முன்னால் இட்ட பதிவில் பதினேழு அளவுச் சொற்கள் வரை பார்த்திருந்தோம். (கூடவே மற்ற தொடர்புள்ள சொற்களையும் பார்த்தோம்.)இனி macro என்னும் பதினெட்டாவது அளவுச் சொல்லிற்குப் போவோம். இந்தச் சொல், பின்னூட்டின் வழியாக நண்பர் ஒருவர் முன்னர் கேட்ட சொல். இது பல இடங்களில் முன்னொட்டாகவும் புழங்குகிறது. macroscopic என்ற சொல்லாட்சி நினைவிற்கு வருகிறதா? macro என்பதற்கு இணையாக மாக, மாகிய ஆகியவற்றைச் சொல்லலாம். முன்னரே சொன்னது போல் மாத்தல் என்ற வினை, தமிழில் அளத்தலைக் குறிக்கும் வினைச்சொல். தவிர, மா என்ற ஓரெழுத்தொரு மொழி "பெரியது" என்ற பொருளையும் குறிக்கும். "மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்" என்ற பழைய திரைப்பாடல் வரி நினைவிற்கு வருகிறதா? அதில் வரும் மா என்ற முன்னொட்டு "பெரிய" என்ற பொருளைக் கொடுக்கிறது. அளத்தலில் இருந்து நீட்சி பெற்ற கருத்துத் தான் பெரிது படுத்தல் என்பதும்.
மதித்தல் என்ற வினைகூட இந்த மாத்தலில் இருந்து பிறந்தது தான். macro size என்பது பெரிது படுத்தப்பட்ட அளவு. மாத்தல் என்ற பிறவினைக்கு இணையான தன்வினை மாதல்; மகுதல் > மாதல் >மாகுதல் சொல்லைப் பலுக்கும் எளிமைக்காக குகரம் நம்மிடையே இயல்பாய் உள்நுழையும். பகுதல் என்ற பிரிப்பு வினை பாதல் என்றும் பின் நெடிலாக உருமாறிப் பாகுதல் என்றும் வருவதைப் போல இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மொழி என்பது பொதுவாக நெகிழ்வானது; அது திண்ணியதாய் (திண்மம் = solid) இருந்து விட்டால் அப்புறம் வளர்ச்சியில்லை. அங்கும் இங்குமாய் அது நீளும் போதும், திரியும் போதும், புதிய பயன்பாடுகள், புழக்கங்கள், பொருட்பாடுகள் அதற்கு வந்து சேருகின்றன. மிகுந்து ஊற்றுவதை மகுந்து ஊற்றுவதாக எங்கள் சிவகங்கை வட்டாரத்தில் சொல்லுவார்கள். மக ஈசன் மகேசன் (= பெரிய ஈசன்) என வடமொழிப் புணர்ச்சியில் வரும். அதை இன்னும் கொஞ்சம் நீட்டி மாகேசன் என்றும் சிலர் சொல்லுவார்கள். மக்கள் என்ற சொல்லை நீட்டி மாக்கள் என்று திரித்து இன்னொரு வகையினரைக் குறிப்பார்கள் அல்லவா? மக்களைக் காட்டிலும் மாக்கள் கொஞ்சம் உடலால் சற்று பெரியவர்கள். மா என்ற ஈறு விலங்கைக் குறிக்கும். விலங்கைப் போன்று வலிமை கூடி இருப்பவர்கள் (ஆனாலும் அவர் மாந்தர் தான்) மாக்கள்.
மாகுதல் என்ற வினை அடிப்படையில் மாதல் போன்ற பொருள் கொண்ட வினைதான். மொழி நீட்சியில் அதைப் புழங்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்றே நான் கருதுகிறேன். மாக, மாகிய என்னும் பெயரடைகளைச் சொல்லும் போது மாகுதல் என்ற வினை வாகாய் அமையும்.
macro meter = மாக மாத்திரி அல்லது மாகிய மாத்திரி. இது "பெரிய மாத்திரி" என்ற பொருளைக் கொள்ளும். மீட்டர் என்ற மேலைச்சொல் கூட அளவுதல் வினையின் வழி செந்தர (standard) அளவுகோலான மாத்திரியைக் குறிக்கும். மாத்திரி என்ற அடிப்படைச் சொல்லோடு "மாக" என்பது மட்டுமல்லாமல், இன்னும் பல்வேறு முன்னொட்டுக்கள் சேரும். அந்த முன்னொட்டுக்களை எல்லாம் இந்தப் பதிவுத் தொடரில் பார்ப்போம். மாக என்ற சொல்லிற்குள் ரகரம் உள்நுழைந்து மாக்ர என்று ஆவது இந்தையிரோப்பியப் பழக்கம்.
இந்தையிரோப்பியம் முதலா, தமிழியம் முதலா என்ற ஆட்டத்திற்குள் நான் வர விரும்புவதில்லை. ஏனென்றால் உணர்ச்சி வயப்பட்டு பலரும் தடம் மாறிப் போகிறார்கள். எது முதல் என்ற ஆட்டத்தில் பல வடமொழியாளர்கள் முன்னே போய், நம்மைக் காயடித்தது ஒரு காலம்; நாமும் அதே ஆட்டத்திற்குள் நுழைந்து, ஆற்றலை வீணாக்கி, உணர்ச்சி வயப் பட்டு, இந்த ஒப்புமைகளை மறந்து தொலைக்க வேண்டாம். இப்போதைக்கு மாக, மாகிய என்பது macro என்பதற்கு இணையான சொற்கள் என்பதோடு அமைவோம். பொதுவாய், இயற் சொற்களின் பலுக்க விதப்பில் ரகர, யகர, வகர ஒலிகள் நுழையும் சொற்திரிவு முறைகளைப் புரிந்தால் தான், இந்தையிரோப்பியம், தமிழியம் ஆகிய மொழிக் குடும்பங்களுக்கு இடையே உள்ள இணைச் சொற்களை நாம் இனங் காண முடியும். (பலரும் என் மேல் கோவம் கொள்ளுவதே இந்த இணைப்பை இனங் காட்டுவதால் தான். இந்த இனங் காட்டுதலில் சங்கதத்தின் பெருவுதி - priority - குறைந்து போவது சிலருக்குப் பிடிப்பதில்லை.)
பத்தொன்பதாவது, magnitude என்பது. தமிழில் எண்மானம், பிடிமானம், அவமானம், தன்மானம் எனப் பல்வேறு மானச் சொற்கள் உண்டு. அதில் வரும் மானம் எதைக் குறிக்கிறது என்று நினைக்கிறீர்கள்? எல்லாமே அளவு என்பதைக் குறிக்கிறது. எண்மானம் என்பது எண்ணின் அளவு. பிடிமானம் என்பது பிடிப்பின் அளவு. கொஞ்சமாவது பிடிமானம் இருக்க வேண்டும் என்று சொல்லும் போது அந்தக் கொஞ்சம் என்ற கருத்து உள்ளூற அளவுக் கருத்தை உணர்த்துகிறது இல்லையா? அவமானம் என்பது முற்றிலும் தமிழே; வடமொழியல்ல. அவத்தின் மானம் அவமானம். அவம் என்பது கீழ் நிலைமை. "அவலா கொன்றோ, மிசையா கொன்றோ" என்ற புறநானூற்று வரியில் அவல் என்பது கீழ்நிலை இடத்தைக் குறிக்கிறது. அவலில் இருக்கும் நிலை அவம். (பல இடங்களில் லகரமும், மகரமும் தமிழில் போலி.) தன்னைப் பற்றிய அளவு தன்மானம். "தான் இப்படியானவன்; இதைத் தாங்க மாட்டாதவன்" என்னும் போதும் அளவுகோல் வந்து விடுகிறது. இங்கே சொன்ன எல்லாமே magnitude என்பவைதான். மானம் என்ற சொல் இதைத் தான் குறிக்கிறது. மா என்ற சொல்லிற்கே ஒரு வேலியில் 20ல் ஒரு பங்கு = 1/20 என்ற பொருளும் உண்டு. அளவிடுகின்ற செயலை மானித்தல் என்று தமிழில் சொல்லுவோம்.
இருபதாவது சொல் magnify என்பதாகும். இங்கே வெறும் அளவு மட்டும் இல்லாமல், பெரியாதாக்கும் பொருளும் இருக்கிறது. மானப் படுத்து என்றால் பெரியதாக்கு என்ற பொருள் சட்டென்று தோன்றாமல் போகலாம். எனவே இதைப் மாகப் படுத்து என்று சொல்லுவது இணையாய் இருக்கும்.
இருபத்தொன்றாவது சொல் major; இது பெரும்பாலும் பெயரடையாக வருகின்ற சொல். மேவுதல் என்ற வினை உயர்ந்து கிடத்தல் என்ற பொருளைக் கொடுக்கும். பெயரடையில் மேவு, மேவிய என்றும், தனிப்பெயராக வரும்போது மேவர் என்றும் சொல்லலாம். இதைப் போலியாய்த் திரித்து மேயர் என்றும் சொல்லலாம்; அதோடு அதை major என்பதின் ஆங்கிலத் திரிவான mayor என்பதற்குப் பொருத்தமாய் வைத்துக் கொள்ளலாம். Army major யை "அரண மேவர்" என்று சொல்லலாம். அரணம் தான் வடமொழி வழக்கில் இராணுவம் என்று திரிந்திருக்கிறது. நாட்டு அரணைக் காப்பாற்றும் பெரும்படை அரணம் என்று சொல்லப்படும். அரத்தம், இரத்தம் ஆனது போல் அரங்கனை, ரெங்கனென்று சொல்லுவதைப் போல், பல ஒலிப்பு மாற்றங்களை இங்கு எண்ணிப் பார்க்கலாம்.
இருபத்திரண்டாவது சொல் majority; மேவுதலில் இருந்து இதை மேவுதி என்று சொல்லலாம். மேதகை, மேன்மை என்னும் போது உயர்ச்சி என்ற பொருளே வந்து இங்கே எண்ணளவில் கூடி இருக்கும் தன்மை புலப்படாமல் போகலாம்.
இருபத்தி மூன்றாவது many; இதைப் பல என்றே வழக்குத் தமிழில் பயில்கிறோம். கூடவே நனி என்ற பழைய சொல்லைப் புழக்கத்தில் கொண்டுவந்து, சொல்லின் இணை தன்மையை ஆழ்ந்து உணரலாம். தவிர, நனி என்பதைப் பயிலாமல் போனால் பின்னால் பலருக்கும் அது புரியாமல் போகலாம்.
இருபத்தி நாலாவது சொல் mass; இது மிகவும் சரவற் படுத்துகிற சொல். தமிழில் இன்னும் நிறை என்றே பலரும் சொல்லி வருகிறார்கள். நிறை என்பது நிறுத்தல் என்ற வினையில் இருந்து பெறப்பட்ட பெயர்ச் சொல்லானால் அது எடையைத்தான் குறிக்கும். (எடுத்தது எடை; நிறுத்தது நிறை. இரண்டுமே weight என்பதைக் குறிக்கும் சொற்கள்.) இன்னொரு விதத்தில் நிறைந்தது என்ற வினையில் வருகின்ற நிறை என்னும் பெயர்ச்சொல் filling என்ற பொருட்பாட்டைத் தான் குறிக்கும். இதில் பெறப்படும் கருத்து volume என்னும் முப்பரிமானம்.
volume என்பதைக் கீழே அடுத்த பகுதியில் பார்ப்போம். volume என்பதற்கும், mass என்பதற்கும், weight என்பதற்கும் வேறுபாடு காட்டிய பின் தான் அறிவியற் சிந்தனை பெரிதும் வளர்ந்தது. தமிழில் இன்னும் சரியாக இதை உணர்த்திக் காட்டாது இருக்கிறோம். இந்தப் பொருள் கனமாக இருந்தது என்னும் போது அது weight ஆக இருந்தது என்று தான் பொருள். அதே பொழுது இதற்கு முரணாக, ஒரு பொருளின் கன அளவு என்றால் அதன் volume யைக் குறிப்பிடுகிறோம். இந்தக் குழப்ப முரண் நெடுநாளாய் நம்மிடம் இருக்கிறது. தவிர, mass என்பதை எப்படிக் குறிப்பது என்றும் ஒரு தெளிவில்லாமல் இருக்கிறோம்.
உலகம் என்பது பொருட்களால் ஆனது; இந்தப் பொருட்கள் வெளி(space)யில் இருக்கின்றன. விரிந்து கிடக்கும் வெளியில் ஒரு பொருள் அடைந்து கிடக்கும் இடம் அதன் volume. வெளி என்பது கிட்டத்தட்ட ஒரு கலன் போன்றது. அந்தக் கலனின் அளவைக் குறிக்கும் சொல் volume ஆகும். ஆனால் mass என்பது கலனுள் நிறைந்திருக்கும் பொருள். ஒரு கலனுக்குள் வெவ்வேறு பொருட்களை அடைக்கலாம். ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு mass யைக் காட்டலாம். mass என்பதன் தன்மையைப் (massyness) பொருண்மை என்று தமிழில் குறிப்பார்கள். பொருள் இருக்கும் தன்மை பொருண்மை. இது உண்மையில் density என்பதோடு தொடர்பு உள்ளது. ஆனால் பொருண்மையும் அடர்த்தி என்பதும் வெவ்வேறு என்றும் ஒரு சிலர் தெளிவில்லாமல் சொல்லுவார்கள். (density என்பதையே பின்வரும் பகுதிகளில் பார்ப்போம்.)
உண்மையில் mass என்பதைக் குறிக்கத் தமிழில் தனிச்சொல் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறோம் என்பது தான் உண்மை. அடிப்படைச் சொற்களை அதன் ஆளுமை, அகலம் பார்க்காமல் மேலோட்டமாய் நாம் புழங்கிக் கொண்டிருக்கிறோமோ என்ற எண்ணம் எனக்கு நெடுங்காலம் உண்டு. mass என்பதைப் பொருள் என்று சொன்னால் அங்கே துல்லியம் வரவில்லை. ஏனெனில் பொருள் என்ற தமிழ்ச்சொல்லிற்கு இன்னும் பல பொருட்பாடுகள் உண்டு. பொருண்மை என்றால் அது massyness ஐக் குறிக்கிறது. உண்மையில் An object has a mass என்னும் வரியைத் தமிழில் எப்படிச் சொல்லுவோம்?
"அங்கே பார், மொது மொது என்று மொத்தையாய் இருக்கிறான்; அவள் மொது மொது (>மத மத) என்று வளர்ந்திருக்கிறாள்; மொதப்பான (>மதர்ப்பான) உடம்பு; " - என்ற இந்த ஆட்சிகளில் எல்லாம் mass என்ற பொருட்பாடு உள்ளே இருக்கிறது. இந்தச் சொல்லாட்சிகளுக்குத் தொடர்பாய், மொதுகை (அல்லது மதுகை) என்ற சொல்லை mass என்பதற்கு இணையாய்ப் பயன்படுத்தலாம் என்பது என் பரிந்துரை. massive என்பதை மொதப்பு (>மதர்ப்பு), மொதுகையாய் (அல்லது மதுகையாய்) என்று சொல்லலாம். density, volume போன்றவற்றைப் பின்னால் கீழே சொல்லுகிறேன்.
இருபத்தைந்தாவது சொல் maximum; மிகுந்து கிடப்பதின் நெடில்வழக்கு மீது கிடத்தல். மீ என்னும் ஓரெழுத்தொரு மொழியைப் பயன்படுத்தி மீகுமம் என்ற சொல்லைப் பயிலலாம்.
இந்தப் பகுதியில் பரிந்துரைத்த அளவுச் சொற்கள் வருமாறு:
macro = மாக, மாகிய
magnitude = மாகனம், (மானம் என்பது தனித்து வரும் போது சரிவராது; ஆனால் கூட்டுச் சொற்களில் சரிவரும்.)
magnify = மாகப் படுத்து
major = மேவு, மேவிய, மேவர்
majority = மேவுதி
many = பல, நனி
mass = மொதுகை, மதுகை
maximum = மீகுமம்
இவை போகப் பயின்ற மற்ற சொற்கள் வருமாறு:
solid = திண்மம்
macro meter = மாக மாத்திரி, மாகிய மாத்திரி
standard = செந்தரம்
priority = பெருவுதி
army = அரணம் (=இராணுவம்)
mayor = மேயர்
massyness = பொருண்மை
space = வெளி
weight = நிறை, எடை
filling = நிறைத்தல்
maximum என்பதற்கு எதிரான minimum என்ற சொல்லை இனி வரும் பகுதிகளில் பார்க்கலாம்.
அன்புடன்,
இராம.கி.
4 comments:
வணக்கம்!
அருமையான தொடர். மானி என்பதை அளக்கும் கருவி என்று பயன்படுத்தி வருகின்றோம், உ-ம். மின்னழுத்தமானி; மின்னழுத்தத்தை அளக்கும் கருவி.
மானியின் ஆழம் அறியாமல் இருந்தேன். தெளிவித்தீர்கள். நன்றி!
அன்புடன்
கதிரவன்.
அய்யா!
heat flow-வெப்பப் பாய்மம் சரியா, வெப்பப் பெருக்கம் சரியா.
எ-டு. பத்தொன்பதான் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜோசப் பூரியர் என்ற பிரெஞ்சு இயற்பியலாளர் வெப்பப் பாய்மத்தை ஆராயும் போது.....
கதிரவன்
அளவுச்சொல் என்றாரே அத்துடனென் னானார்
வளவிற்கு வந்ததோ வம்பு – வளவில்
இராமதி போலிங் கிருணீக்க வந்த
இராமகி எங்கே இயம்பு. :)
அன்பிற்குரிய மணிவண்ணன்,
எங்கேயும் போகலியே! என்றும் படிக்கின்றேன்;
இங்கே எழுத இணைத்தடையாற்* - சங்கடங்கள்;
அண்ணார் மணிவிழவும்** அண்மையிலே ஆவதுவால்,
ஒண்ணா(து) இருந்தேனென்(று) ஓது.
* - முட்டாள் தனமான இந்திய அரசின் ஆணையால் vsnl சேவையர் blogspot யைத் தொடவிட மாட்டேன் என்கிறார்கள். சுற்றிவளைத்து வலைப்பதிவிற்குள் வருவது பொறுமையைச் சோதிக்கிறது.
** - என் அண்ணன் மணிவிழா வேலைகளுக்காக அலைந்து கொண்டிருக்கிறேன். விழா முடிந்து, இன்னும் ஒரு நாலைந்து நாட்களில் வந்துவிடுவேன், பொறுத்தருள்வீர்.
ஒண்ணுதல் = ஒன்றுதல், ஒட்டுதல்
அன்புடன்,
இராம.கி.
Post a Comment