Tuesday, October 02, 2018

மறைக்காடு - 9

இனி ஏழாந்திருமுறை 32 ஆம் பதிகத்திற்கு வருவோம். இது திருக்கோடிக் குழகரைத் துதிசெய்யும் பதிகம். குழகரின் கூடவேயிருப்பது மையார் தடங்கண் அம்மை. குரவமிங்கு தலமரம். மறைக்காட்டில் சிலநாள் தங்கி, அகத்தியான் பள்ளிக்கும் போய்விட்டுச் சுந்தரர் கோடிக்கரைக்கு வருகிறார். கோயிலைச்சுற்றி எந்தக் குடியிருப்பையுங் காணோம். இவர்காலத்தில் துறைமுக ஊர் முற்றிலும் மாறிவிட்டது போலும்.

320 ”கடிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேல் குடிதான் அயலே இருந்தாற் குற்றமாமோ கொடியேன் கண்கள் கண்டன கோடிக்குழகீர் அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே” (கடுமையாய் கடற்காற்று வீச, கரைமேல் கோயிலுக்கு அயலில் ஒரு குடியாவது இருந்தால் குற்றமாகுமோ? கொடியவனான என் கண்கள் இதைக் கண்டன. கோடிக்குழகரே! அடிகளே! உமக்கு யார் இங்கே துணையாக இருந்தார்?) பாட்டில் காற்றுவீசுவதைச் சொல்வதால் சுந்தரர் போனது மழைக்காலமென்று புரிகிறது. கோயிலுக்குச் சற்றுதள்ளிக் கோட்டை யிருப்பின் ஆட்கள் வந்துபோய்க் கொண்டிருப்பாரே? எனவே இப்பாட்டால் சுந்தரர்காலத்தில் கோடிக்கரை அத்துவானத்தின் கீழ் வந்துசேர்ந்தது தென்படுகிறது. முன்சொன்னது போல் இருந்த கோட்டை அழிந்துபட்டது போலும்.

321 ”முன்றான் கடல்நஞ்சம் உண்ட அதனாலோ பின்றான் பரவைக்கு உபகாரம் செய்தாயோ குன்றாப் பொழில்சூழ் தருகோடிக்குழகா என்தான் தனியே இருந்தாய் எம்பிரானே” (முன்னால் கடல்நஞ்சு உண்டதால், இங்கே தனித்து இருந்து கடலுக்கு உவகாரஞ்செய்தாயோ? வளங்குறையாத பொழில்சூழ்ந்த கோடிக்குழகா! எம்பிரானே! எதனாற்றான் தனியேயிருந்தாய்?) ஆக இப் பாட்டின்மூலம் கோயிலைச் சுற்றி ஒருவருமில்லை என்பதும், காடு அப்படியே இருந்ததும் புரிகிறது.
.
322 ”மத்தம் மலிசூழ் மறைக்காடு அதன் தென்பால் பத்தர் பலர்பாட இருந்த பரமா கொத்தார் பொழில்சூழ் தருகோடிக் குழகா எத்தால் தனியே இருந்தாய் எம்பிரானே”. (களிப்பு நிறைந்து சூழும் மறைக்காட்டின் தென்பால் பல பத்தரும் பாடும்படியிருந்த பூங்கொத்துகள் பொருந்திய பொழில்சூழ் கோடிக்குழகா! எம்பிரானே? எதனால் தனியிருந்தாய்?) ஒருகாலத்தில் பத்தர் பாடிவந்த கோடிக்கரை இப்போது ஆட்களின்றிக் கிடந்ததென்பதும் நமக்கோர் வரலாற்றுக்குறிப்புத் தான். அடுத்தது ”மத்தம் மலிசூழ் மறைக்காடு” மத்தம்= களிப்பு; மயக்கம். ஒருவேளை குடிகாரர் பெருகிவிட்டாரோ? அப்படியெனில் பார்ப்பனச்சேரியின் தோற்றம் மாறியிருக்கிறது. பார்ப்பனர் தவிரப் பல்வேறான மக்களும் அங்கே தங்கத் தொடங்கிவிட்டார். அது தனியூராக ஆகிவிட்டது என்பது புரிகிறது. It was no longer a suburb. It has an independant existance.

323 ”காடேல் மிகவாலிது காரிகை அஞ்சக் கூடிப் பொந்தில் ஆந்தைகள் கூகை குழறல் வேடித் தொண்டர் சாலவும் தீயர் சழக்கர் கோடிக்குழகா இடங்கோயில் கொண்டாயே” (காடென்றால் மிகப் பெரிது. பெண்ணும் அஞ்சத்தக்க பொந்தில் ஆந்தைகளின் கூகைக்குழறல் எழுகிறது. வேட்டைத்தொழில் செய்து வாழ்பவரும், முற்றிலும் தீயரும், சழக்கரும் சேருமிடத்தில் கோடிக்குழகா! இங்குவந்து இடங்கொண்டாயே?) கோயில் கொஞ்சங்கூடப் புழக்கத்திலேயே இல்லைபோலும். இங்கு கூடுவோரின் அமைப்பே மாறிக் கிடக்கிறது. வால் = பெரிது; சாலுதல் = நிறைதல் சாலவும் தீயர் = நிறையவே தீயர்; சழக்கர் = குற்றவாளிகள்

324 ”கையார்வளைக் காடுகாளோடும் உடனாய்க் கொய்யார் பொழிற் கோடியே கோயில் கொண்டாயே”. (கைநிறைய வளைகொண்ட கொற்றவையோடு உடனாய் கொய்யர் பொழில் கோடியில் வந்து கோயில் கொண்டாயே) போயும் போயும் இங்கு வந்து கோயில் கொண்டாயே
 
325 ”மரவங் கமழ்மா மறைக்காடு அதன் தென்பால் குரவப் பொழில்சூழ் தரு கோடிக் குழகா இரவே துணையாய் இருந்தாய் எம்பிரானே”. (மரவம் கமழும் மாமறைக்காட்டின் தென்பால் குரவப்பொழில் சூழ்ந்த கோடிக்குழகா! எம்பிரானே! இரவெலாம் எனக்குத் துணையாய் இருந்தாய்.) முன்னே சம்பந்தர் பாட்டில் நாம் கொண்ட ஐயம் இங்கே முற்றிலும் தீர்கிறது. மரவங்கமழ் மறைக்காடு என்ற ஒரு தொடர் போதும். மரவக் காட்டின் பொருள் புரிய. மரவம் பெரிதும் நிறைந்திருந்த காடு ஆனால் இது மறைக்காடு என்றே சுந்தரர் காலத்திலும் பெயர் பெற்றிருக்கிறது. கொஞ்சங்கொஞ்சமாய் சொல்லும் பொருளும் மாறியிருக்கிறது. தவிர கோடிக்கரைக்கு வந்த சுந்தரர் அன்றிரவு குழகர் கோயிலிலேயே தங்கியுள்ளார். இறைவனே அவருக்கு அன்று துணை. பொதுவாக இரவுநேரத்தில் ஆந்தை அலறும். கடற்காற்று பெரிதாய் வீசும். மழைநாளாய் இருந்தால் இன்னும் அதிகமிருக்கும். சுந்தரர் பெரிதும் பயந்து போயிருக்கிறார். அவர் பதிகம் முழுக்க அவ்வுணர்வு வெளிப்படுகிறது. ஒருவேளை கதிரவன் மறையும் நேரத்தில் வந்து வேறு வழி தெரியாமல் கோயிலிலேயே தங்கினார் போலும்.

326 ”குறையாப் பொழில்சூழ்தரு கோடிக் குழகர் இறைவா தனியே இருந்தாய் எம்பிரானே” (ஏற்கனவே பொருள் கூறியாகிவிட்டது.)

327 ”ஒற்றியூரையும் திருவாரூரையும் விட்டு இங்கு தனித்திருக்கிறாயே” ஒற்றியூருக்கும் அப்பால் என்பதால் சங்கிலியாரைக் கட்டிய பின் மீண்டும் திருவாரூர் வந்த பிறகு சுந்தரர் மறைக்காடு வந்திருக்கிறார்.

328 ”நெடியானொடு நான்முகனும் அறியொண்ணா படியான் பலிகொள்ளும் இடங்குடி இல்லை கொடியார்பலர் வேடர்கள் வாழ்ங்கரைமேல் அடிகேள் என்பதாய் இடம் கோயில்கொண்டாயே.” (நெடுமாலொடு நான்முகனும் அறியொணாதபடி தீவடிவம் கொண்டவனே! படையல் கொள்ளுதற்குரிய இடமும் அதைச்செய்வதற்குக் குடிகளும் இங்கில்லை. கொடியார் பலரும், வேடர்களும் வாழும் கோடிக்கரையின் மேல், அடிகளே! ஏன் கோயிலுக்கு இடங்கொண்டாய்.) பலிபீடம் என்பது படையலிடும் இடம்.

329 ”பாரூர்மலி சூழ்மறை காடதன் தென்பால் ஏரார்பொழில் சூழ்தரு கோடிக் குழகை” (பாரிலுள்ள ஊர்களில் மகிழ்ச்சிசூழ்ந்த மறைக்காடதன் தென்பால் அழகுநிறைந்த பொழிலால் சூழப்பட்ட கோடிக் குழகரை.) பார்ப்பனர் மட்டும் இன்றி பல்வேறு மக்களும், கூடிவாழ்வது மறைக்காட்டின் புதிய பரிமானம். மறைக்காட்டின் இருப்பு கோடிக்கரையாலில்லை என்று சுந்தரர் காலத்தில் ஆகிவிட்டது. கோடிக்கரைக்கு வடபால் மறைக்காடு என்பது மாறி மறைக் காட்டின் தெற்கே கோடிக்கரை எம்று ஒரு இயல்புநிலை உருவாகிவிட்டது. கோடிக்கரை சிறுத்துப் போனது. பொன்னியின் செல்வன் கதையில் கோடிக்கரைச் சேந்தன் அமுதனுக்குச் சிற்றூர் வாழ்க்கையையே கல்கி சொல்வார். அது சுந்தரர் தேவாரம் படித்ததின் தாக்கம்.

இதுவரை கோடிக்கரைப் பதிகம் சொன்ன நாம், மறைக்காட்டிற்கு அருகிலுள்ள .அகத்தியான் பள்ளிக்கான சம்பந்தர் பதிகத்தையும் பார்க்கலாம். அதில் ”அன்னமிருக்கும் பொழில்” என்பது தவிர, மற்றையவை இறைவன் பற்றிய விவரிப்புக்களே. இனி இத்தொடரின் முடிப்புரைக்கு வருவோம்.

அன்புடன்,
இராம.கி.

No comments: