Sunday, June 28, 2009

பழந்தமிழர் நீட்டளவை - 3

அடுத்தது சாண், இது கையை அகல விரித்து, சுண்டு விரல் நுனியில் இருந்து பெருவிரல் நுனிவரை முடிந்த மட்டும் நீட்டி அதனால் தொடக் கூடிய (=பற்றக் கூடிய) தொலைவைக்
குறிக்கும் அளவீடாகும். இது திராவிட மொழிகள் எல்லாவற்றிலும் சிறு திரிவுகளுடன் காணப்படும் சொல்லாகும். ம: சாண்; க:கேண், கேண, கேணு; தெ:சேன; து:கேணு, கேண; குட: சாணி; பட: சாணு; கோத: காண்; துட: கீண்; கொலா: சேன.

கை எனும் சொல்லைக் கவ்வுதலோடு பொருத்தினோம் அல்லவா? கையின் பெருவிரலும், மற்ற விரல்களில் ஏதேனும் ஒன்றோ, அல்லது ஒன்றிற்கு மேலோ, ஒருங்கிணைந்து, ஒரு கவை (fork) போலச் செயற்றிப் பொருள்களைப் பற்றுகிறோம் தானே? கவ்வுதல், வவ்வுதல், அவ்வுதல் ஆகியவை கை, பல்/வாய் ஆகியவற்றின் மூலம் ஒரு பொருளைப் பற்றும் செயலைக் குறிக்கும் ஒலிக்குறிப்புச் சொற்கள். இந்தச் சொற்களின் நுண்ணிய வேறுபாடுகளை மறந்து, இற்றைத் தமிழில், ஒன்று மாற்றி இன்னொன்றாய்ப் புழங்கிக் கொண்டிருக்கிறோம். இருந்தாலும் கவ்வுதற் சொல் ஆழமானது. ”சாணி”ன் சொற்பிறப்புப் புரிய வேண்டின், கவ்விற் பிறந்த மற்ற சொற்களையும் அறிந்து கொள்ளுவது நல்லது. ஏனெனில் இவை ஒரு தொகுதி.

முதலில் வருவது கவை. கவ் எனும் வேரில் இச்சொல் பிறக்கும். மரங்களிற் தான் எத்தனை கவைகள்? இவை, கிளையென்றும் சொல்லப்பெறும். கவைத்தல் = கிளைவிடுதல், இரண்டாய்ப் பிரிதல். மாந்தரின் தோளோடு, முழுக்கை பிணையும் அக்குளில், கவை போன்ற கட்டுமானம் (மூட்டு) அமைவதால், அக்குளைக் ”கவைக்கட்டு/கவைக்கூடு” என்றும் சொல்லுவார்கள். [கவைக்கூடு, தென்பாண்டி வழக்கில் கபைக்கூடு>கம்பைக்கூடு>கம்புக்கூடு என்றும் அமையும். “கம்புக்கூட்டில் ஒரு பொக்குளிப்பான் வந்துருச்சு.”]

கவ்வுதலில் இருந்து ”கவவுதல்” பிறந்து, கைகள் ஒன்றிப் பற்றுதலையும், உடல்கள் அணைந்து முயங்குதலையும், குறிக்கும். (“காதலர்ப் பிரியாமல், கவவுக்கை நெகிழாமல்” - சிலம்பு மங்கல வாழ்த்துப் பாடல் 61 ஆம் அடி.)

கவ்>கவ்வான்>கவான் என்பது கவைந்து கிடக்கும் பக்க மலை. இந்தச் சொல் கவை கவையாய், வளை வளையாய்ப் பிரியும் arch like foundation க்கு இணையாய்க் கட்டிடவியலில் அணைகள், பாலங்கள் கட்டுவது பற்றிச்சொல்லுவார்கள். கவான்கள் வைத்துப் பல பாலங்கள் உலகிற் கட்டப் படுகின்றன.

ஒரு பாதை இரண்டாய்ப் பிரியும் இடம் கவ்>கவல்>கவலை என்ற சொல்லாற் குறிக்கப்படும். [கவல்/கவலை என்பதும், கூடல் என்பதும் ஒரு junction தான். கூட்டுச்சாலை என்றும் சில பகுதிகளிற் சொல்லுகிறார்கள். எப்படி ”அருவி”யைத் தொலைத்து ”நீர்வீழ்ச்சி”யை உருவாக்கினோமோ, அதுபோலக் கவல்/கவலை, கூடல் ஆகியவற்றைத் தொலைத்துச் சந்திப்பு என்ற சொல்லை இந்தக் காலத்தில் உருவாக்கி வைத்திருக்கிறோம். “திருச்சி சந்திப்பு” - ஐ அறியாதார் யார்?]

ஒரு (பாதைக்) கவலையில் நிற்பவருக்கு, ”எப்பக்கம் போயின், போகவிழையும் ஊர் வந்து சேரும்? அதுவா? இதுவா?” என்ற குழப்பம் ஏற்படும் மனநிலையையும் (மனக்) கவலை என்ற உருவகத்தாற் சொல்வதுண்டு. இன்று பலருக்கும் கவலை என்றால், பருப்பொருள் உருவகம் தோன்றாமல், உளவியற் கருத்தே முன்னாற் தெரிகிறது. மேலும் ககர, சகரப் போலியில் (மனக்)கவலை (மனச்)சவலை என்றும் சொல்லப் பெறும். வளைவுப் பொருள் இன்னும் நீண்டு சவளுதல் என்பது துவளுதலையும் குறிக்கும். நேரே நிற்க முடியாமல் துவண்டு போகும் பிள்ளையைச் சவலைப் பிள்ளை என்று நாட்டுப்புறத்திற் சொல்லுவார்கள்.

கவல்>கவள்>கவளம் என்ற சொல் வாயால் கவ்விக் கொள்ளும் உணவளவைக் குறிக்கும்.

கவள்>கவுள் என்னும் சொல் முகத்தில் மேற்தாடையும், கீழ்தாடையும் சேரும் இடத்தைக் குறிக்கும். இந்த இடத்தின் உள்ளே தான் உணவு கவ்வப் படுகிறது. இந்தக் கவுளின் மேல் உள்ள தோற்பகுதி கன்னம் என்றும் அழைக்கப் படுகிறது.

நூறு வெற்றிலைகளைச் சேர்த்து, மேலும் கீழும் வாழைமட்டையை வளைத்துக் கட்டியது கவளியாகும். கவளுவது, கட்டிவைப்பது என்றும் பொருள் நீளும். பொத்தகக் கவளியும் (= பொத்தகக் கட்டு) அதே போல உருவகப்பெயர் கொள்ளும்.

மடங்கிக் குவிந்த கை போல் தோற்றம் அளிக்கும் சோழி, கவ்>கவ>கவறு என்றே சொல்லப் பட்டது. கவறு (=சோழி) குப்புற விழுந்தால் அதன் மதிப்பு ஒன்று என்றும், மல்லாக்க விழுந்தால் சுழியம் என்றும் கொண்டு, 6 சோழியோ, 12 சோழியோ போட்டு, எத்தனை சோழி குப்புற விழுந்தன என்று எண்ணிப் பார்த்து அத்தனை கட்டம் முன்நகர்வது என்று சூதாட்டங்களிற் கருதியதால் சூதாட்டம், கவறாட்டம் என்றும் சொல்லப்பட்டது. கவறு என்ற தமிழ்ச்சொல் cowry என்று உலகெங்கும் பரவியிருப்பதே, இந்தச் சூதாட்டங்களின் தொடக்கம் நாவலந்தீவு தானோ என்று எண்ண வைக்கிறது. சோழி என்ற சொல்லும் கூடக் கவளி>சவளி>சோளி>சோழி என்று ஆனது தான். சோழி போட்டுப் பார்த்துச் சொல்லும் ”ப்ரஸ்ண ஜ்யோதிஷம்” என்னும் மலையாளச் சோதியம், சோழி போட்டுக் கணக்கிடும் பழங்கணக்கு முறைகள், எல்லாம் இந்த கவளி/கவறு கொண்டே செய்யப் படுகின்றன.

இதே போல இரு நீண்ட தாடைகளைக் பயன்படுத்தி மீனைக் கவ்வும் பறவை மீன்கொத்தி எனப்படுகிறது மீன் கவ்வும் செயலைச் செய்வதால் இது கவுதமாகும். (= kingfisher). கவுதப் பறவையை Kingfisher Airlines காரர்கள் தம்முடைய இலச்சினையாகக் காட்டுகிறார்கள்.

கவள்>கவள்+து = கவட்டு என்பது நம் உடம்பில் இடுப்பின் கீழ் இரண்டாய்ப் பிரியும் மூட்டுப் பகுதியைக் குறிக்கும். வேடிக்கைச் சொலவடையாய் “கந்தனுக்குப் புத்தி கவட்டுக்குள்ளே” என்று சொல்கிறோம் அல்லவா? கவட்டு என்பது கவடு என்றும் சுருங்கும், கவட்டை என்றும் நீளும். கவட்டியென்றும் திரியும்.

கவள்>கவண் என்று திரிந்து, வேறொரு சொல்லும் உருவாகும். சிறு கவட்டையில் அழிப்பட்டை (rubber band) கட்டி, அதிற் சிறு கல்லை வைத்துப் பட்டையை இழுத்துத் தெறிக்க வைத்து, ஒரு விலங்கையோ, கனியையோ, விழுத்தாட்டுகிறோம் அல்லவா? அந்தக் காலத்தில் அழிப்பட்டைக்கு மாறாய், வேறொரு நெகிழ்நார் இருந்திருக்க வேண்டும். ஏனெனில், ”கடுவிசைக் கவணின் எறிந்த சிறுகல்” என்று அகநானூறு 292 பேசுகிறது. இந்தக் கவண் என்னும் கருவி எப்படிச் செயற்படுகிறதோ, அதே முறையில் தான் இன்றைய gun-உம் வேலை செய்கிறது. நான் கவண் என்ற சொல்லையே gun க்கு இணையாய்த் தமிழிற் பரிந்துரைத்தேன். துவக்கு, துப்பாக்கி என்பவற்றை வேறு கருவிகளுக்கு இணையாய்ப் பயன்படுத்தலாம். [gun, rifle, revolver இன்ன பிறவற்றை வேறுபடுத்த வேண்டாமா?]

எந்நேரமும் கூடும் ஒரு கவட்டைப் போலவே அணியினர் வியகம் (>வ்யூகம்) வகுத்து ”மறு அணியில் இருந்து பாடிக் கொண்டே ஏறிவருபவனைக் (ஏறாளி = rider)” கவைத்து அமுக்கிக் கட்டிப் போடும் ஆட்டத்தைக் கவடி என்று சொல்லுகிறோம். எதிரணிக்காரன் பாடிவரும் பாட்டிலும் கூடக் “கவடி, கவடி” என்ற சொல் விடாது சொல்லப்படும். கவடி>கபடியாகி இன்று இந்தியத் துணைக்கண்டம் எங்கணும் பரவி நிற்கிறது. கவடிப் பிடிப்பால் அந்த விளையாட்டிற்குப் பெயர் ஏற்பட்டது.

கவடி/கவட்டையைத் தோளில் தூக்கிச் செல்வது காவடி. இரண்டு பக்கம் மூங்கிற்பட்டையைக் கவைத்துச் சுமை தூக்குவது காவுதல் என்று சொல்லப் பட்டது. இது போன்ற கவையால் பண்டங்களைக் காவிக் கொண்டு போனதால், பெரும் வணிகனுக்குக் காவிதி என்ற பட்டமும் வழங்கப் பட்டது.

கவடிக் கிடக்கும் கிளிஞ்சல்/சிப்பிக்குள் முத்து இருப்பதால், கவடம்>கவாடம் என்பது முத்தையும் குறிப்பதாயிற்று. கவாடபுரம் என்பது பழம்பாண்டியர் தலைநகர் முத்துக் குளிக்கும் இடத்தைக் குறித்திருக்க வேண்டும். இன்றையக் கொற்கைக்கும், காயலுக்கும் கிழக்கே கடலுள் அமிழ்ந்த இந்நகரைக் கடலாய்வுதான் அடையாளம் காட்ட வேண்டும்.

ஓர் அடிமரத்தில் இருந்து கவைகளாய்க் கிளைபிரிந்து விளக்குகளைக் கொண்ட அமைப்பு, கவர விளக்கு எனப்பட்டது. கவர விளக்கு நிலத்தில் நிலைக்கலாம், விதானத்திலும் தொங்கலாம். சர விளக்கும், கவர விளக்கும் வெவ்வேறு வகையானவை. [chandelier என்பதற்குச் சரவிளக்கு என்று மட்டுமே சொல்லுகிறோம். ஓரோ வழி கவர விளக்கு என்றும் சொல்லலாம்.]

கவ்வுதலில் இருந்து கவர்தல் என்னும் வினைச்சொல் பற்றிக் கொள்ளுதலைக் குறிக்கும். கவர்ந்து கொண்ட பொருள் பற்றிக் கொண்டதும், பின் மறைந்துக் கொண்டதும் ஆகும். இதே வளர்ச்சியில் முடுதல் பொருளில் கவிதல் என்ற வினைச்சொல் கிளைக்கும்.

கவர்தல் வினையில் இருந்து கவரி என்பது மூடும் பொருளைக் குறிக்கும். இமைய மலையில் இருக்கும் ஒருவிதமான யாக் எருமை உடம்பு முழுக்க மயிர் வளர்ந்து அதன் முதுகு, மார்பு, வயிறு ஆகியவை மூடினாற் போல் காட்சியளிக்கும். மூடிக் கிடப்பதால் இந்த மயிர் கவரி என்றே சொல்லப் பட்டது. கவரியைக் கொண்ட மா கவரிமா எனப்பட்டது, மா (=விலங்கு) என்பது மான் என்றும் பழங்காலத்திற் சொல்லப்பட்டது. கவரிமான் எனில் ஏதோ ஒரு வகை மான் (deer) என்றே பலரும் எண்ணுகிறார்கள். உண்மையில் கவரிமான் என்பது ஒருவகை யாக் எருமை. [மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின் - குறள் 969.]

ககர-சகரப் போலியில் கவரியும், சவரி ஆகும். சவரி, சவுரி என்றும் பலுக்கப் படும். திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்கண்ணபுரப் பெருமாள், சவரிப் பெருமாள் என்று சோழர் காலக் கல்வெட்டுக்களிலும், இற்றைக் காலத்தில் சௌரிராசப் பெருமாள் என்றும் குறிப்பிடப்படுகிறார். பல்வேறு விலங்குகளைப் போல, நீண்டு கிடக்கும் மாந்த மயிரை வெட்டிக் கொத்தாக்கி அதைக் கொண்டு முடிகுறைந்தோர் ஒப்பனை செய்வது சவுரி வைத்தல் என்றே சொல்லப் படுகிறது. பெண்கள் நீண்ட முடி வைத்துக் கொள்ளுவதை ஒயிலாக நினைத்த, இற்றைக்குச் சற்று முந்தையக் காலங்களில் சவுரிகள் பெரிதும் வாங்கப் பட்டன.

கவரி என்பது கவரம் என்றும் சொல்லப் பெற்று, மயிரைக் குறித்திருக்க வேண்டும். ஏனெனில் கவரம்> சவரம் என்ற திரிவில் இன்றும் பேச்சு வழக்கில் மயிரெடுப்பதைக் குறிப்பிடுகிறோம். (சவரம் செய்து கொள்ளுதல். இங்கே வினைச்சொல் இல்லாது துணைவினை போட்டுப் பெயர்ச்சொல்லை ஆளுவதே நம்மை ஆழ்ந்து நோக்க வைக்கிறது,)

சவரியை அவ்வப்பொழுது வெட்டி எடுத்து விசிறி போற் கொத்தாக்கிக் கட்டுவது சவரம்>சமரம்>சாமரம் என்று சொல்லப்படும். அரசருக்கு / தலைவருக்கு அருகில் சாமரம் வீசிக் காற்றெழுப்புவது பல ஆண்டுப் பழக்கமாகும். நாளாவட்டத்தில் பல்வேறு விலங்குகளின் மயிர்களும் சாமரம் செய்யப் பயன்பட்டன.

மேலே கவரி>சவரி, கவரம்>சவரம், கவலை>சவலை, கவளி>சவளி, கை>கய்>கெய்>செய் என்பது போல இன்னும் பல ககர, சகரப் போலிகள் கவள்>சவள் என்பதை ஒட்டியிருக்கின்றன.

முன்னே சொன்னது போல் வளைதற் பொருளில் உள்ள சவள் படகோட்டப் பயன்படும் துடுப்பையும் குறிக்கும். படகை வலிக்கும் போது துடுப்பு வளைந்து கொடுக்கிறதல்லவா? துடுப்புத் தள்ளுகிறவர் சவளக்காரர் என்றும் சொல்லப் படுவார். சற்றே வளையக் கூடிய ஆனால் நேர்கோடாய் நிற்கும் குத்தீட்டி சவளம் (>javelin) எனப்படும்.

துவண்டு கிடக்கும் துணி சவளி எனப்பட்டது. [பார்க்க: சவளி எனும் கட்டுரை. “தமிழ் வளம் - சொல்” இரா. இளங்குமரன் 1996, திருவள்ளுவர் தவச்சாலை”]

சவள்ந்து கிடக்கும் கயிறும், துணிச் சுருக்கும் கொண்டு ஓராளைச் சவட்ட முடியும். சவட்டுதல் = சவளைக் கொண்டு அடித்தல். அது சவட்டு>சவட்டை>சாட்டை என்றும் நீளும்.

சவள்>சவண்>சவணம் என்பது வளைந்து பற்றும் கருவி. இந்தக் கருவியைக் கொண்டு மாழைக் கம்பிகளை இழுக்க முடியும்.

பலாப்பழத்திற்குள் ஒவ்வொரு பலாச்சுளையைச் சுற்றிலும் அதை மூடினாற்போல் இருக்கும் நார்ப்பகுதி [கிட்டத்தட்ட மேலே சொன்ன கவரி>சவரியைப் போல] சவணி என்று சொல்லப் படும்.

பற்றுதற் பொருளை உணர்த்திய கவ்>கவள்>கவண் என்று சொல்லில் இருந்து வேறு வகையிற் திரிந்து கவண்>காண்>காணுதல் என்ற சொல் உருவாகிப் பற்றுதல், போதியதாதல் என்ற பொருட்பாடுகளை உணர்த்தும். “இவ்வளவு அரிசி எத்தனை பேருக்குக் காணும்? எத்தனை நாள்களுக்குக் காணும்?” என்னும் போது பேர் அல்லது நாள் என்னும் ஒற்றைப் பரிமானத்தில் வைத்து அளக்கும் செய்கை புலப்படும். காண்>சாண் என்றசொல்லும் ஒற்றைப் பரிமானத்தில் ஒரு ஈற்றில் பெருவிரலை வைத்து, இன்னொரு ஈற்றில் சுண்டு விரலை வைத்து வேண்டியமட்டும் நீட்டி அளக்கும் செய்கைதான் காணுதல் என்பதில் வெளிப்படுகிறது. ககர, சகரப் போலியில் சாண் என்ற சொல்லும் ஒற்றைப் பரிமாண அளவீட்டையே குறிக்கிறது.

சாண் என்னும் பெயர்சொற் பிறப்பைப் பார்த்த நாம் இனிச் சாண் என்னும் அளவீட்டைப் பார்ப்போம்.

”எண்சாண் உடம்பிற்குத் தலையே பெருந்தானம்” என்ற சொலவடையும்,

"எண்சாண் அளவாய் எடுத்த உடம்புக்குக்
கண்,கால், உடம்பில் சுரக்கின்ற கைகளில்,
புண்கால் அறுபத்தெட்டு ஆக்கை புணர்க்கின்
றண்பால் உடம்புதான் நால் உடம்பு ஆகுமே

என்னும் திருமந்திரம் “உடலைந்து பேதம்” என்னும் 119 ஆம் இயலில் வரும் 2102 ஆம் பாவும், [முன்னால் இசைக்குப் பிறப்பிடங் கூறும் பஞ்சமரபு 42 ஆம் பாவைப் போல], நமக்கு சாத்தார மாந்தனின் அளவீட்டைத் தெரிவிக்கின்றன. அதாவது, மேலே சொன்ன திருமந்திரப் புரிதலின் படி, 1 தண்டு = ஓராள் உயரம் = 8 சாண் = 8* 8 1/4 = 66” = 5 1/2 அடி. பஞ்ச மரபு வெண்பாவின் படி 96*11/16 = 66” = 5 1/2 அடி என்ற அளவே ஓராள் உயரம் என்பது பெறப் படுகிறது. வட நாட்டு முறைப் படி, 1 சாண் = 9” என்று சொன்னால், சாத்தார ஆளின் உயரம் 6 அடியாய் ஆகிப் போகும். இன்றும் கூட இந்திய நாட்டில் இதற்கு வாய்ப்பில்லை. 6 அடிவுயரம் என்பது நம் வழக்கில் நிரவலாகச் சொல்லாமல் உயர்வு நவிற்சியாகவே சொல்லப் படுகிறது.]

சாண் என்பதற்குப் பகரியாய் 1 பாதம் அல்லது காலடி என்ற சொல்லையும் கூட முன்னாற் புழங்கியிருக்கிறார்கள். [அடி = foot என்னும் இந்தக் கால அளவீட்டில் இருந்து வேறுபடுத்திக் காட்டக் காலடி என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன். உண்மையில் அடி என்ற சொல்லே அன்று புழங்கியது. ஆனால் அது 12 அங்குலம் அல்ல. தமிழில் உள்ள (கால்)அடியும், ஆங்கிலத்தில் உள்ள அடியும் ஒரே அளவானவை அல்ல. ஆங்கில அடி என்பது 12 அங்குலம். தமிழ்ப் பாதம்( = தமிழ்க் காலடி = சாண்) என்பது 8 1/4 அங்குலம் ஆகும். பாதம் என்பது குதிகாலில் இருந்து பெருவிரல் முனைவரை உள்ள தூரம் ஆகும். குதிகால் என்பது புவியில் கால் குத்தும் இடம், குதிகாலின் விளிம்பு அல்ல. குதிகாலின் விளிம்பில் இருந்து காற்பெருவிரல் நுனியை அளந்தால் அது 8 1/4 அங்குலத்திற்கும் மேல் இருக்கும். இதோடு, பதிதல் என்ற வினையில் இருந்து பதி (= காலடி) என்ற பெயர்வழக்கு, சற்று மாறி, வதியாகிச் சாலைகளைக் குறிப்பதையும் பல்லவர், சோழர் காலக் கல்வெட்டுக்களில் அறிகிறோம்.]

அன்புடன்,
இராம.கி.

Monday, June 22, 2009

பழந்தமிழர் நீட்டளவை - 2,

பழந்தமிழர் நீட்டளவையில் முதலில் வருவது விரல்.

விரிக்கும் செய்கையிற் பிறந்த சொல் விரல். கையில் மடங்கிக் கூடுவதும், பின் எதிரிடையாய் விரிந்து அகல்வதும், விரல்கள் தானே? விரல்கள் இன்றேல், பொருள்களைப் பற்றுவது ஏது? பிடிப்பது ஏது? கவ்வுவது ஏது? கவவுவது ஏது? கவர்வது ஏது? கவிப்பது ஏது? கட்டுவது ஏது?

கள் என்னும் வேருக்குக் கூடுதல், கட்டுதல், பற்றுதல், பிடித்தல் எனப் பல பொருள்கள் உண்டு. கள்ளுதல் வினையிற் பிறந்தது கை என்பார்கள். ளகர-யகரத் திரிவில், கள்>கய்>கெய்>கை என்பது பிறக்கும். [கள்>கய்>கயில்>கயிர்>கயிறு என்பதும் கட்டுதற் பொருளிற் பிறந்தது தான்.] இன்னொரு விதமாய்ப் பார்த்தால் கள்>கள்வு>கள்வுதல்>கவ்வுதல் என்ற திரிவில் பற்றுதற் பொருள் பெறப்படும். வகர, யகர உடம்படு மெய்கள் மாறியும், ஒரே பொருள் காட்டும் சொற்கள் தமிழிற் பல. ”அவ்வை/அய்யை, கோவில்/கோயில், செய்/செவ் ஆகியவை வகர-யகரப் போலியிலும் ஒரே பொருள் காட்டுவது போல், கவ்வும் கய்>கையும் கூட ஒன்றே போற் பிறந்தவையோ என்ற ஓர்மை எழும். . .

கவ்வுதலில் இருந்து பிறந்த கவை என்ற சொல்லும் கூட fork என்னும் பொருளை அழுத்தமாய் உணர்த்தும். நான்கு விரல்கள், ஒரு பெருவிரல், ஓர் உள்ளங்கை சேர்ந்தது தானே கை எனும் உறுப்பு? ஒரு மரத்தில் கிளைகளும், அவை கணுக்கிய (connected) இடத்தின் அடிக்கொம்புமாய்ச் சேர்ந்து fork - யை உணர்த்துவது போன்றே, உள்ளங்கையின் தொடர்ச்சியாய் கணுக்கையும், பின் முழங்கையும் சேர்ந்து விரல்களோடு fork - யை உணர்த்தும் அல்லவா? கவ்வில் பிறந்த சொற்கள் மிகப்பல. அவற்றைச் சாணின் சொற்பிறப்பைப் பார்க்கும் போது பேசலாம். இப்பொழுது விரலை ஆழ்ந்து பார்ப்போம்.

1 விரற்கிடை = 11/16 அங்குலம்
2 விரற்கிடை = 1 பெருவிரல் = 1 3/8 அங்குலம்
6 பெருவிரல் = 1 சாண் = 8 1/4 அங்குலம்
2 சாண் = 1 முழம் = 16 1/2 அங்குலம்
2 முழம் = 1 சிறு கோல் = 33 அங்குலம்
2 சிறுகோல் = 1 கோல் = 5.5 அடி.
4 சிறு கோல் = 1 பெருங்கோல் (தண்டம்) = 11 அடி
8 பெருங்கோல் (தண்டம்) = 1 கயிறு = 88 அடி
500 தண்டம் = 1 கூப்பிடு தூரம் = 1 மைல் 220 அடி = 1.675 கி.மீ
4 கூப்பிடு தூரம் = 1 காதம் = 4 மைல் 1 பர்லாங் 220 அடி = 6.7 கி.மீ
4 காதம் = 1 யோசனை = 16 மைல் 5 பர்லாங் 220 அtடி = 26.82 கி.மீ

மேலுள்ள அளவுகளில், பெருவிரல் என்பது பெருவிரல் நுனியில் இருந்து அதன் முதல் மடிப்பு வரையுள்ள கணு நீளத்தைக் குறிக்கும். [இருபது பேருக்குமேல் பெருவிரல் முதற்கணுவை அளந்து அதன் நிரவலைக் (average) கணக்கிட்டால், கிட்டத்தட்ட 1 3/8 அங்குலம் இருப்பதாகக் கொடுமுடியார் தன் நூலில் பதிவு செய்வார்.] பெருவிரல் தவிர்த்துக் கையின் மற்ற நான்கு விரல்களைச் சேர்த்த அகலத்தில் நாலில் ஒரு பங்கு விரற்கிடை எனப்படும். (பேச்சுவழக்கில் இது விரற்கடையாகும்.) இதை அங்குலி என்று வடமொழியிற் குறிப்பார்கள். அங்குலம் என்றும் குறித்திருக்கிறார்கள். காட்டு: குடிலரின் அர்த்த சாற்றம். இன்றைக்கு, அங்குலம் என்ற சொல்லிற்கு ஆங்கிலத் தாக்கத்தால் அளவு மாறிப் போன கரணியத்தால், பழைய வடசொல்லை அங்குலி என்றும், inch-ஐ அங்குலம் என்றும் இந்தக் கட்டுரையிற் பயில்கிறேன்.

இன்றைய அளவு முறையில் 1 விரற்கிடை என்பது 11/16 அங்குலம் ஆகும். இதை வடநாட்டிற் பலரும் 12/16 = 3/4 அங்குலம் என்று எண்ணிக் கொள்கிறார்கள். அந்தப் புரிதல் தவறானது. இந்தப் புரிதற் பிழை எப்பொழுது எழுந்தது என்று தெரியவில்லை. பல்வேறு நடைமுறைகளின் படி, 2 விரற்கிடை = 1 பெருவிரல் = 1 3/8 அங்குலம் என்பதே சரியாய்ப் பொருந்துகிறது. விரற்கிடை என்ற அளவீட்டைக் கொண்டு சாத்தார மாந்த உடம்பின் அளவையும் பழங்காலத்திற் குறித்துக் காட்டியிருக்கிறார்கள். காட்டாக, இசைக்குப் பிறப்பிடங் கூறும் பஞ்சமரபு 42 ஆம் பாவில்

துய்ய உடம்பளவு தொண்ணூற்றா(று) அங்குலியாய்
மெய்யெழுத்து நின்றியங்கு மெல்லத்தான் - வையத்து
இருபாலும் நாற்பதோ(டு) ஏழ்பாதி நீக்கிக்
கருவாகும் ஆதாரங் காண்

என்று வரும். அதாவது ஒரு சாத்தார மாந்தனின் உயரம் = 96 அங்குலி = 96 விரற்கிடை = 96*11/16 = 66” = 5 1/2 அடி. உடம்பில் மேலும், கீழுமாய் 47.5 விரற்கிடை விட்டு, நடுவில் இருக்கும் ஒரு விரற்கிடையில் மாந்த ஒலியாதாரம் கருக்கொண்டிருப்பதாய் தமிழர் எண்ணியிருக்கிறார்கள். இந்திய மாந்தனின் சாத்தார உயரம் கடந்த 2500 ஆண்டுகளில் 5 1/2 அடியாக இருந்திருக்கவே வாய்ப்புண்டு. [2007 இல், 20 அகவை கொண்ட, நாட்டுப்புறத்தில் உள்ள, சாத்தார இந்திய ஆணின் உயரம் 161.2 cm (5' 3.5") என்றும், சாத்தார இந்தியப் பெண்ணின் உயரம் 152.1 cm (4' 11.9") என்றே அளவிடப் பட்டிருக்கிறது. Venkaiah K, Damayanti K, Nayak MU, Vijayaraghavan K (November 2002). "Diet and nutritional status of rural adolescents in India". Eur J Clin Nutr 56 (11): 1119-25.] அதோடு, இந்தியத் தொன்மங்கள் ஆறடி மாந்தனை ஒரு பெரும் மாந்தனாகவே, குறிப்பிடுகின்றன. இந்த அடிப்படையாலேயே 1 விரற்கிடை என்பது 11/16 அங்குலம் என்றும், 3/4 அங்குலம் அல்ல என்றும் புரிந்து கொள்ளுகிறோம்.

[கல்வெட்டுக்களிலும், இலக்கியங்களிலும், பல்வேறு பழைய ஆவணங்களிலும், விரற்கிடை, பெருவிரல் என்ற இரண்டையுமே சுருக்கமாய் விரல் என்று குறித்திருப்பதால், நமக்குப் புரிதற் குழப்பம் பல இடத்தும் ஏற்படலாம். எனவே இடம், பொருள், ஏவல் பார்த்து விரலை நாம் அடையாளங் கண்டு கொள்ளுவது நல்லது. இது போன்ற பொதுமைச் சொல்லாட்சிகள், அந்தக் கால ஆவணங்கள் எழுந்த இடங்களிலும், காலங்களிலும் இருந்தோருக்கு ”பெருவிரலா, விரற்கிடையா” என்று சரியான அடையாளத்தைப் புரிய வைத்திருக்கலாம் என்றாலும், இன்று படிக்கும் போது, வேறுபாடுகளைக் கவனமாய்ப் பார்க்க வேண்டும். அறிவியலில் துல்லியமான கலைச்சொற்களை நாடும் இந்தக் கால அழுத்தம் அந்தக் காலத்தில் இருந்ததில்லை. எல்லாச் சொல்லாட்சிகளும் இடம், பொருள், ஏவல் கருதியே எழுந்திருக்கின்றன. தவிர, அந்தக் காலத்தில் அறிவு/கலை என்பது எல்லோருக்கும் பொது என்றாகாமல், ஒரு குறிப்பிட்ட சாராரிடம் மட்டுமே மறைத்து வைக்கப் பட்டது. இந்தக் கரவு நடைமுறையால், (secret practice) அளவீடுகளில் இருந்த வரையறைக் குழப்பங்கள் பல நூற்றாண்டுகள் தீராமலே இருந்தன.]

பல்வேறு ஆற்று நாகரிகங்களின் முகன்மைக்கூறுகளில் ஒன்று, அங்கு இருந்த கட்டுமானம் ஆகும். கட்டிடங்களுக்கான கட்டுபொருள்கள், இந்த நாகரிகங்களில், ஓரளவு கல்லாலும், பெருமளவு களிமண்ணைப் பிசைந்து அச்சில் வார்த்துச் சுட்டும், சுடாமலும் செய்த செங்கற்களாலுமே எழுப்பப் பட்டிருக்கின்றன. சிந்து சமவெளி நாகரிகச் செங்கற்களின் அளவுகளும், விரல் என்னும் அளவீட்டை ஒட்டியே எழுந்திருக்கின்றன. காட்டாகச் செந்தரச் செங்கற்கள் 1:2:4 என்ற மேனியில் கிட்டத்தட்ட 2 பெருவிரல் உயரம், 4 பெருவிரல் அகலம், 8 பெருவிரல் ( = 1 சாண்) நீளத்தில் இருந்திருக்கின்றன. [standard brick 28cm X 14cm X 7cm The Indus Civlization - G.L.Possehl] ஆகப் பெருஞ் செங்கல் (largest brick) 50.75cm X 26.25cm X 8.75cm அதாவது 14.5 விரல் : 7.5 விரல் : 2.5 விரல் ஆகவும், ஆகச் சிறுஞ் செங்கல் (smallest brick) 23.75cm X 10.875cm X 5.00cm அதாவது கிட்டத் தட்ட 6.75 பெருவிரல் : 3 பெருவிரல் : 1.5 பெருவிரல் ஆகவும் இருந்திருக்கின்றன. இதே போலச் சிந்து சமவெளி தொடக்க காலச் செங்கற்கள் (early harappan bricks) 21cmX14cmX7cm (6 பெருவிரல் : 4 பெருவிரல் : 2 பெருவிரல்) ஆக இருந்திருக்கின்றன. [இன்றைக்கும், இந்தியச் செந்தரச் செங்கலின் பெயரிட்ட (nominal size) அளவு 2 2/3” x 4” x 8” ஆக, 1:2:4 என்ற மேனியில், கிட்டத்தட்டப் பேணப்படுவது ஒரு வியப்புத்தான்.]

இதேபோலப் பெரும்பாலான சிந்து வெளி முத்திரைகள் பெருவிரல் அளவீடுகளைப் பேணியிருப்பதை, ஆழ்ந்து நோக்கிற் காணமுடிகிறது. இந்த முத்திரைகள் கிட்டத்தட்ட 2 பெருவிரற் சதுரமாகவே பெரும்பாலும் இருந்திருக்கின்றன. [6.85 cm X 6.85 cm (2 பெருவிரல் = 2.75 inch = 6.985 cms)] இன்னுஞ் சிறிய முத்திரைகள் 1.25 cm X 1.25 cm சதுரமாயும் உள்ளன. மாக்கல்லினால் (steatite) ஆன இந்த முத்திரைகள் முதலில் உருவாகும் போது, மிகவும் சொவ்வையாக (soft), கரடில்லாமல் (not hard) இருந்ததால், அவற்றில் அடையாளங்களைக் கீறி விளிம்புகளைத் தேய்த்து உருவாக்க முடிந்திருக்கிறது. வேண்டும் அளவிற்கு முத்திரைகளைத் தேய்த்தோ, கீறியோ, கரண்டியோ, நீள, அகலங்களையும், திண்ணத்தையும் (thickness) கொண்டு வந்திருக்கிறார்கள். பின் இந்த முத்திரைகளை நீண்டு புழங்கும் வகையில் செங்கற்சூளைகளில் போட்டுச் சூடேற்றியிருக்கிறார்கள். சூளையில் போடுமுன், இருந்த மாக்கல்லின் கரட்டுமை (hardness) மோ அலகில் (Moh's scale) 1 என்றால், சூளையிற் போட்டபின் அதன் கரட்டுமை 4 அலகிற்கு உயர்ந்திருக்கிறது. அப்படிக் கரட்டுமை உயர்ந்தபின், முத்திரைகளின் நீள, அகல, திண்ணங்கள் மாறுவதில்லை. முத்திரைகளை உருவாக்கும் பொழுது, மாக்கல் விளிம்புகள் சற்று தேய்பட்டுப் போயிருந்தாலும், அல்லது மாக்கற் துகளைத் தண்ணீரோடு சேர்த்துக் குழைத்து முத்திரைகளின் விளிம்புகளில் தடவிச் சரி பண்ணுவதால், மாக்கல் விளிம்பளவுகள் கூடியிருந்தாலும், இந்தக் கூடுதல்/குறைச்சல்கள் சூடாக்கியபின், அப்படியே நிலைத்துப் போகின்றன. எனவே முத்திரைகளின் அளவுகள் விரல் மடங்குகளைக் (multiples) காட்டிலும் சற்றுக் கூடவோ, குறையவோ ஆவதில் வியப்பு ஒன்றுமில்லை.

தொல்லியல் ஆய்வுகளின் மூலம், சிந்து சமவெளியின் நீட்டளவையும், பிற்கால இந்தியா (தமிழகத்தின்) நீட்டளவையும் பெரும்பாலும் ஒத்திருக்கிறது என்ற முடிவிற்கு வரவேண்டியுள்ளது. இதே அளவைகள் பின்னால் தில்முன் (இன்றைய பகாரின்), மக்கான் (இன்றைய ஓமன்) ஆகிய பகுதிகளில் பரவியிருந்ததையும் தொல்லியல் ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

இதே நீட்டளவுகள் வேத காலத்திலும் கூட இந்தியத் துணைக்கண்டத்தில் பயன்பட்டிருப்பதை ஊகிக்க முடிகிறது. ஏனென்றால் கி.மு.5-6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுல்வ சூத்திரங்கள் [சுல்>சுற்று>சுற்றம் என்ற தமிழ் வளர்ச்சியைப் போன்று, சுல்>சுல்வம் என்பது வடபுலச் சொல்வளர்ச்சி. சுல்வம் என்பது சுற்றியளக்கும் பட்டை = tape to measure perimeter என்ற பொருள் கொள்ளும்.] வேள்விக் குண்டம் அமைக்கும் முறைகளைச் சொல்லும் போது செங்கல்களை ”இட்டிகைகள்” என்ற சொல்லால் அழைக்கின்றன. இந்தச் சொல் திராவிடச் சொல்லெனவே பலரும் ஐயப் படுகிறார்கள். [The word for brick in vedic literature is ”istaka”. Though the controversy over the exact origin of the word is still going on, it may be rash for us to ignore outright the view of Przylusky and others who strongly argue that it is Dravidian in origin, though eventually borrowed by the vedic peoples' - Chattopadhyaya, Deviprasad, 1986, History of science and technology in Ancient India: The beginnings, Frima KLM pvt Ltd, Calcutta See also http://www.moderntamilworld.com/science/science_tamil.asp]

”இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென - அகம் 167: 13,
நாட்பலி மறந்த நரைக்கண் இட்டிகைப் புரிசை மூழ்கிய பொரியரை ஆலத்து - அகம் 287: 6-7

என்ற சான்றுகள் ”இட்டிகை”யைத் தமிழ்ச்சொல் என்று நிருவிக்கும். [இடுதல் = வார்த்தல். இட்டியது இட்டிகை. களிமண்ணை அச்சில் இட்டுப் பெறும் கற்கள்] தவிர வேள்விக் குண்டச் செந்தரச் செங்கற்களின் அளவீடுகள் அப்படியே தமிழ் அளவீடான பெருவிரல் மடக்கில் அமைவதும் நம்மை ஓர்ந்து பார்க்க வைக்கிறது. இட்டிகை என்ற சொல்லை வேதமொழி கடன் பெற்றிருப்பதால், இட்டிகை செய்யும் தொழிலும், அளவீடுகளும் முன்னிருந்தோரிடம் இருந்தே முல்லை நாகரிக வேதக்காரர் பெற்றிருக்க வாய்ப்புக்கள் அதிகம்.

விரற்கிடை ( = 11/16 அங்குலம்) என்னும் அளவு தமிழ் இசைக் கருவிகளிலும் பயின்றிருக்கிறது. காட்டாகத் தமிழிசையில், குழலில் இருந்தே சுர அளவு பெறப்படுவதாகச் சொல்லப் பெறுகிறது. பஞ்சமரபு - வாச்சிய மரபு - பிண்டவியலில் 27 ஆம் பாவில் குழலின் நீளம், சுற்றளவு ஆகியவை விரற்கிடை வாயிலாகவே சொல்லப் பெறுகின்றன.

சொல்லும் இதற்களவு நாலைந்தாம்; சுற்றளவு
நல்விரல்கள் நாலரையாம் நன்னுதலாய் - மெல்லத்
துளையளவு நெல்லரிசி தூம்பிடமாம் நல்ல
வளைவல வேவங்கி யம்

புல்லாங்குழல் என்பது பொதுவாய் மூங்கிலிற் செய்யப்படுவது. இங்கே விரல் என்பது நாம் மேலே சொன்ன பெருவிரல் நீளத்தைக் குறிக்க வாய்ப்பில்லை. அப்படியிருந்தால், குழலின் விட்டம் மிகப் பெரிதாய் இருக்கும். அப்படி ஒரு குழலை நிலத்திருந்து தூக்கி வாய்வைத்து ஊதுவது நடைமுறையிற் சரவலாய் இருந்திருக்கும். இங்கே விரல் என்னும் சொல்லிற்கு விரற்கடை (=11/16 அங்குலம்) என்று பொருள் கொள்ளுவதே சரியாய் இருக்கும் போல் தெரிகிறது. அதன் படி,

புல்லாங்குழலின் நீளம் = நாலைந்து விரல் = 20 விரல் = 20*11/16 = 13.75 அங்குலம்
புல்லாங்குழலின் சுற்றளவு = நாலரை விரல் = 4.5*11/16 = 3.09375 அங்குலம்
எனவே புல்லாங்குழலின் விட்டம் = 4.5*11/16 * (7/22) = (4.5*7)/32 = 0.984375 அங்குலம் ஆகும்
நிலைப்பு அலைநீளம் (standing wavelength) = 2* குழலின் நீளம் = 2*13.75” = 27.5" = 55/24 ft.
காற்றில் ஒலியின் வேகம் = 1100 அடி/நொடி
அடிப்படைப் பருவெண் (Fundamental frequency) = (காற்றொலி வேகம்)/ (நிலைப்பு அலை நீளம்) = 1100*24/55 = 480 Hz

மேலே அடிப்படைப் பருவெண்ணைக் கண்டுபிடிப்பதில் இன்னும் சில நுண்ணிய விவரங்களைக் (குறிப்பாக edge correction - விளிம்புத் திருத்தங்கள் போன்றவற்றைக்) கணக்கில் எடுத்துக் கொண்டால், அடிப்படைப் பருவெண் 440 Hz என்றாகும். நடுத்தாயியில் [middle octave] குரலின் (சட்ஜம்) அதிர்வு 220 Hz, தாரத்தாயியில் [higher octave] குரலின் அதிர்வு 440 Hz என்றும் 20 ஆம் நூற்றாண்டில் ஒரு செந்தரத்தை உலகின் இசையாளர் ஒப்புக் கொண்டார்கள். நம் புல்லாங்குழல் அளவுகள் இந்தச் செந்தரத்தை உணர்த்துவது வியப்பை அளிக்கிறது.

அடுத்து, குழலின் துளைகள் அளவு ”நெல்லரிசி” என்று மேலேயுள்ள பாவில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. 8 நெல்லரிசியை குறுக்குவாட்டில் (crosswise) அடுத்தடுத்துச் சேர்த்தால் ஒரு விரற்கிடை அமையும். மாறாக நெல்லரிசியை நெடுக்குவாட்டில் (lengthwise) அடுத்தடுத்துச் சேர்த்தால், 8 நெல்லரிசி = 1 பெருவிரல் = 2 விரற்கிடை என்று ஆகும். இன்னொரு வகையிற் சொன்னால் 4 நெடுக்குவாட்டு நெல்லரிசி = 1 விரற்கிடை என்று ஆகும்.. எனவே இங்கே துளையளவு நெல்லரிசி என்பதை 11/16/4 = 11/64 = 0.171875 அங்குலம் என்றே கொள்ள முடியும் [இங்கே தூம்பு என்பது துளையைக் குறிக்கிறது. தமிழ்நாட்டில் பல வட்டாரத்தார்க்கும், ஈழத்தாருக்கும் கூடத் தூம்பு என்ற சொல் பழக்கத்தில் இல்லாததாய்த் தெரியலாம். அவர்கள், தும்பிக்கை (= உள் துளையுள்ள கை), தும்பி (= தேனுறுஞ்சிக் குடிப்பதற்கு ஏற்ற உள் துளையை உடைய கையை உடையது), தும்பி (= வண்டு), தூம்பாக்குழி [சிவகங்கை வழக்கு (= உள் துளையுள்ள சலதாரைக் குழி. drainage pipe) ஆகிய சொற்களை எண்ணிப் பார்க்கலாம். pipe என்பதற்குப் புழம்பு இணையானது போல் tube என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் தூம்பு என்பதேயாகும். பலரும் சட்டென்று நினைவு கொள்ளும் குழல் என்ற சொல் வட்டக் குறுவெட்டுக் (circular cross section) கொண்ட ஒரு தூம்பாகும். குழல் = வட்டத் தூம்பு. It is a specific kind (circular cross section) of a generic category called தூம்பு.

பொதுவாய்ப் புல்லாங்குழலின் இடப்பக்கம் மூடப்பட்டு இருக்கும். இடப்பக்க மூடியை அணைசு என்றும் சொல்லுவார்கள். குழலில் காற்று ஊதும் வாய்த்துளை, மூடிய இடப்பக்கம் இருந்து சற்று தள்ளி இருக்கும். குழலின் வலப்பக்கம் திறந்த வாயின் மேல் (குழல் கீறிவிடாமல் இருக்க) ஒரு வளையம் இடப்படுவதால் அது வளைவாய் என்றும், சுரங்களுக்கான துளைகள் இருக்கும் பாகம், தூம்புப் பாகம் என்றும் சொல்லப்படும். இனி பஞ்சமரபு - வாச்சிய மரபு - பிண்டவியலில் 28 ஆம் பா சொல்லும் குழல் துளை அளவீடுகள் பற்றிப் பார்ப்போம்.
,
இருவிரல்கள் நீக்கி முதல்வாயேழ் நீக்கி
மருவுதுளை எட்டின் மன்னும் - பெருவிரல்கள்
நாலைந்து கொள்ளப் பரப்பென்ன நன்னுதலாய்
கோலஞ்செய் வங்கியத்தின் கூறு.

என்று சொல்லுவதால், மூடிய இடப்பக்கத் துளையில் இருந்து ஊதுதுளை = 2*11/16 = 1.375 அங்குலம் இருக்கிறதாம். ஊது துளையில் இருந்து சுரத்திற்கான முதற்துளை = 7*11/16 = 4.8125 அங்குலமும், முதற்துளையில் இருந்து எட்டாம் துளை(=முத்திரைத் துளை) = 9*11/16 = 6.1875 அங்குலமும் இருக்கும். எட்டாம் துளைக்கு அப்புறம், திறந்த வலப்பக்க வளைவாய் வரை உள்ள தொலைவு 2*11/16 = 1.375 அங்குலம் இருக்கும். இந்தத் துளைகளில் சிலவற்றை அடைத்து, சிலவற்றைத் திறந்து குரல், துத்தம், இளி, கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் சுரங்கள் எழுப்பப் பட்டிருக்கின்றன. [இந்தக் காலக் குழலின் துளைகள் இது போன்ற ஒழுங்கில்லாமல் சற்று மாறி இருக்கின்றன. அவை பற்றிப் பேசினால் செய்திகள் நீளும்.]

புல்லாங்குழல் போலவே பல்வேறு யாழ், வீணை போன்றவையும் அந்தக் காலத்தில் விரல்கள் அளவிலேயே சொல்லப்பட்டிருக்கின்றன.

அன்புடன்,
இராம.கி.

Sunday, June 21, 2009

பழந்தமிழர் நீட்டளவை - 1

உலகெங்கும் பல்வேறு இனத்தாரின் நீட்டளவைகள் தொடக்கத்தில் மாந்த உடலுறுப்புகளை ஒட்டியே பிறந்திருக்கின்றன. தமிழ் நீட்டளவைகளும் இப்படியே எழுந்திருக்கலாம். இந்த அளவைகளை இற்றைக் கண்களாற் பார்த்தால், அவை வெளித்திட்டாய்த் (objective) தோன்றாது. ஏனெனில் விரல், சாண், முழம் போன்றவை மாந்தருக்கு மாந்தர், ஏன் ஒரே மாந்தனில் அகவைக்கு அகவை, வேறுபாடு கொண்டவை. இருப்பினும், யாரோ ஒரு மன்னனை, அன்றித் தலைவனை, அன்றிச் சாத்தார மாந்தனை, அளவுகோலாக்கி இவை எழுந்திருக்க வேண்டும்.

[சாத்தாரம் எனும் தமிழ்ச்சொல் சாதாரணம் என்ற இருபிறப்பிச் சொல்லுக்கு இணையானது, நீலகேசியின் (ஆசீவக வாதச் சருக்கம், 683 ஆம் பா) வழியாக இச்சொல் நமக்குப் புலப்படுகிறது. இன்றைக்குப் பொதுக் குமுக மாந்தனைத் தமிழிற் சுப்பன், குப்பன் என்பது போல, (ஆங்கிலத்தில் Tom, Dick and Harry என்பது போல,) அன்றைக்குச் சாத்தன் என்று சொல்லியிருக்கிறார்கள். அந்தப் பாவில், ஆத்தன் என்பது தலைவனுக்கும், சாத்தன் என்பது பொது மாந்தனுக்கும் ஆளப்படும். சாத்தன்>சாத்தாரன்>சாத்தாரனம்>சாதாரணம் - இது தமிழ்வேரில் இருந்து வடமொழியிற் புடைக்கும் சொல்வளர்ச்சி. சாத்து>சாத்தார்>சாத்தாரம் என்பது தமிழிற் புடைக்கும் சொல்வளர்ச்சி. சாதாரணத்தைச் சாத்தாரமாய் மீட்டெடுக்கலாம். இதே போலச் சம்மனன்>சமனன்>சாமனன்>சாமான்யன் என்ற வளர்ச்சியையும் ஓர்ந்து பார்க்கலாம். சம்மனன் = சம்மனம் கொட்டிக் கீழமர்ந்து இருப்பவன்.]

இந்த அளவைகள், பழந்தமிழகத்திலும், இந்திய வடபுலத்திலும் ஏறத்தாழ ஒன்றாய் இருந்தாலும், அவற்றிடை சில வேறுபாடுகளும், புரிதற் குழப்பங்களும் இருந்தன. அவற்றை ஆய்ந்து, ஒத்திசை முடிவிற்கு வந்து, தமிழகத்தின் செந்தர நீட்டளவையை மீட்டெடுத்துத் திரு.கொடுமுடி சண்முகம் “பழந்தமிழர் பொறியியல் நுட்பத்திறன் - முதல் பகுதி” என்னும் பொத்தகத்தில் (பக் 91) வெளிப்படுத்துவார். அதைக் கீழே கொடுத்திருக்கிறேன்.

1 பெருவிரல் = 1 3/8 அங்குலம் [கள ஆய்வின் மூலம் கண்ட ஒக்குமை (equality)]
6 பெருவிரல் = 1 சாண் = 8 1/4 அங்குலம்
2 சாண் = 1 முழம் = 16 1/2 அங்குலம்
2 முழம் = 1 சிறு கோல் = 33 அங்குலம்
4 சிறு கோல் = 1 பெருங்கோல் (தண்டம்) = 11 அடி
8 பெருங்கோல் (தண்டம்) = 1 கயிறு = 88 அடி
500 தண்டம் = 1 கூப்பிடு தூரம் = 1 மைல் 220 அடி = 1.675 கி.மீ
4 கூப்பிடு தூரம் = 1 காதம் = 4 மைல் 1 பர்லாங் 220 அடி = 6.7 கி.மீ
4 காதம் = 1 யோசனை = 16 மைல் 5 பர்லாங் 220 அtடி = 26.82 கி.மீ

இதோடு இன்னும் மூன்று ஒக்குமைகளைச் சேர்த்தால், இந்தியத் துணைக்கண்டம் எங்கணும் பொருந்தினாற்போல் ஒரு முழுமை வாய்ப்பாடு அமையும். அந்த ஒக்குமைகள்

1 விரற்கிடை = 11/16 அங்குலம்
2 விரற்கிடை = 1 பெருவிரல் [அதாவது 12 விரற்கிடை = 1 சாண்]
2 சிறுகோல் = 1 கோல் = 5.5 அடி.

ஆகும். இவையும் சேர்ந்த நம்முடைய நீட்டளவை, பெரும் அளவில் ஆங்கில நீட்டளவையோடு இணைந்து போவது வியப்பானது. [50 ஆண்டுகளுக்கு முன், ஆங்கில அளவையைத் தான் நாங்கள் பள்ளியில் படித்திருந்தோம்; எங்களுடைய கல்லூரிப் படிப்பிலும் British Units சொல்லிக் கொடுக்கப் பட்டது. மெட்ரிக் அளவை வந்த பின்னால், இந்தியாவில் பிரிட்டன் அளவை படிப்படியாய்க் குறைந்தது. இரண்டு வாய்ப்பாடுகளின் தோற்றத்தை யாரேனும் வரலாற்றாய்வு செய்தால், பயனிருக்கும்.]

12 அங்குலம் = 1 அடி
3 அடி = 1 கசம் (yard)
220 கசம் = 1 பர்லாங்
8 பர்லாங் = 1 மைல்

என்ற ஆங்கில நீட்டளவைக்கும், தமிழ் நீட்டளவைக்கும் உள்ள உறவைப் பார்த்தால்,

60 தண்டம் = 7.5 கயிறு = 660 அடி = 1 பர்லாங்
480 தண்டம் = 60 கயிறு = 5280 அடி = 1 மைல்
4/11 சிறுகோல் = 1 அடி
12/11 சிறுகோல் = 1. 09090909 சிறுகோல் = 1 கசம்
1 கூப்பீடு = 1 மைல் 1/3 பர்லாங் = 1.0416667 மைல்,
1 கோல் = 0.916666666667 கசம்,
1 கூப்பீடு = 1.0416667 மைல்

என்ற இணைகள் விளங்கும். அதாவது, நம்முடைய சிறுகோலும், ஆங்கிலரின் yard -உம், கிட்டத்தட்ட இணையாய்த் தோற்றும். இதேபோல், நம்முடைய கூப்பீடும், ஆங்கிலரின் மைலும் கிட்டத்தட்ட இணையாய் இருக்கும்.

இந்தத் தொடர் நெடுகிலும், அளவுகள் பற்றி ஆழமாய்ப் பார்ப்போம். குறிப்பாக, விரல், சாண், முழம், சிறுகோல், கோல் (தண்டு), பெருங்கோல் (தண்டம்), கூப்பீடு, காதம், யோசனை ஆகிய அளவீடுகள் பற்றிய புரிதல் நமக்கு ஏற்படுவது முகன்மையானது.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, June 17, 2009

எவ்வளவு ஏமாளிகளாய்த் தமிழர் இருந்திருக்கிறோம்?

கீழே உள்ள கட்டுரை வேறு எங்கோ ஒரு தளத்தில் வெளியாகி, ஒரு மடற்குழுவிற்கு முன்வரிக்கப் பட்ட கட்டுரை. இதைப் படித்தபிறகு நொந்து கொண்டேன். ”எவ்வளவு ஏமாளிகளாய்த் தமிழர் இருந்திருக்கிறோம்?”

இந்தியப் பேராய அரசு ஏதோ செய்யக்கூடாத ஒன்றைச் செய்து கொண்டிருக்கிறது என்று 1,2 ஆண்டுகளாய்க் குறிப்பாய் 7,8 மாதமாய் ஐயப் பட்டுக் கொண்டிருந்தது உண்மை. ஆனால் இவ்வளவு பண்ணியிருக்கிறது என்பதை இப்பொழுது சிங்கள அரசின் வழி அறியும் போது, மனம் கொதிக்கிறது. வெட்கப் படுகிறது.

தமிழகத் தமிழர் பலரும் இதை இன்னும் அறியாது இருப்பது மேலும் கொடுமை!

“மானாட, மயிலாட” பார்க்கும் திரைப்படக் கவர்ச்சியில் இருந்து எப்போது நாம் வெளியே வருவோம்?

இராம.கி.

---------------------------------

இந்தியா போன்ற சர்வதேசச் சதிகாரச் சக்திகளின் அரசியல் சதுரங்க விளையாட்டுக் களமாகத் தமிழ்மக்களின் தாயக பூமி.
0000

விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கான போர் என்ற பெயரில்- தமிழ் மக்களுக்கு எதிராகவே இலங்கை அரசாங்கம் யுத்தத்தை நடத்தியது. இந்தப் போர் தனியே இலங்கை அரசாங்கத்தால் மட்டும் நடத்தப்பட்ட ஒன்றல்ல.

உலகின் பல்வேறு பாகங்களையும் சேர்ந்த - இருபது நாடுகள் இணைந்து நடத்திய போர் இது. சர்வதேசம் போரை நிறுத்துமாறு தமக்கு அழுத்தம் கொடுத்தது - ஆனாலும் தனியே நின்று போரை வென்று காட்டினோம் என்று, கடந்த சில வாரங்களாக கூறி வந்த இலங்கை அரசு- இப்போது தான் சில உண்மைகளைப் போட்டுடைக்கத் தொடங்கியிருக்கிறது.

இருபது நாடுகளின் உதவி ஒத்துழைப்புடன் தான் இலங்கை அரசு போரில் வெற்றி பெற்றது என்ற உண்மை - கடந்த செவ்வாயன்று அவசரகாலச் சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தின் போது தான் வெளியே வந்தது.

அப்போது தான் முதல்முறையாக வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம, புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிபெற உதவிய இருபது நாடுகளுக்கும் தமது நன்றியைத் தெரிவித்திருந்தார்.

ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பையும்- அதற்கு நிழல் கொடுத்து நின்ற மக்கள் கூட்டத்தையும் அழித்து - அடக்குவதற்கு இருபது நாடுகள் கைகோர்த்தது போன்ற நிகழ்வு உலகில இதற்கு முன்னர் நிகழ்ந்திராத ஒன்று.

உலகில் எத்தனையோ போர்கள் நடந்திருக்கின்றன. இந்தப் போர்களில், ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகள் கூட்டணி சேர்ந்து போரை எதிர்கொண்டிருக்கின்றன.

ஆனால் அவையெல்லாம் ஏதாவதொரு நாட்டுக்கு எதிராகவே இடம்பெற்றிருக்கின்றன. இரண்டாம் உலகப்போரின் போது - ஜேர்மனிக்கு எதிராக, ஜப்பானுக்கு எதிராக நேச நாட்டுப் படைகள் கூட்டாகத் தாக்குதல் நடத்தின. அதுபோன்றே சோவியத் யூனியனுக்கு எதிராக ஜேர்மனியும் தனது நட்பு நாடுகளுடன் இணைந்து போரை நடத்தியது.

ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும், யூகோஸ்லாவியாவிலும் - அமெரிக்கா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் ஒன்றிணைந்து தான் யுத்தத்தை நடத்தின.

அரசியல் கட்சிகள் கூட்டணி சேர்ந்து தேர்தலைச் சந்திப்பதைப் போன்று - உலகப் போர்களின் வரலாற்றில் பல நாடுகள் கூட்டணி சேர்ந்து போரை நடத்திய சம்பவங்கள் நிறையவே நிகழ்ந்துள்ளன.

ஆனால் ஒரு விடுதலை அமைப்புக்கு எதிராக இருபது நாடுகள் இணைந்து நடத்திய யுத்தம் இது. இந்த வகையில் பார்க்கும்போது இதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. உண்மையில் புலிகளின் பலத்தை - அவர்களின் போர்த்திறனை இப்போது தான் அதிகமாக மதிப்பிடத் தோன்றுகிறது.

இருபது நாடுகள் இணைந்து நடத்திய போரை - ஒரு சிறிய மக்கள் கூட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விடுதலை அமைப்பு ஒன்று - மூன்று வருடங்களாக எதிர்கொண்டு போராடியது என்ற, வியப்பான உண்மை இப்போது தான் உலகில் பலருக்கும் தெரியவருகிறது.

இலங்கை அரசின் படைகளுக்கு முன்னால் - புலிகள் தோல்வியைத் தழுவவில்லை. உலகில் மிகப் பலம் வாய்ந்த நாடுகளின் இராணுவ வல்லமை, அவற்றின் சதித் திட்டங்களின் விளைவாகவே புலிகளின் இராணுவ வல்லமைக்குத் தோல்வி ஏற்பட்டிருக்கிறது.

புலிகளுக்கு எதிரான போரில் வெற்றியீட்ட இலங்கைக்கு உதவிய இந்த நாடுகளின் பட்டியலை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம வெளியிடவில்லை. ஆனால்
இந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மிகவும் முக்கியமானதும் முதன்மையானதுமான நாடாக இருக்கிறது என்பது மட்டும் உண்மை.

இந்தியா கொடுத்த ஆயுதங்கள், புலனாய்வுத் தகவல்கள், இராஜதந்திர உதவிகள் என்பன இந்தப் போரில் இலங்கை அரசு வெற்றி பெறுவதற்கு முக்கியமான புறக்காரணிகளாக இருந்துள்ளன.

”இறுதிக் கட்ட யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட காலம் வரை வடக்கின் போர் நிலைமைகள் குறித்து இந்தியாவுக்கு அறிவித்துக் கொண்டேயிருந்தோம். இந்திய அதிகாரிகளுடன் இணைந்து இதற்கான கட்டமைப்பு ஒன்றையும் உருவாக்கியிருந்தோம்" என்ற மற்றொரு உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோத்தாபய ராஜபக்ச.

பி.ரி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அவர் இந்த விபரங்களை வெளியிட்டிருக்கிறார்.

'புலிகளுக்கு எதிராக நடத்திய இறுதி யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து புலிகள் தோற்கடிக்கப்பட்டது வரை, வடக்கின் நிலைமைகள் குறித்து இந்தியாவுக்கு விரிவாக விளக்கப் பட்டது.

இறுதி யுத்தத்தின் முதல் தினத்திலிருந்து முடிவு வரை இந்தியாவுக்கு சகல விபரங்களையும் அறிவித்தோம். சீனாவுடனோ பாகிஸ்தானுடனோ அல்லது வேறெந்த நாட்டுடனோ நாம் வைத்துள்ள உறவு காரணமாக - இந்தியாவுக்கு எந்தவித சந்தேகமும் ஏற்படாத வகையில் நடந்து கொண்டோம்.

வெளியுறவு அமைச்சின் தொடர்புகளுக்கு அப்பால் - மேலதிகமாக இந்திய அதிகாரிகளுடன் நாம் ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தியிருந்தோம்.

இந்தக் கட்டமைப்பில் இந்தியாவின் சார்பில் வெளியுறவு செயலாளர் சிவ்சங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், பாதுகாப்பு செயலாளர் விஜய் சிங் ஆகியோர் இடமபெற்றிருந்தனர்.

இலங்கை அரசின் சார்பில் என்னுடன் லலித் வீரதுங்க, பசில் ராஜபக்ச ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். இரண்டு குழுக்களும் அடிக்கடி கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதுடன் சந்திப்புக்களையும் நடத்தி வந்தோம்.

சகல விவகாரங்கள் குறித்தும் அவ்வப்போது இலங்கைக் குழு இந்தியாவுக்குச் சென்று இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தது.

தமிழகம் கொடுத்த கொடுத்துக் கொண்டிருந்த அழுத்தங்களைப் புரிந்து கொண்டு, நாம் மேற்கொண்ட சில செயற்பாடுகள் இந்தியாவுக்கு உதவியாக இருந்தன. புலிகளுடனான போரின் போது இந்தியாவுடன் நட்புறவை வலுப்படுத்தி மிக நெருக்கமாக செயற்பட்டோம்.

வேறு எத்தகைய அழுத்தங்கள் ஏற்பட்டாலும் - இந்த உறவு முறையால் அந்த அழுத்தங்களை சமாளித்து விடலாம் என்பதைத் தெரிந்திருந்தோம். இந்தியாவின் எண்ணமும் புலிகளை தோற்கடிக்க வேண்டுமென்பதாகவே இருந்தது.

யுத்தத்தின் போது விமானத் தாக்குதலை நிறுத்த இலங்கை எடுத்த முடிவுக்கும் இந்தியாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விமானத் தாக்குதல் நிறுத்தப்பட்டமை, பாதுகாப்பு வலயம் உருவாக்கப்பட்டமை ஆகிய அனைத்து முடிவுகளும் ஜனாதிபதி மற்றும் படைத் தளபதிகளுடன் கலந்தாலோசித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே தவிர, இந்தியாவுடன் தொடர்புடைய விவகாரங்கள் அல்ல.

இந்தியா இந்த நடவடிக்கைகளை வரவேற்றது. எனவே இந்தியாவும் உதவியாக இருந்தது." என்று இந்தப் போரில் இந்தியாவின் பங்களிப்பு பற்றிய உண்மைகள் பலவற்றை வெளியிட்டிருக்கிறார்.

இந்தியாவின் துணையுடன் இலங்கை நடத்திய போர் இது என்பதும் - இதற்கென்றே தனியான கட்டமைப்பு ஒன்றை இலங்கை - இந்திய அரசுகள் ஏற்படுத்தி வைத்திருந்தன
என்பதும் பலராலும் அதிர்ச்சியோடு பார்க்கப்படும் விடயங்களாவே இருக்கின்றன.

இந்தப் போருக்கு இந்தியா எந்த வழியிலும் உதவவில்லை என்று, மத்திய அரசினது தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை சொல்லி வந்து பொய்களின் முகத்திரை இப்போது கிழிந்து போயிருக்கிறது.

அவ்வப்போது தமிழகத்தில் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதெல்லாம் - போரை நிறுத்தப் போகிறார் பிரணாப் முகர்ஜி என்றும், எம்.கே.நாராயணனும் சிவ்சங்கர் மேனனும் தாக்குதலை நிறுத்த வலியுறுத்துவார்கள் என்றும் செய்திகள் வெளியிடப்பட்டதும் இந்தக் கூட்டுச்சதியின் ஒரு அங்கமே.

அவர்கள் கொழும்பு போனதெல்லாமே புலிகளை அழிப்பதற்கான வியூகங்களை வகுப்பதற்கே என்ற உண்மை இப்போது வெளிப்பட்டிருக்கிறது.

இலங்கையும் இந்தியாவும் இணைந்து இரகசியமாக அரங்கேற்றிய இந்தச் சதி நாடகத்தின் உண்மைகளைப் புரிந்து கொள்ளாமல் - ஈழத் தமிழர்கள் இந்தியா உதவும் என்று நம்பி நம்பியே மோசம் போயினர். இப்படி ஏமாந்து போனவர்கள் ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல. தமிழக மக்களும் தலைவர்களும் கூட.

போரை நிறுத்துமாறு இந்தியா அழுத்தம் கொடுத்தது - கொடுக்கிறது. இலங்கை அரசு போரை நிறுத்தி விட்டது என்று தமிழகத் தலைவர்களுக்கும் மக்களுக்கும் மத்திய அரசு திரும்பத் திரும்ப பொய்யையே கூறிக்கொண்டிருந்தது. ஆனால் என்ன நடந்திருக்கிறது?

பிரணாப் முகர்ஜியோ, எம்.கே.நாராயணனோ, சிவ்சங்கர் மேனனோ போரை நிறுத்த வலியுறுத்தவும் இல்லை - அதற்கு அழுத்தம் கொடுக்கவும் இல்லை. அப்படிச் சொல்லிக்கொண்டு இவர்கள் கொழும்பு போய் வந்தெல்லாம் வெறும் நாடகமே.

இவர்கள் இலங்கை அரசாங்கத்தோடு இணைந்து தமிழகத்தை ஏமாற்றியிருக்கிறார்கள். விமானத் தாக்குதல் நிறுத்தப்பட்டது, பாதுகாப்பு வலயம் உருவாக்கப்பட்டது என்று எதிலுமே இந்தியாவின் தலையீடு இருக்கவில்லையாம். எல்லாமே இலங்கை அரசாங்கத்தினது முடிவுகள் தான் என்று கூறியிருக்கிறார் கோத்தாபய ராஜபக்ச.

அப்படியானால், இந்திய மத்திய அரசு தமிழக மக்களுக்கு இந்தப் போர் பற்றிக் கூறிய அனைத்துமே பொய் என்பது நிரூபணமாகியிருக்கிறது. இலங்கை அரசு தனது நாட்டு தமிழ் மக்களையே கொன்று குவித்தது.

இந்தியாவோ தனது நாட்டு தமிழ் மக்களையே நம்ப வைத்துக் கழுத்தறுத்து - நம்பிக்கைத் துரோகம் செய்திருக்கிறது. அதேவேளை இலங்கையில் நடக்கும் போரில் தாம் எந்த வழியிலும் உதவவில்லை என்றும், ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் இந்திய அரசு தெரிவித்து வந்ததெல்லாம் வெறும் நாடகமே என்பது இப்போது நிரூபணமாகியிருக்கிறது.

காலிமுகத் திடலில் போர் வெற்றியைக் கொண்டாடும் வகையில் இலங்கை அரசு நடத்திய பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பில் - இந்தியா கொடுத்த ஆயுத தளபாடங்கள் அணிவகுத்துச் சென்றதை எப்படித் தான் மறைக்க முடியும்?

இந்தியா கொடுத்திருந்த ~இந்திரா| ரேடார், 40 மி.மீ எல்-70 ரக விமான எதிர்ப்புப் பீரங்கிகளை விமானப்படையும், ~சயுர|, ~சாகர| போன்ற போர்க் கப்பல்களை இலங்கைக் கடற்படையும் காட்சிப்படுத்தியதைப் பொய்யென்று உரைக்க முடியுமா?

இலங்கைக்கு எந்தவொரு இராணுவ உதவிகளையும் இந்தியா செய்;யவே இல்லை என்றால் - இவையெல்லாம் இந்த அணிவகுப்புக்கு வந்தது எப்படி?

ஒரு உண்மை மட்டும் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருகிறது. ஈழத் தமிழர்களின் ஆயுதப்போராட்டம் தோல்வியடைந்ததற்கு பலரும் புலிகள் தான் காரணம் என்று கூறுகின்றனர்.

எப்போதும் தோல்வியடைந்தவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது தான் வழக்கம். ஆனால் சர்வதேச சக்திகளின் கைககளில் சிக்கித்தான் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் சீரழிந்து போயிருக்கிறது.

இந்தியா போன்ற சர்வதேச சதிகார சக்திகளின் அரசியல் சதுரங்க விளையாட்டுக் களமாக தமிழ்மக்களின் தாயகபூமி மாற்றப்பட்டிருக்கிறது. இப்போதும் கூட இந்தியா இலங்கை அரசுடன் கொஞ்சிக் குலாவவே விரும்புகிறது.

அதிகாரப்பகிர்வு பற்றி இலங்கைக்கு எந்த அழுத்தமும் கொடுக்காதாம். அது அந்த நாட்டின் உள்விவகாரமாம்.

இப்படிச் சொல்லியிருப்பவர் வேறு யாருமல்ல. இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தான். ஆக, ஈழத்தமிழரை இந்தியா ஒருபோதும் கைவிட்டு விடாது. அவர்களைப் பாதுகாக்க- கௌரவமாக வாழ நடவடிக்கை என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அண்மையில் சொன்னதெல்லாம் வெறும் பொய் - பித்தலாட்டம் என்றே முடிவுக்கு வரவேண்டி யிருக்கிறது.

http://www.tamilnaatham.com/articles/2009/jun/special/thol_20090613.htm

நன்றி: ~நிலவரம்|

Sunday, June 07, 2009

நல்லாற்றுப் படூஉம் நெறி

பல்சான் றீரே! பல்சான் றீரே!
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்
பயனில் மூப்பின் பல்சான் றீரே!
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை இரங்குவீர் மாதோ!
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தால் ஓம்புமின் அதுதான்
எல்லாரும் உவப்பது அன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே!

- ஆசீவகத் துறவி நரிவெரூஉத் தலையார்.
- புறம் 195.
- திணை: பொதுவியல்; துறை: பொருண்மொழிக் காஞ்சி

பல்சால்பாளரே! பல்சால்பாளரே!
கயல்முள்ளென நரை முதிர்ந்து கன்னம் திரைக்கும்,
பயனிலா முதுமைப் பல்சால்பாளரே!

கூர்ந்த மழுக் கொண்ட பெருந்திறலோன்,
பாசத்தால் உம்மைக் கட்டிப் பிணிக்கும்
காலத்திற் தான் இரங்குவீரோ?

நல்லது செய்யாமற் போனாலும்
அல்லது செய்யாமை ஓம்புங்கள்

அதுதான்,

எல்லோரும் விரும்புவது,
அன்றியும்
நல்வழிப்படும் நெறியும்
அதுவேயாகும்.

நண்பர்களே!

இணையத்தில் பேசுகின்ற ஒவ்வொரு கருத்தும் பலராலும் (சிங்களவராலும், எதிரிகளாலும்) படிக்கப் படுகின்றன. [தமிழர் முகமூடியுடன், பல சிங்களவர் தமிழ்ப் புலங்களில் ஊடுருவியிருக்கிறார்கள். அதுபோக பல்வேறு உளவாளரும் படிக்கிறார்கள்.] “தமிழர் தமக்குள்ளே உட்பகையால் அடித்துக் கொண்டு இன்னும் குலைந்து கிடக்கிறார். எனவே இன்னும் கடுநடையை நாம் கைப்பிடிக்கலாம்” என்று அவர்கள் பொள்ளிகை (policy) சமைக்கும் காலம் இது. அவர்களின் செயலும் போக்கும், மே 19க்கு அப்புறமும் அப்படியே தமிழினக் குலைவாகத்தான் இருக்கிறது. ”அதைச் செய்வோம், இதைச் செய்வோம்” என்று அரற்றிக் கொண்டிருந்த இந்தியாவின் பேராயக்கட்சி அரசு ஒரு எள்முனையும் நகரவில்லை, வெறும் உப்புக்குச் சப்பாணியாய் ஒப்புக்குக் குரலிடுவதைத் தவிர.

”எங்கிருந்தோ ஒரு ’தேவதூதன்’ ஈழத் தமிழரிடையே தோன்றுவான்” என்று வானத்தைத் அண்ணாந்து பார்க்கும் வெள்ளந்திப் போக்கைத் தவிர உருப்படியாய் ஏதாவது இருந்தால் பேசுங்கள். இனிச் செய்ய வேண்டியதை ஒருசிலர் எடுத்துரைத்தார்கள். அதையொட்டி மற்ற எவர் பேசுகிறார்கள் என்று பார்த்து ஏமாந்தது தான் மிச்சம். [இன்னும் மானாட, மயிலாட என்று திரைக்கதை ஒய்யாரங்கள் பேசும் அவலத்தை ஒழித்து என்றைக்கு வெளிவருவோமோ, தெரியவில்லை.]

50000 பேர் மூன்றுநாளில் இறந்ததைப் பற்றி யார் பேசுகிறார்கள் சொல்லுங்கள், சிங்களவன் வேதிக் குண்டு போட்டுக் கொன்றதை யார் பேசுகிறார்கள் சொல்லுங்கள். அறம் பிறழ்ந்து போர் நடந்ததை யார் பேசுகிறார்கள் சொல்லுங்கள். எல்லாவற்றிற்கும் புலிகளே காரணம் என்று சொல்லுபவர்கள் “தமிழர்கள் அடிமைகளாய் இருங்கள்” என்றே சொல்லுவதாய்த் தான் எனக்குத் தோன்றுகிறது.

இன்னும் எத்தனை நாட்களுக்கு ஒரு சார்பாகவே நீங்கள் பேசுவீர்கள்? எதிர்ப் பக்கத்தைச் சிங்களவனைச் சாடவே மறுக்கிறீர்கள். புலிகளைச் சாடுபவர்களிடம் இருந்து ஒரு சாடல் இன்னொரு பக்கம் பாயுமா என்று பார்க்கிறேன். ஊகூம், ஓர் அம்பும் பாயவில்லை. அவனுக்குக் கொண்டாட்டம் தான்.

இப்படிப் புலிகளை மட்டும் காரணிகளாய்க் காட்டிக் கொண்டிருப்பது ஒருவகைப் புறம் பேசுதலே, வெறுப்புடன் உரையாடுதலே. ஒரு சில குழுமத்தில் மட்டும் தான் இப்படிப் புறம்பேசுதல் நடப்பதாக எண்ணாதீர்கள். தமிழர் இடையே பரவலாக, ஒற்றுமை குலைக்கும் வேலை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஈழத் தமிழருக்கும், தமிழகத் தமிழருக்கும் இடையே, ஈழத் தமிழருக்கும், புலம் பெயர்ந்த தமிழருக்கும் இடையே, ஈழத் தமிழருக்குள்ளேயே வடக்கு - கிழக்கு என்ற பிரிவு, மலையகம் - யாழ்ப்பாணம் என்ற பிரிவு, முசுலீம் - முசுலீம் அல்லாதோர் என்னும் பிரிவு, வேளாளர் - வேளாளர் அல்லாத பிரிவு என்று எத்தனை பிரிவுகளை வைத்து விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள்?

சிங்கமும், நாலு எருதுகளும் என்ற கதை தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. நாலு எருதுகளுக்குள் பிளவை உண்டு பண்ணி, ஒவ்வொரு எருதாகச் சிங்கம் அடித்துச் சாப்பிடும். இதுதான் இப்பொழுது நடந்து கொண்டு இருக்கிறது. இனியும் நடக்கும். இதை அறியாமல், இதைச் சரி செய்யாமல், நம் மக்களின் துயரும் துடைக்க முடியாது. போராட்டத்தை இயன்ற வழிகளில் தொடரவும் முடியாது. 60 ஆண்டு காலத்தில் முதலில் மலையகத் தமிழர்கள், அடுத்து கிழக்கு ஈழத் தமிழர்கள், அடுத்து வடக்கு ஈழத் தமிழர்கள் சாப்பிட்டாய் விட்டது. இனி அடுத்து முசுலீம் தமிழர்கள் இரையாகலாம். நாம் வாளாய் இருந்தால், இனியும் இது போன்ற செயல்கள் தொடரும். மறைவாக நமக்குள்ளே வெறுங்கதைகள் பேசுவதை முதலில் நிறுத்துவோம்.

நம் கண்ணெதிரே, திறந்த வெளிச் சிறையில் இருக்கும் 300000 பேரில் இருந்து 15000 இளையர் (ஆண்களும், பெண்களும்) காணாது போக்கடிக்கப் படுகிறார்கள் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. நாளும் இது அங்கே நடக்கிறது. 300000 பேரில் நிரவலாய்ப் பார்த்தால் இளையர் என்போர் 90000 பேர்தான் இருப்பார்கள். அதில் 15000 பேர் என்பது ஆறில் ஒரு பங்கு. ஆக மொத்தம் வன்னித் தமிழரைக் கிழவரும் சிறாருமாக ஆக்கப் பார்க்கிறார்கள். இன்னும் 30 ஆண்டுகளுக்கு தமிழர் மீண்டும் எழவிடாமல் இருக்க முயற்சிகள் நடக்கின்றன. நாம் என்னடா என்றால் பிண நோட்டம் (post - mortem) பார்த்து எங்கே தப்பு நடந்தது என்று ஆய்வு செய்துகொண்டிருக்கிறோம். நடந்து முடிந்ததை அலசிக் கொண்டிருப்பதற்கு மாறாய், இன்று நடக்கக் கூடியதை எப்படித் தவிர்ப்பது என்று பார்க்கவேண்டாமா?

”ஈழம் என்ற சொல்லையே எந்தக் கட்சியும் வைத்துக் கொள்ளக் கூடாது. ஈழக் கட்சிகள் எல்லாம் சிங்களக் கட்சிகளுக்குள் உருக்குலைய வேண்டும்” என்று மகிந்த அரசு வாய்மொழிக்
கட்டளை பிறப்பித்திருக்கிறது. இன்னும் ”ஐ.நா. உள் நுழையக் கூடாது” என்று ஆணை பிறப்பித்தும், இந்திய வெளிநாட்டுத்துறை அமைச்சரைப் பார்த்து, “நீ யாரடா எங்களைச் சொல்வதற்கு? உன் வாயை மூடிக் கொண்டு கிட” என்று கோத்த அபயாவின் நெருங்கிய தோழர் மூலம் திமிர்ப் பேச்சும் விட்டுக் கொண்டிருக்கிறது சிங்கள அரசு.

இந்த நேரத்தில் இவற்றைப் பற்றிப் பேசாமல், புலிகளைப் பற்றிப் பேசி நீங்கள் சாதிக்கப் போவது என்ன?

வேண்டுதலுடன்,
இராம.கி.

Tuesday, June 02, 2009

புலிகளை அரக்கராய்க் காட்டும் போக்கு

அண்மையில் தமிழ்மன்றம் மடற்குழுவில், ”சின்னஞ் சிறுவர், ஆடவர், பெண்டிர் மடியில் வெடி குண்டுகளைக் கட்டிக் கொண்டு, கழுத்தில் சைனைடு வில்லை மாலை சூடிக் கொண்டு ஆயிரக் கணக்கான ஏழை எளியவரைக் கவசச் சுவராகக் கட்டி வைத்துப் போர் புரிவதா அறப்போர் ?” என்றும், “30 வருட ஈழப் போரில 70,000 பேர் மாண்டதில் விடுதலைப் புலிகளின் பங்கு : 55% & சி்ங்கள அரசின் பங்கு : 45%” என்றும் குறிப்பிட்டுச் சாடிக் கருத்து எழுந்தது. இது போன்ற வாசகங்களை எங்கிருந்தோ பரப்புரை ஆவணங்களில் இருந்து தேடிப் பிடிக்கிறார்கள் போலும்.

இந்தியத் திருநாட்டில் இல்லாத குழு அடையாளங்களா? புலிகளிடம் இருந்த / இருக்கிற சில அடையாளங்களை வைத்து அவர்களை அரக்கர்களாய்த் தோற்றம் காட்ட வருவது ஏன்? Why are we demonising the Tigers? As freedom fighters and belonging to an army, they had certain practices, which we may like or dislike.

சீக்கியர் இனத்தில் குரு கோவிந்த் சிங் , ”கல்சா” என்ற இயக்கத்தைத் (அந்தக் காலத்தில், அது ஒரு அரண - military - இயக்கம் தான்.) தொடங்கி, அதன் எல்லா உறுப்பினரும் 5 அடையாளங்களை எப்பொழுதும் வெளிக்காட்ட வேண்டும் என்று ஒரு நடைமுறையை ஏற்படுத்தினார். நீட்ட சடைமுடி(kesh - long hair), சீப்பு (kangha - comb), பிச்சுவாள் (kirpan - dagger), இரும்புக் காப்பு (kara - steel bracelet), குறுங்காற் சட்டை (kaccha - a pair of knicker-bockers) என்ற இந்த அடையாளங்கள் இயக்கத்திற்கு ஒற்றுமையையும், உடன் பிறந்தோர் போன்ற உணர்வையும், ஒக்குமையையும் தந்ததாகவே எல்லோரும் கொண்டார்கள். இந்த அடையாளங்கள் தாங்கள் ஒரு குழு என்ற ஆழ் உணர்வையும் வளர்த்தன. பிச்சுவாள்க் கத்தியை எப்பொழுதும் வைத்துக் கொண்டிருப்பதை யாரும் தவறாக இன்றுவரை நினைக்கவில்லை. அது ஒரு வீர உணர்வின் வெளிப்பாட்டாகவே கருதப் பட்டது.

அது போல வெவ்வேறு குழுக்களிடம் வெவ்வேறு அடையாளங்கள் இருந்ததாய் வரலாறு சொல்லுகிறது. இவை சரியா, தப்பா என்று விழுமிய நயப்புகளுக்குள் (value judgements) நான் போகவில்லை. இந்த அடையாளங்கள் இருந்தன என்று மட்டுமே சொல்லுகிறேன்.

காபாலிகர்கள் என்ற வீரசிவ நெறியாளர்கள் இருந்தார்கள். அப்பர் இந்த நெறியை ஒட்டியே இருந்தார் என்பது வரலாறு. [இவர்கள் சுடுகாட்டுச் சாம்பலைத் தான் நெற்றியில் பூசிக் கொள்ளுவார்கள். இவர்களுக்கு இருக்கும் சில விந்தையான பழக்கங்களை இன்று சொன்னால் நமக்குக் கேட்பதற்கு வியப்பாய் இருக்கும்.] காளாமுகர்கள் என்று இன்னொரு வகை சிவ நெறியாளர் இருந்தார்கள். ஞான சம்பந்தர் இந்த வழிக்கு நெருக்கமானவர் என்பதும் ஆய்வு வழி அறியப் பட்டிருக்கிறது. இவர்களுக்கும் விந்தையான நடைமுறைகள், அடையாளங்கள் உண்டு. பல சிவன் கோயில்கள் மயானங்களில் எழுப்பப் பட்டிருக்கின்றன. மற்ற சிவ நெறியாளர்களும் பல்வேறு அடையாளங்களை அணிந்திருந்தார்கள். இதுபோல விண்ணவ நெறியாளர்களிடத்தும் அடையாளங்கள் உண்டு. குழு அடையாளங்களை வைத்து, ஒருவரை “நல்லவர். கெட்டவர்” என்று சொல்லுவது எப்படி?

தென்பாண்டி நாட்டில், முக்குலத்தோரிடையே, வீட்டுக்கு ஒரு வீச்சரிவாள் இருக்கும். முன்னோர் நினைவு நாட்களில் படையலின் போது விளக்கணி செய்யப் பட்டு அது நடுநாயகமாய் இருந்து ஆட்சிசெய்யும். எங்கள் ஊர்ப்பக்கம் பார்ப்பனர் தவிர்த்த மற்ற எல்லாச் சாதியினரிடமும் ”கிலிக்கி” என்ற கூர்மையான குத்துக் கம்பி [இரும்பு, பித்தளை, வெண்கலம், வெள்ளி, தங்கம் போன்ற மாழைகளில் அவரவர் செல்வ நிலைக்கு ஏற்ப வெவ்வேறு மணிகளால் அழகு செய்யப்பட்டுக் கவின்பட இருக்கும்] ஒன்பான் இரவு [நவராத்திரி நாள்] முடிந்து பத்தாம் நாளில் “வெற்றித் திருநாள் [விசய தசமி]” கொண்டாடி ஊரின் நடுவில் இருக்கும் வாழையைப் போய் குத்தி வருவார்கள். இன்றைக்கு வாழை, அன்றைக்கு அது ஒரு விலங்கு, குறிப்பாக எருமை. இன்னும் சொல்லலாம், பல சிவன் கோயில்கள், அம்மன் கோயில்கள், ஐயனார் கோயில்கள், மாலவன் கோயில்களில் கிடாவெட்டு நடந்திருக்கிறது. இன்றைக்கு அதை நிறுத்தி நாமெல்லோரும் பூசனிக்காயை உடைக்கிறோம்.]

ஆயுதம் இல்லாத வீடு, பாண்டிநாட்டில், ஏன் தமிழ்நாட்டில், கிடையாது. [நான் ஆயுதத்தைப் போற்றுகிறேன் என்று எண்ணாதீர்கள். அதன் பின்புலத்தைப் புரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லுகிறேன்.] அதற்காகத் தமிழர் எல்லோரும் தீவிரவாதியும் அல்லர்.

சையனைடு குப்பி என்பது ஓர் அடையாளம். அத்தோடு அதை விடுங்கள்.

சிறுவர் புலிகள் இயக்கத்தில் இருக்கிறார்கள். இதில் மெய்யும் இருக்கிறது, பொய்யும் இருக்கிறது. புலிகளே முன்னால் இந்த நடைமுறை பற்றி பல தன்னிலை விளக்கங்களை அளித்திருக்கிறார்கள். இந்தத் தவறுகள் அலசப் படத்தான் வேண்டும். [ஆனால் எதிராளியின் அரணமும் இதே குற்றத்தை கிட்டத்தட்ட இதே அளவிற்குப் புரிந்திருக்கிறது. இப்பொழுது புலிகளின் குற்றத்தை விரைந்து பேசும் யாரும் அதைக் கண்டு கொள்ளவே காணோம். வெற்றி பெற்றவன் செய்ததெல்லாம் சரி போலும்.]

”இனி வெடி குண்டுகளை மடியில் கட்டிக் கொண்டு” என்ற கருத்து.

நாம் பார்க்காத இரண்டாம் உலகப் போர்ப்படங்களா? வலிந்த எதிரியைத் தாக்க முனையும் மெலிந்த படை இது போன்ற அதிரடியான போர் உத்திகளை நடத்துவது முன்னும் நடந்திருக்கிறது. இன்றும் நடக்கிறது. நாளையும் நடக்கும். கௌரவர்களின் சுற்றிவளைப்பை உடைக்க அபிமன்யுவைப் பாண்டவர்கள் அனுப்பியது என்ன செயல் என்று எண்ணுகிறீர்கள்? கரும்புலி வேலை தானே? ”தம்பி, நீ உள்ளே போ, சுற்றிவளைப்பை உடை, நாங்கள் பின்னால் வருகிறோம்” என்று பாண்டவப் பெரியோர்கள் சொல்ல, ஏன் அந்தக் கண்ண பெருமானே சொல்ல, இவன் கரும்புலி வேலை நடத்த வில்லையா? அபிமன்யு செய்தால் அது அறப்போர். யாரோ ஒரு யாழினி செய்தால், அது தீய போரா?

கரும்புலி வேலைகளில் பொதுமக்கள் குறைந்த அளவில் பாதிக்கப் பட்டிருக்கின்றனரா என்று பாருங்கள். இல்லையென்றால் புலிகள் மேல் குற்றம் சொல்லுங்கள். மடியில் வெடிகுண்டு கட்டிக் கொள்ளும் போர் உத்திகளைப் பற்றிப் பேசுவதற்கு நீங்களும் போர் நிபுணர் இல்லை, நானும் அறிந்தவன் இல்லை. திண்ணையில் உட்கார்ந்து, செய்தித்தாளைப் பக்கத்தில் வைத்துப் படித்துக் கொண்டு, எங்கோ நடந்த போரை/நிகழ்வுகளை நாம் நேரே போய்ப் பார்த்தது போல் அலசி, அக்கு வேறு ஆணிவேறாகப் பிரித்துப் போட்டு, எல்லாவற்றையும் கிடுக்கிக் (criticize)கொண்டு, அட்டைக் கத்தியை வீசிக் கொண்டு, அறப்போர்/ மறப்போர் என்று அடம்பிடித்து இனம்பிரிப்பது நம்மை எங்கு கொண்டு சேர்க்கும்?

இனி ஏழை, எளியவரைக் கவசச் சுவராகக் கட்டிவைத்துப் போர் புரிவது பற்றிப் பார்ப்போம்.

இங்கும் பாருங்கள் வெறுமே வெற்றுச்சொற்களை மட்டுமே வீசுகிறோம். சிங்களவர் கணக்குப் படி சனவரியில் மூவாயிரம் புலிகள் தான் வன்னியில் இருந்தார்களாம், [புலிகளின் கணக்குப்படி அது இருபதாயிரத்திற்கும் மேல்.] அன்றைக்கு அங்கு இருந்த மக்கள் தொகை 3,89,000 பக்கம். கிட்டத்தட்ட 4 இலக்கம். 3000 பேர் 4 இலக்கத்தை மிரட்டிச் சுவராக்கியிருக்க முடியுமா, அதோடு அன்றைக்கு (சனவரியில்) இருந்த களத்தின் சுற்றளவு அஞ்சு கிலோமீட்டர், பத்துக் கிலோமீட்டர் அல்ல, நூற்றுக்கணக்கில் ஆன கிலோ மீட்டர். 4 இலக்கம் மக்களை 20000 பேர் கூட மிரட்டியிருக்க முடியாது. தப்பிக்கிறவர்கள் இந்தச் சுற்றளவில் எங்கு வேண்டுமானாலும் தப்பியிருக்கலாம். ஆனாலும் தப்பவில்லை. புலிகளோடே தான் நகர்ந்தார்கள், ஏனென்றால், 20000 பேருக்கு 5 பேர் என்று வைத்தாலே, 100000 மக்கள் அவர்களின் உறவினராகவே இருப்பர். மீந்துள்ளவர் புலிகளின் நாட்டில் தமிழீழத்தில் [ஆம், அது ஒரு நாடாகவே, சென்ற 7, 8 ஆண்டுகளாய் இருந்தது. இதை எந்தக் கொம்பனும் மறுக்க முடியாது.] வாழ்ந்தவர்கள். அவர்கள் புலிகளை நம்பினார்கள், சிங்களவனைக் கண்டு பயந்தார்கள், எனவே புலிகளோடு பெயர்ந்தார்கள்.

இந்தக் களச் சுற்றளவு சுருங்கச் சுருங்க இது ஒரு முற்றுகை போலவே அமைந்தது. இங்கும் அரண் உண்டு. அவை முல்லைத்தீவின் பாழாய்ப் போன கடற்கரையில் ஒரு முக்கால் வட்டமாய் அமைந்த நிலத்தில் புதைத்த மிதிவெடிகளாய் இருந்தன. சுவருக்குப் பகரியாய் மிதிவெடிகள். மிதிவெடிகளுக்கும் பின்னால் புலிகள், புலிகளுக்கும் பின்னால் பொதுமக்கள். நடுவில் புலிகளின் அமைச்சகம். உலகில் எந்தப் போர்ப் பாசறையும் இப்படித்தான் இருக்கும். [அர்த்த சாத்திரக் காலத்தில் இருந்து இப்படித்தான் இந்தியத் துணைக்கண்டத்தில் எந்தக் கோட்டையும், பாசறையும் இருந்தன.] முட்டாள் தனமாக யாரோ ஒரு பெருகபதி (ப்ரஹஸ்பதி) மக்களுக்குப் பின்னால் புலிகள் இருந்தார்கள் என்று சொல்கிறார் என்றால், அவருக்குப் போரைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்று பொருள். That person must have been very naive. நாம் எல்லோரும் ஏன் இப்படி விவரம் தெரியாதவர்களாய் இருக்கிறோம்?

நான் புலிகளின் அரண் ஏன் குலைந்தது என்று பேச வரவில்லை. அதைப் பற்றிப் பேசுவது நம்மைப் போர் உத்திக்குள் கொண்டு செல்லும். மக்கள் ஏன் அங்கு இருந்தார்கள் என்று மட்டுமே பார்க்கிறேன். இரண்டாம் உலகப் போரில் இலண்டன் முற்றுகைப் போரில் இலண்டன் மக்கள் ஏன் இலண்டனுக்குள் இருந்தார்கள்? இதே போல செருமன் முற்றுகையின் போது மாசுக்கோ மக்கள் ஏன் உள்ளிருந்தார்கள்?, இதற்கு மாற்றாக ஆங்கில, பிரஞ்சு, அமெரிக்க, உருசிய அரணங்களின் முற்றுகையின் போது பெர்லின் மக்கள் ஏன் உள்ளிருந்தார்கள்? அதே காரணங்களுக்காகத் தான் 1.69, 000 மக்கள் முள்ளிவாய்க்காலுக்கு அருகில், மிதிவெடி அரண்களுக்கு உள்ளே புலிப் போராளிகளுக்குப் பின்னே இருந்தார்கள்.

வெள்ளைக்காரன் செய்தால் அது பெரிய தற்காப்புப் போர்? புலிகள் செய்தால் மட்டும் இந்த வகைப் போர் “கோழைப்போர்” ஆகிவிடுமோ?

இது போன்ற உள்ளிருந்து போரிடும் அகப்போர் நிலைகள் இன்று நேற்று இல்லை. 2500 ஆண்டுகளுக்கு முன்னிருந்து உண்டு. உழிஞைப் போர் என்பது முற்றுகைப் போர்.

“முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும்
அனைநெறி மரபிற்றாகும் என்ப”

என்பார் தொல்காப்பியர்.

அரணுக்கு உள்ளிருந்து எதிர்த்து நிற்பது நொச்சிப் போர். அது முற்றுகையை உடைப்பது. போர் உத்திகளைப் பொறுத்து, அது சிலசமயம் வெல்லும், சில சமயம் தோற்கும்.

ஒரு நூறாயிரம் போர்களாவது உழிஞை - நொச்சித் திணை வகையில் உலகில் நடந்திருக்கின்றன. நொச்சிப்போர் நடக்கிற போது, மக்களை ஒதுங்கச் சொல்லித் தான் நொச்சிப் படைத்தலைவர்கள் கேட்பார்கள். ஆனால் ”உழிஞைக்காரனிடம் மாட்டிக் கொள்ள வேண்டாம், நம்மவர் தோற்றாலும், நடப்பது நடக்கட்டும்” என்று கோட்டைக்கு உள்ளேயே நொச்சிக் கோட்டை மக்கள் தங்கி விடுவார்கள். இதுதான் உலகெங்கணும் நடந்திருக்கிறது.

ஆனால் அந்தக் காலத்தில் அறநெறி இருந்தது. [பாரியின் பறம்பு மலையை முற்றுகையிட்ட மூவேந்தர்கள் உள்ளே இருந்த மக்களைப் பட்டினி போட்டுச் சாகடிக்கப் பார்த்தார்கள். முடிவில் பல மாதங்கள் முற்றுகை நீடித்து, மேற்கொண்டு உணவுப் பண்டம் இல்லாத நிலையில் வேள்பாரி வெளியே வந்தான். போர் தும்பை நிலைக்கு மாறியது. பாரி தோற்றான்.]

இன்றோ, ஊரில் உள்ள அத்தனை புறம்பு முறைகளையும் கொண்டு வந்து, [கொத்துக் குண்டு, ஒளிய (phospherus) வெடிக் குண்டு, நச்சுப் புகைக் குண்டு (phosgene - இது இந்தியாவில் இருந்து போனதாகப் பலரும் சொல்லுகிறார்கள் - உண்மை ஏதென்று தெரியாது.)] அவை அத்தனையும் வானத்தின் வழி விட்டெறிந்து, புலிகளின் நொச்சிப்போரை ஒன்றுமில்லாமற் செய்து, சிங்களவன் முறியடித்து விட்டான்.

முடிவில் வெறும் பீரங்கி வண்டிகளைக் கொண்டே, மூன்றே நாளில், 50000 பேரை மிதித்து உழுதே, கொன்றிருக்கிறான். நாமோ, இதைப் பற்றியெல்லாம் பேசாமல், கொதிக்காமல், புலிகளைக் குறைகூறிக் கொண்டிருக்கிறோம்.

இதைச் செய்தது புலிகளா?

புலிகள் செய்தது தவறான போர் உத்திகள் என்று வேண்டுமானால் சொல்லலாம். அவர்களுடைய கருதுகோள்கள் அவர்களை ஏமாற்றிவிட்டன.

“எதிரி அறநெறியோடு போரிடுவான்,
உலகம் ஈர நெஞ்சு கொண்டு உள் நுழைந்து இந்தப் போரை நிறுத்தும்,
சென்னையில் இருக்கும் கிழவர் ஏதேனும் செய்வார்,
தில்லியில் இருக்கும் முட்டாள்களுக்குக் கொஞ்சமாவது விளங்கும்
அல்லது ஏதோ ஒரு ”அற்புதம்” நடந்து இந்திய ஆட்சி மாறும்,
முடிவில் நல்லூர்க் கந்தன் எப்படியாவது காப்பாற்றிவிடுவான்”

என்று ஏமாளித்தனமாக நம்பிக் கொண்டிருந்தார்கள். அதுதான் அவர்கள் செய்த பெருந் தவறு. இல்லையென்றால் வெறும் தொலைபேசித் தொடர்பை [அது மகிந்தவிற்குப் போய்ச் சேர்ந்திருந்தாலும்] நம்பி வெள்ளைக் கொடியேந்திச் சரணடையப் போயிருக்க மாட்டார்கள்.

மொத்தத்தில் ஏமாளிகளாகிப் போனார்கள். இன்றைக்கு ஏமாளிகளை அரக்கர் என்றும், ஏமாற்றியவரைத் தேவர் என்றும் சொல்லுகிறோம். [அதுதானே காலங் காலமாய் நாவலந்தீவு என்று சொல்லப்படும் இந்தியத் துணைக்கண்ட வழக்கம்:-)]

“30 வருட ஈழப் போரில் 70,000 பேர் மாண்டதில் விடுதலைப் புலிகளின் பங்கு : 55% & சி்ங்கள அரசின் பங்கு : 45%” என்று குறிப்பிட்டிருந்தவர், அறிவியல் வழிமுறைகளைக் கொண்டு, ”இந்தப் புள்ளிவிவரம் எங்கிருந்து கிடைத்தது? அதன் நம்பகத் தன்மை என்ன? இதன் “நதிமூலம், ரிஷிமூலம்” என்ன? - என்று ஆய்ந்து பார்த்தால் நன்றாக இருக்கும்.

எங்கு பார்த்தாலும் ”புலிகள் அதைச்செய்தார்கள், இதைச் செய்தார்கள்” என்று கேட்டு என் செவி மரத்துப் போயிற்று. 30 ஆண்டு ஈழப் போரில் 25000 புலிகள் இறந்திருப்பார்கள் என்று சொல்லுகிறார்கள். 25ன் கீழ் 70 என்பது 35 விழுக்காடு வருகிறது. அப்பொழுது 20 விழுக்காடு தான் புலிகள் செய்த கொலை என்று மேலே உள்ள கணக்கு சொல்கிறது.

70000, 55% என்ற இரண்டையுமே சரிபாருங்கள் என்றே அந்தக் கணக்குரைத்தவருக்கு நான் மறுமொழியாகச் சொல்ல முடியும்..

எனக்கு இந்தப் புள்ளிவிவரம் எல்லாம் தேவையில்லை. 2007க்கு முன் மூன்றில் ஒரு பங்கு தீவு நிலத்தில், தமிழீழத்தில், வாழ்ந்த மக்களின் அமைதி வாழ்வும், அப்பொழுது அங்கு போய் வந்த எண்ணற்ற மக்களின் நேரடி அறிக்கைகளும் ”அங்கு மக்களால் விரும்பப்பட்ட அரசே நடந்தது” என்ற நிறைவை எனக்குத் தருகிறது. இவ்வளவு பேரைப் புலிகள் கொலை செய்திருந்தால், அப்படி ஓர் அரசு 7,8 ஆண்டுகளுக்கு நடந்திருக்க முடியாது. நல்லூர்க் கந்தன் நன்றாகவே அறிவான்.

மீண்டும் சொல்லுகிறேன். புலிகள் தவறு செய்திருக்கிறார்கள். அவை அலசப் படவேண்டும். ஆனால் சிங்களவனின் கண்ணாடி வழியாகப் பார்த்து அல்ல. தமிழனின் பார்வையில் அவை செய்யப் படவேண்டும். அதே பொழுது, அந்த அலசலுக்கு இது நேரமல்ல.

என் பார்வையில் அவர்கள் போற்றப் படவேண்டிய போராளிகளே. என்ன செய்வது? இந்த முறை தோற்றுப் போய்விட்டார்கள். .

இடையில் நலிந்து போன நம் மக்களைத் தேற்றிக் கொண்டு வரவேண்டும். அவர்களுக்கு ஓர் ஆறுதல் ஏற்பட வேண்டும். கூடிச் செறியும் வேதனைகள் குறைய வேண்டும். ஆனால், தமிழர் அடிமையாகக் கூடாது.

அன்புடன்,
இராம.கி.