Monday, March 23, 2020

இலாடம்

மாடு, குதிரைகளின் ஓட்டத்தில் அவற்றின் குளம்புகள் தேய்ந்து காயம்பட்டுப் புண்ணாகாதிருக்க, குளம்புகளின் அடியில் ஆணியடித்துப் பொருத்தப்படும் கனத்த, இரும்பு வளை தகட்டையே இலாடம் (Horseshoe) என்கிறோம். இதற்கு ஈடான தமிழ்ச்சொல் தரும்படி முகநூல் சொல்லாய்வுக் குழுவில் முன்னால் ஒரு நண்பர் கேட்டிருந்தார். உணர்ச்சிகரமான செய்திகள் நாட்டில், இணையத்தில் அப்போது ஓடிக்கொண்டிருந்ததால், சற்று பொறுப்போமென எண்ணி என் மறுமொழியை உடனே இடவில்லை. தவிர, அகரமுதலிகளை மட்டும் பாராது, பல்வேறு பார்வைகளில் இலாடத்தை அலசவேண்டி இருந்ததால். தெளிவானபின் தனி இடுகையாய் இது அமைகிறது.   

பல்வேறு மொழிகளில் இலாடத்தின் இணைகளைத் துழாவுகையில், ஹோழ்ஸ் ஷு மலையாளத்திலும், ஹார்ஸ் ஷு கன்னடத்திலும், Gurrapudekka தெலுங்கிலும், GhOdyAcA nAla மராத்தியிலும், GhOda குசராத்தியிலும், nAal சிந்தியிலும், ghOde kee naal இந்தியிலும், NAla வங்காளத்திலும், இவற்றின் மூலமாய் Na'al பெர்சியனிலும் (Na'eleyn மாந்தர் புதையணி.) hudwa அரபியிலும், nalhesin குர்துசிலும் prsh ஈப்ருவிலும் (parsa= குதிரை.), mshipa ஸ்வாகிலியிலும் கிடைத்தன. சங்கதத்தில் KhuratrANa (PAdatrANa, pAduka போன்றவை பாதுகைச் சொற்கள்), பாலியில் KkurAvarana என்றுங் கிடைத்தன. இம்மொழிகள் எதிலும் ”இலாடத்தைக்” கண்டேனில்லை. ஆயினும் இதைப் பிறமொழிச் சொல்லாய் நண்பர் ஏன் எண்ணினார்? - என்பது எனக்குக் கொஞ்சமும் விளங்கவில்லை.

குத்தலுணர்த்தும் ”குள்ளலில்” பிறந்தது குதிரை, ஆடு, மாடு, கழுதைகளின் பாதக்குளம்பு. குள்>குளம்பு. (hoof). (குள்ளில் விளைந்த குளவியும், குத்தல்/கொட்டலைக் குறிக்கும்.) “வெள்ளுளைக் கலிமாம் கவி குளம்புகள” என்பது புறம் 15. ம. குளம்பு; க. கொளக; கொளகு, கொணகு; கோத. கொள்அ; பட. கோகு. தரையிற் குத்தித் தாவும் இவ்வகை விலங்குகளின் பல்வேறு பெயர்களும் குளம்பாலே தான் பெரிதும் எழுந்தது புரிகிறது. நிலம் பற்றிப் பாதம் பரந்து நாம் நிற்கையில், எவளுகையில் (evolution) உருவான இவ் விலங்குகளோ தத்தம் குளம்புகளைக் குறைத்து, வேகங் கூட்டியுள்ளன. பேரிடர்கள் துரத்துகையில், அச்சத்தால் இவையோடக் குளம்புகளே காரணமாக இருந்துள்ளன. விலங்குப் பராமரிப்பிலும் குளம்புகளே முகன்மையென்பார்.

கீழ்த்தோல் ஓரளவு கடிதாயினும், அளவுக்குமீறிய தேய்வில் குளம்புகள் புண்ணாகி, அழுகிப் பூச்சிகள் மண்டுமாம். குளம்புச் சிலந்தி = புண்குடைப் பூச்சி. குளம்புக் களிம்பு = புண்மருந்து. குளம்பு நகம் கிள்ளிச் சீவிய நகத் துண்டுகள் குளம்புச் சீவலாகும். மாடுகளுக்கு இலாடந்தைப்பது கூடக் குதிரையைப் பார்த்தென ஊர்ப்பக்கஞ் சொல்வார். வியப்பெதுவெனில், (கழுதை நம்மூரைச் சேர்ந்திருந்தாலும்) குதிரை, இறக்குமதி விலங்கு. எப்போது அது இறங்கியது? தெரியாது. சங்க காலத்திருந்தே இறக்குமதி நடந்துள்ளது. குதிரைவணிகம் நம் வரலாற்றைத் தொடர்ந்து அலைக்கு அளித்தது. மாணிக்கவாசகரின் வேந்தனான தானைவேல் வாகைமாறன் (அவனை அரிமர்த்தன பாண்டியனென்று சொல்லுங் கட்டுக்கதையை நான் நம்புவதில்லை.) குதிரைகள் குறைந்துவிட்டனவென்று தன்னமைச்சனை திருப்பெருந்துறைக்கு (அறந்தாங்கி வட்டத்திலுள்ள ஆவுடையார் கோயில்) அனுப்பி குதிரை வாங்கிவரச் சொல்வான். சுவையாரமான கதை. ஆனால் உருப்படியாய் அதை அறிய 11/12 ஆம் நூற்றாண்டு திருவாலவாயுடையார் புராணம் போய்ப் படிக்கவேண்டும். கற்பனை மிகுந்த 17 ஆம் நூற்றாண்டுத் திருவிளையாடற் புராணத்தைப் படிக்கக் கூடாது.)

கழுதை, குதிரைப்பெயர்கள் தமிழில் 3,4 முறைகளில் எழுந்துள்ளன. அத்தல்= ஓரிடஞ் சார்ந்து, எட்டுதல் (reach) என்று பொருள்கொள்ளும். அடைதல் வினையும் அத்தலோடு சேர்ந்ததே. இச்சொல்லுக்கு இணையாய் மலையாளத்தில் அத்துகவென்றும், கன்னடத்தில் .அதுகென்றும், தெலுங்கில் அத்தென்றுங் குறிப்பர். அத்திருத்தல்= எட்டியபடி இருந்தல். (எட்டும் வேகம் முகன்மையில்லை.) நம் கழுதையும், இறக்குமதியான குதிரையுஞ் சேர்ந்த கலப்பினத்தைத் தமிழில் அத்திரி [கோவேறு கழுதை (mule; கோ ஏறுங் கழுதை)] என்பார். பாட்டுடைத்தலைவர் அத்திரி பூட்டிய தேரிற் சென்றதாய்ச் சங்கப்பாடல்களுண்டு. ’அத்து’ என்ற வினை வட புலங்களில் அஶ்து> அஶ்ஶெனப் பலுக்கப்படும். இதைத் தொடர்ந்து எழுந்த சங்கதச்சொல் அசுவமாகும். தமிழுக்கு இது அயலெனினும், அதன்.வேர்வழி எழுந்த ’அத்தம்’ தமிழுக்கு இயல்பே. Asva khura= Horse hoof, asva gati= pace of horse, asva gosht.ha= stable for horse, asvasikitsa= veterinary art. அடுத்து இயல்வது அயல்வதாகி அயமென்று பெயரும் குதிரைக்கெழும்.

மேலேறிச் செல்லத்தகும் பொருளில் (இவலுதல், இவல்>இவலி> இவுலி>) இவுளி யென்ற சொல்லெழும். முன்செல்வது, குதிப்பது, விரைவது எனும் பொருளில் (உன்னல்=jump) உன்னியென்ற சொல்லெழும். குள்=குத்தல் குல்> குது>குதி> குதிரை எல்லோருக்கும் தெரிந்த சொல். குல்> குள்> குட்கு>குக்கு> கொக்கு குதிரையைக் குறிக்கும். குள்> குடு>கோடு>கோடகம்>கோடை, குள்>கோள்> கோணம் என்பவையும் குதிரையைக் குறிக்கும். சிலபோது விதப்பாய் ஆண் குதிரையைக் குறிக்கும். கோடையில் தொடர்பான வடபுலச் சொற்களை நோக்குங்கள். இனிக் கிள்ளுவது>கிளர்வது (விரைவது) கிள்ளையாகும் குல்> குந்து>குந்தம், குந்தம்>கந்தம் என்பனவும் விரையுங் குதிரையைக் குறிக்கும். கந்த நீட்சியாய்க் கந்துகம், கந்தருவம் போன்றன எழும். குத்தலிற் கிளைத்த இன்னொரு சொல் கல்லுதல். கற்கி, குரகதம் போன்றவையும் இவற்றொடு தொடர்புடைய சொற்கள் தாம்.

துரத்தல்= செலுத்தல். துரகம் மணிமேகலையில் குதிரையைக் குறிக்கும். (துரவர்/துரகர்= driver. ஓட்டுநரோடு, இதையும் பயனுறுத்தலாம்.) துரத்தலில் கடக்கும் தொலைவு தூரம். தொலைவும் தூரமும் துல் எனும் ஒரே வேர்ச் சொல்லில் கிளைத்தவை தாம். துரகதம், துரங்கம் போன்றவை துரகநீட்சி. தூசி= குதிரைப்படை. ஆடுமாடு விரட்டல் பத்துதலாகும். பத்திரி= பத்தலுக்கான குதிரை. புர்ர்>.பீர்= பீரிட்டு வெளிப் படும் வேகக்குறிப்பு. பொருக்கு/புருக்கு/பிருக்கு = விரைவுகுறிக்குஞ் சொற்கள். புரு/பர = விரையொலிகள். புர்>புரவல்= வேக வெளிப்பாடு. புரவு> புரவி; (ஐயனார் கோவின் புரவியெடுப்பை எண்ணுங்கள்.) படபட>பரபர= வேகக்குறிப்பு. பரிதல்= ஓரிடங்கடத்தல், செல்லல். பரி= குதிரை. பாய்மா= பாய்ச்சலோடு செல்லும் மா. வாசி = செக்கு மாடாய் வட்டில் நகரும் குடும்ப வேலைக்குப் பழகிய குதிரை. பிடரி மயிரை வெட்டிவிடுவதால், கொய்யுளை (வெட்டிய பிடரி மயிர்), சடிலம் என்ற சொற்களுங் குதிரைக்கு உண்டு. உடல் அளவில் பெரிய, விரைவுக் கணங்கள், தமிழில் 3 விதஞ் சொல்லப்படும். கனவட்டம்= கனத்த, வளமான பாண்டியன் குதிரை. குல்>குரம்>கோரம்= உருவிற் பெரிய, வலிந்த குளம்புள்ள சோழன் குதிரை. (தெ. குர்ரமு= குதிரை.) படபட>பாடு>பாடலம்= விரைவுகாட்டும் சேரன் குதிரை (படு>பாடு= பெரியது. படபட= வேகக் குறிப்பு). .

குதிரை வேகத்திற்கான கலைச்சொற்கள் பல. walk (5-8 Km/Hr)= நடை; Trot (8-13 Km/hr)= துரை/துரம் (முடுக்கலைக் குறிக்கும் துரகம், துரகதம், துரங்கம் போன்றவை வழக்கிறந்து, துரத்தல், தூரம் மட்டும் இக்காலத்திலுண்டு. Pace (8-13 Km/Hr) பரபர>பரி (பரிதல்=ஓடல்), canter (16-27 Km/hr) கதி/கந்து, கது/கதம், கந்துகம், கந்தருவம் எல்லாம் இதோடு தொடர்புடைய சொற்களே. Gallop (26-30 Km.hr) கலி, கடு, சடுதி, பாய் போன்றவை தொடர்புடையவை. இவ்வளவு குதிரைச்சொற்கள் தமிழில் எங்ஙனம்? வியப்பாகிறதல்லவா? ”பொடேட்டோ” நம்மூரில்லை தான் ஆயினும் ”உருளைக்கிழங்கு” எனப் பெயர் வைத்தோமே? தக்காளி, முட்டைக்கோசெனப் பல்வேறு பெயர்களுள்ளன. குதிரைச் சொற்களும் இப்படித் தான் இங்கே தோன்றியவை. குதிரைகள் என்பன தமிழர்களைப் பெரிதும் கட்டிப் போட்டுள்ளன. தமிழ்ப்பெயர்கள் மிகுதி.

“நிறுவனப் பெயர், பொரிம்புப்(brand) பெயர், அறிவியற் பெயர்களைத் தமிழாக்கக் கூடாது" என இக்காலத்தில் சில அறிவுய்திகள் ஆர்ப்பாட்டஞ் செய்வர். கூப்பாடில்லா அக்காலத்தில், தமிழ்ப்பெயர்களே வெளிநாட்டில் இருந்து வந்த பொருள்களுக்கு இடப்பட்டன. பல்லவருக்கு அப்புறமே நம் தலை மேல் சங்கதம் ஏறி உட்கார்ந்து கொண்டு, எல்லாங் குட்டிச்சுவரானது. இன்று, ஆங்கிலம் நம் தலைக்கு மேல் நின்றுகொள்வதால், வழக்கம் போல் அறிவுய்திகள் தடுமாறுகிறார். ஒருங்குறி, முகநூலென்று சொல்லக்கூடாதாம். யுனிக்கோடு, ஃபேசுபுக் என்று சொல்ல வேண்டுமாம். தமிழை வாழவும் விடாது, சாகவும் விடாது, தமிங்கிலமாய் மாற்றித் தீர்க்கச் சிலர் கங்கணங் கட்டி நிற்கிறார். தமிழை மறந்தவரோ pace, trot, canter, gallop என எழுத்துப் பெயர்ப்பில் எழுத முயல்கிறார். கூடவே தமிழிற் சொற்களில்லையென அடம்பிடிக்கவுஞ் செய்கிறார். மொத்தத்தில் அவரவர் அறியாமையை மொழியின் இயலாமையாக மாற்றத் துடியாய்த் துடிக்கிறார்.

இலாடக் கதையைச் சற்று விளக்கமாய்ப் பார்ப்போம். சாலைகளுக்கு பெரிதுங் கல் பாவத் தொடங்கியது உரோம ஆட்சியிலென்பர். அதற்குமுன் உலகெங்கும் தேர்களும் குதிரைகளும் மண்சாலையில் ஓடின. பல நேரங்களில் நிலவியற்கைக்குத் தக்கச் சேற்றிலும், பள்ளத்திலும், மணலிலும் இவை மாட்டிக்கொள்ளும். எனவே நடக்கும், துரக்கும் வேகத்திற்கு மேல் குதிரைகளும், தேர்களும் போகவில்லை. ஒருநாளைக்கு 40/50 கி.மீ. தொலைவு போனாலே வியப்பு. அவ்வப்போது குதிரையை நிறுத்தி நீர்கொடுத்து, உணவு அளித்து ஓய்வெடுத்துப் போவதே வழக்கம். இதற்காக, அசோகர் மட்டும் ”சத்திரம், சாவடி கட்டவில்லை”. ஒவ்வொரு நாகரிகத்தாரும் அவரவர் பகுதியில் இவற்றைக் கட்டினார். நம்மூரிலும் சில காதங்களுக்கு ஒருமுறை தாவளங்களைக் கட்டினார். (தாவளம்= தங்கும் lodge;)

துரத்திற்கும் கூடிய வேகத்தில், கல் பாவிய சாலையிற் குளம்புகளுக்குக் காயமேற்படுவதைத் தவிர்க்க இலாடமடிக்கத் தொடங்கினார். இதுமுதலில் எங்கு எப்போது தொடங்கியது? தெரியாது. குதிரைகளை நன்கறிந்த (துருக்கியின் பழம்பகுதிகளிலிருந்த) மித்தனிகளிடமா, ஹுரியன்களிடமா? தெரியாது. (ஏறத்தாழ பொ.உ.மு.1350-1300களில் ’கிக்குளி’ என்ற குதிரைப் பயிற்சி நூல் இருந்துள்ளது.) பொ.உ.மு.400 அளவிலிருந்த எத்ரசுக்க இலாடம் கிடைத்துள்ளது. இது குதிரைக்குளம்பு இலாடமா? அன்றி. படைவீரர் புதையணிகளின் (boots) கீழமையும் தகடா? தெரியாது. ஒருவேளை நாம் புதையணி போடுவது போல் குதிரைகளுக்கும் அணிவித்தாரோ? பொ.உ.மு. 100 அளவில் உரோமராட்சியிலும் புதையணிகள் புழங்கின. மேற்சொன்ன சங்கதச் சொல்லான KhuratrANa /PAdatrANa கூட இலாடங்குறிக்காது முந்தைப் பொருளில் புதையணி குறித்ததாகலாம். பொ.உ.500 அளவில் பெல்ச்சியத்தில் இலாட நுட்பியல் தெரிந்திருக்கலாம். கட்டாயமாக பொ.உ.900 அளவில் இரோப்பா எங்கணும் பரவியிருந்தது.

