Saturday, March 07, 2020

Psychiatry - 2

நாலாம் சொல் சீவன். சீவித்தலையும் ஜீவ என்ற வட பலுக்கோடு தொடர்பு உறுத்துவர்.  மூக்கிலிருந்து முன்வரும் ”இச்சுக் காற்றே” தமிழில் மூய்ச்சானது. மூசும் போது இய்யு>இச்சு>சீ என்றே ஓசை வரும்.  சீ - யும் ஓர் ஒலிக்குறிப்பே. அது ஒருமொழிக்கு மட்டும் சொந்தமில்லை. ஆவென்பது வாயால் வருவது. சீயென்பது மூக்கால் வருவது. இரண்டும் உயிர்க் காற்றுகளே. தொண்டைக் காற்றை வாய் வழியும் வெளித்தள்ளலாம். மூக்கு வழியும் வெளித்தள்ளலாம். வாய்வழி வினைக்கு ஆவுதல்>ஆவித்தல் என்றும், மூக்குவழி வினைக்குச் சீவுதல்>சீவித்தல் என்றும் பெயர். சீவு>சீவன் என்பது வெளியேறும் உயிர்க் காற்றுக்கான தமிழ்ப்பெயர்.  (மறவாதீர் சீ மொழிப் பொது. சீவன் தமிழ்ப் பெயர். ஜீவன் சங்கதப் பலுக்கு.) ஆவி, ஆதன் போல் இச்சொல் அமைந்தது. ”சீவத்துள் உள்ளது” என்ற பொருளில்  soul எனும் ஆங்கிலச்சொல் ஏற்பட்டது போல் தெரிகிறது. ஆங்கில வரையறையில் இதன் சொற்பிறப்பு தெரியாது என்கிறார்.

soul (n.) "A substantial entity believed to be that in each person which lives, feels, thinks and wills" [Century Dictionary], Old English sawol "spiritual and emotional part of a person, animate existence; life, living being," from Proto-Germanic *saiwalō (source also of Old Saxon seola, Old Norse sala, Old Frisian sele, Middle Dutch siele, Dutch ziel, Old High German seula, German Seele, Gothic saiwala), of uncertain origin. இன்னும் எத்தனை காலம் ஆங்கிலச் சொற் பிறப்பியலார் சங்கதத்தில் மட்டுமே ஊற்றைத் தேடுவாரோ, தெரியாது. கொஞ்சமாவது தமிழ்ப்பக்கம் வந்தால், ”தீர்வு” காணலாம். அவ்வளவுதான் நான் சொல்லமுடியும்.

ஐந்தாம் சொல்லான பேய், சற்று சிக்கலானது. Psychiatry பற்றிய இவ்விடுகை இது பற்றியதே.  பேயோடு தொடர்புற்ற இன்னொரு சொல் பூதம். பூதியல் பற்றிய என் தொடரின்

http://valavu.blogspot.com/2005/04/physics-1.html
http://valavu.blogspot.com/2005/04/physics-2.html
http://valavu.blogspot.com/2005/04/physics-3.html
http://valavu.blogspot.com/2005/04/physics-4.html

3 ஆம் பகுதியில் இவ்விரு சொற்கள்பற்றி ஓரளவு பேசினேன்.அத்தொடர் எழுதியபோது இருந்ததைவிட இப்போது என்கருத்தில் சிறுமாற்றம் உண்டு. தொடக்கத்தில் அச்சப்பொருள் காட்டும்  ”பே” ஒலிக்குறிப்பில் ”பேய்” எழுந்ததாய்க் கருதினேன். பாவணரும் கூட "இரு திணைப் பொருள்களும் இயற்கையாகவும் செயற்கையாகவும் பிறப்பிக்கும் ஒலிகளைப் போன்ற ஒலிக்குறிப்புக்களும், அவற்றை அடிப்படையாகக் கொண்ட சொற்களும் ஒப்பொலிச் சொற்கள்" என்பார். இப்போதையப் புரிதலில் சற்று மாறி யுள்ளேன்.  உடலிருந்து உயிர் பிரிவதைப் பன்னெடுங்காலம் முன்பே பழங் குடியார் உணர்ந்திருப்பார்.  புள்>பிள் என்ற வேர் ”பிரிவதைக்” குறிக்கும். இங்கு உடல், உயிர்ப் பிரிவில், பிள்>பிய்>பேய்>பே என்ற வளர்ச்சியால் அச்சப் பொருளுக்கு வந்திருக்கலாம் என்பது இப்போதைய என் புரிதலாகும்.

பிய்தல், பிரிதல், போன்ற சொற்கள் நெடுநாட்பட்டவை. பழம்மாந்தனின் மனக்குழப்பத்தில் பேயைத் தனியே கண்டதாய், அச்சப்படவும் முடியும். பேய் இன்னொருவரைப் பிடித்துக் கொள்வதாயும் சொல்வர். அணங்கு என்ற சொல் சங்கப் பாடல்களில் மிகுதி. அண்ணுதல்>அணங்குதல் = மேலேறுதல்.. அணங்கு = ஒருவர்மேல் ஏறிய ஆவி, சாமி. முருகன், காளி, முன்னோர் ஆவி போன்றவை ஒருவர்மேல் ஏறியதாய் நாட்டுப்புறங்களில் சொல்வதுண்டு. குறிப்பாய்த் தென்பாண்டி நாட்டில் ”சாமி வருவதாய்ப்” பேசிக் கொள்வதும், உணர்வதும் அதிகம். அது உண்மையா? psychiatric behaviour ஆ? - என்பது அறிவியலை எப்படி நாம் பயனுறுத்துகிறோம் என்பதைப் பொறுத்தது.  ஆனால் அதைப் பட்டறியாதார் தெற்கே மிகக் குறைவு. காவடி எடுக்கிறவர் செடிலில் தொங்குபவர் போன்றோர் கூடச் சாமிவந்தது போல்தான் காட்சி யளிப்பார். இம்மயக்கம் குறு நேரம் இருக்கலாம்; கூட நேரமும் இருக்கலாம்.

பேயில் உருவான தமிழ்ச்சொற்கள் மிகுதி. நான் சிலவற்றை மட்டும் குறிக்கிறேன். பே>பேம் = அச்சம்; பே>பேய் = அஞ்சப்படும் ஆவி; பேயன் = பேய் பிடித்தவன்; பேய்த்தன்>பேய்ச்சன்> பேச்சன்; பேய்த்தி>பேய்ச்சி> பேச்சி; தென்பாண்டியில் பேச்சி என்ற பெயர் மிகுதி. செல்லமாய் முத்துப் பேச்சி என்றும் பெயர் வைப்பார்;  பேய்மனம் = பிறழ்ந்த மனம்; பேய்து> பேய்சு> ப்யேசு> ப்யாசு>பியாசு> பிசாசு, இது அச்சப்பொருளில் வரும் இரு பிறப்பிச் சொல். இதற்கும் ஆங்கிலத்தின் psyche என்பதற்கும் தொடர்புண்டு என்றே கருதுகிறேன். பிறழ்ந்தவனை, பேதுற்றவனை, பேதகத்தானை psycho எனகிறார். பிசாசன் = பேய் பிடித்தவன்; பிசாசி = பேய்பிடித்தவள்; பூதாண்டி> பூச்சாண்டி>பூசாண்டி ஆவதுபோல் பேய் பிசாசானது. பூதிகத்தைச் சங்கதம் பௌதிகம் என்னும், பூசிகத்தை மேலை மொழிகள் physic, physique என்னும்.  பேது> பிசாசு> psycho, பூதிகம்< பூசிகம்> physique என்ற இரண்டிலும் நடக்கும் ஒலிப்பு மாற்றத்தை கூர்ந்து கவனியுங்கள்.

அடுத்து, பிள்>பிள்நம்>பிணம் = உயிரற்ற உடல்; பிள்நிற்றல்>பிண்ணிற்றல்> பிண்ணித்தல்> பிணித்தல்> பிணிதல் = உயிர் உடலிலிருந்து பிளந்துநிற்றல், வாழ்வு முடிதல், இறத்தல்;  “பிணித்தார் பொடி கொண்டு மெய்பூச” தேவா, 946,3;  பிணி = நோய் அறிகுறி கூடிய உடல்நலிவு; உயிர்பிரிய வாய்ப்புள்ள நிலை; பிணித்தோர் = நோயுற்றவர்; பிணீ நீக்கம் = உயிர்ப்பிரிவு தடுக்கப் படல்; பிணியாளன்/ பிணியாளி = நோய்வாய்ப் பட்டவன்.   பிள்+ந்+தம்> பிண்டம் + கருமம் = பிண்டக்கருமம் = பிரிந்தவருக்கான கருமம். இதைச் சங்கதமாக்கிப் பிண்டக் கிரியை என்றுஞ் சொல்வர். பிள்+து>பிட்டு> பிது> பிதிர்= பிரி பிதிர்>பிதிரோர். (இதையும் சங்கதமென்பார், ”பிள்” வேரைக் கவனியார்.) பிண்டகன் = பிதிருக்கு பிண்டமிட்டுச் சடங்கு செய்வோன். பிள்>பிண்>பிணங்கு = வேறுபட்டுப் பிரிதல்.

பிள்ளாநிற்றல் = உயிர் உடலிலிருந்து பிரியாது நிற்றல். பிள்ளாநிற்றல்> *பிள்ளாநித்தல்> *பிள்ளாணித்தல்> *பிளாணித்தல்> *பிராணித்தல்> பிராணி (சங்கதம். இதற்காக, மோனியர் வில்லியம்சில் சொல்லப்படும் சொற்பிறப்பு நம்பும்படியில்லை.) பொதுவாக, ளகரம்/ழகரம் போன்ற ஒலிகள் வடக்கே போகையில் டகரமாகிப் பின் ரகரமாகும். காட்டு” சோழ/சோள>சோட>சோர. பிள்ளாநம்> பிளாணம்> பிராணம்= உயிர் பிரியா நிலை, பிராணி, பிராணம் என்ற வட சொற்கள் 16 ஆம் நூற்றாண்டிற்கு அப்புறமே தமிழ்ப் புழக்கில் வந்திருக்கின்றன. சூடாமணி நிகண்டில் இச்சொற்களைக் காணோம். பிராணவாயு (இருபிறப்பி)= உயிர்வளி.  பிள்>பிழு>பிழாய்த்தல் = பிரியாது இருத்தல். பிழாய்த்தல் என்பது பேச்சுவழக்கில் பிழைத்தல் ஆகும். உடலும் உயிரும் பிரியாதிருத்தல், எனவே அது உயிரோடிருத்தலைக் குறிக்கும்.   பிழைப்பு = வாழ்க்கை. நம் பிழைப்பும், வடவரின் பிராணனும் தொடர்பு உள்ளவை. 

பேது>பேதம்>ப்ரேதம் (சங்கதம்) = உயிரற்ற பிணம்; பிள்> பேள்> பேழ்; பேழ்கணித்தல்>பேகணித்தல்= மனங்கலங்கல், மருண்டுவிழித்தல்.  பேதல்= நினைவு மயங்கல். அஞ்சல்; பேது= நினைவு மயக்கம்; பேய்பிடித்தாற் போன்ற மருள், மனக்கலக்கம், மனப்பிறழ்ச்சி, அறியாமை; பேது>பேதை என்ற சொல் அறியாமைப் பொருளில் நீண்டது. ”நல்லவை பேதுறார் கேட்டல்” இனி.நாற் 9., ”சாயலாடான், பேது கொண்டு” (சீவக. 1744), ”பிழையென்னாய் பேதுறீஇ”, புறப்பொருள் வெண்பா 11, கைக்கிளை, பெண் 8; ”பேதுகின்ற போன்ற பெருமழைக்கண்”. சீவக. 2544; ”பேதுற்ற இதனைக் கண்டு” (பரி. 18, 12); பேது குறித்த பல்வேறு காட்டுகள் சங்க இலக்கியத்திலுண்டு. பாண்டிய ராசாவின் தொடரடைவு வலைத்தளம் போய் அலசுங்கள்.

பேது + அகம் = பேதுற்ற அகம், இது தான் கலந்துபோன நினைவுகளின் மொத்தத் தொகுதி. இந்தச் சொல்லைத் தான் நான் தொடக்கத்திலிருந்து தேடிக்கொண்டிருந்தோம். இது ஏனமல்ல, ஏனத்துள் இருக்கும் உள்ளீடு. பேதகன்= பேதகம் கொண்டவன்; பேதலித்தல்= மனங் குழம்பல்; பேதவாத சைவம் = இறைவனும் ஆன்மாவும் முத்திநிலையில் தலைவனும் தலைவியும் போல்வர் எனும் சமயம்; பேதித்தல் = குழம்புதல். பேதறுத்தல்= மனக்கலக்கம் ஒழித்தல்; “மாருதி வந்துன்னைப் பேதறுத்து” கம்பரா. மீட்சி.166;  பேது+ஆளம் = பேதாளம்> வேதாளம். பேது உடலைவிட்டுத் தனித்துள்ள நிலை. இச் சொல்லையும் வடமொழி எனப் பலரும் எண்ணுகிறார். பல சங்கதச் சொற்களும் பேம், பேந்து போன்றவற்றில் தொடங்கும். காட்டு: பேம்> பேமை> ப்ரேமை> ப்ரமை> ப்ரம (சங்கதம்) = மயக்கம், பைத்தியம்; ப்ரம> ப்ரமண (சங்கதம்) = சுழலுகை, திரிகை, மயக்கம்; ப்ரமத்தை மீளக் கடன் வாங்கி ப்ரமிப்பு>பிரமிப்பு என்போம். மயக்கம், திகைப்பு என்று பொருள் கொள்ளும். பேந்து> ப்ரேந்து> ப்ராந்து = மயக்கம் என்று மலையாளத்தில் சொல்வர். 

பேத்துதல் = அஞ்சிக் குழறுதல்; பேந்துதல் = அஞ்சுதல்; பேது> பீது> பீதி = அச்சம்; இதையும் வடமொழியெனப் பலரும் எண்ணுவர். பேத்து> பீத்து> பித்து = மயக்கம், மூளைக் கோளாறு, தலைக் கிறுக்கு, தலைச் சுற்றை உண்டாக்கும் நீர் (bile) அந்நீரை உண்டாக்கும் உறுப்பு (gall -bladder); பிதற்று> பிதத்து> பேத்து; இதைச் சங்கதம் கடன் வாங்கும். Monier Williams அகரமுதலி, etym. unknown என்று சொல்லும். பித்தம்> பைத்ய என்று சங்கதம் உருமாற்றிப் பயன்படுத்தும். பைத்தியம் வடசொல்லென மூலந்தெரியாமல் நாமும் சொல்வோம். பைத்தியம் = கிறுக்கு; பித்தம் பிடித்தல் = மனக் கோட்டங் கொள்ளல்; கோட்டி என்றாலே மனம் கலங்கியவன் என்று நெல்லைப் பகுதிகளில் சொல்வர். பித்தன் = மனக்கோளாறு உள்ளவன் ”மருளில் தணியாத பித்தனென்று” நாலடி 340; ”பித்தொடு மயங்கி” தேவா. 475.10. சுந்தரரின் முதல் பாட்டே, “பித்தா!” என்று சிவனை அழைத்துத் தொடங்கும். பித்துக் கொள்ளி = கிறுக்கன்; பித்துப் பிடித்தவன் = மனநலம் குன்றியவன்; பித்தேறி = கிறுக்கன்; பித்தோன் மத்தம் = கடுமையான மூளைக்கோட்டம்.

இத்தனை சொற்களையும் பார்க்கையில் பேதென்ற சொல்லிற்குப் ”பிரிந்தது” என்பதே அடிப்பொருளாய்த் தெரிகிறது, உடலிருந்து உயிர் பேதுறலாம் (பிரியலாம்). மன நினைவுகளின் தொகுதி பேதுறலாம் (கலையலாம்); இதன் வழி நினைவுகள் அழியலாம். நினைவுகள் புதுவரிசைப் படலாம். பேதுகள் நிறைந்தது பேதகம். நினைவுத் தொகுதி. உள்ளம் என்ற ஏனத்துள் நிறைந்துள்ள உள்ளீடு. எனவே பேதகம்+இயல் = பேதகவியல் என்பது psychology க்குச் சரிவரும் என்றே தோன்றுகிறது. வேண்டுமெனில் இன்னுஞ் சுருக்கிப் பேதியல் என்றுஞ் சொல்லலாம். குறும்புள்ள ஒருவர், ”பேதியல் என்பது குடற்பேதியைக் குறிக்காதா?” என்று கேட்கலாம். ”பித்தம் என்ற சொல்லைத் தமிழராகிய நாம் இத்தனை காலம் மனக்கலக்கத்திற்கும், உடல்கலக்கத்திற்கும் சேர்த்துப் பயில்கிறோமே?” என்று தான் நான் அவருக்கு விடைசொல்லமுடியும். இரண்டுமே கலக்கங்கள்  தான். ஆனாலும் அவற்றில் வேறுபாடுண்டு. ஓர் ஆசிரியர் இரண்டையும் வேறுபடுத்தி மாணவருக்குப் பொறுமையாக விளக்கத் தான் வேண்டும்.  ஒரு சொல் இரு பொருள் என்பது தமிழுக்கு ஒன்றும் புதிதல்ல.

இனி -iatric க்கு வருவோம். word-forming element, from Latinized form of Greek iatrikos "healing," from iatros "physician, healer" (related to iatreun "treat medically," and iasthai "heal, treat"); of uncertain origin, perhaps from iaomai "to cure," related to iaino "heat, warm, cheer," probably from a root meaning "enliven, animate" என்று ஆங்கிலத்தில் சொல்வர். தமிழில் ஆற்றுதல் என்பது healing தான். ”பேதாற்றியல்” என்பது psychiatry க்கு முற்றிலும் பொருந்தும்.

எனவே,  psychology = பேதகவியல்/பேதியல், psychiatry = பேதாற்றியல்; இடுகை முடிக்குமுன்   -iatry தொடர்பான வேறு சொற்களையும் தொட்டுக் காட்டுகிறேன்.

bariatric (adj.) surgery = பாரவாற்றுப் பண்டுவம் ["of or pertaining to obesity," 1976, from Greek baros "weight, a weight, burden," related to barys "heavy," from PIE root *gwere- (1) "heavy" + -iatric.]

geriatric (adj.) disease = கிழவாற்று நோய் [1909, formed in English from Latinized forms of Greek gēras, gērōs "old age" (from PIE root *gere- (1) "to grow old") + iatrikos "of a physician," from iatros (see -iatric)].

pediatric (adj.) medicine = பையலாற்று மருந்து [1849, from Greek paid-, stem of pais "child" (see pedo-) + -iatric].

podiatry (n.) = பாதாற்றியியல் [1914, formed from Greek pod-, stem of pous "foot" (from PIE root *ped- "foot") + iatreia "healing," from iatros "physician" (see -iatric). An attempt to supplant chiropody (see chiropodist) and distance the practice from the popular impression of unskilled corn-cutters. The National Association of Chiropodists changed its name to American Podiatry Association in 1958. Related: Podiatric; podiatris]

அன்புடன்,
இராம.கி.


No comments: