Friday, October 05, 2018

தமிழ் என்ற சொல்

"தமிழ் என்ற சொல் முதன் முறையாக எந்தப் பழந்தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்படுகிறது? சான்றுகளோடும் ஆண்டுகளோடும் தெரிவித்தால் நன்றியுடையவனாவேன்" என்று முகநூலில் மாலன் கேட்டதாக  ஒருமுறை மணிவண்ணன் சிலகாலம் முன்பு குறிப்பிட்டிருந்தார். இது அறிவினாவாக இருப்பின் கேட்கத் தேவையென்ன? மாலன் போன்ற எழுத்தாளருக்கு இது அறியா வினாவாக இருக்கவும் வாய்ப்பில்லை. பெரும்பாலும் இது ஐய வினாவாக எழுப்பப் பட்டிருக்குமென்றே எண்ணுகிறேன். இணையத்தில் இதுபோன்ற ஐய வினாக்கள் ஏராளம். ”எவர் எந்த நோக்கில் இவற்றை எழுப்புகிறார்?” என்று ஆழங் காண்பது கடினம்.

தமிழ் என்ற சொல்லைப் பழந்தமிழ் இலக்கியத்தில் தேடினால் காலத்தால் முதலிற் கிடைப்பது தொல்காப்பியமே. இது கி.மு.700க்கும் முந்தியது என்றே நான் கருதுகிறேன். முன்னாளையப் பல தமிழறிஞரும் குறைந்தது கி.மு.500க்கு முந்தியது என்பார். ஆனால் தொல்காப்பியத்தையே ஐயப்பட்டு ”அது ஒருவர் செய்ததில்லை; பல்வேறு ஆசிரியர் எழுதித் தொகுத்தது” என்றுசொல்லி அதை கி.பி.500 க்குத் தள்ளும் ஒரு சிலர் குறிக்கோளோடு தான் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். எனவே கி.மு.700 என்பதை இந்தச் ”சிலர்” ஏற்க மாட்டார். தொல்காப்பியத்தையே ஏற்காதவர், அதன் பாயிரத்தையா ஏற்பார்? எனவே அதையும் ஒதுக்குவர்.

சங்க இலக்கியக் குறிப்புகளையும் புறந்தள்ளி அதன் காலத்தையும் கி.மு.200-கி.பி.200 என்று குறுக்குகிறவரும் உண்டு. [சங்க காலத்தை கி.மு.550 - கி.பி.250 என்றே நான் கொள்ளுவேன். மகதத்து பிம்பிசாரன் காலத்திற்கு இணைகள் நம் ஆய்விற் தென்படுகின்றன. முதலாம் கரிகாலன் பிம்பிசாரனின் பெயரனோடு பொருதியிருக்க வேண்டும் என்றே சங்க இலக்கிய ஆய்வு மூலம் உணர்கிறோம். பொருந்தல், கொடுமணம் தொல்லாய்விற்குப் பின்னும் சங்க காலத்தைக் கி.மு.200-கி.பி.200 என்று சொல்லிக் கொண்டிருப்பது கிளிப் பிள்ளைகள் தன் ஆண்டான் சொல்லிக்கொடுத்ததைப் பரட்டுவது போலிருக்கிறது. அதிலிருந்து நம்மில் பலரும் வெளிவந்தால் நல்லது.

நானறியப் பழந்தமிழ் இலக்கியத்தைக் காட்டிலும் பாகதம், சங்கத ஆவணங்களைப் பார்த்துச் சான்றுதேடுவது நல்லது. ஏனெனில் ஐய வினா உள்ளவரும், மேலையரும் அவற்றைத்தான் பெரிதும் நம்புகிறார். அப்படிச் சான்றுகொடுத்தால் அவர்போன்றோர் ஒரு கேள்வியும் கேட்கமாட்டார். கப்சிப்பென்று அமைந்து அப்படியே எடுத்துக்கொள்வார். [”தமிழர், குறிப்பாகத் தனித்தமிழ் தாண்டவராயர், சொல்வதையெல்லாம் நம்பக் கூடாது. அவர் வெறியர்.” என்பதே சங்கத விழையரின், மேலையரின் போக்காய் இருக்கிறது.]

கலிங்கத்துக் காரவேலன் கல்வெட்டின் [இதன்காலம் கி.மு,165 என்று வடநாட்டு ஆய்வாளர் கூறுகிறார்.] பதினோராவது வரியில் [கீழே ஆங்கில மொழிபெயர்ப்பிற் கொடுத்துள்ளேன்] “......And the market-town(?) Pithumda founded by the Ava king he ploughs down with a plough of asses; and (he) thoyoughy breaks up the confederacy of the T(r)amira (Dramira) countries of one hundred and thirteen years, which has been a source of danger to (his) Country (Janapada)......."என்ற வாக்கியம் வருகிறது. ஆங்கு பயிலும் பாகதச்சொல் “திராமிர சங்காத்தம்” என்பதாகும்.

ஆதி சங்கரருக்கு (கி.பி.9 ஆம் நூற்றாண்டு) முந்திய காலம் வரை “திராமிர” என்றசொல் தமிழரைக் குறிக்கும் சங்கத/பாகதச் சொல்லாகும். ”தமில, தமிள, தாமில, தாமிள, த்ராமிள, த்ராமிட, த்ராமிர, த்ராவிட” என்ற திரிவுகள் எல்லாமே அது நாள்வரை (அதாவது கி.பி. 9 ஆம் நூற்றாண்டு வரை) தமிழரையே குறித்தது. 14/15 ஆம் நூற்றாண்டிற்கு அப்புறந்தான் கொஞ்சங் கொஞ்சமாய் அதன் பொருள் விரிந்து தமிழர், தெலுங்கர், கன்னடர் என்ற எல்லாத் தெற்குப்பகுதி மக்களையும் சேர்த்துக் குறித்தது. கால்டுவெல் வந்தற்குப் பிறகுதான் இது முற்றுமுழுதாக ஒரு மொழிக்குடும்ப மக்களைக் குறித்தது. இந்தக்காலத்திற் பெரியாரைப் பின்பற்றித் தமிழ்நாட்டில் இருக்கும் “திராவிட இயக்கத்தினரை”யுங் குறிக்கிறது. ”கால. தேச, வர்த்த மானம்” பார்த்தால், உறுதியாகக் காரவேலன் கல்வெட்டுக் குறிப்பது தமிழ்/தமிழரைத் தான்.

ஆகத் தமிழ்/தமிழர் என்றசொல் கி.மு,165 இல் அற்றை வழக்கிற் புரியப்பட்டுக் கல்வெட்டிற் பதியப்பட்டிருக்கிறது. தமிழ் ஆவணங்களை நம்பாது சண்டித் தனம் பண்ணுபவர் இப் பாகதக் கல்வெட்டு கண்டு அமையலாம். தவிர இன்னொரு செய்தியையும் இங்கு புரிய வைக்க வேண்டும். மேலே வரும் கல்வெட்டு வாக்கியத்தில் ”113” என்று பாகதப்பொருள் கொண்டு படிக்கக் கூடாது, 1300 என்ற பொருளைக்கொண்டு படிக்கவேண்டும்” என்பாரும் உண்டு. சசிகாந்த் என்ற அண்மை ஆய்வாளரின் படி “113 ஐ மகாவீரருக்குப் பின் என்ற ஆண்டுக்கணக்கிற் படிக்க வேண்டும்” என்பார். (காரவேலன் செயினநெறியைப் பின்பற்றிய கலிங்க மன்னன். செயினரிடையே மகாவீரரின் பரி நிர்வாணத்தைக் கொண்டு ஒரு முற்றாண்டுக் கணக்கு உண்டு. ம.மு. என்பது மகாவீரருக்கு முன் என்றாகும். ம.பி. என்பது மகாவீரருக்குப் பின் என்றாகும். மகாவீரர் பரிநிர்வாணம் அடைந்தது கி.மு,527.) ம.பி. 113 என்பது இந்தக் கணக்கில் கி.மு.414 என்றாகும். அதாவது கி.மு.414 இலேயே தமிழர் கூட்டணி (திராமிர சங்காத்தம்) ஏற்பட்டு விட்டதாம். ஆகத் தமிழ்/தமிழர் என்ற கருத்தீடு கி.மு.414 இல் இருந்ததை ஒரு கலிங்க அரசன் கி.மு.165 இல் தன் கல்வெட்டிற் பதிந்திருக்கிறான். 113 க்குப் மாறாக 1300 என்று கொண்டால் தமிழர் கூட்டணி ஏற்பட்டது கி.மு.1465 என்றாகும்.

நான் கொஞ்சம் கட்டுப்படியான ஆள். இப்போதைக்கு கி.மு.414 என்றே எடுத்துக்கொள்கிறேன். [”சிலம்பின் காலம்” என்ற என்நூலில் இதுபற்றி எழுதியிருக்கிறேன்.] இதுவே நான் பார்த்த வரையில் தமிழ் பற்றித் தெளிவாகக் குறிக்கும் ”மற்ற மொழி” சார்ந்த முதலாவணமாகும். அதாவது கலிங்கத்துக் காரவேலனின் அத்திகும்பா கல்வெட்டு, தமிழ் என்ற சொல்லின் முதற்பயன்பாடு கி,மு.414 இல் இருந்ததாய்ப் பதிவு செய்துள்ளது.

”இப்போது சொல்லுங்கள், தமிழர் ஆவணங்களை யார் மதிக்கிறார்? தமிழ் என்றவுடன், எல்லாவற்றையும் குடைந்து கேள்விகேட்டு ஐயங் கிளப்பி, மேலையரின் இந்தியவியல் மன்றுகளில் தமிழை ”அம்போ”வென்று அந்தரத்திற் தொங்க விட்டுக் கைகொட்டிக் கேலிபண்ணினாற் போதாதோ?” இதைத்தானே இந்தியவியல் மண்றுகளில் பலருஞ் செய்கிறார். நாமோ அங்குபோய் வாதாட மாட்டேம் என்கிறோம்  மாறாகத் தமிழரிடையே “குமரிக்கண்டம்” என்று ஆதாரமின்றிச் சொல்லிக் கூப்பாடு போட்டுக் கைதட்டு வாங்கிக்கொண்டிருப்போம்.     

மீசைக்காரன், “மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதில் பயனொன்றில்லை” என்றான்.

அன்புடன்,
இராம.கி.

3 comments:

இ.பு.ஞானப்பிரகாசன் said...

தமிழ் ஆவணங்களை யாரும் மதிப்பதில்லை என்கிற ஏக்கம் ததும்பும் இக்கட்டுரை மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது ஐயா! அதே நேரம், ‘தமிழ்’ எனும் சொல் இடம்பெறும் பழைய ஆவணத்தையும், பழந்தமிழ் ஆவணத்தையும் காட்டினீர்கள். மிக்க நன்றி!

Sumathi said...

அருமை தமிழ்/ தமிழர் பெருமை காக்கும் அறங்காவலரே நன்றி கலந்த வணக்கம்

குமரிநாடன் said...

இந்த இணைப்பில் சிறப்பாக செய்தி வழங்கப்பட்டுள்ளது.

https://ta.quora.com/tamil-ennum-col-canka-kalattu-tamil-ilakkiyankalil-payanpattil-iruntanava-iruppin-canrutan-pativituka