Tuesday, May 02, 2023

Crankshaft

அறிவியல் படிக்கவேண்டுமெனில் ஆங்கில வழி மட்டுமே படிக்க முடியும் என்று சொல்ல விழைவோர் அருள்கூர்ந்து ”குறங்கு” என்ற சொல்லின் விதப்பை (speciality) ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.
குறங்குதல் = ஒரு தண்டு/கயிற்றின் மூலம் உருளையைச் சுழற்றுதல்.
பம்பரத்திற் கயிறிட்டு அதை இழுத்துச் சுழற்றுகிறோமே, எப்படி?. மிதிவண்டி பயிலும் சிறார், வண்டியின் உயரம் கூடின், முக்கோணச் சட்டத்துள் கால் கொடுத்துக் குறங்கு அடிப்பாரே (crank pedal), அது எப்படி? இடுப்பெலும்பின் கீழே மூட்டிச் சேரும் தொடையெலும்பைத் தசையாற் புரட்டித் திருக (turn) முடிகிறதே? தோளோடு மேற்கை சேரும் மூட்டிலும் திருக்கை (torsion) ஏற்படுத்த முடிகிறதே? அது எப்படி? ஊர்க்கேணிகளில் இராட்டினக் கயிற்றின் ஒரு பக்கத்தில் நீர்வாளியும், இன்னொரு பக்கத்தில் கையிழுப்பும் சேர்கையில், ஒவ்வோர் இழுப்பிலும் இராட்டினம் உருள, அதன்வழி, குறிப்பிட்ட உயரத்திற்கு நீர்வாளி எழுவது எப்படி?.கை மாற்றி அடுத்த கையால் கயிற்றைக் குறுக்கி இச்செயலைத் தொடர்வது எப்படி?
ஒரு பக்கம் நேர்விசையை கொண்டு இன்னொரு பக்கம் சுழற்றுவதை பழந்தமிழர் குறங்குதல் என்பார். (linear motion is converted to circular motion).குறுதல் = மேலிழுத்து வாங்குதல் to pull up. 'கயிறு குறு முகவை” (பதிற்றுப் பத்து. 22:14)
[குறுதல், குறங்குதல் என்பது நம்மிடம் இருந்த 2000 ஆண்டுச் சிந்தனை. குறங்கு என்ற சொல் crank எனச் செருமானிய மொழிகளிற் பயில்வதை ஆங்கிலச் சொற்பிறப்பு அகரமுதலிகள் crank (n.) "handle for turning a revolving axis," from Proto-Germanic base *krank-, and related to crincan "to bend, yield" என்று பட்டறிவு தெரியாமற் கூறும்.
நாமோ குறங்கைத் தொலைத்து கிராங்சாவ்ப்ட்டு என்று இப்பொழுதெல்லாம் எழுதுகிறோம். குறங்கு என்ற சொல்லையே நாம் மறந்து விட்டோம். தொடையியக்கம், தோளியக்கம், பம்பரம், குடைராட்டினம் போன்ற பட்டறிவுகளை எல்லாம் மறந்து, இது ஏதோ மேலை அறிவியல் நமக்குப் புதிதாய்ச் சொல்லியதென மருண்டு கொள்கிறோம். மாறாகக் குறங்குத் தண்டு = crankshaft என்று எளிதாய் நம்மூர்ச் சிந்தனை வழி சொல்லிப் போகலாம்.]
தமிழால் அறிவியல் பயிற்றுவிக்க முடியாதென்று எந்த மடையன் சொன்னான்?

No comments: