Wednesday, July 04, 2018

சாத்தன் - 1


”சாத்தன் என்ற சொல் தமிழா?” என்றும், ”இதற்கும் மேலை நாகரிகத்தில் சொல்லப்படும் சாத்தானுக்கும் தொடர்புண்டா?” என்றும் முகநூல் சொல்லாய்வுக் குழுவில் ஒருமுறை கேட்கப்பட்டது. இதன் மறுமொழியை சட்டெனச் சொல்ல முடியாது. பழங்குடிகளின் தொழிற்பிரிவு, சாதி/வருணத் தோற்றம், தமிழ்/சங்கத ஊடாட்டமெனப் பலவும் சொன்னால் தான் ”சாத்தனின்” ஆழம் புரிபடும். 

சாத்தான் தொடர்பு வேறு வழிப்பட்டது. ஏற்கனவே. தப்பும் தவறுமாய் நம்மைச் சுற்றியும், இணையத்திலும் ஏராளம் சொல்லப் பட்டுள்ளது. இவற்றையும் மீறி ஒழுங்குறப் புரிந்து கொள்ளப் பெருமுயற்சி தேவை. மெதுவாய்ப் படித்து, அசை போட்டு ஓர்ந்து பார்த்துப் புரிய வேண்டும், சாத்தனைத் தனிவாணிகன் என்றும் வணிகக்கூட்டத்தில் ஒருவனென்றும் 2 விதங் காணலாம். 

வணிகத்தையும் 2-ஆய்ப் புரிந்துகொள்ளலாம். வாணியம்/வாணிகத்தின் குறுக்கம் என்பது ஒன்று. பண்ணியம்/பண்ணிகம்>பணிகம்> வணிகம் எனுந் திரிவு இரண்டாவது. ’பண்ணிகத்தை’ விட ’வாணியம்’ மாந்தர் சிந்தனையில் முந்தையது. இவற்றைப் புரிந்துகொள்ள, பழந்தமிழர் குமுகாயப் பழக்கங்களை நாம் அறியவேண்டும்.

புதுக் கற்கால நாகரிகத்தில் வெவ்வேறு இனக்குழுக்களாய் (பொ..உ. மு 2000 க்கும் முன்னர்) .குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனத் திரிந்த காலையில், கூர்த்த கல்முனை கொண்ட சூலம்/வேல் போன்றவற்றால் விலங்குகளை வெட்டித் தின்றதும். மீன்களைக் குத்திக் கொன்றதும் போக, குழுக்கள் தம்மிடையேயும் சண்டை/போட்டி போட்டுக்கொண்டார். பிழைபட்டுச் சரி செய்யும் முறையில் (trial and error) செம்பும், இரும்பும் ஆக்கும் நுட்பத்தைக் கற்றதால், கல்முனைகள், பொ.உ.மு. 2000 க்கு அருகில், மாழை முனைகளாய் மாறி, மாந்த நாகரிகத்திற்குப் பெரும் உந்தலைக் கொடுத்தன. விலங்கு வேட்டையிலும், மாற்றாரை வெல்வதிலும் வெற்றி கூடின. ஒவ்வோர் இனக் குழுவினரும் அவரவர் புழங்கும் நிலம் அவரவர்க்கே சொந்தமென உரிமை பாராட்டத் தொடங்கினர். தனிச்சொத்து கூடக்கூடக் குழுக்களின் கட்டமைப்பு, குறிப்பாக அவர்களின் இருப்பை உறுதிசெய்யும் பாதுகாப்புக் கட்டமைப்பு இன்னும் அகன்று, இறுகியது; அதிகாரம் கூடியது.

சூலம்/வேலுக்கு அடுத்ததாய்த் தென்னக மேற்குக்கடற்கரை நெய்தலிலும், அதையொட்டிய குறிஞ்சியிலும் வில்/அம்பு ஆயுதம் எழுந்தது. (வில்லடையாளம் சேரருக்கு.) விலங்குகளையும், வேற்று மாந்தக் கூட்டத்தையும் அருகிற் சென்று கொல்வதினும் தொலைவில் நின்று, வில்லை வளைத்து, அம்பெய்திக் கொல்வது இன்னும் நேர்த்தியானது என்று ஒருவேளை நினைத்தரோ?!? தெரியாது.! தம் குழுவின் இழப்பைக் குறைத்து, மாற்றாரின் இழப்பைக் கூட்டப் பழந்தமிழருக்கு வில்/அம்பு உறுதியாய் வகைசெய்தது. இதற்கப்புறம் நேரடிச் சண்டையிற் கொலை செய்யச் சூலம்/வேலை விட செம்பு/இரும்பால் ஆன அரிவாள்/கத்தி வாகாய் ஆனது. (ஆதிச்சநல்லூரின் செம்பும், கொங்கின் இரும்பும் ஆயுதம் நாடி உருக்கப்பட்டதை ஆய்வாளர் மறவார். ஆதிச்ச நல்லூரின் காலம் பொ.உ.மு.2000க்கும் முந்தையது. இரும்பு செய்தது பொ.உ.மு.2000/1200 ஆக இருக்கலாம். கொங்கில் இரும்பு, தங்கம், மணிகள் என்பவற்றிற்கே தமிழக இனக்குழுக்கள் தொடர்ந்து மோதின.)

இம்மோதல்களின் முடிவில் சேர, சோழ, பாண்டியப் பெருங்குடிகள் எழுந்தன. இவற்றுள் வேளிரும் பிறரும் ஆன இனக்குடிகள் கொஞ்சங் கொஞ்சமாய் கரைந்து போனார். சேர, சோழ, பாண்டியர்க்கு முன் கணக்கற்ற இனக் குழுக்கள் தமிழகத்துள் இருந்திருக்கும். அவற்றின் பாதுகாப்பைக் கவனிக்க அக்குழுக்களுள் மூவேறு வகையார் விதப்பாய் எழுந்தார். 

ஆயுத வழி பார்த்தால் முதல்வகையாரைச் சூலத்தார் (= வேலார்) என்றும், இரண்டாம் வகையாரை வில்லியர் (=அம்பார்) என்றும், மூன்றாம் வகையாரைக் கத்தியர் (=அரையர்) என்றும் அழைக்கலாம். முதல்வகையார் மிகநிறைந்தும், அடுத்தார் குறைந்தும், மூன்றாமவர் மேலுங் குறைந்தும் இருந்திருக்கலாம். எண்ணிக்கை குறைந்த பெருமானரின் (இவர் ஏதோ வடக்கிருந்து வந்தார் என்பது ஒருதலைச் செய்தி. இங்கிருந்த பெருமானரோடு வந்து சேர்ந்தவர் இணைந்து கொண்டார் என்பதே உண்மை) ஓர்தலோடு கிழார்/அரயர்/மன்னர்/வேந்தர் அரசியலதிகாரம் பெற்றார். வேட்டையிலாக் காலங்களில் இனக்குழுவின் பொதுக்கடன்களை அந்தந்தக் குழுவின் சூலத்தார்/வேலார் கவனித்தார். குறித்தவிடத்தில் ஓர் இனக்குழு தண்டுற்று உறைகையில், எல்லை தாண்டி மற்ற இனக்குழுக்களோடு சிறு பொருதல்களையும், விலங்கு கவர்தலையும் வில்லியரே செய்தார்.
------------------------------------
இங்கோர் இடைவிலகல். சங்கதம் கத்தியரைக் கத்ரியர்>க்ஷத்ரியர் என்றாக்கும். (தமிழில் நாம் அவரை அரயர்>அரசர் என்போம். வேறு வகையில் கத்தியின் இன்னொரு வடிவான வாளைக் கொண்டு வாள்மர்> வார்மர்>வர்ம என்றும் சங்கதம் கையாளும்) இதே போல் வித்தையரை/விச்சியரை சங்கதம் விசையர்/வைசியர் என்றாக்கும்.(தமிழில் நாம் அவரை வாணிகர் என்போம்.) சூலத்தரைச் சங்கதம் சூல்த்தர்/சூத்தர்/சூத்ரர் என்றாக்கும். (தமிழில் வேலரை வேல்>வேள்>வேளாளர் என்போம்.). ”வேலைப் பகிர்வில்” தொடங்கிய தொழிற் பிரிவு நெடுங்காலங் கழித்து, பொ.உ.300 இல் குப்த அரசின்காலத்தில் இந்தியா எங்கணும் அகமுறைத் திருமணத்தால்/ பிறப்புமுறைப் பிரிவால் நிலைப் படுத்தப் பட்டது. முட்டாள்தனமான சாதி/வருணத் தோற்றம் நம்மூரில் இப்படி எழுந்ததே.

சங்க காலத்தில் அகமுறைத் திருமணங்கள் மிகக் குறைவு. சங்க இலக்கியத்தில் கற்பிலும் மேலாய்க் களவே கொள்ளப்பட்டது. இன்றுங் கூட அகமுறைத் திருமணம் ஒழிந்தால் (காதல் திருமணங் கூடினால்) தமிழ்க் குமுகாயத்தில் சாதி/வருணம் என்பதே இல்லாது போகும். அப்பன் வேலையை மகன் செய்வது இன்று மிகக் குறைந்து போனது. ஆனாலும் வருக்கத் தாக்கம் அழியவில்லை.) 

பழந்தமிழ்க் குடிகளிடம் ஏற்பட்ட அதே தொழிற்பிரிவு தமிழகம், வட இந்தியா, உலகின் மற்ற குடியினர் என எல்லோரிடமும் இருந்தது. அவரவர் கையாண்ட பெயர் வேறாகலாம். ஆனால் கருத்தீடு என்பது ஒன்றே. நால்வகையார் இருந்த குழுக்கள் பெருகி பல்வேறு சண்டைகளில் ஒரு குழு இன்னொன்றிற் கரைந்து அதிகாரக் கட்டுமானம் கூடிக் கிழார், அரயர் (>அரசர்), மன்னர், வேந்தரென மேலும் இறுகியது. வேந்தர் சங்க காலத்திலேயே வந்துவிட்டார்.
---------------------------------------.     
நாளா வட்டத்தில் அடுத்த இனக்குழுக்களுடன் எப்போதுமே போர் செய்ய முற்படாது, சில போது ஒன்றுகூடி உறவாடிப் பேசி, தம் பொருள்/பண்டத்தை மாற்றார் பொருள்/பண்டத்திற்கு மாற்றி வரவும் வில்லியர் முற்பட்டார் கொஞ்சங் கொஞ்சமாய் இனக்குழுக்களிடையே பொருதுகள் குறைந்து, பேச்சும், உறவுங் கூடின. இதனால் ஏற்பட்ட பண்டமாற்றில் சில குறிப்பிடத் தக்க வில்லியர் இன்னும் விதந்த திறம் பெற்றார். வில்லறிவு, இங்கு வில்+தை= விற்றை>வித்தை>விச்சை எனச் சொல்லப்படலாயிற்று. 

வில்லியர், வித்தையர்> விச்சையரென்றும் சொல்லப்பட்டார். வில்+தல் விற்றலாயிற்று. விற்றையும் விற்றலும், (போர்த்திறமை, பண்டமாற்று என்ற) 2 வேறு வில்லியர் செயல்களையுந் தொடக்கத்திற் குறித்தன முடிவில் தகரம் பயின்ற சொல் போர்த் திறமையையும், றகரம் பயின்ற சொல் பண்ட மாற்றையும் குறிக்கத் தொடங்கிற்று. (இம்மெய்வேறுபாட்டை இன்றும் நாம் பயில்கிறோம்.) வில்லியருக்கு இன்னொரு பெயரும் அவர் கையாண்ட, சிறுவுருவங் கொண்ட கூர் அம்பு/வாளி/வாணியால் ஏற்பட்டது. வில்லியர் என்பார், வாணியர் என்றும் இங்கு சொல்லப்பட்டார். பண்டமாற்று வேலைக்கு வாணியம்>வாணிகம் என்ற விதப்புப் பெயர் உருவானது. [ஆங்கிலத்தில் இவரை trader என்பார்.]

2 ஆம் வகை வளர்ச்சியாய்ப் பிற்காலத்தில் இயல்பொருள்களின் மேல் மாந்தவுழைப்பைச் செலுத்தி நெளிவு சுளிவு, சுவை, நேர்த்திகளைக் கூட்டிப் பயனுறப் பண்ணும் நுட்பம் சிச்சிறிதாய்ப் பிழை பட்டுச் சரி செய்வதாய் எழுந்தது. பண்ணல் பழகாக் காலத்தில் உலர்ந்து வறண்டு, சருகாகிய (உப்புக்கண்டம், கருவாடு, தோல், எலும்பு, கொம்பு, உலர்காய்கள், இலைகள், பயிர்கள், கூலங்கள் போன்ற வறள்/ வறைப் பொருள்களையே மாந்தர் பரிமாறிக் கொண்டார். இப்பரிமாற்றமே வாணிகம் எனப்பட்டது. பின்னால் பண்ணல் பழகிய காலத்தில் பண்ணம்>பண்டம் என்ற சொல்லும், பண்ணிகம்> பணிகம்> வணிகம் (= பண்ணி விற்பது; manufacture and sale) என்ற சொல்லும் எழுந்தன. முடிவில் வாணிகம், வணிகமென்பன ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தன. அவற்றின் வேறுபாட்டை இன்று நாம் உணர்வதில்லை.

விற்றலிற் கிளைத்த சொல் விலை. இதையொட்டிய கூட்டுச்சொற்களும் தமிழிலுண்டு. எல்லோருமறிய விலை பகர்வது பகர்ச்சி (=price). விலை ஏல்த்துவது ஏற்றல்/ஏலம். இந்தையிரோப்பியனில் கீழே சொல்லப்படும் சாலும் ஏலும் கலந்து sale ஆகும். வில் கொண்டு விற்பென்றுஞ் சொல்வோம். விற்பிப்பது விற்பனை. விலை படியும் வரை, நிறையும் வரை, சாலும் வரை பரக்கப் பேசுவது சால்+தல்= சாற்றல்/ சாத்தலாயிற்று. சால்தல், விற்பனையாளருக்கு இருக்க வேண்டிய இயல்பு. சாத்தல் தொழில் செய்வோன் சாத்தன். இன்னொரு பக்கம் வில்லால் வேட்டையாடும் தொழிலில், வில்லிற் சிக்கியது (அங்கியது)/ வில்லால் அழிப்பது விலங்கு. (பாணிக்கிற/அசைகிற காரணத்தால் சங்கதத்தில் அதைப் ப்ராணி என்றார். உய்கின்ற/மூச்சு விடுகின்ற காரணத்தால் தமிழில் உயிரி.) ஓரிடத்தின் எல்லையை அம்பு தைத்து அக் காலங் குறித்ததால், வில்லால் அங்கப்பட்ட (உறுப்பாக்கிய) நிலம், முன்னுரிமையைக் குறிக்கும். தற்கால வில்லங்கப் பொருளும் வில்லடி, வில்லடை போன்றனவும் தொடர்புள்ள பொருள்களைக் குறிக்கும். வில்லியரின் பண்டமாற்றில் நடக்கும் கூடல், சொல்லல் குறித்தே மேற்சொன்ன ”சால்” எனும் வினையெழும். அகரமுதலிகளில் ”சாலுக்கு” 2 வகைப் பொருள்சொல்வர். முதல் வகை நிறைதல், பொருந்தல், முற்றல், மாட்சி பெறுதல் என்பதாகும். இரண்டாம் வகை விளம்பரப்படுத்தல், விரித்துரைத்தல், சொல்லல், நிறைத்தல், அடித்தல், புகழ்தல், அமைத்தல் போன்றவையாகும்.

முதற்சொல் சால்> சார்> சார்தலெனத் திரியும். 2 ஆவது சால்+தல்/சாற்றலாகும். அணிதல், தரித்தல், பூசுதல் என்பது சார்த்தலாகும். மனம் நிறைதலுக்கு/ அமைதியடைவதற்கு ஆடுங் கூத்து சா(ர்)ந்திக் கூத்து. ஏற்கனவே கல்யாணமாகி, 60 அகவை நிரம்பியவன் மனைவியோடு மீளத் திருமணஞ் செய்வது சாந்திக் கல்யாணம். இளம் ஆணும் பெண்ணும், திருமணத்தின்பின் கூடுவதும் சாந்திக் கல்யாணமே. சார்= கூடுகை. சார்தல்= சென்றடைதல், புகலடைதல், அடுத்தல், பொருந்தியிருத்தல், சார்பெழுத்து = முப்பது தலையெழுத்துக்களைச் சார்ந்த குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம். சால்= நிறைவு; சால்பு= மேன்மை, சான்றாண்மை, தன்மை, மனவமைதி; சாலை= ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குக் கூட்டிச்சொல்லும் பாதை. சான்றார்/சான்றோர்= (நற்குணங்கள்) நிறைந்தவர். சாதுவன்= நல்லவன், ஐம்புலன் அடக்கியவன், அருகன், ஆதிரை கணவன்; சாந்தன்= அமைதி யுடையோன், அருகன், புத்தன்; சாந்தி= அமைதி, தணிவு, மேல் சா(ர்)ந்தி= மேலேயுள்ள ஐயனார் கோயிலில் பூசைகளைச் செய்கிறவன்.

பலரறிய வெளிப்படச் சொல்லலால் சாற்றல்/ சாத்தலுக்கு வேதமென்ற பொருளும் உண்டு. வேதத்தின் இறைச்சிப் பொருள் கருதி மறையென்பார். (நாளாவட்டத்தில் வேத முடிவான வேதாந்தம், தருக்கம் போன்ற நூல்களும் சாற்றமாயின. சாற்றம்> சாத்தம்> சாத்ரம்> சாஸ்த்ர என்று சங்கதத்தில் வரும். சாஸ்த்ரம் தெரிந்தவன் சாஸ்த்ரி. பெருமானரிற் படித்தவன். இவனே சால்மன்> சார்மன்> சர்மனும் ஆனான். படித்தவன் என்பது பொருள். ”முதலிற் சொல்வது, அடுத்தது, அடுத்தது” என வெவ்வேறு தோத்திரங்களையும், பாசுரங்களையும் பெருமாள் கோயிலிற் சொல்லும் முறைக்குச் சாற்று முறை என்று பெயர். சால்ந்ததை, நிறைந்ததை, முடிந்ததைச் சொல்வது சான்றானது. இதைச் சால்க்கு>சாக்கு என்றுஞ் சொல்வர். சால்க்கைச் சொல்பவன் சால்க்கி> சாக்கி. சங்கதத்தில் இது சாக்ஷியாகும். முடிக்கத் தகுந்தது சால்த்த>சார்த்தத் தகுந்தது எனப்படும் சாத்து> சாத்தியம் இப்படி எழுந்ததே. “இப்படி நடக்கக் கூடுமா? இது சாத்தியமா?” எனும் போது உள்ளிருப்பது சாலெனும் வினையடியே. 

சாத்தவன்/சாத்தன் = வாணிகன், ஐயனார், அருகன், புத்தன், வாணிகக்கூட்டத் தலைவன். சாத்து = வணிகர் கூட்டம். ஐயனார் கோயில் பூசாரி சாமியாடி எதிர் காலம் பற்றி ஏதேனுஞ் சொல்வான் ஆனால் அவனும் சாத்தன் எனப் படுவான். ஐயனார் கோயில் சாத்தன் சாமி (இதையே பழந்தமிழ் இலக்கியம் அணங்கு என்னும்) ஆடுவான். சாலினி= தேவராட்டி, சாமியாடும் பெண்பூசாரி. குறிப்பிட்ட காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின் பலவிடங்களில் வேதநெறி ஏற்க அரையர் தயங்கினர். பொ.உ.மு.800-500 களில் மேதமறுப்பு வடக்கே பெரிதாகிப் போனது. அற்றுவிகம் (=ஆசீவிகம்), செயினம், புத்தம் என்ற மூன்றும், இவைகளுக்கு முந்தைய சாங்கியம், விதப்பியம் (வைஷேஷிகம்), சாருவாகம் (உலகாய்தம்), ஞாயம் (ந்யாயம்) போன்றவையும் வேதமறுப்பு நெறிகள் என்பார். இவற்றை முதலில் வாணிகரே பெரிதும் புரந்தார். பின் அரசரும் சேர்ந்துகொண்டார். வடமேற்கிருந்து வந்த வேதருக்கு இந்தியக் கிழக்கில் புரவலர் குறைந்ததால், வேறு வழியின்றி தெற்குநோக்கி வரத் தொடங்கினார்.

அன்புடன்,
இராம.கி.

2 comments:

குமரிமைந்தன் said...

வெறும் சொல்லாய்வை அதிலும் வலிந்துரைக்கப்பட்ட சொல்லாய்வை வைத்து வரலாற்றைக் கணிக்க முடியாது. அது பல்துறை சார்ந்த ஓர் ஆய்வுக் களம்.

இராம.கி said...

நான் அப்படி நினைக்கவில்லை. சொல்லாய்வோடு, தேவையான மற்ற புல உண்மைகளை வைத்துத்தான் இக்கட்டுரை எழுதியுள்ளேன். முழுத் தொடரையும் அருள்கூர்ந்து படியுங்கள். அங்கங்கே, சங்க இலக்கியக் கூற்றுகளையும், நீங்கள் சொல்கின்ற பல்துறைத் (குறிப்பாக மாந்தவியல்) தேற்றுக்களயும் ஊடே இட்டால்தான் என் கட்டுரையை ஏற்பீர்கள் என்றால், இந்தக் களம் உங்களுக்குப் பொருந்தாது ஐயா. பல்துறைகளை அறியாது நான் எழுதுவதிலை. நான் அடிப்படையில் தமிழாசிரியனில்லை. நான் வேதிப் பொறிஞன். மானகை அறிவியலைப் (management science) படித்தும், ஒழுகியும் அறிந்தவன். 5000 பேரைக் கட்டி மேய்த்து பெரும் வேதிப்பொறியியல் தொழிற்கூடங்களைக் கட்டியவன். சாத்து, வணிகம் போன்றவற்றை பெருமளவில் செய்து பார்த்தவன். மாறகைப்பில் (marketing இல்) ஊறியவன். பட்டறிவும் வரலாற்றறிவும் இல்லாது நான் இக்கட்டுரை எழுதவில்லை. இருப்பினும் நாம் வேறுபடுகிறோம் என்று அமைவோமே? நீங்கு இங்கு வந்து உங்கள் கருத்தைத் தந்தற்கு மிக்க நன்றி.