Sunday, April 23, 2006

பாரதி தாசனும் தியாகராசர் கீர்த்தனைகளும்

"தமிழிசை இயக்கம்" என்ற பொத்தகத்தில் இரா. இளங்குமரன் கொடுத்துள்ள செய்தி. (பக். 62, மணிவாசகர் பதிப்பகம், சென்னை 600001, முதற்பதிப்பு:2, திசம்பர், 1993)

பாரதி கவிதா மண்டல அலுவலகத்தில் பாவேந்தர் பாரதிதாசனார் இருந்தார். அப்போது பஞ்சாபகேசய்யர் என்பார் "தெலுங்கு சமஸ்கிருதம் போன்று தமிழில் கீர்த்தனங்கள் பாட முடியாது; அவ்வாறு பாடினாலும் அவை தாளத்திற்கும் சங்கதி போட்டுப் பாடுவதற்கும் ஒத்து வராது" என்றார். அப்பொழுது பாவேந்தர் உடனிருந்த எஸ்.ஆர்.சுப்பிரமணியத்தைப் பார்த்து, "சுப்ரமண்யா, அவன் என்ன சொன்னான், தியாகராசர் கீர்த்தனை போல் தமிழில் பாட முடியாது! அது என்ன தியாகராசர் கீர்த்தனை? இங்கு ஏதாவது இருக்கிறதா?" என்றார். "இருக்கிறது" என்று சுதேசமித்திரன் வாரப் பத்திரிக்கையில் உள்ள [இங்கே உள்ள என்பது, பின்னால் பாரதி தாசனால் மொழிபெயர்க்கப் பட்டவற்றைக் குறிக்கிறது - இராம.கி.] மொழிபெயர்ப்பும் இசையமைப்பும் என்ற பத்துக் கீர்த்தனைகளைக் கொடுத்தார் சுப்ரமணியம், மேல் நிகழ்ந்ததைச் சுப்பிரமணியமே கூறுகிÈ¡ர்.

சாப்பிட்டு வந்தவுடன் கவிஞர் எழுதினார். "நிஜமர்ம முலனு" என்னும் கீர்த்தனையைத் தியாகராசர் முத்திரையுடன் எழுதினார். "உடையாரே பாடு" என்றார். அவருடன் சேர்ந்தும் பாடினார். "அவன் என்னமோ சொன்னானே, சங்கதி; அதெல்லாம் போட்டுப் பாடு" என்றார். அவரும் பாடிவிட்டு "இந்தப் பாட்டு அற்புதம்! அற்புதம்!" என்றார். "பத்துக் கீர்த்தனைகளை மொழிபெயர்த்தார் கவிதா மண்டலத்தில் வெளியிட்டோம்" என்று எஸ். ஆர். சுப்பிரமணியம் பாவேந்தரின் மொழிபெயர்ப்புக் கீர்த்தனைகள் பிறந்த சூழலைக் குறித்துள்ளார்.

(ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் கவிதா மண்டலம் 1:3:35, ஆண்டு 1935.)
--------------------
இன்றைக்குப் பெரிதும் பலரால் பாடப்படும் மருகேலரா என்ற தியாகராசர் கீர்த்தனைக்குப் பாரதி தாசனின் மொழிபெயர்ப்பு கீழே உள்ளது. (1935 களில் பாரதி தாசன் பாடல்களில் வடமொழிச் சொற்கள் ஊடு வருவது உண்டு; அவர் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் தனித் தமிழுக்கு வந்து சேர்ந்தார்.) இந்தக் கீர்த்தனை "பாவேந்தர் பாரதி தாசனின் பழம் புதுப்பாடல்கள், பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக் கழகம், பல்கலைப் பேரூர், திருச்சிராப்பள்ளி 620 024" என்ற பொத்தகத்தில் இருந்து தட்டச்சு செய்தது. பக்கம் 475 - இராம.கி.

மறைவென்ன காண்
(மருகேலரா என்ற கீர்த்தனத்தின் மொழிபெயர்ப்பு)

பல்லவி

மறைவென்ன காண் ஓ ராகவா?

அனுபல்லவி

மறைவேன் அனைத்தின் உருவான மேலோய்
மதியோடு சூர்யன் விழியாய்க் கொண்டோ ய் (மறை)

சரணம்

யாவும் நீயே என்றென் அந்த ரங்க மதில்
தேவிரத்தில் தேடித் தெரிந்துகொண்டே னையா
தேவரிரை யன்றிச் சிந்தனையொன் றில்லேன்
காக்கவேண்டும் என்னைத் த்யாகராஜன் அன்பே! (மறை)

இராகம்: ஷயத்தஸ்ரீ தாளம்: ஆதி

அன்புடன்,
இராம.கி.

Friday, April 21, 2006

தீச்சுடர் எழுத்து

(பாவேந்தர் பாரதிதாசனின் நினைவை ஒட்டி பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் பாடியது. அவர் நாளை நினைவு கூர்ந்து இங்கே இந்தப் பாவைப் பதிகிறேன்.)

அன்புடன்,
இராம.கி.

எவர்கொல் துணையே! கவர்பு உற்றனையே!
குவடு பட நடந்த சுவடும் மாறாது;
வான் பட்டு அதிரும் குரலும் தேயாது;
வல்லுயிர் செகுக்க மாற்றலர் வெரூஉம்
கொல் அயில் விழியின் இமையும் குவியாது;
முன்னைப் பெருமையின் முங்கு பேர் உணர்வால்
அன்னைத் தமிழ்க்கே அலங்கல் சார்த்தித்
தீச்சுடர் எழுத்தால் பாச்சுடர் கொளுத்தி,
ஓச்சிய தடங்கை வீச்சும் ஓயாது;
உயிர் உணர்வு ஊரப் பொழிந்து உயர் வாழ்க்கைப்
பயிர் செழிப்பு ஊரப் பாடினை கொல்லோ!

இனியே

துவர் இதழ்த் தாமரை கவர்துளி மாந்தி
உவப்புற முரலும் கரு வண்டு ஒப்ப
இயற்கை தூங்கும் புலவரும் இல்லர்!
மயற்கை அகற்றும் புலவரும் இல்லர்!
மருட்சி அகற்றிடு புரட்சியும் இல்லை!
இருள் துயில் கொண்ட தமிழகம் எழவே
அருள்மொழி நெஞ்சத்து அறமும் மடிந்தது!
தயிர்கடை மத்தம் ஆகித் தமிழர்
உயிர்கடைந்து எடுக்கும் நின் பெரும் பிரிவால்
உள்ளமும் அறிவும் ஓய்ந்த
கள்ளமில் உணர்வின் கனியுநர் தமக்கே!

பொழிப்பு:

குன்றம் பொடிந்து படும்படி பெருமிதத்தோடு நீ நடந்து சென்ற காலடிகளும் இன்னும் மறையவில்லை; வானில் தெறித்து அதிரும்படி முழங்கிய நின் குரலொலியும் இன்னும் தேய்ந்து போகவில்லை; வலிந்த உயிர் அழிந்து போகும்படி பகைவர் அஞ்சுகின்றதும் உடலைக் கொல்லுகின்றதும் வெல் போல் கூரியதும் ஆன நின் விழியின் இமைகள் இன்னும் குவிந்து போகவில்லை; முன் நாளைய பெருமையுள் முழுகி எழுந்த பேருணர்வினால் தமிழன்னைக்குப் புகழ் அலை சுட்டியும், தீயின் ஒளிநாக்குகள் போலும் எழுத்துக்களினால் பாட்டில் சுடர் கொளுத்தியும், அரசோச்சி நின்ற நின் பெரிய கைகளின் வீச்சும் இன்னும் ஓய்ந்த பாடில்லை. உயிர்களின் உணர்வு மிகும்படிப் பாடல்களை மழையெனப் பொழிந்து உயரிய வாழ்க்கை எனும் பயிர் செழித்துப் புடை நிரம்பும்படி நீ பாடியிருந்தனையே!

இனியே, சிவந்த இதழ்கள் நிறைந்த தாமரையின் தேன் துளிகளைக் கவர்ந்து அருந்திய உவப்பின் மேலீட்டால் முரலுதல் செய்யும் கரிய வண்டைப் போல், இயற்கையோடு ஒன்றிப் படியும் புலவர் எனப்படுவோரும், இனி இலராக; மக்களின் அறிவு மயக்கம் அகற்றுகின்ற மறவர் எனப்படுவோரும் இனி இலராக; இருள் மண்டி உறக்கம் கண்டிருந்த தமிழ் நிலம் விழித்து எழும்படி, அருள் மழை பொழியும் அறம் பூண்ட நெஞ்சம் மடிந்துற்றதாக. தயிரை அலப்பிக் கடைகின்ற மத்துப் போலும், தமிழரின் உயிரைக் கடைந்தெடுக்கின்ற நின்னுடைய பிரிவினால் உள்ளமும் அறிவும் ஓய்தல் நின்ற கள்ளமற்ற உணர்வினாற் கனிந்து நிற்போர் தமக்கு, எவர் இனித் துணையாவரோ? இறப்பெனும் கள்வனால் கவர்ந்து கொள்ளப் பெற்றனையே!

விரிப்பு:

இப் பாடல் புறத்துறையைச் சார்ந்ததாகும். பாவேந்தர் பாரதிதாசன் என்னும் கனகசுப்புரத்தினம் மறைந்த ஞான்றை உள்ளக் கவற்சி மீதூரப் பாடிய கையறு நிலைப் பாடல் இது.

பாவேந்தரின் பெருமிதமான போக்கும், தமிழுக்கென ஓங்கி நின்ற குரலும், தமிழ்ப் பகைவர் அஞ்சிப் புறம் நடுங்கும் நோக்கும், பேரரசன் எனப் பெருமிதங் கொண்டு ஒச்சிய கைவீச்சும், அவர் வாழ்ந்த வாழ்க்கையின் பெரும்பயனும் இன்னும் தமிழர்களின் நெஞ்சங்களில் காட்சியாகி நிற்கும் நிலையினைக் காட்டி, அவர் பெரும் பிரிவால் தமிழர் இழந்த இழப்பையும், அவலத்தையும் தொகுத்துக் கூறியதாகும் இப்பாடல்.

Thursday, April 13, 2006

இன்று புதிதாய்ப் பிறந்தோம்

மேலே உள்ள சொலவடையை எழுத்தாளர் நா.பா தன் புதினம் ஒன்றில் (அது குறிஞ்சி மலரோ, பொன் விலங்கோ, எனக்கு இப்பொழுது நினைவுக்கு வரவில்லை) எழுதுவார். இந்தப் புதிதாய்ப் பிறக்கும் உணர்வு, பழையதை எல்லாம் அழித்துக் கழித்தபின் ஆர்வத்தோடு புதியதை எதிர்கொள்ளும் பாங்கு, நமக்கெல்லாம் மிகவும் தேவையான ஒரு பழக்கம். இந்த வாழ்வின் ஓட்டத்தில் விழுந்து எழுந்து, முக்கி முனகி, போராடித் தள்ளாடி, முன்வந்து நிற்கும் வேளையில், சோர்வு என்பது நம்மை அடைந்தாலும், மறுநாளைச் சந்திக்க வேண்டுமே என்னும் பொழுது, இந்தப் புத்துணர்வு நமக்கு மிகத் தேவையாக இருக்கிறது.

சில குறிப்பிட்ட நாட்கள் - பொழுதுகள்- காலங்களில் இந்தப் புத்துணர்வைத் தூண்டுகிற நிகழ்வுகள் ஏற்படுவது உண்டு. அப்படி ஒரு நிகழ்வே ஆண்டுப் பிறப்பு. ஒரு பாவலன் சொன்னது போல், "ஆண்டொன்று போனால் அகவை ஒன்றல்லவா போகிறது?" வாழ்வில் எவ்வளவு கனவுகளைத் தேக்கி நாம் நனவாக்கத் துடிக்கிறோம்? இனி வரும் ஆண்டில் அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று உறுதி கொள்ளுகிறோம் அல்லவா? அந்த உறுதி இல்லையெனில் வாழ்வு ஏது?

உலகின் வெவ்வேறு பகுதிகளில், ஆண்டுப் பிறப்பு என்பது ஒரே காலத்தில் வருவது அல்ல. இது இடத்திற்கு இடம் மாறலாம்; ஏன் ஒரே நாட்டின் வரலாற்றில், காலத்துக்குக் காலம் கூட மாறலாம். ஆனாலும் ஆண்டுப் பிறப்பு என்பது அனைவரும் எதிர் நோக்குகின்ற ஒரு நிகழ்வு. இந்தக் காலப் பண்பாட்டுக் குழப்பத்தால், தமிழர்கள் ஆங்கில ஆண்டுப் பிறப்பை மட்டுமே கொண்டாடுவது அதிகரித்தாலும், தமிழாண்டுப் பிறப்பை விழிவைத்து எதிர்கொள்ளுவோர் இன்னும் இருக்கிறார்கள்.

என்ன, திருப்பதியிலும், பழனியிலும், இன்னும் ஓராயிரம் கோயில்களிலும், இது போலக் கிறித்துவ தேவாலயங்களிலும், சனவரி முதல் நாளுக்குக் கூடும் கூட்டம், சித்திரை முதல் நாளுக்குக் கூடுமா என்பது அய்யம் தான். எந்தச் சமய நெறியாக இருந்தால் என்ன, தமிழனுக்கு உரிய சித்திரை நாளைக் கொண்டாட நம்மில் பலர், குறிப்பாக தமிங்கிலர் ஆகிப் போனவர்கள், ஏன் தயங்குகிறார்கள், வெட்கப் படுகிறார்கள்? இவர்கள் தனிப்பட்டுப் போனதாக உணர்கிறார்களோ? "உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்பதன் பொருளே அவரவர் தங்கள் தனித்தன்மையை இழப்பதுதானோ?" என்று ஒரோர் சமயம் உள்ளத்தை உறுத்துகிறது.

இருந்தாலும், விட்ட குறை தொட்ட குறை மறக்காத சில தமிழர்கள் சித்திரைத் திங்கள் பிறக்கும் நாளை ஆண்டுப் பிறப்பு என்று இன்னும் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறோம். அன்றைக்குக் கோயிலுக்கும், தேவாலயத்திற்கும், இன்னும் பள்ளிவாசலுக்கும் போய், "இறைவா, இந்த ஆண்டில் இன்னும் பல நல்ல செயல்களைச் செய்ய உறுதி கொடும், அய்யா" என்று வேண்டிக் கொள்ளுகிறோம். அன்று உறவினர்களையும், நண்பர்களையும் கூப்பிட்டு முகமன் கூறுகிறோம். வீட்டு வாசலில் கோலம் போடுகிறோம். மாந்தோரணம் கட்டுகிறோம். அந்த ஆண்டின் பெயரைக் கோலத்திற்கு அருகில் எழுதி வரவேற்கிறோம். வீட்டை முடிந்த வரையில் அழகு படுத்துகிறோம். (இந்த நாளில் தொலைக்காட்சிக்கு முன்னால் உட்கார்ந்து யாரோ ஒரு திரைப் படக் கலைஞனின் விடலைத் தனத்தை விழிநீர் தேங்க, வாய்நீர் வடியப் பார்த்து நேரத்தைக் கழிப்பது விழாவைச் சேர்ந்தது அல்ல; அது இன்னொரு வகை)

பனைவெல்லம் சேர்த்து, வேப்பம்பூப் பச்சடி வைக்கிறோம். ஒரு இனிப்பாவது அன்றையச் சமையலில் சேர்ந்து கொள்ளுகிறோம். மறவாமல் அன்று பாயசம் வைக்கிறோம். முடிந்தால் ஒரு உளுந்து வடை. இன்னும் சிலர், குறிப்பாகத் தமிழகத் தென் மாவட்டத்தினர் காலையில் எழுந்தவுடன் பூசை அறைக்குப் போய் கண்ணாடி பார்க்கிறோம். ஒரு சிலர் பூசை வேளையில் புத்தாண்டிற்கான அஞ்சாங்கம் படிக்கிறோம். அந்த ஆண்டுப் பலன் என்று சொல்லப் பட்டதை அறிந்து கொள்ள முற்படுகிறோம். புத்தாடை, பூ, பழம் எனப் புதுக்கிட்டுப் பெரியவர்களிடம் வாழ்த்துப் பெறுகிறோம். ஊரெல்லாம் வலம் வந்து யாரைக் கண்டாலும் வழுத்திக் கொள்ளுகிறோம். இப்படி எல்லாம் செய்து "செல்வம் நம் வாழ்வில் பொங்கி வழியட்டும்" என்று இறைவனை வேண்டிக் கொள்ளுகிறோம்..

மேலே சொன்னதை ஒரு சில மாற்றங்களோடு இசுலாமியர், கிறித்தவர், சிவநெறியாளர், விண்ணெறியாளர், சமணர், புத்தர் என எல்லாச் சமயத்தினரும் செய்ய முடியும். ஏனென்றால், ஆண்டுப் பிறப்பு என்பது குமுகாயப் பழக்கம், பண்பாட்டுப் பழக்கம் அல்லவா? அதைச் சமயம் தடுக்க இயலாது. ஓணம் என்று வந்தால் சேரலர் அனைவரும் அதைக் கொண்டாடவில்லையா? இதில் சமயம் குறுக்கே வருகிறதோ? இல்லையே! இந்த விவரம் கெட்ட ஆங்கில அடிமைத்தனம் ஊடே வந்து தடுக்கிறதோ? இல்லையே!

அதே முனைப்பில், தமிழர் எல்லோருக்கும் உரியது தமிழ் ஆண்டுப் பிறப்பு அல்லவா?

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, April 12, 2006

அளவைகள்

"கண்ணிமை நொடி என அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே"

இதற்கு உரை சொல்லுகின்ற உரையாசிரியர் இளம்பூரணர்

நிறுத்தளத்தல்,
பெய்தளத்தல்,
நீட்டியளத்தல்
தெறித்தளத்தல்,
தேங்க முகந்தளத்தல்,
சார்த்தியளத்தல்
எண்ணியளத்தல்

என ஏழு முறைகளைக் கூறி, அதற்கும் மேலாக, மாத்திரை அளந்தது சார்த்தியளத்தல் முறை என்பார். (இதேவரிசையைச் சற்றுமாற்றி, நிறுத்தளத்தல், பெய்தளத்தல், சார்த்தியளத்தல், நீட்டியளத்தல், தெறித்தளத்தல், தேங்க முகத்தளத்தல், எண்ணியளத்தல் என்று மற்றொரு உரையாசிரியரான நச்சினார்க்கினியரும் குறிப்பிடுவார்.)

இந்த அளவைகள் எல்லாம் எதைக் குறிப்பிடுகின்றன என்று பார்த்தால், சில அளவைகள் உடனே புரிகின்றன; சில சட்டென்று புரிவதில்லை.

1. நிறுத்தல் என்பது எடையை அளப்பதைக் குறிப்பிடுகிறது.

2. பெய்தளத்தல் என்பது நீர்மத்தின் வெள்ள அளவைக் குறிப்பிடுகிறது. [வெள்ளத்தை (volume) இந்தக் காலத்தில் இருபதாம் நூற்றாண்டுச் சொல்லான "கன அளவு" என்பதைக்கொண்டு தவறான முறையில் நாம் குறித்துவருகிறோம். கனமென்பதும் ஒருவகையில் எடையைக் குறிப்பதுதான். நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் எந்தெந்த அளவு விரிந்துபெருகி வெளியை (space) அடைத்துள்ளனவோ, அப்பெருக்கைத் துல்லியங்கருதி, வெள்ளமென்றே குறிப்பிடலாம். ஏன், இப்படிப் பழஞ்சொல்லைத்  தவிர்க்கிறோம் என்று புரியவில்லை. வெள்ளமென்ற சொல் பெருக்கைத்தானே குறிக்கிறது? சட்டென்று அது நம் மனத்தில் வெளியையும் குறிக்குமே?] இக்காலத்தில் பெய்தளத்தலுக்கு மாறாக, முகந்தளத்தல் என்றே சொல்கிறோம். குறிப்பாக, நீர்மம் (liquid), திண்மப் பொடிகளை (solid powders) அளக்க இந்த  அளவைகளைப் பயன்படுத்துகிறோம். அப்படியெனில், பெய்தலளவை என்று ஏன் சொன்னார்? ஒருவேளை முகத்தளவை என்ற முறை, நீர்மத்திற்கு மட்டுமே இருந்ததா?

3. நீட்டியளத்தல் என்பது நீளத்தை அளப்பது. இதில் குழப்பமில்லை. ஆனால் இந்தப்புலம் அடிப்படையானது. மற்ற அளவைகளுக்கு வழிசெய்வது.

4. தெறித்தளப்பதென்பது சற்று விளங்காதுநிற்கிறது. தெறித்தலென்பதற்கு சிதறல், குலைதல், துள்ளி விழுதல், முரிதல், பிளத்தல், உடைத்தல், அறுதல், வேறுபடுதல், நீங்குதல், தவறுதல், செருக்காயிருத்தல்,  பிதுங்குதல், குறும்புபண்ணுதல், நரம்புதுடித்து நோவுண்டாதல், விரலாற்சுண்டுதல், விரலாலுந்துதல், முற்றுதல், தாக்கப்பட்டுவெளிப்படல் என்ற பொருட்பாடுகளை அகரமுதலிகள் காட்டும்.  இன்னொருபக்கம் இதே அகரமுதலிகள் தெறித்தளத்தல் என்பதற்கு இசைக்கருவியின் நரம்பைத் தெறித்து (=சுண்டி) செவியின் அருகே வைத்து அளப்பதென்று சொல்லும். இம்முறையில், செவியினருகே அதிர்வை ஏற்படுத்தி அதிர்வெண்ணை அளக்கிறாரா? அன்றி அதிர்வின் நேர அளவைக் கண்டுபிடிக்கிறாரா? என்ன செய்கிறார்? தமிழறிஞர் சா.கணேசன் தெறித்தளத்தல் என்பது கால அளவைக் குறிப்பிடுவதாகவே சொல்வார். தெறிப்பென்பதைத் துடிப்பிற்கு இணையாகச் சொன்னால் கண்ணிமைத்தல், நொடித்தல் போன்றவை கூடத் தெறிப்பைக் குறிப்பதாய்க் கொள்ளலாமே?

5. இன்னுமொரு கேள்வி. அதுவென்ன தேங்கமுகந்தளத்தல்? தேங்கவெனும் முன்னொட்டு எதைக் குறிக்கிறது? தேங்கி இயல்பாகக்கிடந்ததையா? தேங்குதலென்பது நிறைதலையும், அடைதலையும், இறுக்கத்தையும் (compaction) குறிக்கலாமே? அறிவியலின் படி, திண்மப்பொடிகளின் வெள்ளம், அவற்றின் புரைமைக்குத் (porosity) தக்க மாறுபடும். அவற்றைத் தட்டித் தட்டி, அமுக்கியமுக்கி, வெள்ளத்தை நெருக்க/நெறிக்க முடியும்; ஓரளவு குறைக்க முடியும். அப்படி நெறித்தளந்தது தான் அடுத்துவரும் தேங்கமுகத்தளவோ? வெறுமனே திண்மப்பொடியை தேக்கிமுகந்து அளக்காதிருந்தால், அதன் இயல்பான புரைமையோடு (natural porosity) கூடிய வெள்ளத்தையே அளக்கமுடியும். இற்றை அறிவியலில் மெய்த் திணிவு (true density), மொத்தைத் திணிவு (bulk density), பெய்திணிவு (pour density), இறுக்கத்திணிவு (compact density)என்று வெவ்வேறு திணிவுகளை, திண்மப்பொடிகளை ஒட்டிப் பேசுவர்.

6. சார்த்தியளத்தல் என்பது ஒன்றை இன்னொன்றோடு சார்த்தி ஒப்பிட்டு அளப்பது. கண்ணிமைக்கின்ற நேரம், விரல் நொடிக்கின்ற நேரம் என்றெல்லாம் சொல்கிறோமே, அவையெல்லாம் ஓர் ஒப்பீட்டு அளவுகள் தான். நேரம், காலம் என்பவை ஒருவகையில் relative units தான். மேற்கூறிய கண்ணிமைக் காலங்கூட ஒருவகைச் சார்த்தியளத்தல் தான். அதைத்தான் இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் கூறுகிறார். கண்ணிமைக்கும் அளவிற்கான நேரம். வேறொரு எடுத்துக்காட்டையும் இங்குதரமுடியும். இக்காலத்தில் வெம்மையை (temperature) அளவிட, இதள்த் தெறுவமானியை (Mercury thermometer; தெறுதல் = சுடுதல்)ப் பயன்படுத்தும்போது, வெம்மை கூடக் கூட, இதள்த் தண்டின் நீட்டங்கூடி வருகிறதல்லவா? இங்கே இதளின் நீட்டத்தை வெம்மையில் சார்த்தி, அளவெடுக்கிறோம். இற்றை அறிவியலில் மின்சார, காந்தப் புலங்களில்  அளக்கப்படும் அலகுகளும் சார்த்தியளத்தல் முறையில் தான் அளக்கப்படுகின்றன. ஒருவகையில் பார்த்தால் சார்த்தியளத்தல் முறையில்லாவிடில், அறிவியல், நுட்பியல் போன்றவை வளர்ந்தேயிருக்காது என்றுஞ் சொல்லலாம்.

7. எண்ணியளத்தல் என்பதும் நேரத்தை, அதிர்வெண்ணை, பயன்படுத்துவது போலத்தான். எண்ணியலில் பயன்படுத்தும் முழுஎண்களும் (whole numbers), இயலெண்களும் (natural numbers), அரிதையெண்களும் (rational numbers), பின்னங்களும் (fractions), உள்ளமையெண்களும் (real numbers), பலக்கெண்களும்  (complex numbers) என இந்த வளர்ச்சி விரிந்துகொண்டேபோகும். முடிவில் முடிவிலி, வரம்பிலி, கந்தழி என்றாகும்.  

8. சரி, பரப்பை அளப்பதென்பது என்னவாயிற்று? அது ஏன் மேலுள்ள வரிசையிலில்லை? நீளம், மற்றும் வெள்ளம் வரும்பொழுது பரப்பென்பது ஏன் இவ்வரிசையில் சொல்லப்படவில்லை? பொதுவாக, அகலமாக அகண்டுகிடப்பது அகரம் (இணையான இந்தையிரோப்பியச் சொற்கள் acre, area). பரந்து கிடப்பது பரப்பு, பரட்டு, பரத்து போன்றவை (இணையான இந்தையிரோப்பியச் சொற்கள் broad, breadth). இல்லை, எதையாவது நாம் தவறாகப் புரிந்து கொண்டு விட்டுவிட்டோ மா? தெரியவில்லை

மேலே எனக்குவிளங்காத கேள்விகளை அப்படியே கொடுத்திருக்கிறேன். விடை தெரிந்தவர்கள் எழுதினால் எல்லோருக்கும் பயன்படும். என்னவொரு நிலை பாருங்கள்? சொல்லிக் கொடுக்க ஆளில்லாமல் "வேரில் பழுத்த பலாவாக" இன்னும் எத்தனை கிடக்கும் இந்தத் தமிழில்?

அன்புடன்,
இராம.கி.

Tuesday, April 11, 2006

கெழிறு

முன்னொரு முறை ஆப்பிரிக்க கவிஞர் ஒருவரின் கவிதையை இணையத்தில் படிக்க நேர்ந்தது. ஆசிரியர் பெயர், அடையாளம் எனக்கு இன்றுவரை தெரியாது. நண்பர் இரமணிதரன் கந்தையா அதைத் தமிழ்ப் படுத்த மாட்டாரா என்று ஒரு காலத்தில் தமிழ் இணையத்தில் கேட்டிருந்தேன். (இரமணியின் கவிதைகளில் கொஞ்சம் கிறங்கிப் போனவன் நான். இரமணி ஒரு அருவி, காட்டாறு போல; திடீரென்று பெருக்கெடுப்பார்; கொட்டுவார்; பிறகு நெடு நாள் பெருக்கு இல்லாது போகும்.) அருவி இப்போதைக்கு கொட்டாது என்று எண்ணிக் கீழே உள்ள கவிதையைக் கிடப்பில் போட்டு விட்டேன். பின்னால், என் பழைய குப்பைகளைக் கிளறியதில் மறுபடியும் வெளிப்பட்டது. நானே உரைவீச்சாய் தமிழில் மாற்றியதைக் கீழே தந்திருக்கிறேன்.

_____________
When I'm born.. I'm black.
When I grow up.. I'm even more black.
When I am in the sun.. I'm still black.
And When I'm cold. guess what.. I'm black.
And when i die, I'm @*!&^% black too.
But you...
When you're born.. you're pink.
When you grow up..you're white.
When you're sick..man.. look at yourself.. your're green.
When you go in the sun.. you turned red.
When you're cold..you turned blue.
And when you die..you look purple.
And YOU got the nerve to call ME.. Coloured..?!
________________________________
Lyrics & Vocals: LaMont Humphrey

என்னருமை வெள்ளைக்காரா,
சேதி கொஞ்சம் தெரிஞ்சுக்கோணும்!

நான்
பிறந்த போது, கருப்பு
வளர்ந்த போது, கருப்பு;
காய்ஞ்ச போது, கருப்பு;
குளிர்ந்த போது, கருப்பு;
பயந்த போது, கருப்பு;
நொய்ஞ்ச போது, கருப்பு;
இறக்கும் போது கூடக் கருப்புத்தான்

ஆனால் நீயோ,
பிறந்த போது, பூஞ்சை
வளர்ந்த போது, வெள்ளை,
காய்ஞ்ச போது, சிவப்பு,
குளிர்ந்த போது, நீலம்
பயந்த போது, மஞ்சள்
நொய்ஞ்ச போது, பசலை
இறக்கும் போது, வெளிறு

இருந்தாலும், என்னைக்
கெழிறுன்னு கூப்பிட
உனக்குத் திமிரு இருக்குல்லெ?

அன்புடன்,
இராம.கி.

பி.கு. கெழு = நிறம், வண்ணம். (கெழுமிய = நிறைந்த)
கெழு>கெழிறு>colour

Sunday, April 09, 2006

நினைவகம்

உதயச் செல்வி என்பவர் தோழியர் வலைப்பதிவில் முன்னால் ஒரு சமயம் கீழே வரும் புதுக்கவிதையை எழுதியிருந்தார். அதற்கு நான் இட்ட மறுமொழியைத் தனிப் பதிவாக இங்கு சேமிக்க வேண்டி இடுகிறேன்.

Antispyware-ஆல்
தேடி ஒழித்து
Virus Check-கை முழுதாய்
ஓடவிட்டு அழித்து
பொறுமையாய் அனைத்தையும்
Defragment செய்து
நெறிப்படுத்தி அடுக்கி
கொஞ்சம் புதுப்பித்தே ஆகவேண்டும்
அவசரமாய்
ஒருமுறையேனும்
என் மூளையையும்
அதன் நினைவகத்தையும்!

இந்தக் கவிதையை நல்ல தமிழில் சொல்ல முடியும்; என்ன, கொஞ்சம் மெனக்கிட வேண்டும்; அவ்வளவுதான். உதயச் செல்வியின் கருத்துக் குலையாமல் மரபுப் பாவில் கீழே சொல்ல முற்பட்டிருக்கிறேன். தவறிருந்தால் மன்னியுங்கள். ஓசை கூடக் கூட கவிதை சொல்லுதற்கு ஆர்வம் மிகும். புதுக் கவிதைகளில் ஓசை வரக்கூடாது என்ற விதியில்லை.

உளவறை*1 தேடி,
ஒட்டவே ஒழித்து,
வெருவி*2யைத் துழவி,
வெட்டென விரட்டி,
பொறுமையாய் அனைத்திலும்
சிதறல்*3 எடுத்து,
நெறிப்பட அடுக்கி,
புதுக்கவே*4 வேண்டும்,
அவக்கர*5 மாக,
ஒருமுறை யேனும்
என்னுடை மூளையை,
அதன்நினை வகத்தை!

1. உளத்தல் என்பது தோண்டியெடுத்தல். உளத்தலின் திரிவே உழத்தல் என்பது. உழவு செய்யும் போதும் நிலத்தில் தோண்டத்தான் செய்கிறோம். இங்கே நம்முடைய செய்திகளை, புலனங்களை இன்னொருவர் நம்மிடம் இருந்து உளந்து எடுக்கிறார். வறை என்ற சொல் ware என்பதற்கு இணையான சொல். ஆதி காலத்தில் உலர்ந்த பொருட்களே விற்பனைக்கு வந்தன. கருவாடு, உலர்ந்த மீன், உலர்ந்த காய், பழங்கள் என வெய்யிலில் வேக வைத்துப் பின் கிடைக்காத நாட்களில் பயன்படுத்துவதற்காக உருவாக்கிய பொருட்களை ஒருவருக்கொருவர் பண்டமாற்றிக் கொண்டார்கள். பின்னால் அவற்றையே காசுக்கு விற்றார்கள். இந்த உலர்ந்த பொருட்களில் தான் வாணிகம் என்பது தொடங்கியது. சரக்கு என்ற சொல்லும் உலர்ந்து போன சருகில் இருந்தே வந்தது. எந்தச் சரக்கும் உலர்ந்தது தான். வறள்தல் என்ற வினைச் சொல்லும் உலர்தலையே குறிக்கும். வறுத்தல் என்ற சமையல் வினையும், வறுக்கப் படும் பொருளின் நீர்த் தன்மையை வாட்டிக் குறைப்பது தான். வறு என்னும் வினையடியில் இருந்து பிறந்த பெயர்ச்சொல் வறை.

சொவ்வறை = software,
கடுவறை = hardware;
பகிர்வறை = shareware;
பரிவறை = freeware;
உளவறை = spyware;
வறைக்கூடம் = warehouse.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். Anti spyware என்பதை அப்படியே சொல்லாமல் இங்கே ஒழிப்பதை வினையாகக் காட்டுவது தமிழ்நடைக்கு நன்றாக இருக்கிறது. கூடிய மட்டும் பெயர்ச்சொற்களைச் சரமாகப் போடுவதைத் தவிர்த்தால் தமிழ், செருமன் மொழி மாதிரித் தோற்றம் காட்டாது. வேறுவழி இல்லை என்றால் மட்டுமே பெயர்ச்சொற் சரங்களைப் பயில வேண்டும்.

2. தமிழில் கிருமி என்ற வடசொல் நெடுநாளாகப் பயிலும் சொல் என்றாலும் அது bacteria - வைக் குறித்தது. நல்ல தமிழில் bacteria -வைப் பட்டுயிரி என்று சொல்லுவோம். பட்டையாய் இருக்கும் உயிரி பட்டுயிரி. படுவது பட்டை. இப்படித்தான் மேலைநாடுகளில் bacteria-விற்குப் பெயரிட்டிருக்கிறார்கள். தமிழிலும் அதே போல கருத்தை எளிதில் கொண்டுவர முடியும்.

virus என்ற சொல்லைக் கிருமி என்றோ, பட்டுயிரி என்றோ குறித்தால் அதன் விதப்பான பொருள் வராது. virus என்பது நஞ்சு என்ற பொருள் உள்ளது. அது ஓர் ஒட்டுண்ணி. அது தனித்து இருக்கும் போது உயிர் இல்லாதது, வெறும் புரதமாய் இருப்பது. ஆனால் ஓர் உயிர் உள்ள கட்டகத்துள் (system) வந்தவுடன், அது ஒன்று இரண்டாகி, இரண்டு நாலாகி இப்படி மடங்கிப் (exponential) பெருகி ஓர் உயிர்ப்பைக் காட்டும். virus என்பது நம்மைத் திகைக்க வைத்து உலை வைப்பதால் அதை வெருவி என்று சொல்லலாம். வெருவு என்பதற்கு நஞ்சு என்றும் பொருள் வரும்.

துழ(஡)வுதல் என்பது checking தான். எனவே வெருவி துழவல் = virus check

3. சிதறல் = to fragment (v); சிதறு = fragment (n); சிதறு எடுத்தல் / சிதறல் எடுத்தல் = defragment; பெரும்பாலும் de என்ற முன்னொட்டு வரும் இடங்களில் எடுத்தல் என்ற வினையை பின்னால் வைத்துச் சொன்னால் சரியாக வரும்.

4. புதுக்குதல் = to make new; புதுக்குதல் என்பது தன்வினை; புதுப்பித்தல் = பிறவினை; தமிழில் பெரும்பாலும் தன்வினையை ஆளுவது மொழி நடையைக் கூட்டும். பிறவினை சேர்க்கச் சேர்க்க தமிழ் மொழி கொஞ்சம் விலகி நின்றாற் போல தெரியும்; நமக்கு நெருக்கமாய்த் தெரியாது.

5. அவக்கு, அவக்கு என்று ஓடினான் என்று சொல்லும் போது அவக்கு என்பது ஓசைக் குறிப்பு. வெறும் ஓசைக்குறிப்பால் தமிழில் ஏற்பட்டுள்ள சொற்கள் பல. அவக்கு நிலை அவக்கரம் எனப்படும். அதை வடமொழிப் பலுக்கில் அவ சரம் என்று சொல்லிவிட்டார்கள். அதன் அடிப்படை அவக்கரம் தான்.

அன்புடன்,
இராம.கி.

உய்யப் பணம்

நண்பர் சடையன் சாபு ஜீவனாம்சம் - alimony என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்லை இனங் காட்டுமாறு தமிழுலகம் மடற்குழுவில் கேட்டிருந்தார். (அவ்வப் பொழுது இப்படிச் சொற்களைப் பற்றிக் கேட்பது அவருக்கு வழக்கம்.) அவருக்கு அளித்த மறுமொழி இது.

தமிழில் உய்தல் என்ற வினைக்கு to live, to exist என்றே பொருளுண்டு; உய்வது உயிர்; உயிர் என்னும் சொல் உசிர் என்றும் தமிழர் நாவில் திரியும். உய்தலின் வேர், நாம் மூச்சிழுக்கும் ஊய், ஊய் என்னும் ஒலி தான். அது ஒரு மொழியறியா ஒலி. அதை ஊஸ்/ஊசு என்றும் சொல்லுகிறோம். "உஸ், உஸ் என்று இழுக்கிறான் பார்" என்று சில போதுகளில் சொல்லுகிறோம் அல்லவா? உஸ் என்பது மாற்றுத்திட்டையில் (metathesis) ஸு, ஸூ என்றும் திரியும்.

உஸ், உஸ் என்று உய்த்துக் கொட்டுதல் வினைச்சொல் தமிழில் உச்சுக் கொட்டுதல் என்று சொல்லப் படும். உய்தலும் உய்யித்தலும் என்ற வினைச்சொற்களில் யகரத்தை முதலிற் சேர்ந்து பலுக்கப் படுவதும் உண்டு. (பலுக்குவதில் கவனம் தேவை; தவறு வராமல் இருக்க வேண்டும். நாம் உய்யலாம், உய்யிக்கலாம்; அது தன் வினை; ஆனால், இறைவன் மட்டுமே உய்விக்க முடியும். அது பிறவினை. தன் வினை, பிறவினைச் சொற்களில் தமிழர்கள் சிலர் தடுமாறி விடுகின்றனர்.)

ஸு, ஸூ என்ற மொழியறியா ஒலி, வட மொழியில் அழுத்தம் பெற்று ஜூவுதல் என்று ஆகிப் பின் ஜீவிதல் ஆவது இந்தத் திரிவுகளின் தொடர்ச்சியே ஆகும். இந்தையிரோப்பியனில் யகரம் என்னும் ஒலி பல பொழுதுகளில் ஜகரமாய் ஒலிக்கும், யப்பான் என்ற சொல் இந்தையிரோப்பியனில் ஜப்பான் என்று ஆவது போல. (சப்பானியர்களோ நம் தமிழரைப் போல ய>ஞ>ந என்ற வழியில் யப்பானை நிப்பான் என்று அழைப்பார்கள்.) அந்த ஸூ விற்கும் நம்முடைய உய்க்கும் உள்ள இணையை உணர்ந்து கொள்ளுங்கள்.

ஜீவன் என்பதின் சரியான தமிழ் இணை உய்யன் என்பதே. அதே சொல் இன்னொரு ஈற்றில் உயிர் என்று ஆகும். இற்றை வழக்கில் உயிர் என்பதை மட்டுமே புழங்குகிறோம். உய்யன் என்பது நம் வழக்கில் இல்லை; ஆனால் நம் மொழியின் பாடமையில்(possibility) அமையக் கூடியது தான்.

அம்சம் என்பது பங்கைக் குறிப்பது. (அதன் அடிப்படை வினைச்சொல் அய்தல் = வெட்டுதல், பகுத்தல், பிரித்தல்; கீரை ஆய்தல் என்று நாட்டுப்புறத்தார் சொல்லுவது கீரை இலைகளைத் தண்டில் இருந்து பிரித்து எடுத்தலே. இனி அய்ந்தம்>அய்ஞ்சம்>அஞ்சம்>அம்சம் என்ற வகையில் இந்தத் திரிவு நிலை கொள்ளும்;

அம்சம் என்று சொல்லுவதற்கு மாறாகப் பணம் என்றே நாம் இந்தக் காலத்தில் சொல்லலாம். மண விலக்கின் பின், ஒரு பங்காளர் உயிர்வாழ இன்னொருவர் கொடுக்கும் பணம் உய்(ய)ப் பணம். [பலுக்க எளிமை கருதி யகரத்தைச் சேர்த்துச் சொல்லலாம்.]

உய்யப் பணம் = ஜீவனாம்சம் = alimony

ஆங்கிலச் சொல் வேறு பொருளில் 1655ல் எழுந்திருக்கிறது.

from L. alimonia "food, support, nourishment, sustenance," from alere "to nourish" (see old) + -monia suffix signifying action, state, condition. Derived form palimony coined 1979.

ஒரு சொல்லை மீட்டுக் கொடுக்க வாய்ப்புக் கொடுத்ததற்கு சாபுவுக்கு நன்றி.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, April 05, 2006

அப்பும் இழிதலும்

விண்ணவன் கோயிலில் இறைவன் மூலத் திருமேனி அல்லது உலாத் திருமேனியை நீராட்டுவதை திரு மஞ்சனம் என்பார்கள். அதே நீராட்டைச் சிவன் கோயிலில் செய்யும் போது பொதுவாகத் தமிழ்ப் பெயரில் அழைக்காமல் அபிஷேகம் என்று வடமொழிப் பெயரிட்டு அழைப்பார்கள். (இன்றைக்கும் விண்ணெறிச் சொற்களை விட சிவநெறிச் சொற்களில் வடமொழிக் கலப்பு சற்று கூடவே உண்டு. இத்தனைக்கும் தென்னாடுடைய சிவன் எனப் பெருமையாகவும், எந்நாட்டவருக்கும் இறைவன் எனப் பொதுமைப் படுத்தியும், நாம் போற்றி அழைக்கிறோம். ஆனாலும் சிவன் கோயில் குருக்கள் வாயில் தமிழ் ஏதோ குறைவாகத் தான் வருகிறது. பெருமாள் கோயில் பட்டர் வாயிலோ, தமிழ் சற்று தாராளமாகவே விளையாடுகிறது. இதற்காக விண்ணவர்கள் வடமொழியைப் புழங்கவே இல்லை என்ற பொருளில்லை; தங்கள் வழிபாட்டின் ஊடுடே தமிழைப் பயன்படுத்த அவர்கள் தயங்கவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.)

இந்த அபிஷேகம் என்ற சொல்லின் மூலம் என்ன என்று இங்கு பார்ப்போம்.

தமிழில் ஆழ்தல், கீழ் வருதல், இறங்குதல் என்ற பொருட்பாட்டுச் சொற்கள் பலவும் உண்டு. பொதுவாக, நீரோடு பொருத்திய கூட்டுச் சொற்கள் தமிழில் மிகப் பல. நீருக்குள் நாம் இறங்கலாம். அது தன்வினை. இன்னொருவர் நம்மை நீருக்குள் இறக்கலாம். அது பிறவினை. தவிர, இன்னொரு வகையான பிறவினையும் இருக்கிறது. அதில் நாம் அப்படியே குந்தி இருக்க, நம் மேல் இன்னொருவர் நீரை இறைக்கிறார். அப்படிச் செய்யும் போது கூட, நம்மை நீருக்குள் இறக்குவதாய், ஒரு பொருள் வரத்தான் செய்கிறது. ஏனென்றால், அவர் நீரை இறைக்கும் போது, நம்மை நீருக்குள் இறக்குகிறார்; நாம் இறங்குகிறோம். இப்படி ஒரு தொடர்ச்சியான பொருள் வரத் தேவையானது நீருக்கும் நமக்கும் இடையே ஓர் உறழும் இயக்கம் அல்லது உறழிய இயக்கம் தான் (relative motion) (உறழ்தல் = to relate; உறழ்>உறழ்வு>உறவு = relative). இப்பொழுது சொற்களைப் பார்ப்போம்.

ஆழ்தல்>ஆடல் = இறங்குதல் (ழ்+த = ட); நீர் ஆடல் = நீருள் இறங்குதல்; நீராட்டு = நீரை இறக்கும் செயல்; ஆழ்>ஆழம்

இல்>இர்>இரங்கு = கீழ்வருதல்; இரங்குதல்>இறங்குதல் = கீழ் வருதல்; இர்>இரிதல் = இறங்குதல், வடிதல்
இல்>இலி>இலிதல் = இறங்குதல்; இல்தல்>இழ்தல்>இழிதல் = இறங்குதல்; இலி>இழி>இழிகுதல் = இறக்குதல்;
இழிகு>இழிகம் = இறக்கும் செயல்.

இழிகுவது என்றவுடன் சட்டென்று யாரும் இழிவுப் பொருளை எண்ணவேண்டாம். இழிகுவதைத் தான் liquid = one which goes down flowing என்ற மேலையர் சொல்லுகிறார்கள். [நான் தான் பலமுறை சொல்லி வந்திருக்கிறேனே? தமிழிய மொழிகளுக்கும், இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் ஏதோ ஒரு தொடர்பு எங்கோ இருக்கிறது. அதன் ஊற்றுக்கண் தான் நமக்குப் புரிபடவில்லை.]

இனி, அம் என்னும் சொல் நீரைக் குறிக்கும்; அதே சொல் அம்பு என்று நீண்டும், நீரைக் குறிக்கும்; அம்+இழ்தல் = அமிழ்தல்; அம்மிற்குள் இறங்குதல்; அமிழ்தலின் பிறவினை, அமிழ்த்தல் = நீருள் இறக்குதல்.

அம்பு +ஆடல் = அம்பாடல்; அம்பு>அம்பா; அம்பா + ஆடல் = அம்பாவாடல்; எம்பாவைப் பாடல்கள் ஒருவகையில் பார்த்தால், பாவை நோன்பு; இன்னொரு வகையில் பார்த்தால் அது அம்பாவாடல் என்னும் நீராட்டு. எது முதன்மையான பொருள் என்று இன்னமும் எனக்கு விளங்கவில்லை. பாவை நோன்பை ஏன் நீராடும் குளத்தருகே செய்யவேண்டும் என்பதும் கூட எனக்குப் புரிபடவில்லை. தைநீராடல் என்று பரிபாடலும், மார்கழி நீராடல் என்று பாவைப் பாட்டுக்களும் நீராட்டையே பேசும் போது, வேறு ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்ற கேள்வி தோன்றிக் கொண்டே இருக்கிறது.

முல்>முல்ங்குதல்>முங்குதல் = இறங்குதல்; நீருக்குள் முங்கி எழுதல்
முல்ங்குதல்>முல்ஞ்சுதல்>மல்ஞ்சுதல்>மஞ்சுதல்>மஞ்ஞுதல்>மண்ணுதல் = நீர் இறங்குதல்
முல்>முழு>முழுகுதல்>முழுக்குதல் = நீருக்குள் இறக்குதல்

மண்ணுதல்>மண்ணம்>மணம் = நீருள் இறங்கும் செயல்; அகநானூற்றின் படி, அந்தக் கால தமிழர் மணம் என்பது கூடியிருப்போர் வாழ்த்துக் கூற நடக்கும் மங்கல நீராட்டே ஒழிய வேறு எதுவும் அல்ல. இந்தக் காலத்தில் நாம் காணும் தாலி கட்டுதல் என்ற பழக்கம் தமிழருக்குள் எப்பொழுது ஏற்பட்டது என்று தெரியவில்லை. இன்றைக்கும் எங்கள் பக்கம், திருமணத்தில் மாலை நேரத்தில் மஞ்சள் நீராடுவது என்ற சடங்கு மணமக்களுக்கு உரிய சடங்கே. அதே போல மணி விழாக்களிலும் மஞ்சள் நீராடுவதே, கும்பஞ் சொரிவதே, பெருஞ்சடங்காகத் தமிழ்நாடு எங்கணும் கொள்ளப் படுகிறது. மஞ்சனம்>மஞ்ஞனம்>மண்ணனம் = நீர் இறக்கும் செயல்

இதுவரை ஏற்பட்ட இந்தப் புரிதலோடு, அபிஷேகம் என்ற வடசொல்லைப் பார்த்தால் அதன் தமிழ் மூலம் நமக்கு எளிதில் கிடைத்து விடும்.

அம்>அம்பு>அப்பு = நீர்

அம், அம்பு, அப்பு என்ற சொற்களை நீர் என்ற பொருளுக்குத் தொடர்பாய் ஆவணப் படுத்தித் தமிழில் பல சான்றுகள் இருக்கின்றன. ப.அருளியாரின் யா என்ற பொத்தகத்தைப் பார்த்தால் இது புலப்படும். (இந்தப் பொத்தகம் பற்றி முன்னமேயே சொல்லியிருக்கிறேன்.) இந்தச் சொற்களெல்லாம் தமிழ்ச் சொற்களே.

அப்பு + இழிக்குதல் = அப்பிழிக்குதல் = நீராட்டுதல்
அப்பு + இழிகம் = அப்பிழிகம் = நீராட்டு

அப்பை இழிகுவது அப்பிழிகம்; இந்தச் சொல் வடமொழிப் பலுக்கலில் ழகரம் ஷகரமாகி, அப்பிஷிகம்>அப்பிஷேகம்>அபிஷேகம் = நீரை இறக்கும் செயல் என்று ஆகும். (பெருமானர் வழக்கில் இழைந்து கொள்வதை ஈஷிக் கொள்வதாகச் சொல்லுவார்கள்; ழகரம் எல்லாம் பெரும்பாலும் ஷகரமாகவே ஒரு சிலரால் மாறிப் பலுக்கப் பட்டிருக்கிறது.) தமிழ் முறைப்படி சொற்புணர்ச்சியைப் பிரிக்காமல், மோனியர் வில்லியம்சின் வடமொழி அகரமுதலி, அபி+ஷிக் என்று பிரித்து, அபி என்பதை to, towards, into, over, upon என்ற வேற்றுமை உருபுகளாய்ப் பொருள் கொண்டும், ஷிக் என்பதற்கு இழிகுதல் என்றே பொருள் சொல்லியும் ஆவணப் படுத்தும். மேலே உள்ள சொற் தொகுதிகளை மனதிற் கொண்டு பார்த்தால், அபி+ஷிக் என்று பிரிப்பது சரியான மூலம் காணாமல், பொருந்தாதைப் பொருத்திச் சொல்லும் ஓர் உத்தி என்பது புலப்படும். வடமொழிப் பலுக்கில் இழிகு என்ற சொல் இஷிகு என்று ஆகி முன்னால் உள்ள இகரமும், பின்னால் உள்ள குற்றியலுகரமும் கெட்டு ஷிக் என்றுதானே வந்துசேரும்?

எந்த இயல் மொழியிலும் பொதுமைப் பொருளில் இருந்து விதப்புப் பொருளுக்கு ஒரு கருத்து வருவது, (மாந்தப் பட்டறிவிற்கு எதிர்மறையாய் இருப்பதால்,) மிக அரிது. பெரும்பாலும் விதப்புச் சொற்களில் இருந்தே பொதுமைச் சொற்கள் இயல் மொழிகளில் ஏற்படுகின்றன. அப்பு இழிதல் என்று சொல்லுவது விதப்பிக் காட்டும் செயல். அப்பு என்பதையே கருத்தில் கொள்ளாமல், வெறுமே அபி +இழி எனப் பிரித்து, அபி என்பதை வேற்றுமை உருபாக்கி, இழி என்றாலே நீருக்குள் இறக்குவது என்று பொருள் கொள்ளுவது வலிந்து காட்டும் முயற்சியாகவே தெரிகிறது. காட்டாக, வாயால் இழித்துக் காட்டினான் என்னும் போது வாய் இதழ் இறக்கிக் காட்டப் படுகிறதே ஒழிய, நீருக்கு அங்கே வேலையில்லை. இழித்தல் என்பதற்கு நீரோடு சேர்ந்த விதப்புப் பொருள் கிடையாது.

சிவநெறி, விண்ணெறிச் சொற்களில் இது போன்ற பலவற்றையும் ஓர்ந்து பார்த்தால், உள்ளே ஆழ்ந்த தமிழ் மூலம் காட்டுவது வியப்பில்லை. ஏனெனில், இந்த நெறிகள் தெற்கே தமிழகத்தில் எழுந்தவை. வேதநெறியைச் சிவ, விண்ணெறிகளோடு பிணைத்து ஒரு வகையான கலவை நெறியை உருவாக்கியது நெடுங்காலம் கழித்தே நடந்திருக்க வேண்டும். இதை உணர்வதில், அப்பிழிகம் என்பது இன்னுமொரு எடுத்துக் காட்டு.

அப்பு இழிகத்தின் தொடர்ச்சியாய், திரு நாவல்கா = திருவானைக்கா பற்றியும் சொல்ல வேண்டும். நாவல் மரம் நிறைந்த கா நாவல் கா. திருவரங்கத் தீவின் ஒரு புறத்தில் நாவல் மரம் நிறைந்த பகுதியில் இருந்த ஈசருக்கு நாவல்கா ஈசர் என்ற பெயர்; இன்று அவர் ஜம்புகேசுவரர் என்று சொல்லப்பட்டு, மூலம் அறியவொண்ணா வகையில் இருக்கிறார். (திருவானைக்காவில், தல மரம் நாவல் மரம் தான்.)

நாவல் என்னும் சொல் யா என்னும் வேரில் பிறந்தது. யா என்னும் வேருக்குக் கருமை என்ற பொருள் அடிப்படையானது. யா என்னும் வேரில் பிறந்த சொற்கள் மிகப் பல. யாவ மரம்> நாவ மரம்> நாவல் மரம் என்று ஆகும். அதே போல யாவ மரம் என்பது இன்னொரு வகையில் யாம மரம்>யாம்ப மரம் ஆகிப் பின் வடமொழிப் பலுக்கில், ஸகரம் சேர்த்து ஸ்யாம்ப மரம்>ஜ்யாம்ப மரம்>ஜம்பு மரம் என்று ஆகும். நாவலந்தீவு என்ற சொல்லே "ஜம்புத் தீவே பரத கண்டே" என்று வடமொழி மந்திரத்தில் மொழி பெயர்க்கப் படும். "நாவலம் தண்பொழில்" என்பது இன்று நேற்று அல்ல, கிட்டத்தட்ட 2300 ஆண்டுகள், தமிழன் பயன்படுத்திய சொல். ஜம்புத் தீவு நம்மால் எழுந்த பழக்கம்; பரத கண்டம் வடவரால் எழுந்த பழக்கம். வடமொழி மந்திரங்களையும், சொலவடைகளையும் கூர்ந்து படித்தால் நிறையச் செய்திகள் புரியும். அவற்றைச் சரியான படி விளங்கிக் கொள்ளத் தான் ஆட்கள் அருகி இருக்கிறார்கள்.

திரு நாவல்காவும், திருவரங்கமும் சேர்ந்திருக்கும் இடம் காவிரியில் ஒரு தீவு.

[முன்பே ஒருமுறை ஈல்தல் என்ற வினையை ஓட்டி எழுந்த பெயரை நினைவு கொண்டால், அரங்கு என்ற சொல் எப்படி எழுந்தது என்று புரியும் என்று சொல்லியிருந்தேன். ஈல்தல் = பிரிதல். இதே சொல்லை ஈல்ங்குதல் என்றும் சொல்லலாம். (நில் என்று தமிழில் சொல்லுவதை நில்க்கு என்று மலையாளத்தில் சொல்லுவதில்லையா? அது போல ஈல், ஈல்ங்கு என்பவை வெவ்வேறு வட்டாரப் புழக்கம், அவ்வளவு தான்.) இந்த வினையடிகளின் வழியாய், பெருநிலத்தில் இருந்து ஆறோ, கடல்நீர் ஓட்டமோ, தனித்துப் பிரித்த சிறு நிலம், ஈழம் (= ஈல்ந்த இடம்) என்றும், இலங்கை (=ஈல்ங்கிய இடம்) என்றும் பெயர்கொள்ளும். ஈழம், இலங்கை என்ற சொற்களுக்கு island என்ற பொதுமைப் பொருளையே கொள்ளலாம். மாவிலங்கை என்ற இன்னொரு தீவு தென் பெண்ணையாற்றின் நடுவில் உண்டு. இதே போல ஈல்தலுக்கு இணையாக அருதல்>அரிதல் என்ற சொல்லும் உண்டு. அரு>அறு என்பதும் அதே பொருளில் எழுந்ததே. ஆற்றால் அறுத்து எழுந்த இடம் அரங்கு>அரங்கம். அதன் பொருள் தீவு மற்றும் மேடு என்பதே. அதனால் தான் நாட்டியம் ஆடும் மேடைக்கும் கூட அரங்கு என்று சொல்லுகிறோம். திருவரங்கம் ஒரு தீவு.]

காவிரியில் வெள்ளம் நிறைந்து இருக்கும் நாட்களில், நாவல்கா சிவன் கோயில் கருவரைத் தரையில் இருந்து நீர் ஊறிச் சுரந்து கொண்டே இருக்கும். அந்தக் கருவறையின் நடுவில் நீர் வெளிவருவது ஒரு இலிங்கம் நீர்வடிவில் இருப்பது போலவே காட்சியளிக்கும். இந்த நிகழ்வால், அங்கு இறைவனை நீர் எனும் பூதமாகவே உருவகித்ததில் வியப்பே இல்லை. இறைவனின் வெளிப்பாட்டை எத்தனையோ வகையில் உணருகிறோம் அல்லவா? அவன் அப்பு வடிவில் அங்கு எழுகிறான்.

அந்த அப்பு/அம்புவையும், நாவல் என்னும் அம்பு/ஜம்புவையும் கலந்து புரிந்து கொண்டு, பின் நாவல்கா>நாவக்கா என்பதை வாநக்கா என்பதாய் metathesis -ல் மாறி ஒலித்து திருவாநக்கா>திருவானைக்கா>திரு + ஆனைக்கா என்றாகி தொன்மங்கள் பெருகிவிட்டன. "ஆனை ஒன்று வந்ததாம், இறைவனுக்கு நீர் கொண்டு வந்து பூத் தூவி வழிப்பட்டதாம்; இலிங்கத்தை வெளிக் கொணர்ந்ததாம், சோழன் பார்த்தானாம், கோயில் எழுப்பினானாம் ...... இப்படிப் போகின்றது அந்தத் தொன்மக் கதை. நான் தொன்மக் கதைகளை ஒதுக்குகிறவன் இல்லை; ஏனென்றால் அவை நம்பிக்கையின் பால் எழுகின்றன. அதே பொழுது தொன்மக் கதைகளுக்கும் உள்ளே என்ன உட்கருத்து இருக்கிறது என்று பார்க்க விழைபவன். இங்கே நான் புரிந்து கொண்டது:
--------------------------
ஆற்றின் நடுவே ஓர் அரங்கம்; அந்த அரங்கத்தின் ஓரத்தில் நாவல்மரம் நிறைந்த ஒரு கா. காவின் நடுவில் நீர் சுரந்து கொண்டே இருக்கிறது. அதன் விளைவாய் அது சுயம்பு இலிங்கமாய்க் காட்சியளித்திருக்கிறது. நீர் சுரப்பது, அப்பு இழிவது போலவே தோற்றியிருக்கிறது. யாரோ ஒரு சோழ அரசன் முடிவில் கோயில் எழுப்பியிருக்கிறான். நாவ(ல்)கா ஈசர்> ஜம்புக ஈசர் என்று ஆகிப் பின் ஜம்புகேசுவர் என்று வடமொழிப் புணர்ச்சியில் சொல்லப் படுகிறார்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, April 04, 2006

புகை

அந்தப் பழக்கம் நுட்பியல் (technology) படிப்பின் முதலாண்டில் எற்பட்டது. எப்படி வந்தது என்று இப்பொழுது நினைவில்லை.

நண்பர்கள் அளித்த ஊக்கமா, அல்லது வெறும் வறட்டு படியமா (fashion), இல்லை ஒருவித உணர்வின் ஏங்கலா என்று இப்பொழுது சொல்ல முடியாது இருக்கிறேன். ஆனாலும் நாளொரு வண்ணமும், பொழுதொரு மேனியாக அப் பழக்கம் எனக்குள் வளர்ந்தது. முதலில் சார்மினார் தொடங்கி, அடுத்து மார்க்கோ போலோ, பின் வில்சு, கடைசியில் கத்திரி (சிசர்சு) எனப் பொரிந்தை மாறியதே மிச்சம்; (பெயரை நெருப்பால் பொரித்து எழுதுவதைத் தான் brand என்று ஆங்கிலத்தில் சொல்லத் தொடங்கினார். அப்பொழுது தானே பொரிந்தது கண்ணிற்குச் சட்டெனப் புலப்படும்?) கையில் பிடித்தது, முதலில் ஒன்று இரண்டானது; இரண்டு நாலானது; அப்புறம் பத்தானது; இப்படி ஒரு பெட்டி, 2 பெட்டி எனப் போய், ஒரு நாளைக்கு 3 பெட்டி வரைக்கும் அப்பழக்கம் நீண்டது.

இப்பழக்கம் எப்படியெல்லாம் ஒருவனை நிறைக்கும் என்பதை நுகர்ந்தே அறிந்தவன் நான். (நுகருதல் = முகருதல் = to smell; முகல் என்பது அடிச்சொல். smell எனும் ஆங்கிலச் சொல்லுக்கு அப்படியே இணையானது. நாம் மணம், நாற்றம் என்ற சொற்களை இன்று பயனாக்குகிறோம். முகலும் அதற்கு இணையானதே. முகல்ப்பது மோப்பதாகும். முகல்க்குதல் = மோந்துபார்த்தல். smoke உம் முகல்(ர்)க்கல் வினையில் எழுந்தகருத்தே. ஒரேபொருளை 2 விதம் பார்ப்பதில்லையா? இந்தையிரோப்பியக் கருத்து ஒருவிதம்; நம்முடையது இன்னொன்று. இப்பழக்கம் வெளியே இருந்து தம்மிடம் வந்துசேர்ந்த போது, முகர்க்கும் கருத்தில் பார்த்தது இந்தோயிரோப்பியக் கிளை; உயரும் கருத்தில் பார்த்தது தமிழியக் கிளை. புகுதல் = உயருதல் பொருள் கொள்ளூம்; புகு+ஐ = புகை; அதாவது உயர்ந்து போகும் ஆவி.)

கல்லூரிக் காலத்தில் இப்படி ஒரு புகைப் பழக்கம் என்னுள் தொற்றியதை என் குடும்பத்தினர் யாரும் அறியார். வேறென்ன? கண்டிப்பு மிகுந்த தந்தையிடம் இதைக் கூவியழைத்தா சொல்லமுடியும்? கூட இருந்த நெருங்கிய நண்பர் மட்டுமே, இப்பழக்கத்தின் முழுவீச்சை என்னில் கண்டார். விட முடியாது இருந்தேன் என்பதைக் காட்டிலும் விட வேண்டும் என்று தோன்றாது இருந்தேன் என்பதே சரி.

ஐந்தாண்டுப் படிப்பில், தமிழ் ஆய்வு, நூற்றுக் கணக்கான நண்பர், செம்மீன் (இறால் மீன்) மேல் ஈர்ப்பு, பல்நூறு திரைப் படங்கள், கணக்கற்ற கால் நடைகள் (ஆடுமாடு இல்லைங்க, காலாலே நடக்குறது), ஓரளவு குமுகப் பணி, தலைநிறைய இடதுசாரி மெய்யியல், இன்னும் பலப்பல கற்று, கூடவே கொஞ்சூண்டு வேதிநுட்பியலும் கற்று வெளிவந்த போதும், இப்பழக்கம் ஓயவில்லை; என்னைத் தொடர்ந்து வந்தது.

மறுபடியும் 2 ஆண்டு முதுநிலை வேதிநுட்பியல்; இம்முறை சென்னையில் ஒரு காட்டினுள் இருக்கும் இந்திய நுட்பியற் கழகம். முதலில் இடது சாரிப் போக்கின் வேகத்தில் வலுக்கட்டாயமாகத் தமிழை இறுத்தினேன் (இற்றுதல்> இறுத்தல் = to end). 6 மாதத்திற்கு, மேலோட்டமாய் அன்றிப் படிப்பின் பக்கமே தலைகாட்ட வில்லை. புகை மற்றும் புரட்சிப் போதையில் ஊரெங்கும் சுற்றினேன். யாராரோ பெருந்தலைகளைச் சந்தித்தேன். "இதுவே என் எதிர்காலம்" என்று செம்மாந்திருந்தேன். அச் செம்மாப்பு சரிய, நெடுங் காலம் ஆகவில்லை. பலரின் உண்மைமுகம் வெளிப்பட்டது. ஏமாற்றம் கூடக் கூடத் தலையில் குவிந்துகிடந்த இடதுசாரித் தலைக்கனம் குறைந்தது. "உருப் படியான வேலை பார்ப்போம்" என்று 2 ஆம் துவ்வத்தில் (semester)  நுட்பியலில் ஆழத் தொடங்கினேன். கூடவே இப்பழக்கம் குறைந்தது. ஆனாலும் விட்டுத் தொலைக்கவில்லை.

வேலைகிடைத்துத் தூத்துக்குடி வந்து திருமணம் ஆனபின்னும் பழக்கம் தொடர்ந்தது. மனையாள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை; ”இவன் ஒரு திருத்த முடியாத ’வாலி’ " என்று தண்ணீர் தெளித்ததாலோ என்னவோ,  பொறுத்துக் கொண்டாள். வீட்டில் அவளுக்கு முன் புகைபிடிக்க வெட்கப் பட்டு, வெளியே மட்டுமே இப்பழக்கத்தை வைத்துக் கொண்டேன். ஒரு நாளைக்கு 5, 10 என்ற நிலையில் அப்போது இருந்தேன். மகன் பிறந்தான். பொறுப்புக் கூடியது மாதிரித் தோற்றம் ஏற்பட்டது.

கும்பணியின் குடியிருப்பில் ஒரு அடுக்கு மாடியில் முதல் அடுக்கில் என் வீடு இருந்தது. வீட்டின் எதிரே அதுவரை மணம் செய்துகொள்ளா நண்பர் இருவர் இருந்தார். அவரைப் பார்க்க மற்ற நண்பரும் வருவதுண்டு. 2 வீட்டிற்கும் முன்னுள்ள முகப்பில் குட்டைச் சுவரின் விளிம்பில் உட்கார்ந்து, இப்புகையை முகர்ந்து, உரையாடியிருப்பது நண்பரின் பழக்கம். நான்மட்டும் வீட்டு முகப்பில் புகைப்பது கிடையாது. வெட்கம் பற்றி முன்சொன்னேன் அல்லவா?

திணைக்களக் கட்டுமானம் (construction of the plant) முடிந்து முந்துறுக்கும் பருவம் (commissioning phase) முடிந்து, ஒருவழியாக மாறுகைக்கென விளைக்கும் பருவம் (commercial production phase) வந்து விட்ட காலம். இருந்தாலும் பொறிஞர் பலரும் நேரம்காலம் தெரியாமல், பட்டறையின் (factory) உள்ளே கண்ட நேரம் போய், கண்ட நேரம் வெளியே வந்து, ஈடுபட்டுக் கொண்டிருந்தார்; குவித வேலை (shift work) (வேலைகளை இனம்பிரித்துக் குவித்துக் கொண்ட வேலை குவித வேலை; ஆங்கிலப் பொருளும் இது தான்.) என்பதெலாம் பெயருக்குத் தான்; வேலைப்போதை, புகைப்பதைப் போல் விடமுடியாப் பழக்கம்; சொல்லித் தெரிவதில்லை பொறிஞரின் கலை.

இக்கால கட்டத்தில் தான், சரியான வேளை வந்தது.

திணைக்களத்திற்கு, முதல்நாள் இரவு சென்ற நான், 18 மணி நேரம் கழித்து, அடுத்தநாள் மாலை 4.00 மணிக்குத் திரும்பி வந்தேன். வரும்வழியில், குடியிருப்பில் உள்ள வணிக வளாகத்தின் பெட்டிக் கடையில், "கத்திரி" வாங்கி இழுத்து விட்டே வந்தேன்.

மறுபடியும் நடை. மெதுவாக வீட்டிற்குவந்து பார்த்தால், வீட்டின் முகப்பில் கிடக்கிற தீய்ந்துபோன வெண்சுருட்டு (cigerette) அடிக்கட்டையை எடுத்து என் இரண்டரை அகவை மகன் வாய்க்குள்வைத்து இழுத்திழுத்துப் பார்த்தான்; புகை வரவில்லை.

எனக்கு நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல் வலி. அருகில் வதியும் என் நண்பரை இவன் பார்த்திருக்க வேண்டும். எப் பழக்கத்தையும் அப்படியே திருப்பிச்செய்து தெரிந்துகொள்ளத் துடிக்கும் அகவை அல்லவா? குழந்தை அப்படியே செய்தது. இதை அதட்டிச் சரி செய்யலாம் தான். ஆனால் எந்த முகத்தோடு?

அடுத்த நாள் நிறுத்திவிட்டேன்.

ஆயிற்று 28 ஆண்டுகள். எல்லாவற்றிற்கும் வேளை உண்டல்லவா?

அன்புடன்,
இராம.கி.

பி.கு. பின்னால் ஒருமுறை எனக்கும் என் மக்களுக்கும் நடந்த உரையாடல்:

"தம்பிகளா, ஏதேனும் இப்படிப் பழக்கம் இருக்கா?" - இது நான்.
"என்னப்பா நீங்க, உங்களை மாதிரி நினைச்சுக்கிட்டீங்களா? அப்படி எல்லாம் கிடையாது" - இது என் மக்கள். இக்காலப் பிள்ளைகளுக்கு மப்பு கொஞ்சம் கூடத் தாங்க! :-)

Monday, April 03, 2006

திராவிடம்

The Journey of the man என்னும் கட்டுரையை திரு ஸ்பென்சர் வெல்சு என்பவர் எழுதியிருந்தார். அதில் மாந்த நகர்ச்சியில் ஆப்பிரிக்காவில் இருந்து ஆத்திரேலியா நகர்ந்த கிளையில் தமிழர்களை, குறிப்பாகப் பிரான்மலைக் கள்ளர்களை ஒரு முகன்மையான கட்டுக்கூறாகக் காட்டியிருப்பார். அவரின் அக்கூற்று இந்திய வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் முளை கொண்டது. தமிழர் - தமிழியர் - திராவிடர் என்ற வளர்ச்சி வரலாற்றுக்கு முற்பட்டதும் வரலாற்றிலுமாக நாள்பட்டது என்ற நிலைக்குக் கொண்டு வந்து சேர்க்கும்.

இப்படி ஓர் ஈனியல் ஆராய்ச்சியாளர் ஒருவர் தமிழியர் - திராவிடர் என்ற கருத்திற்கு அணைசேர்த்தவுடன், பலரும் திகைத்துப் போனார்; ஏனெனில் தமிழிலிருந்து கிளைத்த திராவிடம் என்ற கருத்தை இந்தாலசி என்ற இயல் படிக்கிறவரும், சில தேசிய/இந்துத்துவ சிந்தனைக்காரரும், பல வடநாட்டுக் காரரும் ஏற்றுக்கொள்ள இயலாதவராகவே இதுவரை உள்ளார். (இன்னொரு பக்கம் தமிழ்த்தேசிய வாதிகள், 54 ஆண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் கசந்து திராவிடம் என்ற சொல்லையே கசந்துகொள்கிறார்.) இந்திய நாட்டின் வரலாற்றை இந்துத்துவர்  வடக்கில் இருந்தே தொடங்கினார்; நாம் வரலாறு படிக்கும் போதே அப்படித்தான் படிக்கிறோம். அதன் வெளிப்பாடு இக்கால அரசியலிலும் இருக்கிறது. "திராவிட" என்று சொன்னாலே ஏதோ சொல்லக் கூடாது சொல்வது போலவும், இந்தியக் கருத்திற்குத் திராவிடம்  எதிரானது போலவும் ஒருசிலர் எழுதுகிறார். இப்படி எழுதுபவர் ஒருகாலத்தில் தேசிய வாதிகள் என்று சொல்லப் பட்டார்; இப்பொழுதெல்லாம் தேசியம் பேசுவது அவ்வளவு நளினமில்லை என்பதால், தாம் பேசுவதை இந்துத்துவம் என்றே பலரும் சொல்லிக் கொள்கிறார்.

தமிழைப் பற்றி இவர் எழுதுவதெல்லாம் சாய்வில்லாதது என்றும், திராவிடம் பற்றியும் தமிழ்தேசியம் பேசுகிறவர் எழுதுவதெல்லாம் சாய்வுள்ளது என்றும் சொல்ல முற்படுகிறார். திராவிடம் பேசுவோர் யாரும் மொழியியல் ஆய்வு நூல்களையும் பார்க்காதவர் போலவும், ஓரளவு கூட மற்ற மொழிகளைப் படிக்காதவர் போலவும், வறட்டுத்தவளையாகக் கத்தி,  குண்டுசட்டிக்குள் குதிரையோட்டுவது போலவும் முதலாமவர் பேச்சு அமைகிறது. "எதிரி மடையன், நான் மட்டுமே அறிவாளி" என்ற மேம்போக்கு முதலாமவர் நடையில் தொனிக்கிறது. இவரிடம், "தருக்க மரபு என்பது தமிழில் ஒரு கலையாகவே இருந்தது; இருக்கிறது. இதைப் படிக்க புத்தர் காலம் தொட்டு தென்னாட்டிற்கே பலர்வந்ததாகப் பாகத, பாலி, சங்கத நூல்கள் தெரிவிக்கின்றன. தமிழில் கற்க வேண்டியது எவ்வளவோ உள்ளது. அதை விடுத்து ஏதோ கொள்கையை நிலைநாட்ட மதவாதிகள் ”நாவலோ, நாவல்” என்பது போல ”திராவிட” என்ற சொல்லை இப்படிப் போட்டடிப்பது, அதை அரசியல்வாதிகளோடு பொருத்திச் சொல்லுவதும், எல்லோரையும் முட்டாள் என்று ஒரே போடாகப் போடுவதாகவே முடியும்" என்று இந்துத்துவரிடம் சொன்னால், எடுபட மாட்டேம் என்கிறது. மொத்தத்தில் இந்துத்துவரின் குறிக்கோள் என்ன?

”திராவிட” என்ற சொல் வந்தாலேயே இந்துத்துவர் ஏன் சட்டென எழுகிறார்? "திராவிடர்" என்ற மாந்தவியல் கருத்தையே மறுத்து, "அவருக்கென சில மரபுகள் பழக்கங்கள் தனித்துண்டு" என்பதையும் முற்றிலும் மறுத்துச் சொன்னதையே திருப்பித் திருப்பி "இது மொழிக்கூட்டம் பற்றிய சொல்; அதை இனத்திற்கு எப்படிச் சொல்வது?" என்ற கருத்தை கீறல் விழுந்தது போல் ஏன் சொல்லி வருகிறார்?

இவரைப் பார்த்து நாம் கேட்க நினைப்பது இது தான்:

”எங்களை என்னபெயர் சொல்லித்தான் அழைக்க வேண்டும்?” என்கிறீர்கள்? பாரதர் என்றா? தென்னிந்தியர் என்றா? (ASI என்பது political term.) தெற்கு ஆசியர் என்றா? எங்களுக்குத் தமிழர்கள் என்ற இன அடையாளமோ, திராவிடர் என்ற கூட்ட அடையாளமோ இருக்கக் கூடாதா? (தமிழ்த்தேசிய வாதிகளுக்கும் இற்றைத் திராவிடக் கட்சியினருக்கும் இருப்பது உடன் பிறந்தார் சண்டை. அதை நான் இங்கு பேசவில்லை. 54 ஆண்டுகால ஆட்சி நம்மைப் பிரித்துவிடக் கூடாது. அப்படிப் பிரியின் அது பெருந்தவறு.) இந்தியச் சோதிக்குள் நாங்கள் நந்தன் போலக் கலந்துவிடவேண்டுமோ? சும்மா, ”பாரத மரபு, பாரத மரபு” என்கிறீர்களே? அது என்ன பாரத மரபு? எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் தமிழ் மரபு தான். எங்கள் வாய்மொழி இலக்கியமும், எழுதப்பட்ட இலக்கியங்களும் "தண்பொழில் மூவர் இருந்த வரைப்பு" என்று தான் சொல்லிவருகின்றன. நாங்களும் எம் முன்னோரும் அறிந்து "தமிழ் நிலம்" என்றே சொல்லி வருகிறோம். "இது எதோ மொழிக்கு மட்டுமே உள்ளது, நாங்கள் இந்நிலத்தோடு சேர்க்கப்படக் கூடாதவர்" எனில் இதுவும் ஒரு அறிவு பூர்வமான தீண்டாமையா? அல்லது திராவிடம் என்பது கெட்ட வார்த்தையா? நான் பலகாலம் ”தமிழியம்” என்று தான் இந்தத் திராவிடத்தின் முன்சொல்லைப் பழகி வந்தேன்.  இப்போதும் பல இடங்களில் சொல்கிறேன். தமிழம்>த்ரமிளம்>த்ரமிடம்>த்ராமிடம்>த்ராவிடம். இச் சொற் பிறப்பை மறுக்க வேண்டுமெனில், ”மீமாம்ச சுலோக வார்த்திகம்” எழுதிய 7 ஆம் நூற்றாண்டுக் குமரில பட்டரை மறுத்துப் (அதில் தான் திராவிடம் என்ற சொல் முதலில் தமிழைக் குறித்துப் பயிலப் பெரூகிறது.) பின் ஆதிசங்கரரை மறுத்து 8/9ம் நூற்றாண்டிற்குப் போகவேண்டும்.

தமிழம், தமிழியம் என்ற சொற்களுக்கு மாறாக இத் திராவிடம் என்ற சொல் தான் நிலைபெறுமானால் அதை நான் வேறுவழியின்றி ஏற்றுக் கொள்ளக் கூடியவன் தான்.  (பெரும்பாலான தமிழ்த்தேசியர் போல் சண்டை பிடித்துக் கொண்டிருக்க மாட்டேன். ”தமிழியம்” என் உகப்பு. “திராவிடம்” இருந்து விட்டுப்போகட்டும். வ்ரலாற்றை நான் திருத்தி எழுதமுடியாது. பாடம் தான் கற்கமுடியும்.) அதே பொழுதில் இந்தியன் என்ற சொல்லை வெறுப்பவனும் அல்லன். என் முன்னோர் நாவலந்தீவைச் சிறப்பித்தே கூறிவந்ததால் பெருமைப் படுபவன் தான். ஒன்று சிறிய வட்டம். இன்னொன்று பெரிய வட்டம். இவ்வட்டங்கள் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. சில இந்துத்துவ வாதிகள் இவை முரணானவை என்று தவறாகப் புரிந்துகொண்டு சூலம் எடுத்துக் கிளம்பியிருக்கிறார். கருத்து மாறுபட்டவனெல்லாம் எதிரி என்று கிளம்பினால் அப்புறம் எதிர்காலம் எதிர்காலமாக இருக்காது. நாடு நாடாக இருக்காது.

"நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவ ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே"

என்பது அவ்வையார் வாக்கு. இந்த சூலக்காரர் அதை உணர்ந்தால் சரி.

மொழி என்பது பேசுபவரை மீறித் தனித்து நிற்பதல்ல என்றே மாந்தவியலார் சொல்கிறார். செருமனியிலிருந்து பிரிந்துபோய் பிரித்தானியத் தீவுகளுக்குக் குடியேறினவர் தம் முந்து இடத்தால் ஏங்கல்சு, சாக்சனியன் என்றே  அழைக்கப் பட்டார். அவர்மொழி ஆங்கிலோ சாக்சன், இங்கிலீசு என்று ஆயிற்று. இதே போல் ஃபிரீசுலாந்தில் இருந்தவர் பேசும்மொழி ஃபிரீசியன் ஆயிற்று. இவரெலாம் ஓரிடத்தில் இருந்து இன்னொரிடம் போனார். போன இடத்தில் முந்திய இடத்தை வைத்து மக்கள் பெயரிடப் பட்டார்; பின் மொழியும் பெயரிடப் பட்டது. யாரும் தம் மொழிக்கு தாமே பேர் இடுவது இல்லை. தான் பேசும் மொழியிலாத இன்னொரு கூட்டத்தை அணுகும் போதே மொழிக்குப் பேர் கொடுக்க வேண்டிய தேவை எழுகிறது. இதைப் பற்றி ஏற்கனவே ஒரு முறை முன் எழுதிய உரையாடலில் தமிழ் உலகம் மடற்குழுவில் சொன்னேன். அம்மடலில் இருந்து சிலபகுதிகளை இங்கே வெட்டி ஒட்டுகிறேன். ஊடே சில புதிய செய்திகளையும் உள்ளே நுழைத்திருக்கிறேன்.

தொடக்கத்தில் வடக்கே தமிழிருந்தது; ஆனால் அங்கே உள்ள வகையில் அது பிறழ்ந்திருந்தது. அதைக் கொடுந்தமிழ் என்று நம் முன்னோர் அழைத்தனர். கொடுந்தமிழ் நிலங்கள் பற்றித் தொல்காப்பியத்தால் அறிகிறோம். (இங்கே ஒருசிலர் தொல்காப்பியருக்கே குழி பறிப்பார். நான் புரிந்து கொண்டவரை தொல்காப்பியத்தின் காலம் கி,மு..700. அதை எழுதியது ஒருவரா, பலரா என்பது வேண்டாத வேலை. அது கிடைத்திருக்கும் - நான் அழுத்திச் சொல்ல வேண்டும், கிடைத்திருக்கும் - தமிழ் நூல்களில் முந்தி எழுந்தது என்றுதான் பல தமிழறிஞரும், தமிழ் வரலாற்று அறிஞரும் ஒப்புகிறார்.) வட்டார மொழியான தெலுங்கே முதலில் (கி.மு. 600 அளவில்) வடுகு/வடகு என்று அழைக்கப் பட்டது. வடகரில் ஒரு பிரிவினர் படகர் என்று அழைக்கப் பட்டு இன்றும் நீலமலையில் வாழ்கிறார். வடகு என்பது ஆந்திரத்தில் வதித்த சாதவா கன்னருக்கு உரியதானது. (கி.மு.250-கி.பி.250) சங்க காலத்தில் வடவர் என்றது இன்றைய வட இந்தியரை மட்டும் அல்ல. தமிழ் நாட்டிற்கு வடக்கில் இருந்த அனைவரையுமே குறித்தது. வட மொழி என்பது பாகதத்தையும் (prakrit) குறித்தது; பின் சங்கதத்தையும் (sanskrit) குறித்தது. கொஞ்சம் கொஞ்சமாக வடகு என்பதன் பொருள் விரிந்தது. மாலவன் குன்றத்திற்கு வடக்கே இருந்ததெல்லாம் வடகு தான்.

இந்த வட தமிழ் சிறிது சிறிதாக 2600 ஆண்டுகளுக்கு முன்னேயே உருமாறத் தொடங்கியது. வேடிக்கை என்னவெனில் இப்படித் திரிந்த மொழிகள் எல்லாம் பொதுமைப்  பெயரே கொண்டிருந்தன. இந் நாவலந்தீவில் இருந்த சிறப்பாகக் கருதப்பட்ட பழைய மொழிகள் ஒன்றிற்குக் கூட விதுமைப் பெயர் (specific name) கிடையாது. அதாவது ஆங்கிலம், செருமானியம், ஃபிரெஞ்சு என்பது போன்று கூட்டத்தின் பெயரால் இங்கு மொழிப்பெயர் ஏற்பட்டதே கிடையாது. இதுவும் இந்திய வரலாற்றில் கொஞ்சம் வியக்க வைக்கக் கூடியது. மற்ற இந்தோ இரொப்பியருக்கு இல்லாத ஒரு மரபு. இதையும் என்னைப் போன்றவர் திராவிட மரபு என்கிறோம். இந்தோ -இரோப்பியருக்கு இல்லாத வகையில் இந்தியாவில் எழுந்த மரபுகள் எங்கிருந்து கிளைத்தன? முந்து இந்தோ இரோப்பியத்தில் இருந்தா? அல்லது தமிழிய மரபுகளில் இருந்தா? இதைக் கொஞ்சம் ஓர்ந்து பார்க்க வேண்டாமா?

சரி, செய்திக்கு வரலாம்.

புத்தப் பள்ளிகளில் பிக்குகள் வாயிற் பலுத்தது பாலி/பாளியாயிற்று
பொதுமக்கள் வாயிற் பேசியது பாஷையாயிற்று (speech) (பாஷா என்பதுதான் இந்திரப் பிரத்தத்திற்குப் பக்கத்தில் பாஞ்சாலம் வரை வழங்கிய மொழியின் பெயர்)
வாயால் சொல்ந்தது>சொந்நது>சொன்னது சொல்ந்தம்> சந்தம் ஆயிற்று (இன்றைய லாகூர், பாஞ்சாலத்திற்கும் வடமேற்கே இருந்த மொழியின் பெயர். இதுவே செய்யுள் மொழியும் ஆயிற்று. சந்தத்தால் பாடப்பெற்றது இருக்கு வேதம்.)
பொது மக்கள், குறிப்பாய்த் தென்னக மக்கள் வாயால் மொழிந்தது மொழியாயிற்று. (தம்மொழி> தமிழி>தமிழ் ஆயிற்று)
கல்லுதல்>கற்றுதல்>கத்துதல் = ஒலித்தல், வடநாட்டில் கதம் என வளர்ந்தது; மொழி எனப் பொருள் கொண்டது (ஈழத்தார் கதைப்பது என்ற சொல்லைப் பேசுவது என்ற பொருளில் ஆளுவதைப் பாருங்கள்.)
வாயால் கதித்தது, வாகதம்>பாகதம் ஆயிற்று. (வகரம், பகரமாக மாறுவது கீழை இந்திய வழக்கம்; விகார் பிகார் ஆனதையும் வங்காளம் பங்காளம் ஆனதையும் நோக்குங்கள்.)

தமிழில் ஒரு பொருள் பலசொற்கள் என்ற வகையில் இவையெல்லாம் பல சொற்கள். மொத்தத்தில் எல்லாமே முதல் மொழி ஒன்றிலிருந்து பலவாயின. (இம்முதல் மொழி என்ன என்பதில் வேறுபாடுகள் உண்டுதான். ஆனால் அது உறுதியாகச் சங்கதம் இல்லை. அது பாலியா, பாஷையா, சந்தமா, தமிழா, பாகதமா என்று வேண்டுமானால் நெடு நேரம் பேசலாம்.) உடனே இந்த நாவலந்தீவிற்கு வெளியிலிருந்து மொழிகள் உள்ளே புகவில்லையா எனில் புகுந்தன, ஆனால் அவையெலாம் இத்தீவில் கலந்து கரைந்தன. இந்நாவலந் தீவு ஓர் உருக வைக்கும் பாண்டம் (melting pot) இங்கே உள்ளே வந்து தன் உருவைக் காப்பாற்றிக் கொண்டவை (அரசுகள், இனங்கள், மொழிகள் என எவையாக இருந்தாலும் ) பெரும்பாலும் கிடையாது. வட்டாரப் பேச்சுக்கள் ஒரு பக்கம் கிளர்ந்தன; இன்னொரு பக்கம் பொது மொழிகள் உருவாகும் கட்டாயம் பேரரசுகளால் ஏற்பட்டது. பல வட்டாரப் பேச்சுக்களை வைத்து ஒரு பேரரசை உருவாக்க முடியாதல்லவா?

இந் நாவலந்தீவில் முதற்பேரரசு மகதம். அதன் தலைநகரான பாடலிப் பட்டணத்தில் (Patna) மக்கள் பேசிய மொழி மாகதி (மகதம்> மாகதி; விதுமைப் பெயர். மகதத்தில் இருந்து மாகதி வந்ததா, அல்லது மாகதியில் இருந்து மகதம் வந்ததா, ஆய வேண்டிய ஒன்று. தமிழில் இருந்து தமிழரா, தமிழரில் இருந்து தமிழா என்ற கேள்வியைப் போல. மாகதம் = பெரிய கதம்; அதாவது பரந்த மொழி.).

பாலியில் இருந்து வளர்ந்த மற்றொரு மொழி அறுத்த மாகதி (ஆமாங்க பாதி மாகதி = அறுத்த மாகதி>அர்த்த மாகதி; இந்தக் காலத்தில் பாதி இந்துத்தானி என்று சொல்வதில்லையா அது போல.) புத்தர் மாகதியில் பேசினார்; ஆனாலும் பின்ன்னால் புத்தப் பள்ளிகளில் பேசப்பட்ட, வழக்கில் இருந்த பாலி/பாளி புத்தமதத்தின் அடிப்படை மொழியாயிற்று. மகாவீர வர்த்தமானர் அறுத்த மாகதியில் பேசினார். அது செயினரின் மொழி யாயிற்று. ஆனாலும் புத்தரும் மகாவீரரும் தமிழ் கற்றதாக அவர்களின் வரலாறுகள் சொல்கின்றன. ஏனெனில் மகதத்தில் வணிக மொழியாகத் தமிழ் இருந்தது.

மகதப் பேரரசு, பாஞ்சாலத்தைத் தொட்ட பிறகே அங்கு பேசப்படும் "பாஷை"யை பொது மொழி உள்ளடக்கத் தொடங்கியது. பாணினி தன் செய்யுள் நடையைச் "சந்தம்" என்றும் வட்டாரப் பேச்சைப் பாஷை என்றும் சொல்கிறான். அந்தச் ”சந்தம்/பாஷை” வட்டார மொழிக்கு இலக்கணம் வகுத்தது தான் பாணினீயம். பாணினி காலத்தில் சங்கதம் என்ற சொல்லே கிடையாது. (அவன் நூலில் அச்சொல் இல்லவேயில்லை. சந்தம் வேறு; சங்கதம் வேறு என்று ஆழப் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் தமிழ் எனும் பெயரைத் தொல்காப்பியன் சொல்கிறான். தமிழுக்கு இன்னொரு பெயரை எவனும் கொடுத்தது இல்லை.)

மகதத்திற்குப் பிறகு ஆட்சியின் மையம் உச்சயினி போய், குத்தரால் (குப்தர்) உயர்ந்து, பின் வட ஆந்திரத்திற்கு வந்து விட்டது. இந்தப் பொழுதில் தான் வட்டாரக் கலவை மேலும் கூடிப் பாகதம் பிறந்தது. பாகதம் பிறக்கும் போது இருந்த அரசர் தான் நூற்றுவர் கன்னர் என்று சிலம்பில் அழைக்கப் பட்ட சத கர்ணிகள். பாகதத்தைப் போற்றியவர் சத கர்ணிகள். வசிட்டி என்ற அரசன் தன் நாணயத்தின் ஒரு பக்கம் பெருமி (brahmi) எழுத்தில் பாகத மொழியிலும், மற்றொருபக்கம் தமிழியில் (Tamizi) தமிழ் மொழியிலும் பொறித்துள்ளான் என்றால் பார்த்துக் கொள்க. ஃகாலா என்ற அரசன் தமிழ் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபட்டு நம் அகநானூறு போல, ஆனால் 700 அகப் பாட்டுக்களைக் கொண்ட நூலைப் பாகதப் புலவர் கொண்டு பாகதத்தில் தொகுத்துள்ளான். (இந்நூலுக்கும் தமிழ்ச் சங்க இலக்கியங்களுக்குமிடையே உள்ள ஒற்றுமை பற்றி இரா. மதிவாணன் விளக்குவார். www. intamm.com வலைத்தளத்திற்குப் போய்ப் பாருங்கள்.) இச் சாதவா கன்ன குலத்திலோ அன்றி மகத அரச குலத்திலோ பிறந்த பெருக தத்தனுக்குத் தான் கபிலர் குறிஞ்சிப் பாட்டு சொன்னார். இச் சாதவா கன்னர் காலம் சங்க காலத்தை ஒட்டியது. அதனால் தான் தெலுங்கிற்கும் பாகதத்திற்கும் அவ்வளவு நெருக்கம். பாகதத்திற்கும் தமிழுக்கும் இடையே இருந்த பாலம் தான் தெலுங்கு. வேடிக்கை பாருங்கள் பாகதத்திற்கு அது தெனுகு (தெற்கில் உள்ளது); நமக்கு அது வடுகு (வடக்கில் உள்ளது)

இப்பாகதத்தை செந்தரப்படுத்தி உருவாக்கப் பட்டதே செங்கதம் (செம்+கதம்; செம்+தமிழ் போல). பல வட்டார வழக்கைக் கலந்து எழுந்ததால் சம்+கதம் = சங்கதம் என்றும் அழைக்கப் பட்டது. (சமைத்தல் = ஒன்று சேர்த்தல் என்ற வழக்கையும் கவனியுங்கள்.) ஞானசம்பந்தர் தன் தேவாரங்களில் சங்கதம் என்றே பயிலுவார். (சங்கதம் விடுத்து முட்டாள் தனமாய் சம்ஸ்க்ருதம் என்று அவன் வழி பலுக்க முற்படுகிறோம்.) இச்சங்கதம், நாவலந்தீவில் படித்தவர் நடுவில் பெரிதும் பரவியது; அவரின் மொழியாகவே ஆகியது. எப்படி 17 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலோ சாக்சன் மக்களில் படித்த மேல்தட்டு வருக்கத்தின் இடையே இலத்தீன் பரவியதோ, அதைப் போல செங்கதம், படித்தவர் மொழி யானது; செந்தமிழும் அதைப் போலப் படித்தவரிடையே தான் இருந்தது; இன்றும் இருக்கிறது. தமிழுக்கு முந்தியது செந்தமிழ் என்று சொன்னால் அது எவ்வளவு தவறோ, அவ்வளவு தவறு பாகதத்துக்கு முந்தியது சங்கதம் என்பது. வரலாற்றுக் காரணங்களால் செயினமும், புத்தமும் இந்தியாவில் குறைந்து போயின; வடக்கே வேதியமும், தெற்கே சிவநெறியும் விண்ணெறியும் மேல் ஓங்கியதால் சங்கதம் உயர்ந்தது. வென்றவர் வரலாற்றைத் தம் போக்குக்கு ஏற்ப எழுதுவது உலக வழக்கமே. அதற்காக "நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே!" என்று சொல்லாது இருக்க முடியுமா?

கி.மு. 100-ல் இருந்து கி.பி.100 -க்குள் சங்கதம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஆக வளர்ந்தது. கி.பி. 100 க்கு முன்னர் சங்கதக் கல்வெட்டுக்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் எங்குமே கிடையாது. அதற்குமுன் சங்கதம் வெறும் வாய்ப்பேச்சுத் தான். மனப்பாடம் தான். கி.பி. 100-க்கு முன் வடநாட்டில் இருந்தவை பாலி, அறுத்த மாகதி, பாகதக் கல்வெட்டுக்கள் தான். மொத்தத்தில் வடக்கே கிடைத்த கல்வெட்டுக்கள் மிகக்குறைவு. இந்தியாவில் கிடைத்த கல்வெட்டுக்களில் 90% கல்வெட்டுக்கள் தக்கணம், குறிப்பாக தமிழ்நாடு, கன்னட மாநிலங்களில் தான் (3 இலக்கம் மொத்தக் கல்வெட்டுக்கள் இந்தியாவில் கிடைத்திருப்பதாக ஒரு கணக்கு உண்டு) உள்ளன. இத்தனைக்கும் பிறகு, பெருமி எழுத்து தான் முந்தியது; சங்கதம் தான் எல்லாவற்றிற்கும் முன்னது என்று சொல்பவர் இருக்கிறார். இப்படித் தமிழ், பாலி, பாகதம், அறுத்த மாகதி போன்ற பழைய மக்கள் மொழிகளை ஒதுக்கி சங்கதத்தைத் தூக்கிப் பிடிக்கும் கருத்துமுதல் முனைப்பாளர்களை என்ன செய்வது? மாற்றவா முடியும்?

இக்காலத்திற்குப் பின், வட்டார இலக்கியங்கள் சங்கதத்தில் விரைந்து மொழிபெயர்க்கப் பட்டன. சங்கத வல்லுநர் நாடெங்கிலும் பரவத் தொடங்கினார். தொன்மங்கள், புராணங்கள், காப்பியங்கள் உருவாக்கப் பட்டன. (இவையெல்லாமே புத்தருக்கும் மாவீரருக்கும் பின்னர் எழுதப் பட்டவை. இவற்றின் காலங்களை மறைத்து ”இவை முன்னரே எழுதப் பட்டவை, இவற்றில் உள்ள தொன்மங்களை புத்தமதமும் செயின மதமும் படியெடுத்துக் கொண்டன” என்பது முழுப் பூசணியைச் சோற்றில் மறைப்பது.) புத்தர்களையும், சமணர்களையும் அடித்து விலக்குவதில் வேத நெறியினர் ஆழ்ந்து ஈடுபட்டனர். அதற்கு சங்கதம் பயன்பட்டது. சங்கதம் அரசவைகளிலும், குறிப்பாக பேரரசர்களின் அவைகளில் (குத்தர், பல்லவர்) பரவியது. வட்டார மொழிகள் வேறு வழியின்றி சிற்றரசர், பெருங்கிழாருக்கு இடையே புரக்கப் பட்டன. சங்கதம் கொஞ்சம் கொஞ்சமாக மேலோங்கிய நிலையை அடைந்தது. குத்த அரசு தான் சங்கதத்தின் உச்சகட்டத்திற்கான களனை அமைத்துக் கொடுத்தது.

சங்கதம் சரியாகத் தெரியாத ஒரு சதகர்ணி அரசன் தற்குறியாய் தன் அரசியின் முன்னே அவலப்பட்டுப் போகப் பின் அரசவைப் புலவர் மூலம் தெளிவுற்ற கதையை மருத்துவர் செயபாரதி அகத்தியர் மடற்குழுவில் ஒருமுறை அருமையாகத் தெரிவித்து இருந்தார். அச் சதகர்ணியின் அவைக்களத்தில் இருந்த ஒரு புலவர் தான் முதலில் சங்கதத்திற்கு இலக்கணம் எழுதியவர். (அவர் பெயர் காத்தியாயனர் என்று நினைக்கிறேன் சரியாக இங்கு நினைவுக்கு வரவில்லை). பாணினி இலக்கணம் எழுதியது சந்த மொழிக்கு; சங்கதத்திற்கு அல்ல. (நன்னூலார் எழதிய இலக்கணத்தை வைத்துக் கொண்டு சங்க நூலைப் படித்தால் பல இடங்களில் முரண் படும்.) அப்பொழுது சந்த மொழியும் சங்கதமும் ஒன்றா என்றால் ஆம் என்றும் சொல்ல வேண்டும் இல்லை என்றும் சொல்லவேண்டும். சிவகங்கைத் தமிழும் சென்னைத் தமிழும் ஒன்றா என்றால் என்ன சொல்வீர்கள்? அது போலத்தான். அக்காலச் சந்தமொழியைக் குறிப்பதற்கு பாணினி சொல்லாத சங்கதம் என்ற பெயரைப் பயன்படுத்தலாம் என்பது எவ்விதத்தில் சரி? சங்கதக் கட்டுமானமே எழாத முற்பட்ட நிலைக்கு சங்கதம் என்றுகூறி ஏகப்பட்ட அறிஞர் எழுதுகிறாரே அது எப்படிச் சரி?

அது சரியானால், தமிழ்க் குடும்ப மொழிகளைப் பேசியவர்களை கி.மு. 3000 அளவிலும் திராவிட என்று இன்று அறிவியல் காரணமாய் மாந்தவியலில் அழைப்பது தவறே இல்லை. பாணினியிடம் நீ சங்கதத்திற்கு இலக்கணம் எழுதினாய் என்றால் அவன் திகைப்பான். அதுபோல பாண்டியன் முந்நீர் விழவின் நெடியோனிடம் போய் நீ ஒரு திராவிடன் என்றால் முழிப்பான் தான். இருந்தாலும் அறிவியலில் வகைப்படுத்தம் (classification) என்பது வேண்டும் இல்லையா? அதற்காகச் செய்கிறோம். பேரரசன் அசோகனிடம் நீ ஒரு இந்தியன் என்றும் பாரத தேசத்தான் என்றும் சொல்ல முடியுமோ? இந்தியா, பாரதம், இந்துத் தானம் என்பவை கட்டுமானங்கள். அவற்றை வலிந்து பிடித்துக் கொண்டு அக்கட்டுமானங்கள் எழாத முந்தைக் காலத்திற்கு எப்படிச் சொல்லப் போச்சு என்றால் நான் திருப்பிக் கேட்பது, "சீனரைச் சீனர் என்று எப்படி சொல்லப் போச்சு?" என்ற மறு கேள்வி தான். ஃகான் அரச குலத்திற்குப் பிறகு தான் சின் அரசகுலம் சீனத்தில் வந்தது. ஆனாலும் பின் வந்த பேரை வைத்து முன்னுள்ள அரசைக் கூறுவதில்லையா? (அவர் தமக்குள் நடுவண் அரசத்தார் (middle kingdom) என்றே இன்றும் அழைத்துக் கொள்கிறார்.) நாம் சீனர்கள் என்று சொல்வதும் ஒருவகைப் பழக்கம் தான். அது வரலாறு தெரிந்தவனுக்குப் புரியும். அமெரிக்கத் தொல்குடிகளை அவருக்குத் தொடர்பே இல்லாத முறையில் செவ்விந்தியன் என்கிறோமே? இது சரியா?

திராவிட என்ற ஒரு சொல்லுக்கே இப்படிக் கூக்குரல் எழுப்புவது வியப்பாக இருக்கிறது. அதை வைத்து ஓரு ஈனியல் முடிவையே பேத்தல் என்பது இன்னும் வியப்பாக இருக்கிறது. ஒரு சொல் முதலில் ஒரு பொருளைக் குறித்துப் பின் புதிய ஆட்சிகளால் புதிய பொருள் பெறுவது ஒன்றும் எந்த மொழிக்கும் புதியது அல்லவே? திராவிடர் என்ற பெயர் இன்றையத் திராவிட மொழிகளைப் பேசுபவருக்கும் அவரின் முன்னோருக்கும் உரிய பெயராக விரிவு பெறுகிறது. நான் அறிந்த வரை, திராவிடருக்கென உள்ள சில மரபுகள்:

1. தாய்த்தெய்வ வழிபாடு
2. உறவுக்குள் திருமண முறை
3. கொளுவுநிலைச் சிந்தனை முறை (agglutinative thinking)
4. அணிகலன்களின் மேல் ஈடுபாடு
5. உரக்கப் பேசும் பழக்கம்
6. இறந்தோரைப் புதைக்கும் வழக்கம்
7. உணர்வு பூர்வமாகச் சிந்திக்கும் பழக்கம்
8. எட்டுத் தலைமுறை உறவை மிகத் தெளிவாக முறை வைத்துக் கூப்பிடும் பழக்கம்
9. அளவுக்கு அதிகமாகவே பழமொழிகள், மரபுத் தொடர்களில் தங்கள் கருத்தை வெளிப்படுத்துவது

இதில் ஒவ்வொன்றுக்கும் மாறிய எடுத்துக்காட்டுக்களைக் கூறி விதண்டா வாதம் செய்யவும் முடியும். ஆனாலும் இவற்றில் பலவும் சேர்ந்த ஒரு கூட்டுக் கலவை தான் தமிழியன் என்ற திராவிடன்.

சென்னைக்கு அருகில் பூண்டியில் கண்டுபிடிக்கப் பட்ட கற்கால மனிதர்கள் 200000 -300000 ஆண்டுகளுக்கு முன்னுள்ளவர் என்ற மாந்தவியல் கூற்றைச் சிலர் அறிந்ததில்லை போலும். தக்காண ஆய்வியல் நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வறிஞர் காலஞ்சென்ற சங்காலியாவின் ஆய்வுகளைப் படியுங்கள். பழைய கற்கால மனிதர்களின் இருப்பிடங்கள் தமிழ்நாடு, கர்நாடகா, மாராட்டம் என்ற மூன்று மாநிலங்களிலேயே கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இக்கால ஈனியல் அறிஞரின் ஆய்வுகளும் அக்கால மாந்தவியல் கூற்றுகளோடு ஒத்துப்போகின்றன. இக்கால ஈனியல் அறிஞர் 65000 ஆண்டுகளுக்கு முன் நெய்தல் மாந்தன் இந்தியாவில் நுழைந்தான் என்பார். நெல்லைமாவட்ட ஆதிச்ச நல்லூரிலும், கரூருக்கு அருகில் கொடுமணலிலும், இன்னும் பல இடங்களில் தமிழ்நாட்டில் மாந்தவியற் தடையங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இத்தகைய பழைய மாந்தர் எல்லாம் வேறெதோ மொழிபேசி பின் சட்டெனத் தமிழுக்குத் தாவினார் என்பது ஒரு வகையான நிறுவ முடியாத (unprovable) ஊகம். தமிழ் என்பது எங்கிருந்தோ குதித்து வந்த மொழியல்ல. அது இயற்கையாக இங்கெழுந்த மொழி. சொல்லி வைத்தாற் போல் கி.மு.600 -ல் ”சூ... மந்திரக்காளி” என்று அது தோன்றிவிடவில்லை. இதற்குத் தான் தொல்காப்பியத்தைத் துணைக்கு அழைக்கிறோம். அவர் "என்மனார்" என்று அடிக்கு ஒருதரம் சொல்லி, "அய்யா, இது முன்னாடி இருந்துதுன்னு எல்லாரும் சொல்றாங்க" என்று சொல்வார். வடமொழி ஆதரவாளர் என்னடாவெனில், "தொல்காப்பியர் தானே, உமக்கு ஆதாரம், அப்பத் தொல்காப்பியரையே "doubt"ன்னு போடு, இத் தமிழர்கள் அம்பேல்" என்று பாய்கிறார். தொல்காப்பியம் போன்ற இலக்கணம் எழ வேண்டும் எனில் தமிழ் எனும் மொழி பல்லாண்டு காலம் பேச்சு மொழியாக இங்கு இருந்திருக்க வேண்டும்.

ஒரு முறை தமிழ் இணையத்தில் 1997-99 இல் இணைந்த பொழுதில் தலைகீழ்க் கணக்குப் போட்டு கிறித்து பிறக்கும் போது கிட்டத்தட்ட 5 இலக்கம் பேராவது பழந்தமிழக எல்லைக்குள் இருந்திருக்க வேண்டுமென முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஒருவர் வெளியிட்ட கணக்கை விவரித்திருந்தேன். கி.மு. 500 ல் 3 அல்லது 4 இலக்கம் பேராவது இருந்திருக்க மாட்டாரா?. அவர் எல்லாம் திடீரென்று தமிழ் பேசத் தொடங்கினாரா? அவர் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள முடியாத வகையில் தனித்தனி மொழிகள் பேசியிருப்பார் எனில், இம்மக்கள் தொகை அதோடு ஒத்துப் போகாது. மாறாக அவரின் இத்தொகை கிட்டத்தட்டச் சரியெனில்,  அவருள் ஒரு பொது மொழி ஏற்பட்டிருந்திருக்க வேண்டும். இக்கணக்கை இன்னும் பின்கொண்டு போனால் கி.மு.1000 வரைக்கும் கூட ஒரு இலக்கத்திற்கும் மேல் ஆட்கள் இங்கு இருந்திருக்கிறார் என்பது புலப்படும். மொத்தத்தில் தமிழனின் கொடிவழி நீண்டது என்றே புலப்படுகிறது.

அன்புடன்,
இராம.கி.