Thursday, July 26, 2018

பனுவலும் text உம் ஒன்றா? - 2

31/5/2016 அன்று இக்கட்டுரையின் முதற்பகுதியை மடற்குழுக்களில் வெளியிட்டு 3,4 நாளில் அடுத்த பகுதிக்கு வருவதாய்ச் சொல்லியிருந்தேன். ஆனால் முன்னரே ஒப்புக்கொண்டிருந்த வேதிப்பொறியியல் ஆலோசிப்பு வேலையை முடிக்காது நகரவியலா நிலையில் இது பின்தங்கிப்போனது.

துகில்தொழின் பனுவலை முதற்பகுதியில் பேசிய நாம் text -ஐ இனிப் பார்ப்போம். இதிலும் ஒரு பனுவலுண்டு.

மாந்தன் தன் எண்ணங்களை இன்னொருவனோடு முதலிற் பரிமாறிக் கொண்டது பேச்சாலும் கைச்செய்கைகளாலும் தான். நாளடைவிற் செய்கைகளைக் குறைத்து எண்ணப்பரிமாற்றத்தில் பேச்சுமட்டுமே முழுதும் நிறைந்திருக்கலாம். (இன்றும் பேச்சினூடே செய்கைகளுண்டு.) இதன் தொடர்ச்சியாய்க். கல்லிற் கீறிய படங்கள், சுருக்கப்படத் தொகுதிகள், படவெழுத்துக்கள், கருத்தெழுத்துக்கள், கல்/மாழை/ ஓலை/தாள் ஆகியவற்றில் எழுதிய அசையெழுத்துக்கள், (syllabaries. தமிழெழுத்து இவ்வகையே.) முடிவில் கல்/மாழை/ஓலை/தாள்/அச்சு/ கணி வரை வந்த மெய்யுயிரெழுத்துக்கள் (alphabets) எழுந்தன.

[இங்கோர் இடைவிலகல். மெய்யுயிரெழுத்தில் 2 வகையுண்டு. முதல் வகையை அபுகிடா (abugida) என்பர். இதில் உயிரெழுத்துக்கள், அகரமேறிய மெய்யெழுத்துக்கள், உயிர்மெய்க் குறியீடுகள் உண்டு. இன்னொன்றை அபுஜெட் (abujed) என்பார். இதில் மெய்யெழுத்துக்கள், உயிர்/உயிர்மெய்க் குறியீடுகள் மட்டுமேயுண்டு. அரபிக், அரமெய்க், ஈப்ரு போன்ற மொழி யெழுத்துக்கள் அபுஜெட் வகையைச் சேர்ந்தவை. ”தனி உயிரெழுத்துக்கள் எதுரசுக்கனில் தான் முதலில் அரைகுறையாய் எழுந்ததோ?” என்ற ஐயம் ஆய்வாளருக்குண்டு. தமிழெழுத்து எப்போது எழுந்தது? - என்று சொல்ல முடியவில்லை. தமிழில் உயிரெழுத்து எப்பொழுதெழுந்தது? அதுவுந் தெரியாது. ஆனால், இன்று வரை தமிழெழுத்து அசையெழுத்தாகவே நமக்குக் காட்சியளிக்கிறது.

எத்தமிழிலக்கணமும் உயிர்மெய்களிலுள்ள கால், கொக்கி, சுழிக்கொக்கி, (வளை, கோடு, வளைக்கோடு, வளைச்சுழி, வளைக்கால், கோட்டுவளை போன்ற) உகர/ஊகாரக் குறிகள், ஒற்றைக்கொம்பு, இரட்டைக் கொம்பு, ஔகாரச் சிறகு போன்றவற்றை சிறப்பித்துச் சொன்னதில்லை. 1950கள் வரை திண்ணைப் பள்ளி ஆசிரியர் எங்களுக்கு இதன் வடிவுகளையும் பெயர்களையுஞ் சொல்லிக் கொடுத்தார். (இக்காலத்தில் வடிவுகளை மட்டுமே சொல்லிக் கொடுக்கிறார். பலருக்குந் தமிழ்ப்பெயர் தெரிவதே இல்லை.) இக்குறிகளுக்கான செந்தரமாக்கலும் நடைபெறவில்லை. வடிப்புக் கிறுவியல் (typography) என்பது தமிழர்களிடம் ”வீசை என்ன விலை?” என்று கேட்கும் நிலையிலேயே உள்ளது.

இதற்கு மாறாய் நம் பிள்ளைகளின் கல்வியிற் கைவைத்துச் சிலர் உகர/ஊகாரச் சீர்திருத்தம் பேசி, எல்லோரையும் வழிபிறழ வைக்கிறார். எந்த வொரு தமிழெழுத்தையும் கணித்திரையில் காட்டக் கணியில் 2 பொத்தான்களை அடித்தால் போதும் என்ற இந்நாளைய நுட்பியல் வளர்ச்சி உணராது, தமிழைக் குலைத்தே தீருவதென்று பல சீர்திருத்தவாதியர் கங்கணங் கட்டித் திரிகிறார். கேட்டால், “பெரியார்” என்று சொல்லிவிடுவார். பெரியாரின் எத்தனையோ கருத்துக்களை ஏற்கலாம். ஆனால் எழுத்துச் சீர்திருத்தம் போன்ற அரைகுறைக் கருத்துக்களை எப்படிநாம் ஏற்பது? போகிற போக்கில் சீர்திருத்த வாதிகள் பெரியாரைச் சங்கராச்சாரியார் போல் ஆக்கி விடுவாரோ, என்னவோ? பெரியார் சொன்னதெலாம் வேதமா?  பெரியார் சொன்னதில் தவறே இருக்காதா? இந்த “பாழாய்ப்போன” எழுத்துச் சீர்திருத்தம் பெரியாரின் தவறுகளில் ஒன்று. எழுத்துச் சீர்திருத்தம் செய்த மலேசியா, துருக்கி, இந்தோனேசியா போன்ற நாடுகள் தம் வரலாற்றை, தம் பழம் நூல்களின் தொடர்ச்சியை இழந்ததுதான் மிச்சம். இன்று எழுத்துச் சீர்திருத்தம் செய்தால், கோடிக்கணக்கான பழந்தமிழ்ப் பொத்தகங்கள் அழிந்தே போகும்.

இது ஒருபக்கமெனில், இன்னொரு பக்கம் உள்ளுரும நுட்பியல் (information technology) சார்ந்த இந்திய நடுவணரசுத் துறைகளும், ஒருங்குறிச் சேர்த்தியம் உட்பட்ட அனைத்துநாட்டு நிறுவனங்களும் தமிழெழுத்தின் இயல்பைத் தவறாக மதிப்பிடுகின்றன. தமிழில் உயிருக்கும், மெய்க்கும் தனித்தனிச் சிறப்புண்டு. அகரமேறிய உயிர்களுக்கு எந்தத் தமிழிலக்கணமும் முகன்மை தராது.  இவ்விவரம் புரியாத மேலே சொல்லப்பட்ட நிறுவனங்கள், அபுகிடா என அறியப்பட்ட வடவிந்திய எழுத்துக்களோடும், தமிழல்லாத திராவிட எழுத்துக்களோடும் சேர்த்துத் தமிழை நெருக்கித் தள்ளுகின்றன. (தமிழெழுத்தும் அபுகிடாவும் ஒன்று என்பது பெரும் முட்டாள்தனமான கூற்று. தொல்காப்பியம் படியுங்கள். உங்கள் தவறு சட்டெனப் புலப்படும்.) நம் வலிமை குறைந்து கிடப்பதால் நாமும் முனகிக்கொண்டே இதை ஏற்க வேண்டியுள்ளது. ஒரு பெண்ணை ஆணென்று இடக்கு முடக்காய் அடையாளஞ் சொல்லி, தப்புத் தப்பாய் சொவ்வறை (software) ஆடைகளைப் போட்டு, பாடாய்ப் படுத்தினால் உளச் சிக்கல் வாராதோ?]

எழுத்து வளர்ச்சிக்கான அடிப்படையைப் பகரிக் கொள்கை (rebus principle) என்பர். இருவேறு பொருள் குறிக்கும் சொல்லுக்கு ஒரு பொருளில் பூதியல் வடிவும் (physical shape), இன்னொன்றில் கருத்தியல் அடிப்படையும் (ideological underpinning) இருப்பின் இடம், பொருள், ஏவல்பார்த்து ஒன்று இன்னொன்றுக்குப் பகரியாய் ஆகும். ஒரு வாயோடு உள்நோக்கிய அம்பும், வெளிநோக்கிய அம்புமாய் ஒரு படம் போட்டால் ”உண்ணுதல், பேசுதல்” போன்ற வினைகளை உணர்த்தி விடலாம். கணித்திரையில் இப்போது காணும் எமோஜிகளுங் (emojis) கூட இப் பகரிக் கொள்கையைத் தான் உணர்த்தும். (எமோஜிகளை வைத்துச் சப்பானில் குறும்படக்கதைகள் கூட வந்துவிட்டனவாம்.)

கீழ்வாலை ஓவியங்களைப் போல் படவெழுத்துப் பாவனைகள் 5000/6000 ஆண்டுகளுக்கு முன் தமிழில் இருந்திருக்கவேண்டும். ஓரசைக் குறும் படங்கள் நாளடைவில் அசையொலியையுங் குறித்தன. (தமிழி, பெருமி, உரோமன் போன்றவற்றிலுள்ள அகரம் “ஆ” என்னும் மாட்டு முகத்தின் குறும்படம் தான். வியப்பாய் இருக்கிறதோ? எழுத்துக்களின் உருவ ஒற்றுமை பற்றி நண்பர் நாக.இளங்கோவன் ஒரு கட்டுரை எழுதினார். 4, 5 எழுத்துக்களுக்கு விரிவாக எழுதியவர் அப்புறம் ஏனோ தொடராது விட்டார். அவர் அதைத் தொடர வேண்டும்.)

முதலிற் படங்கள் குறுந்தொடர்களையே கல்லில் தெரிவித்தன. குறும்படத் தொகுதிகள் புரிதலை விரிவாக்கின. படவெழுத்துக்கள் கதை சொல்லத் தொடங்கின. அசையெழுத்துக்கள். பேரிலக்கியங்களைக் கூட பதிவாக்கின. முடிவில் 250 க்கும் அருகில் அசையொலிகள் தமிழில் எழுந்த பிறகு, இன்னுஞ் சுருக்கி 31 எழுத்துக்களையும் சில ஒட்டுக்குறிகளையும் வைத்து தமிழ் எழுத்தைச் செந்தரப்படுத்தினார். இவ்வளர்ச்சிக்கு 1000, 2000 ஆண்டுகள் கூட ஆகியிருக்கலாம். தமிழில் இச்செந்தரம் எப்பொழுதெழுந்தது? உறுதியாகத் தெரியாது. ஆனால் இன்றைக்குக் கிடைக்கும் தொல்லியற் செய்திகளைப் பார்க்கும்போது, பொ.உ.மு. 800 இலேயே அசையெழுத்துக்கள் வந்துவிட்டன என்று சொல்லத் தோன்றுகிறது..எனவே பெரும்பாலும் பொ.உ.மு. 1000/1500க்கு இடையில் இச்செந்தரம் எழுந்திருக்கலாம். கவனங் கொள்ளுங்கள். “லாம்” என்று சொன்னேன்.

எழுத்தென்ற பெயர் ஒருபக்கம் தொண்டையிலெழும் வினையால் ஒலியையும், இன்னொரு பக்கம் எழுதுபொருளிற் செய்யப்படும் இழுத்தல் வினையால் வடிவையுங் குறித்தது. ஒலியெழுத்து, வரையெழுத்து என்பன இருவேறு புரிதலை அளிக்கும். நுட்பியல் வளராக் காலத்தில் பேச்சென்பது காற்றோடு போச்சு. ஆனால் கல்/ மாழை/ ஓடு/ ஓலை/ தாள் ஆகியவற்றில் எழுதினால் அது ஓர் ஒலியை/ சொல்லை/ கருத்தை இழுத்துக் கட்டி நிலைத்ததாயிற்று. காலகாலத்திற்கும் இன்னொருவர் அதை, முயன்றால் அறிய முடியும். சொன்னவரும் தன் பேச்சை மாற்ற முடியாது. நாகரிக வளர்ச்சியில் எழுத்தின் பங்கு முகன்மை ஆனது. வரையெழுத்து வளர வளர, அது பேச்சிற்கும் துணையாகியது.

பேச்சில் ஈடுபடக் குறைந்தது 2 மாந்தராவது அருகருகே வேண்டும். ஒருவர் வாயையும், இன்னொருவர் செவியையும் பயன்படுத்தினார். வரையெழுத்து என்று வந்தவுடன், இன்னொரு மாந்தன் அருகிருக்குந் தேவை குறைந்தது. முதல் மாந்தன் -> கல்லின்மேல் எழுத்து -> இரண்டாம் மாந்தன் எனும்போது இடமும் காலமும் விலகிப் போகலாம். இந்தப் பிரிப்பு மாந்தச் சிந்தனையை வளர்த்தது. பாண்டியன் சோழனோடு பேச முடிந்தது. எள்ளுப் பாட்டன் கொள்ளுப் பேர்த்தியோடு பேச முடிந்தது. பின்னால் உரைப்பேச்சும் வரையெழுத்துஞ் சேர்த்து மாந்தச் சிந்தனையைப் பெரிதாகவும் நுண்ணிய தாகவும் ஆக்கின..

எழுத்திற்கும் பேச்சிற்குமான இடையாற்றத்தைச் (interaction) சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். மாந்தன் தன் எண்ணங்களை வரைதல்/ எழுதல் வழியாய் இன்னொருவருக்குப் பரிமாறிக் கொண்டது வெகுகாலங் கழித்தே யாகும். தொடக்கத்தில் பேச்சின் வழியாகவே மாந்த மொழிகள் வளர்ந்தன; (எழுத்துகளை முயன்று சரிபார்த்து - trial and error - உருவாக்கிய காலத்திலும்) மொழியிற் தொடர்கள் தோன்றிக் கொண்டு தான் இருந்தன, வாக்கியங்கள் விரிந்தன. இலக்கியங்கள் பிறந்தன; இலக்கணங்கள் எழுந்தன. இத்தனைக்கு நடுவில் ஏதொன்றையும் ஞாவகம் வைத்துக் கொள்ள மாந்தர் மனப்பாடமே செய்து வந்தார். அதிலும் 1000 ஆண்டுகளாய் படிப்பென்பது இந்தியக் குருகுலங்களில் மனப்பாடமாகவே இருந்தது. {அண்மைக்காலம் வரை இது நடந்தது. என் 4 ஆம் அகவையிலிருந்து 7 ஆம் அகவை வரை (1952-55) திண்ணைப் பள்ளிக்கூடத்திற் படித்தபோது இப்படியே தான் எனக்கும் என் ஆசிரியர் சொல்லிக் கொடுத்தார்.

“ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம், ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம்.....;”

”ஓரோன் ஒன்று, ஈரோன் ரெண்டு, எண்ணிரண்டு பதினாறு...”;

இப்படித்தான் நான் படித்தேன். ஏட்டுப் பையும் மனப்பாடமுமாய் இப்படி எல்லா மாணவருந் திரிந்தோம். பன்னிப் பன்னிப் பன்முறை வாயால் ஒலித்து எல்லாவற்றையும் படிக்க வேண்டும். மொழி, பண்பாடு, பழக்கவழக்கம், நீதிநெறி, சாமிபாட்டு என எல்லாமும் மனப்பாட முறையிற்றான் எமக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டன. அந்தக்கால என்படிப்பில் மனப்பாடமே 90% இருந்தது. மணலில் நான் எழுதிக் காட்டியதும், ஓலையில் எழுதியதும் மீச்சிறு அளவே. மொத்தத்தில் ”பாடம்” என்ற சொல் பல இடங்களில் மனப் பாடத்தையே குறித்தது. ”உங்களுக்குக் கோளறு பதிகம் பாடமா?” – என்றால் ”மனப்பாடமாய்த் தெரியுமா?” - என்று பொருள். அவ்வளவு எதற்கு? text book என்பதற்கு ஈடாய்ப் பாடப் புத்தகம் என்று தான் இன்றுஞ் சொல்கிறோம்.

மனப்பாடமென்பது நம்மில் அவ்வளவு தொலைவு ஊறிக்கிடக்கிறது. அதனாற்றான் text இன் பெயர்ச் சொல்லைத் தொலைத்துத் தேடிக் கொண்டிருக்கிறோம். படித்தல் என்பது கூட reading என்பதாக மட்டுமின்றி memorize என்பதாகவே நம்மூரில் புரிந்துகொள்ளப் பட்டது. மனப்பாடமென்பது இந்தியப் பண்பாட்டிற்கே உரித்தான ஒரு நடைமுறை. இந்த அளவிற்கு இதற்கு முகன்மை வேறு நாகரிகங்களில் வந்ததாய்த் தெரிய வில்லை.]

பன்னுதலென்ற சொல்லிற்குப் பலமுறை சொல்லுதலென்றே பொருள் ஏற்பட்டது. “ஏன் இப்படிப் பன்னிக்கொண்டிருக்கிறான்?” என்றால் ”ஏன் திருப்பித் திருப்பிச் சொல்கிறான்?” என்று பொருளாகும். சமய நூல்களைப் பரவுதற்கும் பன்னுதலைப் பயன்படுத்தியதால், பாராயணஞ் செய்தல் என்றுஞ் சொன்னார். ”உங்களுக்குத் திருக்குறள் பாராயணமாய்த் தெரியுமா?” என் தாத்தா எங்களூர்க் கோயில் ஓதுவாரை 1 1/2 ஆண்டுகள் எங்கள் வீட்டிற்கு வரவழைத்து எனக்குத் தேவாரம் சொல்லிக்கொடுக்க வைத்தார். எல்லாம் பாராயணந் தான். பன்னுதலிலிருந்து பனுவுதலென்ற வினைச்சொல் பிறந்தது. இந்த வகையில் பனுவலென்பது மீண்டும் மீண்டும் படிக்க வேண்டிய நூல்களைக் குறிக்கும். இருக்கு, திருக்குறள், நாலடியார், கீதை, விவிலியம், குரான் - இதுபோன்ற நூல்கள் பனுவல் வகையைச் சேர்ந்தவை.

எல்லா நூல்களும் பனுவல்களா என்பது காலத்திற்குக் காலம், இடத்திற்கு இடம், ஆட்களுக்குத் தக்க மாறுபடும். எனக்குப் பனுவலானது உங்களுக்குப் பனுவலாகத் தேவையில்லை. அதேபோல் எந்தப் பனுவலும் எழுத்தால் ஆகி இருக்கவுந் தேவையில்லை. இன்று பல பனுவல்களும் எழுத்தாலாவது நுட்பியல் தந்த கொடை. அவ்வளவு தான். முப்பாட்டன் காலத்தில் எழுத்து நூல்களைப் படித்தோர் மிகக் குறைவு. ஆனாலும் பலருக்கும் தேவாரம், நாலாயிரப் பனுவலிற் சில பாடல்கள் தெரிந்தே இருந்தன. எல்லாம் கேள்வி ஞானமும் மனப்பாடப் பயிற்சியும் தான். நினைவிருக்கட்டும் பனுவலென்ற சொல்லிற்குப் ”பலமுறை சொல்லும் பொத்தகம்” என்பதே பொருள். துகலியல் (textile) துறையில் பல இள்ளிகள் சேர்ந்த பஞ்சு, பனுவல் இழையாயிற்று. படிப்புத் துறையில் பலமுறை திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்ப்பதால் படித்தது பனுவலாயிற்று. (பனுவுதலை ஆங்கிலம் spinning என்றது. அதை விளக்கப் போனால், இராம.கி. மீண்டும் ”ஆங்கிலவொலியிற் சொல் படைக்கிறார்” என்று திட்டு விழும்.)

இனி நுவலியது நூலாகும். அதாவது ஒருபொருள் பற்றிய அறிவுத் திரட்டையே நூலென்று சொல்கிறார். அதே பொழுது, எல்லா நூலும் எழுத்தாய் இருக்கத் தேவையில்லை. ஆகமம், ஆரிடம், பிடகம், தந்திரம், பனுவல், சமயம், சூத்திரம் என்று நிகண்டுகள் நூல்களுக்கு வகை சொல்லும். இவை எல்லாமே எழுத்தில் அமைவன அல்ல. இன்று நுட்பியல் காரணமாய் இவை எழுத்தில் அமைவது ஒரு வித வாய்ப்பு அவ்வளவு தான். துகலியல் துறையில் நுல்லிக்கொண்டு நீண்ட காரணத்தால் நூல் எனப்பட்டது. படிப்பத்துறையில் வாயாற் சொன்ன காரணத்தால், நுவலியது நூலாயிற்று. இரண்டும் இருவேறு சொற்பிறப்புகள். நூல் என்று முடிப்பு மட்டும் தான் ஒன்றுபோல் தெரிகிறது.

பனுவல், நூல் என்னும் இருவேறு சொற்களுக்கும் தனித்தனியே இருவேறு பொருள்கள் இருவேறு துறைகளில் இப்படியுண்டு. இங்கும் பகரிக்கொள்கை விளையாடுகிறது. விவரமறிந்தோர் குழப்பங் கொள்ளார். நானறிந்தவரை பனுவலுக்கு text பொருள் என்பது கிடையாது. அப்படி யாரேனுஞ் சொன்னால் அது வலிந்து சொல்வது. (ஆர்வக்கோளாறால் text ற்கு இணையாய் ஒருகாலத்தில் நானும் இடுகுறிப் பெயராய்ப் பனுவலைப் பயனுறுத்தியது உண்டு. பின் ஆழ்ந்த படிப்பால், உட்பொருளறிந்து குறைத்துக் கொண்டேன். “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்பது வெற்று மொழியல்ல.) கல், மாழை, ஓலை, தாள், கணி என வெவ்வேறு எழுதுபொருள்களில் வரை வடிவிற் சேமிக்கப் படும் text, வாய்வழிப் பேச்சிலிருந்து மாறுபட்டது. (இக் காலத்தே பேச்சுக்களையுஞ் சேமிக்கிறோம்.) கொஞ்சங் கொஞ்சமாய் பேச்சிற்கும் text க்குமான இடைவெளி, நுட்பியல் வளர்ச்சியாற் குறைகிறது.

சரி text க்கு வேறென்ன தான் சொல்வது? துகலியற் தொழிலுக்குள், அதன் தறிக்குள், பாவல் (fabric) கட்டுமானம் பற்றிய வேறு சொற்களுக்குள், போய்த் தேடினால் அதற்கும் வழியுண்டு. அடுத்த பகுதியிற் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

No comments: