Monday, February 18, 2008

மீட்டும் ஒரு நாள்காட்டு

இரண்டே முக்கால் ஆண்டுகளுக்கு முன்னாலே ஒரு கிழமை (= வாரம்) முழுதும் நாள்காட்டச் சொல்லி தமிழ்மணத்தில் கேட்டுக் கொண்டார்கள். (அப்படி நாள்காட்டியது 11/4/2005 பங்குனித் திங்கள் பரணி நாள் திங்கட்கிழமை.) இப்பொழுது, மீண்டும் நாள் காட்டுவது 18/2/2008 மாசித் திங்கள் 6 ஆம் திகதி கும்ப ஞாயிறு புனர்பூச நாள் திங்கட்கிழமை. இன்னும் மூன்று நாட்களில் மாசி மகம். தமிழ்நாடெங்கணும் சிவம், விண்ணவம் ஆகிய சமய நெறிகளோடு சேர்ந்து அந்த நாளில் ஒரே நீராடல் தான். (ஆனாலும் இந்த நீராடல்களுக்குக் காரணம் சமய நெறிகள் தானா என்ற கேள்வி எனக்குள் நெடுநாளாய் எழுந்தது உண்டு. இன்னும் விடை கண்டேன் இல்லை.)

இப்பொழுது நாள்காட்டிற்கு வருவோம். காலங்கள் என்னும் தொடரில் திங்கள் என்னும் சொல், நிலவை ஒட்டிவந்த மாதப் பெயர் என்று சொல்லியிருந்தேன். ஓர் அமையுவாவில் இருந்து (அமாவாசையில் இருந்து) இன்னோர் அமையுவா வரைக்குமான காலத் தொடர்ச்சியைத் திங்கள் என்று தமிழர் வானியலில் சொல்லுவார்கள். (தமிழர் வானியலை ஏதோ வடமொழியில் இருந்து கடன் வாங்கியதாகவே இந்தியரில் பலரும் மேலையரில் ஒரு சிலரும் பார்க்கிறார்கள். அது முற்றிலும் தவறான பார்வை. நாவலந்தீவினுள் அறிவு உறவாடல் என்பது வடக்கிலும் தெற்கிலுமாய்ச் சேர்ந்துதான் இருந்தது. தமிழர் பங்களிப்பைக் குறைப்பதில் ஒருசிலர் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்களோ?) வெறுமே நிலவு புவியைச் சுற்றி வரும் காலத் தொடர்ச்சியைப் பார்த்தால், 27.3216615 நாட்கள் எடுக்கும். இந்தத் தொடர்ச்சியை ஒரு சந்திரமானத் திங்கள் என்று சொல்லுவார்கள். (அதாவது, சந்திரன், புவி ஆகியவற்றின் இயக்கத்தை மட்டும் அளவிட்டுச் சொல்லப்படும் காலத் தொடர்ச்சி இந்தத் திங்கள் ஆகும்.)

அதற்கு மாறாக, ஒவ்வோர் அமையுவாவிலும் (அல்லது பூரணையுவாவிலும்) சூரியன், புவி, நிலவு ஆகியவை ஒரே நேர்கோட்டில் இருக்குமாப் போலப் பார்த்தால், 29.5305888 நாட்கள் பிடிக்கும். இப்படிச் சூரியன், புவி, நிலா மூன்றும் ஒன்றுபோல் சேர்ந்திருக்கும் காலத் தொடர்ச்சியைச் சூரியச் சந்திரமானத் திங்கள் என்று சொல்லுவார்கள். (சூரியன், சந்திரன், புவி என் மூன்றின் இயக்கத்தை அளவிட்டுச் சொல்லப்படும் காலத் தொடர்ச்சி.) இப்படி அமையும் 12 சூரியச் சந்திரமானத் திங்கள்கள் சேர்ந்தால் 29.5305888*12 = 354.367056 நாட்கள் கொண்ட ஓர் ஆண்டு கிடைக்கும். ஆந்திரா போன்ற மாநிலங்களில் இந்தச் சூரிய சந்தமான ஆண்டே புழக்கத்தில் இருக்கிறது. இசுலாமிய ஆண்டும் ஒரு சூரியச் சந்திரமான ஆண்டே! அதே பொழுது, இசுலாமிய ஆண்டுபோல இல்லாமல், ஆந்திர மாநிலத்தில் சூரிய ஆண்டிற்கு இணங்கச் சில மாற்றங்களைச் செய்து கொண்டு சூரியச் சந்திரமான ஆண்டுத் தொடக்கத்தை (அதாவது உகாதியை) பெரிதும் நகரவிடாமல் பார்த்துக் கொள்ளுவார்கள். இசுலாமிய ஆண்டின் தொடக்கமோ ஒவ்வோர் ஆண்டும் 11 நாள் முன் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும்; ஏனென்றால் அவர்கள் நிலவின் இயக்கத்திற்கு அவ்வளவு முகன்மை கொடுப்பவர்கள்.

சந்திர மாதங்களையும், சூரியச் சந்திரமான மாதங்களையும் தான், சித்திரை, வைகாசி, ......... மாசி, பங்குனி என்று நாம் அழைக்கிறோம். இந்தப் பெயர்கள் எல்லாம் 27 நாள்காட்டுக்களில் 12 நாள்காட்டுக்களை மட்டுமே குறிப்பவை. பொதுவாய், பூரணையன்று எந்த நாள்காட்டு நிலவோடு பொருந்தி வருகிறதோ அதே பெயரையே அந்தத் திங்களுக்கும் முன்னோர் பொருத்திச் சொன்னார்கள். காட்டாகச் சித்திரை நாள்காட்டு, பூரணை நிலவோடு சேர்ந்து வரும் மாதம் சித்திரை மாதம். அதே வகையில், மக நாள்காட்டு பூரணையோடு பொருந்திவரும் மாதம் மாசியாகும். சித்திரை, வைகாசி என்ற பெயர்களில் ஒரு சில திங்கட் பெயர்கள் திரிவு கொண்டு சங்கதத் தோற்றங்களை வெளியே காட்டினாலும், அவை ஒவ்வொன்றின் உள்ளேயும் தமிழ்க் கூறுகள் அடங்கியிருக்கின்றன; அவை முற்றிலும் சங்கதப் பெயர்கள் அல்ல.

மாசி என்ற ஒலிப்பும், மகம் என்ற ஒலிப்பும் என்ன பொருள் கட்டுகின்றன, எப்படி அவை இணை கொண்டன, தமிழ் வேர் எங்குள்ளது என்பதை உன்னித்து பார்த்தால், அறியலாம். மக நாள்காட்டு என்பது ஒரு தனி நாள்காட்டு அல்ல. அதுவும் ஒரு நாள்காட்டுக் கூட்டம் தான்; ஐந்த நாள்காட்டு அடங்கிய கூட்டம். அந்தக் கூட்டம் இரவில் பார்க்கும் போது ஒரு கலப்பையின் வளைந்த நுகத்தடி போன்று காட்சியளிக்கும். காளையின் கழுத்தில் கட்டப்படும் மரமும் கூட நுகத்தடி என்றே தமிழில் அழைக்கப் படும். [தற்பொழுது மரு. செயபாரதி அகத்தியர் மடற்குழுவில் மகவோட்டம் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார். அதை விளக்கும் முகமாக மடங்கல் இராசியைப் (சிம்ம இராசியைப்) படம் போட்டுக் காண்பித்திருக்கிறார். அதற்கான சுட்டி கீழே.

http://www.geocities.com/jaybee4127/magam_simmaraasi.html

இந்த இராசிக்குள் ஐந்து நாள்காட்டுக்கள் கொண்ட மக நாள்காட்டுக் கூட்டமும் காணப் படும். அந்தக் கூட்டத்தை மட்டும் பார்த்தால், அது ஒரு வளைந்த நுகத்தடி போல் இருப்பது புலப்படும்; அதே பொழுது. முழு இராசியையும் பார்த்தால் சிகைமா - சிங்கம் - என்ற உருவம் புலப்படும். சிகைமா - சிங்கம் என்ற சொற்பிறப்பை காலங்கள் என்ற என் தொடரில் கூறியிருக்கிறேன்.] வளைந்த நுகம் என்பதால் கொடுநுகம் என்று இந்தக் கூட்டம் பழந்தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. நகரமும் மகரமும் தமிழில் போலியானவை. நுடம் முடம் ஆகும்; முப்பது நுப்பது ஆகும். அந்த வகையில் நுகம் முகம் என்று ஆகும். அடுத்து உகரத்தை அகரமாயும், அகரத்தை உகரமாயும்/ஒகரமாயும் சிலபோது பேச்சில் பலுக்குவது தமிழில் பலரும் செய்வது தான் (மகளே என்பதை முகளே>மோளே என்று மலையாளத்தில் பலுக்குவதை ஓர்ந்து பார்த்தால் நான் சொல்லுவது புலப்படும்.) நுகம்>முகம்>மகம் என்ற திரிவில் நாள்காட்டின் பெயர் அமைந்தாலும் உருவம் நுகத்தடி என்பதை மறந்து விடாது பார்த்தால் பெயரின் உள்ளே இருக்கும் தமிழ்மூலம் புலப்படும்.

இனி மக நாள்காட்டுப் பொருந்திய மாதம் மகயி. எப்படித் துகள் பொருந்திய கூட்டம் துகயி>துகசி>தூசி என்று ஆகிறதோ, அதே போல மகம் நிறைந்தது மகயி>மகசி>மாசி என்று ஆகும். யகரம் சகரமாவதும் தமிழ்த் திரிவு தான். உயிர்>உசிர் என்று திரிவை எண்ணிப் பாருங்கள். இனி, மக என்னும் ஒலி மா என்று நீண்டொலிப்பதற்கும் காட்டுக் கூறமுடியும். மகன்>மான் (அதியமான்), மகள்>மாள் (வேள் மகள்>வேண்மாள்) என்று ஆவதைப் போல, மகசி மாசியாகும்.

சூரியச் சந்திரமான மாதத்திற்கு மாறாக, மூன்றாவது முறையில் நிலாவை முற்றிலும் ஒதுக்கிட்டு, புவி சூரியனைச் சுற்றி வரும் ஓராண்டுக் காலத்துக்குள் எத்தனை முறை தன்னுருட்டு (self rotation) செய்கிறது என்று பார்த்தால், 365.256364 தன்னுருட்டுக்கள் (அதாவது 365.256364 நாட்கள்) என்று புலப்படும். இந்தக் கணக்கைச் சூரிய மானம் என்று சொல்லுவார்கள். (சூரியன், புவி ஆகியவற்றின் இயக்கத்தை அளவிட்டுச் சொல்லப்படும் காலத்தொடர்ச்சி ஒரு சூரிய ஆண்டு.) இதில் ஒவ்வோர் ஆண்டையும் அறவட்டாக (arbitrary) 12 மாதங்கள் என்று பிரித்தால், ஒரு சூரிய மாதம் அல்லது ஞாயிறு என்பது 365.256364 / 12 = 30.43803 நாட்கள் கொண்ட காலத் தொடர்ச்சியாகும். (மாதம் என்ற சொல் முதலில் மதியை ஒட்டி எழுந்திருந்தாலும் இன்று பொதுமைப் பொருளையையே குறிக்கும் சொல்லாக இதைப் பழகியிருக்கிறோம். அதே பொழுது திங்கள், ஞாயிறு என்ற சொற்கள் விதப்பான பொருளையே காட்டுகின்றன.)

சூரியச் சந்திர மானக் கணக்கில் மாதம் என்னும் காலத் தொடச்சி பெருமிதி (primitive)யானது; ஆண்டு என்பது அடுத்து வருவது; மாதத்தில் இருந்து பெறப்படுவது. அதே பொழுது, சூரிய மானக் கணக்கில் புவி சூரியனைச் சுற்றிவரும் சூரிய ஆண்டு என்பதே பெருமிதியானது; மாதம் என்பது பின்வருவது; ஆண்டில் இருந்து பெறப்படுவது. இந்த அடிப்படையைப் பலரும் மறந்து விடுகிறார்கள்.

ஞாயிற்று மாதங்கள் மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துளை, நளி, சிலை, சுறவம், கும்பம், மீனம் என்று சொல்லப் படும். இவை அத்தனையும் நல்ல தமிழ்ப்பெயர்கள். [ஒருசிலர் புரியாமல் கும்பம், மீனம் போன்றவை வடமொழி என்று நினைத்துக் கொள்ளுகிறார்கள். இன்னும் சிலர் வடமொழித் திரிவையும், மொழிபெயர்ப்பகளையும் பெருமிதியாக எண்ணிக் கொண்டு தமிழ்ச்சொற்களை வழிப்பட்டதாகச் சொல்லுவது உண்டு. வடசொற் தோற்றமுள்ள சொற்களின் பிறப்பை ஆய்ந்துபார்க்கும் போதுதான், தமிழ் வேர் சரியாகப் புலப்படுகிறது.] தற்போது காலங்கள் என்ற என் தொடரில் இந்தப் பெயர்கள், மற்றும் நாள்காட்டுகளின் சொற்பிறப்புகளை என்னால் முயன்றவரை தெரியப் படுத்திக் கொண்டிருக்கிறேன். முதல் ஆறு மாதங்களின் பெயர்களை இதுவரை விளக்கியிருக்கிறேன். மீதம் ஆறுமாதங்களின் பெயரை இனி வரும் பகுதிகளில் விளக்க வேண்டும். (மேலே, மேழத்தில் இருந்து மாத வரிசையை எழுதியதால், மேழத்தில் தான் தமிழ் ஆண்டு தொடங்க வேண்டுமா, அன்றிச் சுறவத்தில் இருந்து தொடங்கலாமா என்ற கேள்விக்குள் இப்பொழுது நான் போகவில்லை; அதற்கான மறுமொழியைக் காலங்கள் தொடரில் உறுதியாகச் சொல்லுவேன். கூடவே, இந்த மறுமொழி, தினமணி நாளிதழில் தொல்லியல் ஆராய்ச்சியாளர் திரு. எஸ். ராமச்சந்திரன் அண்மையில் வெளியிட்டிருந்த "சித்திரையில் தான் புத்தாண்டு" என்ற நீண்ட கட்டுரைக்கும் முன்னிகையாக இருக்கும்.)

தமிழ்நாடு, மலையாளம் போன்றவற்றில் சூரியமானக் கணக்கே பின்பற்றப் படுகிறது. ஒரு காலத்தில் திங்கள் மாதமும், ஞாயிற்று மாதமும் அருகருகே சேர்த்துத் தான் சொல்லப் படும். பல சோழர் காலக் கல்வெட்டுக்களில் அப்படி சேர்த்துச் சொல்வது பதிவு செய்யப் பட்டிருக்கிறது. பின்னால், இந்தப் பழக்கம் பழைய சேரலத்தில் (இன்றையக் கேரளத்தில்) மட்டுமே இன்று நிலைத்து, இன்றையத் தமிழகத்தில் மறைந்து போனது; (அது என்னவோ தெரியவில்லை, பழைய தமிழ் வழக்கங்கள் பலவும் இன்று கேரளத்தில் மட்டுமே மீந்துள்ளன. தமிழகத்தில் அவை மாறிப் போய்க் கிடக்கின்றன. காட்டாக தொல்காப்பியத்தில் சொல்லப்படும் படி, ஆவணியில் ஆண்டைத் தொடங்கும் வழக்கம் தென்கேரளத்தில் இன்றும் உள்ளது.) கூடவே சூரிய மாதங்களைத் திங்கள் பெயரை வைத்தே போலியாய் அழைக்கும் குழப்பமும் இன்றையத் தமிழகத்தில் ஏற்பட்டது. அதன்படி மேழ ஞாயிற்றைச் சித்திரை என்றும், விடை - வைகாசி, ஆடவை - ஆனி, கடகம் - ஆடி, மடங்கல் - ஆவணி, கன்னி - புரட்டாசி, துலை - ஐப்பசி, நளி - கார்த்திகை, சிலை - மார்கழி, சுறவம் - தை, கும்பம் - மாசி, மீனம் - பங்குனி என்றும் போலியாய் அழைக்கப் பட்டன.

ஒரு வேடிக்கையைப் பாருங்கள். முதலில் வெறும் சந்திர மான மாதத்திற்கு அழைத்த பெயர்கள், கொஞ்சம் நீண்டு சூரியச் சந்திர மான மாதங்களைக் குறித்து பிறகு இன்னும் நீண்டு முற்றிலும் சூரிய மான மாதங்களைக் கூடக் குறிக்கத் தொடங்கின. குழப்பம் வராதா? இல்லையா? வானியலில் துல்லியமாய்க் குறிக்க வேண்டுமானால் (நாள்காட்டி என்பதில் துல்லியம் காட்டாமல் எப்படி?) சூரிய மானப் பெயர்களை போலிப்பெயர் சொல்லாது மேழம் ...... மீனம் என்றே குறிப்பதே நல்லது. இன்னமும் சேரலத்தார் அப்படித்தான் குறிக்கிறார்கள். (தனித்தமிழ் இயக்கத்தார் மட்டும் பாவாணர், பெருஞ்சித்திரனாரின் முயற்சியால் சூரிய மானப் பெயர்களையே இப்பொழுது பயிலுகிறார்கள்.)

மக நாள்காட்டை வைத்துப் பல பழமொழிகளை நாட்டுப்புறத்தில் சொல்லுவார்கள். அரசியலில் கழக அம்மாவுக்கும் கூட ஒரு மக நாள்காட்டுப் பழமொழி சொல்லுவதைக் கேட்டிருக்கிறேன். அவற்றையெல்லாம் நான் இங்கு விவரிக்கப் புகவில்லை.

மக நாள் இந்த ஆண்டு பெப்ருவரி 21, மாசி 9- ல் நடைபெறும். மாசி மகம் என்னும் இந்தப் பண்டிகை சிவ, விண்ணவ நெறிகளில் தீர்த்தவாரியோடு - அதாவது கடலாடல், ஆறு, குளம் போன்றவற்றில் நீராடல் - சேர்த்துச் சொல்லப்படும். தீத்தம்/தீர்த்தம் என்ற வடமொழிச் சொல் துளித்தம் என்னும் தென்சொல்லோடு தொடர்பு கொண்டது. (எப்படிச் சிந்து என்ற சொல் சிந்துகின்ற நீரைக் குறிக்கிறதோ, அது போலத் துளிக்கின்ற நீர் துளித்தம்.) சமய நெறிகளில் மாசி மகத்திற்கு இருக்கும் தொடர்பையும் நான் இங்கு எடுத்துரைக்க முற்படவில்லை. [மார்கழி நீராடல், தைந் நீராடல், தீர்த்த வாரி என குளிர்காலத்தில் அடுத்தடுத்த மாதங்களில் அதிகாலை நீராடலை அழுந்திச் சொல்லும் சூழ்க்குமம் தான் என்ன? இது சமய நெறிகளின் வழிகாட்டலா? அல்லது பண்பாட்டு வழக்கின் தாக்கமா? ஓர் ஆய்வுக் கேள்வி நம்மை அழைக்கிறது.]

அடுத்து, வேறொரு புலனத்துக்கு நகரலாங்களா?

அன்புடன்,
இராம.கி.

16 comments:

PPattian said...

நல்ல கட்டுரை. ஆனால் மிக சிரமப்பட்டு படிக்கும் விதமாக உள்ளது ஐயா. நட்சத்திரத்துக்கு நாள்காட்டு என ஒரு தமிழ்ச் சொல் இருப்பதையே, இதைப் படித்துதான் தெரிந்து கொண்டேன்.

துளசி கோபால் said...

நட்சத்திர வாழ்த்து(க்)கள் ஐயா.

'க்' வராதுன்னு சொல்றாங்கன்னுதான் அடைப்புக்குள் போட்டுருக்கேன்.

வேணுமுன்னா வச்சுக்கலாம். வேணாமுன்னா .......

எடுத்தறலாம்.

என்றும் அன்புடன்,
துளசி

சேதுக்கரசி said...

நட்சத்திர வார வாழ்த்துக்கள் இராமகி ஐயா!

Anonymous said...

மகள் - மோள்
மகன் - மோன்

இது யாழ்ப்பாணத்தில் மிகச் சாதாரணமாகப் பாவிக்கப்படுகிறது.

HK Arun said...

நட்சத்திர வாழ்த்துக்கள் ஐயா!

தமிழ் ஆர்வலர் என்றதுமே ஆர்வத்துடன் நுழைந்தேன். இனி உங்கள் வாசகனில் நானும் ஒருவனாக.

தமிழுக்கான பணியை தொடருங்கள்.

நன்றி!

Anonymous said...

அன்பின் இராம கி ஐயா

வாழ்த்துகள்
தமிழ் தொடர்பான நிறைய விதயங்களை இந்த நாள்காட்டு கிழமையில் எதிர்பார்க்கலாம்தானே?! :-)

நட்புடன்
ஆசிப் மீரான்

வெற்றி said...

இராம.கி ஐயா,
பதிவுக்கு மிக்க நன்றி. பல தமிழ்ச் சொற்களும், பல புதிய சங்கதிகளையும் உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். மீண்டும் நன்றிகள்.

/* (மகளே என்பதை முகளே>மோளே என்று மலையாளத்தில் பலுக்குவதை ஓர்ந்து பார்த்தால் நான் சொல்லுவது புலப்படும்.) */

ஈழத்தில் என்ரை ஊரிலும் இந்தச் சொற்கள் புழக்கத்தில் உண்டு.

எடுத்துக்காட்டு:-

"இஞ்சை வா மோனை" என்று பல முதியவர்கள் சிறுவர்களை கூப்பிடுவார்கள்.

அத்துடன் மகள் -- மேள், மகன் -- மேன் என்ற சொற்களும் அன்றாட புழக்கத்தில் உள்ள சொற்கள்.

குமரன் (Kumaran) said...

2005 ல் நீங்கள் நாள்காட்டிய போது நான் வலைப்பதிய வந்துவிட்டேன். ஆனாலும் அந்தக் கிழமை முழுவதும் உங்கள் இடுகைகளைப் படித்ததாக நினைவில்லை. உங்கள் பதிவின் அறிமுகம் பின்னரே ஏற்பட்டது. இந்தக் கிழமை நீங்கள் இடும் இடுகைகளை எல்லாம் படித்துவிட வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். மீண்டும் நாள்காட்டும் வாய்ப்பினைப் பெற்றமைக்கு வாழ்த்துகள்.

சந்திர, சந்திர சூரிய, சூரிய மான ஆண்டுகளைப் பற்றி நிறைய ஐயங்கள் இருந்தன. இந்த இடுகையைப் படிக்கும் போது அவற்றில் பல தெளிவு பெறுகின்றன. சூரிய இராசிகளின் படி அமைந்த தமிழ் மாதங்களுக்கு ஏன் திங்கள்+நாள்காட்டுகளின் அடிப்படையில் அமையும் பெயர்கள் இருக்கின்றன என்று வெகு நாட்களாக இருந்த ஐயம் இன்று தீர்ந்தது.

மீண்டும் ஒரு முறை இந்த இடுகையைப் படித்து மனத்தில் இருத்திக் கொள்ளவேண்டும்.

Anonymous said...

அய்யா,
மதி>மாதம் என்ற சொல்லும் திங்களைப் போல் நிலவைக் கொண்டு எழுந்த சொல் தானே?
இவற்றை வைத்துப் பார்க்கையில் வெறுமனே சந்திரமானக் கணக்கு தான்
தமிழருக்கு நெருங்கியது போன்றதொரு தோற்றப்பாடு வருகிறதே.
சூரியமான /சவுரமாதங் காட்டும் முறையும் நம் வழிவந்ததெனக் காட்ட, மொழிவழி சொற்சான்றுகள்
ஏதேனும் உண்டா?

நாட்காட்டுக் கிழமைக்கு வாழ்த்துகள்!

-பிரதாப்

செந்தில்நாதன் செல்லம்மாள் said...

It is a brilliant one... Thanks a lot sir...

இராம.கி said...

அன்பிற்குரிய திரு புபட்டியன்,

சொற்கள் பழக்கமில்லாததால், உங்களுக்குச் சரவற்பட்டுத் தோன்றலாம். நாளாவட்டத்தில் அவை பழகி விடும். சித்திரமும் கைப் பழக்கம், செந்தமிழும் நாப் பழக்கம்.

நாள்மீன், நாள்காட்டு என்ற சொற்களைப் பழகிக் கொள்ளுங்கள். நாள்காட்டு> நாள்காட்டம்> நாட்காத்தம்> நாட்காத்ரம்> நாக்ஷத்ரம் என்ற திரிவையும் தெரிந்து கொள்ளுங்கள்.

அன்பிற்குரிய துளசி கோபால்,

வாழ்த்துக்களுக்கு நன்றி. க் இடையில் வருமா, வராதா என்ற கேள்விக்குள் நான் இப்பொழுது போகவில்லை.

அன்பிற்குரிய சேதுக்கரசி,

வாழ்த்துக்களுக்கு நன்றி

அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,

மோள், மோன் என்று யாழ்ப்பாணத்தில் பயிலப்படுவது பற்றிக் கேட்டிருக்கிறேன். நான் மலையாளப் பலுக்கலைச் சொன்னதற்குக் காரணம், அதுவும் அப்படி என்பதால் தான்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய அருண்,

உங்களின் தமிழ் ஆர்வத்திற்கு நன்றி.

அன்பிற்குரிய ஆசிப்,

உங்கள் கனிவிற்கு நன்றி.

அன்பிற்குரிய வெற்றி,

சில சொற்களின் புழக்கம் யாழ்ப்பாணத்திற்கும், மலையளத்திற்கும் ஒன்றுபோல் அமைந்திருப்பதை மொழியாளர்கள் கூர்ந்து கவனித்திருக்கிறார்கள்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய குமரன்,

இந்த ஒரு கிழமையின் இடுகைகளைப் படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். சந்திர, சூரியச் சந்திர, சூரிய மானக் கணக்குகளை இன்னும் விவரமாய் எழுதவேண்டும். அதே பொழுது, அதையெல்லாம் எழுதினால் படிப்பதற்கு யார் வருவார்கள் என்ற எண்ணமும் எழுகிறது.

நம்முடைய வானியலை மறுத்தொதுக்கியவர் இருவர்; ஒருவர் மேலையர் வானியல் வந்ததென்றும், நம் வானியல் பாழாய்ப் போன சோதியத்துக்குள் இடைப்பரட்டப் படுவதாலும் மறுக்கின்ற நிலை கொண்டவர். இன்னொருவர், "நதிமூலம், ரிஷிமூலம் " என்ற ஊற்றுக்கண் தெரியாமல் இந்திய வானியலே வடமொழிப் பட்டது என்று தமிழ் வேரை மறுக்கும் நிலையாளர்.

ஒருபக்கம் அறியாமை; இன்னொரு பக்கம் வறட்டுவாதம். அறியாமையாவது பொறுத்துக் கொண்டு, மீண்டும் மீண்டும் விளக்கம் சொல்லி அறிவுறுத்தலாம். இந்த வறட்டுவாதம் இருக்கிறது பாருங்கள், இதனோடு உரையாடுவது மிகக் கடினம். பல நேரம் சலிப்பு வந்து, "எப்படியோ தொலையட்டும்" என்று சொல்லி விடலாமோ என்று தோன்றும். மீண்டும் இழுத்துப் பிடித்து வந்து முயன்று கொண்டே இருக்க வேண்டும்.

பெருமிதமில்லாத மக்கள் எதைச் சாதிப்பார்கள்?

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய பிரதாப்,

மதி>மாதம் என்று சொல்லும் திங்களைப் போல் நிலவைக் கொண்டு எழுந்த சொல் தான். அது மட்டுமல்ல, கால அளவிடுதற் பொருளைக் குறிக்கும் மதித்தல் என்ற சொல்லும் கூட மதியில் இருந்து தோன்றியது தான். இந்தச் சிந்தனை நம்முடையது மட்டுமில்லை. உலகெங்கணும் இருக்கிறது. மேலையரின் month, monat ஆகிய சொற்களும் மதியைக் குறிக்கும் moon இல் தோன்றியவை தான். moon க்கும் மதிக்கும் கூட இணை உண்டு. நாம் ஏதோ தனித்தவர் இல்லை; நமக்கும் இந்தையிரோப்பியருக்கும் ஏதோ ஒரு தொடர்பு வரலாற்றுக் காலத்திற்குச் சற்று முன்னால் இருந்திருக்கலாம். எனக்குச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை.

சந்திர, சூரியச் சந்திர, சூரிய மானக் கணக்குகள் ஆகிய மூன்றுமே நம்மோடு தொடர்புடையவை. அவைக் காலப்போக்கில் ஒன்றிலிருந்து இன்னொன்றாய் எவ்வளித்து வந்தவை (எவ்வுதல்>எவ்வளித்தல் = ஏறி வருதல் = evolve). காலங்கள் கட்டுரைத் தொடரில் இதையெல்லாம் சொல்லிவருகிறேனே?

வாழ்த்துக்கு நன்றி.

அன்புடன்,
இராம.கி

Torik Fauzi said...

nice blog and good content. hope you nice day,.. good luck!
Blog Tips

Anonymous said...

சிலை-சுறவம் = JANUARY
சுறவம்-கும்பம் = FEBRUARY
கும்பம்-மீனம் = MARCH
மீனம்-மேழம் = APRIL
மேழம்-விடை = MAY
விடை-ஆடவை = JUNE
ஆடவை-கடகம் = JULY
கடகம்-மடங்கல் = AUGUST
மடங்கல்-கன்னி = SEPTEMBER
கன்னி-துளை = OCTOBER
துளை-நளி = NOVEMBER
நளி-சிலை = DECEMBER
- DICTIONARY.WE.BS