Saturday, May 13, 2023

சங்க இலக்கியங்களில் ஆரியர் - 8

அடுத்தது அகநானூறு 386, இதைப் பாடியவரும் பரணரே. இதன் திணையும் மருதமே. மருதம் பாடுவதில் பரணருக்கு ஒரு விழைவு இருந்துள்ளது. இங்கும் நீர்நாய், ஆற்றுவாளை போன்ற குறியீடுகள் வந்து போகின்றன. இவர் காலத்தில் தமிழகம் வந்து போன உத்தேயர் பற்றிய குறிப்பு இலைமறை காயாய் உள்ளது. பாணர், விறலியரின் தொடர்பு தொட்டுக் காட்டப் படுகிறது. பாணரின் தோள், கைவலியும் வெளிப்படுகிறது. 

துறை; தோழி வாயில் மறுத்தது. தலைமகள் தகுதி சொல்லியதுமாம். தலைவனின் பரத்தமை ஒழுக்கங் கண்டு தலைவி ஊடல் கொண்டாள். தேடி வரும் தலைவனிடம் தோழி பரத்தையால் நடந்தது சொல்லி, ”அப் பரத்தை எப்படியெலாம் கள்ளமாய்ப் பேசினாள்? அவள் பேச்சுக் கேட்டு எவ்வளவு வெட்கினேன் தெரியுமா” என்றும், “அவள் இப்படி பேசக் காரணம் யார்? உன் நடத்தை தானே? உடன் மாற்றிக் கொள்” என்ற உட்கருத்தையும் இப் பாடலால் விளங்கிக் கொள்ளலாம். பாடலினூடே ஆரியப் பொருநன் பற்றிய செய்தியும் வருகிறது.

பொய்கை நீர்நாய்ப் புலவுநாறு இரும்போத்து

வாளை நாளிரை தேரும் ஊர

நாணினேன் பெரும யானே பாணன்

மல்லடு மார்பின் வலியுற வருந்தி

எதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன்

நிறைத்திரண் முழவுத்தோள் கையகத் தொழிந்த

திறன்வேறு கிடக்கை நோக்கி நற்போர்க்

கணையன் நாணி யாங்கு மறையினள்

மெல்ல வந்து நல்ல கூறி

மையீர் ஓதி மடவோய் யானுநின்

சேரி யேனே அயலி லாட்டியேன்

நுங்கை ஆகுவென் நினக்கெனத் தன்கைத்

தொடுமணி மெல்விரல் தண்ணெனத் தைவர

நுதலும் கூந்தலும் நீவி

பகல்வந்து பெயர்ந்த வாணுதல் கண்டே.

என்பது பாட்டு. இதன் விளக்கம் கூடுவதற்காக, இதனுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப் போட்டு ”நாணினேன் யானே” என்பதை இரண்டுதரம் திருப்பிப் போட்டுக் கீழே கொடுத்திருக்கிறேன்.

புலவு நாறு இரும் போத்து வாளை 

பொய்கை நீர்நாய் நாள் இரை தேரும் ஊர

பெரும  

மை ஈர் ஓதி மடவோய் யானும் நின்

சேரியேனே அயல் இலாட்டியேன்

நுங்கை ஆகுவென் நினக்கு எனத் தன் கைத்

தொடு மணி மெல் விரல் தண்ணெனத் தைவர

நுதலும் கூந்தலும் நீவி

மெல்ல வந்து நல்ல கூறி

பகல் வந்து பெயர்ந்த வாணுதல் மறையினள் கண்டே.

நாணினேன் யானே

பாணன் மல்லடு மார்பின் வலியுற வருந்தி

எதிர் தலைக்கொண்ட ஆரியப் பொருநன்

நிறைத் திரண் முழவுத் தோள் கையகத்து 

ஒழிந்த திறன் வேறு கிடக்கை நோக்கி 

நற்போர்க் கணையன் நாணியாங்கு 

நாணினேன் யானே

இனிச் சில சொற்பொருள்களையும் விளக்கக் குறிப்புகளையும் பார்ப்போம். புலவு நாறு இரும் போத்து வாளை = தசைநாற்றமுள்ள பெரிய ஆண் ஆற்றுவாளையை; பொய்கை நீர்நாய் = குளத்து நீர்நாய் (Otter); நாள் இரை தேரும் ஊர = நாளிரையாய்த் தேர்ந்து கொள்ளும் ஊரைச் சேர்ந்தவனே! பெரும = பெருமகனே!

”மைஈர் ஓதி மடவோய் = ”கருவகிள் கூந்தலுடைய இளம் பெண்ணே!; யானும் நின் சேரியேனே = நானும் உன் சேரியள் தான்; அயல் இலாட்டியேன் = பக்கத்து வீட்டுக்காரி; நுங்கை ஆகுவென் நினக்கு = உனக்குத் தங்கையாவேன் என; தன் கைத் தொடு = என்று தன் கையால் தொட்டு; மணி மெல் விரல் = மாணிக்கம் பொருந்திய விரலால் (இங்கே மாணிக்க மோதிரமிட்ட விரல் குறிக்கப் படுகிறது); தண்ணெனத் தைவர = தண்ணெனத் தடவி; நுதலும் கூந்தலும் நீவி = என் நெற்றியும், கூந்தலும் நீவி; மெல்ல வந்து நல்ல கூறி = மெதுவாய் வந்து நல்லன கூறி; பகல் வந்து பெயர்ந்த வாணுதல் மறையினள் = பகலில் வந்து பெயர்ந்த (அவ்) வாள்நுதற் கள்ளியைக் கண்டு; நாணினேன் யானே = (“ஒரு வேளை தவறாக ஐயுற்றோமோ?” என) நான் நாணினேன்.  

பாணன் மல்லடு மார்பின் வலியுற வருந்தி = பாணனின் மற்போர் நெஞ்சுரங் கண்டு வருந்தி; பெரும்பாணர், சிறுபாணர் என்பார் விறலியாட்டத்தில் முழவடித்துத் (accompanying artists) துணை நிற்பர். முன்னே பேசப்பட்ட பரத்தை ஒரு விறலியாயும் (ஆட்டக்காரி) இருந்தாள் போலும். இவ்வுவமையில் பாணன் விறலிக்குப் பகரியாகிறான். ஓர் இசைக் கச்சேரியோ, நடனக் கச்சேரியோ 3,4 மணிநேரம் நடந்தால், முழவும், பறையும் தொடர்ந்தடிக்க நல்ல வலு வேண்டும். உடல்வலுக் குன்றியவரால் அது முடியாது. பாணர் (இக்கால மேளகாரருங் கூட) நல்ல கட்டுப் பாங்கான உடல்வலுக் கொண்டிருப்பர். அக் காலப் பாணனுக்கு மற்போர் தெரிவதும் வியப்பில்லை. இங்கே கணையன் [கணை = தண்டாயுதம், வளரி, தூண், குறுக்குமரம். அக்காலத்தில் வீட்டின் பெருங்கதவுகளில் தாழ்ப்பாள் போட்டு கணைய மரத்தைக் குறுக்கே செருகி வைப்பர். பின்னாளில் இது இரும்புப்பட்டையாய் மாறியது. செட்டிநாட்டு பெருங்கதவுகளுக்கு இன்றுங் கணையப் பட்டயங்கள் உண்டு. கணையன் = வலியன்; கணைக்கால் இரும்பொறை என்னுமோர் சேர மன்னனும் இருந்தான்.] என்பான் பாணனோடு தான் பொருதற்கு மாறாய் ஆரியப் பொருநனைக் கூலிக்கமர்த்திப் பொருத வைத்தான். 

இத்தொடரின் 3 ஆம் பகுதியில் உத்தேயர் (>யுத்தேயே>யௌதேய) என்ற ஆரிய கணம் (merceneries) பற்றிச் சொன்னேன். அவர் ஆயுத கணமென்றும் சொல்லப் பட்டார். முடியரசு இல்லாது குடியரசாயும் இனக்குழு ஆட்சியும் கொண்டிருந்த இவர் போர் மூலம் பொருள் திரட்டி நாட்டினுள் நகர்ந்து கொண்டிருந்தார். அகண்ட  அரசை அவர் ஏற்படுத்தவில்லை. ஆங்காங்கே கூட்டங் கூட்டமாய்ச் சில காலம் வாழ்த்து பின்பிரிந்து வேறிடஞ் சென்று விரிந்து கொண்டிருந்தார். அக்கால robber - barons, mercenaries என இவரைச்சொல்லலாம். 

எங்கெலாம் வளமிருந்ததோ, அங்கெலாம் உழிஞை, வஞ்சிப் போர் நடத்துவார். கொள்ளை அடிப்பார்; நகர்ந்து போவார். தென்னாடு நோக்கி இவர் படையெடுத்ததை இவர் நாணயம் தெற்கே கிடைத்ததனாலும், இவருடைய ”கார்த்திகேயன், சுப்ரமண்யன், சண்முகன்” வழிபாடும், நம்மூர்க் குறிஞ்சி முருகன் வழிபாடும் இரண்டறக் கலந்து போனதாலும் அறிகிறோம். இவற்றைப் பின்னிப் பிணைந்து திருமுருகாற்றுப்படையும், பரிபாடலும் சொல்லுங் கதைகள் பற்பல. (இவ் வழிபாட்டுக் கலப்பு என்பது ஒரு தனியாய்வு. யாராவது செய்ய வேண்டும்.) யாரேனும் பொருள் கொடுத்து ஒரு வேலைக்கு அனுப்பி வைத்தால், (இக்கால அடியாட்கள், சப்பானிய ninja க்கள்  போல) இந்த உத்தேயர் யாரோடும் மற்போர் செய்யவோ, போர்கொள்ளவோ தயங்க மாட்டார். இங்கே ஆரியப் பொருநன் என்பான் ஓர் அடியாள் (mercenary) என்பது மறைபொருள்.. 

எதிர்த்  தலைக் கொண்ட ஆரியப் பொருநன் = எதிரே சண்டையிடும் ஆரியப் பொருநன்; [இங்கே தலைவியின் தோழிக்கு கணையனும், தலைவிக்குக் கணையன் ஏற்பாடு செய்த ஆரியப் பொருநனும் உவமை ஆகிறார். ஒருவேளை தலைவி ஆரியன் போல வெள்நிறங் கொண்டவளோ, என்னவோ?] நிறைத்திரண் முழவுத் தோள் கையகத்து ஒழிந்த திறன் வேறு கிடக்கை நோக்கி = திரண்ட, முழவுத் தோளிலும், கையிலும் திறனொழிந்து போய் சரிந்து கிடக்கை நோக்கி; [நல்ல முழவடிக்கக் கூடிய வலுக் கொண்ட தோள் இங்கே ஆரியப் பொருநனுக்கும் அணியாய்ச் சொல்லப்படுகிறது.] நற்போர்க் கணையன் நாணியாங்கு = நற்போர் செய்யக் கூடிய கணையன் நாணியது போல; நாணினேன் யானே = நானும் நாணினேன்.

”நான் பெரிதாய் நினைத்துக் கொண்டிருந்த என் தலைவியை இந்தக் கள்ளி கீழே சாய்த்துவிட்டாள். என் தலைவியின் நிலை கண்டு நான் வெட்கிப் போனேன்” என்பது உட்கருத்து. இனிப் பாட்டின் மொத்தப் பொருளை உரைவீச்சாய்ப் பார்ப்போம்..

“கருவகிள் கூந்தலுடைய இளம்பெண்ணே! 

நானும் உன் சேரியள் தான்; 

பக்கத்து வீட்டுக்காரி; 

உனக்குத் தங்கையாவேன்” 

என்று தன் கையால் தொட்டு, 

மாணிக்கம் பொருந்திய விரலால் 

தண்ணெனத் தடவி, 

என் நெற்றியும், கூந்தலும் நீவி, 

மெதுவாய் வந்து நல்லன கூறி, 

பகலில் வந்து பெயர்ந்த, 

(அவ்) வாள்நுதற் கள்ளியைக் கண்டு, 

“ஒருவேளை தவறாக ஐயுற்றோமோ?” என) 

நான் நாணினேன்.  

பாணனின் மற்போர் 

நெஞ்சுரங் கண்டு வருந்தி,

எதிரே சண்டையிடும் 

ஆரியப் பொருநன் 

திரண்ட, முழவுத்தோளிலும், 

கையிலும் திறனொழிந்து போய், 

சரிந்து கிடக்கை நோக்கி, 

நற்போர் செய்யக்கூடிய கணையன் 

நாணியது போல் 

நானும் நாணினேன்

அன்புடன்,

இராம.கி.


No comments: