Friday, February 22, 2008

சிலம்பில் வரலாறு - 2

2. சிலம்பின் பதிகம்

பதிகம் என்ற சொல்லிற்குத் தமிழிற் பல பொருண்மைகள் உண்டு என்றாலும், பலரும் இரு பொருண்மைகளைக் கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள்.

ஒன்று: தேவாரம், நாலாயிரப் பனுவல் போன்றவற்றில் பத்துப் பத்துப் பாடற்தொகுப்புகளாய் அமையும் தொகுதியைக் குறிப்பது. (பல்து>பத்து>பத்திகம்>பதிகம் என்று இங்கு புரிந்து கொள்ள வேண்டும். சிலபோது பத்திற்கும் மேலே போய், இந்தப் பதிகங்களில் இன்னார் பாடினார் என்று சொல்லுமாப் போல ஒன்றிரண்டு பாடல்கள் நீட்சி காட்டுவதுண்டு.)

இன்னொன்று: சில பழந்தமிழ் இலக்கியங்களில், முன்னுரை போல் வந்து, நூலிற் சொல்லாத சில செய்திகளைச் சொல்லுவதாகும். (பற்றுதல்>பற்றிகம்>பத்திகம்>பதிகம் என்று இந்தச் சொல்வளர்ச்சியைப் புரிந்து கொள்ளலாம்.)

இரண்டாம் வகைப் பதிகமானது, எல்லா இலக்கியங்களுக்கும் அமையாமல், சிலப்பதிகாரத்தைப் போல் ஒரு சிலவற்றிற்கு மட்டுமே அமைந்துள்ளது. இத்தகைய பதிகங்கள் பொதுவாக நூற் படைப்பாளராமல் எழுதப் படாமல், இன்னொருவரால் படைப்புக் காலத்திலேயோ, அல்லது அதற்குப் பின் வேறொரு எடுவிப்பிலேயோ (edition), எழுதப்பட்டுச் சேர்க்கப் பட்டிருக்கலாம். சிலம்பின் பதிகமும் "இது போலத் தானோ?" என்று தோற்றுகிறது; ஆழ்ந்த வாசிப்பில் பார்த்தால், சிலம்புப் பதிகம் இளங்கோவடிகளாலோ, அன்றி அவருடன் இருந்த சாத்தனாராலோ, எழுதப்பட்டதாகக் கொள்ள முடியவில்லை. இத்தகைய முடிவிற்கு நாம் வருவதற்கான காரணங்கள் வருமாறு:

1. இளங்கோவடிகள், சாத்தனார் ஆகிய இருவருமே தன்மை நிலையில் அல்லாது, படர்க்கையிலேயே பதிகத்தினுள் குறிக்கப் படுகின்றனர். தவிர, பதிகத்தின் தொடக்க வாசகம் நம்மைப் பெரிதும் வியக்க வைக்கிறது. உலக வாழ்வைத் தவிர்த்துத் துறவியான ஒருவர், "குடக்கோச் சேரல் இளங்கோவடிகள்" என்று அரசப் பீடும், பெருமையும், பெயரும் சேர்த்து தன்னைத் தானே அழைத்துக் கொள்வாரா என்ற அய்யமும் எழுகிறது.

2. பதிகத்தில், "கண்ணகி கட்புலம் காண விட்புலம் போன" செய்தி, இளங்கோவடிகளிடத்து குன்றக் குரவர் நேரடியாய்ச் சொல்வதாகவும், "இறும்பூது போலும் அஃது அறிந்து அருள் நீ" எனக் குன்றக் குரவர் இளங்கோவடிகளிடம் வேண்டுவதாகவும் சொல்லப் படுகிறது. இதற்கு மாறாய், வஞ்சிக் காண்டத்திலோ,

"கான வேங்கைக் கீழோர் காரிகை
தான்முலை இழந்து தபித்துயர் எய்தி
வானவர் போற்ற மன்னொடும் கூடி
வானவர் போற்ற வானகம் பெற்றனள்"

என்ற செய்தி சேர மன்னனிடம் தெரிவிக்கப் படுகிறது. (அந்த இடத்தில் இளங்கோவும் இருந்தார் என்பதும் உண்மைதான்.) ஒரே செய்தி நூலின் இரண்டு இடங்களில், இரண்டு விதங்களில் வெளிப்படுவது நமக்கு வியப்பளிக்கிறது. அதைச் சற்று ஓர்ந்து பார்ப்போம்.

ஓர் அரசனின் திருவோலக்கத்தில் (தர்பாரில்) அரசனைத் தவிர வேறொருவரை முன்னிலைப் படுத்திப் பேசுவது பழங்கால நிலவுடைமைக் குமுகாயத்தில் வழக்கமில்லை. அரசனிடம் குன்றக் குரவர் செய்தி தெரிவித்த போது, அடிகள் அருகிருந்து கேட்டிருக்கலாம்; ஆனால் வஞ்சிக் காண்டத்திற்கு மாறாய், "அடிகளிடம் குன்றக் குரவர் சொன்னார்கள்" என்று அடிகளை முன்னிலைப் படுத்திப் பதிகம் சொல்லுவது முரணாய்க் காட்சியளிக்கிறது.

அதே போல, வஞ்சிக் காண்டத்துக் காட்சிக் காதையில் அரசனின் முன்னிலையில் சாத்தனார் உரைக்கும் நிகழ்வுக்கு மாறாய், "யானறிகுவன் அது பட்டது" என்று இளங்கோவடிகளை நோக்கிச் சாத்தனார் உரைப்பதாகப் பதிகம் சொல்லுகிறது.

பதிகம் சொல்லும் செய்தி விவரிப்பில், அரசனும் இல்லை, அவன் பரிவாரங்களுமில்லை. ஏதோ அடிகளை மட்டுமே குன்றக் குரவர் கண்டு அவருக்கு மட்டுமே கண்ணகி வானம் புகுந்த செய்தியைக் கூறுவதாய் அமைகிறது.

குறிப்பிட்ட கட்டத்தில் அரசனில்லாமல் வஞ்சிக் காண்ட நிகழ்வுகள் நடந்திருக்குமா? இளங்கோ என்ற துறவியா, வஞ்சிக் காண்ட நிகழ்வுகளை நடத்துபவர்? இது ஒரு முரண் அல்லவா? இப்படியான நிகழ்வு முரண்களை, முற்றிலும் விவரம் அறிந்த இளங்கோ அடிகள் தம் பதிகத்தில் எழுதியிருக்க இயலுமோ? (இவை போன்ற சிந்தனைகளால் தான், சிலம்பின் பதிகம் பெரும்பாலும் வேறு யாராலோ எழுதப் பட்டிருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது.)

3. அடுத்து, கண்ணகி மதுரையை எரித்த கதையைச் சொல்லி அதை "வினை விளை காலம்" என்று சாத்தனார் குறிப்புக் காட்ட, "யாது அவர் வினை விளை?" என்று அடிகள் கேட்டதாகவும், அதற்கு மதுராபுரித் தெய்வம் கண்ணகிக்கு முற்பிறப்புச் செய்திகளைச் சொன்னபோது வெள்ளியம்பலத்து நள்ளிருளில் சாத்தனார் தாம் கிடந்த போது கேட்டதாகவும் பதிகத்தின் வழி சொல்லப் படுகிறது. (வினை விளை என்பது ஒரு மெய்யியற் குறிப்பு. "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்ற கருத்து ஒரு சில நெறியினருக்கு ஒத்துவரும்; மற்றவர்க்கு ஒத்து வராது.)

அதே பொழுது, வெள்ளியம்பலத்து நள்ளிருளில் கேட்டதாய்ச் சொல்லும் இந்த விவரிப்பு கட்டுரைக் காதையில் இது போன்று அமையாது, கதை மாந்தர் வழியாகவே நேராக நீட்டி விவரித்துச் சொல்லப் படுகிறது; சாத்தனாரின் விவரிப்பு கட்டுரைக் காதையில் இல்லை.

4. தவிர, கண்ணகியின் முன் மதுராபதித் தெய்வம் தோன்றிய நேரத்திலும் கட்டுரை சொல்லிய நேரத்திலும் கூடப் பதிகமும், நூலின் உள்ளே வரும் காதைகளும், வேறுபடுகின்றன. (மதுராபதித் தெய்வத்தின் விவரிப்பு இற்றைக்கால அங்கயற் கண்ணியம்மையின் விவரிப்புப் போலவே ஒரு பார்வையில் தோற்றுகிறது. அது நமக்கு வியப்பாகவும் இருக்கிறது. மதுரைக்கும் கயற்கண்ணிக்கும் உள்ள தொடர்பு மிகுந்த நாட்பட்டது போலும்.)

நூலின் உள்ளே, அழற்படு காதையின் முடிவில் தெளிவாகச் சொல்லப் படுவது போல், மதுராபதித் தெய்வம் கண்ணகியின் முன் வந்து தோன்றிக் கட்டுரை உரைக்கும் நேரம், அந்தி விழவு தொடங்கும் நேரம் ("மாலை அயர மனைவிளக்கு உறுத்தும் நேரம்") ஆகும். [கோயில்களில் இன்றைக்கும் அந்திக் கால பூசை தொடங்கும் நேரம் - அதாவது மாலை தொடங்கும் நேரம் 1800 மணியளவு ஆகும்.] கோவலன் இறப்பும், அதைத்தொடர்ந்து பாண்டியன், அவன் பெண்டு ஆகியோர் இறப்பும் முடிந்து, ஊரும், மக்களும் கொந்தளித்து அல்லோகலப்படும் அந்தி நேரத்தில் மதுராபதியின் கட்டுரை கண்ணகிக்குச் சொல்லப் படுகிறது. தவிர அழல் தொடங்கியது மாலை நேரம் தான்; யாமம் அல்ல.

பதிகத்திலோ, மதுராபதித் தெய்வத்தின் கட்டுரை இரவின் நடு யாமத்தில், நள்ளிருளில், சொல்லப்படுகிறது. ஆக, அழற்படு காதைக்கும், பதிகத்திற்கும் இடையே மதுராபதி தோன்றிய காலத்தைக் குறிப்பதில் ஒரு 15 நாழிகை (= 6 மணி நேர) முரண் ஏற்படுகிறது. இப்படி ஒரு காலமுரணை ஒரே ஆசிரியர் செய்வாரா? இருவேறு ஆசிரியராய் இருந்தால் தான், புரிதற் பிழையால் இப்படி ஒரு கால முரண் ஏற்படலாம்.

5. கண்ணகி, கோவலன் ஆகியோரின் முற்பிறப்புக் கதையை மதுராபுரித் தெய்வம் விவரித்ததாய்ச் சாத்தனார் சொல்ல, அதைக் கேட்ட அளவிலேயே,

"அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்"

என்று காப்பியத்தின் குறிக்கோளை சட்டென்று அறிவுத் தெளிவோடு இளங்கோவடிகள் சொல்லி, "நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்" என்று பதிகம் சொல்லுவது நமக்கு ஓர் நாடகத் தனமான கூற்றாகவே தோற்றுகிறது. "அப்படி ஓர் சிந்தனைத் தெளிவு, கதையை முதன் முதலாய்க் கேட்ட அளவிலேயே ஒரு படைப்பாளனுக்குச் சட்டென்று ஏற்பட்டுவிடுமா? கொஞ்சம் அலசி "அந்தக் கதை என்ன குறிக்கோளைக் குறிக்கிறது, எதை எடுத்துச் சொல்லுகிறது, ஊராருக்கு என்ன உணர்த்த வேண்டும் என்றெல்லாம் ஒருவர் நாட்பட ஓர்ந்து பார்க்க மாட்டாரா?" என்ற கேள்விகளும் நமக்குள் எழுகின்றன.

இத்தனைக்கும், குன்றக் குரவோர் வந்து கண்ணகி வானேறிய செய்தியைச் சொல்லும் போது, "உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தல்" என்ற குறிக்கோளைப் பின்னால் நிலைநிறுத்தும் கல்கோள் (கால்கோள் என்ற வாசிப்பு சரியில்லை என்றே புறப்பொருள் வெண்பாமாலை வழியாக உணருகிறோம். அது கால் கோளல்ல; கல் கோள்; கல்லைக் கொள்ளும் செயல்; இந்த வாசிப்புக் கோளாறை இன்னொரு முறை பார்க்கலாம்.), நீர்ப்படை, நடுகல், வாழ்த்து ஆகிய நிகழ்வுகளே கதையில் நடந்திருக்கவில்லை. தவிர, பதிகத்தின் படிதான், சேரன் செங்குட்டுவனும் மற்றோரும் அந்தக் காட்சியிலேயே இல்லையே? "உரைசால் பத்தினியை அரசனும் உயர்ந்தோரும் எப்படி ஏத்தப் போகிறார்கள்?" என்று தெரியாத நிலையில், வஞ்சிக் காண்டக் காதைகளின் தலைப்புகள் இங்கே பதிகத்தில் எப்படி விவரிக்கப் படுகின்றன? படிக்கும் நமக்கு வியப்பாக இருக்கிறது.

6. "முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது
அடிகள் நீரே அருளுக" என்றாற்கு அவர்
........................
.......................
.......................

உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள்
உரைசால் அடிகள் அருள"

என்ற வரிகளில் "உரைசால் அடிகள் அருள" என்று வந்த பின், "அவர்" என்னும் சொல் யாரைக் குறிக்கிறது? புரியவில்லை. தவிர, அரசன் இருக்கும் அவையில், இது போன்று சொல்ல வேறு யாரால் முடியும்? "முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது" என்று அரசன் கூறினால் அதில் ஓர் அமைதி இருக்கிறது; மற்றவர் அதைக் கூற முடியுமோ? இங்கு யார் அதிகாரத்தில் முன்னிலைப் படுத்தப் படுகிறார்கள்? அரசன் தான் இந்தக் கதையை எழுதச் சொன்னதாய் பதிகத்தின் வழி புரிந்து கொண்டால், அப்படி ஒரு கூற்று, வஞ்சிக் காண்டத்துள் எங்கும் வரவில்லையே?

7. .......................................... மதுரைக்
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்
இது,
பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபென்

என்ற பதிகத்தின் முடிப்பு வரிகள் "பதிகத்தை வேறு யாரோ எழுதியிருக்க வேண்டும்" என்று தெளிவாக உணர்த்துகின்றன. இளங்கோ எழுதியிருந்தால், "அடிகள் அருள, சாத்தன் கேட்டனன்" என்று எழுத மாட்டார். "யான் சொல்ல, சாத்தன் கேட்டனன்" என்பதோடு அமைந்திருப்பார். சாத்தன் எழுதியிருந்தால், "அடிகள் சொல்ல, யான் கேட்டேன்" என்று எழுதியிருப்பார். எனவே, உறுதியாகப் பதிகம் என்பது, இளங்கோவாலும், சாத்தனாராலும் எழுதப் படவில்லை. இது யாரோ ஒரு மூன்றாம் மாந்தர் எழுதியது. அதோடு இல்லாமல், வஞ்சிக் காண்டம் வரை கதையை முற்றிலும் படித்த ஒருவர், அதன் விவரங்களைச் சுருக்கி, காதைத் தலைப்புகளையும் தந்து, "கதைக்களன் எப்படித் தோன்றியது?" என்று விளக்க முற்பட்டு, குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளை முன்பின்னாக எடுத்துக் காட்டி, அவற்றில் தன் சொந்தக் கருத்தையும் பொருத்தி (காட்டாக வினை விளை பற்றிய மெய்யியல்), முரண்பட்டு நிற்பதும் வெள்ளிடைமலையாய்த் தெரிகிறது.

இந்தச் சிலம்புப் பதிகம் என்பது நூல் எழுதப் பட்டு மிகுந்த நாட்கள் கழித்தே எழுந்திருக்க முடியும் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. அதே பொழுது அரும்பத உரைக்கும் முன்னால் எழுந்திருக்க வேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

10 comments:

அரை பிளேடு said...

சிலம்புக்கு எழுதப்பட்ட அணிந்துரை அல்லது பதிப்புரை...

வெற்றி said...

பதிவுக்கு மிக்க நன்றி. நல்ல பல சுவையான தகவல்கள் அடங்கிய பதிவு.

G.Ragavan said...

அதாவது இன்னைக்குள்ளவங்க கம்பராமாயணம்...வால்மீகி ராமாயணம்னு படிச்சிட்டு அதுக்கு அவங்க பேரப் போட்டு நூல் எழுதிக்கிற மாதிரி அந்தக் காலத்துல சிலம்புக்கு எழுதீருக்காங்க. சரியா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சிலம்புக்குப் பதிகம் பற்றிய தகவல்கள் அருமை ஐயா!
பதிகம் எழுதப் புகுந்தார், தத்தம் பெயர்களைக் குறித்து விட்டே சென்றிருக்கலாம்! ஆனால் ஏனோ செய்யவில்லை!

//அதாவது இன்னைக்குள்ளவங்க கம்பராமாயணம்...வால்மீகி ராமாயணம்னு படிச்சிட்டு அதுக்கு அவங்க பேரப் போட்டு நூல் எழுதிக்கிற மாதிரி//

@ஜிரா
அப்படி அவங்கவங்க பேரைப் போட்டு எழுதியிருந்தா தான் நல்லா இருக்குமே! சிலம்பில் அப்படி நடக்க வில்லையே!

திருவள்ளுவ மாலையில் வெவ்வேறு புலவர்கள் பெயரோடு தானே இருக்கு!
பிரபந்தங்களுக்குப் பாயிரம் செய்தவர்கள், தனியன்கள் என்று பெயரிட்டுத் தம் பெயர்களையும் சொல்லியே தான் சென்றார்கள்!

ஆனால் சிலம்பு போன்ற இலக்கியங்களில்....ஹூம் அனானி ஆப்ஷன் அப்பவே இருந்திருக்கு போல! :-)

குமரன் (Kumaran) said...

பழந்தமிழ் இலக்கியம் படிக்கத் தொடங்கிய பின் சில நேரம் சிந்தித்த கேள்வி இது ஐயா. பதிகம் என்பதற்கு நீங்கள் சொன்னது போல் தேவார நாலாயிர பனுவல்களில் எடுத்துக் கொள்ளப்படும் பொருளைப் புரிந்து வைத்திருந்தேன். சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களுக்கு முன்னால் இருக்கும் பகுதிகளுக்கு ஏன் பதிகம் என்றொரு பெயர் இருக்கிறது என்று புரியவில்லை. இன்று புரிந்தது.

உலக வாழ்வைத் தவிர்த்துத் துறவியான ஒருவர் அரச பீடும் பெருமையும் தோன்ற தம்மை அழைத்துக் கொள்வாரா என்ற ஐயம் புரியவில்லை ஐயா. தேவார நாலாயிர பனுவல்களிலெல்லாம் பாடியவர்கள் தம்மைத் தாமே பீடுடன் அழைத்துக் கொள்வதில்லையா? அதே போல் தம்மை பீடுடன் அழைத்துக் கொண்டிருக்கலாமே 'இளங்கோ' அடிகளும்?

பதிகம் இளங்கோவடிகளையும் சாத்தனாரையும் படர்க்கையில் சொல்வதை நானும் அவதானித்திருக்கிறேன்.

திருவோலக்கம் - என்ன அருமையான தமிழ்ச்சொல் இது. காத்துத் தந்த வைணவ உரைநூல்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

வினைவிளை காலம் என்பது யான் அறிந்த வரையில் உலகாயத/சார்வாக நெறியைத் தவிர்த்து மற்றைய இந்திய மெய்யியற் நெறிகளில் எல்லாம் ஏற்புடைய கருத்து தானே? எந்த நெறியினருக்கு ஒத்து வராது என்று எண்ணுகிறீர்கள்?

மதுரைக்கும் கயற்கண்ணிக்கும் உள்ள தொடர்பு மிகுந்த நாட்பட்டது போலும் என்ற தங்களின் வார்த்தை எனக்கு வியப்பாக இருக்கிறது ஐயா. சங்க காலம் முதலே அங்கயற்கண்ணி அம்மை மதுரையில் இருக்கிறாள் என்றல்லவோ நினைத்தேன்.

காப்பியத்தின் குறிக்கோளை பதிகம் சொல்லுவதைப் படிக்கும் போது எனக்கும் இதே கேள்வி வந்து புன்சிரிப்பும் தோன்றியது. அந்த மூன்று வரிகளைப் படிக்கும் போது இயல்பாக இருக்காது தான்.

'தெளிவாக' என்று சொல்ல 'வெள்ளிடைமலை' என்ற சொல்லை/சொற்றொடரைப் பயன்படுத்துகிறோம். ஆனால் அந்த வழக்கம் எப்படி வந்தது? அதன் பின்புலம் என்ன? இவையெல்லாம் எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரியுமா ஐயா? இதே பொருளில் 'அங்கைக்கனி', 'உள்ளங்கை நெல்லிக்கனி' போன்றவை புரிகின்றன.

Panainilam said...

ஐயா, வணக்கம்! நீங்கள் தென் கரோலினாவின் பனைநிலத் தமிழ்ச் சங்கத்துக்கு வந்திருந்தபோது பேசியவை பலவற்றை நினைவுகூற வைக்கின்றன உங்கள் எழுத்துக்கள். மிக்க நன்றி. உங்கள் உரையைப் பற்றிய பதிவு ஒன்று இங்கே: http://panainilam.blogspot.com/2008/03/blog-post.html
நன்றிகள் பல! உங்கள் பணி சிறக்கட்டும்.

இராம.கி said...

அன்பிற்குரிய அரை பிளேடு,

பதிகத்தை அணிந்துரை என்று சொல்லலாம்.

அன்பிற்குரிய வெற்றி,

கனிவிற்கு நன்றி

அன்பிற்குரிய இராகவன்,

யாரோ ஒருவர் சிலம்பிற்கு முன்னால் பதிகம் ஒன்றை எழுதியிருக்கிறார், அதற்கும் இளங்கோ, சாத்தனாருக்கும் தொடர்பில்லை; அதனால் பதிகத்தில் சொல்லியிருக்கும் செய்திகளை வைத்து சிலம்பின் காலம், சிலபில் வஞ்சிக்காண்டம் சொல்லும் செய்திகளின் காலத்தோடு முடிச்சுப் போட்டுக் கொள்ளக் கூடாது, குறிப்பாகச் செங்குட்டுவனின் காலத்தோடு தொடர்பு காணக் கூடாது என்று மட்டுமே இங்கு சொல்லுகிறேன்.

அன்பிற்குரிய கண்னபிரான்,

எழுதியவர் தன் பெயரைப் போடாமல் போனார் என்று சொல்லுவதற்கும் இடமில்லை. நமக்கு அது யார் என்று தெரியவில்லை, ஓலை கிட்டவில்லை, என்று நிறுத்திக் கொள்ளுவோமே?

பெயரைத் தவிர்க்கும் உகப்பு இருந்திருப்பதாகவும் கொள்ளலாம். உகப்பு/உகப்பம் = option

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய குமரன்,

பழைய சங்கராச்சாரியார் அருள்மிகு. சந்திர சேகரேந்திர சரசுவதி தன்னுடைய பூருவ வரலாற்றைத் தன் பேச்சுக்களில் தெரியப்படுத்திக் கொண்டதில்லை என்றே சொல்லுவார்கள். அதே போல பழைய குன்றக்குடி அடிகளாரும், துறவு ஏற்பதற்கு முன்னிருந்த வாழ்வை ஒருநாளும் தன் துறவிற்குப் பின்னால் சொல்ல முற்பட்டதில்லை. பொதுவாய்த் துறவில், பூருவ வாழ்வை ஒதுக்கும் வழக்கம் பெரிதும் அழுத்திச் சொல்லப் பெறும். துறவிக்கு அது ஓர் அடையாளம். (பட்டினத்தார் மட்டும் அதில் ஒரு விலக்கு. அவரைப் பற்றிச் சொன்னால் வேறு எங்கோ கொண்டு விட்டுவிடும்.)

இங்கே "குடக்கோச் சேரலாய் முன்னால் இருந்த அடிகள்" என்று சொல்லப் படாமல், "குடக்கோச் சேரல் இளங்கோ அடிகள்" என்று நிகழ்காலம் போலவே பதிகம் பயிலுகிறது. அது கொஞ்சம் மனத்தை நெருடுகிறது. இளங்கோ, ஒரு சேரலாகவே இருந்தாலும் சேரல் என்னும் பெருமையைத் தானே துறந்து வந்தார்? அப்புறம் என்ன வீண்பெருமை? உண்மைத் துறவி சொல்லிக் கொள்ள மாட்டார். சமயக் குரவர் பற்றிச் சொன்னீர்கள். சம்பந்தரும், அப்பரும் தங்களோடு தமிழ் என்னும் பெருமைதான் சொல்லிக் கொண்டார்களே ஒழிய, சிவநெறிப் பரப்பலுக்கு முன் "நான் அப்படி இருந்தவன், இப்படி இருந்தவன்" என்ற பெருமை பேசிக் கொள்ளவில்லையே? அதோடு சமயக் குரவர்கள் சிவநெறியைப் பரப்ப வந்தவர்கள். அதில் ஒரு பரப்புரை இருக்கத்தான் செய்யும். (திருமந்திரத்தில் அவ்வளவு இருக்காது.) இதே போல நம்மாழ்வாரை நினைத்துப் பாருங்கள். அவரெங்கே பெருமை பேசிக் கொள்ளுகிறார்?

வினைவிளை காலம் என்ற கருத்து மெய்யியலில் பேசப்பட வேண்டியது. வினைவிளை காலம் என்பது ஆசீவகத்திற்கும் பொருந்தாததே. ஆனால் செயினத்திற்கும், பின்னால் உபநிடதம் வழிவந்த வேத விளக்கத்திற்கும், சிவநெறி, விண்ணவ நெறிகளுக்கும் பொருந்தும். ஆசீவகம் பற்றி எழுத எண்ணியூள்ள தொடரில் இதைப் பற்றிப் பேசுவோம்.

அங்கையற் கண்ணி என்ற கருத்தீடு சங்க காலத்தில் இருந்ததா என்று என்னால் சொல்ல முடியவில்லை. இப்பொழுது சிலம்பில் அது சொல்ல்ப் பட்டிருக்குமோ என்று வியக்க வேண்டியிருக்கிரது. அவ்வளவு தான். மேலும் ஆழ்ந்து பார்க்க வேண்டும்.

வெள்ளிடைமலை, அங்கை நெல்லிக்கனி போன்ற மரபுத் தொடர்கள் எப்படி, எந்தக் காலத்தில் எழுந்தன என்று என்னால் இப்பொழுது சொல்ல முடியவில்லை.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய பனைநிலத்துக்காரர்களுக்கு,

உங்கள் வருகைக்கு நன்றி. பதிவில் சொன்னது போல உங்களிடையே உரையாடியது, இந்தக் கட்டுரைத் தொடருக்கு, ஒரு தொடக்கம்.

செய்யவேண்டிய பணிகள் மிகுந்துள்ளன. உங்களைப் போன்ரவர்களின் ஆதரவும் ஊக்கமும் உறுதியாகத் தேவை.

அன்புடன்,
இராம.கி.

siddharesearch said...

Respected sir,
can you please exhibit the relationship of tamil culture, siddhamedicine, where i strongly believe via asivakam we can predict the age of siddha medicine which is bound with culture of tamils which is unpredictable