ஏற்கனவே மூன்று பகுதிகளோடு இந்தத் தொடர் அப்படியே நின்று போயிற்று. அவை வருமாறு:
அளவுச் சொற்கள் - 1
அளவுச் சொற்கள் - 2
அளவுச் சொற்கள் - 3
இனித் தொடர்ச்சி. இந்தப் பகுதியில் முதலில் ஒருசேர நான்கு சொற்களைப் பார்க்கப் போகிறோம். அவை minimum, minor, minority, minute ஆகியவை ஆகும். இந்தச் சொற்களில் வரும் min என்ற பகுதியும் நுண் என்பதோடு தொடர்பு கொண்டது. நுண் என்பதும் முன்னால் சொன்னது போல் நுல் என்னும் வேரில் இருந்து கிளைத்த அடிச்சொல்லாகும். 
முதலில் முப்பத்தி ஆறாவது அளவுச் சொல்லான minute என்பதைப் பார்ப்போம். தமிழில் நுணுக்கு என்பது ஒரு பெரிய பகுதியின், ஆகக் குறுகிய பகுதியைக் குறிக்கும் சொல். மிகச் சிறியது என்று அதற்குப் பொருள். நுணுக்கின் போலியான முணுக்கு என்ற சொல்லை நாம் இன்றும் கூடப் பயன்படுத்துகிறோம். (அவன் முணுக்கென்று போனான்.) நுணுக்கு என்பது நுணுத்து என்றும் வேறு ஒரு ஈற்றிலும் முடியலாம். நுணுத்தல் என்பது குறுகுதல் என்ற பொருள் கொள்ளும். ஆங்கிலத்திலும் minute என்ற சொல் குறுகிய பகுதியையே குறிக்கும். அது காலத்தின் பகுதியை மட்டுமல்லாது பொருள், இடம் என எல்லாவற்றின் சிறுமையையும் குறிக்கும். நாம் இப்பொழுது சொல்லிக் கொண்டிருக்கும் மணித்துளி போன்றவை கால அளவை மட்டுமே குறிக்கும் சொற்கள். தவிர, மணித்துளி என்ற சொல் நீர்வீழ்ச்சி போல ஒரு செயற்கையான அலங்காரச் சொல். அதைக்காட்டிலும் நுணுத்து அல்லது நுணுத்தம் என்ற சொல் சிறப்பாக இருக்கும். வடமொழி வழியே பெறப்பட்ட நிமிடத்திலும் கூடத் தமிழ்வேர் உள்நின்று அடையாளம் காட்டும். தமிழில் ஏற்படும் முகர/னகர/ணகரப் போலியையும், தமிழில் வரும் டகர/தகர ஈற்றுக்கள் வடமொழியில் ஷகர ஒலியாய் மாறுவதையும் ஓர்ந்து பார்த்தால் நுணுத்தத்தில் இருந்து நுணுஷம்>முநுஷம்>நுமுஷம்>நிமுஷம்>நிமிஷம் என்ற திரிவு புலப்படும். (இதே போன்ற திரிவுக்கு இன்னொரு காட்டு: வருடு>வருடை = ஆடு; வருடு+அம் = வருடம்>வருஷம் = மேய இராசியில் தொடங்கும் ஆண்டு; ஆடு>ஆட்டை, ஆடு>ஆண்டு என்ற சொற்கள் அமைந்த முறையையும் இங்கு கவனிக்கலாம்.) நுணுத்தம் என்ற சொல்லைப் புழங்கினால், உள்ளே ஆழத்தில் இருக்கும் நுணுத்தல் என்னும் வினைச்சொல்லும் நமக்கு விளங்கும். பொதுவாய் வினைச்சொல் தெரிபடத் துலங்கும் பெயர்ச்சொற்கள் சிந்தனையைத் தூண்டுபவை. [நுணுத்தத்தின் சிறு பகுதியான second என்பதை செகுத்தம் என்று சொல்லலாம். கூடவே அதன் இன்னொரு பெயரான நொடியையும் புழங்கலாம். செகுத்தம் பற்றி முன்னால் செகை (sex) என்ற கட்டுரையில் விவரித்துள்ளேன்.]    
இனி முப்பத்தி ஏழாவது சொல் minimum. நுணுகிக் குறுகிப் போன நிலையைக் குறிக்கும் சொல். நுணுகுதல் என்ற வினையை நுணுதல் என்றும் சொல்லலாம். இதே கருத்தில், நுணுகிய தன்மையை minimum = நுணுமம் என்று சொல்லுவதின் மூலம் கொண்டு வரலாம். அதன் மூலம் மிகக் குறைந்ததென்ற பொருளையும் கொண்டு வரலாம். maximum = மீகுமம் என்பதற்கு எதிர்ச்சொல்லாயும் நுணுமம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளப் பொருத்தமாய் இருக்கும்.
இதற்கும் அடுத்தது முப்பத்தெட்டாவது சொல் minor என்னும் சொல்லாகும். அகவையில் குறைந்தவர்; பங்களிப்பில் குரைந்தவர் என்ற பொருளில் minor = நுணுவர் என்றே சொல்லலாம். சிறுவர் என்பது போல நுணுவர் என்பது பொருளாழம் காட்டும். major =  மேவு, மேவிய, மேவர் என்பதற்கு இணையாக minor = நுணுவிய, நுணுவர் என்ற சொற்கள் அமையும். மேவிய பங்கு, நுணுவிய பங்கு என்ற சொற்கள் major share, minor share என்பதைத் தெளிவாகக் குறிக்கும். பங்கிற்கு இணையாகக் கூறு என்பதையும் ஆளமுடியும்.
முப்பத்தொன்பதாவது சொல் minority. நுணுதல் என்னும் வினையில் இருந்து நுணதி என்ற சொல்லை உருவாக்க முடியும். majority = மேவுதி என்பதற்கு எதிராக நுணதி என்ற சொல் அமையமுடியும். "எங்குமே மேவுதியார் பேச்சு நுணதியார் பேச்சைக் காட்டிலும் எடுபடும்", "அவர் நுணதியாகித் தோற்றுப் போனார்" என்று வாக்கியங்களை எண்ணிப் பார்க்கலாம்.  
மேலே சொன்ன நான்கு சொற்களுக்கு அப்பால் நாம் பார்க்கும் நாற்பதாவது அளவுச் சொல் mode. எந்த ஓர் உயர்ச்சிக்கு முன்னாலும் பின்னாலும் ஒரு தாழ்ச்சி உண்டு. அது மலையானாலும், அலையானாலும் அமைவது தான். மலை, அலை போன்றவற்றின் உச்சி mode என்று சொல்லப்படும். தமிழில் அதை முகடு என்று குறிக்கிறோம். முக>மோ என்ற பலுக்கத் திரிவை ஓர்ந்து பார்த்தால், முகடு = mode என்பதன் சொல்லிணை சட்டென்று விளங்கும். வீட்டு கூரையில் மேலே இருக்கும் உச்சியை, மோட்டு வளை என்றே நாட்டுப் புறத்தில் கூறகிறார்கள்.அந்த மோடும் இந்த முகட்டின் திரிவுதான். (இது போன்ற ஒப்புமைகளைப் பார்க்கும் போது, தமிழிய மொழிகளுக்கும், இந்தையிரோப்பிய மொழிகளும் ஏதோ ஒரு தொடர்பு அறதப் பழங்காலத்தில் இருந்திருக்க வேண்டுமென்றே நான் கருதுகிறேன். இது வரை செய்த சொல்லாய்வுகள் அதை நாளும் உறுதி செய்து வருகின்றன.) 
இனி அடுத்து more, most, much என்னும் மூன்று சொற் தொகுதியைப் பார்ப்போம். 
நாற்பத்தொன்றாவது அளவுச் சொல் more. மேலும் மேலும் ஓர் எண்ணுதி (quantity) சேருகின்ற கருத்தை "மேல்" என்றே சொல்லலாம். அது அப்படியே more என்பதற்குப் பொருந்தும். மேலும் மேலும் = more and more.
நாற்பத்திரண்டாவது சொல் most. more என்பதன் உயருறவு நிலை (superlative). மேலும் மேலும் ஏறும் இந்த நிலையை மேலேற்று என்றே சொல்லலாம். 
நாற்பத்தி மூன்றாவது சொல் much. நீரை ஒரு கலத்தில் ஊற்றிக் கொண்டே வரும் பொழுது அது விளிம்பில் இருந்து கொட்டுகிறது பாருங்கள் அதை மகுதல்>மகுருதல் என்று எங்கள் பக்கத்தில் சொல்லுவார்கள். இந்த மகுவும் மிகுவும் தொடர்புள்ள சொற்கள் தான். இருந்தாலும் மிகுதல் = to exceed என்ற பொருளைச் சட்டென்று குறிப்பதால், மகுதல் என்றும் அதன் முன் திரிபான மொகுதலையும் உரிய வினையாகக் கையாளலாம். multiply என்பதைக் குறிக்கும் மல்குதல் என்ற சொல்லும் மகுதல் என்று பேச்சுவழக்கில் ஆவதால், மொகு என்பதே much ற்கான என் பரிந்துரை. much என்பதற்கும் more என்பதற்கும் நுணுகிய வேறுபாட்டை ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். Much water has flown through the river = மொகுந்த நீர் ஆற்றின் வழியே பெருகியிருக்கிறது / விளவியிருக்கிறது. 
இதற்கு அடுத்து மல் என்னும் வேரில் கிளைக்கும் மூன்று சொல் தொகுதியைப் பார்க்கலாம். 
நாற்பத்தி நான்காவது சொல் multi இதை மிகச் சுருக்கமாய் மல், மல்கு>மகு என்றே சொல்லலாம். மல்கிப் பெருகுதல் என்ற வழக்குத் தமிழில் கால காலமாய் உண்டு. 
நாற்பத்தி ஐந்தாவது சொல் multiply. இந்தக் காலப் பேச்சுவழக்கில் பெருக்குதல் என்றே சொல்லிவருகிறோம். இருந்தாலும் இலக்கிய வழக்கில் மல்குதல் என்ற வினை இருந்திருக்கிறது. மல்குதல் என்று சொல்வதைத் திரித்துப் பேச்சுவழக்கில் மலிதல் என்று சொன்னாலும் பெருகுதல் என்ற பொருளைத் தரும். மல்குதல்/மலிதல் என்பவை தன்வினையில் வரும் சொற்கள். அதே சொல்லை மலித்தல் என்று சொன்னால் அது பிறவினையாகிவிடும். Please multiply two by five = இரண்டை ஐந்தால் பெருக்குக/மலிக்குக. பெருக்குதல் என்பது "கணக்கதிகாரம்" போன்ற தமிழ் நூலில் பேச்சு வழக்குச் சொல்லாகத் திரிந்த முறையில் பருக்குதல்>பழுக்குதல் என்றும் குறிக்கப் பட்டிருக்கிறது. இது போக மல்தல் என்னும் வினை, மால்தல் என்று நீண்டு, பின் புணர்ச்சியில் மாறல் என்று ஆகி, பெருக்கல் வினையைக் குறிக்கிறது. மாறல் என்ற இந்தச் சொல்லும் "கணக்கதிகாரம், கணித நூல்" போன்றவற்றில் multiplication என்பதற்கு இணையாகப் பெரிதும் ஆளப் பட்டிருக்கிறது. இந்த நூல்களில், ஓர் இழுனை அளவைக் (linear measure) கொடுத்து, அவற்றால் ஏற்படும் சதுரங்களின் பரப்பு அளவை (area measure) கண்டு பிடிக்கும் வேலைக்கு "பெருங்குழி மாற்று, சிறுகுழி மாற்று" என்ற சொற்கள் பயன்பட்டிருக்கின்றன. இன்றைக்கு மாற்றுதல்/மாறல் என்ற சொற்கள் வேறு பொருள் கொள்ளப் படும் என்பதால், முந்தைய வடிவமான மலித்தல் என்பதையே நான் பெருக்குதலோடு சேர்ந்து இங்கு பரிந்துரைக்கிறேன். பெருக்குதல், மலித்தல் என்பவை போக இன்னொரு சொல்லும் அகரமுதலிகளில் இருக்கிறது. அது குணித்தல்/குணத்தல் என்று சொல்லப்படும். பெருக்கல் என்பது ஒரு விரிந்த கூட்டல் (extended addition) என்ற முறையில் குணித்தல் என்பது கணித்தல் என்பதோடு தொடர்புள்ளது; கணித்தல் கூட்டலோடு முதலிலும், நாளடைவில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்னும் நான்கு செயற்பாடுகளையும் குறிக்கத் தொடங்கியது. இன்றைக்கு கணித்தல் என்ற சொல்லின் பொருட்பாடு இன்னும் விரிந்திருக்கிறது. ஆகப் பெருக்கல், மலித்தல், குணித்தல் என மூன்று சொற்கள் தமிழில் பெருக்கற் கருத்தைச் சொல்ல வாகாக உள்ளன. அந்த வகையில் நிகண்டுகளிலும், அகரமுதலிகளிலும் குறிக்கப்படும் குணகாரம், குணனம் = பெருக்கல், குணித்தல் = பெருக்குதல், குணகம் = பெருக்கும் எண், குண்ணியம், குணனீயம் = பெருக்கப்படும் எண், குணிதம் = பெருக்கிவந்த தொகை என்ற சொற்களையும் நாம் புரிந்து கொள்ளலாம். 
     
நாற்பத்தி ஆறாவது சொல் multitude; இது மல்குதல்/மலிதல் என்ற வினையில் இருந்து உருவானதொரு பெயர்ச்சொல். மல்கிக் கிடப்பதால் இதை மல்கணம் என்றே அழைக்கலாம்.
நாற்பத்தி ஏழாவது சொல் number = எண்; இப்பொழுது விளக்கத் தேவையில்லை. பின்னொரு நாள் இதன் சொற்பிறப்பை விளக்க முயலுவேன். (அது ஒரு நீண்ட ஆய்வு. எல்லோரும் எள்ளோடு தொடர்புடையது என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்; அப்படிச் சட்டென்று சொல்லிவிடமுடியாது. எண்ணின் சொற்பிறப்பு நம்மைத் தமிழ்க் கணிதவியலின் ஆழத்திற்குக் கொண்டு போகும். கணிதவியலிலும் நமக்கு ஒரு கொடிவழி இருக்கிறது. அதை விரிவாய் ஆய்வதற்குத் தான் ஆட்களைக் காணோம்.)
நாற்பத்தி எட்டாவது சொல் nano = நூணு. அண்மையில் டாடா நிறுவனத்தினர் மிகக் குறைந்த விலையில் ஒரு சீருந்தை வடிவமைத்து அதற்கு nano என்று பெயரிட்டு அழைத்தார்கள். தவிர 10^-9 என்ற எண்ணை nano என்று கணிதத்தில் அழைப்பார்கள். நுண் என்னும் அடிச்சொல்லின் நீட்சியாய் நூணு என்றே நாம் அழைக்கலாம்.  
நாற்பத்தி ஒன்பதாவது சொல் narrow. இதையும் நுல் என்னும் வேரில் இருந்து நுறு என்று சொல்லின் வழியாக நுறுவு என்ற சொல்லால் குறிக்க முடியும். narrow path = நுறுவிய பாதை; அதாவது ஆகக் குறுகிய பாதை. 
இனி, ஐம்பதாவது அளவுச் சொல்லான nice என்பதைப் பார்ப்போம். "போட்டு நொய்ச்சு எடுத்துட்டாண்டா" என்றும், "அரிசியை நொய்யாகத் திரித்துக் கொள்" என்ற பேச்சிலும் வரும் நொய் என்பது nice மற்றும் powdery என்பதையே குறிக்கும். ஒரு குறுணை (grainy) இல்லாமல் வழவழப்பாக இருப்பது நொய். நொய்யும் வினை நொய்தல். யகர/சகரப் போலியில் நொய்வு என்பது நொசிவு என்றும் பேச்சுவழக்கில் வரும். கரடு முரடாக இல்லாமல் இருக்கும் பொருளையும், மாந்தரையும் nice என்ற கருத்தால் குறிக்கிறோம். தமிழில் அதற்கு இணையான சொல் நொசிவு என்பதே. 
அடுத்துவரும் ஐம்பத்து ஒன்றாவது சொல்லான plenty = பலவாறு, ஐம்பத்து இரண்டாவது சொல்லான short = குறு, ஐம்பத்து மூன்றாவது சொல்லான size = அளவு, ஐம்பத்து நான்காவது சொல்லான small = சிறு,  ஐம்பத்து ஐந்தாவது சொல்லான spread = பரத்திய, ஐம்பத்து ஆறாவது சொல்லான thin = சன்ன ஆகியவற்றிற்கு விளக்கம் சொல்ல வேண்டியதில்லை
ஐம்பத்து ஏழாவது சொல்லான volume என்பதைக் கன அளவு என்றே சொல்லிவந்திருக்கிறோம். உண்மையில் கன என்பது எடை தொடர்பான சொல்; கனமாக இருக்கிறது என்பது எடையாய் இருக்கிறது என்றே பொருள்படும். முப்பரிமான அகற்சிச் சொல்லான volume என்பதைக் குறிக்க வெளியை நிரப்பும் வினைச்சொல்லை நாட வேண்டும். வெள்ளுதல் என்பது வள்ளுதலில் இருந்து பிறந்த சொல். வள்ளுதலும் பெருத்தலே. வள்ளுதலில் இருந்து பிறந்த பெயர்ச்சொல் வளம் (=பெருமை, செழுமை, மிகுதி, prosperity) எப்படிப் பலம் பெலம் என்று பேச்சுவழக்கில் சொல்லப் படுகிறதோ அது போல, கட்டினான் என்பது கெட்டினான் என்று ஆவது போல, அகரவொலி எகரவொலியாகப் பலுக்கப் படுவது தமிழில் பல இடத்தும் நடக்கிறது. பெருத்தல் என்னும் பொருள் கொண்ட வள்ளுதல் வெள்ளுதல் என்றாவது இயற்கையே. ஆனால் வியப்பு என்னவென்றால், பெயர்ச்சொல் மட்டுமே இன்றையத் தமிழில் இருக்கிறது. வினைச்சொல்லைக் காணோம். பொதுவாய் பெருக்கு என்பது flow வைக் குறிப்பதால், ஒரு வேற்றுமை கட்டுவதற்காக, அளவில் பெருகுவதை வெள்ளம் என்று சொல்லலாம். அதே பொழுது வெள்ளம் என்ற சொல் flow என்னும் கருத்தீட்டை ஒரு சில போதுகளில் குறிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுவது நல்லது. அறிவியற் சிந்தனை பெருக வேண்டுமானால், volume என்பதற்கும் flow என்பதற்கும் தமிழில் சரியான சொல்வேறுபாடு காட்டத்தான் வேண்டும். அதே பொழுது அதை எடையோடு தொடர்புறுத்தக் கூடாது.
என் பரிந்துரை `volume = வெள்ளம்; flow = பெருக்கு என்பதே.       
ஐம்பத்து எட்டாவது சொல்லான weighty என்பதை  எடையான, நிறையான என்ற சொற்களால் சொல்லலாம்.
இந்தப் பகுதியில் உரைத்த அளவுச் சொற்களும், மற்ற சொற்களும் வருமாறு:
minute = நுணுத்து, நுணுத்தம்
minimum = நுணுமம்
minor = நுணுவிய, நுணுவர் 
minority = நுணதி 
mode = முகடு, மோடு
more = மேல்
most = மேலேற்று
much = மொகு
multi = மல்  
multiply = மல்குதல், மலித்தல், பெருக்குதல், குணித்தல்/குணத்தல்
multiplication = மலிக்கல், பெருக்கல், குணகாரம், குணனம்
multiplying number = குணகம் 
multiplicant = குண்ணியம், குணனியம்
product after multiplication = குணிதம்
multitude = மல்கணம்
number = எண்
nano = நூணு
narrow = நுறுவு
nice = நொசிவு
plenty = பலவாறு
short = குறு
share = கூறு, பங்கு
size = அளவை
small = சிறு 
superlative = உயருறவு
spread = பரத்திய
thin = சன்ன
volume = வெள்ளம்
weighty = எடையான
density = திணிவு, அடர்த்தி 
second = செகுத்தம், நொடி 
இனி அடுத்த வரிசைகளுக்குப் போவோமா?
அன்புடன்,
இராம.கி.
2 comments:
வணக்கம் திரு.இராம.கி ஐயா,
பயனுள்ள பல கருத்துக்களையும் செய்திகளையும் தருகிறீர்கள். தங்களை வலைப்பதிவுகளில் மீண்டும் எழுத அழைத்த தமிழ்மணத்திற்கும் அதை ஏற்றுக்கொண்ட உங்களுக்கும் நன்றிகள் பல.
தங்களது அளவுச் சொற்கள் 3 ல்
micro - நூகிய என்று குறிப்பிட்டுள்ளீர்கள், ஆனால் microscope - நுண்ணோக்கி என்று வழங்கப் படுகிறது. minute ஆன நுண்ணியவற்றை அறியப்பயன்படுவதால் அதைத் தொடர்ந்து நுண்ணோக்கி என்றே அழைக்கலாமா அல்லது நூகிய என்ற பொருள் வருமாறு அழைக்க வேண்டுமா?
osmosis - ஊடுகை - மெம்புனை வழியே ஊடுறுவுதல் என்ற பொருளில் இருக்கிறது.
இதனை சிலர் விரவல் - diffusion என்ற பொருள்படுமாறு பயன்படுத்துகின்றனர். இதில் எது சரியானது?
இப்பதிவில் mode - முகடு என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால், crest and trough - முகடு மற்றும் அகடு என்று குறிப்பிடப்படுகிறதே.
mode - என்பது முகடு என்றால் voice mode, auto mode என்று பயன்படுத்தப்படும் இடங்களில் பொருள் பொருந்தி வருவது போல் தெரியவில்லையே.
நன்றி
அன்பிற்குரிய கையேடு,
micro என்பதற்கு நானும் முன்னாளில் நுண் என்று கொண்டு microscope -யை நுண்ணோக்கி என்று சொல்லியிருக்கிறேன். பின்னால், ஆய்விற்குப் பின், "அளவுச் சொற்களில் துல்லியம் கூடவேண்டும்; வெறுமே பூசி மெழுகினாற் போல் "கிட்டத்தட்டப் பொருந்தும்" சொற்களை வைத்துக் கொண்டு ஒப்பேற்றக் கூடாது" என்ற எண்ணத்தால் உந்தப் பட்டு, அறிவியலைத் தமிழில் சொல்ல வேண்டுமானால், பல முன்னொட்டுக்களுக்கு வேறுபாடு காண்பிக்கத்தான் வேண்டும் என்ற முடிவில், இந்தச் சொற்களைப் பரிந்துரைக்கிறேன். தமிழில் பொதுவாய் எழுதுவது வேறு. தமிழில் அறிவியலை எழுதுவது வேறு. தமிழில் அறிவியல் எழுதுவது கூட வேண்டுமென்றால் துல்லியச் சொற்களைப் புழங்குவது நல்லது. அப்புறம் அவரவர் உகப்பு.
microscope என்பதை நூகு நோக்கி என்று சொல்லலாம். இன்னும் சிந்தனை ஆழப்பட, ஆழப்பட, இன்னும் நல்ல பொருத்தமான சொல் கிடைக்கக் கூடும். எந்தச் சொல்லும் பழகிப் பழகியே பொருத்தப்பாடு துலங்கும்.
விரவல் என்பது diffusion க்குச் சரியாய் இருக்கும். (diffusion = to get mixed up). osmosis என்பதை ஊடுகை என்றே சொல்லலாம். அதே பொழுது விரவல் என்னும் பொதுமைச் செலுத்தத்துள், ஊடுகை என்பது விதப்பான செலுத்தம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
பொருண்மையில் பார்த்தால், mode - உம் crest - உம் முகட்டைக் குறிக்கும் இருவேறு சொற்கள் தானே? crest and trough என்பதை முகடும் அகடும் என்று சொல்லலாம்.
நண்பரே! உங்களுக்கும் எனக்கும் ஒரே மாதிரிச் சிந்தனை எழவேண்டியது இல்லை. நீங்கள் பரிந்துரைப்பதும் நான் பரிந்துரைப்பதும் வெவ்வேறாக இருக்கலாம். நாளாவட்டத்தில் எது எதிர்காலத்தில் வாக வருகிறதோ, எது பல தொடர்புச் சொற்களுக்கும் அடிப்படையாகப் பொருந்தி வருகிறதோ, அதுவே நிலைக்கும்,
voice mode, auto mode என்பதில் வரும் mode என்பது முகட்டைக் குறிப்பது இல்லை. அது,
"manner," c.1374, "kind of musical scale," from L. modus "measure, rhythm, song, manner" (in L.L. also "mood" in grammar and logic), from PIE base *med-/*met- "to measure, limit, consider, advise, take appropriate measures" (cf. L. meditari "to think or reflect upon, consider," mederi "to look after, heal, cure;" O.E. metan "to measure out," Gk. medein "to rule"). Meaning "manner in which a thing is done" first recorded 1667.
என்ற படி, அளவிடுதலைக் குறிக்கும். மட்டம், மடுத்தல், போன்ற சொற்கள் தமிழில் இதற்கு இணையானவை. வெறுமே எழுத்துக் கூட்டைப் பார்த்து நாம் பொருள் கொண்டுவிட முடியாது. மடுத்தல் என்ற வினையில் இருந்து மடுவு என்ற பெயர்ச்சொல்லை அளவு என்ற பொருளில் பெறமுடியும். நீங்கள் எடுத்துக் காட்டிய சொற்களுக்கு, வாக்கு மடுவு (=voice mode), ஆத மடுவு (=auto mode) என்று சொல்லலாம்.
மடுவு என்பதை மறுத்து, தமிழில் பலகாலம் நாம் பின்பற்றும் ஒப்பேற்றும் வழியில் "முறை/வழி" என்று கூடச் சொல்லலாம். :-) அதை நான் செய்யாததனாலேயே, பலரும் குறைப்பட்டுக் கொள்ளுகிறார்கள்.
அன்புடன்,
இராம.கி.
அன்புடன்,
இராம.கி.
Post a Comment