எக்கால கட்டத்தில் ஆசியாவினுள் இது பரவியது? தெரியாது. பொதுவாய் இந்தியாவிற்கு அரேபியாவிலிருந்தும், பாரசீகத்திலிருந்தும் குதிரைகள் வந்து இறங்கின. மகதத்திற்கும் வடபுல அரசுகளுக்கும் உத்தரப்பாதை தக்கசீல வழி குதிரைகளிறங்கின. பாருகச்சா (Baroach) வழியிலும் மகதம் குதிரைகளை இறக்கியது. படித்தானங் (Paithan near Aurangabad) கொணர்ந்து தக்கணப் பாதை வழி மகதம் கொண்டுசென்றார். பாருகச்சம் விட்டால், கார்வார், நறவு (near mangalore), மேற்குத் தொண்டி (Near cannanore), முசிறி ( Pattanam) என்று குதிரைகள் இறங்கின. குமரிமுனை சுற்றி கொற்கை, (இலங்கைசுற்றி) அழகன்குளம், திருப்பெருந்துறை, கோடிக்கரை, அரிக்கமேடென இறங்குதுறைகள் பட்டியல் ஒன்றைச் செல்லும். கலிங்கரின் பாலூர் (Paradeep) வரை வணிகம் நடந்தது. தமிழகத்திற்கு மேற்கே முன் கடற்கரையில் இருந்தோர் வலுவிழந்த குதிரைகளை எடுத்துக்கொண்டார். வலுவிலாக் குதிரைகளே, பெரும்பாலும் தமிழகத்திற்குக் கிடைத்தன. (எதையும் முன்னாற் பொறுக்குவோர்க்கே எந்தச் சந்தையிலும் நல்ல பொருள் கிட்டும்.) நல்ல குதிரைகள் பெற, மராட்டியத்தில் இருந்த நூற்றுவர் கன்னரை விடத் தமிழர் அதிகக் காசு கொடுக்கவேண்டியிருந்தது. குதிரை வாணிக நுணுக்கம் அறிந்துகொள்ளத் திருவாலவாயுடையார் புராணம் படியுங்கள்.

இன்னொரு தந்திரமும் இதில் நடந்தது. இலாடநுட்பம் தெரியாது மூவேந்தருக்கு குதிரைச் செலவு ஏராளம் ஆனது, இந்நுட்பியலை குதிரை வணிகரான அரேபியரும், பாரசீகரும் நெடுங்காலம் பொத்திப் பொத்திக் காப்பற்றினார். இந்தியாவில் இலாட நுட்பம் பரவ 500/600 ஆண்டுகள் ஆயிற்றாம். (துல்லியமாய்க் கணிக்க முடியவில்லை. குதிரைகளைக் கட்டியாளக் கூப்பிட்டு வந்தவர் இங்கே நம்மூரில் பெண்ணெடுத்தார். கொடிவழியையும் உருவாக்கினார். மலப்புறம், கீழைக்கரை, முத்துப் பேட்டை, நாகபட்டினம் எல்லாம் நாட்பட்ட அரபுக் குடியிருப்புகள் தாம்.) பொத்தி வைக்கப்பட்ட கமுக்கம் காரணமாகவே இலாட நுட்பம் தெரிந்தவன் போரில் வென்றான்; நாட்டின் குதிரைக் கொள்முதற் செலவைக் குறைக்க முடிந்தது. தெரியாதவன் குறை ஆயுளிற் செத்துப் போகும் குதிரைகளை வாங்கக் காசு கொடுத்துக் கொண்டே இருந்தான். இக்காலம் வணிக நோக்கில் ஆயுத நுட்பங்களை தேர்ந்த முறைகளில் விற்று, வெற்றி தோல்விகளை உருவாக்குகிறாரே அதுபோல இதுவும் நடந்தது.

இலாடத்திற்கு, ”மாடு/குதிரைக் குளம்புகளடியில் ஆணியடித்துப் பொருத்தும் கனத்த, இரும்பு வளைதகடு, நெற்றி, புளியமரம், கூர்ச்சரப் பகுதி, வங்காளப் பகுதி, கழற்றத்தக்க, சங்கிலிகளில் அமைந்த கொக்கி, சேலை, மூல நாள்காட்டிற்கும் (Nakshatra) சூரியனுக்குமுள்ள தூரத்தையொட்டிக் கணிக்கும் நாளெ”ன்று வெவ்வேறு பொருள் சொல்வர். 7ஆம் நூற்றாண்டில் அப்பர் காலத்தில் நெற்றிப் பொருள் இருந்ததற்குச் சான்றுள்ளது. 6ஆம் திருமுறை திருக்கன்றாப்பூர் நடுதறியப்பரைத் தொழும் 61ஆம் பதிகம் 3ஆம் பாட்டில் “எவரேனும் தாமாக இலாடத்து இட்ட திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி” என்ற ’வளைநெற்றி’ குறிக்கும் வாசகம் வரும். இலாடத்தின் முதற் புழக்கம் இதுவே. இதற்கு வெகுகாலம் முன், இலாடமென்ற சொல் எழ வாய்ப்பில்லை. பெரும்பாலும் பொ.உ.400-600 களில் இச்சொல் எழுந்திருக்கலாம்.

இல்+ஆடு>இலாடு என்பது இல்லி, இளகி மெலிதாவதைக் (thinning) குறிக்கும். ”இல்” என்பது துளைத்தல், பிரித்தல், இன்மைக் கருத்துவேர். இதில்விளைந்த சொற்கள் தமிழில் நூற்றிற்கும் மேலுண்டு. கொல்லுப் பட்டறையில் இரும்புத் தண்டைச் சூடாக்கி இளக்கி (குத்தி) அடித்துத் தட்டையாக்குவதே இலாடல் வினையாகும். இலாடல் வினையிற் செய்யப்பட்டது இலாடம்.

[இல்லின் இன்னொரு பொருள் பிரி என்றேன். இந்திய முகனை நிலத்தில் இருந்து இல்லியது இலங்கை. இல்தல், ஈலல்>ஈழல் என்றும் சொல்லப்படும். ஈழம்= ஈலப்பட்ட பகுதி. ஈல்தல்>ஈர்தல்>இரு>இரண்டு என்பது ஒன்று இரண்டாய்ப் பிரிவதைக் குறிக்கும். இல்தலை இலங்குதலென்றுஞ் சொல்வர். அதற்கும் பிரித்தல் பொருளுண்டு. இலங்கையும் ஈழம் போலவே தமிழ்ச் சொல் தான். (அது சிங்களமில்லை. அவர்கள் தமிழருக்கு முன் இருந்தவரும் இல்லை. இந்தையிரோப்பியனில் isle/ஈல், island/ஈலண்ட் என்று பொதுப்படச் சொல்கிறோமே அதுகூட ஈழம் என்ற விதப்புப் பெயரின் பொதுமையாக்கல் ஆகலாம்.) 

இலங்குதலின் எதிர்ச்சொல் இலங்காதிருத்தல். சுள்>(சொள்)>சொள்கு> சொகு> சோகு>சோகம் என்பது திரண்ட தொடையைக் குறிக்கும். [ஊருவும் கவானும் சோகமும் குறங்கே” திவாகரம் 351] திகுதிகுவெனத் திரள்வது ஆவதாலேயே thigh எனும் இந்தை யிரோப்பியச்சொல் பிறந்தது. இலங்கா சோகம்= பிரியாத்தொடை. இற்றை வட மலேசியாவின் இப் பழம்பெயர். எத்தனை பேருக்குத் தெரியும்? ஜோகூர் வரை அந்தத் தொடை நீண்டு கிடக்கிறது. பொ.உ.2 ஆம் நூற்றாண்டில் காழக(கடார) அரசு இலங்கா சோகத்தில் தொடங்கியிருக்கலாம் என்பார். இதுவே தென்கிழக்காசியாவின் முதலரசுத் தொடக்கமாம். 

இலாத என்பது இராத என்றும் ஆகும். இராத நிலம் = பிரியாத நிலமாகி நம்மூரில் இராமம் ஆகியது. இராமத்தின் ஈசர் இராமேசர். அவர் கோயில் இராமேசம். சங்கதம் அதை இராமேஸ்வரமாக்கும். இலங்கையை உடன் சேர்த்து இராமயணக் கதைக் கட்டி, ”சண்டை முடிந்து இராமர் இங்குவந்தார், ”இராம நாதர்” என்னும் மணல் இலிங்கத்தைச் சீதை பிடித்தாள். வடக்கிருந்து அனுமன் கல் கொண்டு வந்தான். “இராமலிங்கம்” செய்தார். இரு இலிங்கங்களும் கருவறையில் உள்ளது என்பது சுவையான கதை. ஆனால் உண்மை அல்ல.  ”இரு/ஈர்” என்பது புரிந்தால் இராமம்= பிரியாநிலம் என்று விளக்கமாய்ச் சொல்லலாம்.

ஆகக் குணகடல் சுற்றியுள்ள ஈழம்/இலங்கை, இலங்காசோகம், இராமம் ஆகிய அத்தனை பெயர்களும் தமிழ்த் தொடர்புற்றவை. இன்றோ வலிமை யற்று, பெருமிதம் இன்றிச் சோகமாய்த் தமிழர் கிடக்கிறோம். நம் பங்களிப்பு எதுவும் உலகிற்கும் விளங்கவில்லை. நமக்கும் விளங்கவில்லை. இலாடத்தை அலசும் போது இதையும் சொல்லிவிடவேண்டும் என்று சொன்னேன்.]       

புளியங் காயும், பழமும் வளைந்து இலாடத்தோற்றங் காட்டும். இரும்புக் கம்பியை இளக்கி வளைத்துத் தட்டையாக்கி இலாடஞ் செய்வர். இலாட வளைவே அதன் உட்பொருள். கழற்றக் கூடிய சங்கிலியின் கொக்கி (hook) 2 பகுதி கொண்டது. ஒன்று இலாட வளைவு. இன்னொன்று முழு வளையம். இலாடம் வளையத்துள் நுழையும் மொத்தத்தைக் கொக்கியென்பார். கூர்ச்சர மாநிலத்தின் சௌராட்டிரம் இலாடத் தோற்றங் காட்டும். முழுக் கூர்ச்சரத்திற்கும் பகரியாய் ‘இலாடம்’ என்ற பெயர் பயன்பட்டதுண்டு. [LAta - Southern part of Gujarat consisting major cities like Surat, Bharuch, Kheda, Vadodara; West of Awanti, Northwest of Vidharba; LAta >Larike (in Ptolemy), LAra in Prakrit will become LAr in Hindi.] பொ.உ.500/600 களிலிருந்த கூர்ச்சர இலகுலீசரைச் சில சிவன் கோயில்களில் திருவுருவாக்கிச் இலாட சன்னியாசி  என்றழைப்பார். (தெற்குச் சிவநெறிக்கும் இவருக்கும் உறவுண்டு.) கூர்ச்சரப் பக்கம் கிடைக்கும் ஒருவிதப் பருத்திக்கு இலாடப் பருத்தி என்ற பெயருண்டு.

கூர்ச்சர இலாடத்தை உள்வெளியாய் மாற்றிப் போட்டது போல் வங்கக் கடற்கரையின் ஒருபகுதியும் (ஹால்தியாத் துறைமுகப் பக்கம்) அதன் பின்னுள்ள நிலப்பகுதியும் இலாடமென்றே அழைக்கப்படும். கூர்ச்சர இலாடமும் வங்க இலாடமும் இராடம் என்றுஞ் சொல்லப்படும். [RAdha> LAdha  in Prakrit>Rarh in Bengali West of Calcutta.] சிங்களத்தின் முத; அரசனான விசயன் வங்க இலாட தேசத்து இளவரசனே. கூர்ச்சரத்தோடு அவனைத் தொடர்புறுத்துவது தவறான புரிதல்.) இராசேந்திரனின் வங்காள மனைவி இலாட மாதேவி என்று அழைக்கப்படுவாள். இலாட வளைத்தகட்டை ஏதோ வகையில் நீற்றிச்செய்த (to oxidate) பொடி இலாட சிந்தூரம் எனப்படும். ”சேலை, மூல நாள்காட்டிற்கும் (Nakshatra) சூரியனுக்குமுள்ள தூரத்தை யொட்டிக் கணிக்கும் நாள்” என்ற இரு பொருள்களும் எப்படி எழுந்தன என்று எனக்குத் தெரியவில்லை.

முடிவாகச் சொன்னால் இலாடம் என்பது நல்ல தமிழே. (யாரோ புரியாமல் ”லாடம்” என்று எழுதுவதாலே அது பிறமொழிச்சொல் ஆகி விடாது.) இலாடம்  பெரும்பாலும் பொ.உ.400-600 இல் எழுந்திருக்கலாம்.

அன்புடன்,
இராம.கி.

No comments: