Friday, July 14, 2006

அளவுச் சொற்கள் - 1

என்னுடைய வலைப்பதிவில் முன்பு ஒரு நண்பர் கொடுத்த பின்னூட்டில் "micro, macro, mega போன்றவற்றை தமிழில் எப்படி விதப்பாகச் (specific) சொல்லுவது?" என்று கேட்டிருந்தார்.
-----------------------------------------------------------
அவர் கேட்டிருந்த சொற்கள் எல்லாம் அளவுக் கருத்து பற்றிய முன்னொட்டுச் சொற்கள். அளவுச் சொற்களைக் கையாளும் போது நம்முடைய பேச்சில் தகுதி (quality), எண்ணுதி (quantity) என்ற இரண்டிலுமாய்த் துல்லியம் காண வேண்டும். ஆங்கிலத்தில் அளவு பற்றிய பல்வேறு முன்னொட்டுச் சொற்களை அடுக்கி, இடத்திற்குத் தகுந்தவாறு, பயன்படுத்துவதில் கவனம் எடுத்துக் கொள்ளும் நாம், தமிழ் என்று வரும் போது மட்டும், பொதுமையான சில அளவுச் சொற்களைத் தெரிந்து கொண்டு, விதப்பானவற்றை அறிய மாட்டேம் என்கிறோம். அளவு பற்றிய எல்லாவற்றிற்கும் நமக்குத் தெரிந்த ஓரிரு சொற்களை மட்டுமே வைத்து ஏதோ ஒரு வகையில் ஒப்பேற்றி விடுகிறோம். பொதுவாக நம்முடைய மொழியைக் கையாளுவதில் நமக்கு ஓர் அலட்சியம் இருக்கிறது, நமக்குத் தெரிந்த தமிழ்ச் சொல் தொகுதியை கூட்டிக் கொள்ளாதே இருக்கிறோம் என்று நான் எண்ணுகிறேன். (இதை மிகுத்துச் சொன்னால் பலருக்கும் என்மேல் கோவம் வரக்கூடும்.) இதற்கு ஓர் எடுத்துக் காட்டு தருகிறேன். ஒருபொழுது திண்ணை வலையிதழில் ஒரு நேர்காணல் உரையாடலில் பங்காளர் ஒருவரின் (மிகப் பெயர் பெற்ற, அண்மையில் மறைந்த ஓர் எழுத்தாளர்) வாசகம் படித்தேன்.

"நான் என்ன நினைக்கிறேன்னா - வாட் ஈஸ் செந்தமிழ் வாட் ஈஸ் சாதாரண தமிழ்னு க்ளியரா distinguish பண்ணனும். ஹார்ட் மாதிரியானவர்கள் classical tamil people-னுதான் சொல்ல முடியும்."

இதைப் படித்த எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இந்நாளைய இலக்கியவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள் ஏன் இந்த அளவு தமிங்கிலம் பயில்கிறார்கள்? இதில் என்ன தமிழில் சொல்ல முடியாத பெரிய கலைச்சொல் பொதிந்து கிடக்கிறது?

"நான் என்ன நினைக்கிறேன்னா, எது செந்தமிழ், எது சாதாரணத் தமிழ்னு தெளிவா அடையாளம் காணனும். ஹார்ட் மாதிரியானவர்கள் செந்தமிழ்க்காரர்கள்ன்னு தான் சொல்ல முடியும்"

என்று கூட ஒரு தமிழறிந்த கூட்டத்தில் சொல்ல முடியாத அளவுக்குத் தமிங்கிலம் இவர்களுக்குப் பழகிப் போகும் என்றால், அப்புறம் இன்றையத் தமிழ் இலக்கியம் பற்றிப் பேசி இவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. பேசாமல் குமரியில் மூன்று தடவை சுற்றிவந்து இந்தத் தமிழ் என்னும் மொழியைத் தூக்கி எறிந்துவிடலாமே? அதைவிடுத்து ஏன் இப்படிச் சல்லியடித்துக் கொண்டு இருக்கிறார்கள்?

பொதுவாக இந்தப் பழக்கம் ஒரு நோய் போலவே நம்மில் மிகுதியானவரைப் பீடித்திருக்கிறது. தமிங்கிலம் பழகுவதைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைத்து என்றைக்கு அதற்கு முடிவு கட்டுவோம்?
---------------------------------------------------------------
நண்பர் கேட்ட சொற்களோடு இன்னும் சில தொடர்புள்ளவற்றைச் சேர்த்து இங்கே கொடுத்திருக்கிறேன். பதிவை ஐந்து பகுதிகளாக்கி அனுப்புகிறேன்.

அளவு என்ற பெயர்ச்சொல் அள்ளுதல் என்ற வினைச்சொல்லில் இருந்து எழுந்தது. அள்ளுதல் என்பது முதலில் நெருங்குதலைக் குறித்துப் பின் சேர்த்தல் அல்லது கூட்டுதல் என்ற பொருளைக் குறிக்கும். அள்ளுதலில் இருந்து அள்+து>அட்டு>அட்டுதலும், அட்டு>அடு>அடுதலும் ஆகிய வினைகள் பிறக்கும். அட்டுதல் என்பது சேர்த்தல் என்ற பிறவினையையும், அடுதல் என்பது சேர்தல் என்ற தன்வினையையும் குறிக்கும். அடுதல் என்ற தன்வினையில் இருந்து அடுவித்தல் என்ற இன்னொரு பிறவினையும் பிறக்கும். அட்டுதலும் அடுவித்தலும் ஒரே பொருள் கொண்டவை தான். கூட்டுதல், சேர்த்தல் என்றே இவை பொருள்படும். அடுவித்தல் என்ற சொல், பலுக்கச் சோம்பலில் அதுவித்தல்>அதியித்தல்>அதித்தல் என்றும் திரியும். to add = கூட்டுதல், அடுவித்தல், அதியித்தல். please add 2 and 3; 2 யையும் 3 யையும் கூட்டு. addition = கூட்டல், அடுவம், அதியம்; additive = கூடுதலான, அதிவான

கூட்டுதல் என்ற பொருளில் உள்ள தொகுதியில் நான் எடுத்துக் கொள்ளும் முதற் சொல் ample; இதற்கு இணையாய் அமலை என்று தமிழில் சொல்லலாம். "அவனும், நானும், எல்லோரும்" என்று ஓர் உம்மைச் சேர்த்துச் சொல்லுகிறோம் இல்லையா? அந்த உம் என்னும் இடைச்சொல் கூட்டப் பொருளைச் சுட்டிக் காட்டும். உம்முதல் என்பது சேருதலே. உம்முதல்>அம்முதல் என்று திரியும். அம்முதல்>அம்புதல்>அப்புதல் என்பதும் ஒன்றின் மேல் ஒன்றை சேர்த்துக் கொண்டு வருவதைக் காட்டும். அம்முதலில் இருந்து பிறந்த சொல் அமலை. இது செறிவுப் பொருளைக் காட்டும். இது தவிர மிகுதி என்ற பொருளையும் திவாகரம் காட்டும். மெல்லின இணை, மெல்-வல் இணையாகத் திரிந்து, பிறகு வல்லின இணையாக மாறுவது தமிழிய மொழிகளில் உள்ள பழக்கம் தான். அம்மா என்று இயலொலி அம்பா என்று ஆகி பின் அதன் பொருள் நீண்டு இன்னொரு பெற்றோரைக் குறிக்கும் வகையில் அப்பா என்று திரியும். அதே போல "வந்நு" என்னும் வினைச்சொல் "வந்து" என்று திரியும். பண்ணுதல் என்னும் வினையில் இருந்து பண்டம் என்ற பெயர்ச்சொல் பிறக்கும். இவையெல்லாம் இந்த மெல்லிணை>மெல்வல்>வல்லிணைத் திரிவுகளுக்கு எடுத்துக் காட்டுக்கள். அமலைக்கும் ample க்கும் உள்ள இணை இப்பொழுது புரிகிறதா?

அடுத்த சொல் average; இதற்கு இணையாய் நிரவை/நிரவல் என்பதைச் சொல்லலாம். ஒரு படியில் அரிசியை முகந்து அளக்கிறோம். படியின் முகவாயில் அரிசி குவியலாய்க் கிடக்கிறது. அதை கையால் சரி செய்து தட்டையாக்கிப் போடுவதை நிரவுதல் என்று சொல்லுகிறோம். கொள்கலனில் ஏற்ற இறக்கமாய் கிடக்கும் கூலப் பொருளை ஒரே மட்டமாய் ஆக்குவதும் நிரவல் தான். இதைத்தான் ஆங்கிலத்தில் average என்கிறார்கள். average = நிரவை, நிரவல்

மூன்றாவது சொல் big = பெரிய; இதற்கு விளக்கம் தேவையில்லை

நான்காவது சொல் brief; இதற்கு இணையாய்த் தமிழில் பொருவிய என்பதைச் சொல்லலாம். "சொல்லுவதைப் பொருவினாற்போல் சொல்" என்றால் "whatever you say, say it briefly" என்று பொருள். இங்கே சுருக்கம் என்று சொன்னால் அது short or summary என்ற பொருள் கொள்ளும். வெள்ளரிக்காய் வாங்கும் போது சந்தையில் பிஞ்சாய்ப் பார்த்து வாங்கிவரச் சொல்லி வீட்டில் சொல்கிறார்கள் இல்லையா? இது போன்ற பிஞ்சுகளை பொருக்கை என்று தென்பாண்டி நாட்டில் சொல்வார்கள். பிஞ்சும் பொருக்கும் என்பது அங்கு மரபுத் தொடர். பொருவுதல் என்பது இப்படிப் பிஞ்சாய் ஆகுதல் என்று பொருள் படும். ஆங்கிலத்தில் brief என்ற சொல் இப்படிச் சின்னதைக் குறிக்க எழுந்தது. brief = பொருவிய

ஐந்தாவது சொல் broad; இதற்கு இணையாய் பரத்திய, பரவிய, அகண்ட என்பதைச் சொல்லலாம். குறுகிய என்பதற்கு எதிரானது பரவுதல், பரத்துதல். பரந்த காவிரி, அகண்ட காவிரி என்னும் போது அதன் பரந்தமை (broadness) பற்றியே சொல்லுகிறோம். அதாவது வெறும் நீளப் பரிமானத்தைக் காட்டிலும் இரண்டாவது பரிமானமான அகற்சி இங்கே பேசப்படுகிறது.

ஆறாவது சொல் bulky; இதற்கு இணையாய் பருக்கான என்பதைச் சொல்லலாம். உப்பென்று பருத்துக் கிடப்பது bulky. பருக்கிக் கிடப்பதற்கு வலிமை பெற்றது என்ற பொருள் கிடையாது. அண்டவெளியில் முப்பரிமானம் பரவிப் பருத்துக் கிடக்கிறது. மேலே சொன்ன பரவிய என்பதற்கும் பருக்கிய என்பதற்கும் உள்ள பரிமான வேறுபாடு நாம் ஊன்றிக் கவனித்தால் மட்டுமே புலப்படும். பரவிய என்பது இரு பரிமானச் சொல். பருக்கிய என்பது முப் பரிமானச் சொல்.

ஏழாவது சொல் capacity; இதற்கு இணையாய் கொண்மை என்பதைச் சொல்லலாம். "இந்த ஏனம் அல்லது கலம் எவ்வளவு கொள்ளும்?" என்று கேட்கிறோம் இல்லையா? கொள்ளுமை என்பது, கொண்மை என்று மெல்லின ஓசை இடைவரத் திரியும். கலத்திற்கு உள்ள இந்தத் தன்மையை இன்று எல்லாக் கட்டகங்களிலும் (systems) சேர்த்துச் சொல்லுகிறார்கள். ஏனத்தின் கொண்மை (capacity of a vessel), இறைப்பியின் கொண்மை (capacity of a pump), மின் நகர்த்தியின் கொண்மை (capacity of an electric motor), மாந்தனின் வலிதாங்கும் கொண்மை (a man's capacity to withstand pain) இப்படி இது விதவிதமாய் விரியும்.

எட்டாவது சொல் central; இதற்கு இணையாய் நடுவண் என்பதைச் சொல்லலாம்; பெயர்ச்சொல்லாய் வரும் போது நடுவம் என்றும் பெயரடை அல்லது முன்னொட்டாக வரும் போது, நடுவண் என்றும் வரும். central government = நடுவண் அரசு. மத்திய என்று பலரும் புழங்கும் சொல், உண்மையில் நட்ட என்னும் தமிழ்ச்சொல்லை வடமொழிப் பலுக்கில் கூறும் ஒரு திரிவு தான். மூலம் தெரியாமல், பலரும் இதன் தோற்றம் வடமொழி என்று தடுமாறுவது உண்டு. தமிழில் நகரமும் மகரமும் போலிகள்; முப்பது என்பதை நுப்பது என்றும் முடங்கும் என்பதை நுடங்கும் என்றும் பலுக்குவதை உணர்ந்தால் இது புலப்படும். அடுத்து, டகர ஒலி, தகர ஒலியாகப் பலுக்கப் படுவது வடக்கே போகப் போக நடக்கும். முடிவில் சொல்லின் உள்ளே யகரம் நுழைவதும் வடமொழிக்கு உள்ள பழக்கம் தான். ஆக நட்ட>நத்த>மத்த>மத்ய>மத்திய என்ற வழிமுறையில் சொற்திரிவு அமையும். மத்திய என்பதன் மேலோட்ட வடமொழித் தோற்றத்தில் அதன் தமிழ் மூலம் உணர முடியாமல் தடுமாறுகிறோம்.

ஒன்பதாவது சொல் dimension; இதற்கு இணையாய்ப் பரிமானம் என்பதைச் சொல்லலாம்; எந்த ஒரு பொருளும், தான் இருக்கும் வெளியில் விரிந்து நிற்கிறது. விரிந்து நிற்பது வியல்ந்து நிற்பது என்றும் சொல்லப் பெறும். பரிப்பு என்பதும் வியல்ந்து நிற்பதே. பரிதல் என்பது வளைந்து நிற்பதையும் குறிக்கும். "செஞ்ஞாயிற்றுச் செலவும், அஞ்ஞாயிற்றுப் பரிப்பும், பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்" என்ற புறநானூற்று வரிகளை இங்கு எண்ணிப் பார்க்கலாம். இதில் பரிப்பு என்பது வளைந்த வட்டத்தைக் குறிக்கிறது. மானம் என்பது மதித்தல், அளவிடுதல் என்பதன் பெயர்ச்சொல். மா என்பது அதன் வேர்ச்சொல். மாத்தல் என்பதில் இருந்து பிறந்தது மானம். இயற்கையில் நாம் கண்ணால் காணும் வெளி, பரிமானம் தழுவியது. அதாவது அதைப் பரித்து (வளைத்து) நாம் அளக்கிறோம். இயற்கையில் கிடக்கும் பொருள்களை இடுவிப்பாக (idealistic) உருவகஞ் செய்து ஒன்று, இரண்டு, மூன்று என்ற பரிமானங்களாய் கணக்கின் ஒருபகுதியான வடிவியல் (geometry) குறிக்கும். கோடு என்பது ஒற்றைப் பரிமானம்; பரப்பு என்பது இரட்டைப் பரிமானம்; நாம் காணும் முப்பரிமானப் பொருள்களைப் பற்றி நான் விவரிக்க வேண்டியதில்லை. நம் எல்லோருக்கும் அது தெரியும். இன்னும் கூடிய பரிமானங்களை, இந்தக் கால வகைப்பு இடவியலும் (differential topology), வகைப்பு வடிவியலும் (differential geometry) கையாளுகின்றன. ஐன்சுடீனின் உறவாட்டுக் கொள்கையில் (theory of relativity) இடம், காலம் என்று இணைந்த வகையில் நாற் பரிமானம் பேசப்படும்; இன்னும் மேலே போய் நனி பரிமானப் பல்மடி (many dimensional manifold) பற்றியும் இன்றையக் கணிதவியலில் பேசுவார்கள்.

பத்தாவது சொல் enormous; இதற்கு இணையாய் எண்ணிறந்த என்பதைச் சொல்லலாம். எண்ண முடியாத அளவுக்கு, எண்ணிச் சலித்த நிலைக்கு, எண்ணிறந்த என்று சொல்லுவார்கள். இதற்கும் மேல் அளக்கவே முடியாத ஒரு நிலை infinitity ஆகும். இது தமிழில் வரம்பிலி என்று சொல்லப்படும். இந்த வரம்பிலியை எண்ணிலி, ஈறிலி, கந்திலி என்றெல்லாம் சொல்லுவது உண்டு. கந்து என்பது பற்றுக் கோடு; அதுவும் ஓர் ஈற்றைத் தான் குறிக்கும். அந்தக் கந்தே இல்லாத நிலை கந்திலி.

பதினோறாவது சொல் expanse; இதற்கு இணையாக விரிந்த என்ற சொல்லைச் சொல்லலாம். முன்னே சொன்ன பரவிய என்பதற்கும் விரிந்த என்பதற்கும் பரிமானம் தவிர மிகுந்த வேறுபாடு கிடையாது; விரிவு என்பது எல்லாப் பரிமானங்களிலும் நடக்கக் கூடியது. ஆனால் பரவிய என்பதைப் பெரிதும் இரு பரிமானத்திற்கு மட்டுமே பயனாக்குவது நல்லது.

பன்னிரண்டாவது சொல் extent; இதற்கு இணையாகப் பரந்த என்ற சொல்லைச் சொல்லலாம். முன்னே சொன்ன பரவிய, விரிந்த என்ற சொற்களில் இருந்து சற்றே நுணுகிய வேறுபாடு கொண்டது. பொதுவாகப் பரந்த என்ற சொல் இருபரிமானத்திற்கு இயல்பாகவும், ஓரோவழி ஒற்றைப் பரிமானத்திற்கும் சொல்லலாம். முப்பரிமானம் சார்ந்த நிகழ்வுகளுக்கும், பொருள்களுக்கும், மிகக் குறைந்த அளவிலேயே இந்தச் சொல்லைப் பயன்படுத்தலாம். அது என்னவோ தெரியவில்லை, பரவிய, விரிந்த, பரந்த என்ற மூன்று சொற்களும் தமிழில் ஒன்றுக்கு மாறாக இன்னொன்று என்று மயங்கியே பலராலும் புழங்கப் படுகின்றன. இனி வருங்காலப் புழக்கத்தில் எப்படி மாறும் என்று சொல்ல முடியாது. என்னைக் கேட்டால் இதற்கு இது என்று ஒரு சமன்பாட்டை இனிமேலாவது கொண்டுவரலாம்.

பதிமூன்றாவது சொல் flow; இதற்கு இணையாகப் பெருக்குதல், பெருவுதல் என்ற சொற்களைச் சொல்லலாம். விளவுதல் என்ற சொல்லும் ஓரோவழி சொல்லப்படுவது உண்டு. (பாய்தல், ஓடுதல் என்பவை நேரடிப் பொருள் தரும் சொற்கள் அல்ல. அவை துல்லியம் அல்லாத, கிட்டத்தட்டச் சரிபண்ணும் சொற்கள். நானும் இப்படிச் சரிபண்ணிக் கொண்டு இருந்திருக்கிறேன்.) பெருவுதல்/பெருகுதல் என்பது தன்விணை; பெருக்குதல் என்பது பிறவினை. ஆடிப் பெருக்கு என்றால் ஆடி மாதம் ஏற்படும் flow. ஆறுகளையே கூடப் பெருநை>பெருணை>பெண்ணை என்று தான் தமிழிய மொழிகள் கூறிவந்தன. வடக்கே பெருகியுது வடபெருநை>வடபெருணை>வடபெண்ணை. அதற்கடுத்து சற்று தெற்கே கருநிறத்தில் பெருகியது கருந பெருநை>கருந பெருணை>கன்ன பெண்ணை; கருந பெண்ணையை வடமொழிப் படுத்தி கிருஷ்ண பெண்ணை என்று ஆக்கிப் பின் பெண்ணையைத் தவிர்த்து கிருஷ்ணா என்பார்கள். இன்னும் தெற்கே தென்பெருநை>தென்பெருணை>தென்பெண்ணை என்ற ஆறு உண்டு. ஆகத் தெற்கே தாம்பர பெருநை>தாமிர பெருணி>தாம்பிரவருணி என்ற ஆற்றைத் தெரியாதார் கிடையாது; இந்திய ஆறுகளின் பெயர்கள் பலவற்றையும் ஆழ்ந்து பார்த்து, அவற்றின் உள்ளார்ந்த தமிழ்மூலத்தை அறியும் போது நமக்குப் பெரிதும் வியப்பு ஏற்படுகிறது. இந்தியப் பழமையில் தமிழரின் பங்களிப்பு பெரிதும் இருக்கிறது. அதை ஒருமுறை மடற்குழுக்களில் செய்தேன். இன்னும் ஒருமுறை வேறொரு வாய்ப்பில் திரும்ப அலச வேண்டும். நீரோட்டம் என்பது பெருக்கைக் குறிக்கக் கொஞ்சம் சுற்றி வளைத்த சொல்.

பதிநான்காவது சொல் huge; இதற்கு இணையாக ஊகை என்பதைச் சொல்லலாம். உகர ஒலியின் குறில், நெடிற் பலுக்கில் ஏகப்பட்ட உயர்ச்சிச் சொற்கள் எழுந்துள்ளன. உகரம் ஒகரமாகியும், ஓங்கி உள்ள பொருட்களை நமக்கு உணர்த்தும். ஊகி நிற்பது என்னும் போது கண்முன்னே உயர்ந்து பெருகி நிற்கும் உருவம் புலப்படும். ஊங்கு என்றாலும் மிகுதி என்ற பொருள் தமிழில் உண்டு; அதே போல ஓகம் என்ற சொல்லும் பெருகி நிற்பதைக் குறிக்கும்.

பதினைந்தாவது சொல் immense; இதற்கு இணையாக மொந்தை என்பதைச் சொல்லலாம். மொத்தம் என்னும் போது கூட்டப் பொருள்தானே வருகிறது? மொந்துதல் என்பது தன்வினை. மொத்துதல் என்பது பிறவினை.

பதினாறாவது சொல் large; இதற்கு இணையாய் அகலை என்பதைச் சொல்லலாம். அகலம் என்ற சொல்லில் ஈற்றை மாற்றி வருவது அகலை. அகல்ந்தது என்பது வினைச்சொல்.

பதினேழாவது little; இதற்கு இணையான சின்ன என்ற சொல்லைப் பற்றி நான் மிகுதியாகச் சொல்லவேண்டியது இல்லை.

இதுவரை சொன்ன 17 அளவுச் சொற்களைத் தொகுத்துச் சொன்னால்,

ample = அமலை
average = நிரவை, நிரவல்
big = பெரிய
brief = பொருவிய
broad = பரத்திய, பரவிய, அகண்ட
bulky = பருக்கான
capacity = கொண்மை
central = நடுவண்
dimension = பரிமானம்
enormous = எண்ணிறந்த
expanse = விரிந்த
extent = பரந்த
flow = பெருக்குதல், பெருவுதல், விளவுதல்
huge = ஊகை
immense = மொந்தை, மொத்தை
large = அகலை
little = சின்ன

அதோடு கட்டுரையில் வந்த மற்ற சொற்களையும் பட்டியலிட்டால், கீழுள்ளது கிடைக்கும்.

quality = தகுதி
quantity = எண்ணுதி
to add = கூட்டுதல், அடுவித்தல், அதியித்தல்.
addition = கூட்டல், அடுவம், அதியம்
additive = கூடுதலான, அதிவான
broadness = பரந்தமை
system = கட்டகம்
pump = இறைப்பி
electric motor = மின் நகர்த்தி, மின்னோடி
idealistic = இடுவிப்பு
geometry = வடிவியல்
differential topology = வகைப்பு இடவியல்
differential geometry = வகைப்பு வடிவியல்
theory of relativity = உறவாட்டுக் கொள்கை
manifold = பல்மடி
infinitity = வரம்பிலி, எண்ணிலி, ஈறிலி, கந்திலி

இனி மகரத்தில் தொடங்கும் அளவுச் சொற்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்,
இராம.கி.

9 comments:

பாவூரான் said...

பொன்ஸ்,

Micro = நுண்ணிய Micro-organism நுண்ணுயிர்

Mega = மிகப்பெரிய என்று எடுத்துக்கொள்ளலாம்.

macro = துல்லிய என்பது சரியில்லை என்றே நினைக்கிறேன். Macro பெரியனவற்றை குரிக்கப் பயன்படுகிறது. ( MACRO ECONOMY )

தேசாந்திரி said...

நல்ல பதிவு அய்யா. நதிகளின் தமிழ்மூலத்தை விளக்கப்போகும் தங்களின் கட்டுரையை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

Anonymous said...

infinitity = முடிவிலி ?

siva gnanamji(#18100882083107547329) said...

பொருளியல் வகுப்புகளில் பயனடுத்தப்படுபவை:
micro economics நுண்ணினப்
பொருளியல்
macro economics பேரியல்
பொருளாதாரம்
infinity கந்தழி

பொன்ஸ்~~Poorna said...

இராமகி ஐயா,
ample என்றால், போதுமான என்றே பொருள் வரும் என்று எண்ணி இருந்தேன்.. ஆங்கிலப் புரிதல் தவறா?

இதுவரை உங்கள் பதிவுகளைப் பார்க்காததற்கு வருந்துகிறேன்.. நதிகளின் மூலத்தைப் பற்றிய உங்கள் பதிவை நானும் எதிர்பார்க்கிறேன்..

ilavanji said...

இராம.கி ஐயா,

பதிவிற்கு தொடர்பற்ற ஒரு கேள்வி! உங்கள் மின்னஞ்சல் முகவரி கிடைக்காததால் இங்கேயே கேட்கிறேன்.

"அவதானிப்பு" என்பது பற்றி. இவ்வார்த்தையின் மூலம், வரலாறு என்ன? எனக்கு ஏனோ இதை படிக்கும் போதெல்லாம் வெகு அன்னியமான செயற்கையான வார்த்தையாகவே உணர்கிறேன்!

அவதானிப்பு என்பதை இதுவரை Total observation என்ற அளவிலேயே பொருள் கொண்டுள்ளேன். இதற்கு தகுந்த வேறு ஏதேனும் வார்த்தை உளதா?

நன்றி!

ILA (a) இளா said...

//average; இதற்கு இணையாய் நிரவை/நிரவல் //
இதுக்கு சராசரின்னு சொல்லலாங்களா?

╬அதி. அழகு╬ said...

"நான் என்ன நினைக்கிறேன்னா - வாட் ஈஸ் செந்தமிழ் வாட் ஈஸ் சாதாரண தமிழ்னு க்ளியரா distinguish பண்ணனும். ஹார்ட் மாதிரியானவர்கள் classical tamil people-னுதான் சொல்ல முடியும்."

காலையிலெ எழுந்திரிச்சி டாய்லெட் போயிட்டு, ப்ரஷ் பண்ணி, ஷேவ் பண்ணி, பேஸை வாஷ் பண்ணி, குளிச்சுட்டு டிஃபன் பண்ணி, ட்ரெஸ் பண்ணி, பஸ்ஸுக்கு வெயிட் பண்ணி, ஆபீஸுக்குள்ள எண்டர் 'பண்ற'த்துக்குள்ள பத்தரையாயிடுது" என்று பண்ணித் தமிழ் எழுதும் காலமய்யா இது.

என்ன 'பண்ணி' மாற்றுவது?

╬அதி. அழகு╬ said...

"அவதானிப்பு" என்பது பற்றி. இவ்வார்த்தையின் மூலம், வரலாறு என்ன? எனக்கு ஏனோ இதை படிக்கும் போதெல்லாம் வெகு அன்னியமான செயற்கையான வார்த்தையாகவே உணர்கிறேன்!
______________

இளவஞ்சி!
சதாவதானம் (நூறு வகைப் புலனறிதல்), தசாவதானம் (பத்துவகைப் புலனறிதல்) கேள்விப் பட்டதில்லையா?

அதிகமாய் இலங்கையில்தான் அவதானம் எனும் சொல் 'பாவி'க்கப்படும் (ஆளப்படும்).

அவதானியை நாம் புலனறி என்று கொள்வோமா?