Saturday, April 29, 2023

பரத நாட்டியம்

நாட்டிய வல்லாரான பத்மா சுப்பிரமணியம், பரத முனிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று ஒரு முறை சொன்னார்.  இந்தப் ”பரதமுனி” என்ற கட்டுக் கதையை மிகுந்த நாட்களாய் பத்மா சுப்பிரமணியம் போன்றோர் பரப்பிக் கொண்டுள்ளார் 

நானறியச் சிலப்பதிகாரத்தில் ”பரதம்”  என்ற சொல் கிடையாது. சொல்லாய்வர் ப, அருளி, பரத்தில் (பரம்= மேல், மேடை) ஆடும் ஆட்டம் பரத்து நாட்டியம் என்பார். பேச்சுவழக்கில் இது பரத்த நாட்டியம்>  பரத நாட்டியம் என்றாகும். பரத்தின் நீட்சியான பரதத்திற்கும் ”மேலான இடம்” என்றே பொருள் சொல்வர். இதோடு தொடர்புடைய வேறு சொற்களையும் பாருங்கள். பரமன் = மேலானவன். விதப்பாய்ச் சிவன். பரம ஈசன் என்ற தமிழ்ச் சொற்கள் வடக்கே கடனிற் போய் வடமொழிப் புணர்ச்சியில் பரமேசன் ஆகும். அதை மேலுந் திருத்தி பரமேஸ்வரன் என்பார். இதுவும் சிவனையே குறிக்கும். பரவல் / பரவுதல் = போற்றுதல், வழிபடுதல். என்பது அடுத்த வளர்ச்சி. இனி, நிலவு> நிலா என்பது போல், பரவு>பரா என்றாகும். பரவுதல்>  பராதல்> பராவுதல்= புகழ்தல் ”தற்பராய் நின்று” என்று பு.வெ.10,15 இன் உரையில் வரும். 

பராதலுக்கு உரியவன் பராதி. இங்கு சங்கத வழக்கும் ஊடு வரும். metathesis முறையில் இது பாரதியாகும். சிவ பெருமானை சிவ ப்ரான் > சிவ பிரான் என்று சங்கதத்தில் சொல்வார். பரதத்தில் உள்ளவன் பாரதி என்றாவது வியப்பில்லை. இனிச் சிலப்பதிகாரம் கடலாடு காதையில் 38-43 ஆம் வரிகளில்

சீரியல் பொலிய நீரல நீங்கப்
பாரதி யாடிய பாரதி அரங்கத்துத்
திரிபுர மெரியத் தேவர் வேண்ட
எரிமுகப் பேரம்பு ஏவல் கேட்ப
உமையவள் ஒருதிறன் ஆக வோங்கிய
இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்
என்று வரும். இங்கு வரும் பாரதியைப் பைரவி என்று வேங்கடசாமி நாட்டார் பொருள் சொல்வார். இதை உறுதி செய்யுமாப் போல் வேறெங்கும் வழக்குக் கிடைக்க வில்லை. நாட்டார் எப்படி இதைக் காளிக்குப் பெயராய்ச் சொன்னார் என்று தெரியவில்லை. அவர் கூற்றை வைத்துக் கொண்டு, அகர முதலி தொகுப்புநரும் அகரமுதலிகளில் ஏற்றி விட்டார். நான் அறிந்தவரை, 

”திரிபுரத்தை எரிக்கும்படித் தேவர் வேண்ட, 
எரிமுகங் கொண்ட பேரம்பின் ஏவலைக் கேட்க, 
உமையவள் ஒரு பக்கம் நிற்க, 
சிவனாடும் சிவனரங்கத்தில், 
ஓங்கிய இமையவன், 
தாள இயல்பு பொலிய, 
அவையல்லாதன நீங்க, 
ஆடிய கொடு கொட்டி ஆடலும்” 

என்பதே இதன் பொருளாகும். கொடு கொட்டி ஆடல் என்பது கயிலாயத்தில் நடந்ததாகவே ஒரு தொன்மம் உண்டு. உடுக்கையின் தாளத்திற்கு ஏற்ப நடந்த கூத்து. கொடுகொட்டி பற்றி நிறையக் கூறலாம். ஆனாலும் இங்கு தவிர்க்கிறேன். அடுத்து அதே காதை 44-45 ஆம் வரிகளில்
தேர்முன் நின்ற திசைமுகன் காணப்
பாரதி ஆடிய வியன்பாண் டரங்கமும்
என்று சொல்லப்படும். மேலேயுள்ள 39-43 ஆம் வரிகளில் பாரதியைப் பைரவி என்ற சொன்ன வேங்கடசாமி நாட்டார், 44-45 ஆம் அடிகளில் பாரதியைச் சிவன் என்றே சொல்வார். இது முன்னுக்குப் பின் முரணாகவே நமக்குத் தெரிகிறது. இங்கே பாண்டரங்கம் என்பது சுடுகாட்டில் நடப்பது. பாண்டல் = சாம்பல். பாண்டரங்கம் = சாம்பல் மேவிய அரங்கம். தேரின்முன் நின்ற நான்முகன் காணப் பரமன் ஆடிய விரிந்த பாண்டரங்கக் கூத்து இவ்வர்களில் சொல்லப்படுகிறது. தவிர, பாண்டல்/சாம்பலோடு தொடர்புடைய  பாண்டு என்ற சொல் பாண்டியர் என்ற சொல்லுக்கு முன்னானதாகும். பாண்டு எனும் சாம்பலைத் தம் நெற்றியில் பூசியோர் பாண்டியர். 
பரதம்>பரத முனி>பரத சாத்திரம் என்பன முற்றிலும் கட்டுக்கதைகள் நிறைந்த சொற்கள். இ்த்காலத்தில் பரத சாத்திரம் என்று சொல்லப்படும் நூல் சிலம்பிற்குப் பல நூற்றாண்டுகள் கழித்து ஏற்பட்ட நூலாகும். மணிமண்டபம் எழுப்ப வேண்டும் எனில் அது இளங்கோவிற்கும் சிலம்பிற்கும் தாம் ஏற்படமுடியும். 

பத்மா சுப்பிரமணியத்தின் நாட்டியம் சிறப்பு. ஆனால் அவர் கூற்றுப் பிழை.

No comments: