Sunday, October 21, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 14

இனி அடுத்து புறம் 222 ஆம் பாடலைப் பார்ப்போம். இதன் திணையும் பொது வியல்; துறை: கையறுநிலை. இப்பாட்டிற் பொத்தியாருக்கும், சோழனுக்கும் இடைநடந்த உரையாடல் வெளிப்படுகிறது. சோழன் வடக்கிருக்கத் தொடங்கிய போது உழுவல் நண்பரான பொத்தியார், உணர்ச்சிமேலிட்டுத் தானும் உடன் வடக்கிருக்க விழைகிறார். அப்பொழுது “உன் மகன் பிறந்தபின் வா” எனக்கூறிச் சோழன் தடுத்துவிடுகிறான். மகப்பிறப்பிற்கு அப்புறம் பொத்தியார் வந்து இடங்கேட்பதாய்ப் பாடல் அமைந்துள்ளது. .

அழலவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி
நிழலினும் போகாநின் வெய்யோள் பயந்த
புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வாவென
என்னிவ ணொழித்த வன்பி லாள
எண்ணா திருக்குவை யல்லை
என்னிடம் யாதுமற் றிசைவெய் யோயே

                           - புறம் 222

இப்பாடலின் விளக்கம் கூடுவதற்காக, பாடலுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டுக் கீழே கொடுத்திருக்கிறேன்.
 
அழல் அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி
நிழலினும் போகா நின் வெய்யோள் பயந்த
புகழ் சால் புதல்வன் பிறந்த பின் வா
என
இவண் ஒழித்த என் அன்பிலாள!
எண்ணாது இருக்குவை அல்லை?
இசைவெய் யோயே!
மற்று என்னிடம் யாது? 

இனி ஒருசில சொற்பொருள்களையும் குறிப்புகளையும் பார்ப்போம்.

உல்>உள்>அள்>அழல் = தீ; (மலையாளம்.அழல்; துளு. அர்ல, அர்லுனி; அழல்>அழனம் என்பதும் தமிழிற் தீயையே குறிக்கும். அனலும் அழலோடு தொடர்பு காட்டும். ழகரமும் ககரமும் தமிழிற் பல இடங்களிற் போலிகளாய் வந்துள்ளன. காட்டு. முழுத்தம்> முகுர்த்தம்> முகூர்த்தம். அழனி>அழ்னி*> அகுனி* என்பது அக்னி எனுஞ் சங்கதச் சொல்லோடு இனங்காட்டும். இது இருக்குவேதத்திலேயே உள்ளது) உல் எனும் வேர்ச்சொல்லில் இருந்து இன்னொன்றும் இப்பாட்டில் வந்திருக்கிறது. உல்>உள்>உள்வு>உவு>உவி> அவி>அவிர்; அவிர்தல் = ஒளிர்தல்; உள்ளிலிருந்தே உள்>ஒள்>ஒளி பிறந்தது. வேதல், எரிதலிலிருந்து ஒளிர்தற் கருத்து உருவாகும். வயங்குதல் = விளங்குதல்; வயங்கு+ இழை = வயங்கிழை = விளங்கும் அணிகலன்.

”அழல் அவிர் வயங்கிழை பொலிந்த மேனி” என்பது தீயால் புடமிட்டு ஒளிர்ந்து விளங்கும் இழையை அணிந்த மேனியைக் குறிக்கிறது. இங்கே ”மேனி” பெண்ணிற்கு ஆகுபெயராகிறது. நிழல்தல்/ நிழற்றல்>நிழத்தல் = இல்லை யென்றாக்கல்; ”அழல் அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி நிழலினும் போகா நின் வெய்யோள்” = ”தீயால் புடமிட்டு ஒளிர்ந்து விளங்கும் இழையை அணிந்த மேனியை இல்லையென்றாக்கியும் போகாத, நின் விழைவிற்குரியவள்”. ”தீயாற் (புடமிட்டு) ஒளிர்ந்துவிளங்கும் இழையணிந்த பெண்ணைவிட ஒளிர்தோற்றும் உன்மனைவி” என உயர்வு சொன்னான் சோழன்.

வெள்>வெய்>வெய்யோள் = விருப்பு, விழைவிற்கு உரியவள்; எனவே மனைவி யாவாள். ”விருப்பம், விழைவு, வெய், வேட்கை” போன்றவை ஒரே வேரில் இருந்து உருவானவை. வெள்ளிற்குத் திருமணப் பொருளுமுண்டு. வெய்யோளை மனைவி என்பது போல் வெய்வி என்றுஞ் சொல்லலாம், இந்தையிரோப்பிய மொழிகளிற் பழகும் ”wife” இன் தோற்றத்தை ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகரமுதலிகள் ”origin unknown" என்று போட்டிருக்கின்றன. ”இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் தமிழிய மொழிகளுக்கும் ஏதோவொரு முன்தொடர்பு இருக்கலாமெனப் பலகாலஞ் சொல்லிவருகிறேன். கேட்பதற்குத் தான் பலருந் தயங்குகிறார். அப்படிச் சொல்வதால் என்னைக் கேலியுஞ் செய்கிறார். அந்த அளவிற்கு மாக்சுமுல்லர் தேற்றமும், மோனியர் வில்லியம்சு அகரமுதலியும் தமிழாய்ந்தோரை ஆட்டிப்பிடித்து ஆளுகின்றன. சங்கதக் கருத்தாளரை உச்சிமேற் கொண்டு, முன்முடிவில்லாது தமிழாய்வர் கருதுகோள் வைக்கிறார்.

இப்பாட்டில் வரும் ”மனைவி வண்ணனை, பிள்ளைப் பிறப்புச்” செய்திகளைப் பார்த்தால், பொத்தியார் மனைவியும், பொத்தியாரும் நடுத்தர அகவையை மீறியிருக்க முடியாது. தவிர, வாராது போல் வந்த புதல்வன் பிறப்பான் என்று எண்ணிக் கூடப் பொத்தியார் வடக்கிருக்கச் சோழன் மறுத்திருக்கலாம். ஆனாலும் பிள்ளை பிறந்தபின், பொத்தியார் மீளவந்து வடக்கிருக்க இடங் கேட்கிறார். “நின் வெய்யோள் பயந்த புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வா” = நின் மனைவி பயந்த புகழ்நிறைப் புதல்வன் பிறந்தபின் வா. பயத்தலென்பது அருமையான வினைச்சொல். மரங்கள் பயந்ததைப் பயம்>பழம் என்கிறோம் இல்லையா? மாந்தரிற் பயந்ததைப் பயல்>பையல்>பையன் என்கிறோம். எனவே பயத்தல் என்பது ஈதல், கொடுத்தல், தருதல் என்பதன் இன்னொரு சொல்லாகத் தெரிகிறது. இருந்தும், இக்காலத்திற் பயத்தலைப் புழங்காது, வேறேதோ வைத்துச் சுற்றிவளைத்துப் பயன்படுத்துகிறோம். (பயக்கிறோம் என்பதைப் பயன்படுத்துகிறோம் எனும்போது சற்று செயற்கையாய்த் தோற்ற வில்லையா?) ஆங்கிலத்தில் to pay என்கிறோமே, அதற்கும் இணையான வினைச்சொல் பயத்தல் தான். ”நான் இந்த ஆண்டிற்குரிய கட்டணத்தைப் பயந்தேன் - I paid the fees for this year."

நுட்பியல் ஏந்துகள் (technical facilities) இல்லா அக்காலத்திற் புதல்வனே பிறப்பான் என்பது ”பெண்மகவிலும், ஆண்மகவை உயர்த்தும் ஆதிக்கப் போக்கை” உணர்த்துகிறது. இன்றுவரை தமிழ்கூறு நல்லுலகம் அப்படியே தான் இருக்கிறது. ஆணாதிக்கம் 2500 ஆண்டுகள் இருந்தது போலும்.

”புதல்வன் பிறந்தபின் வாவென இவண் ஒழித்த என் அன்பிலாள” = புதல்வன் பிறந்தபின் வாவெனச் சொல்லி இங்கு (எனக்கு) இடமறுத்த என் அன்பின் ஆட்சியாளனே”

”எண்ணாது இருக்குவை அல்லை?” = (என்னைப் பற்றி) எண்ணாதிருப்பாய் அல்லையே?

இசை வெய்யோயே! = புகழை விரும்புகிறவனே!

மற்று என்னிடம் யாது? = அப்புறம் எனக்காக (நீ ஒதுக்கிய) இடம் யாது?

பாட்டின் மொத்தப்பொருள்:

”தீயாற் (புடமிட்டு) ஒளிர்ந்து விளங்கும் இழையணிந்த பெண்ணைவிட
ஒளிர்தோற்றும் உன்மனைவி
பயந்த
புகழ்நிறைப் புதல்வன் பிறந்த பின், வா”வெனச் சொல்லி
இங்கு (எனக்கு) இடமறுத்த என் அன்பின் ஆட்சியாளனே!
(என்னைப் பற்றி) எண்ணாதிருப்பாய் அல்லையே?
புகழை விரும்புகிறவனே!
அப்புறம், எனக்காக (நீ ஒதுக்கிய) இடம் யாது?

அடுத்த பாட்டும் பொத்தியார் பாட்டுத்தான். அதையும் பார்ப்போம். இந்தப் பாட்டில் பொத்தியாருக்கும் சோழனுக்கும் இடையிருந்த நட்பின் ஆழமும், வடக்கிருந்தே தீருவதெனும் உறுதியும் புரிகிறது.

அன்புடன்,
இராம.கி.   

No comments: