Friday, October 26, 2018

தூங்கெயில் - 1

உலர்ந்த, புத்தசமய, நீதிநூல் போன்ற ’மணிமேகலைக்’ காப்பியம், மெய்யாகவே சிலப்பதிகாரத்தோடு எழுந்த இரட்டைக் காப்பியமா? அன்றிச் சிலம்போடு அது வலிந்து பிணைக்கப் பட்டதா?- என்பது இலக்கிய வரலாற்றில் ஓர் ஆழமான கேள்வி. ”பொன்னியின் செல்வனைக்” கதைக்களனாய்க் கொண்டு எழுத்தாளர் விக்கிரமன் எழுதிய புதினங்களை எல்லாம் கல்கியின் காலத்தோடு சேர்த்துச்சொல்ல முடியுமோ? புத்தர், அசோகர், தேவனாம்பிய தீசன் போன்றோர் கதைகளைத் தொடக்கத்திற் சொல்லும் மகாவம்சம் பொ.உ. 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அதை வலிந்திழுத்து பொ.உ.மு. 300க்குக் கொண்டுபோக முடியுமோ? இதுபோன்ற காலப்பிறழ்ச்சி கொண்ட புரிதல் பல இடங்களில் நடந்துள்ளது. சிலம்பு-மணிமேகலைத் தொடர்பிலும் இது நடக்கிறது.

பொதுவாகத் தாஞ் சார்ந்த சிவ, விண்ணவ, வேதநெறிகளின் வழி பொருள்தர முற்படும் உரைகாரர் சொற்களைக் கிடுக்கத்தோடு (criticism) உரசிப் படித்தால் சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களிடையே குறிப்பிடத்தக்க காலவெளி தென்படுவதையும். சிலம்பில் வரலாறு கூடிப் புனைவு குறைவதையும், மேகலையிற் புனைவு மிகுந்து வரலாறு வறள்வதையுங் காணலாம். இரட்டை என்றே சொல்லிச் சொல்லி (இக்கற்பிதத்தை இவ்வாண்டில் நூறாண்டு நிறையும், மதிப்பிற்குரிய பேரா. வ.சுப.மாணிக்கத்தின் உரைவழி தான்  முதன் முதலில் அறிந்தேன். அக்காலத்திய பல தமிழறிஞர் புரிதல்களும் அப்படியே இருந்தன. அவர்களைப் படித்தநாம் கேள்வி கேட்பதால், ”தாத்தனைப் பேரன் மதிக்கவில்லை” என எண்ணிவிடாதீர். உறுதியாக வ.சுப. போன்ற முந்தைத் தமிழறிஞர் நம்மைப் புரிந்துகொள்வார்.) மேகலையின் புனைவு சிலம்பின் வரலாற்றைத் தடுமாற வைக்கிறது. ’சிலம்பின்’ காலத்தை பொ.உ.மு.75-இற்கு அருகே காரணத்தோடு கொண்டுசெல்லும் நான் அம்முந்தைக் காலத்திற்கு மேகலையைக் கொண்டுபோகத் தயங்குவேன். மாறாய் இரட்டை எனுங் கருதுகோளையே கேள்விகேட்பேன். அப்படியெனில், ”மேகலை”யின் சரியான காலந்தான் என்ன?” என்ற குறுகுறுப்பு உங்களுக்குக் கொஞ்சமுங் குறைய வில்லை தானே?

’சிலம்பு’ புகாரிலெழுந்து மதுரை போய் வஞ்சியில் முடிகையில், மேகலையோ புகார்-மதுரை-வஞ்சி-காஞ்சியென நாலாமிடத்தில் முடியும். அப்படிமுடிவதில் ஒரு விதப்புக்குறியீடு உள்ளதோ? - என்றுந் தெரியவில்லை. தொண்டைமான் இளந்திரையனுக்கு முன், காஞ்சி என்பது சோழநாட்டின் ஒரு சிறு நகர். சோழநாட்டின் வடபகுதியைப் பிரித்து, தொண்டைநாடாக்கி அதன் தலைநகராய் ஆனபின்னரே காஞ்சிக்குப் பெயர் வந்தது. மேலும் சங்க கால முடிவில், மூவேந்தர் வலுவிழந்து களப்பாளர் நுழைந்த பின்பே, காஞ்சியில் புத்தநெறி கூடி அது மாநகராய் மாறிச் சிறந்தது. சிவ, புத்த, விண்ணவ, செயினக் காஞ்சிகளில் முன்னிரண்டும் இணைந்து பெத்த காஞ்சியானது (வடுகில் பெத்த=பெரிய; வடதமிழ் மாவட்டத் தமிழிலும் இச்சொல் பயன்பாடு உண்டு); பின்னிரண்டும் இணைந்து சின்னக் காஞ்சியானது (செயினம் சின்னமானது,) பின் புத்தமுஞ் செயினமும் இந்நகரில் அடையாளமற்று அழிந்தே போயின. பத்தி இயக்கத்தின் தீவிரத்தைத் தேவாரம் படித்தால் புரிந்துகொள்ளமுடியும். அதுவொரு coversion movement. பொதுமக்களில் பலரும் கூட்டங்கூட்டமாய் புத்த், செயின நெறிகளிலிருந்து சிவ, விண்ணவ நெறிகளுக்கு மாறினர். வேந்தனான (மகேந்திர பல்லவனே மாறியபின் மக்கள் மாறத்தானே வேண்டும்? ”அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி” என்பது ஒரு சொலவடை. (மலாக்கா அரசன் பரமேசுரா இசுலாத்திற்கு மாறியபின் மலாக்கா, மலேசியா மக்களிற் பலரும் சிவத்திலிருந்து, புத்தத்திலிருந்து இசுலாம் மாறினர்.) ஆயினும் காஞ்சியிலிருந்து திருவண்ணாமலை வரை இன்றும் வயல்வெளிகளில் செயினமும், புத்தமும் சிலைத்துண்டுகளாய்ச் சிதறிக்கிடப்பது கண்ணிருப்பவருக்குக் கட்டாயம் புலப்படும்.

ஒருவேளை பேராழிப் பேரலை புகாரை விழுங்கியபின், ’மணிமேகலை’ எழுந்ததோ? புகாரைக் கடல்கொண்ட செய்தி ’மணிமேகலை’ தவிர வேறு எதிலும் கிடையாது. அதேபொழுது பொ.உ.385 க்கருகில் இந்தோனேசியாவில் ஆழிப்பேரலை எழுந்ததற்குச் சான்றுண்டு. பொ.உ.2004 இல் சமுத்திரத் தீவிற்கருகில் ஆழிப்பேரலை உருவாகையில் பார்த்தோமே? இந்தோனேசிய ஆழிப்பேரலைகள் பெரும்பாலும் தமிழகத்தைப் பாதித்துள்ளன. தமிழகம் தில்லியோடு தொடர்புற்றது ஓர் அரசியற் பிணைப்பு. சமுத்திரத் (சுமத்திராத்) தீவோடு தொடர்புற்றது புவியியற் பிணைப்பு. அப்படியெனில் பொ.உ.200-450 இற்றான் ’மணிமேகலை’ ஒருவேளை எழுந்ததோ?- என்று கூடச் சிந்தனை யோடும். முன்சொன்னது போல் ”இரட்டைக் காப்பியப் பிணைப்பு” ஒருவகைக் காலப்பிறழ்ச்சிக்கு வித்திட்டுச் சிலம்பின் காலத்தைக் குறைக்கவே உதவுகிறது. தமிழறிஞர்பலரும் இதைக் கவனிக்கத் தவறுகிறார். எவரை எடுத்தாலும், இரண்டையும் ஒன்றாகவே பார்ப்பார். மாறாக இரண்டையும் ஒருமுறை பிரித்துத்தான் பாருங்களேன்?

மணிமேகலையை நானிங்கே எடுக்கக் காரணம் அதில் தொடக்கத்தில் வரும் தூங்கெயில் பற்றிய குறிப்புத்தான். ”உலகிற் பலரும் மாறாது புகழ்ந்து ஓங்குயர் விழுச்சீர் கொண்ட புகார் மூதூரின் பண்பு மேலும் மேம்படுவதாய், ஓங்குயர் பொதிய மலையின் அருந்தவன் உரைத்தபடி, தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் வானவர் அரசனை வணங்கி, 28நாள் இந்திர விழாவின் போது புகாரில் தங்கி அருளக்” கேட்பதாய் மேகலை நூலின் விழாவறை காதை அலங்காரமாய்த் தொடங்கும். இதில்வரும் பொதியமலை அருந்தவனைச் சங்கதத்தாக்கில், உரைகாரர் பலரும் அகத்தியன் என்பார். பலரும் இதைக் கேள்வி கேட்டதேயில்லை. ”அது சரியா? தேரவாதத்தில் இல்லெனினும், மகாயான, வயிரயானப் (வஜ்ரயானப்) பாதைகளிற் புத்தர் பாராட்டும் அவலோகிதனாய் அவனேன் இருக்கலாகாது?”- என்று நான் கேட்பேன். இதன் தொடர்பாய், 11/12 ஆம் நூற்றாண்டு வீரராசேந்திர சோழனின் காலத்தைச்சேர்ந்த புத்தமித்திரர் வீரசோழியம் 2 ஆம் பாயிரத்தில் வரும் .

ஆயுங் குணத்து அவலோகிதன் பக்கல் அகத்தியன் கேட்டு
ஏயும் புவனிக்கு இயம்பிய தண்டமிழ் ஈங்குரைக்க
நீயும் உளையோ எனில், கருடன் சென்ற நீள்விசும்பில்
ஈயும் பறக்கும்! இதற்கு என்கொலோ சொல்லும்? ஏந்திழையே!

என்ற பாட்டைக் கவனியுங்கள். இதில், ”அவலோகிதனிடங் கேட்டு தண்டமிழ் ஓதிய அகத்தியனுக்குங் கீழ் புத்தமித்திரர் தன்னை இறுத்திக் கொள்வதைப்” பார்த்தால், என் கருத்துப் புதிதல்ல. பலரிடம் இன்றிருக்கும் மிதமிஞ்சிய அகத்தியப் பெருமிதங்கள் சங்கதம்-->தமிழென்ற ஒற்றைவழி உறவுபார்க்கும் அகத்தியதாசரின் வழிப்பட்டுத் தமிழில் வழங்குகின்றன. (வடக்கிருந்து வந்த அகத்தியனே தமிழை நமக்கீந்தானாம். அகத்தியந்தான் முதலிலக்கணமாம். தொல்காப்பியர் இவர் மாணவராம். ”காவ்யக்குடி சேர்ந்த த்ரணதூமாக்னி” என்பது தொல்காப்பியனின் பெயராம். இவை போன்ற கட்டுக்கதைகளை அருள்கூர்ந்து நம்புங்கள் :-)))) இதற்கு மாறாய் தமிழ் - பாலி/பாகதம் - சங்கதம் என்ற பெருவட்டங் காண்பது தமிழ்/ வரலாற்றாய்வில் மேலான நற்பயனைத் தரலாம். எல்லாமே சங்கதமென்பது ஓர் எக்கெனில் (extreme), சங்கத் தமிழோடு எல்லாமே முடிந்ததென்பது இன்னோர் எக்கு. (தனித்தமிழன்பர் சங்கத் தமிழுக்கும் அப்புறம் தமிழிருந்ததை ஏனோ தவிர்க்கிறார்.) இரண்டையுந் தவிர்த்துத் துலை நோக்கோடும் (balanced perspective), நெகிழ்வோடும், மொழி வளர்ச்சி, வரலாற்றுப் போக்குகளைக் காண்பதே நல்லது. அக்காலத்தில் தமிழர் வடக்கே போகாதும், வடவர் தெற்கே வாராதும் இருந்ததே இல்லை. நாமெல்லோரும் இந்தியத் துணைக்கண்டத்தில் தானே வதிகிறோம்? இந்த இடையாற்றின் நடுவேதான் தமிழர்க்குத் தனியடையாளம் ஏற்பட்டது.

அன்புடன்,
இராம.கி.

No comments: