Thursday, May 04, 2023

சங்க இலக்கியங்களில் ஆரியர் - 1

 ஒரு முறை சங்க இலக்கியங்களில் 10 இடங்களில் ஆரியரென்ற சொல் பயில்வதை “மின்தமிழ்” மடற்குழுவிற் குறிப்பிட்டு, ஒவ்வொரு காட்டிலும் 2 வரிகளைத் திருவாட்டி தேமொழியார் கொடுத்திருந்தார். அந்த வரிகளின் பொருள்களை நண்பர் நா.கண்ணன் கேட்டிருந்தார். ஆரியர்/திராவிடர் என்ற உரையாட்டில் ஆரியரென்ற கூற்று சங்க இலக்கியங்களில் எப்படிப் பயின்றதென்பது தேவையான பார்வையே! (சிலப்பதிகார நூலை சங்க இலக்கியமென்றே நான் கருதுவேன். இருப்பினும் அந்நூலில் பயிலும் சொல்லாட்சிகளை இங்கே நான் குறிப்பிடவில்லை. மணிமேகலையைச் சிலம்பின் இரட்டைக் காப்பியமாய்ப் பார்க்காது சங்கம் மருவிய காலத்திற்கே கொண்டு போவேன்.) 

இவ்வுரையாடலைப் படித்தபோது, என் பார்வையில் ஏன் பொருள் சொல்லக் கூடாதென்று தோன்றியது தவிர, இதுபோல் 2 வரிகளில் பொருள் சொல்லும்போது ஆரியரின் முழுப் பரிமானம் தெரியாது போகலாம். பாட்டு முழுதையும் பார்த்துப் பொருள் கொள்வதே சாலச் சிறந்தது. 

இங்கே ஓர் அடிப்படைச் செய்தியை முன்வைக்கிறேன். சங்க காலத்தில் (இதை பொ.உ.மு.300- பொ.உ.300 என்று தவறாகவே  சொல்லிப் பழகி விட்டோம். அண்மைக்கால ஆதிச்சநல்லூர், கொடுமணம், பொருந்தல், பட்டணம், கீழடி போன்ற தொல்லாய்வுகளுக்கு அப்புறம் பொ.உ.மு.600-பொ.உ.150. என்ற காலமே உண்மைக்கு நெருக்கமாகும். 1930-80 வரையிருந்த 2 ஆம் நிலை ஆய்வுகளைக் கொண்டு இனியும் பேசுவது முறையல்ல.) 

தவிர, இற்றைக் காலம்போல் தில்லியோடு அதன் வடமேற்கை நோக்கி ”வடபுலம்” இருப்பதாய்ச் சொல்வதில் பொருளில்லை. அன்று அது கங்கைக் கரைப் பாடலிபுத்தம் நோக்கியது. மகதம், வச்சிரம், அவந்தி, மற்றைய சனபதங்கள் ஆகியவையே தமிழர்க்கு அன்று முகன்மையானவை. விந்தியமலைக்கு மேலிருந்தோரே அன்று ஆரியர் எனப்பட்டார். சில சனபதங்கள் (குறிப்பாய் கோதாவரிக்கரையில் இருந்த  அசகம் Assaka என்னும் அரசு) விந்தியத்திற்குத் தெற்கேயும் இருந்தன. இவற்றால் பாகதம் தக்கணத்தில் ஓரளவு பரவியது. தமிழும் பாகதமும் ஊடாடிய தேசமே மொழிபெயர்த் தேயம் ஆகும். இற்றை மாராட்டமும், ஒடியாவும், வட கர்நாடகமும், தெலிங்கானாவும், வட ஆந்திரமும் இதனுள் அடங்கும்.  

மொழிபெயர்த் தேயத்தை மாமூலனார் சரியாகவே அடையாளங் காட்டுவார். இம் மொழிபெயர்த் தேயத்திற்குப்  போகும் வழியில் தான் பெரிய பாலை நிலம் (இற்றை இராயலசீமை) ஒன்று அந்நாளிலும் இருந்தது. மறவாதீர்! சங்க இலக்கியங்களிற் பாதிப் பாட்டுக்கள் பாலைப் பாட்டுக்களே!. பாலை நிலங் கடந்து மகதம் போய்ப் பொருளீட்டி வருவது அற்றைத் தமிழருக்குத் தேவை. அதேபோல் வடக்கிருந்த ஆரியர்க்கும் தங்கம், இரும்பு போன்ற மாழைகள், கொங்கிற் கிடைத்த அரிய மணிகள், தென்கடல் முத்து, பவளங்கள், தெற்கே சிறப்புற்ற பருத்திக் கலிங்கம் போன்றவற்றை வணிகம் நாடித் தெற்கே வரவேண்டி இருந்தது. ஒரு பக்கம் பொருளியல் ஊடாட்டங்களும் இன்னொரு பக்கம் அதிகார முனைப்புகளும் இதிற் சேர்ந்திருந்தன. 

கொடுமணலிலும், பொருந்தலிலும், கீழடியிலும் பாகதச் சொற்கள் பொறித்த பனையோடுகளும், அடையாளங்களும் காணப்படுவதில் வியப்பில்லை. சங்க காலத்தில் பாகதம் நமக்குப் பழகியதுதான். பாகதங் குறைத்துச் சங்கதம் மேலேற்றுவது குத்தர் (குப்தர்) காலத்திற்கு அப்புறமே எழுந்தது.மொழிபெயர்த் தேயத்தின் மேல் மூவேந்தரின் கட்டுப்பாடு இருந்தது மாமூலனாரின் பாட்டால் நன்றாகவே நமக்குத் தெரிகிறது. சங்ககாலத்தில் படித்தானத்தைத் (மராட்டிய அவுரங்காபாதிற்கு அருகிலுள்ள பைத்தான்) தலைநகராய்க் கொண்டு ஆட்சி செய்த நூற்றுவர்கன்னர் (சதகர்ணிகள்) ஒருபக்கம் மகத அரசிற்கு காவலாளிகளாயும், இன்னொரு பக்கம் தமிழ் வேந்தரோடு நட்புப் பாராட்டியும் இருந்தார். அவர் நாணயத்தின் ஒரு பக்கம் தமிழ்; இன்னொரு பக்கம் பாகதம் இருந்ததே அவர் அரசின் தன்மையை விவரிக்கும். [சிலம்பு நூல் மட்டும் நமக்குக் கிடைத்திராவிடில் சங்க இலக்கியப் பின்புலம் நமக்கு விளங்கியிருக்காது.] 

அற்றைக் காலத்தில் எல்லா வகையானும் ஆரியருக்கும் தமிழர்க்கும் போட்டி இடையாட்டம் இருந்தது. ஆரியர் எதிராளியாக, இன்னுஞ் சொன்னால், ஆரியரிற் சிலர், குறிப்பாக நந்தருக்குப் பின்வந்த (மோரியர், சுங்கர், கனகராகிய) பல்வேறு மகதர்பகைவரெனவே அடையாளப் படுத்தப்பட்டார். அக்கால வடபுலத்தில் மகதப் பேரரசே எல்லாவற்றையும் நிருணயித்தது. அதே பொழுது மகத்தின் அருகிருந்த வச்சிரம் மூவேந்தர் படையெடுப்பிற்குப் அவ்வளவு பகையின்றிப் பணிந்து போனது. இன்னொரு அண்டை நாடான அவந்தியோ தமிழரோடு உவந்த வண்ணம் நல்லுறவு கொண்டது. இத்தனைக்கும் நடுவில் காசிக்குச் சென்று வரும் வழக்கமும் தமிழர்க்கு அன்றிருந்ததைச் சிலப்பதிகாரம் எடுத்துக்காட்டும்.  

மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்

கோன் இறை கொடுத்த கொற்றப் பந்தரும்       .     

மகதநன் னாட்டு வாள்வாய் வேந்தன்

பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண் டபமும் 

அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த

நிவந்தோங்கு மரபில் தோரண வாயிலும்

என்று சிலப்பதிகாரத்தில் இந்திரவிழவூரெடுத்த காதையில் 99-104 ஆம் வரிகள் சொல்லும். எனவே ஆரியரோடு அன்று பகையுமுண்டு; நட்புமுண்டு. இப் பின்புலத்தோடு இனிக் காட்டுகளுக்குள் வருவோம். இவற்றில் ஆரியர் பற்றிய தனிப்பட்ட குறிப்புக்களும், வரலாற்றுக் குறிப்புக்களும் உண்டு. தேமொழி கொடுத்த வரிசையிலில்லாது வேறு வரிசையில், (அதே பொழுது ஓரளவு கால வரிசையில்) இங்கே சில காட்டுக்களை நான் விளக்குகிறேன். 

முதற்பாட்டு குறுந்தொகையில் வருவது. இதைப் பாடியவர்: பெரும்பதுமனார்; பெயரைப் பார்த்தால்,அற்றுவிகம், செயினம், புத்தம் போன்ற மதச் சாயல் தெரிகிறது (தாமரைப் பாதங்களை வணங்குவது இந்த வேதமறுப்பு நெறிகளில் தென்படும் முறை); 

திணை:பாலை; துறை: செலவின்கண் இடைச்சுரத்துக் கண்டார் சொல்லியது; .

வில்லோன் காலன கழலே தொடியோள் 

மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர் 

யார்கொ லளியர் தாமே யாரியர் 

கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி 

வாகை வெண்ணெற் றொலிக்கும் 

வேய்பயி லழுவ முன்னி யோரே

என்பது பாட்டு. பாடலின் விளக்கம் கூடுதற்காக, பாட்டினுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பைச் சற்று  நெகிழ்த்திச் சீர்களைமாற்றிப்போட்டு கீழே கொடுத்திருக்கிறேன்.

வில்லோன் காலன கழலே! 

தொடியோள் மெல் அடி மேலவுஞ் சிலம்பே! 

நல்லோர் யார் கொல்? 

ஆரியர் கயிறாடு கால்பொரப் பறையில்  

கலங்கி வாகை வெள்நெற்று ஒலிக்கும் 

வேய்பயில் அழுவ முன்னியோரே

அளியர் தாமே 

இனி ஒரு சில சொற்பொருள்களையும் விளக்கக் குறிப்புகளையும் பார்ப்போம். 

வில்லோன் = தலைவன். 

தொடியோள் = தோள்வளையணிந்த தலைவி. வீரத்தின் அடையாளமாய். ஆண் த்ன் காலில் அணிவது கழலாகும். கழலணிந்த கால் உரம் பெறும் என்பர். பெண்பருவத்திற்கு ஏற்பச் சிலம்பென்பது அக்கால வாழ்வில் வெவ்வேறு வகைப்படும். மணத்தின் முன் அணியும் சிலம்புக் கூட்டுள் பரல்களைச் சொரிந்ததால் கலகலவெனச் சிலம்பு (ஓசையெழுப்பும்). [இக்காலத்திற் சிலம்பிற்குப் பகரியாய்க் கொலுசை இடுகிறோம். திருமணஞ் செய்த இற்றைப்பெண்கள் கொலுசு போடுவது அரிதிலும் அரிது.] இச் சிலம்போசையே பருவப் பெண்ணுக்குக் காப்பும் ஆனதால் காப்புச்சிலம்பு ஆயிற்று. திருமணத்தின் பின் அணிவது பரல்கள் பதித்த தண்டை. அது அவ்வளவு ஒலியெழுப்பாது.. 

திருமணம் முடிந்தபின், அக்காலத்திற் தாய்வீட்டிற் காப்புச்சிலம்பைக் கழற்றித் தண்டைச்சிலம்பையும், (காற்பெருவிரலுக்கு அடுத்தவிரலில்) கால்மோதிரத்தையும் (மிஞ்சியையும்) அணிவித்துத் தம் மகளை அனுப்புவர். திருமணம் முடிந்து மருவீட்டிற்குப் (மணஞ் செய்த வீடு மருவீடு. மருவுதல் = தழுவுதல், மணஞ் செய்தல் மேலைமொழிகளில் மருவுகை என்பது marriage என்று ஒலிக்கப் பெறும்.) இன்றும் சிலகுடிகளிடம் இம் மருவீட்டுச் சடங்கு உண்டு. ”காப்புக் கழற்றிக் கால்மோதிரம் இடுவது” என இன்றும் நகரத்தார் தம்  மரபிற் சொல்வர். (கண்ணகி கதைக்குப் பின் தண்டையணிவது இவரிடம் முற்றிலும் நின்றது.) இப்பழக்கம் தமிழர் எல்லோரிடமும் ஒரு காலத்தில் இருந்திருக்கலாம். மேலே தண்டையும், கால்மோதிரமும் அணியாது காப்புச் சிலம்பைத் தலைவி அணிந்ததைச் சுட்டி அங்கு நடக்கும் மணம் புரியா உடன்போக்கைப் பெரும்பதுமனார் குறிப்பால் உணர்த்துவார். 

”நல்லார் யார் கொல்?” என்னும் அவதானம் இன்றும் நாட்டுப்புறங்களில் வெள்ளந்தியாயுண்டு. “பார்த்தா நல்லவங்களாய்த் தெரியுறாங்க” என்பது நாட்டுப்புறங்களின் இயல்பான ச்ந்தனை. முன்பின் தெரியாரை ஐயத்தோடு பார்க்கும் நகர நாகரிகம் அன்று இல்லை.

தமிழரைப் பொறுத்தவரை கழைக்கூத்து என்பது வடநாட்டிலிருந்து வந்தது. கயிற்றின் மேல் தம்  காலைப் பொருத்தி நீளமான கழையைப் பிடித்துக் கொண்டு, தன்னை நிலைப்படுத்தி ஆடும் இக்கூத்தை நாட்டுப்புறங்களில் ஆரியக்கூத்து என்று சொல்வார். “ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே! காசு காரியத்திற் கண் வையடா, தாண்டவக் கோனே” என்பது ஒரு காலத்தில் பேர்பெற்ற திரைப்பாட்டின் அடிகள். இக்குறுந்தொகைப் பாட்டிலும் ஆரியக் கூத்தே சொல்லப் படுகிறது. ஆரியக் கூத்தின் போது பறையடிப்பது உள்ளூர்ப் பழக்கத்தை உட்கொண்ட செயலாகும். 

வாகை (Siris, Woman;s ongue, East Indian Walnut, Albicia Lebbeck) என்னும் மரம் வறண்ட பறந்தலைகளில் நிழலுக்காக வளர்க்கப்படுவதாகும். இக் காலத்தில் தூங்குமூஞ்சி மரம் என்ரு சொல்வாரே, அது வாகைக்கு நெருங்கிய மரம். அகன்ற கிளைகள், பச்சை இலைகளோடு வாகையின் வளர்ச்சி விரைவானது. இளந்தளிர்கள் சற்று நச்சோடிருப்பதால், கால்நடைகள் அவற்றைச் சாப்பிடா. தளிர் வளர்ந்து அடர்பச்சை ஆனபின், நச்சுமை போகும். வாகைப்பூவைத் தலையிற்செருகின், சிறகுவைத்தது போலவே தலைமைத் தோற்றம் காட்டும். 

(பழங்குடி மரபில் சிறகு/இறகு வைத்தவன் தலைவன்/ இறைவன் ஆவான். http://valavu.blogspot.in/2011/05/blog-post.html). இதனாலேயே பறந்தலைப் போர்க்களங்களில் வெற்றி பெற்றவர் வாகைப் பூ சூடுகிறார். மகளிரோ வாகைப்பூவைக் காதில் அணிந்துகொள்கிறார். 

வாகைப்பூக்கள் உண்மையில் கொத்துகளே. கொத்துக் காய்கள்/நெற்றுகள் ஒவ்வொன்றும் தகடையாய் 2 தோடுகள் சேர்ந்தாற் போல் 9 - 12 அணுங்குழை (அங்குலம்) நீளத்தோடு தொங்கும். ஒவ்வொரு வெளுத்த நெற்றிலும் 6 இலிருந்து 12 விதைகள் வரை இருக்கும். 

பொரிந்து காய்ந்த நெற்றுக்களில் விதைகளுக்கும் தோடுகளுக்கும் இடையே சற்று வெளி ஏற்பட்டு, நெற்றைக் குலுக்கினால் வித்துகள் ”சிலுசிலு”வென ஓசை எழுப்பும். தவிர, கொத்தாய்த் தொங்கும் நெற்றுக்கள் (nuts) காற்றில் ஒன்றையொன்று உரசி வெட்டோசையை எழுப்பும். வல்லோசையை வக்கு என்று தமிழிற் சொல்வர். (வக்கு நிறைந்தது தமிழில் வாக்கு/பேச்சு என்றாயிற்று.) வக்கோசையால் இங்கு வக்கு>வாக்கு>வாகை என்ற பெயரேற்பட்டது.

வாகையை வகத்திரமென்றும் கதிரைவேல்பிள்ளையின் அகராதி அடையாளங் காட்டும். வாக்கொலி குறித்தே ஒரு குறும்புக்காரர் ”பெண்நாக்கு (woman's tongue)” என்று மரத்திற்குப் பெயரிட்டார். உலகின் எல்லாப் புதலியற் குறிப்புக்களிலும் இச்செய்தி காட்டப் பட்டுள்ளது. இதன்தொடக்கம் இப்பாடலில் உள்ளது. அவ்வகையில் இந்தப் பாட்டுச் சிறப்பானது. சங்கதத்தில் சிலுத்தல்>சிரற்றுதல் வினையைக் குறித்தே Shirisha என்று இம்மரத்திற்குப் பெயர் சொல்வார். தமிழ்முலங் கொண்ட சொல். 

வாகையின் தொடக்கம் தெற்காசியா. பாண்டிலென்பது வாகையின் மரத்தோற்றத்தைக் காட்டும் இன்னொரு பெயர்.வில்லோனும், தொடியோளும் போகும் பாதையில் மூங்கிலும் (வேயும்) இருக்கிறது. அழுவம் = நடந்து நடந்து அழுந்தி அழுந்தி ஏற்பட்ட அடிப்பாதை. முன்னுதல் = முன்னே செல்லுதல். 

“ஆரியக்கூத்தின் போது பறையொலிப்பதுபோல், வாகைநெற்றுக்கள் சத்தமெழுப்புகின்றன. உடன்போக்கில் நடந்துசெல்லும் இந்த ஆணும் பெண்ணும் யாராயிருந்தாலும் இரக்கத்திற்குரியவரே! இங்கே ஆரியக்கூத்து என்பது பாடுவோரின் மனத்திலுள்ளது. வாகைநெற்றொலியும், காதலர் நடையொலியும் உள்ளபடி கண்ணுக்கெதிரே எழுகின்றன. பார்ப்போருக்கும் கேட்போருக்கும் படிப்போருக்கும் நெஞ்சம் படபடக்கிறது. சங்க இலக்கிய வாசிப்பின் சிறப்பு மனத்திலெழும் குறும்படம் தான். “கயிற்றின்மேல் ஆடும் ஆரியக்கூத்து”. பாட்டின் மொத்தப்பொருளை ஓர் உரைவீச்சாகவே தருகிறேன்.

வில்லோன் காலிலோ கழல்! 

தொடியோள் மெல்லடி மேலோ சிலம்பு!

இந்த நல்லோர் யாரிவர்? 

கயிற்றின்மேற் கால்பொருத்தி 

ஆரியர் ஆடுகையில் 

பறையொலிக்க, 

வாகைக்(கிளைகள்) காற்றுப்பொருந்த 

வெள்நெற்றுக்கள் கலங்கிச் சிலுசிலுவென வொலிக்கும்

அகன்ற மூங்கிற்பரப்பில் 

முன்னியுள்ளவர் 

இரக்கத்திற்கு உரியவர் தாம். 

அன்புடன்,

இராம.கி.


No comments: