Tuesday, March 24, 2020

பிரச்சினை - சிக்கல்

நம்மை விட்டகலாத ஒரு விந்தைப்பழக்கம் நம்மிடம் இருக்கிறது. நம் கண்ணிற்குத் தமிழ் போல் தெரியாது அதேபொழுது இற்றைத் தமிழில் பலரும் பழகும் சொல்லெனில் கண்ணை மூடிக் கொண்டு அதைச் சங்கதம் என்கிறோம். பாகதமென்ற இன்னோர் இயலுமையைக் காண மறுக்கிறோம். பல்லவர் காலத்திற்றான் சங்கதம் சாத்தாரத் தமிழைத் தாக்கத் தொடங்கியது. சங்க காலத்தில் நம்மோடு இடையாடிய வடபுல மொழி பெரும்பாலும் பாகதம் (மாகதி/அருத்தமாகதி/பாலி). நம்மிடமிருந்து பாகதம் கடன் வாங்கியது ஒரு தொகுதியெனில், பாகதத்திடm இருந்து நாம் கடன் வாங்கியது இன்னொரு தொகுதி. சில சொற்களில் கடன் கொடுத்ததையே சிலகாலத்திற்குப் பின் உருமாற்றிப் பாகதத்திடமிருந்து மீட்டு நாம் வாங்கி யுள்ளோம்.

[இப்போதெல்லாம் நம்மூரில் பாகதப் படிப்பு அருகிப் போனது. ஒரு காலத்தில் சென்னைப் பல்கலையில் தமிழ் படித்தோர், பாகதமோ, சங்கதமோ கட்டாயம் ஓராண்டு மொழிப்பாடமாய்ப் படித்தாக வேண்டும். இது போகத் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவென ஏதேனுமொரு திராவிட மொழியைக் கற்றே தீரவேண்டும். இப்போதெல்லாம் அக்கட்டாயங்கள் நீர்த்துப் போய், தரங் குறைந்து, அரை குறை ஆங்கிலமும் தமிழும் படித்தாற் போதுமென்ற நிலைக்கு முதுகலை, ஆய்வியல் நெறிஞர், ஆய்வியல் முனைவர் படிப்புகள் வந்துவிட்டன. 100க்கு 99 பேர் பாகதம் படிப்பதேயில்லை. தன்னார்வத்தில் பாகதம் படிப்போருங் குறைந்துபோனார். சொற்களின் நீர் மூலம், முனி மூலம் (நதி மூலம், ரிஷி மூலம்) பார்க்கும்போது ஏராளமான தமிழ்-பாகத இடையாற்றங்களைத் தமிழ்-சங்கதம் என்று பார்ப்பது பெரும்பாலான சமையங்களில் நம்மைச் சிக்கலுக்கே உள்ளாக்கும்.]

இங்கே சிக்கலைக்குறிக்கும் பிறழ்ச்சினையும் அது போன்றதே. தமிழில் தோன்றிப் பாகதம் போய் மீளத் தமிழுக்கு வந்த சொல் இதுவாகும். புல் என்பது வளைதற் கருத்து வேர். புல்>புர்> புரள் என்பது தலை கீழாக, முன்பின்னாக, அடிமேலாக மாறிக் கிடப்பதைச் சொல்வது. ஏதொன்றும் சீராயின்றி, ஒழுங்கற்று முரணிக் கிடக்குமானால் புரண்டு கிடக்கிறது என்போம். புரண்டு கிடத்தலுக்கு இன்னொரு பெயர் சிக்கிக் கிடத்தல். நீளமான நூல்/மயிர்க்கற்றை ஆற்றொழுக்கில்லாது உள் நுழைந்தும், சுருங்கி விரிந்தும் குறுக்கு மறுக்காயும், திருகலுற்றும், கசமுசா என்றுங் கிடந்தால் சிக்கிக் கிடக்கிறதென்று சொல்கிறோம் அல்லவா? பின்னிக் கிடத்தலுக்கும் இதே பொருள் தான். புரள்தல்/சிக்குதல்/பின்னுதல் என்பன குழப்ப நிலையை, சீரிலா நிலையைச் சொல்லும் ஒரு பொருட் சொற்கள். புரட்டின் நுணுக்கம் எனும் போது கேள்வி உள்ளே தொக்கி நிற்பதாலேயே பாகதம், சங்கதத்தில் கேள்வி என்ற பொருள் வந்தது. தமிழில் பின்னுதலுக்குக் ’கூடை பின்னும்’ பொருளுமுண்டு. அதே பொருள் சங்கதத்துள்ளும் போயுள்ளது.

புரளில் எழுந்த பெயர்ச் சொல் புரட்டு. இதை பிரட்டென்று திரித்துச் சொல்வோம். பிரட்டு வடக்கே போகையில், டகரம் தகரமாகும். பின் ஜகரம் ஆகும். மீண்டும் தமிழிற் கடன்வாங்கையில் ஜகரம் சகரமாகும். இது பல சொற்களில் நடந்துள்ளது. நான் இங்குள்ள சொல் விடுத்து வேறு சொல் காட்டுகிறேன். நட்டமென்பது நடுவிலுள்ளது என்ற பொருள் கொள்ளும். தமிழில் நகரமும் மகரமும் போலிகள். பாகதத்தில் மட்டம் மத்தமாகிப் பின் மஜ்ஜமாகும். நட்டுமமென்ற தமிழ்ச்சொல் இப்படித் தான் பாகதத்தில் மஜ்ஜிமமானது. புத்தரின் உரைகளடங்கிய ஒரு பாலிநூல் மஜ்ஜிம நிகாயம் எனப்படும். நம்மூர் நற்றிணை போல் அது நடுத்தர அளவுள்ள வாசகங்களைக் கொண்ட்து. (தீக்க நிகாயம், குத்தக நிகாயம், சம்யுத்த நிகாயம், அங்குத்தார நிகாயம் என்பன மிஞ்சியவை. அவற்றை வேறு பொழுதில் பேசலாம்.)

இங்கே பிரட்டு>பிரத்து>பிரஜ்ஜு என்றாகும். தமிழில் இன் என்பது சாரியை. ஐ என்பது நுணுக்கத்தைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி. ஆங்கிலத்தில் minuteness. பிரட்டின் ஐ என்ற சொற்றொடர் வேறு மொழி போகும்போது ஒரே சொல்லாக அடையாளங்கொள்ளப்பட்டு பிரட்டினை என்றாகிப் பின் ப்ரத்தின>ப்ரஜ்ஜின என்றாகியிருக்கிறது. மீண்டும் கடன்வாங்கி பிரச்சினை என்று நாம் ஆக்கிவிட்டோம். சங்கதத்தில் பிரட்டினை என்பது பிரத்தின> ப்ரத்யின>ப்ரஶ்ன என்றாகும்.

பிரச்சினை என்ற இருபிறப்பிச் சொல்லைப் பிரச்சனை என்றெழுதுவது தவறு நல்லதமிழில் சிக்கல் என்றே சொல்லலாம்.  .

அன்புடன்,
இராம.கி.

No comments: