Saturday, March 28, 2020

ஔகாரப் பித்து

இது 11/12 ஆண்டுகளுக்கு முன் எழுதியது

அறியாமை என்பது பல்வேறு உருவம் எடுக்குமாம்.

1. கிணற்றுக்குள் கிடக்கும் தவளையின் அறியாமை.
2. சூடாவது தெரியாமல் நீருக்குள்ளேயே அமிழ்ந்து சுகங்காணும் தவளையின் அறியாமை.
3. கொடுத்திருப்பது பூமாலை என்று தெரியாமல், அதைப் பிச்சுப்போட்டு உதிர்த்தெறியும் குரங்கு அறியாமை
4 “தன் கண்ணை மூடிக் கொண்டு உலகமே இருண்டது போல் காட்டிக் கொள்ளும்” பூனையின் அறியாமை.

முதல் மூன்று அறியாமைகளையும் ஓரளவு பொறுக்கலாம். எப்படியோ சொல்லிக் கொடுத்து அறியவும் வைக்கலாம். ஆனால், பூனை அறியாமை இருக்கிறது பாருங்கள். இந்தக் “கொனஷ்டையை”த் திருத்தவே முடியாது. தூங்குவது போல் நடிக்கும் சிலரை எழுப்புவதே இயலாது.

வடமொழியில் சில சொல்லாக்க வழக்கங்கள் உண்டு. குறிப்பாக இரண்டு பெயர்களை வைத்து உருவாக்கும் கூட்டுப் பெயர்ச்சொற்கள், அல்லது பெயரடை சேர்ந்துவரும் கூட்டுச் சொற்கள். இதில் முதலில்வரும் பெயர், அல்லது பெயரடை இகர/எகரத்தில் இருந்தால் கூட்டுச் சொல்லில் அது ஐகாரமாகும். அன்றி உகர/ஒகரத்தில் இருந்தால் கூட்டுச் சொல்லில் அது ஔகாரமாகும். இந்த ஒலிமாற்றப் பழக்கம் தமிழில் இல்லை. பின்னால் தமிழில் கடன் வாங்கும் போது சில பெருகபதிகள் (=ப்ரகஸ்பதிகள்) கூட்டுப் பெயரின் ஐகார/ஔகார முதற்பகுதியை அப்படியே கடன்வாங்கி வடமொழி இலக்கண மாற்றத்தையும் தமிழுக்குள் வேண்டாத படி கொணர்ந்து திணிப்பர். போதாதற்கு இந்த ஐகார/ஔகார மாற்றமில்லாத வடமொழிச் சொல்லையும் கடன் வாங்கித் தமிழில் கொட்டி வைத்திருப்பர். ஒத்தைக்கு இரட்டைத் தாழ்ப்பாள். இதில் பென்னம் பெரிய அரசியல் வாதிகளும் தமிழறிஞரும் கூட உண்டு. பௌத்தம் என்று சொல்லாவிட்டால், ஒரு சிலருக்கு, “ஜென்ம சாபல்யம்” கிடைக்காது.  கீழே பல சொற்களைக் காட்டியுள்ளேன்.

அட அறியாதவரே? கடன் வாங்குவதென்று முடிவு பண்ணிவிட்டீர்? அப்புறம் என்ன ஒரே பொருளுக்கு 2 உருவத்தில் கடன்? ஒரு கடன் பற்றாதா? பெரிய பூனைக்குப் பெரிய ஓட்டை, சின்னப்பூனைக்குச் சின்ன ஓட்டையா? என்ன கூத்து இது? மேற்சொன்ன பெயரடை அல்லது முதற் பெயர்ச்சொல் வட மொழியிலேயே உருவான சொல்லாகவோ, தமிழிலிருந்து கடன் வாங்கிய சொல்லாகவோ இருக்கும். அம்முதற் சொல்லை கீழே பட்டியலிடுகிறேன். 2005 இல் என் வலைப்பதிவில் ஔகாரச் சொற்கள் எவ்வெவை தமிழ், எவை கடன் வாங்கியவை என்றும் ஒரு தொடர் எழுதினேன்.

https://valavu.blogspot.com/2008/05/1.html
https://valavu.blogspot.com/2008/05/2.html
https://valavu.blogspot.com/2008/05/3.html
https://valavu.blogspot.com/2008/05/4.html

(தமிழிலிருந்து வடமொழி கடன் வாங்கியதென்று சொல்வதையே “அபசாரம், அபசாரம்” எனும் வடமொழி பத்தர் இப்போதெல்லாம் இணையத்தில் மிகுதி. அவர் ஆட்சி நடக்கிறதாம். இவருக்கெல்லாம் தேவநேயப் பாவாணரைக் கண்டாலே ஆகாது; அந்தத் திட்டு திட்டுவார். ஏனெனில் சம்மட்டி அடியாக இன்னின்ன சொற்கள் வடமொழி தமிழிலிருந்து கடன்வாங்கியதென்று அடையாளம் கண்டு அவர் பட்டியலிட்டு விட்டாரே? பொறுக்குமா? அதெப்படி, “கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளுக்கு” என்று சங்கத விழையரின் புளுகுக் கதைகளை வெளியிற் கொணர்ந்து போடலாம்? அப்படிப் போட்டவரைத் திட்டாவிட்டால், பத்தனுக்கு ”மோட்சம்” கிட்டுமோ? எனவே ”பள்ளத்தில் இருந்து மேட்டிற்குத் தண்ணீர் ஓடுமா?” என்று ”வியாக்யானம்” சொல்லி முடிந்த மட்டும் ”சமஸ்க்ருதாய நமஹ” என்று சாதிப்பார். எல்லாமே ”வடமொழியிலிருந்து தமிழுக்குக் கடன் வந்தது” என root - ஐ மாற்றி மேட்டிமைத் தனம் காட்டுவார்.)    இந்த ஐகார/ஔகாரப் பேர்வழிகளுக்கு,

உபாசனம் வேண்டாம்; ஔபாசனம் வேண்டும்.
கோசிகன் வேண்டாம்; கௌசிகன் வேண்டும்.
கோதமன் வேண்டாம் கௌதமன் வேண்டும்.
கோவனம் வேண்டாம்; கௌபீனம் வேண்டும்.
கோளி வேண்டாம்; கௌளி வேண்டும்.
சுகம் வேண்டாம்; சௌக்யம் வேண்டும்.
சுகந்தம் வேண்டாம்; சௌகந்தம் வேண்டும்.
சுந்தரம் வேண்டாம்; சௌந்தரம் வேண்டும்
சுபாக்கம் வேண்டாம்; சௌபாக்யம் வேண்டும்.
சூரம் வேண்டாம்; சௌரம் வேண்டும்.
சுலபம் வேண்டாம்; சௌலப்யம் வேண்டும்.
துலம் வேண்டாம்; தௌலம் வேண்டும்.
பூஷம் வேண்டாம், பௌஷம் வேண்டும்
புத்தம் வேண்டாம், பௌத்தம் வேண்டும்.
புத்ரன் வேண்டாம்; பௌத்ரன் வேண்டும்.
பூதிகம் வேண்டாம்; பௌதிகம் வேண்டும்.
பூமம் வேண்டாம்; பௌமம் வேண்டும்.
பூர்ணம் வேண்டாம்; பௌர்ணம் வேண்டும்.
புராணிகம் வேண்டாம்; பௌராணிகம் வேண்டும்.
புரோகிதம் வேண்டாம்; பௌரோகித்யம் வேண்டும்
பூழியன் வேண்டாம்; பௌழியன் வேண்டும்.
முண்டிதம் வேண்டாம்; மௌண்டிதம் வேண்டும்.
முத்தம் வேண்டாம்; மௌத்திகம் வேண்டும்.
மூலி வேண்டாம்; மௌலி வேண்டும்.
முவ்வல் வேண்டாம்; மௌவல் வேண்டும்;
மோனம் வேண்டாம்; மௌனம் வேண்டும்.
யுவனம் வேண்டாம்; யௌவனம் வேண்டும்.
வேதம் வேண்டாம் வைதீகம் வேண்டும்.

(ஐகாரத்தில் ஒரு சொல் தான் இங்கு கொடுத்திருக்கிறேன். அதிலும் ஏராளம் சொற்களுண்டு. தேடினால் உங்களுக்கும் கிடைக்கும்.)

பூதிகம் என்றால் பூதம் வந்து விடுமாம். பௌதிகம் என்றால் வந்துவிடாதாம். என்ன, சமர்த்து பாருங்கள்? முகத்தில் அப்படியே வழிகிறது. கண்ணை மூடிக் கொண்ட பூனைகளுக்கு என்னத்தைச் சொல்ல? தமிழராகிய நாம் ”பௌதிக விஞ்ஞானம்” எனுங் கழுதையைக் கட்டி, மாரிலடித்துக் கிடப்போம். தாசானு தாசன் ஆவதென்று முடிவெடுத்த பின், கூழைக்கும்பிடு போட்டால் என்ன? குப்புறக் கீழேவிழுந்து அட்டாங்கம் போட்டால் என்ன?

“சரணம், சுபமஸ்து”

அன்புடன்,
இராம.கி.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

ஐயா வணக்கம்... கொடுத்துள்ள இணைப்புக்கு செல்கிறேன்...