Monday, March 02, 2020

order

ஒருமுறை order தொடர்பான பல சொற்களைத் தொகுதியாய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன். to order = ஒழுதருவித்தல் (=ஒழுதரச் செய்தல்); to order a set of things எனும்போது "ஒரேவகைப் பொருட்களின் கொத்தை ஒழுதரு விக்கிறோம்". இக்காலத் தமிழில் ஒழுகுதல் வினை இருக்கிறது. ஒழுதருதல், ஒழுதருவித்தல் (=ஒழுதரச் செய்தல்) என்ற வினைகள் அருகிவிட்டன. இன்னொருவரை ஒழுகவைத்துத் தருவித்தல் என்பதே ஒழுதருவித்தல்  (=ஒழுதரச் செய்தல்). அதாவது வரிசையாய் ஆக்கித் தர வைத்தல். இவ் வினைகளைப் புழக்கத்தில் கொண்டுவர வேண்டும். to order a doosa என்றால் வேறொன்றும் இல்லை; அடுத்த தோசை எனக்கு என்று வரிசையில் தரச் செய்தல். ஒவ்வொன்றாய் order செய்யும்போது வரிசையில் அப்பொருட்கள் அடுத்தடுத்து நிற்கின்றன. வரிசை, ஒழுங்கு என்பவையே இச்சொல்லாடலில் முகமையானவை. தோசையை ஒழுதருவிக்கிறோம் (=ஒழுதரச் செய்கிறோம்).

order = ஒழுங்கு (=ஒழுதரவு, வரிசை)
orderly = ஒழுங்காய் (=ஒழுதரவாய்)
ordain`= ஒழு(க வி)தித்தல்
ordeal = ஒழுக்கட்டு
ordinal = ஒழுங்கு (=ஒழுதை) எண்
ordinance = ஒழுதனம்
ordinary = ஒழுகுவது, ஒழுகக் கூடியது, ஒழுக இயல்வது, எனவே இயலொழுகு; சாத்தாரம் (=சாதாரணம் என்ற சொல் சாத்தன் என்ற சொல்லில் பிறந்தது. ஒரு காலத்தில் குப்பன், சுப்பன் போல் தமிழ்நாட்டில் நாட்டில் அதிகம் புழங்கிய பெயர் சாத்தன். எனவே ordinary = சாத்தாரம் ஆனது. நான் சாத்தாரம் ஒழித்து இயலொழுகு பழகச் சொல்லவில்லை. இரண்டு இணைச் சொற்களையும் இடத்திற்குத் தக்கப் ப்யன்படுத்துங்கள் என்கிறேன்.) 
ordinate = ஒழுகு
co-ordinate = உடனொழுகு
by order = ஒழுதரவின் படி
in order = ஒழுங்காய் (=ஒழுதரவாய்) இருத்தல்
in order that = ஒழுக வேண்டி
in order to = ஒழுகுதற்கு
keep order = ஒழுங்கைப் (=ஒழுதரவைப்) பேணுதல்
law and order = சட்ட ஒழுங்கு
money order = பண ஒழுதரவு;
send a money order = பண ஒழுதரவை அனுப்புதல்
new order = புது ஒழுங்கு (=ஒழுதரவு)
order of the day = இந்நாள் ஒழுங்கு (=ஒழுதரவு)
out of order = ஒழுங்கு (=ஒழுதரவு) மீறி
point of order = ஒழுங்கு (=ஒழுதரவு) பற்றியது
order status -ஒழுதரவு நிலுவை/நிலவரம்
order progress - ஒழுதரவு முன்னேற்றம்

No comments: