Monday, July 16, 2018

தூண்டல்

அண்மையில் நண்பர் நூ.த.லோ.சு, ”தூண்டு சுடரும், தூண்டா விளக்கும்” என்ற பொருண்மையில் சம்பந்தர்தேவாரம் 1.71.6, அப்பர்தேவாரம் 6.23.1, 6.35.1,7.52.3, சுந்தரர்தேவாரம் 7.52.3, திருவாசகம் 8.4.40, 8.4.88, திருக்கோவையார் 8.12.244, திருவிசைப்பா 9.185, திருமந்திரம் 10.178, 10.2222, 10.2978, பெரியபுராணம் 12.1316, 12.1489, 12.3391, 12.3819 கல்லாடம் .23-28 ஆகியவற்றிலிருந்து சிலவரிகளைக் கொடுத்து, “தூண்டுதல் எனுஞ்சொல் சங்ககாலத்தில் காணவில்லை பக்தியிலக்கிய காலத்திற்றான் பயனிலுள்ளதுபோல் தோன்றுகிறது” என்றுரைத்தார். முனைவர் இராசம் இதற்கு மறுப்புச் சொல்லி, ”தூண்டு, தூண்டில் போன்றவை சங்கப்பாடல்களில் உண்டெ”ன்றார். அடுத்துப் பேரா.பாண்டியராசா தொடரடைவைப் பயனுறுத்திப் பேரா.செல்வா, கீழ்க்கண்ட அடிகளை எடுத்துவைத்தார்.
 
நெடும் கழை தூண்டில் நடுங்க நாண் கொளீஇ - பெரும் 285
நிலையோர் இட்ட நெடு நாண் தூண்டில்/பிடி கை அன்ன செம் கண் வராஅல் - மலை 456,457
வாங்கு விசை தூண்டில் ஊங்கு_ஊங்கு ஆகி - நற் 199/7
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது - அகம் 36/6
நெடும் கழை தூண்டில் விடு மீன் நொடுத்து - புறம் 399/15
தூண்டிலா விட்டு துடக்கி தான் வேண்டியார் - கலி 85/23
நெடும் தூண்டிலில் காழ் சேர்த்திய - பட் 80
மீன் எறி தூண்டிலின் நிவக்கும் - குறு 54/4
மீன் எறி தூண்டிலின் நிவக்கும் நாடன் - ஐங் 278/3
வலையும் தூண்டிலும் பற்றி பெரும் கால் - நற் 207/10
தொடி மாண் உலக்கை தூண்டு உரல் பாணி - அகம் 9/12
போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ - புறம் 82/4

இந்நண்பர்களின் தேடலால் தூண்டப்பட்ட நான், ”இதுபோலும் அடிப்படைச் சொல் பற்றியியக்கத்தின் முன்னே ஏனிருக்கக்கூடாது?” என்ற வினாவினுள் ஆழ்ந்தேன். என் பார்வை சொற்பிறப்பு வழியது. சங்கவிலக்கியம் என்பது பழந்தமிழ்ச் சொற்களின் அகரமுதலித் தொகுதியல்ல என்றுநான் பலகாலம் சொல்லிவந்திருக்கிறேன். பல சொற்கள் அக்காலப் புழக்கத்திலிருந்து அவை பொதிந்த பாக்கள் நமக்குக் கிடையாமலோ, அன்றி நூல்களிற் பதியப்படாமலோ போயிருக்கலாம். ஒருவகையிற் பார்த்தால், யானையின் கால், துதிக்கை, வால், உடல் போன்ற பகுதிகளைத் தனித்தனியே தொட்டுணர்ந்து, யானை இப்படி உள்ளதென 5 குருடர் விவரித்தது போற்றான் சங்கத்தமிழ் பற்றிய நம் பார்வையுள்ளது. பழவிலக்கியம், இலக்கணம், மக்கள்வழக்கு, பிந்தை இலக்கியவழக்கு ஆகியவற்றைக் கொண்டு, முறையாக ஏரணவழி அளந்தறிந்து “துண்டலின்” இயலுமையை இங்கு சுட்டிக்காட்ட விழைகிறேன்.

முதலில் துள்ளெனும் வேருக்கு வருவோம். இதற்கு 2 விதப் பொருள்வகை உண்டு. முதல்வகை வெட்டு, பிள, கிழி என்பதாகும். இரண்டாவது மேலெழு, குதி போன்றது (இரண்டாவதற்கு முன்தள்ளு. என்ற பொருளுமுண்டு. (துல்லெனும் அடிவேரில் துள் எழுந்தது. அடிவேருக்கும் துள்ளின் பொருளுண்டு. அடிவேரின் தொடர்செய்திகளை இங்குநான் முழுதுஞ் சொல்லவில்லை. ஒன்றிரண்டை மட்டுஞ் சொல்கிறேன்.) மேற்சொன்ன 2 வகைப் பொருள்களுமே சொல்வளர்ச்சியில் பெரும்பங்கு ஆற்றியுள்ளன. முதல்வகையில் துள் எனுஞ் சொல்லுக்கே துண்டுப் பொருளுண்டு. துள்ந்து>துண்டு எனத்திரியும். துள்ளப்பட்டது= வெட்டப்பட்டது. இதே பொருளில் துள்+து= துட்டுங் கிளைக்கும். (காரணம்புரியாச் சங்கதத்தாக்கில் thuttu ற்கு மாறாய் இன்றுபலரும் dhuddu எனப் பலுக்குவார். கேட்டால், ’தெலுங்கு வாசனை’ என்பார். சொற்பிழை பலுக்கிறவரிடம். உள்ளது.) துட்டு= சில்லறை, சிறு துண்டு. பணத்தின் சிறு பகுதியை, இச்சொல்லால் குறிக்கிறோம். இதனடிப்படை முன்சொன்ன துள்ளல்/வெட்டல் வினை தான். 1 உருவாயைப் துள்ளினால்/பிளந்தால் வரும் சிறு பகுதி துட்டு. துண்டு தமிழானால், துட்டும் தமிழ் தான்.       

துள்க்குதல்>துட்குதல் என்பது துள்ளலின் அடுத்த புடைப்பெயர்ச்சி. துட்கடு>துக்கடு>துக்கடை>துக்கடா= சிறுதுண்டு. துக்கடாவையுஞ் சிலர் தமிழில்லையென்பார். பேச்சுத்தமிழில் கடை, கடாவாகும். துள்க்குணி> துக்குணி= சிறிதளவு. செய்யெனும் வேரைச் செய்கெனத் திரிப்பதுபோல் சொற்கள் உருவாக்குவது தமிழிற் பரந்துபட்ட வழக்கம், துள்தல்>துள்குதல் ஆகித் துட்குதலாவதும் அதே பழக்கமே. துக்குதல், துகுதலெனச் சிறுகித் துண்டாடுஞ் செயலைக் குறிக்கும். ’துகு’வுடன் ஐ சேர்த்துத் துகையாகும். பல துண்டுகளென்பது இதன் பொருள். துகைத்தல்= துண்டாக்கல். அம்மியில் தேங்காயிட்டு, நையப்புடைத்துத் துகைக்கிறோம். பேச்சுவழக்கில் துகையல் துவையலாகும். துகுவின்பின் அள் ஈற்றைச் சேர்த்து துகு+அள்= துகள் பிறக்கும். மீச்சிறு துண்டு துகளெனப்படும்.

தமிழில் பலவிடத்துங்காணும் விதிமுறைப்படி (c1v1c2v2....>c1V1.... இங்கு v1 = குறில், V1= v1-இன் நெடில். திரிவில் c2v2 முற்றிலும் மறைந்து மீந்த எழுத்துக்கள் தொடரும்) துகுள்>தூள் ஆகும். தூள் நீண்டு தூளியாகினும் தூள்ப்பொருளுண்டு. சங்கதத்தில் தூளி, dhuli ஆகும். துகள்>தூள் திரிவிற்கப்புறம் பொருளில் சற்று வேறுபாடு கொள்ளும். நெடிலென்பது குறிலின் நீட்சி தானே? (துகளின் 2 1/2 மாத்திரை தூளில் வேறுவகையில் 2 1/2 மாத்திரையாகும்.) இன்னும் அளபெடுக்கையில் தூஉள் 3 1/2 மாத்திரையாகும். ஒலி வேறுபாட்டால் பொருளில் மீத்தன்மை/ இன்னுந் தன்மை காட்டுகிறோம். துகள், குருணை போன்றது. இன்னுஞ்சிறுத்தால் அது தூளாகும். இன்னொருவிதமாய்த் தூள் தூள்சி>தூய்சியாகித் தூசியாகும். துள்வு>தூவு>தூவி என்பதும் சிறிய, நுண்பொருள் உணர்த்தும். மீச்சிறிதாய்த் துள்ளப்பட்டது காற்றசைவில் மேலெழும். பொருளிலும் இம்மாற்றம் ஏற்படுவது அடுத்த புடைப்பெயர்ச்சி. காற்றியக்கால் தூள்/தூசி மேலெழுவதை இயற்கையிற் காண்கிறோம். துள்ளிற்கு ”மேலெழும்/ முன்தள்ளும்” இயக்கப்பொருள் சொன்னது இப்படித்தான்.

இதுவரை திண்மத்துகளை/தூளைப் பார்த்தநாம், துளியெனும் நீர்த்துகள் பார்ப்போம்.. மீச்சிறு துண்டுகள் மேலெழுவதுபோல், சில பூதி விசைகளால் (physical forces) நீரும் துள்ளி, மேலெழும், அசையும். இன்னும் ஆழமாய்த் “அசைந்தெழுந்த நீர்ச்சொட்டு” எனத் துளிக்குப் பொருள்சொல்வர். “மங்குலற்கமொடு பொங்குடி துளிப்ப”  என்பது அக.235; “துளியனுழந்த தோய்வருஞ் சிமைதொறும் என்பது பரிபா. 7, 13. துள்>துளும்பு>தளும்பு என்பதும் நீர்மம் அசைதல் குறிப்புத்தான். ளகர, டகரத் திரிவில் துளி>துடியும் அசைபொருள் காட்டும். துடிதுடித்தலும் அசைதலே. “துடிகொள் நுண்ணிடை” என்பது திவ்.பெரியதிருமொழி 1, 2-3 என்பதற்கான விளக்கவுரை காணலாம்.

“துள்ளித்தூண் முட்டுமாங் கீழ்” என்ற நாலடியார் 64 ஆம் பாட்டுத் தொடரும் அசைவை உணர்த்தும். அளவுக்கு மீறிய அசைவு, பதைத்தல் எனப்படும். “துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்து” என்பது கலித்தொகை 4 ஆம் பாவில் வருந்தொடர். ”பேயும் பேயும் துள்ளல் உறுமென” என்பது கலித்தொகை 94 ஆம் பா.. ”துள்ளலோசை கலியென மொழிப.“ என்பது தொல்கா. பொருள். செய்யுளியல் 82 ஆம் நூற்பா. ’துள்ளலின்’ காலம் 2700 ஆண்டுகள் போலும். தூளின் நீட்சியான தூசியுங் கூடத் தொல்காப்பியத்தில் பயிலும்..  .

துள்ளலின் மேலெழவைத்தற் பொருளால் துள்>துளு>துளுப்பு>துடுப்பு எழுந்தது. மேலும்மேலும் நீருள் அழுத்தி துடுப்பை மேலெழச்செய்தே படகு நகர்கிறது. துடு>துடுவையும் துடுப்பைக் குறிப்பதே. துள்> துடு>துடங்கு> தொடங்கு என்பதும் ”டக்”கென ஒரு நிகழ்வை மேலெழவைப்பதே. முன்சொன்ன துள்கு>துகு என்பதற்கும் மேலெழும் பொருளுண்டு. ககர/வகரத் திரிவில் துகக்கு>துவக்கு ஆகும். இதுவும் தொடங்கலின் வெளிப்பாடே. ”துவக்குதல் தமிழல்ல, தொடங்கலே தமிழ்” என்பார் சிலர். ஆழ்ந்துபார்த்தால் அப்படித் தெரியவில்லை. இரண்டும் இருவேறு வகையில் ஒரு பொருள் உணர்த்தியவையே. 

துடுத்தல் = மேலெழ வைத்தல் (துடுப்பை நினைவு கொள்ளுங்கள்) என்பதால் துடைத்தலும் மேலெழ வைப்பதே. ஒரு பரப்பில் ஒட்டிக்கிடக்கும் தூசியை துணியால் மேலெழ வைக்கிறோம். இனிமேல் ஒட்டியிராது. துள்>தூள்>தூர்> தூர்த்தலும் ஒட்டிய அழுக்கை மேலெழவைத்துப் பெருக்கித் தூய்மை செய்வதாகும். உடம்பில் ஒட்டிய நீர்த்துளியை மேலெழவைப்பது துவட்டலாகும். அதன்மூலம் நீரொட்டிய பொருள் நீரில்லாது போகிறது. எனவே உலர்கிறது. துவர்தலும் உலர்தலைக் குறிக்கும்.

துள்>தூள் வளர்ச்சியில் தூ(ள்)க்குதல்= உயர்த்துதல். ”முட்டுறு கவரி தூக்கி யன்ன” என்பது அகநா 156 ஆம் வரி. அசைத்தல் பொருளில் ”வாடை தூக்க வணங்கிய தாழை” - கலித்தொகை 128.2.  சட்டென அடிவயிறோ, உடம்போ மேலெழுவதைத் ”தூக்கிப் போடுகிறது” என வழக்குத்தமிழில் இன்றுஞ் சொல்வோம். பொதுவாகத் தூக்கிற்குத் தொங்கற் பொருளுண்டு. தொங்கவிடும் பொருளில் “மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி” எனும் அகநா 141 வரி வரும். சிலம்பு ஊர்காண் காதை 14.150 ஆம் வரியான “ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும்” என்பதற்கு விளக்கஞ் சொல்கையில் ”செந்தூக்கு, மதலைத்தூக்கு, துணிபுத்தூக்கு, கோயிற்றூக்கு, நிவப்புத்தூக்கு, கழாற்றூக்கு, நெடுந்தூக்கு எனப்படும் 7 வகைத் தாளங்கள்.சொல்லப்படும். ஒரு தட்டுக்கும் இன்னொன்றிற்கும் இடைப்பட்ட நேரத்தில் கையை மேலெழுப்புவதால், இது தூக்காயிற்று. 7 வகைத் தூக்கிலும் வெவ்வேறு கால எண்ணிக்கைகள் உண்டு..

அடுத்து து(ள்)ங்குதல்>தொங்குதலாவதும் தொங்கும் கிளையில் சாய்ந்து தொங்கியவண்ணம் துயிலுவது தூங்கலாயிற்று. தூங்கலின் பெயர்ச்சொல் தூக்கம். ஆதி காலத்தில் பூச்சி, பாம்பு, பட்டைகள் தீண்டாமல் துயில்வதற்கு நாராற்செய்த தொங்குபடுக்கை பயன்படுத்துவர். தொங்கலும் தூங்கலும் தொடர்புற்ற சொற்கள். இற்றைத்தூக்கம் தரையில், கட்டிலில் இருந்தாலும், தொடக்ககாலத் தூக்கம் தொங்கும் நார்ப்படுக்கையிற்றான். அதற்குத் தூள்>தூளி என்றும் பெயர். குழந்தையைத் தாலாட்ட நாட்டுப்புறங்களில் இன்றும் துணியால் (சேலையால்) தூளி கட்டுவர். ..

தூள்ந்தது தூணாகி மேலெழுந்தும் நின்று, கல், மர, மாழை, கற்காரைத் (concrete) தூண்களைக் குறிக்கும். தூணிற்கு இரு பொருள்களுண்டு. ஒன்று திரண்டது. இன்னொன்று குத்துக்காலாய் மேலெழுந்து நிற்பது. சொல்லின் வேர் மேலெழுந்து நிற்பதிற்றான் உள்ளது. அடங்கிப்போன விளக்குச்சுடரை மீண்டும் மேலெழ வைப்பதுங் கூடத் தூண்டலே. ”தூண்டு சுடரணைய சோதி கண்டாய்” - என்பது தேவாரம் .843 இல் வரும் தொடர். ”தூண்டா விளக்கின் வுடரணையாய்” என்பது திருவாசகம். 32:4. இன்னும்பல காட்டுகளை நூ.த.லோ.சு. வும், இரா.செ.யுங் கொடுத்திருக்கிறார். தூண்டென்ற சொல்

சங்ககாலத்திலேயே எழுந்திருக்க வாய்ப்புண்டு என்பதை மேலேசொன்ன மற்ற சொற்களின் வெளிச்சத்தில் உணரலாம். அடுத்தது தூண்டில். நீர்நிலைகளில் இருக்கும் மீன்களை மேலெழச் செய்யும் கருவி தூண்டில் (தூண்டு+இல்). இதுவும் சங்க காலத்தில் பழகியிருக்கிறது. தூண்டில் இருந்தால், தூண்டலும் புழக்கத்தில் இருந்திருக்குமே?

அரசகருமந் தொடர்பான குறிப்பிட்ட செய்தியை, ஓர் அரசன்/தலைவன் மற்றோர் அரசனுக்கு/தலைவனுக்கு அனுப்புவதும்/தெரிவிப்பதுங் கூட து(ல்)து>தூ(ல்)து (துல்லுதல்>துள்ளுதல் = முன்தள்ளுதல்) தூதென்ற அதிகாரமே திருக்குறளில் உண்டு. இது தொல்காப்பியத்திலும் பயிலும். இது வடசொல் என்பது அறியாதோர் கூற்று. மேலே சொன்ன அத்தனை சொற்களையும் ஒதுக்கிவிட்டுத்தான் அதை வடசொல் என்று கூறமுடியும். எதற்கெடுத்தாலும் சங்கதத்தை உதவிக்கு அழைப்போர் தனிப்பட்ட ஒரு சொல்லை மட்டுமே பார்க்கிறார். சொற்றொகுதியைப் பார்ப்பதில்லை. துல்லின் வழியெழும் சொற்கள் தூது மட்டுமல்ல, தொலைவு, தூரம் போன்றவையும் தான்.

நாம் இருக்கும் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடம் எவ்வளவு முன்தள்ளி யிருக்கும் எனும்போது துல்>தொல்>தொலை என்ற சொல்லும் துல்>துர்> தூர்>தூரம் என்பதும் இயல்பாக அந்தப்பொருளை உணர்த்தும். இதிலும் சிலர் தொலைவு தமிழ், தூரம் வடசொல் என்பார். (நானும் அப்படி ஒருகால் எண்ணியிருந்தேன்.) வேர்ச்சொல் பார்த்தால் இருசொற்களும் தமிழே என்பது புலப்பட்டுப்போகும். துல் எனும் வேர் இங்கிருக்கும் போது dhuur என்ற சொல் வடக்கே எப்படி எழுந்ததாகும்? ஏன் அவர் நம்மிடமிருந்து கடன்வாங்கக் கூடாதா? அப்படியோர் இயலுமையை நாம் ஏன் ஒதுக்குகிறோம்?  ”சேய்மை தூற்றாதே தூரவிடல்” என்பது நாலடி 75.

அன்புடன்,
இராம.கி.

No comments: