Monday, October 22, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 15

இனி அடுத்து புறம் 223 ஆம் பாடலைப் பார்ப்போம். இதன் திணையும் பொதுவியல் தான்; துறை: கையறுநிலை. இப்பாட்டிற் பொத்தியார் ”தன் இன்னுயிர் (சோழன்) உடம்பொடு (போக) விரும்பும் கிழமை” பற்றியும், சோழன் நடுகல்லுக்கருகில் இடம்கொடுத்து அளிப்பது பற்றியும் பேசுகிறார்.  நமக்குத் தெரியாத ஏதோவொரு செய்தி இதில் அடங்கியிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. கொடுத்திருக்கும் தரவுகளை வைத்து உறுதியாகச் சொல்லமுடியவில்லை. பாடலைப் படியுங்கள். .

பலர்க்குநி ழலாகி யுலகமீக் கூறித்
தலைப்போ கன்மையிற் சிறுவழி மடங்கி
நிலைபெறு நடுக லாகியக் கண்ணும்
இடங்கொடுத் தளிப்ப மன்ற வுடம்போ
டின்னுயிர் விரும்புங் கிழமைத்
தொன்னட் புடையார் தம்முழைச் செலினே

                          - புறம் 223

இப்பாடலின் விளக்கம் கூடுவதற்காக, பாடலுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டுக் கீழே கொடுத்திருக்கிறேன்.

பலர்க்கு நிழலாகி, உலகம் மீக் கூறித்
தலைப்போகு அன்மையிற் சிறுவழி மடங்கி,
நிலைபெறு நடுகல் ஆகியக் கண்ணும்
தொல் நட்புடையார் தம் உழைச் செ(ல்)லினே
இன்னுயிர் உடம்போடு விரும்பும் கிழமை
மன்ற இடம் கொடுத்து அளிப்ப

இனி ஒருசில சொற்பொருள்களையும் குறிப்புகளையும் பார்ப்போம்.

நுல்>நெல்>நில் என்பது ஒளியைக் குறிக்கும். ஒளி போன்ற பொன்னிறம் கொண்டதால் தான் நெல்லெனும் தவசத்திற்குப் பெயர் வந்தது. நில்லிற் பிறந்த நிலவென்ற சொல் திங்களின் ஒளியைக் குறித்தது. நில்லோடு அல் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து நிலல்*>நிழல் என்று ஒள்ளுதலையும், ஒளியையுங் குறித்தது. இன்னொரு வகையில், அல் எனும் விகுதி எதிர்மறை குறித்து ”நில் அல்லாதது” என்ற பொருளில் நிலல்*>நிழல் என்றாகிச் சாயையைக் குறித்தது. ஒன்றிற்கொன்று எதிரான பொருட்பாடுகள் ஒரே சொல்லிற்கு ஏற்பட முடியும். இங்கு சாயைப் பொருளே சரியானது. ”பலர்க்கு நிழலாகி” என்ற தொடரில் நம்மூர் வெதணம் (climate) வெளிப்படும். கோடை வெய்யில் சுள்ளென்றடிக்கையில், ஆல்போல் அகண்ட பெருமரங்களின் நிழல்தேடி ஓடுகிறோமே? அதுபோற் துன்பம் விளைகையில் ஆல்போல அரசன் நிழல் தருகிறான். ”பலர்க்கு நிழலாகி” என்பது துன்பக்காலத்தில் அரசன் அடைக்கலந் தருவதைக் குறிக்கிறது. பலர்க்கு நிழலாகி = பலர்க்கு நிழலாய் (அடைக்கலந்) தந்து 

உலகம் மீக்கூறல் = (நாட்டு) மக்கள் மிகுத்துக் கூறல்;  கோப்பெருஞ் சோழனுக்கும் அவன் புதல்வருக்கும் இடையே போரெழுந்தபோது, “இப்படியும் அரசன் இருப்பானா? தன் புதல்வர் ஆசைக்கு உடன்படாது, போரிடப் போகிறானே? கடைசிக்காலத்தில் மண்ணையா கொண்டு போவான்? மக்களில் ஒருவனுக்கு முடிசூட்டித் தான் துறவு பூணுவானா? அதைவிடுத்து மண்ணாசையில் மறுக்கிறானே?” என்று விதம் விதமாய் மிகுத்துப் பேசி யிருப்பர். ”உலகம் மீக்கூறல்” மூலமாய் பொத்தியார் இப்பேச்சை நமக்கு உணர்த்துகிறார். 

தலைப்போகு = தலைப்போக்கும் தண்டனை. தலைப்போகு + அன்மை = தலைப்போகன்மை = தலைப்போகா நிலை; இங்கே இது அரசப்பேற்றைக் குறிக்கிறது. இந்தச் சொல் தமிழிலக்கியத்திலேயே இங்கு மட்டும் தான் வருகிறது. சங்க இலக்கியம் ஓர் அகராதியல்ல என்பதற்கு இதுவுமோர் எடுத்துக்காட்டு. இதுபோன்ற சொற்களைப் புரிந்துகொள்ள இலக்கணம், நாட்டு வழக்காறு, சற்று ஏரணம் போன்றவற்றைப் பயன்படுத்தவேண்டும். கட்டாயமாகவும், அவக்கரமாகவும், ஏதோவொரு செயலை நண்பர் செய்யும் போது, “ஏன் இப்படிப் பறக்கிறாய்? தலைப்போகும் காரியமா, என்ன?” என்று கேட்கிறோமில்லையா? பொதுவாக, முற்றாளுமை (dictatorship) அதிகாரிகள் ”இதைச் செய்யாவிட்டால் உன் தலை போகும்” என்று மக்களை அச்சுறுத்தியே தாம் வேண்டியதைச் சாதித்துக்கொள்வர். முடியரசும் ஒரு முற்றாளுமை அரசு தான். ”தலைப்போக்குச் செயல்” என்பது ”பெருங்கேடு” விளைவிக்குந் தண்டனையாகும். அரசன் ஒருவனுக்குத் தான் தலைப்போக்குத் தண்டனையிலிருந்து (=சிரச்சேதம்) விதிவிலக்குண்டு. பொதுவாகத் தலைப்போகு அல்லாமை = தலைப்போகு அன்மை = தலைப்போகன்மை என்பது முடியரசில் அரசனுக்கு மட்டுமே வாய்க்கும் பேறாகும். போரிலாக் காலத்தில் இயற்கையாய் மரிப்பதே அரசர்க்கு இயல்பு. இங்கோ சோழன் வாழ்வில் மாறி நடக்கிறது. உண்ணாநோன்பின் வழி வடக்கிருந்து தன்னுயிரை ஈகிறான்.  .
   
சிறுவழி மடங்கி = சிறுவழி மாறி (=திரும்பி, ஒடுங்கி) தலைப்போகன்மைப் பேறுகொண்ட அரசன் சிறுவழி மாறி இங்கு உண்ணாநோன்பால் வடக்கிருந்து மரிக்கிறான். “தலைப்போகன்மையிற் சிறுவழி மடங்கி” என்பது கோப்பெருஞ் சோழன் வாழ்வில் விதப்பாய் நடந்த செய்தியாகும். இக்கருத்தை எந்த உரை யாசிரியரும் சரியானபடி கொணர்ந்ததாய் நான் காணவில்லை. கிட்டத்தட்ட அனைத்து உரையாசிரியரும், இதன்பொருள் காண்பதிற் தடுமாறிப் போயிருக்கிறார்.

நிலைபெறு நடுகல் = நின்று நிலைக்கும் நடுகல். சங்க காலக் குமுகாயத்தில் நடப்பட்ட நடுகலைச் சாய்த்தெறியாது காலகாலத்திற்கும் நின்று நிலைக்கச் செய்தார் போலும். பின்வந்த குமுகாயத்தினரோ, அதுபோன்ற மரபெல்லாம் காப்பாற்றவில்லை. சீரங்கத்திற்றான் வடக்கிருத்தல் நடந்ததோவென்று இத்தொடரின் முன்பகுதிகளில் ஊகித்திருந்தோம். அப்போது நட்ட கல் சீரங்கத்தில் எங்குள்ளதென்று தொல்லியலும் இதுவரை காட்டவில்லை; வழக்காறும் காட்டவில்லை. ஏதோ வரலாறு/மரபுகள் மாறிப் போயிருக்கின்றன. (அண்மையில் பேரா. க.நெடுஞ்செழியனின் வழி கேள்விப்பட்ட ஊகத்தை இங்கு சொன்னாற்பலரும் அதுகேட்டு அதிர்ந்து போவர்.)   

ஆகிய கண்ணும் = ஆகிய பொழுதும்

தொல் நட்புடையார் தம் உழைச் செ(ல்)லினே = தொல் நட்புடையாரின் பக்கம் சென்றால்

இன்னுயிர் உடம்போடு விரும்பும் கிழமை  = பொத்தியாரின் இன்னுயிர் (சோழன்) உடம்போடு (போக) விரும்பும் உரிமை கேட்கிறது. இங்கே உயிரையும், உடம்பையும் தனித்துப் பேசுவதால், பொத்தியாருக்கு அரசனின் சமய நெறியும், வடக்கிருத்தலின் மெய்ப்பொருளும் புரிந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். (இந்த நிலை எகுபதியப் பேரரசரோடு உயிர் துறந்தோரைப் பற்றிய எண்ணம் வருகிறது. அவரெல்லாம் விரும்பும் உரிமையால் இறந்தாரா? அன்றி குமுகாயத்தின்/ அரசின் கட்டாயத்தால் இறந்தாரா? - ஆய்விற்குரிய கேள்வி.     

மன்ற இடம் கொடுத்து அளிப்ப = உறுதியாக இடம்கொடுத்து அளிப்பர் 

பாட்டின் மொத்தப்பொருள்:

பலர்க்கு நிழலாய் (அடைக்கலந்) தந்து,
(நாட்டு) மக்கள் மிகுத்துக் கூறித்
தலைப்போகன்மையிற் சிறுவழி மாறி,
(இன்று) நிலைபெறும் நடுகல் ஆயினும்,
தொல் நட்புடையாரின் பக்கஞ் சென்றால்,
(என்) இன்னுயிர் (சோழன்) உடம்பொடு (போக) விரும்பும் உரிமையால்,
உறுதியாக இடம் கொடுத்தளிப்பர்.

பாட்டின் சுருக்கமான பொருளை ஆங்கில்த்திற் சொன்னால், “They will allow me to accompany the king in his journey”. இந்தப் பாட்டிற்கு அப்புறம் பொத்தியார் வடக்கிருந்தாரா என்பது தெரியாது. ஆனால் அப்படித்தான் எல்லா உரை யாசிரியரும் எழுதுகிறார். சங்க இலக்கியம் என்பது ஒரு வரலாற்றுப் பொத்தகமில்லை. ஆனால் ஆங்குமிங்கும் வரலாற்றுச் செய்திகள் அடங்கி யிருக்கின்றன. எனவே ஊகங்கள் இடைவருவதைத் தவிர்க்கமுடியாது. சிலபோது கேள்விகள் மட்டுமே எழுந்துகொண்டிருக்கின்றன.

இன்னுமொரு பொத்தியார் பாடல் மீந்திருக்கிறது. அதற்கு முன் அடுத்த பகுதியில், வடக்கிருந்த இடத்திற்கு பிசிராந்தையார் வந்து சேரும்போது கூடியிருந்தோர் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய மறுமொழியைப் பார்ப்போம். வடக்கிருத்தல் என்றாற் சொற்பொருளென்ன? - என்றும் இன்னும் நாம் அறியாதிருக்கிறோம். இதுவரை பார்த்த பாடல்களில் வடதிசை பற்றிய குறிப்பேயில்லை.

அன்புடன்,
இராம.கி.

No comments: