Wednesday, February 20, 2008

நாளும் கூடும் ஆங்கிலத் தாக்கம்

இந்த வாரம் (21/2/2008) வெளிவந்த குங்குமம் தாளிகையில் "ஆதலினால்..." என்ற தொடரில் "முகத் திருத்தம்" பற்றிப் பேசவந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு மேல்தட்டு முடிதிருத்தகத்தில் நடந்த செய்தியைச் சொல்லுகிறார். அதை இங்கு கீழே கொடுத்திருக்கிறேன்.
-------------------------
வயதானவர், தயக்கத்துடன் "தம்பி சொன்னது புரியலை" என்றார். "இங்கிலீஷ் தெரியாத ஆளை எதுக்கு வேலைக்கு வச்சிருக்கீங்க?" என்று அவன் கோபம் அதிகமானது. வயதானவர், தான் நாற்பது வருஷத்துக்கும் மேலாக இதே தொழிலை மானாமதுரையில் செய்து வந்ததாகச் சொன்னார். அவரது குரலை யாரும் மதிக்கவேயில்லை. மாறாக "ஆங்கிலம் தெரியாதவர்கள் ஏன் இந்த வேலைக்கு வருகிறார்கள்?" என்ற கேலியே எழுந்தது.

தனக்குத் தெரிந்த தொழிலை நாற்பது வருடங்களுக்குச் செய்து வந்த ஒரு மனிதன், பிழைக்க வழியின்றி பெருநகரத்துக்கு வந்து, ஆங்கிலம் தெரியாத காரணத்தால் அவமானப்படுத்தப்படும் கொடுமை வேறு எங்காவது நடக்குமா என்று தெரியவில்லை. சவரம் செய்து கொள்ளும் இடத்திலும் ஆங்கிலம் அறியாதவர்கள் வாழ முடியாது என்ற நிலை நம்மிடையே மட்டுமே இருக்கிறது.

மேலாளர் வயதை மறந்து அவரைத் திட்டிக் கொண்டிருந்தான். தலைகவிழ்ந்து நின்ற அவரது தோற்றம் அத்தனை கண்ணாடிகளிலும் பிரதிபலித்தது. ஆள் உயரக் கண்ணாடிகள் இருந்த போதும் எதையும் அந்த மனிதர் நிமிர்ந்து பார்க்கவே இல்லை.

அவர் தனது வலியை மறைக்கத் தெரியாமல். "இந்த தலைமசிரை நேத்துவரைக்கும் சீவிச் சிங்காரிச்சிட்டு, வெட்டிப்போட்ட மறுநிமிஷம் குப்பைனு தூக்கி எறியுற மாதிரி நம்ம பொழப்பும் ஆகிப்போச்சுல்ல" என்றார். அலங்கார நிலையத்தின் மேலாளர், "இனிமே குப்பை அள்ளுற வேலை தான் உனக்கு, புரியுதா? போயி அந்த வேலையை ஒழுங்காப் பாரு" என்றான். வயதானவர் கோபத்துடன் விடுவிடுவென அந்த இடத்திலிருந்து வெளியேறிப் போனார்.

அந்த மனிதன் அவமதிக்கப்பட்ட வலி ஆறாமலே இருக்கிறது. இவரைப் போல மாநகரில் பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் சொல்லும் ஆட்டோ ஓட்டுநர், ஆங்கிலம் தெரியாத காரணத்தால் ஒவ்வொரு நாளும் அவமானப் படுத்தப் படுகிறார். அடுக்குமாடிக் குடியிருப்பின் துணி தேய்க்கிறவன், ஆங்கிலம் பேசத் தெரியாத காரணத்தால் முட்டாளாக்கப் படுகிறான். லண்டனில் கூட இரண்டு தமிழர்கள் சந்தித்துக் கொண்டால் தமிழில் உரையாடுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் நேர் எதிரான சூழலே உள்ளது.
------------------------------------

இனி நாம் சற்று அவதானிக்கலாம் வாருங்கள்.

மேலே கூறும் "அவமதிக்கப் பட்ட வலிகள்" இன்று நேற்றா ஏற்பட்டன? ஒரு 25, 30 ஆண்டுகளாய் நடந்து கொண்டு தானே இருக்கின்றன? (நாடு விடுதலை பெற்றவுடனேயே கூட இந்த அவமதிப்புத் தொடங்கிவிட்டது என்று சொல்லலாம்.)

"இங்கிலீஷ் தெரியாத ஆளை எதுக்கு வேலைக்கு வச்சிருக்கீங்க?" என்று கோபப் பட்ட இளைஞரைப் போன்றோர் இன்று இலக்கக் கணக்கில் இருக்கிறார்கள். அவர்களைத் தான் தமிங்கிலர் என்று சொல்லுகிறோம். அவர்கள் தான் இன்று பல இடங்களிலும் முகன்மையான ஆட்களாய் இருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் பொள்ளிகைகளைத் (policies) தலைமேல் எடுத்துக் கொண்டு நடத்தும் அடியாட்களாக, இன்றைய அரசியல்வாதிகளில் பெரும்பாலோர் இருக்கிறார்கள். கூர்ந்து நோக்கினால், தமிங்கிலர் தமிழரை ஆண்டு கொண்டு இருக்கிறார்கள்.

தமிங்கிலர் உருவான கதை ஒரு தனிக்கதை. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபது, எழுபதுகளில் பல நாளிதழ்களில், தாளிகைகளில், கதைகளில், தமிழ்த் திரைப்படங்களில், ஒரு ஏக்கம் தொடர்ச்சியாய் வெளிப்பட்டு வந்தது. காட்டாக, தமிழ்த் திரைப்படங்களில், கதைநாயகி என்பவள் ஆங்கிலப் பள்ளி (convent)யிலிருந்து படித்தவளாயும், கதைநாயகன் ஆங்கிலம் தெரியாத, வெகுளியானதொரு பட்டிக்காட்டானாகவும் உருவகிக்கப் பட்டு, ஆங்கிலம் தெரியாத காரணத்தால் அவனைக் கேலி செய்கிற காட்சியையும் காட்டி, அதற்குப் பின்னால், எப்படியோ ஆங்கிலத்தில் தேறி, வாழ்க்கையில் நல்ல நிலையை அடைந்து, விளையனிடம் (villain) இருந்து கதைநாயகியைக் காப்பாற்றி, அவளையே அடைவதாகக் கதை நகரும். பார்க்கும் பலருக்கும் வாழ்விற் செய்யவேண்டியது என்று சில அடிப்படைக் கருத்துக்கள் ஊசியேற்றுவது போல் உறுத்தப்படும். அதில் ஒன்று "ஆங்கிலம் தெரிந்தால் தான் வாழ்க்கையிற் கடைத்தேறலாம்" என்ற ஏக்கமும் ஆகும். இந்த ஏக்கத்தை இன்று நேற்றல்ல; ஒரு ஐம்பது, அறுபது ஆண்டுகளாகவே தமிழ்மக்களிடையே உருவேற்றியிருக்கிறார்கள். இந்த ஏக்கத்தின் விளைவு தமிழரில் மேல்வருக்கத்தார் தமிங்கிலராய் மாறிக் கொண்டு வருகிறார்கள்.

அந்த ஏக்கத்தின் வடிகாலாய், சென்னை போன்ற பெருநகரங்களில், ஒன்றிரண்டு ஆங்கிலோ இந்தியர் பள்ளிகளும், மிகமிகக் குறைந்த வகையில் தென்னிந்தியக் கிறித்தவ சபையினர் (Church of South India) பள்ளிகளும், மற்றும் ஏசு குமுகத்தினரின் (Society of Jesus) கத்தோலிக்கப் பள்ளிகளுமாய் ஆங்கிலப் பள்ளிகள் அமைந்திருந்தன. வணிக நோக்கில் நடத்தப்பெறும் தனியார் ஆங்கிலப் பள்ளிகள் அப்போது கிடையா. பொதுவாய் பழைய, புதிய பணக்காரர்கள் தங்கள் பிள்ளைகளை இந்த மடலாயப் பள்ளிப் (convent school) படிப்புக்கு அனுப்பி வைத்து அந்தக் காலத்தில் ஊருக்குள் பெருமை கொண்டார்கள்.

பின்னால், மேட்டுக்குடியைப் பின்பற்றி அப்படியே ஈயடிச்சான் படி(copy)யெடுக்கும் உயர் நடுத்தர வருக்கமும், அதையடுத்து நடுத்தர வருக்கமும், இன்னும் கீழே உள்ளவரும் எனக் கொஞ்சம் கொஞ்சமாய் கூம்பின் உச்சியிலிருந்து ஆர்வம் கீழாய்ப் பெருகி, பொல்லாத ஏக்கம் கொண்டு, ஆங்கிலப் பள்ளிப் படிப்பிற்கு மாற முற்பட்டனர். கூடிப் போன இந்த ஏக்கத்தை நிறைவு செய்யுமாப் போல மடிக்குழைப் பள்ளிகளை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் ஒருசிலர் வளர்த்தனர். ஒரு கட்டத்தில், இந்தக் கூடுதற் தேவையை ஈடு செய்ய மடலாயப் பள்ளிகளால் முடியவில்லை.

இந்தப் பள்ளிகளில் இருந்து வெளிவந்த ஒரு சிலர், தனியார் பள்ளிகளாய், "மடலாயப் பள்ளிகள் போலவே தாங்களும் நடத்த முடியும்" என்ற முன்மொழிவில், மடிக்குழைப் பள்ளிகளைத் தொடங்கினர். அந்த நிலையில் தான், பள்ளி தொடங்குவதற்கு அனுமதி வழங்கும் போது இடையாளராய் இருந்து ஏகப்பட்ட பணம் பண்ண முடியும் என்று யாரோ சில சூழ்க்குமதாரிகள் சொல்லிக் கொடுக்க, அதைத் தாரக மந்திரமாய் எடுத்துக் கொண்டு, இரண்டு கழகத்தாரும் ஒன்றிற்கு ஒன்று போட்டியாய், அடுத்தடுத்து தங்கள் ஆட்சியில் காசுக்கு அனுமதி வழங்கினார்கள். இதன் விளைவாய், "சடசட"வென, "படபட"வெனப் புற்றீசலாய், மடக்கை (exponential) வேகத்தில், பணம் ஒன்றே குறியாய், தேவையை நிறைவு செய்யும் அளிப்பாக மடிக்குழைப் பள்ளிகள் பெருகின. மாநிலத்தின் கல்வித்துறை, கையூட்டு மல்கிய துறையாக, மாற்றம் பெற்றது. தலையில் இருந்து கால்வரை பணம் ஏராளமாய்ப் புரண்டது. மேடையில் முழங்குவது மட்டும் தமிழாகவும், அன்றாட நடைமுறையில் புரந்தருவது ஆங்கிலமாகவும் கல்வி வணிகர்கள் - அரசியல்வாதிகள் - அதிகாரிகள் ஆகியோரின் கூட்டுறவில் ஆகிப் போனது. தமிழக அவலத்தின் ஊற்றுக்கண் மடிக்குழைப் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியதில் தான் இருந்தது.

இந்த வேகம் ஓர் அசுர வேகம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் அரசு வாரியம் வழிநடத்திய தமிழ் மிடையப் பள்ளிகள் 100க்கு 99 விழுக்காடு தமிழகத்தில் இருந்தன. தவிர, அப்போது ஆட்சியில் இருந்த பேராயக் கட்சியும் பெரிதும் விடுதலை உணர்வால் உந்தப்பட்டுத் தமிழை முன்னெடுத்துச் செல்லுவதாய்த் தான் செயற்பட்டு வந்தது. அதனால் 67 தொடங்கும் வரை, இன்னுஞ் சொன்னால், எழுபதுகளின் முடிவு வரை கூட நிலை ஒன்றும் பெரிதாய் மாறவில்லை; மாநிலமெங்கும் 80 மடிக்குழைப் பள்ளிகளே இருந்தன. இன்றோ, மாநிலமெங்கும் 2500 மடிக்குழைப் பள்ளிகளுக்கும் மேல் இருக்கின்றன. தமிழ் மிடையப் பள்ளிகள் 100க்கு 50 மேனி இருக்குமா என்பது கேள்விக் குறியே! (அதோடு, இன்றைக்கு மடிக்குழைப் பள்ளி நடத்துவோரின் கூட்டமைப்பு பணமும் வலியும் கொண்ட அமைப்பாக, வழக்குமன்றம், சட்டப் பேரவை போன்றவற்றை அசைத்துப் பார்க்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இவர்களைச் சாய்க்காமல், ஒரு மண்ணும் தமிழகத்தில் செய்யமுடியாது; தமிங்கிலர்களைத் தொடர்ந்து உருவாக்குவதே இவர்களின் பணி.)

தமிழ் மாநிலத்தில் தமிழில் படிப்பது தொலைந்தது மட்டுமல்லாமல், தமிழே படிக்காமல் (அதாவது மொழியாய்க் கூடப் படிக்காமல்) பிரஞ்சு, சங்கதம் என்று வெறும் மதிப்பெண்ணிற்காகப் மட்டுமே படிக்கும் தற்குறிகளாய் மாறிப் போன தமிழ் இளைஞர் 20, 30 இலக்கத்தை நெருங்குவர். தம் வீட்டு வேலைக்காரர், தம் அடுக்குவீட்டுக்கு அருகில் உள்ள துணிதேய்ப்பவர், தம்மைப் பள்ளிக்கு இட்டுச்செல்லும் தானி ஓட்டுநர், எனத் தாழ்நிலை வேலையாளருடன் பேசுவதற்கு மட்டுமே தமிழைப் பயன்படுத்தும் இவர்கள் தமிங்கிலராய் ஆகாமல் வேறு எப்படி ஆவர்? மேலே முடிதிருத்தகத்தில் கோவப் பட்ட இளைஞரும் இந்தத் தமிங்கிலரில் ஓர் உறுப்பினர் தான்.

பணம் சம்பாரிப்பதற்காக தமிழ்நாட்டுக் கல்விப் பொள்ளிகையைக் காற்றில் பறக்கவிட்ட கழக அரசுகளே தமிங்கிலரை உருவாக்கியதில் பெருங்காரணம் என்பதை வேதனையோடு சொல்ல வேண்டியிருக்கிறது. (67- ல் கழக அரசு ஏற்படவேண்டும் என்று பெரிதும் பாடுபட்ட என்னைப் போன்றவர்கள் மனம் வெதும்பி இப்பொழுது நிற்க வேண்டியிருக்கிறது. உண்மையான திராவிடக் கொள்கையில் ஒரு பிடிப்பு இருந்திருக்குமானால், இப்படி இவர்கள் சோரம் போவார்களா?)

இன்னொரு சிந்தனையும் எழுகிறது. அந்த முடிதிருத்தகத்தில் நடந்தது போன்ற நிகழ்வுகள் அன்றாடம் தமிழ்நாடெங்கணும் நடக்கின்றன. ஆனால், நம்மில் எத்தனை பேர் இதை நிறுத்த முயற்சிகள் செய்திருக்கிறோம்? கூடிவரும் ஆங்கிலத் தாக்கத்தை அப்படியே அடிமையாய் ஏற்றுக் கொள்ளுவதைத் தவிர, அதனால் விளையும் தமிங்கில நோய் எங்கணும் பரவ நாம் தரும் பங்களிப்பையும் தவிர, நம்மைப் போன்றோர் என்ன செய்திருக்கிறோம்?

வெள்ளைக்காரன் ஆண்டிருந்த காலத்தில் மகிழ் குழும்புகளின் (ஜிம்கானா, காசுமாபாலிடன் போன்றவை) நுழைவாயிலில் "Indians and dogs are not allowed" என்று எழுதிப் போட்டிருந்ததாய்க் கேள்விப் பட்டிருக்கிறேன். அந்த நிலை மீண்டும் இப்பொழுது வருகிறது அல்லவா? "Tamils and dogs are not allowed" என்று அந்த முடிதிருத்துக் கடையில் நேரடியாய் எழுதிப்போடவில்லை தான்; ஆனாலும் நடைமுறையில் அதுதானே இருக்கிறது?

இன்றையத் தமிழ்நாட்டில், அதிலும் குறிப்பாகச் சென்னை போன்ற பெருநகரங்களில், எந்தவொரு அலுவத்திலும் (அது தனியாராய் இருந்தாலும் சரி, அரசினராய் இருந்தாலும் சரி) தமிழில் கேள்வி கேட்டால், நம்மைத் தள்ளித்தான் வைக்கிறார்கள். ஆங்கிலத்தில் கேட்டால் ஏதோ ஒரு மறுமொழி, இணங்கியோ, இணங்காமலோ கிடைக்கிறது. இதே போல சென்னை அடையாற்றில் உள்ள ஒரு மடிக்குழைப் பள்ளியில் ஒருமுறையும், மதுரையில் ஒரு பள்ளிக்கூடத்திலும் தமிழில் தங்களுக்குள் உரையாடிக் கொண்ட சிறுவர் தண்டனை பெறத்தான் செய்தனர். அங்கும் "Tamils and dogs are not allowed" என்பது தானே நடைமுறைப் பொள்ளிகையாய் (policy) இருந்திருக்கிறது? அப்புறம் என்ன, வேண்டிப் பெற்ற விடுதலை? "சர்வேசா, இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்?"என்ற மன்றாட்டு?

நன்றாக நினைவுக்கு வருகிறது நான் பொறியியல் கல்லூரியில் படித்த காலத்தில் (1965 - 70) விடுதிகளுக்கு வரும் நாட்டுப்புற மாணவர்களில் பலர், தமிழ் மட்டுமே தெரிந்த தங்கள் பெற்றோரை மற்றோரிடம் அறிமுகம் செய்ய வெட்கப்பட்டு ஒதுக்கித் தள்ளிய பழக்கம் இன்றளவும் மாறவில்லையே?

ஒரு காலத்தில் அய்யா என்று மரியாதையுடன் அழைக்கப் பட்ட தமிழாசிரியர் இன்றைக்கு தாளிகை, திரைப்படம், தொலைக் காட்சி எல்லாவற்றிலும் கேலிக்கு ஆளாகும் மாந்தராகத்தானே காட்டப் படுகிறார்? தமிழாசிரியர் கேலிக்குரிய மாந்தனானால், அப்புறம் தமிழும் கேலிப்பொருளாய் மாணவரிடையே ஆகிவிடாதோ?

விடுதலைக்கு முன்னால் வெள்ளைக்காரத் துரைக்கு எழுத்தராய் (clerk) தமிழர் வேலை செய்தது போல, தேயிலையைத் தவிர வேறு எதுவும் பெரிதாய் விளைவிக்காமல், வாழ்க்கைத் தேவையான பலவற்றையும் இறக்குமதி செய்துகொண்டு, அதற்கு ஏந்தாக ஏராளமான எழுத்தர்கள், அரசதிகாரிகள், இலடண்டனுக்கான முகவர்கள் எனப் பழகிய குடியேற்ற காலத்து இலங்கைத் தீவுப் பொருளாதாரம் போல, எங்கோ இருக்கிற புத்தாக்கத்திற்கு, இங்கிருந்து சேவை செய்யும் பொதினச் செலுத்த வெளியூற்று (business process outsourcing) புற்றீசல் போலத் தமிழகத்தில் பரவிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் "எந்தத் தொழில் துறை அறிவும் தேவையில்லை, வெறுமே ஆங்கில பேசத் தெரிந்தால் போதும், நீங்கள் கூலி எழுத்தராய் ஆகிச் சம்பாரிக்கலாம்" என்று ஆசைகாட்டி, நுனிநாக்கு ஆங்கிலம் பேச வைக்கும் அளவுக்கு உள்ளூர் மனவியலை மாற்றியதை என்ன சொல்லுவது?

ஆங்கிலத் தாக்கத்துக்குக் கொடிபிடிக்கும் தமிங்கிலகம் என்ற நாட்டிற்குக் கீழ் தமிழகம் என்ற நிலம் குடியேற்ற நாடாகத் தானே இருக்கிறது? வெள்ளைக்காரன் காலத்தில் நாடு அடிமைப் பட்டிருந்ததற்கு என்னென்ன அடையாளங்கள் இருந்தனவோ, அவை அத்தனையும் மீண்டும் வந்தாயிற்று அல்லவா? என்ன, இந்த முறை தமிழரை ஆள்பவர், தமிழரே போலும் இருக்கிறார். அதன் காரணமாகவே, அவர் ஆட்சி இன்னும் முற்றாளுமையோடு இருக்கிறது. "மக்களே போல்வர் கயவர்" என்றார் வள்ளுவர். தமிங்கிலருக்கும் தமிழருக்கும் வேறுபாடு தெரியாத வகையில் பல இடத்தும் நாம் தடுமாறுகிறோம்.

"தமிழில் தலைப்பு வையுங்கள்; கேளிக்கை வரி விலக்குத் தருகிறோம்" என்ற அளவுக்கு ஓர் அரசு போகுமானால், இங்கே ஆங்கில, தமிங்கிலத் தாக்கங்கள் எவ்வளவு இருக்க வேண்டும்?

"தமிழில் பேசு; தங்கக் காசு தருகிறோம்" என்று ஒரு தொலைக்காட்சியினர் சொல்லும் அளவுக்குத் தமிங்கிலம் இங்கு இயல்பாகிப் போனதே? அந்தத் தொலைக்காட்சி தவிர மற்றெல்லாத் தொலைக்காட்சி, பருவெண் மட்டுழைத்த (frequency modulated) வானொலி நிலையங்கள் என எல்லாவற்றிலும் தமிங்கிலம் தடையின்றிப் புழங்குகிறதே?

இதற்கிடையில் முதல் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயமாக்கும் வகையில் 12/06/2006ல் கொண்டுவரப்பட்ட தமிழகச் சட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட (petition) ஆகஸ்டு 23ம் தேதி உயர்நய மன்றம் கூறிய தீர்ப்பை உறுதி செய்து, உச்ச நயமன்றம் தள்ளிவைத்தது.

முதல்வர் பெருமைப் பட்டுக் கொள்ளுகிறார். முன்னே 20 ஆண்டுகள் இரு கழக ஆட்சியில் கல்வியில் நடந்த அவலங்களை அவர் எண்ணிப் பார்ப்பாரோ?

தமிங்கிலம் என்று சொன்னவுடன், தேனிசைச் செல்லப்பா பாடிய இன்னொரு பாடலின் தொடுப்பு நினைவிற்கு வருகிறது.

வணக்கம் என்று சொன்னால் வாய் நோகுமோ? - நல்
இணக்கம் தரு தமிழில் இருகை கூப்பிநின்று (வணக்கம்)

- தேனிசைச் செல்லப்பாவின் பாடல் வரிகள்.

அன்புடன்,
இராம.கி.

53 comments:

ILA (a) இளா said...

நல்லதொரு கட்டுரை அய்யா! அந்த கடைக்காரருக்கு காசு முக்கியம், அதனால் தமிழ் அங்கே தேவைப்படவில்லை. இப்படித்தான் ஒவ்வொரு காரணம் சொல்லி தமிழ் நம் வாழ்க்கையில் இருந்து தள்ளி வைக்கப்படுகிறது.

Kasi Arumugam said...

அய்யா,

நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துகள்.

கட்டுரையின் ஊடே செறியும் உணர்வு புரிந்துகொள்ளக்கூடியதாய் இருக்கிறது. கழகங்கள் கல்விமுறையைச் சீரழித்த கதையும் சுடுகிறது.

ஆனாலும் எழுத்தாளர் சொன்னது சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு மேல்தட்டு முடிதிருத்தகத்தில் நடந்த செய்தி என்பதால் அதை வைத்து //தனக்குத் தெரிந்த தொழிலை நாற்பது வருடங்களுக்குச் செய்து வந்த ஒரு மனிதன், பிழைக்க வழியின்றி பெருநகரத்துக்கு வந்து, ஆங்கிலம் தெரியாத காரணத்தால் அவமானப்படுத்தப்படும் கொடுமை வேறு எங்காவது நடக்குமா என்று தெரியவில்லை. சவரம் செய்து கொள்ளும் இடத்திலும் ஆங்கிலம் அறியாதவர்கள் வாழ முடியாது என்ற நிலை நம்மிடையே மட்டுமே இருக்கிறது.// என்பதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிக்காக எழுதப்பட்டவையல்லவா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உண்மை.. இப்போது எங்கள் குடும்பத்திலேயே பெரும்பான்மை குழந்தைகள் தமிழ் அறியாமல் இருக்கிறார்கள். பெரியவர்களோ தமிழ் எழுத்துக்களையே மறந்து வருகிறார்கள்.. தமிழ்நாட்டினைவிட்டு வந்துவிட்டதால் தான் எனக்கு இன்னமும் தமிழின் மேல் பற்று இருக்கிறதோ என்ற எண்ணம் கூட வருகிறது. என் மகளுக்கு வீட்டில் நானே தமிழ் படிப்பித்து எழுத்துக்கூட்டி அவள் கதைப்படிப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது..

நான் இருந்த சின்ன ஊரில் கூட இப்போது எல்லாப்பிள்ளைகளும் ஆங்கிலவழியே படிக்கின்றனர்.. பள்ளிக்கூடம் என்ற சொல்லே மறந்து விட்டனர்.. ஸ்கூல் தான். காசு கடன் வாங்கியேனும் ஆங்கிலவழிப்பள்ளி தான்.. ஹ்ம்..

Anonymous said...

அய்யா,

உங்களுடைய இந்த கட்டுரையை பொறுமையா ஒரு தடவை படிச்சுட்டு அப்புறம் வந்து பின்னூட்டுறேன். ஆனா படிச்ச வரைக்கும் புரிஞ்சதுல தமிழ் மொழி பெயர்ப்புங்கறது ரொம்ப சுலபம் போல. பொள்ளிகை - POLICY விளையன் - VILLAIN ஆகா அருமை இப்படியே அவுட்டிகை - AUTOPSY பிளையர் - PILLAR

சூப்பருங்கோ அல்லது சுப்பய்யருங்கோ

பெருசு said...

ஐயா , மிகத்தெளிவாக எடுத்தியம்பியுள்ளீர்கள்.

பல ஆண்டுகள் வெளிநாட்டில் வசித்து தாயகம் திரும்பி
தமிழில் உரையாட விழைந்தால் கேலியும் சீண்டலும்தான்
மக்களிடம்.

பல ஆங்கிலச்சொற்களுக்கான தூய தமிழாக்கத்தை
உங்களின் இடுகையின் கண்டேன்.

மிக்க நன்றி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

முனைவர் மு.இளங்கோவன் said...

தங்கள் பதிவிற்கு நன்றி.
மு.இளங்கோவன்
புதுச்சேரி

Unknown said...

அய்யா,

தமிங்கலர்களைப் பற்றி மிக விரிவாக எழுதியுள்ளீர்கள். தொலைக்காட்சியும், திரைப்படங்களும்தான் இதற்கு முழுக்க முழுக்க காரணம் என்றால் அது மிகையில்லைதான்.

//"Tamils and dogs are not allowed" என்று அந்த முடிதிருத்துக் கடையில் நேரடியாய் எழுதிப்போடவில்லை தான்; ஆனாலும் நடைமுறையில் அதுதானே இருக்கிறது?//

வேதனை தோய்ந்த வரிகள். இன்னும் கொஞ்ச நாட்களில் இதுவே சட்டமாகவும் ஆகலாம், நம் தமிழ்நாட்டில்.

குமரன் (Kumaran) said...

உண்மை தான் ஐயா. தமிங்கிலம் எந்த அளவிற்கு நம்மிடையே வளர்ந்துவிட்டது; ஆளுமை செய்கிறது என்பதற்கு என்னைப் போன்றவர்கள் பேசுவதைப் பத்து நிமிடம் கவனமாகக் கேட்டால் போதும். எத்தனை எத்தனை ஆங்கிலச் சொற்களை புழங்குகின்றோம். கவனித்தால் வெட்கமாகத் தான் இருக்கிறது. வேதனையாகவும் இருக்கிறது.

வீட்டில் மனைவியுடன் பேசும் போது பல நேரங்களில் ஒரு விளையாட்டைப் போல் ஒருவர் மற்றொருவர் சொல்லும் வேறு மொழிச் சொற்களைக் குறிப்பிட்டுச் சொல்லி அதற்குத் தாய்மொழிச் சொல் என்ன என்று சிந்திப்போம். பல நேரங்களில் அந்தச் சொல் இருந்தது; இப்போது மறந்துவிட்டது என்று புரியும் போது வருத்தமாக இருக்கும்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

ம்ம். தீர்வு என்ன? தற்போது எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த நிலை மாறப்பவோதில்லை என்கையில், சமூகத்தின் மனநிலை மாற்றத்திற்கான வழி என்ன? :(

Unknown said...

அன்பின் ராமகி ஐயா,

சென்னையில் மட்டுமல்ல, இதே நிலைதான் இந்தியாவின் அனைத்துப் பெருநகரங்களிலும் இருக்கிறது.

இந்தியாவின் பெருநகரங்களின் தாய்மொழி ஆங்கிலம். தனிமனிதர்களின் தாய்மொழியெல்லாம் அவர்கள் வீட்டோடு :)

விமோசனத்தை நீங்கள் கற்ற காலத்திலிருந்தே தேடுகிறீர்கள், சாபம் வளர்ந்ததே தவர விமோசனத்தை நோக்கிய ஒரு படியும் எடுத்து வைக்கப்படவில்லை.

உண்மைதான் ஆங்கிலம் அறியாமல் இன்று எங்குமே வேலையில்லை. உள்ளூரிலும் இல்லை பெரும்பாலான வெளிநாடுகளிலும் இல்லை.

வயிறு இதயத்திற்குக் கீழே இருந்தாலும் அதுதான் சக்திவாய்ந்தது.

இந்நிலையில், 12ம் வகுப்புவரை தமிழைக் கட்டாயப்பாடம் ஆக்குவதைத் தவிர தமிழ்நாட்டில் வேறு வழி எதுவும் இருக்கமுடியும் என்று தோன்றவில்லை.

என்னைப்போல் பலருக்கும் இதயம் தமிழில் இயங்கிக்கொண்டிருந்தாலும், வயிறு ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருக்கிறது. இது மறுக்கமுடியாத உண்மை.

அன்புடன் புகாரி

திவாண்ணா said...

ஐயா, ம்ம்ம்ம். என்ன செய்வது? மக்கள் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டில் பிற இடங்களில் வழங்கும் மொழிகளை எதிர்த்த அதே வேகத்தை ஆங்கிலத்தை எதிர்ப்பதில் காட்டியிருந்தால் எங்கோ போயிருப்போம். காட்டவில்லையே? இப்போதைய தமிழனுக்கு தமிழும் தெரியவில்லை, ஆங்கிலமும் தெரியவில்லை. தடுமாறுகிறான். தாய்மொழி வழி படிப்புதான் படிக்கும் விதயங்களை புரிந்து கொள்ள ஏதுவாகும்.
ஒருதலைமுறையே தாய்மொழி அறியாது வளர்ந்துவிட்டது. இன்றைய நிலைமை கவலை தருவதே.

Anonymous said...

சிறப்பானதொரு பதிவு.

'மொழி' என்பது பற்றிய அறிவோ புரிதலோ இல்லாத மக்கள்.
கட்டமைக்கப்பட்ட ஆங்கிலமோகம். அது கண்டுமயங்கி தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் இழந்த தாழ்வுமனப்பான்மையுற்ற மக்கள்.

இந்த இழிவை போக்காமல், மேம்படுத்தி பணம்-அதிகாரம் என கொழுக்கும் அரசியல்வாதிகள், கல்வி வியாபாரிகள்.

(கொழுப்பு படிந்த) வயிறை வளர்ப்பது மட்டுமே பிரதான நோக்கமாகிவிட்ட இக்காலத்தில், தமிழ் இனி மெல்லச்சாகும் தானோ?!

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

இராம.கி அய்யா, நீங்களும் பல காலமாய் இதனைச் சொல்லி வருகிறீர்கள். குறைந்தபட்சம் ஒரு விழிப்புணர்ச்சியை அளிக்கவாவது தொடர்ந்து ஊக்கத்துடன் நீங்கள் எழுதி வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

Anonymous said...

நல்லவைகளை சொல்லித்தரும் உங்கள் அரும் பணிக்கு வணக்கங்கள். உங்களிடம் எனக்கு ஒரு வேண்டுகோள். பொதுவாக செய்திகளில் வரும் இந்த தலைப்பு, செய்தி அறிக்கைகளில் தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி சரியாக சொல்லப்படவில்லை என்றே கருதுகிறேன். உதவுங்கள். தலைப்பு இது தான் "மருத்துவமனையில் அனுமதிகப்பட்டார்". இந்த தலைப்பு மற்றவர்கள் எல்லாம் விரட்டப்பட்டார்கள் என்று பொருள்படும் விதமாக அறிக்கை அமைகின்றது. ஆங்கிலத்திலும் அறிக்கை அப்படியே தான் பொருள் கொள்ளும்படி உள்ளது. இந்த தலைப்பை எப்படி சொன்னால் சரியாக அமையும் உதவுங்கள்.

நன்றி,
பனிமலர்.

Anonymous said...

old man you are wasted your life .first do feel for that. dont spread venom and your fanatic thoughts across readers.

வெற்றி said...

பதிவுக்கு நன்றி ஐயா.

இரண்டு அல்லது மூன்று கிழமைகளுக்கு முன் தமிழ்த் திரைப்பட இயக்குனர், தமிழ் ஆவலர் சீமான் அவர்களின் நேர்காணல் ஒன்றினை இணையத்தளத்தில் பார்க்கக் கிடைத்தது.

அந்த நேர்காணலில் அவரும் இந்த நிலமையைக் குறிப்பிட்டு வருத்தப்பட்டதோடு, இன்னொரு சங்கதியையும் சொன்னார்.

அதாவது ஒரு காலத்தில் தமிழ் மொழியைப் பேசிய மக்களே, தமிழ் மொழி திரிபடைந்து தெலுங்கர், மலையாளிகள், கன்னடர் என உருவாகியது போல, இந்த நிலை நீடித்தால் தமிங்கிலம் எனும் மொழியைப் பேசும் தமிங்கிலர் எனும் இனமொன்று உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறியிருந்தார்.

போற போக்கைப் பார்த்தால் அவர் சொன்னது நடந்தாலும் நடக்கலாம்!

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

காசி - நீங்கள் குறிப்பிடுவது போல் இது ஏதோ ஒரு மேல்தட்டு முடிதிருத்தகத்தில் நடந்த நிகழ்வாக இருக்கலாம். ஆனால், வளர்ந்தும் விரிந்தும் வரும் நகரங்களில் இந்தப் போக்கு தொடர்வது கவலைக்குரியது. அதைத் தான் இராம. கி சுட்டிக் காட்ட நினைத்திருக்கிறார் என்று கருதுகிறேன். ஐரோப்பியப் பெரு நகரங்களில் ஆங்கிலத்திலும் உரையாடி சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், "உனக்கு ஆங்கிலம் தெரியாதா" என்று யாரும் அதிகாரம் செய்ய முடியாது. "தயவுசெய்து ஆங்கிலத்தில் பேசுவீர்களா" என்று பணிவுடன் தான் கேட்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர் தான் வேறு ஆங்கிலம் பேசக்கூடிய கடைக்குச் செல்ல வேண்டி இருக்கும். இல்லை, அத்தகையை கடைகளைத் தேடி ஓய்ந்து கடைசியில் உள்ளூர் மொழியைக் கற்றுக் கொண்டு விடுவார். ஆங்கிலம் என்பது சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மட்டுமே பயன்படுத்தலாம். ஒரே ஊரில் பல ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டு உள்ளூர் மொழியை மதிக்காமல், கற்காமல் இருப்பது உள்ளூர்க்காரர்களுக்கான அவமானம் தான்.

Anonymous said...

ஐயா, கட்டுரை மிக அருமை. தமிழுக்கு தொண்டு செய்கிறேன் என்று சொல்லும் தமிழக முதல்வர், திரைப்படங்களுக்கு அளிக்கும் வரி விலக்கு மட்டும் தமிழை வளர்த்த வழி வகுக்காது என்று எண்ணி வேறு சில உருப்படியான விசயங்க்களையும் செயல் படுத்த வேண்டும். அதுதான் அவர் தமிழுக்கு ஆற்றும் மிகப்பெரிய தொண்டு. அதற்கு இந்த கட்டுரை மிக உதவியாக இருக்கும்.
--என் மனசு http://ennmanasu.blogspot.com/

Anonymous said...

ஐயா, கட்டுரை மிக அருமை. தமிழுக்கு தொண்டு செய்கிறேன் என்று சொல்லும் தமிழக முதல்வர், திரைப்படங்களுக்கு அளிக்கும் வரி விலக்கு மட்டும் தமிழை வளர்த்த வழி வகுக்காது என்று எண்ணி வேறு சில உருப்படியான விசயங்க்களையும் செயல் படுத்த வேண்டும். அதுதான் அவர் தமிழுக்கு ஆற்றும் மிகப்பெரிய தொண்டு. அதற்கு இந்த கட்டுரை மிக உதவியாக இருக்கும்.
-- என் மனசு
http://ennmanasu.blogspot.com/

Floraipuyal said...

//
old man you are wasted your life .first do feel for that. dont spread venom and your fanatic thoughts across readers.
//
//
இப்போதைய தமிழனுக்கு தமிழும் தெரியவில்லை, ஆங்கிலமும் தெரியவில்லை. தடுமாறுகிறான்.
//
:)

//
அய்யா,

உங்களுடைய இந்த கட்டுரையை பொறுமையா ஒரு தடவை படிச்சுட்டு அப்புறம் வந்து பின்னூட்டுறேன். ஆனா படிச்ச வரைக்கும் புரிஞ்சதுல தமிழ் மொழி பெயர்ப்புங்கறது ரொம்ப சுலபம் போல. பொள்ளிகை - POLICY விளையன் - VILLAIN ஆகா அருமை இப்படியே அவுட்டிகை - AUTOPSY பிளையர் - PILLAR

சூப்பருங்கோ அல்லது சுப்பய்யருங்கோ
//
//
'மொழி' என்பது பற்றிய அறிவோ புரிதலோ இல்லாத மக்கள்.
//
:) :)

//
சமூகத்தின் மனநிலை மாற்றத்திற்கான வழி என்ன? :
//
1. தமிழ் வழி படித்தால் உடனே வேலை என்றால் அடித்து பிடித்து தமிழில் படிப்பார்கள்.
2. தமிழகத்தில் தமிழ் பேசாவிட்டால் சோறில்லை என்றால் தமிழ் பேசுவார்கள்.

உண்மையில் "இந்நிலை தமிழுக்குப் புதிதல்ல. தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்வாள் தமிழன்னை" என்று தேற்றிக்கொள்ள வேண்டியது தான்.

இராமகி போன்ற யாராவது இத்தமிங்கிலர்களை அறம் பாடி அழித்தால் நல்லது. அல்லது எங்களுக்குக் கற்றுக் கொடுங்கள் - நாங்கள் செய்கிறோம். :)

சுந்தரவடிவேல் said...

தேவையான பதிவு இராம.கி அய்யா!

HK Arun said...

//இங்கிலீஷ் தெரியாத ஆளை எதுக்கு வேலைக்கு வச்சிருக்கீங்க// இது போன்ற நிகழ்வுகள் தமிழ் நாட்டினரின் தமிழ் பற்றையும் ஆங்கில மோகத்தையும் பறைச்சாட்டுகின்றது. அதேவேளை கவலையையும் தருகின்றது.

என்னை பொருத்தமட்டில் ஆங்கிலம் சர்வதேச அளவில் வியாபித்திருந்தாலும் அதுவும் மற்ற மொழிகளைப் போன்று ஒரு மொழி மட்டுமே.

ஆங்கிலம் கற்றுவிட்டால் மட்டும் அறிவாளியாகிவிட முடியுமா? இது என்ன மடமை?

அந்நிய மொழிகள் ஆயிரம் கற்றாலும் தமிழுக்கே முதலிடம் கொடுக்கப்படுகின்றது தமிழீழத்தில்.

தமிழகத்திலும் இந்நிலை உருவாக வேண்டும் ஐயா!

Anonymous said...

தமிழ் மட்டுமல்ல, இன்னும் பல மொழிகளிலும் ஆங்கிலத்தை கலந்து பேசுவோர் எண்ணிக்கை அதிகரித்து
உள்ளது. ஹிந்தி தொலைக்காட்சிகளில்
செய்திகள் உட்பட பல நிகழ்ச்சிகளில்
ஆங்கில கலப்பு மிக தாராளமாக இருக்கிறது. பண்பலைகளிலும் அப்படியே. மலையாளத்தில் அப்படியே- மலையாளிகள் பேச்சில்
ஆங்கிலம் கலந்து விட்டது. இந்த வாரத் திண்ணையில் சுகுமாரன்
மொழிபெயர்த்துள்ள கட்டுரையை
பார்க்கவும். சில மாதங்களுக்கு
முன் பார்த்த இந்திப் படத்தில் மும்பையில் ஒரு துணிக்கடையில் வேலை பார்க்கும் பெண்ணிற்கு (கதாநாயகி) ஆங்கிலத்தில் கேட்பது புரியாது, வேலை போகும்.
ரவிசங்கர் கூறுவது உண்மை, ஐரோப்பாவில் இது போல் நடக்காது.
ஆங்கிலம் தெரியாது என்று கூறிவிடுவார்கள் அல்லது தெரிந்த விற்பனையாளரை அழைப்பார்கள்.
அப்படி யாரும் இல்லாவிடில் நாம்தான் சைகை
மூலம் விளக்கி அல்லது பொருளை
எடுத்துக் காண்பித்து ‘பேச வேண்டும்'.

அரை பிளேடு said...

ஐயா,
நல்ல கட்டுரை. தேவையானதும் கூட.

//
பொள்ளிகைகளைத் (policies)
விளையனிடம் (villain)
பருவெண் மட்டுழைத்த (frequency modulated) வானொலி நிலையங்கள்
//

ஆனால் உங்கள் இந்த மொழிபெயர்ப்புகளுடன் உடன்பட முடியவில்லை.

கொள்கை,
வில்லன்,
பண்பலை வானொலி

என்று எழுதியிருந்தால் அடைப்புக்குறிக்குள் ஆங்கிலம் தேவைப்படாது. ஒரு தமிழ் கட்டுரையை எழுத அடைப்புக்குறிக்குள் ஆங்கிலம் தேவையா.

நிலைநிறுத்தப்பெற்ற தமிழாக்கம் விடுத்து தெரிந்த தமிழ்வார்த்தைக்கு புதிய புதிய ஆக்கப் பெயர்களை கொண்டு பயமுறுத்துவதால்தான் பலரும் தனித்தமிழ் கண்டு பயப்படுகிறார்கள்.

காசி அவர்கள் சொன்னது போல் முடித்திருத்தும் நிலையத்தில் ஆங்கிலம் என்பது அதிகப்படியாக தெரிகிறது.

பலருக்கு பிழைப்புக்கு ஆங்கிலம் தேவை. ஆனால் தினசரி வாழ்வில் தமிழ்தான் இருக்கிறது. என்றும் இருக்கும். தமிழ்நாட்டில் வாழ தமிழ்மட்டுமே தெரிந்திருந்தால் போதும். (ஆனால் ஆங்கிலம் காலமெல்லாம் அடைப்புக்குறிக்குள் கூடவே வரும். :))

உனக்கு ஆங்கிலம் தெரிந்தால்தான் என் தலைமயிரை உன்னிடம் வெட்டிக்கொள்வேன் என்று ஒருவன் சொல்வானானால் "போடா மயிரே." என்று சொல்லி போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

(இது வசையென்று தோன்றினால் வெளியிட வேண்டாம்.)

Anonymous said...

இந்தி மொழிகூட தமிழ்வழி வந்ததென்பர் அறிஞர்கள். ஆனால் இந்திய நடுவண் அரசின் கீழ் தமிழகம் உள்ளவரை இந்திய நடுவண் அரசிற்கு வால்பிடிக்கும் கழக மற்றும் இன்னபிற தமிழகக் கட்சிகளும் தமிங்கிலர்களும்தான் தமிழகத்தை ஆள்வார்கள். தமிழக மக்கள் விட்ட பெருந்தவறு இந்தியா என்ற சோதியில் கலந்தது. தமிழ்நாடு விடுதலையாக வேண்டும் அதைத் தன்மானமிக்க சோரம்போகத தமிழர்கள் ஆள வேண்டும். இல்லையேல் தமிழகத்தில் தமிழனுக்கும் தமிழுக்கும் ஏற்படும் தலைகுனிவு தடுக்கப்பட முடியாது போய்விடும்.

உலகமயமாக்கல் பாணியில் ஆங்கிலத்தை பூமியின் ஒரேயொரு மொழியாக மாற்றும் முயற்சி நடக்கிறது. இதன்மூலம் இரோப்பியர் ஊற்றுடைய ஆங்கில மொழி முதன்மைபெறும். தமிழில் அடிப்படைக் கணியோ, ஏன் கணிக்கான திறமுடைய ஒருங்குறி எழுத்தோ இல்லை. இப்படிப்பட்ட நிலையில் தமிழகமோ இந்திய அரசின் கீழ் இருந்து நசிபடும் வலுவற்ற வெறும் மாநிலம்.

தமிழ்நாட்டு மக்களைக் கழக அரசுகள் செம்மொழி, வாழ்த்துக்களிலிருந்து கள் அகற்றும் நுட்பம் போன்ற சில ஏமாற்றுத்தனத்தை அறிவித்து தமிழர்களைப் பேக்காட்டி வாழ்கின்றனர். தமிழ் மாநிலத்தவர்கள் அண்டை மாநிலத்துப் பெரியாரைத் தலைமையாக ஏற்றளவிற்கு சொந்தமாநிலத்து தமிழ்மொழியை ஏன் சொந்தமநிலத்தின் தன்னாளுமைக்கு முன்னின்று உழைக்கவில்லை. அனைத்துத் தமிழர்களும் ஒன்றிணைந்து உழைத்திருந்தால் தமிழ்நாடு தன்னாளுமை பெற்றிருக்கும் அல்லது தமிழுக்கும் தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் இந்தியாவில் கூடுதல் அதிகாரம் கிடைத்திருக்கும்.

அடிப்படைக் கணிகூட உருவாக்க வக்கற்ற தமிழக அரசுகள் தமிழனுக்கு என்ன விடிவை அளிக்கப் போகிறது? எவ்வளவுகாலம்தான் வெள்ளைக்காரனுக்கும் இந்திக்காரனுக்கும் வால்பிடிப்பார்கள்?

எவ்வளவுகாலம்தான் தமிழ் மக்களின் பணத்தை ஏப்பமிட்டு அதில் வரும் பணத்தை வைத்து தொலைக்காட்சி, கட்சி, குடும்பம் என்பதை வளர்ப்பார்கள்?

ஏன் இராமகி ஐயா போன்றோரை ஒருங்கிணைத்து இவ்வாறான பிரச்சினைகளுக்கு முடிவுகாண தமிழக அரசு முயலவில்லை? பட்டறைகளையும் அணு ஆலைகளையும் மடிக்குழைப் பள்ளிகளையும் கட்டுவதால் தமிழன் முன்னேறிடுவானா? தமிழனைத் தமிழகத்தில் கூலியாக்க தமிழனே உதவுவது எவ்வளவு கொடூரமான தமிழித் துரோகம்!

முதுகெலும்பற்ற மக்களாகத் தமிழக மக்களை உருமாற்றம் செய்ய தமிழக அரசு முன்னுவர்ந்து நடக்கிறது.

என்ன ஆங்கிலம் தெரியாதா என்று கேட்டவனின் குரல்வளையைச் சவரம் செய்யும் கத்தியால் அறுத்திருக்க வேண்டும். இப்படிக் கேட்கும் நாலுபேரை நடுச்சாலையில் வைத்து கவணால் சுட்டால் நாளைக்கு யாரும் இதே கேள்வியைத் தமிழகத்தில் ஒரு தமிழனைப் பார்த்துக் கேட்க மாட்டான்! மாட்டார்கள்! தமிழனைத் திருத்த ஒரேவழி மரணபயம்தான்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நல்ல கட்டுரை ஐயா!

//ஆனால் உங்கள் இந்த மொழிபெயர்ப்புகளுடன் உடன்பட முடியவில்லை.
கொள்கை,
வில்லன்,
பண்பலை வானொலி
என்று எழுதியிருந்தால் அடைப்புக்குறிக்குள் ஆங்கிலம் தேவைப்படாது.//

இதை முற்றிலும் வழி மொழிகிறேன்!

ஏற்கனவே தமிங்கிலச் சுவையில் ஊறித் திளைத்து மண்டையேறிப் போயிருக்கும் தமிழர்கள், இது போன்ற சொல்லாடல்களைக் கண்டால், இன்னும் இறுகித் தான் கொள்வார்களே அன்றி, இதன் பின்னுள்ள நியாயங்களை உணரவே மாட்டார்கள்!

எப்படி தமிங்கலனுக்குத் தமிழுக்குத் திரும்பி வர ஒரு கடமை உள்ளதோ
அதே போல் தமிழார்வலருக்கும் தமிழைத் தக்க முறையில் கொண்டு சேர்க்கும் கடமையும் உள்ளது!

அழகுத் தமிழ், அச்சத் தமிழ் ஆக வேண்டாம்! அச்சுத் தமிழ் ஆகட்டும், அச்சு வெல்லத் தமிழ் ஆகட்டும்!

எளிமையே இனிமை! எளிமையே வலிமை!

Anonymous said...

//
நாளும் கூடும் ஆங்கிலத் தாக்கம்
//

ஆங்கிலத்தின் தாக்கம் நாளும் கூடிக்கொண்டு தான் இருக்கிறது. அதுக்காக நீங்கள் சொல்லும் வாயில் வரக் சிரமப்படும் தனித்தமிழ் வார்த்தைகளால் அதை மாற்ற நிச்சயம் முடியாது.


நாம் ஆங்கிலேயர்கள் mulligatawny soup, Curry leaves என்று தமிழை ஆங்கிலத்தில் ஏற்றுக் கொண்டது போல், ஆங்கில வார்த்தைகளை தமிழ் அகராதியில் ஏற்றிக் கொண்டு முன்னேற வேண்டும். இல்லை, ஆங்கிலத்தின் தாக்கம் அதிகரித்துவிட்டது, சமஸ்கிருத தாக்கம் அதிகரித்துவிட்டது என்று உங்களைப் போல் புலம்பிக் கொண்டு பதிவு போட்டுக் கொண்டு, தனித்தமிழ் என்று தமிழ்நாட்டில் 10 க்கு 9 பேருக்குப் புரியாத தமிழில் எழுதி அதுக்கு அடைப்புக் குறிக்குள் ஆங்கில விளக்கம் கொடுத்து ஆங்கிலத்தை வாழவைக்கப் பாடுபடவேண்டியது தான்.


நன்றி.

இராம.கி said...

அன்பிற்குரிய இளா,

தமிழ் இப்படிப் பொதுவாழ்க்கையில் தள்ளி வைக்கப் படுகிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையில் பட்டறிந்து தான் வருகிறோம். அதை எடுத்துச் சொல்லவும், ஒரு பொதுக் கருத்தை அதற்கு எதிராய் உருவாக்கத் தூண்டவுமே இந்த இடுகையை எழுதினேன்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய காசி,

ஒரு மேல்தட்டு முடிதிருத்தகத்தில் நடந்த செய்தி என்பதால்,

"சவரம் செய்து கொள்ளும் இடத்திலும் ஆங்கிலம் அறியாதவர்கள் வாழ முடியாது என்ற நிலை நம்மிடையே மட்டுமே இருக்கிறது."

என்று எழுதுவது மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சி என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

"Indians and digs are not allowed" ±ýÀРܼ ´Õ §Áø¾ðÎ Á¸¢úÌØõÀ¢ý ¦ÅǢ¢ø ¾¡ý ±Ø¾¢¨Åì¸ô ÀðÎ þÕó¾Ð? «¨¾ ±¾¢÷òРŢξ¨Ä¢ý §À¡Ð ¡Õõ §À¡Ã¡¼Å¢ø¨Ä¡? ¸¡ó¾¢¨Âò ¦¾ýÉ¡ôÀ¢Ã¢ì¸ò ¦¾¡¼Ã¢Â¢ø þÕóÐ ¦ÅÇ¢§Â ¾ûǢ §À¡Ð «Å÷ §Áற்¾ðÊü¸¡É ÅÌôÀ¢ø ¾¡ý À½ðÎ Å¡í¸¢Â¢Õó¾¡÷. "niggers are not allowed" என்று அமெரிக்கத் தென்மாநிலங்களில் விலக்கிவைக்கப் பட்ட இடங்களும் மேல்தட்டு வெள்ளையர்கள் கூடியிருந்த குழும்புகள் தான். நம்மூரில் "உள்ளே நுழையாதே" என்று தாழ்த்தப்பட்டவரை விலகச் சொல்லும் இடங்களும் மேற்சாதி வீதிகளும் அம்பலங்களும் தான்.

களங்கள் வேறு, நடப்பது ஒன்றுதான், அய்யா. ஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால் நடப்பது கொடுமை என்று தெளிவாய்ப் புலப்படும். இந்தக் காலத்தில் தனியார் நிறுவனங்களில் மட்டுமல்ல, அரசு அலுவங்களிலும் கூட, தமிழில் நீங்கள் போய் ஒன்று கேட்டால் கிடைக்கும் மறுவினையும், ஆங்கிலத்தில் அதையே கேட்டால் கிடைக்கும் மறுவினையும் மலையும் மடுவுமாய் தோற்றம் அளிக்கின்றன.

நடப்பதை வெறுமே மேல்தட்டில் நடப்பது என்று ஒதுக்கிவிட முடியாது. அது பரவலாய் நட்க்கிறது, "உண்மையில் தமிங்கிலர் என்பவர் தமிழரை ஆள்கிறார்" என்றே சொல்லத் தோன்றுகிறது. "மீண்டும் ஒரு குடியேற்ற ஆட்சிக்குள் சிக்கிக் கொண்டோமோ?" என்ற ஐயம் சில காலமாக எனக்கு ஏற்பட்டிருக்கிறது.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய கயல்விழி முத்துலெட்சுமி,

உங்கள் பங்களிப்பிற்கு நன்றி. பலரும் இதை உணரட்டும்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய காசி,

மேலே உள்ள பின்னூட்டில் தகுதரக் குறியீடு ஊடே வந்துவிட்டது. மன்னியுங்கள். இப்பொழுது அதைச் சரிசெய்து மீண்டும் வெளியிடுகிறேன்.
-------------------------------------
ஒரு மேல்தட்டு முடிதிருத்தகத்தில் நடந்த செய்தி என்பதால்,

"சவரம் செய்து கொள்ளும் இடத்திலும் ஆங்கிலம் அறியாதவர்கள் வாழ முடியாது என்ற நிலை நம்மிடையே மட்டுமே இருக்கிறது."

என்று எழுதுவது மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சி என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

"Indians and dogs are not allowed" என்பது கூட ஒரு மேல்தட்டு மகிழ்குழும்பின் வெளியில் தானே எழுதிவைக்கப் பட்டு இருந்தது? அதை எதிர்த்து விடுதலையின் போது யாரும் போராடவிலையா? காந்தியைத் தென்னாப்பிரிக்கத் தொடரியில் இருந்து வெளியே தள்ளிய போது, அவர் மேற்தட்டு வகுப்பில் தானே பயணச்சீட்டு வாங்கியிருந்தார்? "niggers are not allowed" என்று அமெரிக்கத் தென்மாநிலங்களில் விலக்கிவைக்கப் பட்ட இடங்களும் மேல்தட்டு வெள்ளையர்கள் கூடியிருந்த குழும்புகள் தான். நம்மூரில் "உள்ளே நுழையாதே" என்று தாழ்த்தப்பட்டவரை விலகச் சொல்லும் இடங்களும் மேற்சாதி வீதிகளும் அம்பலங்களும் தான்.

களங்கள் வேறு, நடப்பது ஒன்றுதான், அய்யா. ஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால் நடப்பது கொடுமை என்று தெளிவாய்ப் புலப்படும். இந்தக் காலத்தில் தனியார் நிறுவனங்களில் மட்டுமல்ல, அரசு அலுவங்களிலும் கூட, தமிழில் நீங்கள் போய் ஒன்று கேட்டால் கிடைக்கும் மறுவினையும், ஆங்கிலத்தில் அதையே கேட்டால் கிடைக்கும் மறுவினையும் மலையும் மடுவுமாய் தோற்றம் அளிக்கின்றன.

நடப்பதை வெறுமே மேல்தட்டில் நடப்பது என்று ஒதுக்கிவிட முடியாது. அது பரவலாய் நட்க்கிறது, "உண்மையில் தமிங்கிலர் என்பவர் தமிழரை ஆள்கிறார்" என்றே சொல்லத் தோன்றுகிறது. "மீண்டும் ஒரு குடியேற்ற ஆட்சிக்குள் சிக்கிக் கொண்டோமோ?" என்ற ஐயம் சில காலமாக எனக்கு ஏற்பட்டிருக்கிறது.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

பெயரில்லாதவருக்கு,

உங்கள் பின்னூட்டைப் பார்த்த போது, அதில் தொனித்த உள்ளார்ந்த நக்கலையும் ஒதுக்கித் தள்ளி, "நமக்குத் தெரிந்த சொற்களை மட்டுமே வைத்துச் சுற்றி வளைத்தாற் போலப் பூசி மெழுகித் தமிழில் எழுதுவது சரியில்லை" என்று உணர்த்தி, நான் பரிந்துரைத்த சொற்களுக்கு விளக்கம் அளித்துத் தெளிவுறுத்தலாம் என்று தான் முதலில் நினைத்தேன். பின்னால் மீண்டும் மீள்வாசிப்புச் செய்த போது தான், "செய்தக்க அல்ல செயக் கெடும்" என்று குறள் அறிவுரை (தெரிந்து செயல்வகை; குறள் 466) நினைவில் உறைத்தது.

இந்தச் சொல்லாக்கங்களை ஏற்காதவர், தனக்குச் சரியென்று தென்படும் மாற்றுச் சொற்களை எடுத்துச் சொல்லி ஒன்றைக் கட்டும் பாங்கில் வாதிட்டிருந்தால், அவருடன் உரையாடுவதில் பொருளிருக்கும். "அதை விடுத்து, இணையம் தரும் முகங்காட்டா வசதியைப் பயன்படுத்திக் கொண்டு, வெறும் சேற்றை வாரியிறைப்பதையே குறிக்கோளாய்க் கொண்டு அலைந்து, போகிற போக்கில் கழிப்பறையில் அவதூறு எழுதும் விடலையர் போல, எழுதத் தெரிகிறவருக்கு ஒரு மறுமொழியா?" என்ற பொருள் அந்த "செயத்தக்க அல்ல செயக் கெடும்" என்பதற்குள் இருக்கிறது.

இந்த நக்கலுக்கெல்லாம் மறுமொழி உரைக்க எனக்கும் தெரியும். அது நாகரிகம் இல்லை என்று தவிர்க்கிறேன். அதோடு, "பின்னூட்டு" என்று ஒரு சொல்லைப் பாவித்தீர்கள் பாருங்கள், தமிழ் வலையுலகம் எங்கும் பரந்து கிடக்கும் அந்தச் சொல்லையும், அதுபோன்று தமிழ்கூறு நல்லுலகில் பயிலும் பல சொற்களையும் பரிந்துரைக்க வாய்ப்புக் கிடைத்தவன், மேலும் பணி செய்யவேண்டும் என்று எண்ணுகிறேன். இந்த நக்கல்களுக்கெல்லாம் பயந்து தயங்கியிருந்தால் அவன் எந்தப் பணியும் செய்திருக்க முடியாது.

"வேடிக்கை மனிதரைப் போல நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" என்றார் ஒரு மாகவி.

"கெஞ்சுவதில்லை பிறர்பால்; அவர்செய் கேட்டினுக்கும்
அஞ்சுவதில்லை; மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவதில்லை எனவே தமிழர் தோளெழுந்தால்,
எஞ்சுவதில்லை உலகில் எவரும் எதிர்நின்றே!"

என்றார் பாவலேறு.

- இராம.கி.

Anonymous said...

இராம.கி. அய்யா,

என்னுடைய பின்னூட்டத்திற்கு அளித்த பதிலில் கூட என்னுடைய பின்னூட்டத்தை "//" போட்டு குறிப்பிடாத உங்களுடைய தன்மானத்துக்கு தலை வணங்குகிறேன் (!!!).

ஆனால் ஒரு ஆங்கில வார்த்தையின் முதல் மூன்று அல்லது நான்கு எழுத்துக்களை அப்படியே ட்ரான்ஸ்லிடெரேட் செய்து அதன்பின் "ள்ளிகை", "ப்பிகை", "ப்பீடு", "ள்ளீடு", "த்தீடு" போட்டுக்கொண்டால் அது எப்படி தமிழை வளர்ப்பதாகும்? உ.ம். POLICY - பொள்ளிகை - முதல் மூன்று எழுத்டு POL, அதை அப்படியே தமிழாக்கினால் பொள் அதனுடன் "ள்ளிகை" சேர்த்தல், விளையன் அப்படியே ட்ரான்ஸ்லிடெரேட் செய்யப்பட்டது. வேறொரு பதிவில் PRESENTATION ஐ பிரத்தீடு என்று மொழி பெயர்த்தீர்கள் என்று கேவிப்பட்டேன். அதில் முதல் மூன்று எழுத்து Pறே அதாவது ப்ர, பிர "த்தீடு" சேர்த்துக்கொண்டீர்கள்.

இதை சுட்டிக்காட்டினால் அதற்கு பதில் சொல்லாமல் கழிப்பறைப்பற்றி பதில் சொல்கிறீர்கள். உங்களுக்கு நியாபகம் வந்த அதே திருவள்ளுவர் சொன்ன ஒன்றை குறிப்பிடுகிறேன்.

"எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு"

பொள்ளிகை மற்றும் விளையன் போன்ற வார்த்தைகள் அதே பொருளில் எங்காவது உபயோகப்படுத்தி இருப்பதற்கான உதாரணத்தை காட்ட முடியுமா?

பின்னூட்டம் என்பது நீங்கள் கண்டு பிடித்த வார்த்தை என்பது எனக்கு தெரியாது. மன்னிக்கவும்.

மேலும் குழுமம் என்று அழகாக ஒரு சொல் உபயோகத்தில் இருக்கும்போது ஏன் குழும்பு என்று ஏன் அலும்பு செய்கிறீர்கள்?
நன்றியுடன் அனானி.

Anonymous said...

//இந்தச் சொல்லாக்கங்களை ஏற்காதவர், தனக்குச் சரியென்று தென்படும் மாற்றுச் சொற்களை எடுத்துச் சொல்லி ஒன்றைக் கட்டும் பாங்கில் வாதிட்டிருந்தால், அவருடன் உரையாடுவதில் பொருளிருக்கும்//

அதை அருமையாக அரை ப்ளேடு செய்திருக்கிறாரே, அதற்கு பதில் சொல்லி இருந்தீர்கள் என்றால் இந்த வரிகளுக்கு இன்னும் பொருள் மிகுந்திருக்கும்.

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

அநாமதேய நண்பருக்கு,

Presentation-க்குப் பரத்தீடு என்று இராம.கி பரிந்துரைத்தது பற்றி நான் தான் அண்மையில் இங்கு (வீட்டுக்கடன் சிக்கல் விளக்கப் பரத்தீடு) எழுதியிருந்தேன்.

உங்கள் அவசரத்தில் அதைப் பிரத்தீடு என்று எப்படித் தப்பாகப் படித்தீர்களோ தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் பொறுமையாகப் படித்திருந்தீர்களென்றால் அந்தச் சொல் 'பரத்து' என்ற வினையில் இருந்து வந்திருக்கும் என்று கிரியா அகரமுதலியைப் பார்த்து நான் புரிந்துகொண்டதையும் எழுதியிருந்ததைப் படித்திருப்பீர்கள்.

இராம.கி அவர்கள் பரிந்துரைப்பதை எல்லோரும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் எப்போதும் வலியுறுத்தவில்லை. அவருக்குச் சரியெனப் பட்டதைச் சொல்லுகிறார். பிடித்திருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். இந்த அடிப்படையிலேயே நானும் சிலவற்றை ஏற்றுக் கொள்கிறேன். சிலவற்றை, எளிமையாக இல்லையென்றோ, பொருத்தமாய் இல்லையென்றோ, எனக்குப் புரியவில்லை என்றோ ஏற்காமலும் விட்டுவிடுகிறேன்.நீங்களும் பொதிவாய்க் (இதுவும் அவரிடம் இருந்து நான் சேர்த்துக்கொண்ட சொல் தான்) கருத்துக்களை வைக்கலாமே.

இராம.கி said...

அன்பிற்குரிய பெருசு,

உங்கள் வாழ்த்திற்கு நன்றி.

அன்பிற்குரிய முனைவர் மு. இளங்கோவன்,

தங்கள் வருகைக்கு நன்றி.

அன்பிற்குரிய தஞ்சாவூரான்,

உங்கள் கருத்திற்கு நன்றி. ஆங்கிலத் தாக்கம் குறைவதும் கூடுவதும் நம் கையில் இருக்கிறது. நம்மால் முடிந்ததை நாம் செய்வோம்.

அன்பிகுரிய குமரன்,

எனக்கும் இது போன்று பலமுறை ஏற்பட்டிருக்கிறது. அந்த நேரங்களில் வெட்கித் தலை குனிந்திருக்கிறேன்.

"கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகட்டிச் சிரியாரோ" என்றனல்லவா பாரதி, அந்த நிலையில் நாம் இருக்கிறோம். தமிழ்க் கண்களை விற்று ஆங்கிலச் சித்திரம் வாங்குகிறோம்.

அன்பிற்குரிய ரவிசங்கர்,

குமுகத்தின் மன மாற்றத்திற்கு வழி உங்களைப் போன்ற இளைஞர்கள் மூலம் தான். என்னைப் போன்றவர்களின் பணியால் இல்லை. நாங்கள் ஒரு மூலையில் இருந்து சொல்லிக் கொண்டிருப்போம். அதுதான்,

old man you are wasted your life .first do feel for that. dont spread venom and your fanatic thoughts across readers.

என்று இங்கு ஒரு தமிழர் சொல்லிவிட்டாரே! அப்புறம் என்ன? நச்சைப் பரப்பிக் கொண்டிருக்கிறேனாம் நான்!

நல்லது, மெல்லத் தமிழ் இனிச் சாகட்டும்.

அன்பிற்குரிய புகாரி,

வருகைக்கு நன்றி.

ஆங்கிலம் புழங்கக் கூடாது என்று யாரும் சொல்லவில்லை; நானும் சொல்ல மாட்டேன். தமிழ் புழங்கும் இடத்தில் ஆங்கிலத்தைக் கொண்டுவந்து ஆட்சியில் வைக்காதீர்கள் என்று மட்டுமே சொல்லுகிறோம். அது சிலருக்கு நச்சாகத் தென்படுகிறது. இந்த விவரங் கெட்ட மர மண்டைகளுக்கு எது நச்சு, எது நோய் என்று கூட விளங்கவில்லை பாருங்கள். ஆர்வெல்லின் "1984" புதினம் தான் நினைவுக்கு வருகிறது. அடிமைச் சுகம் இவர்களை அவ்வளவு ஆட்டிப் படைக்கிறது. ஒரு புதிய மொழியையே உருவாக்குகிறார்கள். இந்த ஆண்டு 3000 சொல் தெரிந்தால், அடுத்த ஆண்டு 2700, அதற்கு அடுத்து 2430 இப்படிக் குறைந்து கொண்டே வந்து குலைவது கூடத் தெரியாமல், ஒரு சுகம். கள் குடியைக் கெடுக்கும்; தமிங்கிலம் தமிழரைக் கெடுக்கும்..

எனக்கும் தான் ஆங்கிலம் சோறு போடுகிறது. என் அலுவல் ஆங்கிலத்தில் தான் நடக்கிறது. இருந்தாலும் முடிந்தவரை தமிழைப் பொது இடங்களில் பயன்படுத்த விழைகிறேன்; செய்கிறேன். தமிழர் ஒவ்வொருவரும் தங்களால் இயன்றவரை தமிழைப் பொது இடங்களில் பயன்படுத்தினால் உறுதியாக ஒரு மாற்றம் வரும். சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்.

அன்பிற்குரிய திவா,

நீங்கள் இந்தி எதிர்ப்பைக் குறிப்பால் உணர்த்துகிறீர்கள் என்று எண்ணுகிறேன். 1965-இல் நானும் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவனே. அது தப்பு என்று இன்னும் நான் நினைக்க வில்லை. அன்றையத் திராவிட இயக்கத் தலைவர்கள் ஆங்கிலத் தாக்கம் பற்றி சரியான தெளிவில் தான் இருந்தனர். நாளா வட்டத்தில் குறுக்கு வழியில் பணஞ் சேர்க்கும் எண்ணம் பெருகிக் கொள்கைப் பிடிப்பு குலைந்து போனதால், அந்த இயக்கம் நீர்த்துப் போயிற்று. தவிர அடித்த பணத்தில் பங்கு போட்டுக் கொள்ளுவதில் பங்காளிச் சண்டை வந்து உட்பூசலிற் சிதறுண்டு போனது. எனவே நினைத்தது பலவும் நடவாமலே போயிற்று. நல்லது செய்யும் என்று பலரும் எதிர்பார்த்த ஓர் இயக்கம், பணம், பதவி, அதிகாரம் என்ற கள்ளை மாந்தி தன்னை மறந்தது. அவ்வளவு தான். இது ஒரு பட்டறிவு. இனிமேலாவது கவனமாய் இருந்தால் நல்லது.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய கர்ணன்,

உங்கள் கருத்திற்கு நன்றி. எந்த எதிர்வினையும் செய்யாமல், "சிவனே" என்று நாம் இருந்தால், மெல்லத் தமிழ் இனிச் சாகும்; அதில் எந்த ஐயமும் இல்லை.

அன்பிற்குரிய செல்வராஜ்,

விழிப்புணர்ச்சியை அளிக்க எழுதிவரச் சொல்லுகிறீர்கள். என்னால் முடிந்ததை எழுதித்தான் வருகிறேன். ஆனாலும்,

old man you are wasted your life .first do feel for that. dont spread venom and your fanatic thoughts across readers.

என்று எழுதும் முட்டாள்க் கூட்டமும் உடன் இருக்கிறது. என்னைச் செயலிழக்கச் செய்யப் பலர் துடித்துக் கொண்டு இருக்கின்றனர். அதற்கு இணையம் நல்கும் முகங்காட்டா வழிமுறை உதவி செய்கிறது.

இருந்தும், நான் தொடருவேன்.

அன்பிற்குரிய பனிமலர்,

உங்கள் கேள்வி எனக்குப் புரியவில்லை. "மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்" என்ற தலைப்பு எதில் வந்தது? என்ன செய்தியைக் குறிக்கிறது? கூடுதல் விவரம் அளித்தால் ஏதேனும் செய்யலாம்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

My dear young man,

Either you don't know how to write in Tamil or you don't want to write in Tamil. Either way, my point about persons speaking Tanglish is getting confirmed by your response. Tanglish people know neither Tamil nor English.

Precisely, you don't seem to know how to write in English also. Forgetting your indecent way of addressing a senior person, you should have started as "Old man, you have wated your life ........." and follwed with the rest. This simple sentence form is taught in the English elementary education.

As for your anxiety that I am spreading venom and fanatic thoughts across readers, let the readers judge for themselves. You may continue with your politics at your chosen place.

By the way, thanks for coming.

With regards,
iraamaki.

இராம.கி said...

அன்பிற்குரிய வெற்றி,

தமிங்கிலர்கள் ஏற்கனவே உருவாகிவிட்டார்கள்; அவர்கள் தான் தமிழரை இப்பொழுது ஆளுகிறார்கள் என்பது இன்றுள்ள என் புரிதல்.

அன்பிற்குரிய ரவிசங்கர்,

மேல்தட்டு என்று கருத்தீடு பற்றி ,மேலே காசிக்கு அளித்த பின்னூட்டில் என் கருத்தைக் கூறியிருக்கிறேன்.

நெதர்லந்தின் மக்களில் 100க்கு 95 பேர் ஆங்இலம் தெரிந்தவர்கள் தான். இருந்தாலும் டச்சு மொழிக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். நம்மவர்கள் தான் தலைகால் புரியாமல், அரசிக்கும் மேல் இருந்து ஆங்கிலத்தில் பற்றுக் கொள்ளுவார்கள் போலிருக்கிறது.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய என் மனசு,

கலைஞரை முற்றிலும் குறைசொல்ல முடியாது. அவ்வப்போது ஏதேனும் செய்து கொண்டுதான் இருக்கிறார். இன்னும் அவர் நிறையச் செய்திருக்கலாம் என்று வேண்டுமானால் நாம்

குறைப்பட்டுக் கொள்ள முடியும். அண்மையில் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு வரை, தமிழைக் கட்டாய மொழிப்பாடமாய் கொண்டுவந்த அரசாணை செல்லும் என்று உச்ச நயமன்றம்

தீர்ப்பளித்திருக்கிறதே, அந்த முயற்சிக்குக் கலைஞரைப் பாராட்டத்தானே வேண்டும்?

நான் கழகங்கள் மேல் அவ்வப்போது குறைப்பட்டுக் கொள்ளுவதைச் சரியான முறையில் புரிந்து கொள்ளுவீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய என் மனசு,

கலைஞரை முற்றிலும் குறைசொல்ல முடியாது. அவ்வப்போது ஏதேனும் செய்து கொண்டுதான் இருக்கிறார். இன்னும் அவர் நிறையச் செய்திருக்கலாம் என்று வேண்டுமானால் நாம்

குறைப்பட்டுக் கொள்ள முடியும். அண்மையில் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு வரை, தமிழைக் கட்டாய மொழிப்பாடமாய் கொண்டுவந்த அரசாணை செல்லும் என்று உச்ச நயமன்றம்

தீர்ப்பளித்திருக்கிறதே, அந்த முயற்சிக்குக் கலைஞரைப் பாராட்டத்தானே வேண்டும்?

நான் கழகங்கள் மேல் அவ்வப்போது குறைப்பட்டுக் கொள்ளுவதைச் சரியான முறையில் புரிந்து கொள்ளுவீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

அன்பிற்குரிய floraipuyal,

அந்த விடலைப் பிள்ளை எழுதியதை ஒதுக்கித் தள்ளுவோம். நீங்கள் சொல்லுவது போல் தமிழும் தெரியாமல், ஆங்கிலமும் தெரியாமல், அவர் இருக்கிறார். தவிர, நாகரிகமும் அறியாதவர் போலும்.

policy, villain பற்றி நக்கலடித்தவரோ, அதற்கு இணையான சொல்லைக் கடைசி வரை சொல்லவில்லை. என் விளக்கத்தை இப்பொழுது சொன்னால், அதை வைத்துக் கொண்டு, உடனே தவ்விக் கொண்டு வரக்கூடும். மிகுந்த சிந்தனைக்குப் பிறகே பொள்ளிகை, விளையன் என்ற சொல்லாக்கங்களை நான் கூறினேன். அந்தச் சொல்லாக்கம் பற்றித் தனியே ஒரு பதிவில் பின்னால் சொல்லுகிறேன். (ஒரு சிலருக்குக் கண்ணை மூடிக்கொண்டு கேள்வி கேட்கவும், நக்கல் அடிக்கவுமே தெரிகிறது. பொறுப்பான மறுமொழிகளை அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது இருக்கிறது.)
-------------------------------
சிதம்பர நாதச் செட்டியாரின் பதிப்பில் 1965ல் வெளிவந்த சென்னைப் பல்கலைக் கழக அகரமுதலியில் "அரசாட்சிக் கலை, அரசியல்திறம், நடத்தைப் போக்கு, செயல்திற நுட்பம்,

மதிநுட்பம், தந்திரம்" என்ற சொற்கள் இணையாகக் கொடுக்கப் பட்டிருக்கின்றன. அதே பொழுது காப்பீட்டுத் துறை வழியே, "காப்புறுதிப் பத்திரம், காப்பீட்டு ஒப்பந்த இதழ்" என்றும்

கொடுக்கப் பட்டிருக்கிறது.

வர்த்தமானன் பதிப்பகத்தில் "செயல்திட்டம், ஒரு அரசு, அரசியல் கட்சி, தொழில் அலுவலகம் முதலியவற்றின் கொள்கைகள் பற்றிய அறிவிப்பு,செயல்திற நுட்பம், அரசாட்சிக் கலை" என்று

போட்டிருக்கிறது.

Longman Dictionary of Contemporary English - இல், 1. a plan or course of action in directing affairs, as chosen by a political party, government, business compny

etc. One of the new Government's policy is to contol public spending. 2. sensible behaviour that is to one's own advantage. It's bad policy to smoke too much; it

may harm your health என்று போட்டிருக்கிறது.
--------------------------------
மேலே இருக்கும் தரவுகளையும், வரையறைகளையும் வைத்துக் கொண்டு, சுற்றி வளைக்காமல், ஒரு சுருக்கமான சொல்லை உருவாக்கி, "8th clause, 3rd section, of the policy

document of the government talks about stategy, tactics, plan of action, and efficiency of the scheme என்ற வாக்கியத்தை பூசி மெழுகாமல், தமிழில் மொழிபெயர்த்து இந்தப்

பெயரில்லாதவர்கள் காட்டினால், அப்பொழுது இவர்களின் முன்னிகைக்குப் பொருளிருக்கிறது.

விளையனுக்கான என் காரணங்களையும், ஏரணத்தையும் சொல்ல முடியும். இருந்தாலும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற படி, policy என்ற சொல்லோடு பார்ப்போமே?
"எப்பொழுது பார்த்தாலும், இராம.கி.யே விளக்கிக் கொண்டு இருக்க வேண்டும்; நாங்கள் தமிழில் இருக்கும் கலைச்சொற்கள் சிக்கலுக்கு ஒரு துரும்பும் எடுத்துப் போட மாட்டோம்; அதே பொழுது, சவடாலாய்க் கேட்டுக் கொண்டு, முடிந்தால் நக்கலடித்துக் கொண்டு இருப்போம்" என்று நடந்து கொள்ளும் இவர்களும் இந்த மொழிமாற்றத்தைச் செய்து பார்க்கட்டுமே? யார் வேண்டாம் என்று சொல்லப் போகிறார்கள்?

மனமாற்றத்திற்கு வழி கேட்ட ரவி சங்கருக்கு நீங்கள் சொன்ன கருத்துக்களை எண்ணிப் பார்க்கலாம். இப்பொழுது 10ஆவது வரை தமிழ் மொழிப்பாடம் படிப்பது கட்டாயம் என்று

ஆவது போல், இனித் தமிழ் படித்தால் தான், தமிழரசில், அரசு நிறுவனங்களில் வேலைக்கு முன்னுரிமை கிடைக்கும் என்றும், அரசு வேலைக்கான சம்பளத்தை சிங்கப்பூர் நடைமுறைப்படி

தனியார் நிறுவனம் அளவுக்கு உயர்த்தியும் வைத்தால், தமிழ் உறுதியாய் வாழும்.

மயிலே மயிலே இறகு போடு என்றால் இறகு போடாது. பொதுவாய்த் தமிழரிடம் வேண்டுகோள் பலிக்காது. அரசின் அதிகாரம் பேச வேண்டும், மறுபடியும் சிங்கப்பூரைப் போல. லீ குவான் யூ விடம் நாம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது.

அன்புடன்,
இராம.கி. .

Balaji Chitra Ganesan said...

ஆங்கில மோகத்தினால்தான் பெற்றோர் குழந்தைகளை Matric பள்ளிகளில் சேர்க்கிறார்கள் என்பது சரியான வாதமாகத் தெரியவில்லை. தமிழில் மாநிலக் கல்வி (state board syllabus) பயில்விக்கும் தனியார் பள்ளிகள் தரம் குறைவாய் இருப்பது ஒரு முக்கிய காரணம். அரசுப் பள்ளிகளைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. பத்தாம் வகுப்பில்கூட ஆய்வுக்கூட (Lab) பயிற்சி அளிக்காத உதவாக்கரை பாடத்திட்டத்தை தமிழ், ஆங்கிலம் எதில் பயிற்றுவித்தாலும் வீணே!

இந்த நிலையை மாற்றச் செய்ய வேண்டியவை.

1. Martric, State board, Anglo Indian என்னும் மூன்று பாடத்திட்டங்களை ஒழித்து ஒரே பாடத்திட்டமாக்க வேண்டும்.
2. ஐந்தாம் வகுப்புவரை எல்லா குழந்தைகளும் தமிழில் மட்டுமே எல்லா பாடங்களையும் படிக்கவைக்கவேண்டும். (தமிழல்லாத தாய் மொழி, ஆங்கிலம் தவிர்த்துதான்!)
3. ஆறாம் வகுப்பிலிருந்து அறிவியல் (கணினி உள்ளிட்ட) பாடத்தை மட்டும் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் படிக்க வாய்ப்பு (option) தரவேண்டும்.
4. தமிழை தாய் மொழியாகக் கொள்ளாதவர்களும், பிற மாநிலத்திலிருந்து வருபவர்கள் CBSE பள்ளிகளில் படிக்கலாம். அவர்கள் தமிழை மொழிப்பாடமாகப் படிக்கலாம்.
5. வெளி மாநிலங்களிலிருந்து இங்கு வருபவர்களுக்கென , இந்தி பிரசார சபை போன்றதொரு தமிழ் பயிற்சித் திட்டம் உருவாக்கப் படவேண்டும். இது CBSE பள்ளிகளில் படிக்கும் வெளி மாநிலத்தவர், கல்லூரிப் படிப்புக்கு இங்கு வருபவர்கள், வேலை செய்ய வருபவர்கள் என்று எல்லோரும் படித்து தேர்வு எழுதும்படி இருக்கவேண்டும்.
6. அரசுப் பள்ளிகளில் class in-charge என்னும் ஆசிரியர் தான் பயில்விக்கும் பாடத்தோடு ஆங்கிலப் பாடத்தையும் ஒப்புக்காக பயில்விக்கும் முறையை ஒழிக்கவேண்டும். முறையாக ஆங்கிலம் கற்றவர்கள் ஆங்கில ஆசிரியர்களாக நியமிக்கப் படவேண்டும். ஆங்கிலத்தை ஒரு மொழியாக ஒழுங்காகப் படிக்காமல் தமிழ்வழியில் படித்தவர்களால் உயர் கல்வியை ஆங்கிலத்தில் தொடரமுடியாது.

இராம.கி said...

அன்பிற்குரிய சுந்தரவடிவேல்,

உங்கள் கருத்திற்கு நன்றி.

அன்பிற்குரிய அருண்,

ஆங்கிலம் கற்கக் கூடாது என்று யாரும் சொல்லவில்லை. ஆங்கிலத் தாக்கத்தில் தமிழைக் கிழே தள்ளாதீர்கள் என்று மட்டுமே சொல்லுகிறோம்.

அன்புள்ள பெயரில்லாதவருக்கு,

உண்மை. தமிழில் மட்டுமல்ல, மற்ற இந்திய மொழிகளுக்கும் இந்தத் தாக்கம் இருக்கிறது. அவற்றை அந்த மொழி பேசுவோர் எப்படி எதிர்கொள்ளுகிறார்கள் என்பது முகன்மையான செய்திதான். திண்ணையில் சுகுமாரன் கட்டுரையைப் படித்தேன். இரோப்பில் 20/25 ஆண்டுகளுக்கு முன் நாலாண்டுகள் வாழ்ந்திருக்கிறேன். அதற்கு அப்புறமும் பலமுறை போய்வந்திருக்கிறேன். அவர்கள் பழக்கம் தெரியும். அதையெல்லாம் சொன்னாலும், சில அடிமைக்காரர்கள் உணர்ந்தது மாதிரித் தெரியவில்லை. அவர்களுக்குத் தமிழ் அழிந்து போவது ஒரு பொருட்டாய்த் தோன்றவில்லை.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய அரை பிளேடு,

உங்கள் கருத்திற்கு நன்றி.

மேலே, Floraipuyal க்கு எழுதிய பின்னூட்டில் கலைச்சொல்லாக்கம் பற்றி ஒரு சில சொல்லியிருக்கிறேன். பொள்ளிகை பற்றி ஒரு தனிப்பதிவு போடுவதாகவும் சொல்லியிருக்கிறேன். கொள்கை என்பது policy க்குச் சரியான சொல் இல்லை. முடிந்தால் மேலே அந்தப் பின்னூட்டில் நான் கொடுத்திருக்கும் வாக்கியத்தைத் துல்லியமாகத் தமிழாக்கிப் பாருங்கள். உங்களுக்கு நான் சொல்லுவது ஒருவேளை புரியலாம். மேலோட்டமாய்த் நமக்குத் தெரிந்த சொற்களையே வைத்து "adjust பண்ணி, make up பண்ணித்" தமிழில் ஒப்பேற்ற என்னால் முடியாது என்று நினைக்கிறீர்களா? நன்றாகவே முடியும். அப்படிச் செய்தால், தமிழ் காலத்திற்கும் வளராது. தமிழ்நடையில் துல்லியமாய்ப் பேசுவதற்குச் சொற்கள் தெரியாமல் தான் "பண்ணித்" தமிழ் பல இடத்தும் பரவிக் கிடக்கிறது. பண்ணித் தமிழ் பேசாத தமிழரைப் பார்ப்பது அரிது.

அது போல villain என்பதை வில்லன் என்று எழுதுவதும் ஒரு ஒப்பேற்றல் தான்; பண்ணித் தமிழ் தான். இந்த ஒப்பேற்றல் வேலை சரியில்லை என்பது என் நிலைப்பாடு. சரியென்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் உகப்பு; நான் சொல்லுவதற்கு எதுவும் இல்லை.

பண்பலை என்ற சொல் எனக்கு விளங்கவில்லை. (அதே பொழுது frequency modulation க்கு இணையாக அது பயன்படுகிறது என்று அறிவேன்.) எதனால் பண்பலை? எப்படிப் பண்பலை? ஏன் பண்பலை? பண்பல்லாத அலை ஒன்று இருக்கிறதா? அப்புறம், Amplitude modumation க்கு என்ன சொல்லுவது? பண்பலை என்று சொல்லுவதன் வழி என்னவகைப் பூதியல், என்ன ஏரணம், கற்பிக்கப் படுகிறது? - என்ற கேள்விகள் எழுகின்றன. அதற்கு frequency modulation என்றே போட்டு பண்ணித் தமிழ் பயன்படுத்தலாமே? பண்ணித் தமிழை use பண்ணினால், இப்படியெல்லாம் explain பண்ணிக் கொண்டு, argument பண்ணிக் கொண்டு இருக்க வேண்டாமே? வலையுலக நக்கல்காரர்களையும் satisfy பண்ணியது போல் இருக்குமே? என்ன நான் சொல்லுவது?

அடுத்து, தமிழில் கட்டுரை எழுத அடைப்புக் குறிக்குள் ஆங்கிலம் தேவையா என்று கேட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு கொஞ்சம் வரலாறு தெரியாதென்று நினைக்கிறேன்.

பல்கலைக் கழகம் என்ற சொல் முதலில் பரிந்துரைக்கப் பட்டபோது, அது பெரிதும் புழக்கத்தில் வரும் வரை, சர்வ கலாசாலை என்றோ university என்றோ அடைப்புக் குறிக்குள் கொடுக்கப் பட்டே வந்தது. நாளாவட்டத்தில் பல ஆண்டுகளுக்குப் பின் அடைப்புக் குறிப் பழக்கம் அந்தச் சொல்லுக்கு நின்றது. இதே போல பேருந்து, மிதிவண்டி, நாளிதழ் போன்ற நூற்றுக்கணக்கான சொற்களுக்கும் அடைப்புக் குறி போடுவது ஒரு காலத்தில் இருந்து பின் நிறைய ஆண்டுகளுக்குப் பின் நின்றது, இன்று ஊரெல்லாம் பரவிக் கிடக்கும் இயற்பியல் என்ற சொல்லை என் முயற்சியில் உருவாகி (அது இயல்பியலாய்த் தொடங்கித் தவறான முறையில் திரிவு கொண்டு இயற்பியல் என்று ஆகிப் போனது; இப்பொழுது இயல்பியல்/இயற்பியல் என்பதைக் காட்டிலும் பூதியல் என்ற சொல்லையே நான் புழங்குவது வேறு கதை), மற்றவருடன் சேர்த்து முதன்முதலில் கோவை நுட்பியற் கல்லூரியில் பரிந்துரைத்த போது, முதலில் அடைப்புக் குறி போட்டுத்தான் இருந்தோம். இன்று பாழாய்ப் போன மிடையங்கள் வரை பரவிவிட்டது; எனவே யாரும் அதற்கு அடைப்புக் குறி போடுவதில்லை. அதே போல நான் பரிந்துரைத்த மட்டுறுத்தர், பின்னூட்டு, நுட்பியல் போன்ற வலையுலகச் சொற்களுக்கும் இன்று அடைப்புக் குறி தேவைப்படுவதில்லை. அதுபோலத் தான் மற்ற சொற்களுக்கும், அவற்றைப் புழங்கப் புழங்க, அடைப்புக் குறி தேவைப் படாது. இராம.கி, அடைப்புக் குறி போடுவதை ஒரு சிலர் நக்கலடிக்கலாம். நகைக்குறி போடலலம். அந்த நக்கலை ஒதுக்கித் தள்ளுகிறேன். நக்கல் தவிர்த்து இவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்?

தமிழில் எழுதுவது என்பதை ஏதோ "பொதுஜன ஊடகம், பத்ரிகை" (அப்படித்தானே நீங்கள் சொல்லியிருக்கிற முறைப்படி எழுதவேண்டும்?) போன்றவற்றில் எழுதுவது என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் போலும். நான் "பஜார் தமிழ், ஜுனூன் தமிழ்" எழுதுவது பற்றிச் சொல்லவில்லை. தமிழின் வழியாக அறிவியற் சிந்தனை பெருக வேண்டும் என்று முயலுகிறேன். Amplitude modulation, Frequency modulation, radio, communication போன்றவற்றைத் தமிழில் கற்றுப் புரிந்து ஓர் அறிவியலாளன், ஒரு நுட்பியலாளன் உருவாக வேண்டும் என்று எண்ணுகிறேன். அந்த அறிவியல், நுட்பியல் வல்லுநர்கள் ஆங்கிலத்திலும் கூட அதை வெளிப்படுத்தத் தெரியவேண்டும் என்று எண்ணுகிறேன். அவர்களுக்கு இரு சொற்களும் கூடியவரை தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் மட்டுமே எல்லாம் இருந்தால், அவர்களுக்குப் புரிதலும், பின்னால் தற்சிந்தனைத் தூண்டலும் ஏற்படாது என்று எண்ணுகிறேன். நான் சொல்லுவது ஆங்கிலம் அல்லாத மற்ற நாடுகளில் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. இது ஏதோ ஒரு "கம்ப சூத்திரம்" அல்ல, அர்த்தம் புரியாமல் மலைத்து நிற்பதற்கு. வெறுமே அறிவியல், நுட்பியல் எழுத்தர்களையும், கூலிகளையும் உருவாக்காமல், தமிழரிடையே சிந்தனையாளர்களை உருவாக்க வேண்டுமானால், நான் சொல்லுவதுச் செய்தால் தான் இயலும். [இப்படி நான் சொல்லுவது என் பட்டறிவால் என்று கொள்ளுங்கள். ஒரு நுட்பியலாளனான நான், இன்று நேற்றல்ல, ஒரு 44/45 ஆண்டுகள் கலைச்சொல்லாக்கத் துறையில் இருந்து வருகிறேன். பல்வேறு படிநிலைகளை அதிற் கடந்து வந்திருக்கிறேன். பொதுநிலைக் கட்டுரைகளும், உயர்நிலைக் கட்டுரைகளும், ஆய்வுக் கட்டுரைகளும் தமிழில் செய்தவன் தான். எந்த இடத்தில் எப்படிச் செய்ய வேண்டும் என்று அறிந்தவன் தான். இதில் வெற்றியும் உண்டு; தோல்வியும் உண்டு.]

புதிய புதிய சொற்களை யாரும் வேலையில்லாமல் படைத்துக் கொண்டிருக்கவில்லை. அவற்றின் பொருத்தப் பாடு இல்லாத போது புது ஆக்கம் எழுகிறது. அவ்வளவு தான். ஈருருளி என்ற சொல் மறைந்து மிதிவண்டி என்பது வந்தது பொருத்தப்பாடும், படியாற்றமும் கருதித் தான். இயக்குநர் என்பது இப்பொழுது மறைந்து நெறியாளுநர் என்பது பரவிக் கொண்டிருக்கிறது. "அறிவியல் கலைச்சொற்கள் வரலாற்று அகராதி (1851-1950)" என்ற பொத்தகம் தி பார்க்கர் நிறுவனத்தால் 2002 இல் வெளியிடப்பட்டது. அதில் frequency என்ற சொல்லுக்கு இணையாய் 1932 இல் இருந்து 1949க்குள் பரிந்துரைக்கப்பட்ட சொல்லாக்கங்களைக் குறித்திருக்கிறார்கள். அவை: லோலமாத்திரை, ப்ரீக்வன்ஸி, அதிர்ச்சியளவு, தடையளவு, ஆட்டவிரைவு, அடுக்கம், அலையதிர்ச்சி, மின்அடுக்கம், ஒலியின் அடுக்கம், அதிர்வு எண் என மொத்தம் 10 சொற்கள். 1950க்கு அப்புறம் கொடுக்கப்பட்ட சொல்லாக்கங்கள் இன்னும் பலவாய் இருந்திருக்கலாம். இப்படிச் சொற்கள் மாறுவது ஒன்றும் புதிதில்லை. ஒரு சொல் குமுன அறிவிற்குள் வந்துசேர நெடுங்காலம் ஆகலாம். அதற்காக மாணவர்களின் படிப்புக் கெடுவதில்லை. புதியவர்கள் புதுச்சொல்லைப் புழங்கிக் கொஞ்சங் கொஞ்சமாய் ஒரு செந்தரச் சொல் அமையும்.

பிழைப்புக்கு ஆங்கிலம் தேவை என்பதை யாரும் மறுக்கவில்லை. "ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டிவிடக் கூடாது" என்று தான் பாடுபடுகிறோம்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய பூதப்பாண்டியன்,

உங்கள் கருத்திற்கு நன்றி.

தமிழ்நாடு இந்தியாவில் ஒரு மாநிலமாய் இருப்பது பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். அதைப் பற்றிக் கருத்துச் சொல்ல என்னால் இயலாது. நான் தமிழன், கூடவே இந்தியன், என்ற கருத்துடையவன். தமிழ்நாடு பிரியத் தான் வேண்டும் என்று சொல்லாதவன்; இன்றைய அரசியல் அமைப்பைச் சற்றே மாற்றி அமைத்தால், தமிழர் நலம் பேண முடியும் என்றே எண்ணுகிறவன். தவிர, ஆங்கிலத்தை அடியோடு அகற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவனும் இல்லை.

ஆங்கிலம் தவிர்த்து இன்று உலகில் வாழ முடியாது என்று ஆகிவிட்டது. எனவே அதை எம் மக்கள் அறிந்து தம் வாழ்வு முன்னேற்றத்திற்குப் பயன்படுத்துவது இயல்புதான். அதே பொழுது, தமிழுக்கு ஊறு செய்யும் அளவிற்கு ஆங்கிலத் தாக்கம் கூடாது என்று எண்ணுகிறேன்..

அன்புடன்,
இராம.கி.

அன்பிற்குரிய கண்ணபிரான்,

பொள்ளிகை என்று சொல்லுவது அச்சத் தமிழ் இல்லை.
ஆழ்ந்த யோசனைக்கு அப்புறம் தெரிவித்த சொல் தான். பொள்ளிகை என்ற சொல்லாக்கத்தைப் பற்றித் தனிப்பதிவு எழுதுவேன். policy என்பதற்குக் கொள்கை என்பது சரிவராது. [project என்பதைப் போல policy என்பதும் ஒரு கடினமான சொல்லே. என்ன செய்வது? தமிழில் அதற்கு ஒரு சிந்தனை வளர வேண்டும். project யைத் திட்டம் என்பது போலத் தான் policy என்பதைக் கொள்கை என்று சொல்லுவதும். என்னைப் பொறுத்தவரை இரண்டும் மொண்ணைச் சொல்லாக்கங்கள்.]

அதே போல, வில்லன், பண்பலை என்று சொல்லுவதும் சரியான பயன்பாடுகள் அல்ல. வில்லன் என்பதற்குத் தமிழில் என்ன பெயர் சொல்லுவீர்கள்? கெட்டவன் என்றா? கேடன் என்றா? பகைவன் என்றா? சூழ்ச்சிக்காரன் என்றா? நாயகனுக்கு எதிராளி என்றா? ஓர் ஒற்றைச்சொல் எனக்குத் தெரியவில்லை ஐயா! "வில்லன்" என்ற கருத்தீட்டிற்கு இணையான ஒரு தமிழ்ச்சொல் நீங்கள் சொல்லுவீர்கள் என்றால், நான் தண்டனிட்டுத் தெரிந்து கொள்ளுகிறேன்.

அதே போல பண்பலை என்பதும் ஓர் ஒப்பேற்றுச் சொல் தான். director என்பதை இயக்குநர் என்று அரைகுறையாய் 40 ஆண்டுகளுக்கு முன் யாரோ ஒருவர் மொழிபெயர்த்தது போல் தான், frequency modulation என்பதற்குப் பண்பலை என்று சொன்னதும். இது போன்ற அரைகுறைச் சொல்லாக்கங்கள் இன்று மிகுந்து கிடக்கின்றன. மேலே அரைபிளேடுக்கு எழுதிய மறுமொழியைப் படியுங்கள்.

வெகு எளிதில் பொள்ளிகை போன்ற சொல்லாக்கங்களைக் கடிந்து கொள்ள முடியும். (நாளைக்கு என் பரிந்துரையையும் யாரோ ஒருவர் குறைசொல்ல முடியும் என்று அறிவேன். சிந்தனை நம்மிடையே ஊறும் வரை, அதன் பயன்பாடு ஆழப்படும் வரை, சொல்லாக்கங்கள் ஒன்றை மறுத்து இன்னொன்று எழத்தான் செய்யும்.) "எளிமையே இனிமை, எளிமையே வலிமை" என்ற முன்னெடுப்பு வாசகங்களையும் சொல்லிவிட முடியும்.

எளிமையை நாடுவது ஒரு நல்ல கடைப்பிடி தான். ஆனால் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்; எளிமை என்பது ஒரு முற்று முழுதான கருத்தீடா? அன்றி அறிதல்/அறியாமையின் பாற்பட்டதா? எனக்குச் சற்றும் அறிவில்லாத ஓர் இயலில் நீங்கள் அடிப்படையில் இருந்து சொன்னால் கூட, எனக்கு அது எளிமையில்லதாய்த் தானே தெரியும்? எனக்கு அறிவு கூடக் கூட எளிமையின் அளவீடு, வரையறை, கூடாதா, என்ன? எது எளிமை என்ற வாதத்திற்குள் நான் இப்பொழுது போக விரும்பவில்லை என்றாலும், அது ஓர் உறவாட்டுப் பொருண்மை கொண்டது என்று முன்னுரைக்கவே ஆசைப்படுகிறேன்.

இன்றைக்குப் பல புலனங்களில் வரும் ஆங்கிலக் கட்டுரைகளில் இருக்கும் துல்லியம் தமிழில் சொல்லும் போது அமையாமல் பூசி மெழுகுவதாகவே இருக்கிறது. அது மெய்யியல், அறிவியல், குமுகவியல், இன்னும் இது போல விதப்பான இயல்களில் இல்லை. அப்படிப் பூசி மெழுகி இருப்பது வருந்தத் தக்கது. நமக்குத் தெரிந்த 2000/3000 சொற்களையே வைத்துக் கொண்டு, குண்டுசட்டிக்குள் குதிரையோட்டி, சுற்றி வளைத்து ஒவ்வொன்றையும் சொல்லிக் கொண்டிருப்பது நம்மை எங்கும் கொண்டு சேர்க்காது.

உங்களுக்குப் பிடித்த ஓர் ஆங்கிலக் கட்டுரையை எடுத்து அதில் இருக்கும் ஒரு விதயத்தை அப்படியே தமிழில் புத்தாக்கம் செய்து பாருங்கள் நான் சொல்லுவது சட்டென்று புரியும். (எளிமை, எளிமை என்று சொல்லுகிறீர்களே? எளிமைக்கு எதிர்ப்பதமாய் எளிமையின்மை என்று சொல்லாமல் ஒரு சொல்லைச் எண்ணிப் பாருங்களேன். நாம் எப்பேற்பட்ட சிக்கலுக்குள் இருக்கிறோம் என்று விளங்கும். simple என்ற ஒரு சொல்லுக்கு இணையாய்த் தமிழ்ச்சொல்லைக் காணமுடியாமல் நான் தவித்ததுண்டு ஐயா.)

அன்புடன்,
இராம.கி.

Vijayakumar Subburaj said...

> "எப்பொழுது பார்த்தாலும், இராம.கி.யே
> விளக்கிக் கொண்டு இருக்க வேண்டும்;
> நாங்கள் தமிழில் இருக்கும்
> கலைச்சொற்கள் சிக்கலுக்கு
> ஒரு துரும்பும் எடுத்துப்
> போட மாட்டோம்; அதே பொழுது,
> சவடாலாய்க் கேட்டுக் கொண்டு,
> முடிந்தால் நக்கலடித்துக் கொண்டு
> இருப்போம்"

:)

தமிழ் பற்றி அறிய விரும்புபவர்கள் படிக்க வேண்டிய நூல்களைப் பரிந்துரைக்கவும். நீங்கள் படித்த நூல்கள் பற்றி ஒரு பதிவில் பேசினால் பலருக்கும் பயன்படலாம். நன்றி.

இராம.கி said...

இயற்பெயரைத் தெரிவிக்க விரும்பாது, இராமகிருஷ்ணன் என்ற புனைவில் மூடி மறைந்து கொள்பவரே! (உங்கள் பதிவு ஏதொன்றையும் இந்தப் பெயரில் இதுகாறும் படித்தேன் இல்லை :-))

ஆங்கிலத்தின் தாக்கம் நாளும் கூடிக் கொண்டுதான் இருக்கிறது என்று ஒப்புக் கொண்டு, அடுத்த பத்தியிலேயே, "ஆங்கில வார்த்தைகளை தமிழ் அகராதியில் ஏற்றிக் கொண்டு முன்னேற வேண்டும்" என்று சொன்னீர்கள் பாருங்கள். உங்கள் முரண் உங்களுக்கே தெரியவில்லையா? அப்படிக் கலந்து கொண்டே போகும் மொழிக்குத் தமிங்கிலம் என்று பெயர்; தமிழ் அல்ல.

நான் சொல்லுவது புலம்பலா, அன்றி உண்மையா என்று எதிர்காலம் சொல்லட்டும். உங்களிடம் தமிழ்ப் புழக்கம் கூடவேண்டும் என்று பேசுவது செவிடன் காதில் சங்கு ஊதுவது போலவே அமையும். நான் சொல்லுவது தமிழருக்கு; தமிங்கிலருக்கு அல்ல.

வெற்றுவேட்டுக்கும் விண்ணாரத்துக்கும் குறைச்சல் இல்லை என்பார்கள் எங்கள் ஊர்ப்பக்கம்.

தமிங்கிலராகிய நீங்கள் உங்கள் மொழியைக் கையாளுங்கள் :-) அதுபற்றிச் சொல்ல எனக்கு அருகதை இல்லை :-) ஆனால், அதிலாவது, உங்கள் முகத்தை வெளிக்காட்டிப் புதியது ஏதேனும் கொணர்ந்து, நிலைநாட்டி, அப்புறம் சவடால் விடுங்கள்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

"என்னுடைய பின்னூட்டத்திற்கு அளித்த பதிலில் கூட என்னுடைய பின்னூட்டத்தை "//" போட்டு குறிப்பிடாத உங்களுடைய தன்மானத்துக்கு தலை வணங்குகிறேன் (!!!)" என்று

எழுதிய பெயரில்லாதவரே!

பெயரைச் சொல்ல விரும்பாது, தன்னை மூடி மறைத்துக் கொண்டு, அதே பொழுது, எதிராளி "//" என்று குறிப்பிடவேண்டும் என்று எதிர்பார்க்கும் தன்மானத்திற்கு முன்னால் என் மானம்

எம்மாத்திரம்? பின்னூட்டிற்கு ஒரு புனைப்பெயராவது வைத்துக் கொண்டால் அந்தப் பெயரை நான் அழைக்க முடியுமல்லவா?

சரி, உங்கள் பின்னூட்டிற்கு வருவோம். வெறுமே "ஆங்கில வார்த்தையின் முதல் மூன்று அல்லது நான்கு எழுத்துக்களை அப்படியே ட்ரான்ஸ்லிடெரேட் செய்து" அதோடு சில தமிழ்

ஈறுகளைச் சேர்த்து நான் சொல்லாக்கம் செய்கிறேன் என்று கூறுவதில் இருந்து நீங்கள் என்னைப் படித்ததில்லை என்று தெரிகிறது. அப்படியே படித்திருந்தாலும் மேலோட்டமாய்ப்

படித்திருக்கிறீர்கள் போலும். என்னுடைய பல்வேறு ஆக்கங்கள், மடற்குழுக்களிலும், என் பதிவிலுமாய் விரவிக் கிடக்கின்றன. அதில் என் சொல்லாக்க விளக்கங்களை அங்கங்கே

தந்திருக்கிறேன். முடியுமானால் படித்துப் பாருங்கள். ஒவ்வொரு புதியவருக்குமாய் அரிச்சுவடியில் இருந்து தொடங்க இயலாது அல்லவா? அந்தப் பக்கம் ஈடுபாடு காட்டினால், இந்தப்

பக்கம் நெகிழ்ந்து கொடுக்கும். அதை விடுத்து "எடுத்தேன், கவிழ்த்தேன்" என்றால் விடைத்துக் கொண்டுதான் போகும்.

ஒரு 44/45 ஆண்டுகள் மொழிநூல் பலவற்றை ஆய்ந்த பட்டறிவில், சொற்களின் பிறப்பில் தோய்ந்த வகையில், "தமிழிய மொழிகளுக்கும், இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் இடையே

பல வேர்ச்சொற்கள் சிற்சில பலுக்கல் வேறுபாடோடு இணையாய் அமைந்திருப்பதைப்" பலமுறை நான் பார்த்திருக்கிறேன். அவற்றை என் கட்டுரைகளில் குறிக்கவும் செய்திருக்கிறேன்.

இந்தச் சிந்தனை எனக்கு மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் ஆய்வுகளில் இருந்தே தொடங்கியது. [இன்றைக்கு என் ஆய்வுகள் பாவாணரில் இருந்து சற்றே வேறுபட்டிருக்கலாம்.]

இந்த வேர்ச்சொற் தொடர்பு எப்பொழுது இந்த மொழிக்குடும்பங்களிடையே ஏற்பட்டிருக்கலாம் என்று எனக்குச் சட்டென்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட

அளவில் பொருளொடு சேர்ந்த சொல்லொப்புமைகள் வியக்கத் தக்கதாய் இருக்கின்றன என்பது ஆழப் பார்த்தால் புலப்படும். அடிப்படையான மாந்த உறுப்புக்களில் இருந்து,

விலங்காண்டி நிலையில் இருந்திருக்கக் கூடிய ஆயுதங்கள், நடையுடைகள், வினைகள், பெயர்கள் எனப் பலவும் ஒத்துப் போகின்றன. பொது மொழியானது பண்பட்ட நிலையில், இந்த

மொழிக்குடும்பங்கள் பிரிந்திருக்கலாமோ என்ற எண்ணமும் ஆய்வின் ஊடே எழுகிறது.

அப்படி அறிந்த வேர்ச்சொற்கள், அவற்றில் கிளைத்த சொற்கள் ஆகியவற்றைத் தொகுத்து ஒரு தொகுதியை எதிர்காலத்தில் வெளியிட முயலுவேன். தற்போது நான் செய்துகொண்டிருப்பது

பட்டகைப் பேறுகளில் [empirical facts; அய்யய்யோ, எம்பிரிகல் பாக்ட்ஸ் என்று 'புரியக் கூடிய தமிழில்' எழுதாமல், ஆங்கிலச்சொல்லைப் பிறைக்குறிக்குள் போட்டு ஆங்கிலம்

வளர்த்துவிட்டேனே, :-)] அறிந்தவற்றை அப்படியே சொல்லிக் கொண்டு போவது தான். இன்னும் தேற்ற நிலைக்கு நான் வரவில்லை.

என்னுடைய கட்டுரைகளைக் கொஞ்சமாவது படித்திராமல், கிடுக்க முனையும் நீங்கள் transliteration என்பதற்காவது தமிழ்ச் சொல்லைத் தெரிந்து வைத்துக் கொள்ளலாம். அதை

எழுத்துப் பெயர்ப்பு என்று சொல்லுவார்கள். [வெறுமே ட்ரான்ஸ்லிடெரேட் என்று எழுத்துப் பெயர்த்து எழுதினால் எப்படி? அதே போல நியாபகம் அல்ல; ஞாவகம்; நியாபகம் என்பது நம்

பேச்சில் வரும் கொச்சை; பேச்சுவழக்கில் இடம் அறிந்து அதைப் பயன்படுத்துவது நல்லது. எல்லாவிடத்தும் இதைப் பயன்படுத்தினால், அப்புறம் ஞாவகம் என்ற சொல்லே மறந்து

போகும். கொச்சையை எங்கு பயன்படுத்த வேண்டும், எங்கு பயன்படுத்தலாகாது என்பது கூடத் தமிழ்நடையில் தெரிந்து கொள்ள வேண்டிய மரபு.]

transliteration என்ற சொல்லிற்குள்ளேயே நான் சொல்லும் தமிழ் வேர்ச்சொல் இணை இருக்கிறது. transliteration என்ற சொல் எதிலிருந்து பிறந்தது என்று ஏதேனும் ஓர் ஆங்கில

சொற்பிறப்பு அகரமுதலியில் பாருங்கள்; littera என்ற இலத்தீன் சொல் உங்கள் முன்வந்து நிற்கும். அதே பொருளில், அதே ஓசையில், எழுத்து என்ற தமிழ்ச்சொல்லைப் பார்த்தால் நமக்கு

வியப்புத்தான் தோன்றும். letter -யை ஓட்டிய பத்துப் பன்னிரண்டு மேலைச்சொற்களையும் (நான் ஆங்கிலச் சொற்களை என் கட்டுரைகளில் காட்டுவது விளக்குவதற்காக அன்றி வேறு

ஒன்றும் அல்ல, வெவ்வேறு இந்தையிரோப்பிய மொழிகளில் இருந்தும் இணையான தொகுதிகளைப் பார்க்கலாம்.) அப்படியே அதே போன்று தமிழில் ஒரு இணைத் தொகுதியையும்

பார்க்கும் போது, ஒன்று இன்னொன்றில் இருந்து கடன் வாங்கிய தொகுதி அல்ல, எங்கோ ஓர் உறவு இருந்திருக்கிறது என்ற உண்மை புலப்படும். இனி தமிழ்வேரை ஆராய்ந்தால்,

இல்லுதல்>இலுதல்>இழுதல்>இழுத்தல்>இழுத்து>எழுத்து என்ற வளர்ச்சி கொஞ்சங் கொஞ்சமாய் நம்முன்னே விரியத் தொடங்கும். இலக்கு, இலக்கியம், இலக்கணம், எழுத்து என 50,

60 சொற்கள் அடங்கிய முழுச் சொற்குடும்பமும் நம் முன் வந்து நிற்கும். நாம் வியப்பின் உச்சிக்கே போய்விடுவோம். அது எப்படி? இந்தையிரோப்பியக் குடும்பமும், தமிழிய மொழிக்

குடும்பமும் வெவ்வேறு என்று சொன்னார்களே, இவ்வளவு ஒப்புமை காட்டுவதெப்படி?

அதே பொழுது இந்த ஒப்புமைக்கு மீறிச் சிலவகையில் தமிழில் சொற்குடும்பம் விரிந்தும், சிலவகையில் இந்தையிரோப்பியத்தில் சொற்குடும்பம் விரிந்தும் காணப்படும். விதப்பாகக் கடந்த

400 ஆண்டுச் சிந்தனையில் நாம் பின் தங்கிப் போனதும், அதன் விளைவாய், முகப்புச் சிந்தனைகளைச் சொல்லுவதற்கு உகந்த சொற்கள் தமிழில் குறைந்து போனதும் தெளிவாய்ப்

புரியும். இந்த நிலையில் தான் வேரை மட்டும் எடுத்துக் கொண்டு, நம் பட்டறிவுக்கு ஏற்ப, அதே பொழுது இந்தையிரோப்பியச் சொற்களின் சிந்தனையையும் பொருந்தி வருமாப் போல

சொற்களைப் பரிந்துரைக்கிறேன். இதில் எத்தனை நிற்கும், எத்தனை மறையும் என்று என்னால் சொல்ல இயலாது. இருந்தாலும் முயலுகிறேன்.

இப்படிப் பரிந்துரைத்த ஒன்றுதான் பொள்ளிகை என்ற சொல்லும். இந்தச் சொல் பற்றித் தனியே பதிவு போடுவதாய் உறுதியளித்திருக்கிறேன்; செய்வேன்.

presentation பற்றியும் கதைத்திருக்கிறீர்கள். பரத்திக் காட்டுதல் என்பது பலரும் அறியச் சொல்லுவது. பரத்திடுதல்>பரத்தீடு என்ற ஆக்கம் அதன் வழிப்பட்ட சொல் தான். தமிழிய

மொழியான மலையாளத்தில் "பரயு" என்று சொன்னால் பலரறியச் சொல் என்றே பொருள். பரப்புரை என்று தமிழில் சொல்லுவதும் பலரறியச் சொல்லும் உரை தான். நம்முடைய மொழிச்

சொற்களின் உள்ளாழம் உணராமல், முட்டாள்தனமாக முட்டிக் கொண்டு வந்தால் எப்படி? பரத்தீடு உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் presentation என்பதற்கு மாற்றுச் சொல்

சொல்லுங்கள்; அதை விடுத்து நொள்ளை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி? இது போன்ற மாயியார்த்தனங்களைப் பெரிதும் பார்த்தாயிற்று. சமயங்களில் கோவமே வருகிறது.

கட்டுமானப் போக்கில் உரையாடாமல், சிதைக்கும் போக்கிலேயே உரையாடுபவர்களைக் கண்டால் பொறுமை இழந்து போகிறது.

நண்பரே! சொற்களைப் பரிந்துரைக்கிறோம்; யாரும் கண்டுபிடிப்பதில்லை. எத்தனையோ சொற்கள் என்னைப் போன்ற பலரால் பரிந்துரைக்கப் பட்டிருக்கின்றன. அவற்றை ஏற்பதும்,

ஏற்காததும் "வெள்ளத்தனைய மலர்நீட்டம்".

குழுமம் என்பது இன்றைக்கு large group க்கு இணையாகப் பயன்படும் சொல். (குல்லுதல் = கூடுதல் என்ற வினைச்சொல் உள்ளே இருக்கிறது. குல்>குழு>குழுமு>குழுமம். அம்/மம்

என்பது பெரியதைக் குறிக்கும் ஒர் ஈறு. குழுவில் பெரியது குழுமம்.) அதைச் சிலர் company க்கு ஈடாகவும் பயன்படுத்துகிறார்கள்; நான் செய்வதில்லை. குழும்பு என்பது club.

எல்லாவிதக் கூட்டங்களையும் குழுமம் என்ற ஒற்றைச் சொல்லால் குறிப்பது தமிழை ஒரு மொண்ணை மொழியாகவே ஆக்கும்; கூரான மொழியாக என்றும் ஆக்காது. தமிழைக் கூரான

மொழிநடைக்கு உகந்ததாய் ஆக்கவே என்னைப் போன்றோர் முயலுகிறார்கள். Metropolitan Club contains different groups of people என்ற வாக்கியத்தை எப்படித் தமிழில்

சொல்லுவது என்று முயன்று பாருங்களேன்.

குழும்பு என்பது இன்று நேற்று அல்ல, ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்னேயே தமிழில் புழங்கியிருக்கிறது. உங்களுக்குத் தெரியாததாலேயே, அறியாததாலேயே, அதைக் குறைகூறி விட

முடியாது. பூனை தன் கண்ணை மூடிக் கொண்டதால் உலகம் இருண்டு விடாது, நண்பரே! கிணற்று விளிம்பையே உலக விரிவு என்று எண்ணிக் கொள்ளும் தவளை போலவும்

இருந்துவிட முடியாது. உங்களுக்குத் தெரிந்த ஒரு 3000 சொற்களை (ஒரு பேச்சுக்குச் சொன்னேன்; உங்களுக்குத் தெரிந்த சொற்றொகுதியைக் கணக்கெடுத்திருக்கிறீர்களா?)

மட்டுமே வைத்துக் கொண்டு கலைச்சொல்லாக்கத்தை அளவிடாதீர்கள்.

தமிழ் பேச, எழுதத் தெரிவதாலேயே, தமிழாய்வில் நாம் குற்றம் காண இயலாது. அதே நேரத்தில் தமிழ் ஆர்வம் என்பது தமிழ் ஆய்விற்கு முதற்படி. உலகம் வானளவு பெரியது. உங்கள்

தமிழ்ச் சொற்றொகுதியைக் கூட்டிக் கொண்டு, அப்புறம் பேசுங்கள்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

"அதை அருமையாக அரை ப்ளேடு செய்திருக்கிறாரே, அதற்கு பதில் சொல்லி இருந்தீர்கள் என்றால் இந்த வரிகளுக்கு இன்னும் பொருள் மிகுந்திருக்கும்"

என்று சொன்ன பெயரில்லாதவருக்கு,

மேலே அரைப் பிளேடுவுக்கும், மற்றவருக்கும் எழுதிய பின்னூட்டைப் படித்துக் கொள்ளுங்கள்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய செல்வராஜ்,

பரத்தீடு பற்றிய உங்கள் பின்னூட்டிற்கு நன்றி. மேலே அதைப் பற்றி முன்னிகை அளித்தவருக்கு, உரையாடுவது முகன்மையில்லை. நொள்ளையும் நொகையும் பேசுவதே முகன்மை. அவரிடம் பொதிவாய் உரையாடுவதை எதிர்பார்ப்பது வீண்.

உருப்படியாக ஏதேனும் செய்திருந்தால் அவர் அதைச் சொல்லட்டும். பிறகு பேசலாம். பொதிவாகப் பேசக்கூடியவர் தன் பெயரோடு வந்திருப்பார்; புறம் பேச மாட்டார்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய பாலாஜி,

ஆங்கில மோகத்தினால் பெற்றோர் குழந்தைகளை
மடிக்குழைப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள் என்பது
சரியான வாதமாக உங்களுக்குப் படாமல்
இருக்கலாம். எனக்குப் பட்டது; எனவே எழுதியிருக்கிறேன்.

மாநில வாரியப் பாடத்திட்டம் வழியே தான்
100க்கு 98/99 பேர் இந்த மாநிலத்தில் ஒரு 35
ஆண்டுகளுக்கு முன் படித்தார்கள்; அவர்களுக்கெல்லாம் மொழிப்பயிற்சி அளிக்க உழவகம் என்ற ஒன்று இருந்ததில்லை. (பள்ளி laboratory -இல் ஆய்வெல்லாம் செய்வதில்லையே. அதில் மீண்டும் மீண்டும் ஒன்றைச் செய்து பார்க்கும் வகையில் உழத்திக் காட்டுவார்கள். உழத்திக் காட்டுவதால் தான் labour/laboratory போன்ற சொற்கள் மேலை நாட்டில் எழுந்தன. ஆய்வகம் என்ற முட்டாள் தனமான சொல்லாக்கத்தை இந்த lab - ற்கு வைத்து என்ன பயன் சொல்லுங்கள்?)

அந்தக் காலத்தில் படித்த எங்களைப் போன்றோர் கொஞ்சங் கொஞ்சமாய் உருவாகி ஆங்கிலத்தைத் தடுமாற்றம் இல்லாமல் பேசத்தான் செய்தோம். இத்தனைக்கும் நாங்கள் தமிழ்வழி தான் கற்றோம். இல்லாத கவலைகளும், இனம் புரியாத பயங்களும் இந்தக் கால இளைஞருக்கு எப்படியோ வந்து சேருகின்றன.

1. ஒரே பாடத்திட்டம் வரவேண்டும் என்று
சொன்னீர்கள் பாருங்கள், உங்களுக்கு என் வாக்கு!
2.ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமல்ல, பத்தாம் வகுப்பு வரை தமிழில் மட்டுமே எல்லாப் பாடங்களையும் படிக்கவைக்க வேண்டும் என்று நான் சொல்லுவேன்.
3. உங்களுடைய 4,5,6 ஆம் பரிந்துரைகளை பலரும் ஓர்ந்து பார்த்து முன்னெடுத்துச் செல்வதிலும் எனக்கு உடன்பாடே.
4. உங்களுடைய 3 ஆம் பரிந்துரையில் உள்ள உகப்பு அறிவியலை முற்றிலும் ஆங்கிலத்தின் வழி கற்கவே கொண்டுசெல்லும். அதற்கு மாறாக, அறிவியலைத் தமிழில் வைத்துச் சொல்லிக் கொடுப்பதே நல்லது.
5. அதே பொழுது பேச்சு ஆங்கிலத்தை கட்டாயத் தேர்வாக 8 - ஆவதில் இருந்தே ஆக்க வேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய விஜயகுமார் சுப்புராஜ்,

நான் பரிந்துரைக்கும் சில நூல்களை ஒரு பதிவில் பேச முயலுவேன்.

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

வணக்கம் ஐயா,

"மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்" என்று அடிக்கடி செய்திகள் வெளியாவது உண்டு. அவர்கள் இதன் மூலம் சொல்வது, புற நோயாளியாக இல்லாமல் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சைகளை முடித்து கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டார் என்று எழுதுவார்கள். ஆங்கிலத்தில் "admitted into the hospital" என்று வரும் பதத்தை அப்படியே தமிழில் மாற்றி எழுதுகிறார்கள். மேலோட்டமாக தலைப்பை பார்த்தால் இவர்கள் மட்டும் தான் அனுமதிக்கப்பட்டார்கள் மற்றவர்கள் எல்லாம் விரட்டி அடிக்கப்பார்கள் என்று சொல்வது போல் இருக்கிறது. அது தான் கேட்டேன்....

நன்றி,
பனிமலர்.