minimum பற்றிச் சொல்வதற்கு முன்னால் இந்தப் பதிவில் வேறு பத்துச் சொற்களைத் தருகிறேன். இன்னும் பட்டியலில் பல சொற்கள் இருக்கின்றன.
இருபத்தாறாவது அளவுச் சொல்லான meagre என்பதைப் பார்ப்போம். குறைந்து இருப்பதை ஆங்கிலத்தில் இப்படிச் சொல்கிறார்கள். தமிழில் "அவன் நொய்ந்து போய்க் கிடக்கிறான்" என்னும் போது "குறைப்பட்டுக் கிடக்கிறான்" என்றே பொருள் கொள்ளுகிறோம். நொய்தலின் பெயர்ச்சொல் நோய். நொடித்துப் போதல், நொகுத்துப் போதல் என எல்லாமே குறைப்பட்டுப் போவது தான். குறைப்படுதல் என்பது தகுதியிலும் (quality) நடக்கலாம்; எண்ணுதியிலும் (quantity) நடக்கலாம். நொகை எண்கள் என்று negative எண்களைச் சொல்லுகிறோம். அதே போல எண்ணில் குறைப்பட்டுக் கொஞ்சமாய் இருத்தலை சற்றே திரித்து நூகை என்று சொல்லலாம். நூகிக் கிடத்தல் என்பதும் நொய்ந்து கிடப்பதே. meagre = நூகை. "இவ்வளவு நூகையாக பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது?"
இருபத்து ஏழாவது சொல் mean என்பது. இதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் நாப்பண் என்றே கூறும். நடுவண் என்பதைப் போன்று உள்ள சொல் நாப்பண். நடுவிற்கும் நடுவானது நாப்பண். ஒரு முறை நண்பர் மதுரபாரதி இதை மடற்குழுவில் பழைய காட்டுக்களை எடுத்துக் காட்டி அருமையாக விளக்கியிருந்தார். நாப்பண் என்பதை நாவண் என்றும் சொல்லலாம். mean = நாவண். "இன்றைய ஒரு நாட்பொழுதின் நாவண் வெம்மை (temperature) என்ன?" என்ற கேள்வி கேட்கக் கூடியது தான்.
இருபத்தி எட்டாவது சொல் median. ஏற்கனவே கூறிய படி, நடுவம் என்ற சொல்லே இதைக் குறிக்கும். இதே பொருளில் பெயரடையாக (adjective) வரும் பொழுது medial என்பதை நடுவல் என்று குறிக்கலாம்.
இருபத்தி ஒன்பதாவது சொல் medium. பலரும் இதை ஊடகம் என்றே மொழிபெயர்க்கிறார்கள். சில காலம் முன்புவரை நானும் அப்படிப் புழங்கி இருந்தாலும், இப்பொழுதெல்லாம் அதை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். பெரும்பாலான இடங்களில் மிடையம் என்ற சொல்லையே நான் இப்பொழுது புழங்குகிறேன். ஏனென்றால் ஊடுதல் (to go in between or to osmose) என்ற வினை, ஒன்றின் ஊடே செல்லுதல் என்றே பொருள் கொள்ளும். இது வேதிப் பொறியியல் (chemical engineering), மற்றும் பூதி வேதியலில் (physical chemistry) osmosis என்ற செலுத்தத்திற்குச் (process) சரியாகப் பொருந்தி வரும். நுணுகிய துளைகள் இருக்கும் ஒரு படலத்தின் (film) வழியே சில மூலக்கூறுகள் (molecules) ஊடுவது உண்டு. அந்தச் செயல் ஊடுகை (osmosis) என்று இந்த இயல்களில் சொல்லப் படும். அந்த ஊடுகைக்குத் துணை போவது ஊடகம் (osmotic membrane) என்னும் மெம்புனை(membrane)யாகும். அந்த ஊடுகைக்கு எதிராக, அதாவது கரைபொருளுக்கு (solute) மாறாகக் கரைமத்தையே (solvent) ஊட வைக்கும் செலுத்தத்தை எதிர் ஊடுகை (reverse osmosis) என்று சொல்லுவார்கள். medium என்பதற்கு ஈடாக, மிடையம் என்று நான் சொல்லுவதற்குக் காரணம் மிடைத்தல் என்பது மேற்பட்டுத் தெரிதல். மிடையும் மேடும் ஒருபொருட்சொற்கள் தான். மேட்டில் இருந்து எழுந்தது மேடை என்னும் சொல். ஒரு குமுகாயத்தில் ஏற்படும் நிகழ்ச்சிகளை மேற்படுத்திக் காட்டுவது, மிடைத்துக் காட்டுவது மிடையம். இங்கே இவர்கள் வெறுமே விளக்குப் போட்டு