Wednesday, October 03, 2018

பிறவினைத்தொகை

மறைக்காடு பற்றிய தொடரினூடாக மறையூர் (மறைந்த/மறைகிற/மறையும் ஊர்), மறைக்காடு (மறைவித்த/மறைக்கிற/மறைக்கும் காடு) என்ற இருவேறு பட்ட கருத்தாக்கங்களை விளக்கும் தேவை எனக்கு ஏற்பட்டது. (இவ் விடுகையை அத்தொடரோடு சேர்த்தேகூடக் கருதலாம்.) அத்தேவையின் ஊடாய், வினைத்தொகை பற்றிய புதுச்சிந்தனை எழுந்தது. பெரும்பாலான மரபுசார் சிந்தனையாளரும், தமிழாசிரியரும் இதை மறுக்கலாம். இதுவரை இவ்விடுகையைப் படித்த மடற்குழு சார்ந்த பெரும்பாலோர் நான் சொன்னதைத் தவறென்றே சொன்னார். ஆயினும் என் கருத்தைச் சொல்லக் கடமைப் பட்டுள்ளேன். வாசகராகிய நீங்கள் இக்கட்டுரை முழுதையும் படியுங்கள். நான் சொல்வது தவறென நீங்கள் நினைத்தால், எங்கே தவறெனச் சொல்லுங்கள். உரையாடுவோம்.

தமிழ்வினைகளில் தெரிநிலை/குறிப்பு, உடன்பாடு/எதிர்மறை, தன்/பிற, செய்/செயப்பாடு, ஏவல்/வியங்கோள், செயப்படுபொருள்குன்றிய/செயப்படுபொருள் குன்றா வினை என 12 வகைகளுண்டு. அவற்றில் தன்வினை, பிறவினை எனும் பிரிவை மட்டுமே இங்கே நான் பேசுகிறேன். எழுவாயே வினைசெய்வதைத் தன்வினை என்பர்; வேறொன்றை வினை செய்யவைக்க, எழுவாய் தூண்டினால், அதைப் பிறவினை என்பர். பொதுவாகத் தன்வினையிலிருந்தே பிறவினைகள் தோன்றுகின்றன. அப்படித் தோன்றுவதிலுஞ் சில ஒழுங்குமுறைகளுண்டு.

அ. வினையடியில் (இதைப் பகுதியென்றும் சொல்வர்) மாற்றம் விளையும் முறைகள்

1. தன்வினையோடு பி, வி, கு, சு, டு, து, பு, று என்ற விகுதிகள் சேர்ந்து பிற வினை எழுதல்.
2. தனிவினையின் மென்றொடர்க் குற்றியலுகரம் வன்றொடர்க் குற்றியல் உகரமாகிப் பிறவினை எழுதல்
3. தன்வினையில் வல்லொற்று இரட்டித்துப் பிறவினை எழுதல்.

ஆ. வினையடியில் மாற்றம் விளையா முறைகள்:.

1. இறந்தகாலத்தில் வினையடிக்கு அடுத்த, மெல் இடைநிலை, வல்லினமாகிப் பிறவினை எழுதல்.
2. நிகழ்காலத்தில் வினையடிக்கு அடுத்த வல்லினம் மிகுந்து பிறவினை எழுதல்.
3. எதிர்காலத்தில் வினையடிக்கு அடுத்த இடைநிலைகள் மாறுபட்டு, பிற வினை எழுதல்..  .

இவைபோக 3 ஆம் முறையாய்த் தன்வினையோடு (செய், வை, படு, உறு போன்ற) துணைவினைகள் சேர்ந்தும் பிறவினை எழலாம்.

தமிழில் செயப்பாட்டு வினைகளும் ஒருவகையிற் பிறவினைகளே. சில பிறவினைகள் காலவோட்டத்தில் நிலைபெறுகையில், அவற்றின் தன் வினைகள் இடந்தெரியாது போகலாம். காட்டு: கணி, சிரை எனும் வினையடிகள். இவற்றின் தன்வினைகள் (கணி-தல், சிரை-தல்) இற்றை வழக்கிலில்லை. கணித்தல், சிரைத்தல் என்பவை இன்றும் வழக்கிலுள்ளன. தமிழில் வினையெச்சம், பெயரெச்சம் போன்றவை தன்வினையில் உருவாவது போல் பிறவினையிலும் உருவாகலாம். தவிர, வினையால் அணையும் பெயர்கள், தொழிற்பெயர்கள் 2 வகை வினைகளிலும் எழும். சிலபோது வினையடிகளே தொழிற்பெயர்களாகும். காட்டாக அரை, அறை, இரை, இறை, உரை, உறை, கரை, கறை, குறை, சிரை, சிறை, சுரை, திரை, நரை, நுரை, பரை, பறை, மிறை, முறை, வரை, வறை, விரை போன்றவை வினையடிகளாகவும் தொழிற்பெயர்களாகவும் பயன்படுகின்றன. இங்கோர் இடைவிலகல், பிறவினை அடிகள் பொதுவாய்ப் பெயரடைகளாகையில், எல்லாப்பெயரடைகளும் பிறவினை அடிகளாகா. இங்கே ரைகார/றைகாரத்தில் முடியும் வினையடிகளை மட்டுமே கீழே எடுத்துக் கொள்கிறேன்.

அதற்குமுன் ஓர் ஒப்புமை. கணிதத்தில் கொத்துத் தேற்றில் (set theory) அட்டிகைக் குணம் (associative property) பற்றிச் சொல்வர். 2+(7+5)=14=(2+7)+5 என்ற சமன்பாட்டில் ஏழையும் ஐந்தையும் கூட்டிப் பின் அதோடு இரண்டைக் கூட்டிப் பெறும் தொகையும், இரண்டையும் ஏழையும் கூட்டிப் பின் ஐந்தைக் கூட்டி வரும் தொகையும் 14 தான். எதையெதோடு முதலில் வரிசை சேர்க்கிறோம் என்பது நம் விருப்பம். எப்படிச் சேர்ப்பினும் மேற்சமன்பாட்டில் ஒரே தொகை வரவேண்டும். அன்றாட வழக்கில் இதை வேறு விதமாய் விளக்கலாம். சதுரத்தின் தென்மேற்கு மூலையிலிருந்து வடகிழக்கு மூலை செல்ல வேண்டின், முதலிற் கிழக்கே நடந்து பின் வடக்கே போகலாம். அல்லது முதலில் வடக்கே நடந்து பின் கிழக்கே செல்லலாம் இரண்டுமே நம்மை வடகிழக்கு மூலைக்குக் கொண்டுசேர்க்கும். இதேபோல் நகர்ப்புக் குணம் (commutative property) பற்றியும் கொத்துத் தேற்றிற் கூறுவர். உருவாயை பூப் பக்கம் காட்டினும் செல்லும்; தலைப் பக்கம் காட்டினும் செல்லும். மேற்சொன்ன சொற்களில் ஒருதோற்றத்திற் (தொழிற் பெயராய்க்) காட்டும் புணர்ச்சி இலக்கணம், இன்னொரு (வினையடித்) தோற்றத்திலும் ஒரே பொருள் அமைய வேண்டும். அமையாதெனில், நம் மொழியிலக்கணப் புரிதல் சரியில்லை என்றாகும். நான் சொல்லும் இக்குறிப்பை ஓருங்கள். நான் ஒரு பொறியாளன். கணிதம் பயிலாது நான் எழ முடியாது. மொழி ஒரு வகையிற் கணிதம் தானே? கொத்துத் தேற்றங் கூறும் அடிப்படையறிவு தமிழிலக்கணத்திற்கும் பொருந்தும்.
.
இதே போல் தெறுமத் துனவியலிலும் (thermodynamics) ஒன்றுண்டு. (நான் தெறுமத் துனவியலாளனுங் கூட) திருப்புச் செலுத்தம் (reversible process) மூலம் பெறும் மாற்றமும், தடநிலைகள் (states) வழி கணக்கிடும் மாற்றமும் ஒன்று போல் அமைய வேண்டும். தொடக்க காலத் தெறுமத் துனவியல் என்பது கார்னாட் சுற்றுப் (Carnot cycle) போல் பல்வேறு செலுத்தங்கள் வழி கட்டப் பெற்றது. பின்னால் இந்த ஒப்புமையை உணர்ந்து எல்லோரும் தட வழிக்கு மாறினார். (இன்று கார்னாட் சுற்றைப் பெரிதும் எடுப்பதில்லை.) அதே போல் இங்கு கொடுத்த நிலைமொழிகளைத் தொழிற்பெயராய்க் கொண்டாலும், வினையடிகளாய்க் கொண்டாலும், ஒரே மாதிரி புணர்ச்சி முடிவுகள் வர வேண்டும். அப்படி வாராதெனில். நம் இலக்கணப்புரிதலில் எதோ ஒரு தவறுள்ளது என்று பொருள். இப்பொழுது மேலே கொடுத்துள்ள நிலை மொழிகளை முதலில் தொழிற்பெயர்த் தொடராய்ப் பார்ப்போம். பின் வினைத்தொகையாய்ப் பார்ப்போம்.

2 பெயர்கள் சேர்ந்துவருந் தொடரைப் புணர்ச்சியிலக்கணத்தில் 2 வகைகளில் அடக்கலாமென (நான் பெரிதும் மதிக்கும் மலேசிய இலக்கண அறிஞர்) சீனி நைனா முகம்மது சொல்வார். அவை:

1. ஒன்றிற்கொன்று பொருட்தொடர்புடன் 2 பெயர்கள் சேர்ந்து வருவது.
2. தமக்குள் பொருட்தொடர்பின்றி 2 பெயர்கள் அடுக்கி வருவது.

முதல்வகையைப் பெயரடைத்தொடரென்றும், இரண்டாவதை அடுக்குத் தொடரென்றும் சொல்வார். அடுக்குத் தொடரை நானிங்கு பேசவில்லை. முதற்றொடரிலுள்ள நிலைமொழி பெயரடை எனப்படும். இத்தொடரில் நிலைமொழியீற்றில் உயிரும் வருமொழியின் முதலில் வல்லினமெய்யும் வந்தால் 2 சொற்களையும் சேர்ந்தொலிக்கும்போது வருமொழி முதலிலுள்ள வல்லினமெய் இரட்டிக்குமென்பது விதி. (சீனிநைனா முகம்மது புத்திலக்கணம் சொல்லாது பழையவற்றைப் புதுவகையிற் சொன்னார்.) வினைத்தொகைத் தோற்றமில்லாது பெயரடைத்தொடர் மட்டும் அமையலாம். இதற்கென சீனிநைனா முகம்மது காட்டுவன: ”மரக்கிளை, பனித்துளி” என்பவையாகும், இதில் மரமும், பனியும் பெயர்களே. இது தவிர ஆகார, ஐகார ஈற்றுப் பெயரெச்சங்களிலும் வலி மிகலாம். காட்டு அறியாப் பிள்ளை, பண்டைக் காலம். இதேபோல் வினையெச்சத்திலும் வலி மிகலாம். காட்டு ஆறப் போடு, இனிதாகப் பேசு.

இனி மேலே கொடுத்த வினையடிகளை வைத்து (வினைத்தொகைப் பார்வையில்) ஒவ்வொரு சொல்லாய்ப் பார்ப்போம். அரை என்ற சொல் அரு> அரை என உருவானது. அரை-தல் (த.வி) = சிறு-தல், குறை-தல், அரை-த்தல் (பி.வி)= சிறு-த்தல், குறை-த்தல் அரையின் விதப்பான பொருள் பாதி. இது உடம்பிற் பாதியையும், பாதியுடம்பிலுள்ள உறுப்பையுங் குறிக்கும். மேற்கூறிய விதிப்படி அரை என்பது ஒரு பெயரடை ஆகின், அரைக்காணி, அரைக்குரல், அரைப்பட்டினி, அரைப்பேச்சு என்ற தொடர்களெழலாம். இதேபோல் அறை என்ற சொல் அறைக்கீரையை உருவாக்கும். (பெயராகும் போது அறைக்குப் பாத்திப் பொருளமையும். விதப்பான பாத்திகளில் வளர்க்கப் படுவது அறைக்கீரை..) இப்பொழுது அரை/அறையை வினையடியாய்க் கொண்டாலும் அதே முடிவு தானே வரவேண்டும்?

ஆனால் வினைத்தொகை விதியென எல்லாரும் சொல்வதன்படி அரைகாணி, அரைகுரல், அரைபட்டினி, அறைகீரை என்றல்லவா புணர்ச்சியமைகிறது? இதுசரியா? இப்படியா பேச்சுவழக்கிலுள்ளது? அதெப்படி ஒரேசொல் இரு வேறு முடிவுகளைக் காட்டும்? ஒருவேளை பச்சைச்சட்டை போட்டால் ஒருகுணம், சிவப்புச்சட்டை போட்டால் இன்னொரு குணமோ? ஒரே மாதிரி தீர்வுகள் வர, நமக்குச் சொல்லப்பட்ட வினைத்தொகை விதியை தன்வினைக்கும், பிற வினைக்கும் வெவ்வேறு விதமாய்ப் புரிந்துகொள்ள வேண்டுமன்றோ? பிற வினை அடியெனில் அரைக்கணி அரைக்குரல், அரைப்பட்டினி, அரைக்கீரை என்றும், தன்வினை அடியெனில் அரைகாணி, அரைகுரல், அரைபட்டினி, அறைகீரை என்பதன்றோ முறையாகும்? வரையறைகளிற் குழப்பலாமோ?. பேச்சுவழக்கோடு பொருத்தினால், இத்தொடர்களில் வரும் அரை, அறை என்பன பிறவினை அடிகளாகவே பயன்படுகின்றன. இனிச் சொல் விளக்கங்களுக்குப் போவோம்.

அரைக்காணி= [அரைத்த(=குறைத்த), அரைக்கிற(=குறைக்கிற), அரைக்குங் (=குறைக்குங்)] காணி;

அரைக்குரல்= [அரைத்த(=குறைத்த) அரைத்த (=குறைக்கிற), அரைக்கும்(=குறைக்கும்)] குரல்.

அரைகடி, அரைக்கடி என இரு விதமாயும் இடுப்பிலுண்டாகும் சொறிப்புண் அகரமுதலியிற் குறிக்கப்படும். இது தன்வினையாகவும் பிறவினையாகவும் பயன்படும்.

அரைப்பட்டினி= [அரைத்த(=குறைப்பட்ட), அரைக்கிற(= குறைப்படுகிற), அரைக்கும் (=குறைப்படும்)] பட்டினி.

அரைப்பேச்சு= [அரைத்த(=குறைப்பட்ட), அரைக்கிற (=குறைப்படுகிற), அரைக்கும்(=குறைப்படும்)] பேச்சு.

இதேபோல அறுத்தல் என்ற பிறவினையின் கீழ் வளரவளர,

அறுக்கப்படும் கீரையை [அறுக்கப்பட்ட/அறைத்த, அறுக்கப்படுகிற/அறைக்கிற. அறுக்கப்படும்/அறைக்குங்] கீரை

என்றமைத்துப் பொருள்கொள்வர். குறித்த காலத்திற்கு அப்புறம் வேரோடு எடுத்துவிட்டு புதுவிதை தூவுவர்.

அடுத்து இரைக்கு வருவோம். இரையையும் பெயராகக் கொள்வோருண்டு. ஆனால் இரைத்தலென்பது ஈர்த்தல் = இழுத்தலில் பிறந்த சொல். உடலுக்குள் உள்ளிழுத்தது இரை. இரைத்தல்= இழுத்தல். வினைத்தொகை வழியாகப் பார்த்தால், இரைக்குடல்= [இரைத்த, இரைக்கிற, இரைக்குங்] குடல். இரைப்பற்று= உடலுக்குள் இழுத்துச்செறியாத உணவு என்றமையும். இறை என்பதைப் பலரும் பெயர்ச்சொல்லாக மட்டுமே பார்ப்பார். ஆனால் அதனுள்ளும் ஒரு வினைச்சொல்லுண்டு.. இச்செயலுக்கு இவ்வளவென்று இறுத்தது இறை. இறை-த்தலென்றும் அதைச் சொல்லலாம். இறைக்கட்டு = [இறைத்த, இறைக்கிற, இறைக்குங்] கட்டு. payment towards tax. பெயரடையாய்ப் பார்த்தாலும் இரைக்குடல், இரைப்பற்று, இறைக்கட்டு என்ற இதே முடிவுகளே நமக்குக் கிட்டும். 

உரைக்கிழத்தி: உரைத்தல் என்பன பிறவினையில் மட்டுமே பெரிதும் புழங்கிச் சொல்லற் பொருள் உணர்த்தும். உரைக்கிழத்தி= கலைமகள்= [உரைத்த, உரைக்கின்ற, உரைக்கும்] கிழத்தி. உரைப்பெயரோடு இதைப்பொருத்தி உரை+கிழத்தி என்பது இன்னொரு பார்வை. அவ்வளவு தான். ஏரணப்படி 2 பார்வைகளும் சரியே. உறைச்சாலை = dispensary, hospital. யாரும் மருத்துவச் சாலையில் தன்வினையிற் போய் உட்கார்ந்து கொள்வதில்லை. பிறவினையாய் உட்கார வைக்கப் படுவதே இயல்பு. [உறைத்த, உறைக்கின்ற, உறைக்குஞ்] சாலை. இதை உறை+சாலை என்றுகொண்டு இருபெயர் ஒட்டாய்ப் பார்ப்பது இன்னொரு பார்வை. ஒரு பார்வை மட்டுஞ் சரி. இன்னொரு பார்வை தவறென்பது எப்படி? உறைதயிர்/உறைத்தயிர்: பாலில் பிரையிட்டால் குறித்த நேரத்தில் தயிர் உறையும்.. எனவே தன்வினையாய் உறைதயிர் எனலாம். ஆனால் உறைத்தயிரென்பதும் நம் புழக்கத்திலுள்ளது. அதாவது இன்னொருவரை நமக்காகப் பிரையிட்டுத் தயிராக்க வைக்கலாம் தானே? அப்போது அது உறைத்தயிராகும். இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இல்லை. எனவே உறைதயிர், உறைத்தயிர் என்ற இரண்டுமே மக்கள் வழக்கில் புழங்குகின்றன. அதேபொழுது உறை+தயிர் என்பதைப் பெயரடைத் தொடராய்க் கொண்டால், உறைத்தயிர் மட்டுமே சரி. உறைதயிர், தவறு. பேச்சுவழக்கில் இத்தவறு(!?) ஏற்றுக்கொள்ளப்படுகிறதே?.

கரையையும் பெயராகவே கொள்வாருண்டு. ஆனால் கரையென்ற சொல் எப்படியெழுந்தது? கருதல் = கட்டியாதல், செறிதல், பெரிதாதல், உயருதல், மேடாதல் என்று பொருள்கொள்ளும். (கருநாடு = மேட்டுநாடு. தமிழ்நாட்டைப் பார்க்க, இது பரவலாய் மேட்டுநிலம். இதைப் பெருநாடெனக் கொண்டு சங்கதத்தில் மஹாராஷ்ட்ரமென மொழிபெயர்த்தார். வட கருநாடமே நூற்றுவர் கன்னர் ஆட்சியில் மஹாராஷ்ட்ரமானது. கருயித்தலென்பது கருதலின் பிறவினை. (இங்கே கருவித்தல் எனவராது. பொருள் மாறிவிடும்) பிறரைக் கொண்டு நிலத்தைக் கட்டியாக்குவது, செறிவிப்பது, பெரிதாக்குவது, உயர்த்துவது என்று பொருள்கொள்ளும். கருயித்தல் என்றசொல் பலுக்கின் எளிமை கருதிக் கரைத்தலாகும். கரையென்ற பெயர்ச்சொல் இதிற் பிறந்தது. கரைத்தலென்ற பிறவினைவழி எழுந்தது கரைக்கட்டு = river embankment. அதே பொழுது கூட்டுவினை சொல்லும்போது கரைகட்டுதல் என்றே ககரமெய் இரட்டிக்காது சொல்கிறோம். இன்னொரு சொல்லான கறையையும் பெயர் ஆகவே சிலர் கொள்வர். ஆனால் கறை, கறுத்தலென்ற பிறவினைச் சொல்லில் எழுந்தது. கறைத்தலென்ற பிறவினைச்சொல்லுமுண்டு. கறைக் கோங்கு = [கறுத்துப்போன, கறுத்துப்போகிற, கறுத்துப்போகுங்] கோங்கு

அடுத்தது குறை. இதையும் பெயரடையாக, வினையடியாகக் கொள்ளலாம். குறைக்கருமம், குறைச்சால், குறைத்தலை, குறைப்பக்கம், குறைப்பிண்டம், குறைப்பிள்ளை என்ற சொற்கள் அகரமுதலிகளில் உள்ளன. இவற்றை எப்படி இலக்கணப்படி பொருத்துவோம்? வெறுமே பெயரடைத்தொடர்கள் என்றா? பிறவினையிலெழும் தொகைகளென்று அவற்றையேன் சொல்லக்கூடாது? குறைப்பட்ட (கருமம், சால், தலை, பக்கம், பிண்டம்), குறைப்படுகிற (கருமம், சால், தலை, பக்கம், பிண்டம்), குறைப்படும் (கருமம், சால், தலை, பக்கம், பிண்டம்).

அடுத்தது சிரை. சிரைத்தலென்ற பிறவினையாக மட்டுமே இன்று கொள்ளப் படும். சிரைதலெனும் தன்வினை இன்று புழக்கத்திலேயே இல்லை. சிரைப் புண் என்ற தொடரை எப்படிப் புரிந்துகொள்வோம்? கண்ணை மூடிக் கொள்வோமா? (பச்சைச்சட்டை போட்டு வந்தாற்றான் ஏற்றுக்கொள்வோமென காலஞ்சென்ற அம்மா செயலலிதாபோற் சொல்வோமா?) அடுத்தது சிறை. இதையும் எல்லோரும் பெயரென்றே சொல்வர். ஆனால் இதனுள்ளும் ஒரு பிறவினை யுண்டு.. சிறைத்தல்= தடுத்தல். சிறைக்களம், சிறைக்காடு, சிறைக் கூடம், சிறைப்பாடு என்ற தொடர்களை இருவிதமாயும் புரிந்துகொள்ள வேண்டும். பெயரென்று மட்டுமே கொள்வோமென்றால் எப்படி?

அடுத்தது சுரை. = hollowed out. சுரைக்(காய்,குடம்) என்ற சொற்களை எண்ணிப் பார்க்கலாம். இங்கும் சுரையைத் தொழிற்பெயராகவும், பிறவினை அடியாகவும் பார்ப்பதே முறை. அடுத்து திரைச்சீலை திரைப்புழு என்ற சொற்கள் நினைவிற்கு வருகின்றன. திரையை வெறும் பெயராக மட்டும் பார்க்காது திரைத்தல் = மடிமடியாக ஆதல் என்றும் பாருங்கள்.

அடுத்தது நரை. நரைக்கொம்பு, நரைக்கட்டை. நரையைப் பெயராக மட்டும் பார்ப்பது எப்படிச் சரி? நரை (பி.வி) இல்லையா? அடுத்தது நுரைப்பால். நுரை பெயரா? பிறவினையா?

பரைக்காக்கை. ஓரிடத்தில் இல்லாது பரவிக்கொண்டே திரியுங் காக்கை. பரத்தலென்னும் பரைத்தல் தொழில். பரை என்பது பெயரும், வினையடியும் ஆகும். பறைத்தொம்பர். இங்கும் பறை என்பதை பெயராக மட்டுமே சிலர் ஏற்றுக்கொள்வர். பறையென்ற சொல் ”பர்,பர்...” எனும் ஒலிக்குறிப்பில் எழுந்தது. பர்>பரு>பரை>பறை என்றாகும் பறைத்தலென்றால் ஒலி யெழுப்புதல். பேசுவதற்கும் பறைதல் என்று பொருளுண்டு. ஆண்டாள் பாடல்களில் பறைதருதல் என்ற கூட்டுவினை பலவிடங்களில் ஆளப்படும். தொம்பர் என்பார் ஒருவிதமான குடிமக்கள். முழவடிக்கும் தொழிலார். பறையைப் பெயராக மட்டுங் கொள்ளாது வினையடியாயுங் கொள்வதே சரி. பறைப்பருந்து. இங்கே பற வினையிலிருந்து பறையென்ற சொல் பிறந்தது. இது பெயராகவும் (flight) வினையடியாகவும் (to fly) பயன்கொள்ளும்.

மிறைக்கவி. மிறைத்தல். மிகவுஞ் சதுகரத்தோடு (சாதுர்யத்தோடு) பல்வேறு சித்திரங்களில் வளைத்து வளைத்து எழுத்துக்களை நிரப்புங் கவி. மிறை (பி.வி) = வளைத்தல் மிறை (பெ.) = வளைவு  முறைப்பாடு: முறைத்தல் = இத்தனையாவது என்று வரிசையை, ஒழுங்கை ஏற்படுத்தல். முறை = வரிசை, ஒழுங்கு. வரைக்கட்டிடம்: வரைத்தல் = இத்தனை உயரம்/வரம்பென்று என்று வரைப்படுத்துவது.

வரை = இடம், எல்லை கரடுமுரடாயிருந்த இடத்தைக் கட்டிடங்கள் கட்டுவதன் பொருட்டு செம்மைப்படுத்திய இடம் வரை. இங்கே கட்டப்பட்டது வரைக்கட்டிடம். அடுத்தது வறைக்காய்ச்சல். வரள்தலென்பது உலர்தல். வறட்டுதல் = உலரவைத்தல்; வறைத்தலென்றாலும் அதேபொருள் தான். வறட்டுக் காய்ச்சல் வறைக்காய்ச்சலென்றுஞ் சொல்லப்படூம். வறை என்பது வினையாடியாகவும், பெயராகவுங் கொள்ளப்பெறும். அடுத்தது விரைக்கரும்பு. விரைத்தல் = மணத்தல். விரை= மணம். பெயராகவும் வினையடியாகவும் கொள்ளப்பெறும். இதேபோல விரைப்பண்டம், நறுமணப்பண்டத்தைக் குறிக்கும். விரைத்தலுக்கு விதைத்தலென்று இன்னொரு பொருளுமுண்டு. விரை= விதை. விரைக்காய், விரைக்கொட்டை என்பன முற்றிப்போய் விதைக்காக விடப்பட்ட காய், கொட்டைகளைக் குறிக்கும்.

இவ்வளவு ரைகார, றைகார ஈற்றுச் சொற்களைச் சொன்னது ”மரை/மறைக்காக” என்பது என் “மறைக்காடு” கட்டுரைத்தொடர் படித்தோருக்குப் புரிந்திருக்கும். மறைக்காட்டை [மறைத்த, மறைக்கிற, மறைக்குங்] காடு என்று நான்சொன்னதைப் பலரும் மறுத்தார். எனக்கு வினைத்தொகை புரியவில்லை என்றுங்கூடப் பலர் கருதியிருக்கலாம். ஆனால் ஏரணம் முகன்மையென்று பார்த்தால் நான் மேலே சொல்வது விளங்கும். காசின் தலைப்பக்கம் மட்டுமே பார்ப்போம், பூப்பக்கத்தைப் பார்க்கமாட்டோம் என்பதில் எனக்கு உடன்பாடல்ல. என்னை ஒதுக்குவோருக்கு வேண்டிய விளக்கந் தரவேண்டும் என்றே இச்சொற்களைப் பட்டியலிட்டேன். இவை எல்லாவற்றிலும் ஒரு பக்கம் பெயரடைத்தொடர்ப் பார்வையும், இன்னொரு பக்கம் வினைத் தொகைப் பார்வையும் பொருந்தும். வெறுமே பெயரடைத் தொடரென்று பார்ப்பவர். இன்னொரு தோற்றத்தைக் கவனிக்க மறுக்கிறாரென்றே பொருளாகும். ஐகார ஈற்றில்முடியும் எல்லாச் சொற்களையுங்கூட நானிங்கே கொட்டியிருக்கலாம். ஆனால் ஒருபானை சோற்றிற்கு ஒருசோறு பதம். நான் அறிந்தவரை ஐகார ஈறு மட்டுமல்ல எல்லாப் பிறவினை அடிகளுக்கும் இதே தீர்வுதான்.

காட்டாகக் கணித்தல்= computing. இதன் பிறவினையடி  கணி என்பதாகும். கணி என்பது பெயருமாகும்  (கணினி என்ற சொல்லும் உண்டுதான்.) பெயர்பெற்ற எழுத்தாளர் சுஜாதா பெருவலப்படுத்திய ஒரு சொல் கணிப்பொறி இது ஒரு பெயரடைத்தொடரும் வினைத்தொகையும் என்றே நான் சொல்வேன். (நீவீர் பச்சைச்சட்டை போட்டதாய் அதைப் பார்ப்பீரோ, சிவப்புச்சட்டை போட்டதாய்ப் பார்ப்பீரோ எனக்குத் தெரியாது.) கணித்தல் என்று சொல்கூடப் பெயரடைத் தொடரும் வினைத்தொகையுங் கூடத்தான். அது இருவேறு வினையடிகளுக்கு இடையே ஏற்பட்டது. து>தொல்>தல் என்ற வினையடி தோண்டும் வினையைக் குறிக்கும். உலகிலுள்ள எல்லாத்தொழிலுக்கும் முதற்றொழில் தோண்டலே. உழவென்பது அதிலெழுந்தது. தல்லம்= குழி. ஏதேனும் ஓர் அகரமுதலியைத் தேடிப்போய்ப் பாருங்கள். கணி, தல் என்ற 2 வினைகளுமே பிறவினைகள்; பெயர்களுங்கூட.. இரண்டுஞ் சேர்ந்தால் வல்லினமெய் இரட்டித்து கணித்தல் என்று தான் சொல்லெழும். இப்படித் தல் ஈற்றுவினையுள்ளே எல்லாத் தொழிற்பெயர்களும் பெயரடைத்தொடரும், வினைத்தொகையும் தான்,

இங்கே ஓர் இடைவிலகல். பெரும்பாலான தமிழ் போன்ற ஒட்டுநிலை மொழிகளில் (agglutinative languages) பெயர்ச்சொற்களே பெரும்பகுதி இருக்கும். வினைச்சொற்கள் என்பவை மிகக்குறைந்தே அமையும். (வேர்ச்சொற்கள் என்றுபார்த்தால் வினையடிகள் இன்னுங் குறையும்.) ஆனாலும் ஏராளமான பெயர்ச்சொற்கள் வெவ்வேறு ஈற்றுகளை, முன்னொட்டுகளையும், பின்னொட்டுகளையும் பெற்று கணக்கற்று இந்த வினைச்சொற்களிலிருந்தே உதிக்கும். (தொல்காப்பியம் படித்தால் செய் என்ற வினையடியிலிருந்து உருவான சொற்கள் நம்மை வியக்க வைக்கும்.) ஒரு மொழிக்கு வினைச் சொற்களே முதன்மை. பெயரடைகள் தானே உதிக்கா. அவற்றுள் நேரடியாகவோ, சுற்றி வளைத்தோ வினைச்சொற்கள் உள்ளேயிருந்தே தீரும். வினைத்தொகையின் ஆழத்தை நம்மில் பலரும் அறிந்தோமில்லை. 

எனவே மொண்ணையாக ஒரு வினைத்தொகை விதி சொல்வதை நான் ஏற்கமறுப்பேன். இக்கட்டுரையில் பேசப்பட்ட வகைச்சொற்களுக்கு (அதாவது நிலைமொழி ஈற்றில் உயிரும், வருமொழி முதலில் மெய்யும் வந்தால்) நான் பார்த்தவரை,  நிலைமொழி தன்வினையடி எனில், 2 சொற்களையும் சேர்ந்து ஒலிக்கும்போது வருமொழி முதலிலுள்ள வல்லினமெய் இரட்டிக்காது. நிலை மொழி பிறவினையடி எனில், 2 சொற்களையும் சேர்ந்தொலிக்கும்போது வருமொழி முதலிலுள்ள வல்லினமெய் இரட்டிக்கும்..

இனி மரைக்காட்டிற்கு வருவோம். மருவுதல்= தழுவுதல். நீருமின்றி நிலமும் இன்றி இரண்டுந்தழுவிய சதுப்புநிலம் என்பதால் ”தழுவுதல்” வருகிறது.. மரைத்தல் = தழுவிக்கிடத்தல், மரைக்காடு [மரைத்த (=நீரும் நிலமும் தழுவிக் கிடந்த), மரைக்கிற (நீரும் நிலமும் தழுவிக் கிடக்கிற), மரைக்கும் (நீரும் நிலமும் தழுவிக் கிடக்கும்)] காடு. மரவம் என்ற சதுப்புநிலத் தாவரமும் தழுவுதல் வினையில் தான் எழுந்தது. அக்குறிப்பிட்ட மரவம் சேற்றில் விளைவது. சும்மா கடம்பு, அது, இதுவென மரவத்தைச் சிலர் பேசுவதில் அசந்துவிட மாட்டேன். எந்த இடத்தில் எதைப் பேசவேண்டுமோ, அதைப் பேசவேண்டும். சதுப்பு நிலத்தில் மரவம் என்பது வேறு. மரையென்ற சொல் விலங்கின் கொம்பையுங் குறிக்கும் தான். மரைமான் என்பது விதப்பான கொம்புள்ள மான்வகையைக் குறிக்கும். மரைக்காடு என்பது விலங்குவழியிற் பார்த்தால் வெறும் பெயரடைத்தொடர். வினைத்தொகை அதனுள் அமையாதிருக்கிறது. மான் தொடர்பில்லையோவென நான் ஐயப்பட இதுவும் ஒரு காரணம்.

மறைக்காட்டிற்கு அத்தொடரின் முடிப்புரையில் வருவோம். அவ்விளக்கம் நீண்டது. அங்கிருந்த கோட்டையை  அவ்வளவு எளிதில் மறுத்துவிட முடியாது. அது தேவார மூவர் பொய்யரென்று சொல்வதற்குச் சமம். நான் மூல நூலாசிரியர்களைப் பெரிதும் மதிக்கிறேன். தேவார உணர்வுகளில், சமய உணர்வுகளில், ஒருவர் மாறுபடலாம். ஆனால் பொய்யையும் புரட்டையும் அவர் எழுதிவைத்தார் என்பது முறையல்ல.

முடிப்புரை எழுதிக்கொண்டிருக்கிறேன். 

அன்புடன்,
இராம.கி.

1 comment:

மதுரன் தமிழவேள் said...

தவறான கருத்து ஐயா!

உங்கள் வாதத்தின் தர்க்கம் இப்படியாக இருக்கிறது:

மனிதர்கள் குழந்தை பெறுவார்கள்.
குழந்தையாக இருந்துதான் மனிதன் மனிதனாகிறான். எனவே குழந்தையும் இன்னொரு குழந்தையைப் பெற்றெடுக்கும் தன்மை கொண்டிருக்க வேண்டும். முப்பது வயது இளைஞனாக இருந்தவன் தான் தொண்ணூறு வயது முதியவனாகிறான். எனவே முப்பது வயதில் மகவீன முடிந்தவனால் தொண்ணூறு வயதிலும் இயல வேண்டும்.

சொல்லின் வேர் ஒன்றாக இருந்தாலும் எல்லா நிலைகளிலும் ஒரே விதமாகத் தொழிற்படுவதில்லை. வினைத்தொகை இயங்கும் விதம் வேறு. உம்மைத்தொகை இயங்கும் விதம் வேறு. பண்புத்தொகை இயங்கும் விதம் வேறு.