக்குப் பின் ஆழ்வார் (குறிப்பாய் நம்மாழ்வார்), நாதமுனி, யமுனாச்சாரியார், இராமனுசர், பின் குரு பரம்பரை யென ஒரேயடியாய்த் தாவிவிடுவார். வரலாற்றில் ஒரு பேரிடைவெளி நமக்குச் சொல்லப்படாமலே உள்ளது. இன்று நாம்காணும் திருவிண்ணவம் எப்படியெழுந்தது? வடக்கிருந்த பாகவதமே இதனூற்றா? ஆழ்ந்துபார்த்தால் எனக்கப்படித் தோன்றவில்லை. விண்ணவக் குருக்களின் கொடிவழியை தமிழ் விண்ணவர் கொண்டாடுவது போல் வட விண்ணவர் கொண்டாடுவாரோ? எனக்கப்படித் தெரியவில்லை. இத்தனை ஏன்? நம் ஆழ்வார்களை (அதுபோல் நாயன்மாரை) அவர் கொன்டாடுவாரோ?

8400000 கல்பங்களில் ஓர் ஆன்மாவிற்கு நடப்பதாய்ப் பலராலுஞ் சொல்லப் படும் பிறவிச்சுழற்சியை (உங்களுக்குத் தெரியுமா? திருமூலரும் இதையே சொல்வார். இந்திய மெய்யியற் சிந்தனையாளரை ’8400000’ என்ற எண் பெரிதும் மயக்கியது.) அற்றுவிக்க வழிசொல்லும் நெறியே அற்றுவிகமாகும். தமிழில் அற்றுவிக>அத்துவிக என்று பலுக்கப்பட்டு, பாகதத்தில் அஜ்ஜுவிக> அஜ்ஜீவிக>ஆஜீவிக என்றாகி மீளத்தமிழில் ஆசீவிகம்>ஆசீவகமாகி அது நிலைத்தது. அற்றுவிகத்தை ஒருபக்கமுணர்த்தும் சிலம்புகூட ஆசீவிகம் என்றே பெயரைப் பதிவுசெய்யும். (நானும் ஒரு காலத்தில் ஆசீவிகம் என்ற சொல்லைத் தமிழென எண்ணினேன். அண்மையிற்றான் ஆழ்ந்து ஓர்ந்தபின் வரலாறு எனக்குப் புரிந்தது) ஆயினும் மதுரையருகுள்ள ஆனைமலைக் கல்வெட்டு அற்றுவி என்றே இவரை அடையாளங் காட்டும். ஆசீவகம்பேசும் தமிழாய்வர் ஆசீவகத்தை ஆசு+ ஈவு+ அகம் என்று செயற்கையாய்ப் பிரித்து, உலகவழக்குச் சொற்பிறப்பு (folk etymology) சொல்வதை நான் இன்றேற்கத் தயங்குவேன். அற்றுவிகச் செய்திகளைக் கட்டாயம் வேறுதொடரில் விரியச் சொல்ல எண்ணியுள்ளேன்.

அற்றுவிகக் கோப்பெருங்கிள்ளிச் சோழன் சிலப்பதிகாரத்திற்கும் முந்தியவனாகவே எனக்குத் தோற்றுகிறான். தமிழக அற்றுவிக நெறியாளர் காலக் கட்டாயத்தால் சமய நெருக்கடியால் விண்ணவம், சிவம், புத்தம், செயினமாகிய மற்ற நெறிகளுக்குள் சிறிதுசிறிதாய்க் கரைந்தார். பொ.உ. 600 களுக்கு அப்புறம் அவரைக் காண்பது மிக அரிது. சமயமாற்றப் புரட்சியில் முற்றிலும் மறைந்துபோனவரில் அற்ருவிகர் ஒருவர். ஆயினும் அவரின் ஊழ்/விதி”க் கருத்து தமிழ்ச்சிந்தனையில் இன்றுவரை நிலைப்பதைப் பார்த்தால், கிழக்குப் பார்த்த சிவன்கோயில்களில் வடமேற்கு மூலையில் திருமகள் 2 பக்கம் யானைகள் நீரைத்தூவ, நடுவே தாமரையில் வீற்றிருந்து, திருவுருவங் கொள்வதையும், அதே வடிவில் பெரும்பாலான தமிழர்வீட்டு நுழைகதவு நிலைகளிலும் அணைவதையும் பார்த்தால், நீறு பூத்த நெருப்பாய் அற்றுவிகம் தமிழருள் கரந்துநிற்பது புரியும். பெரும்பாலான தமிழரின் சிற்சில வாழ்வு மரபுகளும் (குறிப்பாய் பறை, உடுக்கு, ஆட்டம், மாலை, பூவுதிர்ப்பு என்றுபடி வடதமிழகத்தில் இறப்பைக் கொண்டாடுவதும்) அற்றுவிக எச்சத்தை இன்றும் நமக்குக் காட்டிக்கொடுக்கும்.

மேற்சொன்ன அந்தை / ஆந்தைகளுக்கும் வெவ்வேறு வகைகளில் பெருமைத் தொடர்புகள் இருக்கலாம். இன்று, சிவ, விண்ணவக் கோயில்களிற் பார்ப்பனக் குருக்களைப் பலருஞ் சாமி என்கிறாரே? சிவ, விண்ணவக் குருக்கள் மெய்யாகவே இறைவரா? இல்லையே? ”இறைவன்” என்றசொல், முதற் கொண்டு, தலைவனுக்கும் கடவுளுக்கும் எப்போதுமே தமிழிற் சொற்குழப்பம் உண்டு. பல ஆய்வாளரும் இதை உணர்வதில்லை. கடவுளென்று குறளில் வந்துவிட்டால் அது எல்லாம்வல்ல இறைவனைக் குறிப்பதாய்க் கொள்வாரே நம்மில் மிகுதி. ”ஒருவேளை அறிவுத்தந்தையான தமிழ் ஆந்தையே சுற்றி வளைத்துப் பாலியில் அவலோகிதனானதோ?” என்று ஏன் எடுத்துக்கொளல் ஆகாது? ”போதிசத்வ” என்பது யாரோவொரு அறிவார்ந்தவனைக் குறித்தால், ”தெற்கு அவலோகிதனெ”ன்ற பெயர்க்குறிப்பும், தமிழ்முறைப்படி ஏதோவொரு ”ஆந்தையாரைக்” குறிக்கலாமே? அப்படியெனில் அவர் எந்த ஆந்தையார்? பார்த்தீர்களா? கேள்வி சற்றுச் சுவையாரம் (= சுவாரசியம்) ஆகிப் போனது. 

[மேற்சொன்ன தமிழ்-பாலி/பாகதம்-சங்கதப் பெருவட்டம் என்றபார்வை எப்படியெலாம் நம் சிந்தனையை மாற்றுகிறதென்று பார்த்தீர்களா? பாலி/பாகதத்திற்கும் தமிழுக்குமிடையே இதுபோல் பல்வேறு ஊடாட்டங்கள் சங்க காலத்தில் இருந்தன. ”வடமொழி” என்றசொல் அன்று சங்கதம் மட்டுமின்றிப் பாலி/பாகதம்/சங்கதம் என்ற பொதுக்கட்டைக் குறித்தது. வேதமறுப்புச் சமயங்கள் பலகாலம் நம்மிடை புழங்கியதால் (இன்று அவை குறைந்து வேத நெறி விரவும் சிவ, விண்ணவ நெறிகளைத் தமிழர் கைக்கொள்ளினும்). என்னைக் கேட்பின் சங்கதப் பிடிக்குள் சிலர் வலியச் சிக்குவதும், அதற்கு எதிராய் வேறு பலர் மல்லுக்கட்டுவதுமான வடம்பிடிப்பை விட்டுத் தமிழர் ஒரேயடியாய் வெளிவரலாம். சங்கதத்தைச் ”சக்கதோ” என்றே பாலி பாவிக்கும். நம்மிற் பலரும் ”ஸம்ஸ்க்ருதத்தையே” பெருமையாய்க் கொள்கிறார். பொதுவழக்கில் ஏனிப்படி தாழ்வு மனப்பாங்கில் நாம் உழள்கிறோம்? தமிழ் ஞானசம்பந்தனின் சொற்படி அம்மொழியைச் சங்கதமென்று உரக்கச் சொன்னாற் குறைந்தா போவோம்? ஓர்ந்து பார்த்து இச் ”சம்ஸ்க்ருதத்தைத்” தூக்கியெறியுங்களேன்? அதே போல் ப்ராகிருதத்தைப் பழைய வழக்கத்தின்படி, பாகதமெனில் தவறா? Too long our agenda has been dictated by others. We don't act; but always seem to react, that too belatedly.] 

சோழனென்பது இனக்குழுப்பெயர்; சென்னி, செம்பியன் என்பன குடிப் பெயர்கள்; கிள்ளி, வளவன் என்பன இயற்பெயர் முடிபுகள். இதேபோல பாண்டியன் - இனக்குழுப்பெயர்; மாறன், செழியன் என்பன குடிப்பெயர்கள்; வேல், வழுதி - இயற்பெயர் முடிபுகள். (ஐராவதம் மகாதேவன் சிந்துநாகரிக வணிகரை வைத்துப் பாண்டியர்பெயருக்குத் தோற்றஞ்சொல்வது எனக்குச் சரியாய்த் தோற்றவில்லை. ”சிந்து வெளி முந்தையது. அங்கிருந்தே தமிழர் தெற்குவந்தார்” என்பதைக் கேள்விகேட்பேன். இப்போதெல்லாம் ஒரு மோகத்தில் தமிழர் சிந்துவெளியிலிருந்து தெற்கு வந்தார் என்ற பட்டவப் பரப்புரைக்குத் (fashionable propaganda) தமிழர் பலரும் ஆட்படுகிறார். அது வேறு நீண்ட iகதை. சிந்துசமவெளியில் இருந்து ஊர்ர்ப்பெயர்களை நாம் தமிழகத்தில் இட்டோமாம். தமிழர் சிந்து சமவெளியிலிருந்து பெயர்ந்தவராம். அப்படி ஒரு கதை அண்மையில் பெரிதும் பேசப்படுகிறது. அதற்கும் என் மறுப்புண்டு. ஆனால் இங்கு அதைப் பேசமுடியாது.]

சேரருக்கும் வானவரம்பன், இமையவரம்பன், ஆதன், இரும்பொறை, கோதை ஆகிய பெயர்களில் ஓர் ஒழுங்குமுறை இருக்கக்கூடும். இன்னும் எனக்குத் தெளிவேற்படவில்லை. இப்பெயர்கள் எல்லா அரசருக்கும் பொருந்தும்படி சங்கப்பாக்களுமில்லை. சிலவற்றில் இனக்குழுப்பெயர் மட்டுமேயும், சிலவற்றில் குடிப்பெயரும் இனக்குழுப்பெயரும், சிலவற்றில் இயற்பெயரும், இனக்குழுப்பெயரும் என அவற்றிற் பல்வேறு தோற்றங்களுண்டு. இதுபோக உருவப் பஃறேர், குளமுற்றத்துத் துஞ்சிய, ஆரியப்படை கடந்த, தலையாலங் கானத்துச் செருவென்ற, கடல்பிறக்கோட்டிய, பெருஞ்சோறு, குட்டுவன், இளஞ்சேள், செம், நெடு போன்ற விதப்புக் குறிப்புகளும் பெயர்களில் முன்னொட்டாய் உண்டு. மொத்தத்தில் தமிழரசர் பெயராய்வு பென்னம் பெரிய புலனம். யாரேனும் ஈடுபட்டால் நல்லது. (ஒருவரும் அப்படி ஈடுபட்டது போல் தெரியவில்லை.)

உண்மையிற்சொன்னால் எத்தனை தமிழரசர் இயற்பெயர் நமக்குத்தெரிந்தது? விரல்விட்டெண்ணலாம். பாண்டியரைமட்டும் ஒருகுறிப்பால் காட்டுவேன். வெற்றிவேற்செழியன் என்றபெயர் நமக்கு நன்றாகத் தெரியும். இதில் வேல் என்பது இயற்பெயர் முடிபு. ஆழ்ந்துபார்த்தால், கொற்கை, திருச்செந்தூர்ப் பக்கத்துத் தெற்கத்தி மாறருக்கும், செழியருக்கும் வழுதி, பாண்டியர் என்று இனக்குழுப்பெயர்கள் (இவற்றின் விளக்கம் இன்னொரு சுவையாரம்.) போலவே ஒரு இயற்பெயராய் வேல் முடிவதில் வியப்பேயில்லை :-). செழியன், மாறன் என்ற குடிப்பெயர்களை பாண்டியக் கொடிவழியார் மாறி மாறி வைத்துக்கொள்வார். (அப்பன் செழியன் எனில், மகன் மாறனாவான். செழி>செடி>சடை என்றும் மாறும் (பிற்காலச் சடையரும் முற்காலச் செழியரும் ஒன்றே), கொற்கைப் பக்கம் போய்ப்பேருங்கள் அதன் கோரைத் தன்மையை இன்றுங் காணலாம். பாண்டியர், சோழர், சேரலர் பெயர் விளக்கத்தை “சிலம்பின் காலம்” என்ற என்நூலிற் சொன்னேன். பலரும் அதைக் கண்டுகொள்ளவே மாட்டேம் என்கிறார். ஒருமுறை என் நூலை வாங்கிப் படியுங்களேன் ?!! (என் நூலுக்கான மாறுகடை வேலையை நான் பார்க்கவேண்டாமா?)

பெரும்பற்றப்புலியூர் நம்பியின் திருவாலவாயுடையார் புராணத்தில் ஞானோபதேசம் செய்த திருவிளையாடல் 2 ஆம் பாடலின்படி மாணிக்க வாசகர் ”தானைவேல் வாகைமாறனிடம்” அமைச்சராய் இருந்தாராம். 18 ஆம் நூற்றாண்டுத் திருவிளையாடற் புராணம் காலக் குழறுபடியில் தானைவேல் மாறனின் பெயரை மாற்றி அரிமர்த்தனன் (= சிங்கத்தைக் கொன்றவன், பல்லவரை அழித்தவன்) என்று சொல்லும். சாலச் சிறந்த ஆலவாயுடையார் புராணத்தைத் துணைக்கொள்ளாது வரலாற்று வழுவுடைய, புனைவுமிகுந்த, திருவிளையாடற் புராணத்தைத் தமிழறிஞர் பாராயணஞ் செய்ததே 3/4 ஆம் நூற்றாண்டு மாணிக்கவாசகரை 9 ஆம் நூற்றாண்டிற்கு இழுத்துப்போன காலப் பிறழ்ச்சிக்குக் காரணமாகும். யாரைக் கேட்டாலும் அரிமர்த்தனன் என்பார். போதாக்குறைக்குத் ”திருவிளையாடல்” படம் வேறு, பலபேர் கண்களை மூடிமறைக்கிறது. அருள்கூர்ந்து திருவிளையாடற் புராணத்தைப் படிப்பதை விடத் திருவாலவாயுடையார் புராணம் படியுங்கள். உங்களுக்கு பல உண்மைகள் சரியாய் விளங்கும்.

இத்தனையும் பேசியது அவலோகிதனின் பின்னால் ஒளிந்துநிற்கும் ஆந்தையார் பற்றிச் சொல்லவே.

அன்புடன்,
இராம.கி.

Friday, October 26, 2018

தூங்கெயில் - 1

உலர்ந்த, புத்தசமய, நீதிநூல் போன்ற ’மணிமேகலைக்’ காப்பியம், மெய்யாகவே சிலப்பதிகாரத்தோடு எழுந்த இரட்டைக் காப்பியமா? அன்றிச் சிலம்போடு அது வலிந்து பிணைக்கப் பட்டதா?- என்பது இலக்கிய வரலாற்றில் ஓர் ஆழமான கேள்வி. ”பொன்னியின் செல்வனைக்” கதைக்களனாய்க் கொண்டு எழுத்தாளர் விக்கிரமன் எழுதிய புதினங்களை எல்லாம் கல்கியின் காலத்தோடு சேர்த்துச்சொல்ல முடியுமோ? புத்தர், அசோகர், தேவனாம்பிய தீசன் போன்றோர் கதைகளைத் தொடக்கத்திற் சொல்லும் மகாவம்சம் பொ.உ. 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அதை வலிந்திழுத்து பொ.உ.மு. 300க்குக் கொண்டுபோக முடியுமோ? இதுபோன்ற காலப்பிறழ்ச்சி கொண்ட புரிதல் பல இடங்களில் நடந்துள்ளது. சிலம்பு-மணிமேகலைத் தொடர்பிலும் இது நடக்கிறது.

பொதுவாகத் தாஞ் சார்ந்த சிவ, விண்ணவ, வேதநெறிகளின் வழி பொருள்தர முற்படும் உரைகாரர் சொற்களைக் கிடுக்கத்தோடு (criticism) உரசிப் படித்தால் சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களிடையே குறிப்பிடத்தக்க காலவெளி தென்படுவதையும். சிலம்பில் வரலாறு கூடிப் புனைவு குறைவதையும், மேகலையிற் புனைவு மிகுந்து வரலாறு வறள்வதையுங் காணலாம். இரட்டை என்றே சொல்லிச் சொல்லி (இக்கற்பிதத்தை இவ்வாண்டில் நூறாண்டு நிறையும், மதிப்பிற்குரிய பேரா. வ.சுப.மாணிக்கத்தின் உரைவழி தான்  முதன் முதலில் அறிந்தேன். அக்காலத்திய பல தமிழறிஞர் புரிதல்களும் அப்படியே இருந்தன. அவர்களைப் படித்தநாம் கேள்வி கேட்பதால், ”தாத்தனைப் பேரன் மதிக்கவில்லை” என எண்ணிவிடாதீர். உறுதியாக வ.சுப. போன்ற முந்தைத் தமிழறிஞர் நம்மைப் புரிந்துகொள்வார்.) மேகலையின் புனைவு சிலம்பின் வரலாற்றைத் தடுமாற வைக்கிறது. ’சிலம்பின்’ காலத்தை பொ.உ.மு.75-இற்கு அருகே காரணத்தோடு கொண்டுசெல்லும் நான் அம்முந்தைக் காலத்திற்கு மேகலையைக் கொண்டுபோகத் தயங்குவேன். மாறாய் இரட்டை எனுங் கருதுகோளையே கேள்விகேட்பேன். அப்படியெனில், ”மேகலை”யின் சரியான காலந்தான் என்ன?” என்ற குறுகுறுப்பு உங்களுக்குக் கொஞ்சமுங் குறைய வில்லை தானே?

’சிலம்பு’ புகாரிலெழுந்து மதுரை போய் வஞ்சியில் முடிகையில், மேகலையோ புகார்-மதுரை-வஞ்சி-காஞ்சியென நாலாமிடத்தில் முடியும். அப்படிமுடிவதில் ஒரு விதப்புக்குறியீடு உள்ளதோ? - என்றுந் தெரியவில்லை. தொண்டைமான் இளந்திரையனுக்கு முன், காஞ்சி என்பது சோழநாட்டின் ஒரு சிறு நகர். சோழநாட்டின் வடபகுதியைப் பிரித்து, தொண்டைநாடாக்கி அதன் தலைநகராய் ஆனபின்னரே காஞ்சிக்குப் பெயர் வந்தது. மேலும் சங்க கால முடிவில், மூவேந்தர் வலுவிழந்து களப்பாளர் நுழைந்த பின்பே, காஞ்சியில் புத்தநெறி கூடி அது மாநகராய் மாறிச் சிறந்தது. சிவ, புத்த, விண்ணவ, செயினக் காஞ்சிகளில் முன்னிரண்டும் இணைந்து பெத்த காஞ்சியானது (வடுகில் பெத்த=பெரிய; வடதமிழ் மாவட்டத் தமிழிலும் இச்சொல் பயன்பாடு உண்டு); பின்னிரண்டும் இணைந்து சின்னக் காஞ்சியானது (செயினம் சின்னமானது,) பின் புத்தமுஞ் செயினமும் இந்நகரில் அடையாளமற்று அழிந்தே போயின. பத்தி இயக்கத்தின் தீவிரத்தைத் தேவாரம் படித்தால் புரிந்துகொள்ளமுடியும். அதுவொரு coversion movement. பொதுமக்களில் பலரும் கூட்டங்கூட்டமாய் புத்த், செயின நெறிகளிலிருந்து சிவ, விண்ணவ நெறிகளுக்கு மாறினர். வேந்தனான (மகேந்திர பல்லவனே மாறியபின் மக்கள் மாறத்தானே வேண்டும்? ”அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி” என்பது ஒரு சொலவடை. (மலாக்கா அரசன் பரமேசுரா இசுலாத்திற்கு மாறியபின் மலாக்கா, மலேசியா மக்களிற் பலரும் சிவத்திலிருந்து, புத்தத்திலிருந்து இசுலாம் மாறினர்.) ஆயினும் காஞ்சியிலிருந்து திருவண்ணாமலை வரை இன்றும் வயல்வெளிகளில் செயினமும், புத்தமும் சிலைத்துண்டுகளாய்ச் சிதறிக்கிடப்பது கண்ணிருப்பவருக்குக் கட்டாயம் புலப்படும்.

ஒருவேளை பேராழிப் பேரலை புகாரை விழுங்கியபின், ’மணிமேகலை’ எழுந்ததோ? புகாரைக் கடல்கொண்ட செய்தி ’மணிமேகலை’ தவிர வேறு எதிலும் கிடையாது. அதேபொழுது பொ.உ.385 க்கருகில் இந்தோனேசியாவில் ஆழிப்பேரலை எழுந்ததற்குச் சான்றுண்டு. பொ.உ.2004 இல் சமுத்திரத் தீவிற்கருகில் ஆழிப்பேரலை உருவாகையில் பார்த்தோமே? இந்தோனேசிய ஆழிப்பேரலைகள் பெரும்பாலும் தமிழகத்தைப் பாதித்துள்ளன. தமிழகம் தில்லியோடு தொடர்புற்றது ஓர் அரசியற் பிணைப்பு. சமுத்திரத் (சுமத்திராத்) தீவோடு தொடர்புற்றது புவியியற் பிணைப்பு. அப்படியெனில் பொ.உ.200-450 இற்றான் ’மணிமேகலை’ ஒருவேளை எழுந்ததோ?- என்று கூடச் சிந்தனை யோடும். முன்சொன்னது போல் ”இரட்டைக் காப்பியப் பிணைப்பு” ஒருவகைக் காலப்பிறழ்ச்சிக்கு வித்திட்டுச் சிலம்பின் காலத்தைக் குறைக்கவே உதவுகிறது. தமிழறிஞர்பலரும் இதைக் கவனிக்கத் தவறுகிறார். எவரை எடுத்தாலும், இரண்டையும் ஒன்றாகவே பார்ப்பார். மாறாக இரண்டையும் ஒருமுறை பிரித்துத்தான் பாருங்களேன்?

மணிமேகலையை நானிங்கே எடுக்கக் காரணம் அதில் தொடக்கத்தில் வரும் தூங்கெயில் பற்றிய குறிப்புத்தான். ”உலகிற் பலரும் மாறாது புகழ்ந்து ஓங்குயர் விழுச்சீர் கொண்ட புகார் மூதூரின் பண்பு மேலும் மேம்படுவதாய், ஓங்குயர் பொதிய மலையின் அருந்தவன் உரைத்தபடி, தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் வானவர் அரசனை வணங்கி, 28நாள் இந்திர விழாவின் போது புகாரில் தங்கி அருளக்” கேட்பதாய் மேகலை நூலின் விழாவறை காதை அலங்காரமாய்த் தொடங்கும். இதில்வரும் பொதியமலை அருந்தவனைச் சங்கதத்தாக்கில், உரைகாரர் பலரும் அகத்தியன் என்பார். பலரும் இதைக் கேள்வி கேட்டதேயில்லை. ”அது சரியா? தேரவாதத்தில் இல்லெனினும், மகாயான, வயிரயானப் (வஜ்ரயானப்) பாதைகளிற் புத்தர் பாராட்டும் அவலோகிதனாய் அவனேன் இருக்கலாகாது?”- என்று நான் கேட்பேன். இதன் தொடர்பாய், 11/12 ஆம் நூற்றாண்டு வீரராசேந்திர சோழனின் காலத்தைச்சேர்ந்த புத்தமித்திரர் வீரசோழியம் 2 ஆம் பாயிரத்தில் வரும் .

ஆயுங் குணத்து அவலோகிதன் பக்கல் அகத்தியன் கேட்டு
ஏயும் புவனிக்கு இயம்பிய தண்டமிழ் ஈங்குரைக்க
நீயும் உளையோ எனில், கருடன் சென்ற நீள்விசும்பில்
ஈயும் பறக்கும்! இதற்கு என்கொலோ சொல்லும்? ஏந்திழையே!

என்ற பாட்டைக் கவனியுங்கள். இதில், ”அவலோகிதனிடங் கேட்டு தண்டமிழ் ஓதிய அகத்தியனுக்குங் கீழ் புத்தமித்திரர் தன்னை இறுத்திக் கொள்வதைப்” பார்த்தால், என் கருத்துப் புதிதல்ல. பலரிடம் இன்றிருக்கும் மிதமிஞ்சிய அகத்தியப் பெருமிதங்கள் சங்கதம்-->தமிழென்ற ஒற்றைவழி உறவுபார்க்கும் அகத்தியதாசரின் வழிப்பட்டுத் தமிழில் வழங்குகின்றன. (வடக்கிருந்து வந்த அகத்தியனே தமிழை நமக்கீந்தானாம். அகத்தியந்தான் முதலிலக்கணமாம். தொல்காப்பியர் இவர் மாணவராம். ”காவ்யக்குடி சேர்ந்த த்ரணதூமாக்னி” என்பது தொல்காப்பியனின் பெயராம். இவை போன்ற கட்டுக்கதைகளை அருள்கூர்ந்து நம்புங்கள் :-)))) இதற்கு மாறாய் தமிழ் - பாலி/பாகதம் - சங்கதம் என்ற பெருவட்டங் காண்பது தமிழ்/ வரலாற்றாய்வில் மேலான நற்பயனைத் தரலாம். எல்லாமே சங்கதமென்பது ஓர் எக்கெனில் (extreme), சங்கத் தமிழோடு எல்லாமே முடிந்ததென்பது இன்னோர் எக்கு. (தனித்தமிழன்பர் சங்கத் தமிழுக்கும் அப்புறம் தமிழிருந்ததை ஏனோ தவிர்க்கிறார்.) இரண்டையுந் தவிர்த்துத் துலை நோக்கோடும் (balanced perspective), நெகிழ்வோடும், மொழி வளர்ச்சி, வரலாற்றுப் போக்குகளைக் காண்பதே நல்லது. அக்காலத்தில் தமிழர் வடக்கே போகாதும், வடவர் தெற்கே வாராதும் இருந்ததே இல்லை. நாமெல்லோரும் இந்தியத் துணைக்கண்டத்தில் தானே வதிகிறோம்? இந்த இடையாற்றின் நடுவேதான் தமிழர்க்குத் தனியடையாளம் ஏற்பட்டது.

அன்புடன்,
இராம.கி.

Thursday, October 25, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 18

அடுத்து புறம் 218 ஆம் பாடலைப் பார்ப்போம். இதன் திணையும் முந்தையதைப் போற் பொதுவியல் தான். துறையும் கையறுநிலை தான். இந்தப் பாடலைக் கண்ணகனார் எனும் புலவர் பாடியுள்ளார். இவர் நற்றிணையில் 19 ஆம் பாடலையும் பாடியுள்ளார். கோப்பெருஞ் சோழனின் வடக்கிருத்தலின் ஓரிமையும் (uniqueness), அதையொட்டிப் பொத்தியாரும், பிசிராந்தையாரும், மற்றோரும் ”நல்லாரைக் காண்பதுவும் நன்றே” என்றபடி, அடுத்தடுத்து விதப்பாய் ஓரிடத்திற் கூடியதையும் வியந்து, ”சாலுதல்” வினைச்சொல்லின் பொருளை வைத்து ”இனம் இனத்தோடு சேரும்” என்ற கருத்தில் இப்பாட்டு அமைகிறது. ”இப்படி வியக்கின்ற பாட்டைக் கையறுநிலைத் துறையாக வகைப்படுத்தியது ஏன்?” என்பது தான் எனக்குப் புரியவில்லை. பாட்டைப் படியுங்கள்.

பொன்னுந் துகிரு முத்து மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்
இடைபடச் சேய வாயினுந் தொடைபுணர்ந்
தருவிலை நன்கல மமைக்குங் காலை
ஒருவழித் தோன்றியாங் கென்றுஞ் சான்றோர்
சான்றோர் பால ராப
சாலார் சாலார் பாலரா குபவே

                        - புறம் 218

இப்பாடலின் விளக்கம் கூடுவதற்காக, பாடலுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டுக் கீழே கொடுத்திருக்கிறேன்.

பொன்னும் துகிரும் முத்தும்
மன்னிய மாமலை பயந்த காமரு மணியும்
இடைபடச் சேய ஆயினும்,
தொடை புணர்ந்து அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
ஒருவழித் தோன்றியாங்கு
என்றும்
சான்றோர் சான்றோர் பாலர் ஆ(கு)ப
சாலார் சாலார் பாலர் ஆகுபவே

இனி ஒருசில சொற்பொருள்களையும் குறிப்புகளையும் பார்ப்போம். பொன்னும் துகிரும் முத்தும் = தங்கமும், பவளமும், முத்தும்; இம்மூன்றோடு தென்கொங்கில் மெருகேற்றிப் பளிச்சிட வைத்து மாலையாக்கப்பட்ட sapphire, beryl, agate, carnelian, amethyst, lapis lazulli, jasper, garnet, soapstone and quartz போன்ற மணிகளும் (இவையெல்லாமே கொங்கிற் கிடைத்தவையல்ல; சில வேற்றிடங்களிலிருந்தும், இன்னும் வேறு நாடுகளிலிருந்தும் இறக்குமதி யானவை), ஈழத்திற் கிடைத்த மரகதமும் (emarald) பரிமாற்றுச் சரக்குகள் (exchange goods) ஆயின. தவிர மிளகு போன்றவையும் ஏற்றுமதியில் உரோமப் பேரரசு போன்றவற்றிலிருந்து நிறைய பரிமாற்றச் சரக்குகளைக் கொண்டு வந்து குமித்தன. இவை இங்கு கிடைத்ததே/பட்டை தீட்டப்பெற்றதே தமிழகம் நாவலந்தீவில் மகதத்திற்கு எதிராய்ச் சூளுரைத்ததற்குக் காரணமாகும்.

வரலாற்றாசிரியர் பலரும் பொருளியல் வழியில் இப்பரிமாற்றுச் சரக்குகள் இந்தியவரலாற்றைப் பலகாலம் நிருணயித்ததை இன்னும் உணரவே யில்லை. தமிழகத்தை வெறும் தொங்குசதையாக ஒதுக்கிப் பார்த்தவருக்கும், வடபுலம் வழியாகவே இந்தியாவை உணர முற்படுவோருக்கும் இது விளங்கவே விளங்காது. வயிரம் இற்றைத் தென்னாப்பிரிக்காவைத் தூக்கி நிறுத்துவதையும், தங்கமும், மற்ற மாழை மண்ணூறல்களும் (minerals) இற்றை ஆத்திரேலியாவை உயர்த்திவைப்பதையும் புரிந்தவரே, பரிமாற்றச் சரக்குகள் அற்றைத் தமிழகத்தை பொருளியல் உயர்த்திப் பிடித்ததைப் புரிந்து கொள்ள முடியும். தமிழிலக்கியத்தை இப்படிப்படித்தவர் நம்மில் மிக அரிது. தமிழாய்வும் இன்று குறைந்தேயிருக்கிறது. (அந்தச் சோகம்பற்றிப் பேசினால் நான் பொங்கிவிடுவேன். எனவே வேண்டாம்.)

பொன்னென்பது (இற்றைக் கருநாடகக் குவலாளபுரமெனும் கோலாருக்கு அருகில்) வடகொங்கிற் கிடைத்தது. கொங்குநாடென்பது, காலத்திற்குத்தக்க மூவேந்தரிடையே தொடர்ந்து பந்தாடப்பட்டது. (முடிவில் வடகொங்கு, கன்னடம்பேசும் நிலமாய் மாறிப்போனது. தென்கொங்கு மட்டுமே தமிழ்பேசும் நிலமாய்த் தங்கியது.) சங்ககாலக் கடைசியில் (கிட்டத்தட்ட இரும்பொறை அரசர் கொங்குக் கருவூரில் ஆளத்தொடங்கிய பின்) பெரும்பாலும் சேரர் பக்கமே வாய்த்தது. சேரராட்சி, பொருளியலில் உயர்ந்து நின்றதற்கு பொன்னும் ஒரு காரணமாகும். பொன்னென்பது இப்பாட்டிற் சோழனை உருவகமாய்க் குறிக்கிறது. பொன்னின் மேற்றான் துகிரும், முத்தும் மணிகளும் பதிக்கப்படுகின்றன. இங்கே சோழனின் மேற்றான் பொத்தியாரும் (துகிர்), பிசிராந்தையாரும் (முத்து), மற்ற மணிகளும் (கூடியுள்ள மற்ற சான்றோர்) அன்பாற்பதிகிறார். இம் மொத்த உருவகத்திற்கும் ஒரு பொருளுண்டு.

துகிரெனும் பவளம் பெரும்பாலும் சோழநாட்டுக் கிழக்குக் கடற்கரையிலே கிடைத்தது. பொன்னும், முத்தும் பொருளாதாரத்தில் நிலைக்கையில், துகிரின் கிடைப்பு ஒப்பீட்டளவிற் குறையத்தொடங்கியதும் சங்க காலத்திற் சிறிது சிறிதாய்ச் சோழராட்சி குன்றியதற்குக் காரணமாகும். இங்கே துகிரென்பது உருவகத்தாற் சோழநாட்டைச் சேர்ந்த பொத்தியாரைக் குறிக்கிறது.)

முத்து, மிகப்பெரிய அளவு தென்பாண்டிக் கிழக்குக் கடற்கரையிலே கிடைத்தது. பாண்டியரே முத்து வணிகத்தை நிலைநாட்டியவர் ஆனார். சேர நாட்டுச் சுள்ளியம் பெரியாறு கடலிற் சேரும் இடத்திற் கிடைத்த சூரணி முத்து வணிகத்தின் சிறுபகுதியே வகித்தது. ஆனால் கவாட முத்தும் (கவாடபுரம் என்பதே முத்தால் ஏற்பட்ட பெயர்தான்.), கொற்கை முத்தும் முத்து வணிகத்தின் 90% ஆளுமையை ஒருங்கே கொண்டிருந்தன. இங்கே முத்து என்பது பாண்டிநாட்டைச் சேர்ந்த பிசிராந்தையாரை உருவகத்தாற் குறிக்கிறது.

மன்னிய மாமலை பயந்த காமரு மணியும் = நிலைத்த பெருமலை தந்த, விரும்பத்தக்க, மணியும். இது கொடுமணத்தைச் சுற்றி மலைப் பகுதிகளிற் தென்கொங்கிற் கிடைத்தது. இங்கே மணிகள் என்பன வடக்கிருந்த சோழனைப் பார்க்க வெவ்வேறு இடங்களிலிருந்து கூடிவந்த சான்றோரை உருவகத்தாற் குறிக்கின்றன. 

இடைபடச் சேய ஆயினும் = (ஒன்றிற்கொன்று) இடைப்படத் தொலைவு ஆயினும். பொன்னும், பவளமும், முத்தும், மணியும் அருகருகே கிடைக்க வில்லை. ஒவ்வொன்றிற்கும் அடுத்ததிற்கும் இடையிருந்த தொலைவு கூடத்தான். எங்கிருந்தோ வந்த இந்தச் செய்பொருள்கள் அணிகலன் செய்வதற்காய் ஓரிடத்தில் ஒன்றுசேர்ந்தன. தொடுத்தது தொடையானது. “தொடை புணர்ந்து அருவிலை நன்கலம் அமைக்குங் காலை” = (மாலையாகத்) தொடுத்துச் சேர்த்து அரியவிலைக்குப் போகும் அணிகலனாக அமைக்கும் பொழுதில். ஒருவழித் தோன்றியாங்கு = ஒரேபாதையிற் தோன்றினாற் போல. என்றும் = என்றைக்கும். சான்றோர் சான்றோர் பாலர் ஆ(கு)ப = சான்றோர் சான்றோர் பக்கமே சேருவர். (சாலுதல் என்ற வினைச்சொல் நிறைதற் பொருளிற் சான்றோர் என்ற பெயர்ச்சொல்லை உருவாக்கும். சாலார் சாலார் பாலர் ஆகுபவே = சாலாதோர் சாலாதோர் பக்கமே சேருவர். (சாலுதலின் எதிர்மறையாளர் சாலாதவர்.)

மொத்தப் பொருள்:

தங்கமும், பவளமும், முத்தும்,
நிலைத்த பெருமலை தந்த, விரும்பத்தக்க, மணியும்
(ஒன்றிற்கொன்று) இடைப்படத் தொலைவாயினும்.
(மாலையாகத்) தொடுத்துச் சேர்த்து
அரியவிலைக்குப் போகும் அணிகலனாக அமைக்கும் பொழுதில் 
ஒரேபாதையிற் தோன்றினாற் போல
என்றைக்கும் 
சான்றோர் சான்றோர் பக்கமே சேருவர்;
சாலாதோர் சாலாதோர் பக்கமே சேருவர்.

மொத்தத்தில் ”இனம் இனத்தோடு சேரும்” என்று புலவர் கண்ணகனார் இங்கு சொல்கிறார்.

அன்புடன்,
இராம.கி. 

Wednesday, October 24, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 17

அடுத்ததாய்ப் புறம் 217 ஐப் பார்க்கலாம். இதன் திணை பொதுவியல்; துறை கையறு நிலை. சோழன் வடக்கிருந்தது தெரியாமலோ, அன்றி அது தெரிந்து தான் உணர்ச்சி வசப்பட்டோ, பிசிராந்தையார் உறையூருக்கு வந்திருக்க முடியாது; சிந்தனைத் தெளிவிற்றான் பாண்டிநாட்டுக்காரரான அவர் வந்திருக்கிறார். அப்படியென்றால், கோப்பெருஞ் சோழன் இறந்ததை பாண்டி நாட்டிலேயே பிசிராந்தையார் அறிந்திருக்கவேண்டும். தெரிந்தேதான் அவர் சோழன் நடுகல்லைத் தேடிவருகிறார். வந்தவிடத்தில் பிசிராந்தையாரும் வடக்கிருந்தாரென்று கிட்டத்தட்ட எல்லா உரையாசிரியருமே சொல்வது மிகைக் கூற்றாகவும் அற்றுவிகத்திற்கு மாறுபட்டதாகவும் தோற்றுகிறது. பார்க்க வருபவரெல்லாம் ஆற்றாமையில் சோழனோடு சேர்ந்து வடக்கு இருப்பதை அற்றுவிகம் என்ற சமயநெறி ஏற்றுக் கொள்ளாது. “வடக்கு இருந்தானுழைச் சென்ற பிசிராந்தையாரைக் கண்டு பொத்தியார் பாடியது” என்றே பாட்டின் கீழுள்ள கொளுக்குறிப்புச் சொல்கிறது. இற்றைக்கால உரை யாசிரியர் பிசிராந்தையாரையும், ஏன் பொத்தியாரையுங் கூட, வடக்கு இருந்ததாய் எழுதிவிட்டார். ஏன் இந்த முடிவிற்கு வந்தாரென்று புரிய வில்லை. இதைப்பற்றி அடுத்தபாட்டிலும் ஆழ்ந்து பேசுவோம். இப்போது இப்பாட்டைப் படியுங்கள்..

நினைக்குங் காலை மருட்கை யுடைத்தே
எனைப்பெருஞ் சிறப்பினோ டீங்கிது துணிதல்
அதனினு மருட்கை யுடைத்தே பிறனாட்டுத்
தோற்றஞ் சான்ற சான்றோன் போற்றி
இசைமர பாக நட்புக் கந்தாக
இனையதோர் காலை யீங்கு வருதல்
வருவ னென்ற கோனது பெருமையும்
அதுபழு தின்றி வந்தவ னறிவும்.
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே
அதனால்,
தன்கோ லியங்காத தேயத் துறையும்
சான்றோ னெஞ்சுறப் பெற்ற தொன்றிசை
அன்னோனை யிழந்தவிவ் வுலகம்
என்னா வதுகொ லளியது தானே

                            -புறம் 217

இப்பாடலின் விளக்கம் கூடுவதற்காக, பாடலுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டுக் கீழே கொடுத்திருக்கிறேன்.

எனைப்பெருஞ் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல்
நினைக்கும் காலை மருட்கை உடைத்தே!
பிறன் நாட்டுத் தோற்றம் சான்ற சான்றோன்
இசை மரபாக, நட்புக் கந்தாக, போற்றி ஈங்கு வருதல்
அதனினும் மருட்கை உடைத்தே!
இனையதோர் காலை
வருவன் என்ற கோனது பெருமையும்
அது பழுதின்றி வந்தவன் அறிவும்.
வியத்தொறும் வியத்தொறும் வியப்பு இறந்தன்றே
அதனால்,
தன் கோல் இயங்காத தேயத்து உறையும்
சான்றோன் நெஞ்சு உறப்பெற்ற
தொன்று இசை அன்னோனை இழந்த இவ் உலகம்
என் ஆவது கொல்? அளியது தானே

இனி ஒருசில சொற்பொருள்களையும் குறிப்புகளையும் பார்ப்போம். எனைப் பெருஞ் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல்= எல்லாப் பெருஞ்சிறப்போடு இது செய்ய முற்படல்; ஆழ்ந்து ஓர்ந்துபார்த்தால், இங்கே ”இது” என்பது வடக்கு இருத்தலைக் குறிக்கிறது. முந்தைய நிகழ்ச்சிகளை அறிந்தாற்றான் ”இது” எனுங்குறிப்புப் புலப்படும். வடக்கிருந்த சோழன் வாடியிறந்துவிட்டான். அவனுக்கான நடுகல்லும் எழுப்பப்பட்டுவிட்டது. யாரும் எண்ணா இந் நிலையில் பாண்டிநாட்டுப் பிசிராந்தையார் நடுகல்லெதிரே வந்துநிற்கிறார். கூடியிருந்த சான்றோர் எதிர்பார்க்காநிலையில் இதுநடந்தது கண்டு திகைத்துப் போனார். முல்>மல்>மர்>மரு>மருள்>மருட்கை என்பது வியப்பும், திகைப்பும் கலந்த மயக்கத்தைக் குறிக்கும். ”நினைக்குங்காலை மருட்கை உடைத்தே”= நினைக்கையிற் திகைக்க வைக்கிறது.     

பிறன்நாட்டுத் தோற்றம் சான்ற சான்றோன்= வெளிநாட்டுத் தோற்றங் கொண்ட சான்றோன். தமிழகம் பொதுவெனினும், பாண்டிநாடு, பிறன்நாடு தானே? சோழநாட்டுப் புலவரான பொத்தியார் அப்படித் தானே குறிப்பிடுவார்? இசை மரபாக, நட்புக் கந்தாக, போற்றி ஈங்கு வருதல்= புகழ் மரபாக, நட்பின் பற்றுக்கோடாக (எம் அரசனைப்) போற்றி இங்கு (பிசிராந்தையார்) வருதல். சோழனுக்கும் ஆந்தையாருக்கும் இடையுள்ள நட்பே இவ்வருகைக்குப் பற்றுக் கோடாகும். அதனினும் மருட்கை உடைத்தே = அதைக் காட்டிலும், திகைக்க வைக்கிறது. இனையதோர் காலை = இத்தகைய காலத்தில். வருவன் என்ற கோனது பெருமையும் = ”(என்னைத்தேடிப் பிசிராந்தை) வருவான்” என்று சொன்ன எம் அரசனின் பெருமையும்

அது பழுதின்றி வந்தவன் அறிவும்.= அப்பெருமைக்குப் பழுதின்றி ஆக்கி வந்தவனின் அறிவும். இங்கே அறிவென்ற குறிப்பு முகன்மையானது. எல்லாம் தெரிந்தேதான் சோழனின் நடுகல்லைப் பார்க்கப் பிசிராந்தையார் வருகிறார். வியத்தொறும் வியத்தொறும் வியப்பு இறந்தன்றே = எத்தனை முறை வியந்தாலும் வியப்புண்டாகிறது. (இவ்வளவு வியப்பு உண்டென்றால், ஒரு வேளை பாண்டியன் அறிவுடை நம்பிக்கும், கோப்பெருஞ் சோழனுக்கும் தீராப் பகை இருந்தது போலும்! பாண்டிநாட்டார் யாரும் சோழநாட்டிற்குள் சட்டென்று உறவாட மாட்டார் போலும். அதனாற்றான் பாண்டிய அரசனின் பெருமையைச் சற்றும் விட்டுக் கொடுக்காது 191 ஆம் பாடலிற் பிசிராந்தையார் சொன்னார் போலும்.) 

தன் கோல் இயங்காத தேயத்து உறையும் = தன் செங்கோல் இயங்காத (பாண்டிய) தேசத்தில் உறையும்; செங்கோல் இயங்கும் இடமே ஆட்சி நடக்குமிடமாகும். சான்றோன் நெஞ்சு உறப்பெற்ற = சான்றோனின் நெஞ்சை (உரிமையோடு) அடையப்பெற்ற. தொன்று இசை அன்னோனை இழந்த இவ் உலகம் = பழம்புகழ் பெற்ற அன்னவனை இழந்த இவ்வுலகம் என் ஆவது கொல்? அளியது தானே! = என்னாகும்? இரங்கத் தக்கது தானே?

பாட்டின் மொத்தப் பொருள்:

எல்லாப் பெருஞ்சிறப்போடு வடக்கிருத்தலைச் செய்ய (எம் அரசன்) முற்பட்டதை நினைக்கையிற் திகைக்க வைக்கிறது. வெளியார்நாட்டிற் தோற்றங்கொண்ட சான்றோன், புகழ்மரபாக, நட்பின் பற்றுக் கோடாகப் (எம் அரசனை) போற்றி இங்குவருதல் அதைக்காட்டிலும் திகைக்கவைக்கிறது. இத்தகைய காலத்தில் “(என்னைத் தேடிப் பிசிராந்தை) வருவான்” என்று சொன்ன எம் அரசனின் பெருமையும், அப்பெருமைக்குப் பழுதின்றி ஆக்கி வந்தவனின் அறிவும் எத்தனை முறை வியந்தாலும் வியப்புண்டாகிறது. தன்செங்கோல் இயங்காத (பாண்டிய) தேசத்தில் உறையும் சான்றோனின் நெஞ்சை (உரிமையோடு) அடையப் பெற்ற, பழம்புகழ் பெற்ற அன்னவனை இழந்த இவ்வுலகம் என்னாகும்? இரங்கத்தக்கது தானே?

சோழனை வியந்தே இங்கு பொத்தியார் பாடுகிறார். பிசிராந்தையாரைப் பற்றி ஊடே ஒரு செய்தி வருகிறது. அவ்வளவுதான். அடுத்த பாட்டிற்குள் போவோம்.

அன்புடன்,
இராம.கி. 

Tuesday, October 23, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 16

அடுத்து புறம் 191 ஐப் பார்க்கப் போகிறோம். பலருக்கும் தெரிந்த பாடல் தான். புறநானூற்றின் 182-இலிருந்து 195 வரையுள்ள பாடல்கள் பெரும்பாலும் அற வியல், மெய்யியற் கருத்துக்களைப் புகல்வனவாகும். திணை: பொதுவியல்;  துறை: பொருண்மொழிக் காஞ்சி 

யாண்டுப லவாக நரையில வாகுதல்
யாங்கா கியரென வினவுதி ராயின்
மாண்டவென்  மனை(வி)யொடு மக்களு நிரம்பினர்
யான்கண் டனையரென் னிளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கு மதன்றலை
ஆன்றவிந் தடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழு மூரே

                            - புறம் 191

இப்பாடலின் விளக்கம் கூடுவதற்காக, பாடலுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டுக் கீழே கொடுத்திருக்கிறேன்.

"யாண்டு பலவாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர்?" என வினவுதிர் ஆயின்
மாண்ட என் மனை(வி)யொடு மக்களும் நிரம்பினர்
என் இளையரும் யான் கண்டனையர் 
வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும்
அதன் தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்
யான் வாழும் ஊரே

இனி ஒருசில சொற்பொருள்களையும் குறிப்புகளையும் பார்ப்போம்.

சூரியனைப் புவிசுற்றும் நீள்வட்ட வலயப்பாதையை 365 1/4 பகுதிகளாக்கி, ஒவ்வொரு பகுதியையும் ஒருநாளாய்க் கொள்ளும்போது, 4 நாட்கள்மட்டும் நமக்குச் சிறப்பாகத்தோற்றும். இதிற் சூரியனுக்கு மிக அருகில் வரும்நாளை வேனில் முடங்கல் (summer solstice) என்றும், சூரியனுக்கு மிகத்தொலைவில் வரும்நாளைப் பனி முடங்கல் (winter solstice) என்றுஞ்சொல்வர். தவிர, பகலும், இரவும் ஒரே கால அளவுகொண்ட 2 நாட்களை ஒக்க நாட்கள் (equinox) என்பார். ஒக்க நாட்களின் பின்புலங்களாய் (ஆட்டுருவங் காட்டும் விண்மீன் தொகுதியான) மேழவோரையும், (சமன்செய்து சீர்தூக்கும் கோலுருவங் காட்டும் விண்மீன் தொகுதியான) துலையோரையும் அமைவதால் அவற்றை மேழவிழு என்றும், துலைவிழு என்றுஞ்சொல்வர். வானவியலின்படி ஆண்டுத்தொடக்கம், வேனில்/பனி முடங்கலிலோ, அன்றி மேழ/துலை விழுவிலோ அமையமுடியும். . 

முன்செலவத்தோடு (precession) கணக்கிடுகையில், பனிமுடங்கலில் ஆண்டு தொடங்குவதைத் தைப்பொங்கலிற் தொடங்கியதாகவே கொள்ளலாம். மாற்றுவகையில் ஆண்டுத்தொடக்கம் சித்திரை மேழ விழுவிற் தொடங்கியது ஆகவுங் கொள்ளலாம். இருவகைத் தொடக்கங்களுக்கும் சங்க இலக்கியத்திற் சான்றுகளுண்டு. யாண்டு>ஆண்டு என்றசொல் யாடு>ஆடு என்றசொல்லை மூக்கொலி இழைத்துச் சொல்வதாகும். ஆண்டை, ஆட்டையென்று பேச்சு வழக்கிற் சொல்லும்போது, ஆட்டுருவங் கொண்ட மேழ இராசித் தொடக்கத்தையே குறிக்கிறது. [12 மாதங்களுக்கு ஒருமுறை அண்டையில் தோன்றி வளரும் முங்கில் அடிமுளையைத் தமிழிலும், மலையாளத்திலும் ”ஆண்டை” என்பதால், ஆண்டின் பெயர்க்காரணம் அதென்று சிலர்சொல்வர். ஆனால், ஆண்டின் தொடக்கத்தை எது குறிக்கிறதென்ற கேள்விக்கு இச் சிந்தனைவழி விடைகிடைப்பதில்லை. தவிர, “யாண்டெனும்” சொல்லாட்சியை மூங்கில்முளைக் காரணம் சரியாக விளக்காது.] 

நரை= வெளிறிய மயிர்; நரையென்ற சொல்லின் பிறப்பைச்சொன்னால் இங்குவிளக்கம் பெரிதும் நீளும். அதற்குத் தனிக்கட்டுரையே வேண்டும். ”யாண்டு பலவாக நரையில ஆகுதல்” = ஆண்டுகள் பல ஆயினும், நரை யிலாது ஆகுதல்; வெள்ளை நிறம் பெற்றதொரு நெய்தற் பறவை நாரை என்றே சொல்லப்பெறும்.

ஈ>இ, ஆ>அ, ஊ>உ, யா>எ என்பன அண்மை, சேய்மை, முன்மை, வினவுச் சுட்டுக்களாகும். இச்சுட்டுக்களின் விதப்பான வளர்ச்சியில் அன்னுதற் (=போலுதல்)  பொருளில் அன்னு>அ(ன்)னம்>அனம் என்னும் ஈற்றைச் சேர்த்து ஈ>ஈங்கு>இங்கு>இங்கனம்>இங்ஙனம், ஆ>ஆங்கு>அங்கு>அங்கனம்> அங்ஙனம்; யா>யாங்கு>யாங்கனம்>யாங்ஙனம்; யாங்கு>எங்கு>எங்கனம்> எங்ஙனம் என்ற வளர்ச்சிகளும் ஏற்பட்டு, ”படி, ஆறு, வகை” என்ற பொருட் பாடுகளைக் குறிக்கும். காட்டாக ”யாங்கு ஆகியர்?” என்பது ”எப்படியாயினர்? அல்லது ”எவ்வாறாயினர்?” அல்லது “எவ்வகையாயினர்?” என்று பொருள் கொள்ளும்.

வினவுதல் = கேள்வி கேட்டல்; ஒரு கருத்தின் உள்ளடக்கத்தை விள்ளிப் பிளந்து காட்டுவது வினவு (பிள்>விள்>விளவு>வினவு>வினா) என்று சொல்லப் படும்.

மாண்ட என் மனைவியொடு= மாட்சியுற்ற என் மனைவியொடு;. மா>மாள்> மாண்ட= பெருமைமிக்க. நிரம்புதலென்பது இங்கு உள்ளம்/மனம் நிறைதலைக் குறிக்கிறது. “என் மனசு நிரம்பிக் கிடக்கிறது” என்று சொல்கிறோமில்லையா? யாருக்கு உள்ளம் நிறைவாயிருக்கிறதோ, அவருக்குக் கவலையில்லை. இங்கே மனைவியொடு, (சுற்றியிருக்கும்) மக்களும் மனம்நிறைந்தனர். மக்களைப் புதல்வராக மட்டுமே விதந்து பல உரையாசிரியரும் குறிக்கிறார். அது தேவையில்லாத விதந்தோதலாகும். மக்கள் என்பதைச் சுற்றத்தார், நண்பர் என்று பிசிராந்தையார் வாழ்வில் அக்கறைப்பட்ட எல்லோரையும் குறிப்பதாகவே இங்கு கொள்ளலாம். 

இளையரென்பது புதல்வர்/புதல்வியர், ஏவலாளர் என 2 வகையினரையுங் குறிக்கும். மூத்தோர் என்ற சொல் உரிமையுள்ள (கிழமை) நிலையைக் குறிக்கும். இளையர் பணிசெய்வதிற் குற்றங்களிருந்தால் சமம், வேற்றம், தானம், தண்டம் (இத் தமிழ்ச்சொற்கள் சாம, பேத, தான, தண்டம் என்று சங்கதத்திற் திரியும்) என்ற 4 முறைகளிலே பாடங்கள் கற்பிக்கப் படுகின்றன. கண்டித்தல் என்பது கட்டுப் படுத்தல் என்ற பொருள்கொள்ளும். நாலுவிதமான கண்டிப்புக்களே சற்றுமுன் சொன்னவையாகும். கண்டித்தலின் பெயர்ச்சொல் கண்டனையாகும். கண்டிப்போர் என்போர் கண்டனை செய்வோராவர். கண்டனையர்/கண்டனையாளர் என்பார் கண்டிப்பிற்கு ஆளாவோர். கண்டனைக்கு உட்படுபவராய் இளையர் இருக்கும் வரையே கிழமையர் கவலாதிருக்க முடியும். அதனாற்றான் நடத்தை அறிவியலில் (behavioural science) கடைவகைத் கண்டனையை எல்லா நேரமும் பயன்படுத்தாது, மற்ற 3 முறைகளாலே நடத்தைகளைச் சரிசெய்யும் படி சொல்வர். “என் இளையரும் யான் கண்டனையர்” என்பது அருமையான நடத்தை அறிவியற் கூற்றாகும்.

வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் = என்னுடைய வேந்தனும் (அறம்) அல்லாதவற்றைச் செய்யாது காப்பான். ”செய்யான் காக்கும்” என்ற வழக்கு இப்பொழுது “செய்யாது காப்பான்” என்றே சொல்லப்படுகிறது. அல்லவை என்பது (அறத்திற்குப்) புறம்பானவை என்று பொருள்படும். சம காலத்தில் பல்வேறு சேரரும், சோழரும், பாண்டியரும், குறுநில மன்னரும்/வேளிரும் இருந்தாலும், வேந்தன் என்பது உறையூர்/புகார், மதுரை, கருவூர்/வஞ்சி என்ற தலைநகர்களில் இருந்த முடிவேய்ந்த மன்னரை மட்டுமே குறித்திருக்கிறது. மற்றவரெல்லாம் மன்னர்/அரசர்/அரையர் என்று மட்டுமே சொல்லப்படுவார். அதன் தலை = அதற்கு மேல். ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் = (அறிவு) அகன்று பதப்பட்டு அடங்கிய, (எல்லோரும்) கொள்ளத் தகுந்த பல சான்றோர் யான் வாழும் ஊரே = அடங்கியது நான் வாழும் ஊராகும். பாட்டின் இந்த வரிகளில் ”அடங்கியது” எனும் வினைச்சொல் நேரடியாக வெளிப்படாது உள்ளொடுங்கி நிற்கிறது.

மொத்தப்பொருள்:

”ஆண்டுகள் பல ஆயினும், நரையிலாதல் எவ்வாறாயிற்று?”; என்று வினவுவீராயின், ”மாட்சியுற்ற என் மனைவியோடு, (சுற்றத்தார், நண்பர் என்ற) மக்களும் (மனம்) நிறைந்திருக்கிறார்; (புதல்வரும் ஏவலாளரும் ஆகிய) இளையரும் என் கண்டனைக்கு (கட்டுப்பாட்டிற்கு) ஆளானவரே. என் வேந்தனும் (அறம்) அல்லாதவற்றைச் செய்யாது காப்பான். அதற்குமேல், (அறிவு) அகன்று பதப்பட்டு அடங்கிய, (எல்லோரும்) கொள்ளத்தக்க பல சான்றோர் அடங்கியது நான் வாழும் ஊராகும்.”

நால்வேறு முகன்மைச் செய்திகளைச் சொல்லி “நான் கவலையிலாது இருக்கிறேன்; எனவே என்முகத்தில் நரையில்லை” என்று பிசிராந்தையார் அழுந்தச் சொல்கிறார். அடுத்த பாடலுக்குப் போவோம்.

அன்புடன்,
இராம.கி.   

Monday, October 22, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 15

இனி அடுத்து புறம் 223 ஆம் பாடலைப் பார்ப்போம். இதன் திணையும் பொதுவியல் தான்; துறை: கையறுநிலை. இப்பாட்டிற் பொத்தியார் ”தன் இன்னுயிர் (சோழன்) உடம்பொடு (போக) விரும்பும் கிழமை” பற்றியும், சோழன் நடுகல்லுக்கருகில் இடம்கொடுத்து அளிப்பது பற்றியும் பேசுகிறார்.  நமக்குத் தெரியாத ஏதோவொரு செய்தி இதில் அடங்கியிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. கொடுத்திருக்கும் தரவுகளை வைத்து உறுதியாகச் சொல்லமுடியவில்லை. பாடலைப் படியுங்கள். .

பலர்க்குநி ழலாகி யுலகமீக் கூறித்
தலைப்போ கன்மையிற் சிறுவழி மடங்கி
நிலைபெறு நடுக லாகியக் கண்ணும்
இடங்கொடுத் தளிப்ப மன்ற வுடம்போ
டின்னுயிர் விரும்புங் கிழமைத்
தொன்னட் புடையார் தம்முழைச் செலினே

                          - புறம் 223

இப்பாடலின் விளக்கம் கூடுவதற்காக, பாடலுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டுக் கீழே கொடுத்திருக்கிறேன்.

பலர்க்கு நிழலாகி, உலகம் மீக் கூறித்
தலைப்போகு அன்மையிற் சிறுவழி மடங்கி,
நிலைபெறு நடுகல் ஆகியக் கண்ணும்
தொல் நட்புடையார் தம் உழைச் செ(ல்)லினே
இன்னுயிர் உடம்போடு விரும்பும் கிழமை
மன்ற இடம் கொடுத்து அளிப்ப

இனி ஒருசில சொற்பொருள்களையும் குறிப்புகளையும் பார்ப்போம்.

நுல்>நெல்>நில் என்பது ஒளியைக் குறிக்கும். ஒளி போன்ற பொன்னிறம் கொண்டதால் தான் நெல்லெனும் தவசத்திற்குப் பெயர் வந்தது. நில்லிற் பிறந்த நிலவென்ற சொல் திங்களின் ஒளியைக் குறித்தது. நில்லோடு அல் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து நிலல்*>நிழல் என்று ஒள்ளுதலையும், ஒளியையுங் குறித்தது. இன்னொரு வகையில், அல் எனும் விகுதி எதிர்மறை குறித்து ”நில் அல்லாதது” என்ற பொருளில் நிலல்*>நிழல் என்றாகிச் சாயையைக் குறித்தது. ஒன்றிற்கொன்று எதிரான பொருட்பாடுகள் ஒரே சொல்லிற்கு ஏற்பட முடியும். இங்கு சாயைப் பொருளே சரியானது. ”பலர்க்கு நிழலாகி” என்ற தொடரில் நம்மூர் வெதணம் (climate) வெளிப்படும். கோடை வெய்யில் சுள்ளென்றடிக்கையில், ஆல்போல் அகண்ட பெருமரங்களின் நிழல்தேடி ஓடுகிறோமே? அதுபோற் துன்பம் விளைகையில் ஆல்போல அரசன் நிழல் தருகிறான். ”பலர்க்கு நிழலாகி” என்பது துன்பக்காலத்தில் அரசன் அடைக்கலந் தருவதைக் குறிக்கிறது. பலர்க்கு நிழலாகி = பலர்க்கு நிழலாய் (அடைக்கலந்) தந்து 

உலகம் மீக்கூறல் = (நாட்டு) மக்கள் மிகுத்துக் கூறல்;  கோப்பெருஞ் சோழனுக்கும் அவன் புதல்வருக்கும் இடையே போரெழுந்தபோது, “இப்படியும் அரசன் இருப்பானா? தன் புதல்வர் ஆசைக்கு உடன்படாது, போரிடப் போகிறானே? கடைசிக்காலத்தில் மண்ணையா கொண்டு போவான்? மக்களில் ஒருவனுக்கு முடிசூட்டித் தான் துறவு பூணுவானா? அதைவிடுத்து மண்ணாசையில் மறுக்கிறானே?” என்று விதம் விதமாய் மிகுத்துப் பேசி யிருப்பர். ”உலகம் மீக்கூறல்” மூலமாய் பொத்தியார் இப்பேச்சை நமக்கு உணர்த்துகிறார். 

தலைப்போகு = தலைப்போக்கும் தண்டனை. தலைப்போகு + அன்மை = தலைப்போகன்மை = தலைப்போகா நிலை; இங்கே இது அரசப்பேற்றைக் குறிக்கிறது. இந்தச் சொல் தமிழிலக்கியத்திலேயே இங்கு மட்டும் தான் வருகிறது. சங்க இலக்கியம் ஓர் அகராதியல்ல என்பதற்கு இதுவுமோர் எடுத்துக்காட்டு. இதுபோன்ற சொற்களைப் புரிந்துகொள்ள இலக்கணம், நாட்டு வழக்காறு, சற்று ஏரணம் போன்றவற்றைப் பயன்படுத்தவேண்டும். கட்டாயமாகவும், அவக்கரமாகவும், ஏதோவொரு செயலை நண்பர் செய்யும் போது, “ஏன் இப்படிப் பறக்கிறாய்? தலைப்போகும் காரியமா, என்ன?” என்று கேட்கிறோமில்லையா? பொதுவாக, முற்றாளுமை (dictatorship) அதிகாரிகள் ”இதைச் செய்யாவிட்டால் உன் தலை போகும்” என்று மக்களை அச்சுறுத்தியே தாம் வேண்டியதைச் சாதித்துக்கொள்வர். முடியரசும் ஒரு முற்றாளுமை அரசு தான். ”தலைப்போக்குச் செயல்” என்பது ”பெருங்கேடு” விளைவிக்குந் தண்டனையாகும். அரசன் ஒருவனுக்குத் தான் தலைப்போக்குத் தண்டனையிலிருந்து (=சிரச்சேதம்) விதிவிலக்குண்டு. பொதுவாகத் தலைப்போகு அல்லாமை = தலைப்போகு அன்மை = தலைப்போகன்மை என்பது முடியரசில் அரசனுக்கு மட்டுமே வாய்க்கும் பேறாகும். போரிலாக் காலத்தில் இயற்கையாய் மரிப்பதே அரசர்க்கு இயல்பு. இங்கோ சோழன் வாழ்வில் மாறி நடக்கிறது. உண்ணாநோன்பின் வழி வடக்கிருந்து தன்னுயிரை ஈகிறான்.  .
   
சிறுவழி மடங்கி = சிறுவழி மாறி (=திரும்பி, ஒடுங்கி) தலைப்போகன்மைப் பேறுகொண்ட அரசன் சிறுவழி மாறி இங்கு உண்ணாநோன்பால் வடக்கிருந்து மரிக்கிறான். “தலைப்போகன்மையிற் சிறுவழி மடங்கி” என்பது கோப்பெருஞ் சோழன் வாழ்வில் விதப்பாய் நடந்த செய்தியாகும். இக்கருத்தை எந்த உரை யாசிரியரும் சரியானபடி கொணர்ந்ததாய் நான் காணவில்லை. கிட்டத்தட்ட அனைத்து உரையாசிரியரும், இதன்பொருள் காண்பதிற் தடுமாறிப் போயிருக்கிறார்.

நிலைபெறு நடுகல் = நின்று நிலைக்கும் நடுகல். சங்க காலக் குமுகாயத்தில் நடப்பட்ட நடுகலைச் சாய்த்தெறியாது காலகாலத்திற்கும் நின்று நிலைக்கச் செய்தார் போலும். பின்வந்த குமுகாயத்தினரோ, அதுபோன்ற மரபெல்லாம் காப்பாற்றவில்லை. சீரங்கத்திற்றான் வடக்கிருத்தல் நடந்ததோவென்று இத்தொடரின் முன்பகுதிகளில் ஊகித்திருந்தோம். அப்போது நட்ட கல் சீரங்கத்தில் எங்குள்ளதென்று தொல்லியலும் இதுவரை காட்டவில்லை; வழக்காறும் காட்டவில்லை. ஏதோ வரலாறு/மரபுகள் மாறிப் போயிருக்கின்றன. (அண்மையில் பேரா. க.நெடுஞ்செழியனின் வழி கேள்விப்பட்ட ஊகத்தை இங்கு சொன்னாற்பலரும் அதுகேட்டு அதிர்ந்து போவர்.)   

ஆகிய கண்ணும் = ஆகிய பொழுதும்

தொல் நட்புடையார் தம் உழைச் செ(ல்)லினே = தொல் நட்புடையாரின் பக்கம் சென்றால்

இன்னுயிர் உடம்போடு விரும்பும் கிழமை  = பொத்தியாரின் இன்னுயிர் (சோழன்) உடம்போடு (போக) விரும்பும் உரிமை கேட்கிறது. இங்கே உயிரையும், உடம்பையும் தனித்துப் பேசுவதால், பொத்தியாருக்கு அரசனின் சமய நெறியும், வடக்கிருத்தலின் மெய்ப்பொருளும் புரிந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். (இந்த நிலை எகுபதியப் பேரரசரோடு உயிர் துறந்தோரைப் பற்றிய எண்ணம் வருகிறது. அவரெல்லாம் விரும்பும் உரிமையால் இறந்தாரா? அன்றி குமுகாயத்தின்/ அரசின் கட்டாயத்தால் இறந்தாரா? - ஆய்விற்குரிய கேள்வி.     

மன்ற இடம் கொடுத்து அளிப்ப = உறுதியாக இடம்கொடுத்து அளிப்பர் 

பாட்டின் மொத்தப்பொருள்:

பலர்க்கு நிழலாய் (அடைக்கலந்) தந்து,
(நாட்டு) மக்கள் மிகுத்துக் கூறித்
தலைப்போகன்மையிற் சிறுவழி மாறி,
(இன்று) நிலைபெறும் நடுகல் ஆயினும்,
தொல் நட்புடையாரின் பக்கஞ் சென்றால்,
(என்) இன்னுயிர் (சோழன்) உடம்பொடு (போக) விரும்பும் உரிமையால்,
உறுதியாக இடம் கொடுத்தளிப்பர்.

பாட்டின் சுருக்கமான பொருளை ஆங்கில்த்திற் சொன்னால், “They will allow me to accompany the king in his journey”. இந்தப் பாட்டிற்கு அப்புறம் பொத்தியார் வடக்கிருந்தாரா என்பது தெரியாது. ஆனால் அப்படித்தான் எல்லா உரை யாசிரியரும் எழுதுகிறார். சங்க இலக்கியம் என்பது ஒரு வரலாற்றுப் பொத்தகமில்லை. ஆனால் ஆங்குமிங்கும் வரலாற்றுச் செய்திகள் அடங்கி யிருக்கின்றன. எனவே ஊகங்கள் இடைவருவதைத் தவிர்க்கமுடியாது. சிலபோது கேள்விகள் மட்டுமே எழுந்துகொண்டிருக்கின்றன.

இன்னுமொரு பொத்தியார் பாடல் மீந்திருக்கிறது. அதற்கு முன் அடுத்த பகுதியில், வடக்கிருந்த இடத்திற்கு பிசிராந்தையார் வந்து சேரும்போது கூடியிருந்தோர் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய மறுமொழியைப் பார்ப்போம். வடக்கிருத்தல் என்றாற் சொற்பொருளென்ன? - என்றும் இன்னும் நாம் அறியாதிருக்கிறோம். இதுவரை பார்த்த பாடல்களில் வடதிசை பற்றிய குறிப்பேயில்லை.

அன்புடன்,
இராம.கி.

Sunday, October 21, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 14

இனி அடுத்து புறம் 222 ஆம் பாடலைப் பார்ப்போம். இதன் திணையும் பொது வியல்; துறை: கையறுநிலை. இப்பாட்டிற் பொத்தியாருக்கும், சோழனுக்கும் இடைநடந்த உரையாடல் வெளிப்படுகிறது. சோழன் வடக்கிருக்கத் தொடங்கிய போது உழுவல் நண்பரான பொத்தியார், உணர்ச்சிமேலிட்டுத் தானும் உடன் வடக்கிருக்க விழைகிறார். அப்பொழுது “உன் மகன் பிறந்தபின் வா” எனக்கூறிச் சோழன் தடுத்துவிடுகிறான். மகப்பிறப்பிற்கு அப்புறம் பொத்தியார் வந்து இடங்கேட்பதாய்ப் பாடல் அமைந்துள்ளது. .

அழலவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி
நிழலினும் போகாநின் வெய்யோள் பயந்த
புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வாவென
என்னிவ ணொழித்த வன்பி லாள
எண்ணா திருக்குவை யல்லை
என்னிடம் யாதுமற் றிசைவெய் யோயே

                           - புறம் 222

இப்பாடலின் விளக்கம் கூடுவதற்காக, பாடலுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டுக் கீழே கொடுத்திருக்கிறேன்.
 
அழல் அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி
நிழலினும் போகா நின் வெய்யோள் பயந்த
புகழ் சால் புதல்வன் பிறந்த பின் வா
என
இவண் ஒழித்த என் அன்பிலாள!
எண்ணாது இருக்குவை அல்லை?
இசைவெய் யோயே!
மற்று என்னிடம் யாது? 

இனி ஒருசில சொற்பொருள்களையும் குறிப்புகளையும் பார்ப்போம்.

உல்>உள்>அள்>அழல் = தீ; (மலையாளம்.அழல்; துளு. அர்ல, அர்லுனி; அழல்>அழனம் என்பதும் தமிழிற் தீயையே குறிக்கும். அனலும் அழலோடு தொடர்பு காட்டும். ழகரமும் ககரமும் தமிழிற் பல இடங்களிற் போலிகளாய் வந்துள்ளன. காட்டு. முழுத்தம்> முகுர்த்தம்> முகூர்த்தம். அழனி>அழ்னி*> அகுனி* என்பது அக்னி எனுஞ் சங்கதச் சொல்லோடு இனங்காட்டும். இது இருக்குவேதத்திலேயே உள்ளது) உல் எனும் வேர்ச்சொல்லில் இருந்து இன்னொன்றும் இப்பாட்டில் வந்திருக்கிறது. உல்>உள்>உள்வு>உவு>உவி> அவி>அவிர்; அவிர்தல் = ஒளிர்தல்; உள்ளிலிருந்தே உள்>ஒள்>ஒளி பிறந்தது. வேதல், எரிதலிலிருந்து ஒளிர்தற் கருத்து உருவாகும். வயங்குதல் = விளங்குதல்; வயங்கு+ இழை = வயங்கிழை = விளங்கும் அணிகலன்.

”அழல் அவிர் வயங்கிழை பொலிந்த மேனி” என்பது தீயால் புடமிட்டு ஒளிர்ந்து விளங்கும் இழையை அணிந்த மேனியைக் குறிக்கிறது. இங்கே ”மேனி” பெண்ணிற்கு ஆகுபெயராகிறது. நிழல்தல்/ நிழற்றல்>நிழத்தல் = இல்லை யென்றாக்கல்; ”அழல் அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி நிழலினும் போகா நின் வெய்யோள்” = ”தீயால் புடமிட்டு ஒளிர்ந்து விளங்கும் இழையை அணிந்த மேனியை இல்லையென்றாக்கியும் போகாத, நின் விழைவிற்குரியவள்”. ”தீயாற் (புடமிட்டு) ஒளிர்ந்துவிளங்கும் இழையணிந்த பெண்ணைவிட ஒளிர்தோற்றும் உன்மனைவி” என உயர்வு சொன்னான் சோழன்.

வெள்>வெய்>வெய்யோள் = விருப்பு, விழைவிற்கு உரியவள்; எனவே மனைவி யாவாள். ”விருப்பம், விழைவு, வெய், வேட்கை” போன்றவை ஒரே வேரில் இருந்து உருவானவை. வெள்ளிற்குத் திருமணப் பொருளுமுண்டு. வெய்யோளை மனைவி என்பது போல் வெய்வி என்றுஞ் சொல்லலாம், இந்தையிரோப்பிய மொழிகளிற் பழகும் ”wife” இன் தோற்றத்தை ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகரமுதலிகள் ”origin unknown" என்று போட்டிருக்கின்றன. ”இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் தமிழிய மொழிகளுக்கும் ஏதோவொரு முன்தொடர்பு இருக்கலாமெனப் பலகாலஞ் சொல்லிவருகிறேன். கேட்பதற்குத் தான் பலருந் தயங்குகிறார். அப்படிச் சொல்வதால் என்னைக் கேலியுஞ் செய்கிறார். அந்த அளவிற்கு மாக்சுமுல்லர் தேற்றமும், மோனியர் வில்லியம்சு அகரமுதலியும் தமிழாய்ந்தோரை ஆட்டிப்பிடித்து ஆளுகின்றன. சங்கதக் கருத்தாளரை உச்சிமேற் கொண்டு, முன்முடிவில்லாது தமிழாய்வர் கருதுகோள் வைக்கிறார்.

இப்பாட்டில் வரும் ”மனைவி வண்ணனை, பிள்ளைப் பிறப்புச்” செய்திகளைப் பார்த்தால், பொத்தியார் மனைவியும், பொத்தியாரும் நடுத்தர அகவையை மீறியிருக்க முடியாது. தவிர, வாராது போல் வந்த புதல்வன் பிறப்பான் என்று எண்ணிக் கூடப் பொத்தியார் வடக்கிருக்கச் சோழன் மறுத்திருக்கலாம். ஆனாலும் பிள்ளை பிறந்தபின், பொத்தியார் மீளவந்து வடக்கிருக்க இடங் கேட்கிறார். “நின் வெய்யோள் பயந்த புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வா” = நின் மனைவி பயந்த புகழ்நிறைப் புதல்வன் பிறந்தபின் வா. பயத்தலென்பது அருமையான வினைச்சொல். மரங்கள் பயந்ததைப் பயம்>பழம் என்கிறோம் இல்லையா? மாந்தரிற் பயந்ததைப் பயல்>பையல்>பையன் என்கிறோம். எனவே பயத்தல் என்பது ஈதல், கொடுத்தல், தருதல் என்பதன் இன்னொரு சொல்லாகத் தெரிகிறது. இருந்தும், இக்காலத்திற் பயத்தலைப் புழங்காது, வேறேதோ வைத்துச் சுற்றிவளைத்துப் பயன்படுத்துகிறோம். (பயக்கிறோம் என்பதைப் பயன்படுத்துகிறோம் எனும்போது சற்று செயற்கையாய்த் தோற்ற வில்லையா?) ஆங்கிலத்தில் to pay என்கிறோமே, அதற்கும் இணையான வினைச்சொல் பயத்தல் தான். ”நான் இந்த ஆண்டிற்குரிய கட்டணத்தைப் பயந்தேன் - I paid the fees for this year."

நுட்பியல் ஏந்துகள் (technical facilities) இல்லா அக்காலத்திற் புதல்வனே பிறப்பான் என்பது ”பெண்மகவிலும், ஆண்மகவை உயர்த்தும் ஆதிக்கப் போக்கை” உணர்த்துகிறது. இன்றுவரை தமிழ்கூறு நல்லுலகம் அப்படியே தான் இருக்கிறது. ஆணாதிக்கம் 2500 ஆண்டுகள் இருந்தது போலும்.

”புதல்வன் பிறந்தபின் வாவென இவண் ஒழித்த என் அன்பிலாள” = புதல்வன் பிறந்தபின் வாவெனச் சொல்லி இங்கு (எனக்கு) இடமறுத்த என் அன்பின் ஆட்சியாளனே”

”எண்ணாது இருக்குவை அல்லை?” = (என்னைப் பற்றி) எண்ணாதிருப்பாய் அல்லையே?

இசை வெய்யோயே! = புகழை விரும்புகிறவனே!

மற்று என்னிடம் யாது? = அப்புறம் எனக்காக (நீ ஒதுக்கிய) இடம் யாது?

பாட்டின் மொத்தப்பொருள்:

”தீயாற் (புடமிட்டு) ஒளிர்ந்து விளங்கும் இழையணிந்த பெண்ணைவிட
ஒளிர்தோற்றும் உன்மனைவி
பயந்த
புகழ்நிறைப் புதல்வன் பிறந்த பின், வா”வெனச் சொல்லி
இங்கு (எனக்கு) இடமறுத்த என் அன்பின் ஆட்சியாளனே!
(என்னைப் பற்றி) எண்ணாதிருப்பாய் அல்லையே?
புகழை விரும்புகிறவனே!
அப்புறம், எனக்காக (நீ ஒதுக்கிய) இடம் யாது?

அடுத்த பாட்டும் பொத்தியார் பாட்டுத்தான். அதையும் பார்ப்போம். இந்தப் பாட்டில் பொத்தியாருக்கும் சோழனுக்கும் இடையிருந்த நட்பின் ஆழமும், வடக்கிருந்தே தீருவதெனும் உறுதியும் புரிகிறது.

அன்புடன்,
இராம.கி.   

Saturday, October 20, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 13

அடுத்து புறம் - 221 ஆம் பாடலைப் பார்ப்போம். இதன் திணை: பொதுவியல்; துறை: கையறு நிலை. ”கொடையிற் சிறந்த கோப்பெருஞ்சோழன், தான் கொண்ட கொள்கையுறுதியால் வடக்கிருந்து உயிர்துறந்தான். அவனிறப்பைத் தொடர்ந்து, தாழியில் இருத்தியோ, அன்றிப் பதுக்கையிற் கிடத்தியோ, உடலைப்புதைத்து அதன்மேல் நடுகல்லும் நிறுத்தியாயிற்று. (காவிரிப் படுகையின் புவியமைப்பில், சோழன் ஈமக்குழி பதுக்கையாயிராது, பெரும்பாலும் தாழியாகவே வாய்ப்புண்டு.) அக்கல்லும் நின்றதோ, இருந்ததோ காட்டாது, கிடந்த கோலமே காட்டியிருக்கும். சோழனோடு தானும் வடக்கிருக்க முற்பட்டபோது சோழன்தடுத்ததை வேறுபாடலில் நினைவு கொள்ளும் பொத்தியார் இப்பாடலில் நடுகல்லைக் கண்டு நெகிழ்ந்து பாடுகிறார்.   

பாடுநர்க் கீத்த பல்புக ழன்னே
ஆடுநர்க் கீத்த பேரன் பினனே
அறவோர் புகழ்ந்த வாய்கோ லன்னே
திறவோர் புகழ்ந்த திண்ணன் பினனே
மகளிர் சாயன் மைந்தர்க்கு மைந்து
துகளறு கேள்வி யுயர்ந்தோர் புக்கில்
அனைய னென்னா தத்தக் கோனை
நினையாக் கூற்ற மின்னுயி ருய்த்தன்று
பைத லொக்கற் றழீஇ யதனை
வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்
நனந்தலை யுலக மரந்தை தூங்கக்
கெடுவி னலிசை சூடி
நடுக லாயினன் புரவல னெனவே.

                      - புறம் 221

இப்பாடலின் விளக்கம் கூடுவதற்காக, பாடலுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டுக் கீழே கொடுத்திருக்கிறேன்.

பாடுநர்க்கு ஈத்த பல்புகழன்னே
ஆடுநர்க்கு ஈத்த பேர் அன்பினனே
அறவோர் புகழ்ந்த ஆய்கோலன்னே
திறவோர் புகழ்ந்த திண் அன்பினனே
மகளிர் சாயல்
மைந்தர்க்கு மைந்து
துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்
அனையன் என்னாது
அத் தக்கோனை நினையாக் கூற்றம்
நனந்தலை உலகம் அரந்தை தூங்க
இன்னுயிர் உய்த்தன்று
வாய்மொழிப் புலவீர்!
கெடுவில் நல்லிசை சூடி
நடுகல் ஆயினன் புரவலன் எனவே.
பைதல் ஒக்கல் தழீஇ அதனை
வைகம் வம்மோ

இனி ஒருசில சொற்பொருள்களையும் குறிப்புகளையும் பார்ப்போம்.

”பாடுநர், ஆடுநர்” என்பன இன்றும் பலருக்குத் தெரிந்த சொற்களேயாகும். பாடுநர்க்கும், ஆடுநர்க்கும் பரிசுகொடுத்த சோழன் "புகழுடையோன், பேரன்பினன்" என்றெல்லாம் பாராட்டப் பெறுகிறான். [இப்பாராட்டினூடே ஒரு நுணுகிய விதயத்தைக் கவனிக்கவேண்டும். பாடுநருக்கும் ஆடுநருக்கும் பரிசில்கொடுப்போன், செயினநெறியை ஆழ்ந்து கடைப்பிடிப்போனாகி, வடக்கிருந்து, வாழ்நாளை முடிப்பது பெரிதும் அரிது. ஏனெனில் பாடலும், ஆடலும், கேளிக்கைகொள்ளலும் செயினத்தின் சாவகக் கைப்பிடியாளருக்கு ஏற்பென்றாலும், வடக்கிருக்கும் அளவிற்குத் துறவுகொண்டவருக்கு அது புறம்பான செயலேயாகும். ஆனால் ஓர் அற்றுவிகச் சாவகனுக்கோ, துறவிக்கோ அது முடியும். ஏனெனிற் பாடுவதையும், ஆடுவதையும், ஏன் இன்னும் பல கலைகளில் ஈடுபடுவதையும், முடிவில் வடக்கிருப்பதையும் அற்றுவிகம் ஏற்றுக்கொள்ளும்; அற்றுவிகத்தின் அடிப்படையான நியதிவழிச் செயற்படும் நடைமுறை ஆழமான பொருள்கொண்டது. அதை மூடநம்பிக்கை என்பது மேலோட்டமான பார்வையாகும்.]

”ஊழ்வினை” என்ற கருத்தீட்டை இருவேறு நெறிகளும் இருவிதமாய்ப் பார்க்கும். ஊழெனும் வினையாய், இருபெயர்த் தொகுதியாய், அற்றுவிகம் பார்க்கும்போது, ஊழ்ந்த (= ஊன்றிய) வினையாக, வினைத்தொகைப் பெயராக, செயினம் பார்க்கும். பாடுநர், ஆடுநரைப் புரக்கும் செயலை மெய்யியல்வழி செயினமும் அற்றுவிகமும் இருவகையிற் பார்க்கும் வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். அது நெடிய புலனம்; எனவே தவிர்க்கிறேன்.

பாடுநர்க்கு ஈத்த பல்புகழன்னே = பாடுவோருக்குக் கொடுத்த பல்புகழன்;
ஆடுநர்க்கு ஈத்த பேர் அன்பினனே = ஆடுவோர்க்குக் கொடுத்த பேரன்பினன்;

அறவோர் என்போர் அறநெறியை நாடுவோர். அறமென்ற சொல்லைப் பற்றி ஏராளமான விளக்கங்கள் வெவ்வேறு பார்வைகளிற் தமிழிற் கூறப்பட்டு விட்டன. ஆய் கோல் என்பது எதையும் சீர் தூக்கிப் பார்க்கும் கோலாகும். ”வளையாச் செங்கோலைக் கையில் வைத்துள்ள அரசன் யார்பக்கமும் வளையாது தன்னாட்சியில் நேர்மையைக் கடைப்பிடிப்பான்” என்றபொருளில் அச்சொல் ஆளப்படுகிறது. ஆட்சியிற் தொடர்ந்திருக்க வேண்டிய தொழில் ஆய்தலாகும். ”அறவோர் புகழ்ந்த ஆய்கோலன்னே” = அறவோர் புகழ்ந்த, எதையும் ஆய்ந்தறியும் செங்கோலன்

திறவோர் என்பது வெவ்வேறு புலங்கள், கலைகளிற் தேர்ச்சியும், திறமும் பெற்றவரைக் குறிக்கும். இவரைத்தான் experts என்று இக்காலத்தில் ஆங்கிலத்திற் சொல்லுகிறார். இக்காலத்திற் திறனை smartness க்கு ஈடாகச் சிலர் பொதுப்படப் புழங்குகிறார்; smart phone என்பதைத் திறன்பேசி என்றும் வழங்கத் தலைப்படுகிறார். ஆழ்ந்தோர்ந்தால் இரண்டும் வேறானவை. smartness என்பது ”எது வேண்டும், வேண்டாம்?” என்பதைப் பிரித்தறியும் தன்மையாகும்; தன்னளவில் நல்லது கெட்டது பிரித்தறியும் தன்மை. இதை சமர்த்தெனும் சங்கதச்சொல்லாலும் அழைப்பர். திறன் (capability) என்பது குறிப்பிட்ட புலத்தில் நுண்மாண் நுழைபுலம் காட்டுவதாகும். smart phone  ஐத் தெளிதிறன் பேசி அல்லது சூடிகை பேசி என்பதே சரியாக இருக்கும். இங்கே ”திறவோர் புகழ்ந்த திண் அன்பினனே” என்பது ”திறமுடையோர் புகழ்ந்த திட அன்பினன்” என்ற பொருள் கொள்ளும்.

சாயல், இங்கே சாய்மானம் என்று பொருள்படும். சங்ககாலக் குமுகாயம், ஆணாதிக்கக் குமுகாயமாக மாறிவிட்டது. தொடக்கத்திலிருந்த தாய்வழி மரபுகள் ஒருசில இடங்களிற் தொடர்ந்தாலும், பெண் என்பவள் மெல்லியள்; கொடிபோன்றவள். அவள்சாய ஆண்தோள் வேண்டுமென்ற எண்ணம் சங்க காலத்திற் தோன்றிவிட்டது. சாயலிற்கு நிறம், அழகு, தோற்றுருவம் போன்ற பொருட்பாடுகள் சரி வராது. மகளிர் சாயல் = மகளிர்(க்குச்) சாய்மானம், அதே போல மல்>மள்>மயி>மை>மைந்து= வலிமை என்று பொருள்கொள்ளும். மைந்தர்க்கு மைந்து = வலியோர்க்கு வலி,

துகள் என்பதற்குத் ”தூள், பூந்தாது, குற்றம்” போன்ற பொருட்பாடுகளைக் கூறுவார். இங்கே “துகளறு” என வருவதாற் குற்றம் (blemish) என்ற பொருளே சரியாகப் பொருந்தும். துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில் = குற்றமற்ற கல்வியில் உயர்ந்தவருக்கான புகலிடம்; அனையன் என்னாது = அத் தன்மையன் (எம் தலைவன்) என்றுசொல்லாது; அத் தக்கோனை நினையாக் கூற்றம் = அத்தகையோனை நினையாத கூற்றம்; நனந்தலை உலகம் அரந்தை தூங்க= அகன்ற உலகின் வருத்தம் கூடும்படி; இன்னுயிர் உய்த்தன்று= (அவன்) இன்னுயிரைக் கொண்டுபோனது.

 ”வாய்மொழிப் புலவீர்” என்றவிளி கூர்ந்து கவனிக்கவேண்டிய ஒன்றாகும். இத்தொடரின் 10ஆம் பகுதியில், ”பாணரை முந்தையர், படியாதவர், தான் தோன்றி” என்றும், ”புலவரைப் பிந்தையர்; படித்தவர், கற்றுச்சொல்லி” என்றும் தனித்தனியாகப் பார்க்கும் இடதுசாரித் தமிழறிஞர் விதப்பான தேற்றங்களை எடுத்துப்புகல்வதாகச் சொன்னேன். ”புலவர் பாணரைப் போல்மமாக்கிப் பாடி யுள்ளார்” என்றுஞ் சில தமிழறிஞர் சொல்லப்புகுவார். ”பிசிராந்தையார் புலவரா, பாணரா?” என முடிவுசெய்வது கடினமெனில், ”பொத்தியார் புலவரா, பாணரா?” என்பதும் கடுங்கேள்வி தான்.. ஆழ்ந்துபார்த்தால், இருவருமே எனக்குப் புலவராயும் பாணராயுந் தெரிகிறார்.

”பாணர் என்பார் நிகழ்த்து கலையாளர்” என்று குமுகவியல் ஆய்வாளர் பக்தவத்சல பாரதி சொல்வார். எனக்குப் புரிந்தவரை பாணர்/புலவர் என்ற பிரிப்பு ஆராய்ச்சியாளரின் தற்குறிப்பேற்றமாகவே தெரிகிறது. ”பாடியவன் பாணன் என்றும், புலந்தவன் புலவன் என்றுமே வரையறையாற் சொல்ல முடியும். பாணன் புலவனாய்ப் புலந் தெளியலாம். புலவன் பாணனாய்ப் பாடவுஞ் செய்யலாம். பாணரோ, புலவரோ, இருவருமே வளமை, பணம், காசு என்பதிற் தடுமாறிப் போயிருக்கிறார். இங்கே “வாய்மொழிப் புலவீர்” என்பது பாணரைக் குறிக்கும் விளியாகும். இதை மாற்றிவைத்து “படிப்புமொழிப் பாணரே” என்று புலவரைச் சொல்லமுடியுமோ?

பாணரோடு, பொருநர், கோடியர், கூத்தர், அகவர், இயவர், கண்ணுளர், துடியர், கடம்பர், பறையர், கிணையர், குயிலுவர், வயிரியர், விறலியர், மதங்கியர் என்று பல்வேறு நிகழ்த்து கலைக்காரரை சேர்த்துச் சொல்லமுடியும். பண்ணைப் பண்ணுவார் பாணர்; பொருந்துவார் பொருநர்; கோடு = ஊதுகொம்பு; கோடுவார் கோடியர்; குல்>குத்து>கூத்து. குத்துவார் கூத்தர்; அகவுவார் அகவர்; இயைவார் இயவர்; கண்ணுதல் = பொருத்துதல், கட்டுதல். கட்டுவார் கண்ணுளர்; துடிப்பது துடி, எனவே துடியர்; குடம்>கடம் = குடமுழா; கடத்தை அடிப்பவர் கடம்பர்; பறை = தாளக் கருவி; பறைவார் பறையர்; கிணை என்பது தாளக்கருவியே, கிணையர்; குயிலுவர் = கூவுவார்; கருவி வாசிப்போர்; வயிர் = மூங்கில் கருவி’ வயிரியர்; விற>விறல்>விறலி = உள்ளக்குறிப்பிற் தோன்றி உடம்பில் வேறுபாடு காட்டுவோர் விறலியர்; மதங்கம் = இக்கால ம்ருதங்கம் அன்று மதங்கமென்றே சொல்லப்பட்டது, மதங்கியர் மதங்கம் வாசிப்போர்.

கெடுவில் நல்லிசை சூடி = கேடிலா நற்புகழ் சூடி; நடுகல் ஆயினன் புரவலன் எனவே.= நடுகல்லாயினான் புரவலனென்று; பைதல் ஒக்கல் தழீஇ அதனை = வாடும் சுற்றம் தழுவி அதனை; வைகம் வம்மோ  = புலர்த்துவோம், வருவீரா?

பாட்டின் மொத்தப் பொருள்:

பாடுவோருக்குக் கொடுத்த பல்புகழன்,
ஆடுவோர்க்குக் கொடுத்த பேரன்பினன்,
அறவோர் புகழ்ந்த, ஆயும் செங்கோலன்,
திறமுடையோர் புகழ்ந்த திட அன்பினன்,
மகளிர்(க்குச்) சாய்மானம் (ஆனவன்),
வலியோர்க்கு வலி(யானவன்),
குற்றமற்ற கல்வியால் உயர்ந்தோர்க்குப் புகலிடம் (ஆனவன்),
அத்தன்மை (உடை)யவன் (எம் தலைவன்) என்று சொல்லாது,
அத்தகையோனை நினையாத கூற்றம்
அகன்ற உலகின் வருத்தம் கூடும்படியாக,
(அவன்) இன்னுயிரைக் கொண்டு போனது.
வாய்மொழிப் புலவரே!
கேடிலா நற்புகழ் சூடி நடுகல்லாயினான் புரவலனென்று
வாடும் சுற்றம் தழுவி
அதனைப் புலர்த்துவோம், வருவீரா?

பாட்டைப்பாடிய பொத்தியார் செயின நெறியினரோ, அற்றுவிக நெறியினரோ அல்லர். ஆனால் சோழனோடு இழைந்தவர். அவனுக்காக உயிரையும் கொடுக்கத் தயங்காதவர்.  அடுத்த பாடலைப் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

Friday, October 19, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 12

அடுத்து புறம் 220 ஆம் பாடலைப் பார்ப்போம். இதுவும் பொதுவியல் திணையைச் சேர்ந்ததே. துறை முன்னதுபோற் கையறு நிலையாகும். பெருங்கோக்கிள்ளி இறந்தபின் அவனுடலை இடுகாட்டில்  அடக்கஞ் செய்து, எல்லோருந் திரும்பி வந்தபின், பொத்தியார் கலங்கிப் பாடுகிறார். ”யானை கட்டுங் கம்பம் யானையின்றித் தனித்ததுபோல் இக்கூடம் வெறிச்சிட்டுக் கிடக்கிறதே? யானைபோல் இருந்தவன் போய்விட்டானே?” என்கிறார்.

அதற்குமுன் ஒரு சிறிய இடைவிலகல். இப்பாட்டுத் தொகுதியிற் சோழனைக் குறிக்கும் பெயர்களான ”கோப்பெருஞ் சோழன், பெருங்கோக் கிள்ளி, பொலம் தார்த் தேர்வண் கிள்ளி” என்று எல்லாமே அடைகள் சேர்ந்த பொதுப்பெயர்கள் ஆகும். சோழனின் விதப்பான இயற்பெயர் என்னவென்று நமக்கு எங்குமே தெரியவேயில்லை. இப்படிப் பொதுப்பெயர், அடைப்பெயர், பட்டப் பெயர்களையே விளித்துக் குறிப்பிடுவது தமிழரின் பல்லாண்டுப் பழக்கம். [“பாவாணரெ”ன்ற பட்டப்பெயரைக் கண்டு வெதும்பி எரிச்சற்பட்டு தமிழ் வெறுப்பாளர் ஒருவர் ”ஞானமுத்து தேவநேயன்” என்ற இயற்பெயரால் அழைக்க வேண்டும் என்று இணைய மடற்குழுக்களிற் கொஞ்சகாலம் அடம்பிடித்தார். தமிழிலக்கியம் ஆழப்படிக்காத அவர் ”ஆதன், இரும்பொறை, கிள்ளி, சென்னி, மாறன், செழியன்” என்ற பெயர்களைக் கண்டு என்ன சொல்லியிருப்பாரோ தெரியவில்லை. ஏனெனில் இவை ஒன்று கூட இயற் பெயரில்லை.]

பொத்தியார் என்பதும் இயற்பெயராய்த் தோற்றவில்லை. ”நார்மடி, சீலை, ஒரு பழைய சோழநகர், மடல்விரியா வாழைப்பூ, சோளக்கதிர், தவசக்கதிர், மணி வகை, தோலுரியாப் பனங்கிழங்கு, அண்டம், பொது” என்று பொத்திக்குப் பொருள்சொல்வர். "வாழைப்பூ, பனங்கிழங்கு, சோளக்கதிர், தவசக்கதிர், மணிவகை, அண்டம் வரால், பொது" போன்றவை மாந்தப்பெயருக்கு ஒத்து வராது; ”நார்மடி, சீலை, பழைய சோழநகர்” என்றவை ஒத்துவரலாம். உடம்பைப் பொத்துவது பொத்தி என்று உணர்ந்தால் பொத்தி சீலையை, புடவையை உணர்த்துவது புரியும். உறையூர்க் கூறை(ப்புடவை)யின் பெருமை 20 ஆம் நூற்றாண்டு முன்பாதியிலும் இருந்தது. சிராப்பள்ளி நெசவாளர் உறையூர், புத்தூர் போன்றவிடங்களில் இன்றுங் கணிசமானவர். பொத்தியூரே உறையூருக்கு அடுத்துள்ள புத்துரானதோ என்ற ஐயம் எனக்குண்டு. (பொத்திகளைச் செய்வது பொத்தியூராகி, பொத்தியூரார் பொத்தியார் ஆகலாம்; அன்றிப் பொத்திகளை நெய்பவர் பொத்தியாராகலாம்.)

பதிற்றுப்பத்து 9 ஆம் பத்தின் பதிகத்தால், இவ்வூகத்திற்கு வலுக்கிடைக்கும். குட்டுவன் இரும்பொறைக்கும், மையூர்(>மைசூர்)க்கிழான் வேள்மகள் அந்துவஞ் செள்ளைக்கும் பிறந்த இளஞ்சேரல் இரும்பொறையின் சீர்த்திகளை,  . 

வெருவரு தானையொடு வெய்துறச் செய்துசென்று
இருபெரு வேந்தரும் விச்சியும் வீழ
அருமிளைக் கல்லகத்து ஐந்தெயில் எறிந்து
பொத்தி யாண்ட பெருஞ்சோ ழனையும்
வித்தை யாண்ட இளம்பழையன் மாறனையும்
வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று

என்று வரிசைப்படுத்துவர். இதன்படி இளஞ்சேரல் இரும்பொறை, சோழ, பாண்டிய வேந்தரும், விச்சியானும் வீழ 5 எயில்களை அழித்திருக்கிறான். இதற்கடுத்துப் பொத்தியாண்ட பெருஞ்சோழனையும், வித்தையிற் சிறந்த இளவல் பழையன் மாறனையும் வெல்கிறான். இதைப் படிக்கும்போது சோழ வேந்தனும், பொத்தியாண்ட பெருஞ்சோழனும் வெவ்வேறென்பது உறுதி ஆகிறது. (சோழ வேந்தனைக் காட்டிலும் அகவைமூத்த பங்காளி இப்பெருஞ் சோழன் ஆகவேண்டும். கிட்டத்தட்ட எல்லா உரையாசிரியருமே இப்பெருஞ் சோழனைக் கோப்பெருஞ்சோழனோடு போட்டுக் குழப்பியது எப்படியென எனக்கு விளங்கவில்லை.) சோழவேந்தன் புகாரிலோ, உறையூரிலோ இருப்பவன். பொத்தி, உறையூருக்கு அருகிலென்றால் சோழவேந்தன் உறையூரில் இருக்கமுடியாது; இளஞ்சேரல் இரும்பொறைக் காலத்தில் சோழ வேந்தன் புகாரிற்றான் இருந்தான் போலும். இப்படியோர் இயலுமையே 9 ஆம் பத்திற்குப் பொருந்துகிறது.

உறையூருக்கருகில் உள்ள இற்றையூர்களைப் பார்க்கின், புத்தூரின் பொருத்தம் புரிந்தது. 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலர் அரசுப் பதிவுகளில் Poothoor என்றே இதன் பெயர் இருந்திருக்கிறது. உறையூர் வெக்காளியம்மன் கோயில், அஞ்சு வண்ணர் கோயில், கமலவல்லி நாச்சியார் கோயில் போன்றவற்றின் கல்வெட்டுக்களில் புத்தூரின் பழம்பெயர் இருக்கிறதா என்றாயவேண்டும்.  (இன்னொன்றும் சொல்லவேண்டும். விசயாலனுக்கு சற்று முன்னால், பாண்டியன் கடுங்கோன் காலத்திலுங் கூட பெருஞ்சோழர் கும்பகோணத்திற்கு அருகிலேயே இருந்திருக்கிறார். அதேபொழுது  பொத்தப்பி சோழர் என்பார் ரேநாட்டுச் சோழர் என்று சொல்லி இற்றை சித்தூர் மாவட்டம் தள்ளிப் பழைய தொண்டைமண்டல நிட்சியில் இருந்திருக்கிறார். இந்தப் பொத்தப்பிச் சோழரும் பொத்தியூர் (உறையூருக்கு அருகிலுள்ள ஊர்) பெயர் கொண்டவரோ என்ற எண்ணமும் எனக்குண்டு. பொத்தப்பி - பொத்தியூர் தொடர்பை ஆய வேண்டும். இனிப் பாட்டிற்குள் போவோம்.     

பெருஞ்சோறு பயந்து பல்யாண்டு புரந்த
பெருங்களி றிழந்த பைதற் பாகன்
அதுசேர்ந் தல்கிய வழுங்க லாலை
வெளில்பா ழாகக் கண்டுகலுழ்ந் தாங்குக்
கலங்கினே னல்லனோ யானே பொலந்தார்த்
தேர்வண் கிள்ளி போகிய
பேரிசை மூதூர் மன்றங் கண்டே

                                 - புறம் 220

இப்பாடலின் விளக்கம் கூடுவதற்காக, பாடலுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டுக் கீழே கொடுத்திருக்கிறேன்.
   
பெரும் சோறு பயந்து பல் யாண்டு புரந்த
பெரும் களிறு இழந்த பயிதல் பாகன்
அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை
வெளில் பாழாகக் கண்டு கலுழ்ந்தாங்கு
யானே
பொலம் தார்த் தேர் வண் கிள்ளி போகிய
பேர் இசை மூதூர் மன்றம் கண்டே
கலங்கினேன் அல்லனோ

இனி ஒருசில சொற்பொருள்களையும் குறிப்புகளையும் பார்ப்போம்.

பெருஞ்சோறு என்பது “பெரிய சோற்றுருண்டை, கோயில்களிற் கொடுக்கும் ”ப்ரசாதம்”, நீத்தார்கடன் நாட்களில் (= முன்னோருக்குப் பிண்டங் கொடுக்கும் திவச நாட்களில்) கூடுவோருக்கு அளிக்கும் விருந்து” என்று வெவ்வேறு பொருள்களிற் சங்க இலக்கியங்களிற் பயிலும். இச் சொற்பொருளைப் பல உரையாசிரியருஞ் சரியாக உள்வாங்கிக் கொண்டதில்லை. பெருஞ்சோற்று உருண்டை என்பது அதன் பரும அளவாற் கொண்ட பொருள். “ப்ரசாதம்” என்பது பெருஞ்சோற்றின் நேரடிச் சங்கத மொழிபெயர்ப்பு; தெய்வப் படையலென்பதால் “பெருமெ”னும் அடைபெற்று விதந்தது. “நீத்தார் கடன் விருந்து என்பது” பெரியோர் நினைவுகருதிச் செய்யும்விருந்து என்ற பொருளில் எழுந்தது. இங்கு யானையைத் தொடர்புறுத்துவதால் “பெருஞ் சோற்றுருண்டை” என்பதே பொருந்தும். பயத்தல்= கொடுத்தல். பயன்/பலன்  என்ற பெயர்ச்சொற்கள் பயிலுமளவிற்கு இவ் வினைச்சொல் இக்காலத் தமிழிற் பயன்படாதிருக்கிறது; புரத்தல்= காப்பாற்றல். ”பெரும்சோறு பயந்து பல்யாண்டு புரந்த” என்பதற்குப் “பெருஞ்சோற்றைக் கொடுத்துப் பல்லாண்டு புரந்த” என்பதையே பொருளாகக் கொள்ளலாம்.

பயிதல் என்பது படிதல், வாடுதலாகும். இச்சொல்லைப் புறம் 212 இல் பார்த்திருக்கிறோம். படி>பயி>பசி என்றும் சொற்றிரிவு ஏற்படும். பயிதற் பாகன்= வாடும் பாகன், சோகமுற்ற பாகன். ”பெரும் களிறு இழந்த பைதல் பாகன்” என்பது “பெரும் யானையை (இப்போது) இழந்து வாடும் பாகன்” என்ற பொருள்கொள்ளும். அல்குதல்= தங்கல். அழுங்கல்= ஆரவாரம்; பொதுவாகக் காட்டுயானைகள் குடும்பம் குடும்பமாயிருக்கும். வெவ்வேறு குடும்பங்களைப் பிடித்து ஒரே கூடத்திற் கட்டிப்போடும் போது ஒன்றிற்கு ஒன்று ஆரவாரஞ் செய்து தம் இருப்பையும், புலத்தையும் உறுதிசெய்யும்.

யானைக்குடும்பங்கள் பலவுள்ள கூட்டம் ஆரவாரத்தோடிருப்பது இயல்பே யாகும். ”அதுசேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை”= ”அவை சேர்ந்து தங்கிய ஆரவாரக்கூட்டத்தில்” . வெளில் என்பது யானைகட்டும் தூண், கம்பம் அல்லது தறி. பாழ்= வெறுமை, வெற்றிடம், சுன்னம், சுழியம் (zero) என்பதற்குப் பாழ் என்பதையே பரிபாடலிற் பயன்படுத்துவர். புள்ளியின் நீட்சியாய்ப் புள்ளியம்> பூழியம்>பூஜ்யம் என்பதும் பாழையே குறிக்கும். இப்படி zero விற்கு இணையாய் 4 வேறு தமிழ்ச்சொற்கள் நம்மிடம் இருக்கையில் அவற்றைவிடுத்துத் திரிவுச் சொல்லான பூஜ்யத்தையும், பூச்சியத்தையும் நாமேன் பயன்படுத்துகிறோம்? ஆழ ஆய்ந்தால், சுழியக்கருத்தீடு தெற்கிருந்து வடக்கே போனதே. கலுழ்தல்= கலங்குதல்; ”வெளில் பாழாகக் கண்டு கலுழ்ந்தாங்கு” = (யானை கட்டும்) கம்பம் பாழாயிருக்கக் கண்டு கலங்கியதுபோல.

வண் கிள்ளி = வள்ளன்மை காட்டுங் கிள்ளி. ”பொலம் தார்த் தேர் வண் கிள்ளி” என்பதை “பொன்மாலைகள் வேய்ந்த தேரிற் (பயணித்து) வள்ளன்மை காட்டுங் கிள்ளி” என்று சொல்லலாம். தமிழில் எல்லாவிடங்களிலும் விதப்புச்சொல்லை ஆளுவதில்லை. இடம், பொருள், காலம் கருதிப் பொதுமைச்சொல்லையே விதப்பிற்கு நிகராய்ப் பலவிடங்களிற் பயன் படுத்துவது உண்டு. ஓர் இறப்பு நிகழ்விற்குப் போகிறோம். அப்பொழுது ஒருவருக்கொருவர் “இப்படிப் போய்ச்சேருவாருன்னு நான் நினைக்கவே இல்லை” என்று சொல்கிறோமல்லவா? போகிய= போய்ச்சேர்ந்த, இறந்த. ”பொலம் தார்த் தேர் வண் கிள்ளி போகிய” என்பதற்குப் “பொன்மாலைத் தேரில் வள்ளன்மை காட்டும் கிள்ளி போய்ச்சேர்ந்த” என்று பொருள் சொல்லலாம்.

அக்காலத்தில் ஒரு மரத்தடியிற்றான் ஊர்மன்றங்கள் கூடும். பொதியில், அம்பலம், மன்றம் என்பதெல்லாம் ஒருபொருட் சொற்கள். திருவரங்கத்தின் அடையாளமான அம்மரத்தடியில் இந்த ஊர்மன்றம் இருந்திருக்கலாம். மூதூர் மன்றமென்பது பல்லாண்டுகளாய்க் கூடிய ஊர்மன்றத்தைக் குறிக்கிறது பேரிசைப் பட்ட முதூரென்பது பெரும்புகழ் கொண்ட மூதூரென்று பொருள் கொளும். ”பேர் இசை மூதூர் மன்றம் கண்டே” = ”பெரும்புகழ் மூதூர் மன்றத்தைக் கண்டு”

பாட்டின் மொத்தப் பொருள்:

பெருஞ்சோற்றைக் கொடுத்துப் பல்லாண்டு புரந்த பெரும் யானையை
(இப்போது) இழந்து வாடும் பாகன் அது சேர்ந்து தங்கிய ஆரவாரக் கூடத்தில்
(யானை கட்டும்) கம்பம் பாழாயிருக்கக் கண்டு கலங்கியது போல
பொன்மாலைத் தேரில் வள்ளன்மை காட்டும் கிள்ளி போய்ச்சேர்ந்த
பெரும்புகழ் மூதூர் மன்றத்தைக் கண்டு யான் கலங்கினேன் அல்லனோ 

மூதூர் மன்றத்தைக் கண்டு கிள்ளி இவ்வுலகை விட்டுப் போனதையெண்ணிப் பொத்தியார் கலங்குகிறார், நண்பன் பிரிவைத் தாங்க இயலாத் துக்கம். களிறு கட்டிய தறியின் வழியாய் வெளிப்படுகிறது.

அன்புடன்,
இராம.கி.  .   

Thursday, October 18, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 11

அடுத்து, காலவரிசைப்படி, புறம் 217 ஐ விட, 219 ஐயே முதலிற் பார்க்க வேண்டும். இதுவும் பொதுவியற் திணைதான். ”சோழன் வடக்கிருந்து பல நாட்களாகியதால் அவனுடம்பு துரும்பாய் வற்றிப் போனது. இனி யார் சொல்லியும் கேட்கப்போவதில்லை”, என்பதாற் கையறுநிலைத் துறையானது. கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார் பாடிய இக்குறும்பாட்டிற் சோழன் வடக்கிருந்த இடத்தின் அடையாளமும், உயிர்துறப்பது நெருங்கியதுந் தெரிகிறது. சதுக்கமென்பது ஒரு quadrangle or crossroad, 4 சாலைகள் சேரும் இடத்தின் அகன்றவெளி. சதுக்கங்களே பெருநகரங்களின் அடையாளம் ஆனதாய்ச் சிந்துவெளிக் கீற்றுகளைப் படிக்கமுற்படும் ஐராவதம் மகாதேவன் கூறுவார். இக்கால முச்சந்தி நாற்சந்திகளிற் பிள்ளையார் சிலைகள் இருப்பது போல் அக்காலப் பெருநகரச் சதுக்கங்களில் பூதத் திருமேனிகள் இருந்திருக்கலாம். (புகாரிலும், வஞ்சியிலும் இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன. மதுரையில் இருந்ததற்கு இன்னும் ஆய்ந்து பார்க்கவேண்டும்.) 

தவம் மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்
அவம் மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர்
அறை போகு அமைச்சர் பிறர் மனை நயப்போர்
பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளர் என்
கைக்கொள் பாசத்துக் கைப்படு வோர் எனக்
காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பிப்
பூதம் புடைத்து உணும் பூத சதுக்கமும்,

என்று சிலப்பதிகாரம் இந்திரவிழவு ஊரெடுத்த காதை 128-134 வரிகளிற் சொல்லப்பெறும். இதைத் தொடர்ந்து வரலாற்றாசிரியர் ந. சுப்பிரமணியன், "Sangam Polity" என்ற தனது நூலின் பக்கம் 383-384 இல் ஓர் அருமையான கருது கோளைச் சொல்லியிருப்பார்.

The Ganesa cult has been considered by some scholars to be of Mahratta origin. V.R.Ramachandra Dikshitar says," While (S)kanda is a Tamilian deity identified later on with Kaartikeya, Ganesa must have been imported from Western India." While it is true that the Skanda cult and Subrahmanya worship branch off from the original Murugan worship of Tamilaham, it is doubtful if the Ganesa cult had an exclusively West Indian origin. For it seems, on close scrutiny, to be a South Indian Deity; at least the evolution of the elephant God worship in Tamilaham seems to have been purely local and native process. It is true that 'Ganesa' is not particularly mentioned either by that name or any of its modern equivalents in the Sangam literature; but it seems quite proper to trace him back to the Prum Chadukkattu Bhutam of Puhar or Vanji. In Puhar there was the Chadukka Bhutam which punished all offenders and had a paasam or rope in its hand; it gave 'Vigna' to those who offended and protected from 'Vigna' those who behaved; so it had 'paasahasta' and was 'Vignaraja; it was the demon at the crossroad distinguished from Gods who were housed in temples. Vignesvara, too, punished the offenders and protected the good; he has a paasam in HIs hands and He is generally on the cross-road. The Demon on the cross-road was 'Bhuutha-Naathan', a literal equivalent of 'Bhuutha' or 'Gana Naathan' or 'Ganapati'. The elephant face in fact indicates a South Indian orgin, and the pot-belly suggests an ancestry traceable back to the Demons. There was a Sangam poet called 'Perchadukkattu Bhuutha Nathanar' and it is known that Chera king Ilam Cheral Irumporai instituted the worship of the "Chadukkattu Bhuutham" in Vanji (the Chera capital) and also introduced the mantric form of worship distinguished from the primitive form of worship. That was perhaps the beginning of the spread of the Ganesa cult. Even as Murugan of the hills became the Son of Sivan, the Bhuutha Naathan on the cross-road also became the Son of Sivan, for it was necessary for the Great Gods to be very closely related to the very Great God, Sivan, who was considered to be God par excellence of the Tamils. The worshio of the Chadukkattu Bhuutha was accompanied by offering fermented toddy or honey; it is, in the modern day, substituted by the unfermented sweet coconut juice, which is an absolutely necessary offering to 'Ganesa'.

பேரா. ந,சு.வின் இக்கூற்று நம்மை வியப்போடு ஓர்ந்துபார்க்க வைக்கிறது. கருவூரென்பது கொங்குக் கருவூரா, குடகுக் கருவூரா என்பதில் இன்னுங் குழப்பமுண்டு. இந்த 4 வரிக் குறும்பாட்டு படிக்க எளியதுதான். கூடவே செயின, அற்றுவிகப் பார்வையிற் படிப்பதும் நல்லது.
 
உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல்
முழூஉ வள்ளுர முணக்கு மள்ள
புலவுதி மாதோ நீயே
பலரா லத்தைநின் குறியிருந் தோரே.

                        - புறம் 219
இப்பாடலின் விளக்கம் கூடுவதற்காக, பாடலுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டுக் கீழே கொடுத்திருக்கிறேன்.

முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள!
ஆற்றுக் கவலை உள் புள்ளி நீழல்
நின் குறியிருந்தோரே பலரால்
நீயே அத்தை புலவுதி மாதோ

இனி ஒருசில சொற்பொருள்களையும் குறிப்புகளையும் பார்ப்போம்.
 .
மாந்தவுடம்பென்பது இற்றைப் புரிதலின்படி, கழியுடற் கட்டகம் (skeletal system), தசையுடற் கட்டகம் (Muscular system), குருதயநாளக் கட்டகம் (Cardiovascular system), செரிமக் கட்டகம் (Digestive system), சுரப்புநீர்க் கட்டகம் (Endocrine system), நரம்புக் கட்டகம் (Nervous system), உயிர்மூச்சுக் கட்டகம் (Respiratory system), நோயெதிர்க் கட்டகம், (Immune system), ஊறுநீர்க் கட்டகம் (Lymphatic system), அமுரிநீர்க் கட்டகம் (Urinary system), உயிர்புதுக்குக் கட்டகம் (Reproductive system), தொகுமக் கட்டகம் (Integumentary System) என்று பல்வேறு கட்டகங்களால் ஆனது. வடக்கு இருக்கும் நோன்புநாட்கள் கூடக்கூட இக்கட்டகங்களில் ஒவ்வொன்றும் நோற்பாளரின் உடல்வேதியலுக்குத் தக்கக் கொஞ்சங்கொஞ்சமாய்ச் செயலிழக்கும்.

வடக்கிருத்தலைப் ”பட்டினிகிடந்து தன்னைக் கொல்லுதல்” என மேலையர் பார்வையில் முடிவுசெய்வது மேலோட்டமான கொச்சைக் கூற்றாகும். உண்மையில் வடக்கிருப்பவர், உணர்ச்சிவயப்பட்டு இம்முடிவு எடுப்பதில்லை. தன்வாழ்விற் செய்யவேண்டியவற்றைச் செவ்வனே முடித்து, இனி வாழ்வைத் தொடர்வதிற் பொருளில்லை என்றெண்ண மேலீட்டால், பிறவிச் சுழற்சியை ஏதோவகையில் ஊக்கி விட நினைப்பதே வடக்கிருத்தல் ஆகும். செயினப்புரிதலின்படி தீவினையைக் கூட்டாது நல்வினை தேடுவதே சல்லேகனையாகும். அற்றுவிகப் புரிதலின்படி 8,40,000 பிறவிகளின் (இவ் வெண் எப்படி வந்ததென்று எனக்குத் தெரியாது. ஆனால் அற்றுவிகக் குறிப்புநூல்களில் இந்த எண் இருக்கிறது. செயினம், சிவம், விண்ணவம் போன்றவையும் இவற்றை ஏற்றுள்ளன. புத்தம் முதலில் ஏற்றுப் பின் மறுத்திருக்கிறது.)

[இந்த எண்ணின் இயலுமை எப்படி வந்ததென்ற என் ஊகத்தை இங்கே சொல்வதில் தவறில்லை. பழம்மாந்தரின் பட்டறிவும் சமய நம்பிக்கையுங் கூடக்கூடக் கற்பிதங் கொஞ்சங்கொஞ்சமாய் விரிந்தது போலும். முதலில் தாமிருக்கும் உலகத்தை நடுவண் உலகென்றும் (மத்ய லோகம்), தமக்கு மேலுள்ள உலகத்தை மேலோர்/உயர்ந்தோர் உலகென்றும் (ஊர்த்வ லோகம்), தமக்குக் கீழ்ப்பட்ட உலகைப் பாதல உலகென்றும் (அதோ லோகம்) உருவகித்தவர், கற்பிதங் கூடியபோது அரும்பெறல் (சித்தம்) உலகு, உயர்ந்தோர் உலகு, நடுவண் உலகு, 4 வகைப் பாதல உலகங்கள் என ஏழு ஆக்கியிருக்கிறார்.. இன்னும் கற்பிதம் விரிந்தபோது, நடுவணுக்குமேல் அரும்பெறலும், 5 வித உயர்ந்தோர் உலகங்களும், நடுவணுக்குக் கீழே 7 வித பாதல உலகங்களும் இருபதாய்ச் சொல்லப்படுகின்றன. இதுவே ஈரேழு பதினாலு உலகமாகிறது. ஒவ்வோரு உலகிலும் 1, 2, 3, 4, 5, 6 அறிவுகொண்ட உயிரிகள் கற்பனை செய்யப்படுகின்றன. ஒவ்வொரு உயிரிவகையிலும் ஓரிலக்க விதப்பு உயிரிகள் என்று கொண்டால், 14*6*1,00,000 = 84,00,000 உயிரிகள் (அல்லது பிறவிகள்) என்றாகும். மறந்துவிடாதீர்கள் இது என் ஊக விளக்கம். இதை நான் எந்த நூலிலும் காணவில்லை.]

84,00,0000 இலக்கம் பிறவிகளை வாழ்ந்தே தீரவேண்டுமென்று அற்றுவிகஞ் சொல்லும். ஆனால் ஒவ்வொரு பிறவியின் நடப்புக்காலத்தை (ஆயுளை) விரைவுபடுத்தலாமென அற்றுவிகம் சொன்னதால், அதற்கொரு வழியாய் வடக்கிருத்தலாகும். செயினநெறியோ தீவினை குறைத்து நல்வினை கூட்டுவதாற் பிறவிக்காலம் குறைப்பதோடு, பிறவி எண்ணிக்கைகளையுங் குறைக்கலாமென நம்பும். எனவே இவ்விரு நெறிகளும் வடக்கிருந்தலை ஏற்கும். அதேபொழுது செயினமரபில் எல்லோரும் சல்லேகனையைக் கைக் கொள்ள முடியாது. குறிப்பாகச் சாவகவழியினர் பின்பற்றப் பல கட்டுப்பாடுகள் உண்டு.

”இடையூறு ஒழிவில்நோய் மூப்பிவை வந்தால்
கடைதுறத்தல் சல்லே கனை.”

என்று 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அருங்கலச்செப்பு சொல்லும். இடையூறு (=பொறுக்கவியலாது பிறரால் வருந் தொல்லை) என்ற காரணத்திற்றான் சோழனின் வடக்கிருத்தலை வகைப்படுத்தலாம்.  உண்ணாநோன்பின் விளைவுகளை தோல், மயிர், நகம், வியர்வை நாளங்கள் அடங்கிய தொகுமக் கட்டகமும், அதன்கீழ் உடம்பிற்கு உரங்(=வலிமை) கொடுக்குந் தசையுடற் கட்டகமும் நம் கண்ணிற் தோற்றச் செய்கின்றன. உள்ளுரமென்பது தோலுக்கு அடியில் எலும்போடொட்டிய தசைத்தொகுதியாகும். சூடாமணி நிகண்டு, தசையின் இணைச்சொற்களை “ஊன், புலால், புலவு, புண், தடி, புளிதம், தூ, பிசிதம், உள்ளுரம், விடக்கு” என்று காட்டும். ”முழூஉ உள்ளுரம்” என்று இப்பாட்டில் வருவது உடம்பின் முழுத் தசைத்தொகுதியைக் குறிக்கிறது. உலருந் தசையின் நீர்ச்சத்துக் குறைந்து, உடம்பின் இயற்றோற்றம் சுருங்குவதாற் கழியுடற் கட்டகம் தெரியத்தொடங்கும். தொடர்ந்து செரிமக் கட்டகமும், சுரப்புநீர்க் கட்டகமும் சுருங்குவதால், வயிற்றிற் குழிவுகூட ஏற்படலாம். சிறிதுசிறிதாக நீர்நிறுத்தி, வேறெதுவும் உட்கொள்ளாக் காரணத்தால், உடம்புலர்தலே முன்தெரியும் விளைவாகும். உள்>உண்>உண> உணத்தல்>உணங்குதல் என்பது, உலர்தலையுணர்த்தும். உணக்கென்பது உணங்கின் பிறவினைச் சொல்லாகும். தென்பாண்டி நாட்டில் வற்றலையும், கருவாட்டையும் வெய்யிலிற் பரப்பி உலர்த்தலை இன்றும் உணத்தலென்பர். உணக்கும் நிலைக்கு சோழன் வந்துற்றதால் நீர்குடிப்பதை நிறுத்திப் பல நாட்கள் ஆகியிருக்க வேண்டும்.

நாலாவது சொல்லான மள்ளன் என்பது வலிமையுடையவனை, படைத் தலைவனைக் குறிக்கும் பெயராகும், மல்>மள்>மள்ளன். இங்கு அரசன் கோப்பெருஞ்சோழனை அது சுட்டுகிறது. ”முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள!” என்பது ”முழு(வுடம்பு)த் தசையும்வற்றி உலர்ந்துகிடக்கும் மள்ளனே!” என்று பொருள்கொள்ளூம். அதாவது உயிர்துறப்பை நெருங்கிச் சோழன் வந்துவிட்டான். 

அடுத்துக் கவலை என்பது பாதைகளைப் பொறுத்த கலைச்சொல்லாகும். வாயின் ஈரிதழ்களால் ஒரு பொருளைப் பற்றுதலைக் கவ்வுதலென்பர். [பல்லிதழ் இயைய வகாரம் பிறக்கும்-தொல். எழுத் .98]. கவ்வதலிலிருந்து கவட்டி, கவட்டை, கவடி, கவடு, கவண், கவர், கவை எனப் பல தனிச் சொற்களும், அவற்றிலிருந்து கூட்டுச்சொற்களும் கிளைக்கும். ஒரு பாதை இரண்டாய்ப் பிரிவதைக் கவல்கிறது என்பார். இடுப்பு வரை ஓருடம்பாகி, அதன் கீழே 2 கால்கள் பிரிவதைக் கவட்டையென்கிறோம். பாட்டுப் பாடி ஏறி வந்தவனை ஓரணி பிடித்துப்போடும் கவடி (>கபடி) விளையாட்டையும் நாமறிவோம். ஆறொன்று இரண்டாய்ப்பிரிவதை ஆற்றுக்கவலை என்பார். இன்னும் கருத்துச்சிந்தனை கிளைத்து அதைக்கொள்வதா, இதைக்கொள்வதா என மனத்திற் தடுமாறுவதையுங்கூட கவலை என்ற சொல்லால் ஒப்புமை காட்டிச் சொல்கிறோம். இனி சோழன் வடக்கிருந்த இடத்திற்கு வருவோம்.

தலைக்காவிரியிற் பிறந்த பொன்னியாறு உறையூருக்கருகில் திருப்பராய்த் துறை, முக்கொம்புவரை கிளைபிரியாமலே வரும். அதற்கு முன் துணை யாறுகள் மட்டுமே வந்துசேரும்; ஆனால் எதுவும் பிரிவதில்லை. பொன்னி யாற்றுக்கு நடுவில் எத்தனையோ அரங்கங்களுண்டு. (காட்டாக கருநாடகச் சீரங்கப்பட்டினம். இங்குமோர் கோயிலுண்டு. அருத்தது>அறுத்தது அரங்கம்) முக்கொம்பிற்றான் ஒருபக்கம் காவிரியாயும், இன்னொருபக்கம் கொள்ளிடம் ஆயும் முதற்கிளை அல்லது முதற்கவலை விடுகிறது. கூகுள்முகப்பைப் (map) பார்த்தால், நான்சொல்வது புரியும். இங்கே இரண்டாய்ப் பிரிந்து ஒரு அரங்கத்தை எழுப்பிப் பின் கல்லணைக்கருகில் ஒன்றித்து மீண்டும் வெண்ணாறு, காவிரி, கொள்ளிடமெனப் பிரியும். அதற்கப்புறம் பொன்னியாறு தொடர்ந்து 10, 15 கவர்களும், கால்களுமாய் (கவல்>கால்) கவல்ந்துகொண்டே போகிறது. இவ்வளவு கவல்ந்த ஆறு இந்தியாவிலேயே கிடையாதோவெனத் தோற்றுகிறது. பல்வேறு கவர்களைக் .கொண்ட பொன்னியாறு ஒரு மருத நிலத்தானுக்கு கவர்>கவரி>காவரி>காவிரி ஆயிற்று. காவிரி (= காவுகளாய் விரிந்துசெல்லும் ஆறு), காவேரி என்றுசொல்வதெல்லாம் பட்டகையில் (fact) விளையாத பாட்டுக் கற்பனையேயாகும். 

“ஆற்றுக் கவலை உள்” என்பது ஆற்றுக் கவலைக்குள் இருக்கும் நிலப் பகுதியைக் குறிக்கும். இப்பாட்டைப் பாடிய கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூத நாதனார் கூற்றை எடுத்துக்கொண்டால், உறுதியாக இது சிராப்பள்ளிக்கு வடக்கிலுள்ள திருவரங்கத்தையே சுட்டுகிறது. பேரா.க.நெடுஞ்செழியன் இதையென்னிடம் முதலிற் கூறியபோது ”இம்முடிவுக்கு அவர் எப்படிவந்தார்?” என்று கூறவில்லை. ஆனாற் புறம் 219 ஆம் பாட்டை ஒழுங்காகப் புரிந்து கொண்டால் இம்முடிவைத் தவிர வேறெதையும் பெறமுடியாது. பேராசிரியரின் (இடம் பற்றிய) இக்கருத்தை முழுதும் நான் ஒப்புவேன்.  தந்தை-மக்களிடை போர்நடந்த களம் உறையூர்க்கோட்டைக்கு வெளியே தான் இருந்திருக்கவேண்டும். புள்ளி என்பது இங்கு அடையாளமெனப் பொருள் கொள்ளூம். அடுத்துவரும் ”நீழலை”யொட்டி, ஊகித்தால், ”ஆற்றுக்கவலை அடையாளம்” ஒரு மரமாயிருக்கவே வாய்ப்புண்டு.

எல்லோரும் திருவரங்கத்திற் கூடும் ஓர் அடையாள (மரத்து) நிழலில் சோழன் வடக்கிருந்தான். புன்னையும் வெண்நாவலும் பரந்துகிடந்த ஆற்றுத்தீவு அது. (புன்னை திருவரங்கக் கோயிலின் தலமரம். வெண்நாவல் திருநாவற்காவின் (திருவெண்ணாவக்கா>திருவண்ணாக்கா>திருவணாக்கா>திருவானைக்கா ஆகும்) தலமரம். கோப்பெருஞ்சோழன் காலம் என்னவென்று எனக்கு இன்னுந் தெரியவில்லை. ஆனால் ”சிலம்பின் காலம்” நூல்வழியே அரங்கன்கோயில் குறைந்தது கி.மு.80க்கு முற்பட்டது என்றெண்ண வாய்ப்புண்டு. கோப்பெருஞ் சோழன் இதற்குமுன்னே வாழ்ந்திருக்கவேண்டும். பாண்டியன் அறிவுடை நம்பியும் இவன்காலத்தைச் சேர்ந்தவனாவான்.         . 

சோழன் வடக்கிருந்தபோது அவன் குறிக்கோள் தன் பிறவிச்சுழற்சியைக் குறைப்பதேயாகும். ”(காவிரி)யாற்றுக்கவலையின் உள்ளே அடையாள (மர) நிழலில் உன் குறிக்கோளோடு (உடன்) இருந்தவர் பலர் ஆதலால்” என்பது அடுத்த செய்தி. அப்படியெனிற் சோழன்மட்டும் வடக்கிருக்கவில்லையா? இன்னும்பல சாவக வழியார் நோன்பு மேற்கொண்டாரா? - என்ற கேள்விகள் எழுகின்றன. இவ்வளவு சாவகவழியினர் ஒரேநேரத்தில் நோன்பிருப்பதை, ஏறத்தாழ mass suicide போன்றதை, செயினமோ அற்றுவிகமோ கொஞ்சமும் ஏற்றுக்கொள்ளா. (ஆனால் உரையாசிரியர்பலரும் ஏற்றெழுதியிருக்கிறார். தவிர, கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தை நட்பை அழுத்தும் பேராசிரியர் வடக்கிருத்தல், உண்ணாநோன்பு என்பதை அழுத்தத் தயங்குகிறார். பல்வேறு செய்திகளும் பதிவுசெய்யாது போயிருக்கின்றன. இப்பொழுது நம் ஆய்வும் குறைப்பட்டிருக்கிறது) எனவே, ”சோழன் வடக்கிருந்த குறிக்கோளுக்கு உடன்போகி, அணுக்கத் தொண்டர் இருந்தாரெ”னக் கொள்வதே பொருத்தமாகும். No mass suicide. 

”நீ அதை வெறுக்கிறாயோ?- தெரியவில்லையே?” என்ற பொருள்கொள்ளும் அடுத்த வரி இன்னொரு கேள்வியை எழுப்புகிறது  அத்தை= அதை; (இன்றும் சென்னைப்பக்கத்துப் பேச்சுவழக்குச் சொல்); புலவுதல்= வெறுத்தல். மாதோ என்பது ஐயப்படும் கேள்வியுணர்வைக் குறிக்கும் அசைச்சொல். வடக்கிருந்த இடத்தில் கூடியிருந்தவரைப் பார்த்து புலவுவதாய்ப் புலவர் கொள்வது ஒரு விதப் பார்வை. சோழன்பக்கத்து உண்மையல்ல. ஒன்றை மட்டும் உறுதியோடு சொல்லலாம். அளவிற்கு அதிகமான கூட்டம் வடக்கிருக்குஞ் சோழனைச் சுற்றிக் iகூடிவிட்டது. கூடியிருப்பவர் ஏதேதோ தமக்குள்ளே பேசிக் கொள்கிறார். சோழனோ கிட்டத்தட்ட முற்றாகப்பேச்சை நிறுத்திவிட்டான் போலும். அதுகண்டு, ”பலரும் கூடியிருப்பதை அவன் வெறுக்கிறானோ?” என்று புலவர் தன்னுள் எண்ணிக்கொள்கிறார். அங்கிருக்கும் உள்ளமைச் சூழ்நிலை கனத்துப் போயிற்று. The situation has become really grim.

பாடலின் மொத்தப் பொருள்
------------------------------------------
முழு(வுடம்பு)த் தசையும் வற்றி உலர்ந்து கிடக்கும் மள்ளனே! (காவிரி) யாற்றுக் கவலையின் உள்ளே அடையாள (மர) நிழலில் உன் குறிக்கோளோடு (உடன்) இருந்தவர் பலராதாலால் நீ அதை (= கூட்டங் கூடுவதை) வெறுக்கிறாயோ? - தெரியவில்லையே?
-----------------------------------------
அன்புடன்,
இராம.கி.

Monday, October 15, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 10

 இப்பொழுது, காலவொழுங்கு கருதி, அடுத்துவரும் புறம் 217 க்குட் போகாது, புறம் 212 க்குள் போகிறோம். இப்பாட்டின் திணையும் பாடாணே. துறை: இயன் மொழி. உறையூருக்கருகில் கோப்பெருஞ் சோழன் வடக்கிருக்குஞ் செய்தி பாண்டிய நாட்டைச் சேர்ந்த ”சோழக் கிறுக்கன்” பிசிராந்தைக்கு உடனேயே தெரியவில்லை. அவன் சோழனைப்பற்றிப் பிதற்றிக்கொண்டே இருக்கிறான். (பேதையும், பிதற்றலும் தொடர்புள்ள சொற்கள்.) உண்ணாது நோன்ற சோழன் தெற்கத்தி உணவைப்பற்றி ஏக்கத்தோடு பேசியதைச் சென்ற பகுதியிற் பார்த்தோம். இங்கோ, உணவாலும், மதுவாலும் ஒயில் காட்டும் சோழநாட்டுப் பெருமையை, பசிப்பகைச் சிறப்பை, வறள்நாட்டுப் புலவன் பாடுகிறான். உணவு என்றால் அப்படியொரு உணவாம், நல்ல நாள், பெரிய நாளில் மட்டுமே பாண்டிநாட்டானுக்குக் கிடைக்கும் விதப்பான கறியுணவாம்; கூடவே உடம்பைச் சூடேற்றுங் கள். முதலிற் பாட்டைப் படியுங்கள்.   

நுங்கோ யாரென வினவி னெங்கோக்
களமர்க் கரித்த விளையல் வெங்கள்
யாமைப் புழுக்கிற் காமம் வீடவாரா
ஆரற் கொழுஞ்சூ டங்கவு ளடாஅ
வைகுதொழின் மடியு மடியா விழவின்
யாணர் நன்னாட் டுள்ளும் பாணர்
பைதற் சுற்றத்துப் பசிப்பகை யாகிக்
கோழி யோனே கோப்பெருஞ் சோழன்
பொத்தி னண்பிற் பொத்தியொடு கெழீஇ
வாயார் பெருநகை வைகலு நக்கே

                                                                            - புறம் 212

இப்பாடலின் விளக்கம் கூடுவதற்காக, பாடலுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டுக் கீழே கொடுத்திருக்கிறேன்.

நும் கோ யார் என வினவின்
எம் கோக்
களமர்க்கு அரித்த விளையல் வெம் கள்
யாமைப் புழுக்கின் காமம் வீழ்த ஆரா
ஆரல் கொழும் சூடு அங்கவுள் அடாஅ
வைகு தொழில் மடியும் மடியா விழவின்
யாணர் நல் நாட்டுள்ளும்
பாணர் பயிதல் சுற்றத்துப் பசிப்பகை ஆகிக்
பொத்தில் நண்பின் பொத்தியொடு கெழீஇ
வாயார் பெரு நகை வைகலும் நக்கே
கோப்பெருஞ் சோழன் கோழியோனே

இனி ஒருசில சொற்பொருள்களையும் குறிப்புகளையும் பார்ப்போம்.

தொடக்கமே ஒரு சாற்றுரை (declaration) போல் தோற்றுகிறது. பாண்டியன் அறிவுடைநம்பியை ஏற்கனவே பார்த்து, நல்லதை ஓதிய பிசிரோன், சோழப் பித்து தலைக்கேறி, “நும் கோ யார் என வினவின் எம் கோ” என்று தொடங்குகிறான்.

களமர் என்பார் field workers, agricultural labourers. உழவரெனும் (farmers) நிலக் கிழாரிலும் வேறுபட்டவர். ஒவ்வொரு நாட்டிலும் இயல்பாகக் களமர் இருந்தாலும், நெல் வேளாண்மையில் மானவப் பங்காற்றம் (manual participation) அக்காலத்திற் கூடவே தேவைப்பட்டது. 1960, 70 களிற் கூடக் பாண்டிக் களமர் தம் புன்செய் வேளாண்மையை விட்டு காசு,பணத்திற்காக வேலை நாடிச் சோழநாடு சென்றார். (உள்ளூர்க் களமரை ஒதுக்கி, ஊரலையும் களமரைப் பண்ணைக்குப் பயன்படுத்தி ஓராயிரஞ் சண்டைகளைக் கிளப்பியதும் பல காலம் நடந்திருக்கிறது.) அதற்கும் முன்னால் கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்குப் பாண்டியிலிருந்து பர்மா சென்றார். (பர்மா வளமே பாண்டி வறள்நிலக் களமரால் எழுந்தது.) அதற்கும் முன் எங்கெல்லாம் போனாரோ? நமக்குத் தெரியாது. நெல் விளைச்சலுக்காகப் பாண்டிக் களமர் நாடு விட்டு நாடு போனது ஒரு தொடர்கதை. நெற்சோற்று நினைவுகள் நாவில் நீரூறும் அளவிற்குப் பாண்டிநாட்டாருக்கு அவை நிறைந்தேயிருந்தன. இங்கு பிசிரோனுக்கும் இருந்தது.

வெம் கள் என்பது வெம்மையான கள்; கடுக மயக்குங் கள்; வீரியமான கள்; highly intoxicating liquor. வெறியத்தின் (alcohol) செறிவு (concentration) கூடக்கூட கள்ளின் வெம்மை (இங்கு வீரியம் என்று பொருள் கொள்ளும்; சூடெனும் இயல்பான பொருள் அமையாது.), தள்ளாட வைக்கும் தன்மை, குதூகல உணர்வு, கூடும். கள்ளைத் தொடர்ந்து குடித்துப் பழகியோர் வெங்கள்ளையே நாடுவர். கதிரோன் எழுந்ததிலிருந்து 8,10 மணிநேரம் களத்திற்படும் களமர் தம்சோர்வு தீர்க்க வெங்கள்ளைத் தேடுவது வியப்பில்லை. அடுத்த நாள் வேலைசெய்ய வேண்டுமே? தூக்கத்திற்கு என்ன செய்வது? விளையல் வெங்கள் என்பது விளைய வைத்த வெங்கள்ளாகும். அதாவது முதிர்ந்த கடுங்கள். பனஞ்சாற்றோடு நொதியத்தைச் (enzyme) சேர்த்து நாட்பட நாட்பட (நாட்படுவதே முதிரவைத்தலாகும்.) வேதிவினை கூடிச் சர்க்கரைப் பொருள் வெறியமாகிறது. முதிர்ந்த கள்ளில் வெறியச் செறிவு கூடியிருக்கும்.

அரித்தலென்பது விவரமாய் அறியவேண்டிய பூதிகச் செலுத்தமாகும் (physical process). பல்வேறு துகள் அளவுகள் (particle sizes) கொண்ட பொடியைச் சலித்துப் பரும அளவாற் பிரித்தெடுப்பது அரித்தலாகும். சல்லடை மேல் தேய்த்துத் தேய்த்துப் பிரிப்பதால் அரித்தலாயிற்று. நெல்லரைத்தபின் அரிசி-உமியைச் சுளகாற் புடைத்துப் பின் சலிக்கிறோம். இவ்வகை அரித்தலில் திண்மத் துகள்களே பிரிபடும். இன்னொருவகை அரித்தலில் திண்மத் துகளோடு நீருங் கலந்திருக்கும் அதாவது ஒரு கலங்கலை திண்மத்துகள் - நீர் எனப் பிரிக்காது திண்மப் பெருந்துகள் (large solid particles) ஒரு பகுதியாகவும், திண்ம நூகத் துகளும் (micro solid particles) நீரும் இன்னொரு பகுதியாகவும் பிரிப்பதாகும். இதைப் புரிந்துகொள்ள, இன்னும் இருவேறு செலுத்தங்களைத் (processes) தெரியவேண்டும்.

ஒரு கலங்கலிலிருந்து சாய்த்து வார்த்துத் (decantation) தெளிநீரைப் பிரிக்கிறோம். முற்றிலும் நீரைப் பிரிக்க வடித்தலைப் (filtration) பயன் உறுத்துவோம். இதில் வடிதை filtrate; வடிக்கசடு filtered material. வடிக்கசட்டிற் பல்வேறு நூகத் (microns) துகள்களுண்டு. ஒரு குறிப்பிட்ட நூகத்திற்கு (காட்டாக 500 நூகம்) மேலே பருமனுள்ள துகளை வடிக்கசட்டில் இருத்தி, கீழுள்ள நூகங்களை நீரோடு சேர்த்துப் பிரிப்பதே 2 ஆம் வகை அரித்தலாகும். கள்ளைப் பிரிப்பதில் இவ்வகை அரித்தலே பயன்படுகிறது. கள்ளென்பது சர்க்கரையோடு இலைகள், கடுக்காய், பல்வேறு சரக்குகளைச் சேர்த்துப் பொடித்துப் பின் நொதியமோ (enzyme), கொதியமோ (yeast), பட்டுயிரியோ (bacterium), உள்ளிட்டு, வெறியம் உருவாகிறது. நொதிவிணை கணிசமாய் நடந்தபின், தெளிந்ததை மட்டுமே கள்ளாகப் பிரிப்பதில்லை. அரித்துப் பிரித்த துருப்படைக் (turbid) கள்ளே நுகரப் படுகிறது. [சப்பான்நாட்டு தோப்பிக் கள்ளான (அரிசிக் கஞ்சியிற் செய்த கள்) சாக்கேயிலும் தெளிவு, துருப்படை என்ற 2 வகையுண்டு.] எனவே ”களமர்க்கு அரித்த விளையல் வெங்கள்” என்பது “களமருக்காக அரித்த முதிர்கடுங் கள்(ளொடு)” என்று பொருள்படும்.

அடுத்தறியவேண்டியது புழுக்கலெனுஞ் சொல்லாகும். புள்ளுதலென்பது துளையிடுதலைக் குறிக்கும். தண்நீரைச் சூடேற்றும்போது குறிப்பிட்ட வெம்மையில், நீர் நுரைக்கத் தொடங்கும். ஒவ்வொரு நுரைக் குமிழுள்ளும் புரை, துளை அல்லது ”புள் (குமிழ்)” இருக்கிறது. தொடர்ந்து குமிழ்வதை நுரைத்தல், புழுங்குதல், கொதித்தல் (boiling) என்கிறோம் நீரோடு நெல்லைச் சேர்த்து பாதியளவு கொதித்ததை உமி எடுத்த பின்னாற் புழுங்கரிசி (parboiled rice) யென்போம். புழுங்கா நெல்லின் உமியை எடுத்த பின்னாற் பச்சரிசி (raw rice) என்போம். பொதுவாகப் பச்சரிசியாற் சோறானதைப் பொங்கலென்றும், புழுங்கரிசியாற் சோறானதைப் புழுக்கென்றும் அழைப்பர்.

யாமைப் புழுக்கு, யாமைக்கறியும், புழுக்கும் சேர்ந்த புலவுசோறாகும். ”புலவு சோறு” இக்காலத்தின் Biriyaani யைக் குறிக்கிறது. இதைச் சோறு தவிர்த்துப் புலவென்றும் (pilav என ஆங்கிலத்திற் திரித்து எழுதுவார்.) சிலர் சொல்கிறார். வெவ்வேறுவகைப் புலவுகளைச் சேர்த்து, கோழிச்சோறு (Chicken Biriyaani), மீன்சோறு (Fish Biriyaani), நிணச்சோறு  (Mutton Biriyaani) முட்டைச்சோறு (Egg Biriyaani), என விதவிதமாய் இக்காலஞ் செய்வதுபோல் அக்காலம் யாமைப் புழுக்கையுஞ் செய்திருக்கிறார். யாமைக்கறியோடு வெவ்வேறு மணப் பொருள்களையும், சரக்குகளையும் சேர்த்துச் சமைத்துச் சோறோடு கலந்திருக்கலாம். என்ன கலவையோ? தெரியவில்லை. அதுவும் மாந்தர் சாப்பிடும் நன்னீர் ஆமைக்கறியாகலாம். ஏனெனிற் கடலாமைகள் கடற்பஞ்சு எனும் உயிரினத்தைச் சாப்பிடுவதால், அதன் நஞ்சு ஆமைகளுக்கு ஏறும்; ஆமைகளுக்கு ஏதுஞ்செய்யாத நஞ்சு, ஆமைக்கறி சாப்பிடும் மாந்தருக்கு ஊறுவிளைவிக்கும். (இவ்விவரங்கள் முழுதும் எனக்குத் தெரியவில்லை. விலங்கியல் அறிவுள்ளவர் இதை ஆயவேண்டும்.) ”யாமைப் புழுக்கின் காமம் வீழ்த ஆரா” என்ற தொடர் ”ஆமைச் சோறின் வேட்கை வீழும்படி ஆர்ந்து” என்ற பொருள் கொள்ளூம்.

அடுத்தது ஆரல்பற்றிய செய்தியாகும். இந்நன்னீர்மீன்கள் ஆறு, குளங்களில் நீரின்மேற் கிளம்பாமல், அடிமணலுக்கருகில், மண்/சேற்றிற் புதைந்தும், திரியும். நீராழத்திற் திரிவதால் ஆழல்>ஆரல் என்று இவைகளின் பெயர் ஆயிற்று. (ஆராலென்றுஞ் சொல்லப்படும்.) கூர்மோவாய் கொண்ட இவைகள் விலாங்குமீன் போல வளைவதால், மணல் விலாங்கு (Brownish or greenish sand-eel; Rhynchobdella aculeata), பாம்புமீன் என்றும் அழைப்பதுண்டு. சேற்றாரல், சிற்றாரல், பேயாரல், கல்லாரல், கிழங்காரல் என்பவை இவற்றின் வகைகளாகும். ஆரலும், வராலும் முற்றிலும் வெவ்வேறு மீன்களாகும். இரண்டையும் குழப்பிப் புரிந்து சில தமிழ் அகரமுதலிகள் ஒன்றாய்ப் பதிந்திருக்கின்றன. ஆனாற் புறம் 18 இல் 9 ஆம் வரியில் “நுண் ஆரல், பரு வரால்” என இரண்டு மீன்களும் தனித்த இருப்போடு அடுத்தடுத்துக் குறிக்கப்படும். கார்த்திகை நாள்மீனை அறுமீன் என்பதால் ஆறு+ அல்= ஆறல்>ஆரல் என்ற பெயரும் இதனோடு ஒலியொப்புமை காட்டும். "ஆரல் கொழும் சூடு அங்கவுள் அடாஅ" என்று வருந் தொடர் "கொழுத்த ஆரலை மூடியகதுப்பில் அடைத்து" என்ற பொருள்கொள்ளும். கவுள்= கன்னக்கதுப்பு; அங்கவுள்= மூடிய கன்னக்கதுப்பு’ அங்குதல்= முடல். அடவு>அடா= அடைப்பு

வைகு தொழில்= (மயக்கத்திற்) தங்கல்; மடியுமென்பது சாயுமெனவும் பொருள்படும். ”இவ்வளவு கள்ளைக் குடித்து, கறிச்சோறு சாப்பிட்ட களமர் சாய்ந்து விட்டார்” என்றிங்கே விளங்கிக் கொள்ளலாம்.. மடியா விழவு என்பது சாய்ந்து விடாத, முடிவிலாத விழா. ”விடியவிடிய முடியாத விழா” என்போம் இல்லையா? ”வைகு தொழில் மடியும் மடியா விழவின்” என்ற தொடர் ”மயக்கத்திற் சாயும் முடிவிலா விழாவுடைய” என்று பொருள் கொள்ளும். யாணருக்குப் பல உரையாசிரியரும் ”புதுவருவாய்” என்ற பொருளையே தந்து பூசிமெழுகுவார். ஆனால் ”யாணருக்கு” இன்னும் பல பொருள்கள் உண்டு. ”யாணர் நல்நாட்டுள்ளும்” என்பதற்கு ”வளமுள்ள நன்னாட்டுள்ளும்” என்பதே பொருத்தமாய்த் தெரிகிறது.

பாணரென்போர் ஊரூராய்ப் பாடிப் பரிசில்பெறுபவர். இடதுசாரிக் கருத்துள்ள இற்றைத் தமிழறிஞர், புலவரையும், பாணரையும் தனித்தனியாகப் பார்த்து, ”பாணர் என்போர் முந்தையர், படியாதவர், தான்தோன்றிகள்; புலவர் என்போர் பிந்தையர்; படித்தவர், கற்றுச்சொல்லிகள்” என்று தங்களின் விதப்பான தேற்றங்களை எடுத்துப்புகல்வர். புலவர் பாணரைப் போல்மமாக்கிப் பாடி யிருக்கிறார் என்றுஞ் சொல்வார்  இப்பாடலைப் படித்தால் எனக்கு அப்படி யெல்லாந் தோன்றவில்லை. பிசிராந்தையாரென்பார் புலவரா, பாணரா?- என்று இதன்படி முடிவுசெய்வது கடினமான கேள்வி. உண்மையில் அவர் புலவராயுந் தெரிகிறார்; பாணராயுந் தெரிகிறார். எனக்குப் புரிந்தவரை பாணர்/புலவர் என்ற பிரிப்பு இடதுசாரிக் கருத்தாரின் தற்குறிப்பேற்றமாகவே தெரிகிறது. பாடியவன் பாணன்; புலந்தவன் புலவன். என்பதே தமிழரின் புரிதல். ஒருபாணன் புலவனாய்ப் புலந்தெளியலாம். ஒருபுலவன் பாணனாய்ப் பாடவுஞ் செய்யலாம். பாணரோ, புலவரோ, வளமை, பணம், காசு என்பதிற் தடுமாறியே போயுள்ளார். பயிதல்= படிதல், வாடுதல். படி>பயி>பசி என்றும் திரிவேற்படும். பயிதற் சுற்றம்= வாடுஞ் சுற்றம். பசிப்பகையாதல்= பசியை விரட்டும்படி பகைத்தொழில் செய்தல்; ”பாணர் பயிதல் சுற்றத்துப் பசிப்பகை ஆகி” என்ற தொடருக்கு ”வாடிய பாணர்சுற்றத்துப் பசிக்குப் பகையாகிய” என்று பொருள் கொள்ளலாம். சோழனின் வள்ளன்மையைக் குறிக்கும் தொடராகவே இதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

கோப்பெருஞ்சோழனுக்கும், பொத்தியாருக்கும் இருந்த நட்பு பாண்டியநாடு வரை தெரிந்திருக்கிறது. ”பொத்தில் நண்பின் பொத்தியொடு கெழீஇ வாயார் பெரு நகை வைகலும் நக்கே” என்ற தொடரை “புரைபடா நட்பின் பொத்தியோடு பொருந்தி வாயாருஞ் சிரிப்பொடு நாடோறும் மகிழும்” என்று பொருள்கொள்ளலாம். கடைசியாகக் “கோழி யோனே கோப்பெருஞ் சோழன்” என்று வரும். கோழியூர் என்பது உறையூரைக் குறிக்கிறது. சந்தனம்/சாரல் பூசிய இனக்குழு சாரல்>சாரலர்>சேரலர் என்றும், பாண்டில் (= சாம்பல்) பூசிய இனக்குழு பாண்டியரென்றும், கோழிநிறம் (= சிவந்த பொன்னிறம் அமிலச் செறிவைப் பொறுத்து இது மஞ்சளும்/சிவப்புமாய் மாறும் ஒரு வேதிப் பொருளின் நிறம் கோழி. கோழியூர்= உறையூர்) பூசிய இனக்குழு கோழி> சோழி>சோழியர் என்றும் அழைக்கப்பட்டன. இன்றைக்கும் சாரல் (=சந்தனம்), திருநீறு, மஞ்சள்/குங்குமம் ஆகியவற்றின் மிச்ச சொச்சம் எல்லாத் தமிழர்/மலையாளிகளிடையே பெரிதும் விரிவாய்ப் பரவியிருப்பதை உணர்ந்தால் இனக்குழுப் பழக்கம் எங்கிருந்து பிறந்ததென உணரமுடியும். சாரல், திருநீறு, மஞ்சள்/குங்குமம் பூசும் பழக்கங்கள் உறுதியாகச் சமயநெறி சார்ந்தவை அல்ல.

[இவற்றை வடவர் தேடி அணிவதில்லை என்பதை எண்ணிப்பார்க்கலாம். தென்னாட்டிற்கு வந்தால் நம்மைப் பார்த்து அணிவர்.] அவை இனக்குழு (tribal) சார்ந்த வழக்கங்கள். இன்றும் ஆத்திரேலியப் பழங்குடிகள் பண்டிகை நாட்களில் பல்வேறு வண்ணங்கள் பூசித் தம்மை அடையாளம் காண்பிப்பதை ஓர்ந்துபார்க்கலாம். [அவரில் ஒருகுடியினர், தென்பாண்டியினர் போலவே முப்பட்டைத் திருநீறை உடலெங்கும் அணியும் வழக்கமுண்டு. நம்மூர்ச் சிவநெறியா அவருக்கிருக்கிறது? ஓர்ந்துபாருங்கள்.] ஆத்திரேலியப் பழங் குடியினரும், பழந்தமிழரும் ஈனியல் முறையில் உறவுகொண்டவர் என்ற ஆய்வு முடிபையும் இங்கு எண்ணிப்பார்க்கலாம். மஞ்சள்/குங்குமம் இட்டுக்கொள்ளும் பழக்கமும் சோழநாட்டுப் பழக்கம் தான்.]

பாட்டின் மொத்தப்பொருளை கீழே தந்திருக்கிறேன்.
-------------------------------------------------------
நும் அரசன் யாரென வினவின்
எம் அரசன்,
”களமருக்காக அரித்த முதிர்கடுங் கள்(ளொடு),
ஆமைச்சோறின் வேட்கை வீழும்படி ஆர்ந்து,
கொழுத்த ஆரலை மூடியகதுப்பில் அடைத்து,
மயக்கத்திற் சாயும் முடிவிலா விழாவுடைய
வளமுள்ள நன்னாட்டுள்ளும்,
வாடிய பாணர்சுற்றத்துப் பசிக்குப் பகையாகி
புரைபடா நட்பின் பொத்தியொடு பொருந்தி,
வாயாருஞ் சிரிப்போடு நாடோறும் மகிழும்
கோப்பெருஞ் சோழனெனும் கோழியோனாவான்.
--------------------------------------------------------

முதலிற் படிக்கும்போது கடிதாய்த் தோற்றினும், பாடல் புரியச் சரவலில்லை. தவிரப் பிசிராந்தையாரும் மெய்யியல் சார்ந்தவராய், கருத்தியற்காரராய், இப்பாட்டில் சட்டெனத் தெரியவில்லை. ஆனால் ஆந்தையார் என்றசொல் என்னை வேறுபக்கம் இழுக்றது. அந்தை>ஆந்தை என்பது அச்சன்/அப்பன் என்ற பொருள்கொண்டது..இன்றும் மலையாளத்தில் கிறித்துவத் தேவாலயப் பூசாரியை, மதத்தில் தம்மை முன்னெடுத்துச் செல்பவரை, :”அச்சன்” என விளிப்பார். சொந்த அச்சன்போல் கருதப்படக் கூடியவரென்ற பொருள் அதற்கு உண்டு. இத்தகைய பழக்கம் பல்வேறு நாடுகளிலுண்டு. சங்க இலக்கியம் முழுதும் ”ஆந்தையார்” பெயர் ஒருவேளை இனக்குழுப் பூசாரியை உணர்த்தியதோ?” என்று நான் எண்ணியதுண்டு. பிசிராந்தையார் பிசிர் ஊரின் பூசாரியோ? அதாவது ஐயனார் கோயில் பூசாரியோ?) இப்பூசாரி கோப்பெருஞ்சோழன் மேல் தணியாத நட்புரிமை கொண்டவராகய்க் காட்சி அளிக்கிறார். அடுத்தடுத்த பாடல்களைப் படிக்க ஆவலெழுகிறது..

அன்புடன்,
இராம.கி.

Sunday, October 14, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 9

அடுத்த பாட்டிற் கோபெருஞ்சோழனின் தன்னிலை விளக்கம் தொடருகிறது. இது மிகமிக எளிதான பாட்டு. பிசிராந்தையாரின் நல்லியல்புகளைச் சொல்வதால் இதன்திணையும் பாடாணே. துறை சென்ற பாடலைப் போலவே இயன்மொழியாகும். கலைச்சொற்கள் இதில் மிகுதியில்லை. இற்றைத் தமிழரும் உரையின்றி உணர்ந்துவிடலாம். உணவின்மேல் ஏங்கியதுமாறி, தன்னை ஆற்றுப்படுத்தி, ”பிசிரோன் வருவான்” என்றுசொன்ன சோழன், இப் பாட்டில் (இதுவரை பார்த்தறியாத, கேட்ட மாத்திரமே அறிந்த) இருவர் நட்பை விதந்து, “ஐயப்படாதீர்! அவன் வாராது நில்லான்; வருவான்; உண்ணாநோன்பு இருக்கும் இக்களத்தில், என்னருகே அவனுக்கும் இடமொழித்து வையுங்கள்” என்று தன் உள்ளக்கிடக்கையைச் சொல்கிறான். 

கேட்டன் மாத்திரை யல்ல தியாவதும்
காண்ட லில்லா தியாண்டுபல கழிய
வழுவின்று பழகிய கிழமைய ராகினும்
அரிதே தோன்ற லதற்பட வொழுகலென்
றையங் கொள்ளன்மி னாரறி வாளீர்
இகழ்வில னினிய னியாத்த நண்பினன்
புகழ்கெட வரூஉம் பொய்வேண் டலனே
தன்பெயர் கிளக்குங் காலை யென்பெயர்
பேதைச் சோழ னென்னுஞ் சிறந்த
காதற் கிழமையு முடைய னதன்றலை
இன்னதோர் காலை நில்லலன்
இன்னே வருகுவ னொழிக்கவவற் கிடமே

                           - புறம் 216
இப்பாடலின் விளக்கம் கூடுவதற்காக, பாடலுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டுக் கீழே கொடுத்திருக்கிறேன்.

ஆர் அறிவாளீர்!
கேட்டல் மாத்திரை அல்லது
யாவதும் காண்டல் இல்லாது
யாண்டு பல கழிய
வழுவின்று பழகிய கிழமையர் ஆகினும்
தோன்றல் அதல்பட ஒழுகல் அரிதே  என்று
ஐயங் கொள்ளன்மின்
இகழ்விலன் இனியன் யாத்த நண்பினன்
புகழ்கெட வரூஉம் பொய் வேண்டலனே
தன் பெயர் கிளக்குங் காலை,
"என் பெயர் சோழன் பேதை" என்னும்
சிறந்த காதற் கிழமையும் உடையன்
அதன் தலை
இன்னதோர் காலை நில்லலன்
இன்னே வருகுவன்,
அவற்கு இடமே ஒழிக்க

இனி ஒருசில சொற்பொருள்களையும் குறிப்புகளையும் பார்ப்போம்.

ஆர் அறிவாளீர்! = நிறைந்த அறிவாளிகளே! [அறிவாளி என்பது முகனச் (modern) சொல் அல்லாது முதிய பழஞ்சொல் தான் போலிருக்கிறது.]
கேட்டல் மாத்திரை அல்லது = கேட்ட மாத்திரமல்லது (மாத்திரை என்ற சொல் மட்டுமென்ற பொருளில் இக்காலத்தில் மாத்திரம் என்றாளப்படுகிறது. வட ஆற்காடு மாவட்டத்தில் இன்றும் பேச்சுவழக்கிலுண்டு.)
யாவதும் காண்டல் இல்லாது = என்றுங் காணவே இல்லாது
யாண்டு பல கழிய = பல்லாண்டுகள் கழிய (யாண்டு என்பதே முந்தையச் சொல். ஆண்டென்று இன்று ஆளுகிறோம்.)
வழுவின்று பழகிய கிழமையர் ஆகினும் = குறையின்றிப் பழகிய உரிமையர் ஆயினும் (வழு = குறை; கிழமை = உரிமை; கிழார் = உரியவர். கிழார் என்பதை feudal olrd என்ற விதப்பான பொருளிற் பயன்படுத்துவதும் உண்டு)
தோன்றல் அதற்பட ஒழுகல் அரிதே என்று = தலைவன் முறைப்பட (நட்புப்) பாராட்டுவது அரிதே என்று; (தோன்றிற் புகழொடு தோன்றுக என்பதால் தோன்றல் என்பது புகழ் படைத்தோருக்கு ஆகுபெயராயானது. இங்கு தலைவனைக் குறிக்கிறது. அதர்>அதல் = முறை; அதல் என்ற வடிவம் தமிழ் அகரமுதலிகளில் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் இந்தப் பாடலில் இருக்கிறது.)
ஐயங் கொள்ளன்மின் = ஐயம் கொள்ளாதீர்.
இகழ்விலன் இனியன் யாத்த நண்பினன் = (பிசிரோன்) இகழ்ச்சியில்லாதவன், இனியவன், (என்னோடு) பொருந்திய நட்பாளன்

[இப்பாடலில் இனியனென்பது தன்னையறியாது வெளிப்படும், மெய்யியற் சுமையேறிய சொல்லாகும். தம்மையோ, இன்னொருவரையோ, இனியன் என்று செயினர் சொல்லிக்கொள்ள விரும்பார். வாழ்க்கையில் இனிமை தேடலென்பது செயினருக்கு உகந்ததல்ல. வாழ்வின் எல்லாவினைகளும் குமுகநலம் வாய்ந்ததாக, அடுத்தார்க்கு ஊறுவிளைக்காததாக, பொறுப்பு உள்ளதாக, அதேபொழுது வீடுபேறு அடையத் தூண்டுவதாக, இருக்கவே அவர் நினைப்பார் சாவக நோன்பிகள் தவக்குறையால் இனிமைதேடுவதைத் தவிர்க்கச்சொல்லிச் செயினத்துறவிகள் அறிவுறுத்துவர். மாந்தவாழ்வைக் கடமையாகக் கருதி, நல்வினை, தீவினை மதிப்பீட்டின் வழியாகவே, செயினத் துறவிகள் எதையும் நோக்குவர். இனிமைநாடலை உலகாய்தப் (materialistic) போக்காகவே தீவிர மெய்யியல்கள் நோக்கும். தமிழருக்கோ உலகாய்தம் விலக்கல்ல. நம்பி நெடுஞ்செழியனைப்பற்றி பேரெயில் முறுவலார் பாடிய புறம் 239 ஆம் பாடல் ”செய்பவெல்லாம் செய்தனன் ஆகலின் இடுகவொன்றோ, சுடுகவொன்றோ படுவழிப் படுக இப் புகழ்வெய்யோன் தலையே” என்று முடித்து உலகாய்தத்தை அழுத்திப் பேசும். இனிமைதேடிப் பாடுபடுவது விலக்கவேண்டியதென்றே செயினராற் சொல்லப்படும். அற்றுவிகத்திற்கு இனிமைப்போக்கு தகாததல்ல. செயினத்தோடு ஒப்பிட்டால், அற்றுவிகம் உலகாய்தத்தை நெருங்கும். இனிமைபற்றி கோப்பெருஞ்சோழன் சொல்வது அற்றுவிகத் தோற்றுநரில் ஒருவரான பக்குடுக்கை நன்கணியாரின் புறம் 194 ஆம் பாட்டிற் சொல்லும் “இன்னாதம்ம இவ்வுலகம். இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே” என்பதை ஒக்கும்.] 

புகழ்கெட வரூஉம் பொய் வேண்டலனே = புகழ்கெட வரும் பொய்யை வேண்டாதவன், (பொய்வேண்டாமை சமண நெறிகள் மூன்றிற்குமே உகந்தது.)
தன்பெயர் கிளக்குங் காலை, “என்பெயர் சோழன் பேதை” என்னும் சிறந்த காதற்கிழமையும் உடையன் = (யாராவது) தன் பெயரைக் கேட்கும் போது, “என் பெயர் சோழப் பித்தன்” என்று சொல்லும் (அளவிற்குச்) சிறந்த அன்புரிமை உடையவன், (பித்தனைக் கிறுக்கனென்றும் பைத்தியமென்றுமே இக்காலத்திற் சொல்கிறோம்.. காதற்கிழமை என்பது ஒர் அழகான தொடர்.) 
அதன் தலை = அதனால்
இன்னதோர் காலை நில்லலன் = இச்சமயத்தில் நின்றுவிடமாட்டான்,
இன்னே வருகுவன் = இப்பொழுதே வந்துவிடுவான். (சோழனின் நம்பிக்கை அவ்வளவு ஆழமானது.)
அவற்கு இடமே ஒழிக்க = அவனுக்கு (இங்கு) இடம் ஒழித்து வையுங்கள். (இடமொழித்து வைக்கச்சொல்லும்போது பிறவாமைநாடுஞ் சோழனுக்குப் பிசிராந்தையாரும் தன்னோடு சேர்ந்து நோற்று உயிர் துறப்பது, உவப்பாய் இருந்தது போலும்.)

பாட்டின் மொத்தப் பொருள்:
----------------------------------------------------
நிறைந்த அறிவாளிகளே! கேட்ட மாத்திரமன்றி என்றுங் காணவேயில்லாது, பல்லாண்டுகள் கழிய, குறையின்றிப் பழகிய உரிமையர் ஆயினும், ”(நம்) தலைவன் முறைப்பட (நட்பு) பாராட்டுவது அரிதே” என்று ஐயங்கொள்ளாதீர்! (பிசிரோன்) இகழ்ச்சியில்லாதவன். இனியவன். (என்னோடு) பொருந்திய நட்பாளன். புகழ்கெட வரும் பொய்யை வேண்டாதவன். தன்பெயரை (யாராவது) கேட்கும் போது, “என் பெயர் சோழப் பித்தன்” என்று சொல்லும் (அளவிற்குச்) சிறந்த அன்புரிமை உடையவன். அதனால், இச்சமயத்தில் நின்றுவிடமாட்டான். இப்பொழுதே வந்துவிடுவான். அவனுக்கு (இங்கு) இடமொழித்து வையுங்கள்.
-----------------------------------------------------

இனியன் என்ற ஒரு சொல்லே பாட்டில் ஊடுறுவும் மெய்யியலை நமக்கு உணர்த்துகிறது. அடுத்த பாட்டிற்குப் போவோம்.

அன்புடன்,
இராம.கி.