நமக்குக் காட்டுகிறார்கள். "பொதுவாக மிடையக்காரர்கள் நிகழ்வுகளின் ஊடே சென்று செலுத்தம் செய்வது உகந்தது அல்ல" என்றே பலரும் சொல்லுகிறார்கள். தவிர அகநானூற்றின் ஒரு பகுதிக்குப் பெயரான மணிமிடைப் பவளம் என்ற சொல்லையும் இங்கே ஓர்ந்து பார்க்கலாம். மணிகளுக்கு இடையே கிடக்கும் பவளம் என்று அதற்குப் பொருள். மிடையம் என்பது குமுகயாத்தின் இடையே கிடக்கும் ஒரு நிறுவனம் தான். இப்படி இதைப் பற்றி நான் எழுதிக் கொண்டே போகலாம். எனக்கென்னவோ மிடையம் என்ற சொல் media-விற்குச் சரியான பொருள் தருவதாகவே படுகிறது. ஆனால், எந்தச் சொல் நிலைக்கும் என்று முன்கூட்டிச் சொல்ல நான் யார்? என்னால் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும்.
முப்பதாவது சொல் mega; முன்பே சொன்னது போல் மீ என்னும் ஓரெழுத்து ஒருமொழி மிகுந்த நிலையை, மிகப் பெரிதான நிலையைக் குறிக்கும் சொல்; அதன் இன்னொரு சொல்லாட்சியே இந்த மீகிய என்ற பயன்பாடு.
முப்பத்தொன்று micro; தமிழிற் பல இடங்களில் மகரமும், நகரமும் போலி என்று அறிவோம். இந்தப் போலிப் பயனக்கத்தால், முதல் என்பது நுதலாகும்; முப்பது நுப்பதாகும்; முடங்குவது நுடங்குவதாகும். இதே வகையில் எண்ணிப் பார்த்தால் நூகிய என்ற சொல் மூகிய என்று மாறி மிக நுண்ணிய பொருளைக் குறிப்பது புரியும். இப்பொழுது தமிழில் திரிந்த சொல்லைப் பயனாக்காமல், நூகிய என்பதையே ஆளலாம்.
முப்பத்திரண்டாவது சொல் middle; இதற்கான இணைச்சொல் நடு; நான் கூடுதல் விளக்கம் தர வேண்டியதில்லை.
முப்பத்தி மூன்றாவது சொல் mild; மெல்லியது mild ஆகும். இந்தச் சொல், தகுதி (quality) நோக்கியே முதலில் எழுந்தது; நாளாவட்டத்தில் எண்ணுதிக்கும் (quantity) பயன்படுத்துகிறார்கள். வாயில் போட்டு மெல்லுகிறோமே அந்தச் செயலால் தான், ஆதி மாந்தருக்கு, கடினமான பொருள் மெல்லியதானது. பின்னால் அரைத்தல் என்ற சொல்லும் மெல்லுதலுக்குப் பகரி(substitute)யாய் எழுந்தது. அப்படி மெல்லுகிற காரணத்தால் ஒரு சுவையும் அவருக்குப் புலப்படுகிறது. கூடவே ஒரு மணமும் எழுகிறது. ஆங்கிலத்திலும் மேலை மொழிகளிலும் மணத்தைக் குறிக்கும் சொல்லான smell என்பது கூட இந்த மெல்லும் செயலால் எழுந்த சொல் தான். இந்தையிரோப்பிய மொழிகளுக்கும், தமிழிய மொழிகளுக்கும் உள்ள உறவில் இந்தச் சொல்லையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
முப்பத்தி நான்கு milli; முன்னால் சொன்ன முறையில் இது நுல்லி என்று தமிழில் வரும். நுல்லில் பிறந்த சொற்கள் பலவுண்டு. நுல் என்பது நுணுகு, நூகு எனப் பல சொற்களுக்கும் வேராக அமையும். மகர நகரப் போலி பற்றி முன்னால் சொல்லியிருக்கிறேன். million என்னும் எண் தொகுதியை நுல்லியம் என்றே தமிழில் சொல்லலாம். இந்தக் காலத்தில் கோடி இலக்கம் என்று சொல்லுவதற்கு மாறாக நுல்லியம் என்று உலக வழக்கில் பழகுவதே முறை என்று சொல்லுவோரும் உண்டு. நுல்லியத்தின் மடங்குகளைக் குறிக்க, இரும நுல்லியம் (billion), மும்ம நுல்லியம் (trillion). நால்ம நுல்லியம் (quadrillion), ஐம நுல்லியம் (quintillion), அறும நுல்லியம் (sechstiliion), எழும நுல்லியம் (septillion), எண்ம நுல்லியம் (octillion), தொண்ம நுல்லியம் (nanillion) என்றே பழகலாம். பன்மடங்கு நுல்லியத்தை (zillion) பன்ம நுல்லியம் என்றே சொல்லலாம்.
முப்பத்தி ஐந்து mine. இதன் இணைச்சொல் நுணங்கு என்று ஆகும். நோண்டு என்றும் இன்னொரு வளர்ச்சி உண்டு. நுல்லுவது என்பது இன்னொரு வகையில் துளைப்பது என்ற பொருளைக் கொடுக்கும். துல்>துள்>துளை; துல்>துள்>தோள்>தோண்டு என்று ஆவது போல் நுல்>நுள்>நோள்>நோண்டு என்று ஆகும். நோண்டிவரும் சுரங்கம் mine என்படுகிறது. சுரங்கம் என்பது கூட சுரிக்கின்ற (தோண்டுகின்ற) செயலால் பிறந்த சொல் தான். நுணங்கின் பெரியது நுணங்கம். ஆங்கிலத்தில் mine என்ற சொல் ஒப்புமை அடிப்படையில் அளவுச் சொல்லாக ஆகிறது. A minefull of wealth. ஒரு நுணங்கம் அளவுக்குச் செல்வம் அவனிடம் கொட்டிக் கிடந்தது.
இந்தப் பதிவில் சொல்லிய அளவுச் சொற்களின் தொகுதி கீழ்வருமாறு:
meagre = நூகை
mean = நாவண்
median = நடுவம், medial = நடுவல்
medium = மிடையம்
mega = மீ, மீகிய
micro = நூகிய
middle = நடு
mild = மெல்லிய
milli = நுல்லி
mine = நுணங்கு, நோண்டு,
பதிவில் கூறிய மற்ற சொற்கள் வருமாறு:
negative = நொகை
temperature = வெம்மை
adjective = பெயரடை
to osmose = ஊடுதல்
chemical engineering = வேதிப் பொறியியல்
physical chemistry = பூதி வேதியல்
process = செலுத்தம்
film = படலம்
membrane = மெம்புனை
molecules = மூலக்கூறுகள்
mine = நுணங்கம் (=சுரங்கம்)
osmosis = ஊடுகை
osmotic membrane = ஊடகம்
solute = கரைபொருள், கரையம்
solvent = கரைமம்
substitute = பகரி
reverse osmosis = எதிர் ஊடுகை
million = நுல்லியம்
billion = இரும நுல்லியம்
trillion) = மும்ம நுல்லியம்
quadrillion = நால்ம நுல்லியம்
quintillion = ஐம நுல்லியம்
sechstiliion = அறும நுல்லியம்
septillion = எழும நுல்லியம்
octillion = எண்ம நுல்லியம்
nanillion = தொண்ம நுல்லியம்
zillion = பன்ம நுல்லியம்
அன்புடன்,
இராம.கி.
1 comment:
மீடியா என்பதற்க்கு மிடையம் என்ற அருமையா சொல்லை இப்போது தான் பார்க்கிறேன்.
இதுபோல தான் புது சொற்கள் உருவாக்க வேண்டும் என்ற என் எண்ண கனவை இந்த தளத்தில் நினைவாக பார்த்த மகிழ்ச்சி அய்யா. உங்கள் பணி தொடர எனது வாழ்த்துகள்.
அய்யா அதேபோல் multimedia என்ற ஆங்கில சொல்லுக்கு பல்மிடையம் என்று அழைக்கலாமா?
Post a Comment