Tuesday, October 23, 2018

உண்ணா நோன்பும் வடக்கிருத்தலும் - 16

அடுத்து புறம் 191 ஐப் பார்க்கப் போகிறோம். பலருக்கும் தெரிந்த பாடல் தான். புறநானூற்றின் 182-இலிருந்து 195 வரையுள்ள பாடல்கள் பெரும்பாலும் அற வியல், மெய்யியற் கருத்துக்களைப் புகல்வனவாகும். திணை: பொதுவியல்;  துறை: பொருண்மொழிக் காஞ்சி 

யாண்டுப லவாக நரையில வாகுதல்
யாங்கா கியரென வினவுதி ராயின்
மாண்டவென்  மனை(வி)யொடு மக்களு நிரம்பினர்
யான்கண் டனையரென் னிளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கு மதன்றலை
ஆன்றவிந் தடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழு மூரே

                            - புறம் 191

இப்பாடலின் விளக்கம் கூடுவதற்காக, பாடலுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டுக் கீழே கொடுத்திருக்கிறேன்.

"யாண்டு பலவாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர்?" என வினவுதிர் ஆயின்
மாண்ட என் மனை(வி)யொடு மக்களும் நிரம்பினர்
என் இளையரும் யான் கண்டனையர் 
வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும்
அதன் தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்
யான் வாழும் ஊரே

இனி ஒருசில சொற்பொருள்களையும் குறிப்புகளையும் பார்ப்போம்.

சூரியனைப் புவிசுற்றும் நீள்வட்ட வலயப்பாதையை 365 1/4 பகுதிகளாக்கி, ஒவ்வொரு பகுதியையும் ஒருநாளாய்க் கொள்ளும்போது, 4 நாட்கள்மட்டும் நமக்குச் சிறப்பாகத்தோற்றும். இதிற் சூரியனுக்கு மிக அருகில் வரும்நாளை வேனில் முடங்கல் (summer solstice) என்றும், சூரியனுக்கு மிகத்தொலைவில் வரும்நாளைப் பனி முடங்கல் (winter solstice) என்றுஞ்சொல்வர். தவிர, பகலும், இரவும் ஒரே கால அளவுகொண்ட 2 நாட்களை ஒக்க நாட்கள் (equinox) என்பார். ஒக்க நாட்களின் பின்புலங்களாய் (ஆட்டுருவங் காட்டும் விண்மீன் தொகுதியான) மேழவோரையும், (சமன்செய்து சீர்தூக்கும் கோலுருவங் காட்டும் விண்மீன் தொகுதியான) துலையோரையும் அமைவதால் அவற்றை மேழவிழு என்றும், துலைவிழு என்றுஞ்சொல்வர். வானவியலின்படி ஆண்டுத்தொடக்கம், வேனில்/பனி முடங்கலிலோ, அன்றி மேழ/துலை விழுவிலோ அமையமுடியும். . 

முன்செலவத்தோடு (precession) கணக்கிடுகையில், பனிமுடங்கலில் ஆண்டு தொடங்குவதைத் தைப்பொங்கலிற் தொடங்கியதாகவே கொள்ளலாம். மாற்றுவகையில் ஆண்டுத்தொடக்கம் சித்திரை மேழ விழுவிற் தொடங்கியது ஆகவுங் கொள்ளலாம். இருவகைத் தொடக்கங்களுக்கும் சங்க இலக்கியத்திற் சான்றுகளுண்டு. யாண்டு>ஆண்டு என்றசொல் யாடு>ஆடு என்றசொல்லை மூக்கொலி இழைத்துச் சொல்வதாகும். ஆண்டை, ஆட்டையென்று பேச்சு வழக்கிற் சொல்லும்போது, ஆட்டுருவங் கொண்ட மேழ இராசித் தொடக்கத்தையே குறிக்கிறது. [12 மாதங்களுக்கு ஒருமுறை அண்டையில் தோன்றி வளரும் முங்கில் அடிமுளையைத் தமிழிலும், மலையாளத்திலும் ”ஆண்டை” என்பதால், ஆண்டின் பெயர்க்காரணம் அதென்று சிலர்சொல்வர். ஆனால், ஆண்டின் தொடக்கத்தை எது குறிக்கிறதென்ற கேள்விக்கு இச் சிந்தனைவழி விடைகிடைப்பதில்லை. தவிர, “யாண்டெனும்” சொல்லாட்சியை மூங்கில்முளைக் காரணம் சரியாக விளக்காது.] 

நரை= வெளிறிய மயிர்; நரையென்ற சொல்லின் பிறப்பைச்சொன்னால் இங்குவிளக்கம் பெரிதும் நீளும். அதற்குத் தனிக்கட்டுரையே வேண்டும். ”யாண்டு பலவாக நரையில ஆகுதல்” = ஆண்டுகள் பல ஆயினும், நரை யிலாது ஆகுதல்; வெள்ளை நிறம் பெற்றதொரு நெய்தற் பறவை நாரை என்றே சொல்லப்பெறும்.

ஈ>இ, ஆ>அ, ஊ>உ, யா>எ என்பன அண்மை, சேய்மை, முன்மை, வினவுச் சுட்டுக்களாகும். இச்சுட்டுக்களின் விதப்பான வளர்ச்சியில் அன்னுதற் (=போலுதல்)  பொருளில் அன்னு>அ(ன்)னம்>அனம் என்னும் ஈற்றைச் சேர்த்து ஈ>ஈங்கு>இங்கு>இங்கனம்>இங்ஙனம், ஆ>ஆங்கு>அங்கு>அங்கனம்> அங்ஙனம்; யா>யாங்கு>யாங்கனம்>யாங்ஙனம்; யாங்கு>எங்கு>எங்கனம்> எங்ஙனம் என்ற வளர்ச்சிகளும் ஏற்பட்டு, ”படி, ஆறு, வகை” என்ற பொருட் பாடுகளைக் குறிக்கும். காட்டாக ”யாங்கு ஆகியர்?” என்பது ”எப்படியாயினர்? அல்லது ”எவ்வாறாயினர்?” அல்லது “எவ்வகையாயினர்?” என்று பொருள் கொள்ளும்.

வினவுதல் = கேள்வி கேட்டல்; ஒரு கருத்தின் உள்ளடக்கத்தை விள்ளிப் பிளந்து காட்டுவது வினவு (பிள்>விள்>விளவு>வினவு>வினா) என்று சொல்லப் படும்.

மாண்ட என் மனைவியொடு= மாட்சியுற்ற என் மனைவியொடு;. மா>மாள்> மாண்ட= பெருமைமிக்க. நிரம்புதலென்பது இங்கு உள்ளம்/மனம் நிறைதலைக் குறிக்கிறது. “என் மனசு நிரம்பிக் கிடக்கிறது” என்று சொல்கிறோமில்லையா? யாருக்கு உள்ளம் நிறைவாயிருக்கிறதோ, அவருக்குக் கவலையில்லை. இங்கே மனைவியொடு, (சுற்றியிருக்கும்) மக்களும் மனம்நிறைந்தனர். மக்களைப் புதல்வராக மட்டுமே விதந்து பல உரையாசிரியரும் குறிக்கிறார். அது தேவையில்லாத விதந்தோதலாகும். மக்கள் என்பதைச் சுற்றத்தார், நண்பர் என்று பிசிராந்தையார் வாழ்வில் அக்கறைப்பட்ட எல்லோரையும் குறிப்பதாகவே இங்கு கொள்ளலாம். 

இளையரென்பது புதல்வர்/புதல்வியர், ஏவலாளர் என 2 வகையினரையுங் குறிக்கும். மூத்தோர் என்ற சொல் உரிமையுள்ள (கிழமை) நிலையைக் குறிக்கும். இளையர் பணிசெய்வதிற் குற்றங்களிருந்தால் சமம், வேற்றம், தானம், தண்டம் (இத் தமிழ்ச்சொற்கள் சாம, பேத, தான, தண்டம் என்று சங்கதத்திற் திரியும்) என்ற 4 முறைகளிலே பாடங்கள் கற்பிக்கப் படுகின்றன. கண்டித்தல் என்பது கட்டுப் படுத்தல் என்ற பொருள்கொள்ளும். நாலுவிதமான கண்டிப்புக்களே சற்றுமுன் சொன்னவையாகும். கண்டித்தலின் பெயர்ச்சொல் கண்டனையாகும். கண்டிப்போர் என்போர் கண்டனை செய்வோராவர். கண்டனையர்/கண்டனையாளர் என்பார் கண்டிப்பிற்கு ஆளாவோர். கண்டனைக்கு உட்படுபவராய் இளையர் இருக்கும் வரையே கிழமையர் கவலாதிருக்க முடியும். அதனாற்றான் நடத்தை அறிவியலில் (behavioural science) கடைவகைத் கண்டனையை எல்லா நேரமும் பயன்படுத்தாது, மற்ற 3 முறைகளாலே நடத்தைகளைச் சரிசெய்யும் படி சொல்வர். “என் இளையரும் யான் கண்டனையர்” என்பது அருமையான நடத்தை அறிவியற் கூற்றாகும்.

வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் = என்னுடைய வேந்தனும் (அறம்) அல்லாதவற்றைச் செய்யாது காப்பான். ”செய்யான் காக்கும்” என்ற வழக்கு இப்பொழுது “செய்யாது காப்பான்” என்றே சொல்லப்படுகிறது. அல்லவை என்பது (அறத்திற்குப்) புறம்பானவை என்று பொருள்படும். சம காலத்தில் பல்வேறு சேரரும், சோழரும், பாண்டியரும், குறுநில மன்னரும்/வேளிரும் இருந்தாலும், வேந்தன் என்பது உறையூர்/புகார், மதுரை, கருவூர்/வஞ்சி என்ற தலைநகர்களில் இருந்த முடிவேய்ந்த மன்னரை மட்டுமே குறித்திருக்கிறது. மற்றவரெல்லாம் மன்னர்/அரசர்/அரையர் என்று மட்டுமே சொல்லப்படுவார். அதன் தலை = அதற்கு மேல். ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் = (அறிவு) அகன்று பதப்பட்டு அடங்கிய, (எல்லோரும்) கொள்ளத் தகுந்த பல சான்றோர் யான் வாழும் ஊரே = அடங்கியது நான் வாழும் ஊராகும். பாட்டின் இந்த வரிகளில் ”அடங்கியது” எனும் வினைச்சொல் நேரடியாக வெளிப்படாது உள்ளொடுங்கி நிற்கிறது.

மொத்தப்பொருள்:

”ஆண்டுகள் பல ஆயினும், நரையிலாதல் எவ்வாறாயிற்று?”; என்று வினவுவீராயின், ”மாட்சியுற்ற என் மனைவியோடு, (சுற்றத்தார், நண்பர் என்ற) மக்களும் (மனம்) நிறைந்திருக்கிறார்; (புதல்வரும் ஏவலாளரும் ஆகிய) இளையரும் என் கண்டனைக்கு (கட்டுப்பாட்டிற்கு) ஆளானவரே. என் வேந்தனும் (அறம்) அல்லாதவற்றைச் செய்யாது காப்பான். அதற்குமேல், (அறிவு) அகன்று பதப்பட்டு அடங்கிய, (எல்லோரும்) கொள்ளத்தக்க பல சான்றோர் அடங்கியது நான் வாழும் ஊராகும்.”

நால்வேறு முகன்மைச் செய்திகளைச் சொல்லி “நான் கவலையிலாது இருக்கிறேன்; எனவே என்முகத்தில் நரையில்லை” என்று பிசிராந்தையார் அழுந்தச் சொல்கிறார். அடுத்த பாடலுக்குப் போவோம்.

அன்புடன்,
இராம.கி.   

No comments: