Friday, July 20, 2018

திருவள்ளுவராண்டு - 3

இனிக் குறள் 919 க்கு வருவோம். இக்குறள் பொருட்பாலின் அங்கவியலில் வரைவில் மகளிரென்ற அதிகாரத்தில் வருகிறது. இதைப் புரிந்துகொள்ளுமுன் பொருட்பால் என்பது என்னவென்று தெரிந்து கொள்ளவேண்டும். திருக்குறளின் மூன்று பால்களையும் உதிரியுதிரிக் குறள்களாய்ப் படித்துக் குறளின் தொகுதிப் பொருண்மையை நாம் உணராது விட்டுவிட்டோம். அற்றைக்கால அரசகுலத்தாருக்குச் சொல்லும் பொருட்பாலின் முதலதிகாரம் ”இறைமாட்சி”யில் முதற்குறளில் (குறள் 381),

படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.

என்றமைந்து அரசர்க்கான 7 உறுப்புக்கள் சொல்லப்படும். இங்கே கூல்>கூழ் என்பது 18 கூலங்களையும், அவற்றின் நீட்சியான பொன், செல்வப் பொருட்களஞ்சியத்தையும் (treasury) குறிப்பதால், ”வள்ளுவர் காலத்தில் நிலக்கிழமை (feudalism) தமிழகத்தில் இருந்தது” புலப்படும். இன்னுஞ் சொன்னால் வள்ளுவருக்கு முந்தைய சங்க காலத்திலேயே தமிழகத்தில் நிலக்கிழமை ஓரளவு தொடங்கி விட்டது. எனவே மேலையர் Burton stain ஐத் தொடர்ந்து, segmentary states என்று சங்ககால அரசுகளைச் சொல்வதிற் பொருள் இல்லை. ஓரரசிற்கு வேண்டிய இலக்கணமாய், குறளில் வரும் தேற்றக் கட்டுமானத்தை (theoretical construct), ”சப்தாங்கக்” கொள்கையை, “ஸ்வாம்ய மாத்ய ஜநபத துர்க கோஷ தண்ட மித்ராணி ப்ரக்ருதய” என்று குடிலர்நூலின் (அருத்த சாற்றம்) 6 ஆம் பொத்தகம், முதற் சொலவமுஞ் சொல்லும்.

அருத்த சாற்றம், குறளின் பொருட்பால் இவற்றிடையே உள்ள ஒற்றுமை வேற்றுமையை ஆராய்ந்தார் இதுவரை கிடையாது. அருத்த சாற்றம் உயர்த்தி, திருக்குறள் பொருட்பால் அதன் படியெடுப்பென ஆய்வின்றிச் சொல்வாரே மிகுதி. மேல்வரியிற் சொன்ன ”ஸ்வாமி, அமாத்ய, ஜனபத, துர்க, கோசம், தண்ட, மித்ர” எனும் 7 கூற்று வரிசையை ”இறை, அமைச்சு, நாடு (குடி), அரண், பொருள், படை, நட்பு” என்று திருக்குறள் சொல்லும். [ஜனங்கள் படியும் (பதியும்/வதியும்) ஜநபதம் எனும் வடசொல்லிற்கு நாடென்று பொருள். நட்டது நாடு. ”குடி, தானம், பட்டி, பட்டு, பதம், பாடி” போன்றவையும் ஒரு பொருட் சொற்களே.] திருவள்ளுவ மாலையில் வரும் போக்கியார் பாடல் 7 வகைப்பாட்டு அதிகாரங்களை வெண்பாவாய்ப் பட்டியலிடும். (இப்பாடலுக்குப் பாட வேறுபாடுகளுண்டு. பாவாணரின் “திருக்குறள் தமிழ் மரபுரையில்” வரும் பாடமே இங்கு எடுத்தாளப்படுகிறது.)

அரசியல் ஐயைந்து அமைச்சியல் ஈரைந்து
உரை நாடு அரண் பொருள் ஒவ்வொன்று - உரைசால்
படை இரண்டு நட்புப் பதினேழ் பன்மூன்று
குடி எழுபான்று ஒக்கபொருட் கூறு

அதாவது, பொருட்பால் 39 இலிருந்து 63 வரை (இறைமாட்சி, கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை, குற்றங்கடிதல், பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினஞ் சேராமை, தெரிந்துசெயல்வகை, வலியறிதல், காலமறிதல், இடனறிதல், தெரிந்துதெளிதல், தெரிந்துவிளையாடல், சுற்றந் தழால், பொச்சாவாமை, செங்கோன்மை, கொடுங்கோன்மை, வெருவந்த செய்யாமை, கண்ணோட்டம், ஒற்றாடல், ஊக்கமுடைமை, மடியின்மை, ஆள்வினையுடைமை, இடுக்கண் அழியாமை எனும்) 25 அதிகாரங்களில் அரசியலும்,

64 இலிருந்து 73 வரை (அமைச்சு, சொல்வன்மை, வினைத்தூய்மை, வினைத் திட்பம், வினைசெயல்வகை, தூது, மன்னரைச் சேர்த்தொழுகல், குறிப்பறிதல், அவையறிதல், அவையஞ்சாமை எனும் 10 இல்) அமைச்சியலும்,

74 இல் நாடும், 75 இல் அரணும், 76 இற் பொருள் செயல் வகையும், 77-78 இற் (படைமாட்சி, படைச்செருக்கு எனும்) படையும்,

79 இலிருந்து 95 வரை (நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீநட்பு, கூடாநட்பு, பேதைமை, புல்லறிவான்மை, இகல், பகைமாட்சி, பகைத்திறம் தெரிதல், உட் பகை, பெரியாரைப் பிழையாமை, பெண்வழிச் சேறல், வரைவில் மகளிர், கள் உண்ணாமை, சூது, மருந்து என்பவை இந்த அதிகாரங்கள்) 17 இல் நட்பும் ஆக

57 அதிகாரங்களில் ஏழுறுப்புக் கொள்கை சுருங்கப்பேசப்படும். இதன்தொடராய் 96 இலிருந்து 108 வரை (குடிமை, மானம், பெருமை, சான்றாண்மை, பண்புடைமை, நன்றியிற் செல்வம், நாணுடைமை, குடிசெயல்வகை, உழவு, நல்குரவு, இரவு, இரவச்சம், கயமை எனும்) 13 அதிகாரங்களிற் குடியெழும் வகை பேசப்படும். ஒழிபியல் என்பது அர்த்த சாற்றத்தில் இல்லாத, வள்ளுவச் சிறப்பாகிறது

வரைவில் மகளிர் என்பது நட்பு வகைப்பாட்டின் கீழ் ஏழுறுப்புக் கொள்கையிற் பேசப்படுகிறது. அரசரும் அரசரைச் சேர்ந்தவரும். இன்னின்ன வகையில் நட்பு தொடர்பாய் நடந்துகொள்ளலாம் என்பது இங்கே உரைக்கப்படுகிறது. அதில் வரைவில் மகளிரின் நட்பு பூரியர்களுக்குக் கூடாத நட்பென்று குறள் சொல்கிறது. 

வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு

இங்கே கள் எனும் விகுதி பூரியருக்கேன் வந்தது? பூரியரென்பார் யார்? - என்ற கேள்விகள் எழுகின்றன. துறவறவியலின் முதலதிகாரமான அருள் உடைமையின் முதற்குறளிலும் (241) ”பூரியர்” என்ற சொல் பயிலும்.

அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியர் கண்ணும் உள.

இதே போல், பரிபாடல் ஆறில் 46-50 ஆம் வரிகள் பூரியர் பற்றிச் சொல்லும்.

மாறுமென் மலரும் தாரும் கோதையும்
வேரும் தூரும் காயுங் கிழங்கும்
பூரிய மாக்கள் உண்பது மண்டி
நார் அரி நறவம் உகுப்புநலன் அழிந்து
வேறா கின்றுஇவ் விரிபுனல் வரவென

புல்>புர் என்ற வேர்ச்சொல் பொருத்தல், பெருத்தல்/மிகுதியாதல்/உயர்தல், துளைத்தல்/புகுதல்/நிறைத்தல் என்ற பொருட்களைக் கொண்ட பல சொற்களுக்கு அடிப்படையாகும். இவற்றில் எது இங்கே சரி வரும்? முதல் இரண்டும் பொதிவுப் (positive) பொருள் கொண்டவை, கடைசி மட்டுமே நொகைப் (negative) பொருளானது. (13 இற்கு முந்தைய நூற்றாண்டுகளைச் சேர்ந்த) மணக்குடவரும், (13 ஆம் நூற்றாண்டுப்) பரிமேலழகரும், இவருக்கும் பின் வந்த உரையாசிரியரும், ”கீழ்மக்கள்” எனும் நொகைப் பொருளையே பூரியருக்குச் சொல்வர். பல தமிழ் அகராதிகளிலும் ”இழிந்தவர், கொடியவர்” என்றே சொல்லப்படுள்ளது.  "சீரியன வுள்ளிப் பூரியன மறத்தல் வேண்டும்" என்பது. குறள் 1206 க்கு மணக்குடவர் உரையில் வரும் ஒரு வாசகம். பூரியர் என்பவர் இழிந்தவரென்று இங்கு பொருள் கொள்ளப்படுகிறார். "பூரியரேனும் தம்மைப் புகல் புகுந்தார்க்குப் பொன்றா ஆருயிர் கொடுத்துக் காத்தார்" என்பது கம்ப ராமாயணத்தில் யுத்த காண்டம் வீடணன் அடைக்கலப் படலம் 116 ஆம் பாடலில் வரும் ஒரு வரி. இங்கேயும் பூரியர் என்பது இழிந்தவரென்ற பொருளிலேயே வருகிறது.
.
ஆனால் ”புரையிலாப் பூரியர்” என்கையில் புரையும் பூரியரும் ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையவை என்பது புரிகிறதல்லவா?, அவற்றை மாற்றிக்காட்ட ”இலா” என்ற சொல்லவந்ததும் புரிகிறதல்லவா?. 241 ஆம் குறளில் ”பொருட் செல்வம் பூரியர் கண்ணும் உள” என்பதால் பூரியருக்குக் ”கீழ்மக்கள்” என்ற பொருள் எப்படிப் பொருந்தும்? பரிபாடல் வரிகளில் “பூரியர் உண்ணும் பொருள்கள் மண்டி வருவதால், சூடிக் களைந்த பின் வாடிப் போன மலரும், ஆண்கள் அணியும் தாரும், பெண்கள் அணியும் கோதையும், வெட்டிவேர் போன்ற மண வேரும், மணமுள்ள தூருங், காயும், கிழங்கும், நார்களோடு உகுக்கும் மணம் அழிந்து உடன் வருவதாய் வைகையின் விரிபுனல் விவரிக்கப்படும். அப்படியானால் இந்நிலையைக் வறுமையான கீழ்மக்கள் ஆக்கியிருக்க முடியுமோ? பெருஞ்செல்வர் உண்ணும் பண்டங்கள், நீர்மங்கள், தேறல் வகைகள் ஆகியவை கூடி ஒருவகை வெறிய (alcohol) நாற்றம் அந்தக் கரையில் எழுந்து ஆற்றுநீரில் அது கூடிப்போனதாக அல்லவா எண்ண வேண்டும்? அப்போது பூரியருக்கு என்னபொருள் அமையும்? பெருஞ்செல்வர் என்பது தானே? (பரிபாடல் இல்லையேல் எனக்கும் பொரூள் புரிந்திருக்காது. பல உரையாசிரியரும், அகரமுதலியரும் தடுமாறிப் போன சொல் இதுவாகும்.)

புல்>புர்>பர்>பரு>பெரு என்ற திரிவு பருத்தல், பெருத்தல் வினைகளையும், புல்>புர்>புரம் என்பது பெருத்த, உயரமான வீடுகளையும், அவை நிறைந்த நகரையுங் குறிக்கும். கவாடபுரம், திருவனந்தபுரம், காஞ்சிபுரமென்ற சொல்லாட்சிகளைக் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். எத்தனை எத்தனையோ புரங்கள் தமிழ்நாட்டிலும், இந்தியத் துணைக்கண்டம் எங்கினும் உள்ளனவே? புர், பூர் என்றும் புரி என்றும் திரிந்து இன்னும் பல்வேறு கணக்கற்ற நகரங்களைக் குறிக்குமல்லவா?. புரிதலுக்குப் பெருத்தல்/உயர்தல் பொருள் போக வளைதற் பொருளும் உண்டு. புரமென்பது கோட்டையிலாப் பெருநகரையும், புரி, என்பது கோட்டையுள்ள நகரையுங் குறித்துப் பின் இரு சொற்களும் தம்முள் குழம்பியும் போயின. இதேசொல் சங்கதத்திலும் எடுத்தாளப்பட்டது..இந்தையிரோப்பிய நாடுகளுக்கும் பரவியது burg burgh, bury என்று முடியும் நகர ஈறாகவும் மாறியது. (Brandenburg, Magdeburg, Edinburgh, Hamburg, Strasburg, Canterbury என்ற இரோப்பிய நகரங்களை எண்ணுங்கள்) வடக்கே பல பூர்கள், புரிகள் உள்ளன. புரங்களைக் கொண்ட அகன்ற பரப்புக் கூட borough என்று அழைக்கப்பட்டதும் உண்டு. புரம், பூர், புரிகளிலிருந்த பெருஞ்செல்வரைப் பூரியர் என்றழைப்பது முற்றிலுஞ் சரி. இதே பொருளில் தான் bourgeois என்றசொல் மேலைமொழிகளில் ஆளப்படும்.
       
bourgeoisie (n.) 1707, "body of freemen in a French town; the French middle class," from French bourgeois, from Old French burgeis, borjois (12c.) "town dweller" (as distinct from "peasant"), from borc "town, village," from Frankish *burg "city" (see borough). Communist use for "the capitalist class generally" attested from 1886.

ஆகப் பூரியர் என்பார் கடைசியிற் பார்த்தால் ஆங்கிலத்திற் சொல்லும் bourgeoisie தான். (நம்மூர் இடது சாரிகள் எவ்வளவு ஆண்டுகள் இதையறியாது அவர்நூல்களிற் பூர்ஷுவாக்கள் என்றே எழுதி இருப்பார்? தமிழிலக்கியம் படிக்காமல் வெறும் வறட்டுத்தனமாய் “தத்துவம்” பேசினால் எப்படி? இப்படிப் பேசித்தானே Burten stein- ஐப் பின்பற்றி, கா.சிவத்தம்பியைப் பின்பற்றிச் சங்க காலத்தை segmentary states காலம் என்று நம்மூர் இடதுசாரியார் சொன்னார்? தமிழகத்தில் CPM/ தமிழ்த்தேச மா.லெ. வேறுபாடு ஏற்பட்டதில் இதுவும் ஒன்று தானே? தமிழர் வரலாற்றை ஒழுங்காய்ப் புரிந்து கொண்டிருந்தால் தமிழகத்தில் பொதுவுடைமையர் இவ்வளவு பின்தங்கியிருக்க மாட்டார்.) இப்போது மேலுள்ள 2 குறள்களையும், பரிபாடலையும் படியுங்கள். சரியான பொருள் சட்டென்று வந்து வீழும். வள்ளுவர் பேசுவதும் புரியும். 2 குறள்களின் பொருளை மட்டும் இங்கே கொடுத்துள்ளேன்.

மாணிழை அணிந்துகொண்ட வரைவில் மகளின் மென்மையான தோள், பெருமையில்லாத (புரையிலா) பூரியர்கள் ஆழுகின்ற சேறு. (தோளில் அழுந்துவதாகவே தழுவுதலைக் கூறுவோம். இங்கே பூரியர் என்பது பெருஞ் செல்வரை மரியாதையோடு குறிக்குஞ் சொல். பூரியர்கள் என்பது மரியாதையோடு கூடிய பன்மைப் பெயர்ச்சொல். பூரியர்கள் என்பது இரட்டைப் பன்மையல்ல.)

செல்வங்களில் எல்லாம் செல்வம் அருட்செல்வம். பொருட்செல்வங் எல்லாப் பூரியரிடமும் உள்ளது. (இங்கே ஒருமை/பன்மை விகுதியில்லாப் பொருட் செல்வம் ”உள” என்ற பன்மை வினையைப் பெறுகிறது. இதுவும் இலக்கண வழக்கை மீறியது தான். ஆனால் பேச்சுவழக்கில் இருந்திருக்கவேண்டும். எனவே வள்ளுவர் பயன்படுத்துகிறார்.)

அன்புடன்,
இராம.கி.

பி.கு. அடுத்தது கட்டியப் பின்னொட்டுக்கள் (Conditional Suffix) பற்றியும், நொகை உருபுகள் பற்றியும் எழுதுவேன். இதைப்பற்றியும் திரு.கமில் சுவலபில்லும், திரு.ஆச்சாரியும் பேசியிருக்கிறார். வள்ளுவர் ஏதோ தன்கால மரபில் இல்லாதபடி ஏதோ புதிதாகச் செய்துவிட்டாராம்!

No comments: