Saturday, October 09, 2021

ergonomics

இது பற்றிச் சொல்லுமுன் அதன் எதிரான ஆனால் தொடர்புற்ற economics பற்றியும் சொல்லவேண்டும்.

economy (n.) 1530s, "household management," from Latin oeconomia (source of French économie, Spanish economia, German Ökonomie, etc.), from Greek oikonomia "household management, thrift," from oikonomos "manager, steward," from oikos "house, abode, dwelling" (cognate with Latin vicus "district," vicinus "near;" Old English wic "dwelling, village," from PIE root *weik-(1) "clan") + nomos "managing," from nemein "manage" (from PIE root *nem- "assign, allot; take"). Meaning "frugality, judicious use of resources" is from 1660s. The sense of "wealth and resources of a country" (short for political economy) is from 1650s.

தமிழில் இதை 3 முறைகளில் சொல்லலாம். 

1. நேருக்குநேர் மொழிபெயர்ப்பது. (தரவுகள் முகமையின்றி தேற்றங்களே முகமை’ என்போருக்கு நான் சொல்வது விளங்காது. வில்லியம் சோன்சு கூற்றை வேதமாய் நம்பி, வேதக் கோயிலிற் கும்பிட்டு ”இந்தை யிரோப்பியனும் தமிழியமும் முற்றிலும் வெவ்வேறெனச்” சத்தியஞ்’ செய்யும் கருத்தாளருக்கு ”2 குடும்பங்களுக்கும் உறவுண்டோ?” என ஐயுறும் என்னுடைய நேரடித் தமிழ்ச் சொல் தேர்வு வியப்பையே தரும். outlier ஆகவும் தெரியும்,  ”ஆங்கில ஒலியோடு சொல்லாக்குவதாய்க்” குறைசொல்லவும் வைக்கும்.) 

2. ஆங்கிலச் சொல்லின் சாரத்தை தமிழிற் சொல்வது. [இதையே பலரும் செய்கிறார். குறிப்பாகச் சொல்லாய்வுக் குழுவில் இதுவே நடக்கிறது. இப்படிச் செய்யாவிடில் தவறு போலவே எண்ணுகிறார். இம்முறையிலுள்ள பெருஞ் சிக்கல் மொழிபெயர்ப்பின் துல்லியம் குறைவதே. விதுமை(specicity)/ பொதுமை(generality) போன்ற விவரம் பாராது, மொழிபெயர்ப்பு சிலபோது ஒப்பேற்றுவதாய் அமையலாம். பலநேரஞ் சரியாகும்.]

3. முற்றிலும் புதிதாய் சொல்படைப்பது. (இதில் மூலத்தோடு தொடர்புகாட்டத் தேவையில்லை. குறிப்பிட்ட புலனத்தை நம் பார்வையில் பார்த்துப் புதுச்சொல் அமைக்கலாம்.. ஆனால் மொழிமரபுகளும், இந்திய மொழிகளிலுள்ள புழக்கமும் தெரியவேண்டும். வெறுமே சங்கதம் பார்ப்பதில் குறைப்பலனே கிட்டும்.)    

முதல் வழியிற் சொன்னால் eco என்பது home. இதை அகமெனச் சொல்வேன். அடுத்தது nem>nemain. இதை நேர்தலென்றும் நோல்தலென்றுஞ் சொல்வேன். ”இது நடந்தால், திருப்பதி வேங்கடவனுக்கு மொட்டை போடுவதாய் நேர்ந்து கொண்டேன்”, ”இது நடந்தால் பழனிமுருகனுக்குக் காவடி எடுப்பதாய் நேர்ந்து கொண்டேன்”. ”இது நடக்க வேண்டுமென்று நோன்பிருக்கிறேன்” என்ற வழக்காறுகளை எண்ணிப்பாருங்கள். இக்காலத்தில் நோல்கிறேனென்று சொல்வதற்கு மாறாய் நோல்>நோல்பு>நோன்பு எனும் பெயர்ச்சொல்லோடு ”இருக்கிறேன்” என்று துணைவினைச் சொல் சேர்ப்பதே பெரிதும் வழக்காய் ஆகிப்போனது. இதுபோன்ற பயன்பாடு தமிழைக் குறைப்படுத்தும் இருந்தும் பலர் செய்கிறார். “முயல்கிறேன்” என்பதற்கு மாறாய் “முயற்சி செய்கிறேன்” என்பார். நோல்தலெனும் வினைச்சொல் நம்மில் கிட்டத்தட்ட மறைந்து விட்டது..நேர்தல்>நேர்த்தலின் பெயர்ச்சொல் நேர்த்து>நேர்த்தி எனப்படும், efficiency என்பதற்கு நிகரான சொல் நேர்த்தி. ஆனால் திறன் என்ற சொல்லின் மேல் விடாது நாம் சுமை ஏற்றுவோம். அகநேர்த்தியல் அல்லது அகநோற்றியல் என்பது economics க்கும், விதப்பாக micro-economics க்கும், சரிவரும். 

இரண்டாம் வழியில் சொன்னால், வள்ளுவரே பொருட்பாலின் முதற்குறளில் ஒரு சொல் பரிந்துரைத்திருப்பார். அதை நம்மில் பலருங் கண்டு கொள்ளவே இல்லை. இன்றுள்ள பலருக்கும் அது தெரியாது. கூலம் என்ற தானியங்களில் இருந்து எழுந்த சொல். பயிரியற் பொருளியலில் கூலமே செல்வத்திற்கு அடிப்படை. 

படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு.. 

இந்தக் குறளுக்கும் அருத்த சாற்றம் (= அர்த்த சாஸ்த்ரம்) 6 ஆம் பாகம், முதலாம் அத்தாயத்தில் (=அத்யாயத்தில்) ”ஸ்வாம்ய அமாத்ய ஜநபத துர்க கோஷ தண்ட மிதராணி ப்ரக்ருதய” என்ற முதற் சொலவத்தின் முதல் வரிக்கும் தொடர்புண்டு. 

ஸ்வாம்ய = அரசன்; 

அமாத்ய = அமைச்சு; 

ஜநபத = குடி; 

துர்க = அரண்; 

கோஷ = கூழ்; 

தண்ட = படை; 

மித்ர = நட்பு.

 ”கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் 

சூழாது செய்யும் அரசு”  

எனும் 554 ஆம் குறளிலும் கூழ் என்ற கலைச்சொல் பயிலும்.  கூழ் என்று வள்ளுவர் சொல்வது கோஷ என்று சாணக்கியரால் சொல்லப்படும். கூழ் என்பதைக் கருவூலம் (treasury). நாட்டின் செல்வம் (wealth) என்றும் சொல்வர். கூழ் பற்றிப் படிப்பது கூழியல். பொதுவாக economics க்கும், விதப்பாக macro-economics க்கும் இச்சொல் சரிவரும்.        

மூன்றாம் வழியில் வந்த சொல்லே பொருளியலாகும். இன்று இதையே  எல்லாவிடத்தும் பயில்கிறோம். சங்கதம் போன்ற வடபுல மொழிகளிலும் ”அர்த்த” என்ற சொல்லால் அழைக்கிறார். பொருளியலை மாற்றவேண்டும் என்று நான் சொல்லவில்லை. அது வந்த முறையையும், இன்னும் இரு வேறு மாற்றுச் சொற்கள் உண்டென்பதையுஞ் சொல்கிறேன். பெரும்பாலான கலைச் சொற்களுக்கு இதுபோல் 3 முறைகளில் தமிழ்ச்சொற்களை உருவாக்க முடியும். இதில் எந்த முறையில் உருவான சொல் நிலைக்குமென்று சொல்ல முடியாது. எது சரியென்றுஞ் சொல்ல முடியாது. அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றே நான் இயலுமைகளைச் சொன்னேன்.

அடுத்து ergonomics (n.) ஆங்கிலத்தில் இதை "scientific study of the efficiency of people in the workplace," coined 1950 from Greek ergon "work" (from PIE root *werg- "to do") + second element of economics.” என்று சொல்வர். இதை உழைநேர்த்தியியல் என்று முதல்முறையில் சொல்லலாம். (உழை/உழைப்பு = werg/work; பணிச் சூழமைவியல் என்று இரண்டாம் முறையில் திரு. தமிழநம்பி சொன்னார். வாகியல் என்று மூன்றாம் முறையில் திரு. முருகேசன் மருதாச்சலம் சொன்னார். எது நிலைக்கும் என்பது பயனரின் உகப்பு.

அன்புடன்,

இராம.கி


No comments: