Wednesday, October 27, 2021

முசிறி

கீழே தரும் செயமோகன் சுட்டியைப் படியுங்கள்.

https://jeyamohan.in/118248#.XGtGY43rbIU

இதில் வரும் மிசிறு என்னும் செவ்வெறும்பு, தமிழ்நாட்டுப் பேச்சுவழக்கில் முசெறு>முசுறு>முசிறு எனப்படும். இவ்வெறும்பு குமரி மாவட்டத்தில் மட்டுமல்லாது, ஈரம் நிறைந்த மரக்காடுகள் கொண்ட எல்லா இடங்களிலும் இருக்கும். நானே என் இளமையில் குற்றாலத்தில் பார்த்திருக்கிறேன். இன்னும் இளம் பருவத்தில் சிவகங்கை மாவட்டத்தில், மழைக்காலம் முடிந்து ஈரம் நிறைந்த காலங்களில், எங்கள் ஊருக்கு (கண்டனூர்) அருகில் விரிந்து கிடந்த வையக்கரைக் காட்டில் (இப்போது எங்கள் காடு மழையின்றி உலர்ந்து சிறுத்துவிட்டது. மழையில்லாது போனது தமிழருக்கு ஏற்பட்ட பெருஞ் சாவம்) பார்த்திருக்கிறேன். நண்பர்கள் வெவ்வேறு காடுகளில் (காட்டாகச் சத்தியமங்கலம், கொடைக்கானல், பழனி, ஒற்றைக்கல்மந்து போன்ற அடர்காட்டுப் பகுதிகளிலும்) பார்த்திருக்கலாம். இயற்கையைக் கூர்ந்து கவனிப்போருக்கு செவ்வெறும்பைக் காண்பது ஒன்றுஞ் சிக்கலில்லை. 

எறு-தல் என்பது தாக்கு-தல், கொட்டு-தல், கடி-த்தலுக்கான இன்னொரு வினைச்சொல். எறு எனும் பகுதியே தனித்து நின்று பெயர்ச்சொல் ஆகலாம். எறு>எறும்பு. கணி-த்தலென்பது கணி எனும் பகுதியையும் கணி எனும் பெயரையும் உருவாக்குவது போல் இதைக் கொள்ளலாம். முய்க்கும்> மொய்க்கும் எறு, முய்+எறு=முயெறு>முசெறு>முசுறு அல்லது முசிறு ஆகும். முசிறுகள் நிறைந்த இயற்கைக் காட்டின் ஊடே ஏற்பட்ட பட்டணம் முசிறிப் பட்டினம் ஆனது. ஒரு வேளை முசிறுகளின் கட்டமைப்பை வியந்து அதுபோல் மாந்த நகர்க் கட்டமைப்பை உருவாக்க எழுந்த பெயரோ, என்னவோ? சிந்தித்துப் பார்க்க, ஏரணம் பொருந்தியதாய்த் தோன்றுகிறது. 

சங்ககால சுள்ளியம் பேரியாற்றின் (இக்காலப் பெரியாறு சற்று நகர்ந்துவிட்டது) கரையில் இப்பட்டினம் இருந்தது, சேரர் தொண்டியில் (பெரும்பாலும் இது இற்றைக் கோழிக்கோடாய் இருக்கலாம். இங்கெல்லாம் தொல்லாய்வு செய்ததாய்த் தெரியவில்லை.) இருந்து புறப்பட்டு கடற்கரை ஒட்டியே வந்து பின் ஆற்றின் கழிமுகத்துள் நுழைந்து, ஆற்றுள் பயணித்து இத்துறை வந்தடைய வேண்டுமென்று பெரிப்பளுசின் செங்கடல் நூல் (The Periplus of the Erythraean Sea) குறிக்கும். 

முசிறியின் பெயர்க் காரணம் அறிவதற்காகச் செயமோகனின் கட்டுரையை இங்கு கொடுத்தேன். அவர் பெயர்க் காரணம் சொல்லவில்லை தான். இருப்பினும் செவ்வெறும்புகளின் சிறப்பை, அவற்றின் குமுகக் கட்டுமானத்தைச் சீர்பட விவரிக்கிறார். அதே பொழுது முசிறி பற்றி அக்கட்டுரையில் அவர் பேசவில்லை. கட்டுரை படித்த எனக்கு இவ்வெறும்புக்கூட்டங்கள் பற்றிச் சொல்லவும், முசிறித்தொடர்பு பற்றிச் சுட்டவும் தோன்றியது. எனவே சுட்டிகொடுத்தேன். பின்னால் வரலாற்றுக் கட்டுரைகளில் முசிறிப்பட்டணம் பற்றிப் பேசுவோம்.

அன்புடன்,

இராம.கி.

No comments: