Sunday, March 29, 2020

அமனிறை - ammonite nautilus

முதலுயிரி (Protozoa), புரையுடலி (Porifera), குழிக்குடலி (Coelentterata), மெல்லுடலி (Mollusca), கணுக்காலி (Arthropoda), தண்டுடை (Chordata) ஆகிய பொலியங்களில் (Phylum; பொலிதல்=தோன்றி மிகுதல். கணமும் பொலியமும் ஒரே பொருளன.) மெல்லுடலி வகையில் வயிற்றால் நகரும் அகட்டுக்காலி (gastropoda; அகடு= வயிறு) வகுப்பில் ammoniteகளும், nautilusகளும் அடங்கும். பொதுவாக இவற்றைக் கடல் நத்தைகள் என்பார். நில நத்தைகள் தம் வயிற்றையே கால் போல் பயனுறுத்தி முன்தள்ளிப் போவதால் நத்தைப் பெயர் ஏற்பட்டது. 

நுந்துவதென்பது தமிழில் முன்தள்ளுவதைக் குறிக்கும். நுந்து>நந்து>நத்து> நத்தை என இச்சொல் வளர்ச்சி பெறும். நில நத்தைகளோடு ஒப்பிட்டு, இரண்டிற்கும் முதுகிற் கூடுகளிருந்ததால், மேற்சொன்ன ’கடல்நத்தைகள்’ என்ற பொருள் நீட்சி ஏற்பட்டது.

நத்தைக் கூடுகள் சிறப்பான வளர்ச்சி கொண்டவை. வடிவியலில் (geometry) 360 பாகையில் சுற்றிவரும் போது ஒரே நீள ஆரங் கொண்டிருந்தாற் கிடைக்கும் வடிவம் வட்டமாகும். இதில் வளைச் செலுத்தம் (turning process) மட்டுமே நடைபெறுகிறது. மாறாக ஒவ்வொரு பாகைக்கும் வளைச்செலுத்தத்தோடு சீரான முறையில் ஆரத்தின் நீளமுங் கூடி வளருமானால், வளைச்செலுத்தம் + ஆரநீட்டம் ஆகிய செலுத்தங்களால் புரிச்சுருவை (spiral curve) என்ற புதுவடிவம் கிடைக்கும். அடிப்படையில் வட்டமென்பது மூடிய சுற்று (closed cycle). புரிச் சுருவையோ மூடாத சுற்று (un-closed cycle). ஒவ்வொரு சுற்றையும் புரியென்றே தமிழிற் சொல்வர். புரிகளுக்குள் நந்தைகள் பதுங்குவதும் வெளிவருவதுமாய் தங்களின் சேமத்தை (safety) நிலைநிறுத்திக் கொள்கின்றன. கூடுகள் வீடுகளாய்த் தோற்றமளிக்கும்.

நாம் பெரிதும் பயன்படுத்தும் சங்கும், கடல் நந்தைகளில் ஒன்றான [துருவலைக் (Turbinella) குடும்பஞ் சேர்ந்த] துருவலைப் புருவம் (Turbinella pyrum) எனும் கடல் நத்தையின் (sea snail with a gill and an operculum, a marine gastropod mollusk in the family Turbinellidae) முதுகுக்கூடு தான். சங்கிற்கும் நந்தென்ற பெயருண்டு. ”விளங்குகொடி நந்தின் வீங்கிசை” என்ற சிலம்பு 26:203 வரியால் நந்தென்ற சொல் சங்கிற்கு இணையாய்ப் பயன்பட்டது விளங்கும். கடல் நத்தைகளில் ஒன்றான ammoniteகள் இன்று அழிந்து போனதாகவே பலருஞ் சொல்கிறார். aa  nautilusகள் இன்றுமுள்ளன.

”Ammonoids are an extinct group of marine mollusc animals in the subclass Ammonoidea of the class Cephalopoda. These molluscs are more closely related to living coleoids (i.e., octopuses, squid, and cuttlefish) than they are to shelled nautiloids such as the living Nautilus species. The earliest ammonites appear during the Devonian, and the last species died out during the Cretaceous–Paleogene extinction event. The name "ammonite", from which the scientific term is derived, was inspired by the spiral shape of their fossilized shells, which somewhat resemble tightly coiled rams' horns. Pliny the Elder (d. 79 AD near Pompeii) called fossils of these animals ammonis cornua ("horns of Ammon") because the Egyptian god Ammon (Amun) was typically depicted wearing ram's horns.[1] Often the name of an ammonite genus ends in -ceras, which is Greek (κέρας) for "horn". என்று விக்கிப்பீடியாவில் சொல்லப்படும். 

அமன் என்பது எகிப்தியரின் ஆண்தெய்வம். (நம்மூர் அம்மன்களோடு இதை ஒப்பிட்டுக் குழம்பக்கூடாது.) இதன் தலையில் கொம்பு இருக்குமாம். அக் கொம்பைப் போல் ammonite கூடு இருப்பதால், இப்பெயரிட்டிருக்கிறார். கொம்பை ஆங்கிலச் சொற்பிறப்பியலில் ”Old English horn "horn of an animal; projection, pinnacle," also "wind instrument" (originally one made from animal horns), from Proto-Germanic *hurnaz (source also of German Horn, Dutch horen, Old Frisian horn, Gothic haurn), from PIE root *ker- (1) "horn; head" என்றுசொல்வர். கொம்பிற்கு கோடு, இரலை, ஆம்பல், வயிர் என்ற சொற்கள் தமிழிலுண்டு. இரு>இறு>இற என்பது வளைதலைக் குறிக்கும். (இரு>இரல்>இரலை. இதை இரளை என்றுஞ்சொல்வர்.) இறவில் பிறந்த சொற்கள் இறவு, இறால் போன்றவை. இவையும் வளைவுப் பொருளில் எழுந்தவை. இறாலும் கடல்நத்தையோடு தொடர்புள்ளதே. இறையும் வளைவைக் குறிக்கும். ammonite க்கு என் பரிந்துரை அமனிறை தான்.

பல நுல்லிய (million) ஆண்டுகளுக்கு முன், மாந்தர் இங்கு வந்துசேருவதற்கும் முன், இற்றை வடவிந்தியா ஒரு கடலாயிருந்தது. அதை டெதிசுக் கடல் (Tethys sea) என்று இற்றை அறிவியல் அழைக்கும். கோண்டுவானாக் கண்டம் உடைந்து இற்றைத் தென்னிந்திய நிலம் வடமேற்கே நகர்ந்து ஆசியக் கண்டத்தை மோதிய போது டெதிசுக் கடல் வழிந்து இமையமலைத் தொடர் உயர்ந்தது. இன்றைக்கு நாம் காணும் இமைய மலையில் பல்வேறு கடற் படிவங்கள், குறிப்பாக அமனிறைக் கற்கள், ஆற்றுப் படுகைகளில் கிடைத்த வண்ணம் உள்ளன. இமைய மலைப்பக்கம் சுற்றுலாவும் எல்லோரும் இதை உணரலாம். மணாலி, சிம்லா, நைனிடால், தார்ஜிலிங், கேங்டோக், கட்டை மண்டு (காத்மண்ட்) ஆகிய இடங்களில் அமனிறைக் கற்களை வாங்கச் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விழைவர்.

திருமாலின் நூற்றெட்டுப் பதிகளில் ஒன்று திருச்சாலக் காமம் (சங்கதத்தில் சாலக்காமம்>சால க்ராமம்>சாள க்ராமம் என்று இது திரியும்). பனிமலையில் இருந்து வழிந்தோடும் கண்டகி ஆற்றங்கரையில் சால மரங்கள் நிறைந்த கம்மம் சாலக் கம்மம்>சாலக் காமம். [யால/ஆச்சா மரமே (Hardwickia binata) சாலமரமென்று சிலரும், குங்கிலிய மரமே (Shorea robusta) சாலமரமென்று வேறு சிலரும் சொல்வர். தெற்கே குங்கிலியம் வளர வாய்ப்புக் குறைவு. வடக்கில் இருந்து வணிகத்தில் வரவேண்டும்.} சாளக் கிராமம் என்றே அமனிறையைத் தமிழகத்தில் விண்ணவ நெறியாளர் (வைணவர்) சொல்வர். இது கண்டகி யாற்றில் கிடைக்கும் ஒருவிதக் கருஞ்சாயக் கல்லைக் குறிக்கும். It is blackstone containing a fossil ammonite. துல்லியங் கருதியே அமனிறை என்ற சொல்லை இங்கு நான் பரிந்துரைத்தேன்.

இனி nautilusக்கு வருவோம். இதற்குச் சொல் காண்பது எளிது. The nautilus (from the Latin form of the original Ancient Greek: ναυτίλος, 'sailor') is a pelagic marine mollusc of the cephalopod family Nautilidae, the sole extant family of the superfamily Nautilaceae and of its smaller but near equal suborder, Nautilina. நத்து, நந்து, நுகு>நகு>நாகு என்ற சொற்கள் முன் தள்ளி நகர்வதைக் குறிப்பன. நுகும் வினை, நுகு>நுகல்>நகலென விரியும். நகல்தல் நகர்தலாகி move என்பதற்கு இணையாய்ப் பயன்படுத்துகிறோம். நகலும் உயிரி நகலி. நாகு>நாவு>நாவாய் = துடுப்பால் முன் தள்ளும் கப்பல். நாகுதல்>நாவுதலை ஒட்டிப் பலசொற்கள் தமிழிலுள்ளன. அவற்றை விரிக்கின் பெருகும்.

நில நத்தைக்கான ஆங்கிலச்சொல் snail (n.) Old English snægl, from Proto-Germanic *snagila (source also of Old Saxon snegil, Old Norse snigill, Danish snegl, Swedish snigel, Middle High German snegel, dialectal German Schnegel, Old High German snecko, German Schnecke "snail"), from *snog-, variant of PIE root *sneg-"to crawl, creep; creeping thing" (see snake (n.)). The word essentially is a diminutive form of Old English snaca "snake," which literally means "creeping thing." Also formerly used of slugs. Symbolic of slowness since at least c. 1000; snail's pace is attested from c. 1400 என்றமையும். ஆங்கில snail என்பது நம்மூர் நகலியின் திரிவே. இதே முறையில் nautilus என்பதை நத்திலி என்று சொல்லலாம்.

அமனிறைகளும், நத்திலிகளும் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாதென எண்ண வேண்டாம். ஆழ்ந்தால் விவரங் கிடைக்கும். நம் மரபோடு பொருந்திய நல்ல சொற்களை உருவாக்க முடியும்.

அன்புடன்,
இராம.கி.   .

No comments: