Tuesday, June 02, 2020

smart = சூடிகை

21/4/2015 இல் ஒருமுறை தமிழுலகம் மடற்குழுவில், சிங்கைப் பழனி, ” இங்கு சிங்கையில் Smart Nation என்பதை அங்கு இந்தியாவில் Smart City என்று சொல்கிறார்கள் இந்த smart எனும் சொல்  smart building, smart card, smart phone என பலவற்றுக்கும் ஆங்கிலத்தில் ஒரே சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு அறிவார்ந்த தேசம் என தற்காலிகமாக(சரியான சொல் கிடைக்கும் வரை) பயன்படுத்தப்படுகிறது,. ஆகா இந்தியாவில் smart city  என்கிறார்களே  நல்ல தமிழ்ச்சொல்லைப் பய்னபடுத்துவார்கள் என்று ஆவலோடு எதிர் பார்த்தால் எல்லா ஊடகங்களும் ஸ்மார்ட் சிட்டி என்று தான் எழுதுகின்றன. வேறு யாராவது இதற்குச் சரியான சொல்லைக் கையாண்டிருக்கின்றனரா? எல்லாவற்றிற்குமே பொருந்தும் தமிழ்ச்சொல் சொல் என்ன? மிடுக்கான, திறம்வாய்ந்த, கூர்மதியுடைய என்பனவெல்லாம் சரியாகப்படவில்லை.  சொல்லுங்கள் - அறிந்துகொள்கிறேன்” என்றார் .

அவருக்கு, “அவக்கரமாய் எழுதுகிறேன். உங்களின் மறுமொழியை நாளை மறுநாள் பார்த்துத்தான் என்னால் எதிர்வினையாற்றமுடியும். இடையில் மற்றவர்களோடு கலந்தாடுங்கள். (இந்த மடலை தமிழுலகம் மட்டுமல்லாது மற்ற இரு மடற்குழுக்களுக்கும் சேர்த்தனுப்புகிறேன்; அவர்களுக்கும் தெரியட்டுமே? பொதுவான விளக்கம் தானே? பொறுத்துக் கொள்ளுங்கள்” என்ரு தொடங்கி கீழுள்ளதை எழுதினேன்.

சுல்>சுள்>சூள்>சூழ் என்பது தான் இங்கு சரியான அடிச்சொல். நாலா பக்கமும், 360 பாகையையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுதலே smartness க்குத் தொடக்கமாகும். சூழின் வழி பல இரண்டாம் நிலைச் சொற்களைச் சொல்லமுடியும்.

சூழ்த்தல்          = சுற்றுதல் to wrap around ”பூப்பால் வெண்டுகில் சூழ்ப்ப” பரிபா. 10:80
சூழ்தல்             = சுற்றியிருத்தல்.to encompass, surround, envelope
(அறைகடல் சூழ் வையம், நாலடி, 230)
                            = ஆராய்தல் to consul, to deliberatet (நின்னொடு
சூழ்வல் தோழி, கலித். 54),
                            = கருதுதல் to intend, to think over(புலஞ் சூழ்
வேள்வியில் மணிமே.13:28)
                            = தீய சூழ்ச்சிக்குத் திட்டமிடல், to conspire
(கொடியவன் கடிய சூழ்ந்தான், சீவக.261)
                            = தேர்ந்தெடுத்தல் to select (சூழ் புரவித்தேர், பு.வெ.9 16)
சூழ்/சூழிகை = கலந்தாய்வு deliberation, ஆராய்ச்சி investigation
சூழ்ச்சி              = கலந்தாய்வு counsel, consultation (போற்றார்
பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும், புறம் 2:7)
                            = நுண்ணறிவு wisdom (கருமக்கிடக்கையும் கலங்காச்
சூழ்ச்சியும், பெருங். உஞ்சைக்.46:117)

இன்றைக்குச் சூழ்ச்சி என்பது கெட்டசெயலுக்கான கலந்தாய்வாகவே பொருள்கொள்ளப்படுகிறது. எப்படி நாற்றத்தின் பொருள் திரிந்ததோ, அதுபோல இதுவும் ஆயிற்று. சங்ககாலத்தில் இப்படியில்லை. அப்பொழுது பொதுப்பொருளே இருந்தது. சூழிகையின் திரிவாகச் சூடிகை என்ற சொல் பிறந்து இன்றும் நல்லபொருளிலேயே ஆண்டுகொண்டிருக்கிறோம். (பொதுவாக வட மாவட்டங்களில் ழகரம் டகரமாகும். தெலுங்கு தேசத்தில் இது இன்னும் உறுதிபடும். சோழரைச் சோடர் என்றே அவர் சொல்லுவார்.) சூடிகையைச் சுறுசுறுப்பு என்றும் பொருள்கொள்ளுகிறோம்.

சூழிகை>சூடிகை. பேச்சுவழக்கில் சூடிகை என்பது சூட்டிகை, சூட்டிக்கை என்றும் திரித்து சொல்லப்படும். இதன் அடிப்படைப் பொருள் ”அறிவுக்கூர்மை (சிறுவயதிலேயே அவன் சூட்டிகையாக இருந்தான்)” என்றும், “சுறுசுறுப்பு (வேலைசெய்வதில் அவன் படு சூட்டிகை)” என்றும் பொருள்கொள்ளப்படும். இதே பொருளில் ஆளப்படும் சமர்த்து என்று பேச்சுவழக்கில் சொல்லப்படுவது சங்கதச் சொல்லா, அல்லது எழுத்துப்பெயர்ப்பு செய்த ஆங்கிலச் சொல்லா என்று பார்க்கவேண்டும். மோனியர்-வில்லியம்சு அகரமுதலியை நான் இன்னும் பார்க்கவில்லை. சமர்த்து என்பது உறுதியாகத் தமிழ்ச்சொல்லில்லை. என்னைக் கேட்டால் smart ற்கு இணையாகச் சூடிகை என்றே சொல்லலாம்.

சூடிகை(யான) நகரம் = smart city,
சூடிகை(யான) நாடு = smart nation,
சூடிகை(யான) பேசி = சூடிகைப் பேசி = smart phone; (இதைத் திறன்பேசி என்று சிலர் மொழிபெயர்க்கிறார்கள். நானும் சிலபோது பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் திறனை
capacity, ability, smartness என்று பல்வேறு பண்புகளுக்கு நீட்டிச் சொல்வது சரியில்லையென்றே தோன்றுகிறது. நமக்குச் சொற்துல்லியம் வேண்டாமா?
சூடிகை(யான) பையன் = smart boy; ”அவன் சூடிகையான பயன்ங்க; சொன்னாக் கர்ப்பூரம் மாதிரி கப்புன்னு புடிச்சுக்குவான்.”
சூடிகை(யான) ஆள் = smart man

சூடிகை பொருந்தாத இடமிருந்தாற் சொல்லுங்கள்.

அன்புடன்,
இராம.கி.

சிங்கைப் பழனியின் பின்னூட்டு:

அன்புக்கினிய இராம.கி ஐயா,

இந்தப் பின்னூட்டுக்கு மிக்க நன்றி. இந்த சூ(ட்)டிகை, சுட்டி, புத்திசாலி என்ற சொற்களும் மனதில் பட்டவைதான். சூ(ட்)டிகைக்கும் சுட்டுக்கும் இடையில் எதைப் பயன்படுத்தலாம் என்று தயங்கியதும் உண்டு. சூடிகை என்பதற்குத் தாங்கள் தந்த விளக்கம் எல்லாம் சரியே. ஆனால் சூடிகை நகரம் என்று சொல்வதற்கும்  சுட்டி நகரம் என்று சொல்வதற்கும் இடையில் சுட்டி என்பது சற்று எளிதாகப் புரியும்படியும் உச்சரிப்பதற்கும் உகந்ததாக இருக்கிறதல்லவா? சுட்டி - நகரம், சுட்டி- தேசம், சுட்டி - கட்டடம், சுட்டி- வாகனம், சுட்டி - பேசி. உங்கள் கருத்தையும் மற்ற நண்பர்களின் கருத்தையும் அறிய ஆவலாய் உள்ளேன்.

அன்புடன்
பழனி
சிங்கை.

உரையாடல் இதன்பின் நின்று போனது. நான் இன்றும் சூடிகையையே விரும்புகிறேன்