கீழே வருவது 16 சனபதங்களைக் குறிக்கும் ஒரு படம். அதில் உள்ள சிராவஸ்தியைக் குறித்து இந்த இடுகையில் பேசுகிறேன். பாடலிபுத்ரம், வேசாலி, காசி போன்று உச்சத்தில் வைத்துப் பேசப்படும் ஓர் ஊர் சிராவஸ்தியாகும் . தமிழ், பாகதமொழிகளின் வழியே தான் அந்த ஊடின் பெயரைப் புரிந்துகொள்ள முடியும்.
Friday, January 30, 2026
சிராவத்தியும் சிராப்பள்ளியும்
Friday, January 09, 2026
சுந்தா நிலம் (Sundaland) என்ற கண்டம்
தென்கிழக்கு ஆசியா இன்று வெவேறு நாடுகளாய்ப் பிரிந்து இருந்தாலும், ஒரு காலத்தில் அவை சுந்தாநிலம் என்ற கண்டத்தில் இருந்து பிரிந்த நிலங்கள் என்று சொல்வர். இணையத்தில் பார்த்தால், சுந்தாநிலத்தின் சொற்பிறப்பாய், பெரும்பாலும் சங்கதத்தில் உள்ளதாய்ச் சொல்லப்படும் சுத்தத்தை அடையாளம் காட்டுவர்.
The name "Sunda" originates from the Sanskrit word "Cuddha," meaning white. During the Pleistocene era, there was a large volcano named Mount Sunda located north of Bandung in West Java என்ற விளக்கம் தான் அது. தமிழ்வேர் பற்றிய இயலுமைக் குறிப்பே அங்கு இராது. குப்தப் பேரரசிற்கு முன்னால், துணைக்கண்டத்திற்கு வெளியே, சங்கதம் பெரிதாய் கடல் தாண்டிப் போகவில்லை. தமிழ் குறைந்தது பொ.உ.மு 2350 இல் இருந்நே நகர்ந்துள்ளது.
சுல்> சொல் என்பது ஒளியை, மலர்ச்சியைக் குறிக்கும் ஒரு வேர்ச்சொல். 2006 இல் எழுதிய “கொன்றையும் பொன்னுமெ”ன்ற தொடரின் நாலாம் பகுதியில் [http://valavu.blogspot.in/2006/01/4.html] இவ்வகைச் சொற்கள் வரும். சுல்லில் எழுந்த இருபிறப்பிகள் சுல்>சுல்+த்+த்+அம்= சு(ல்)த்தம்> சுத்தம் என்பதும் சுல்+க்+அம்= சு(ல்)கம்>சுகம் என்பதுமாகும். சுத்தம் என்பது தூய்மைப்பொருள் கொள்ளும். சுகம் என்பது நலப்பொருள் கொள்ளும். இரண்டு சொற்களுமே வடமொழியில் புழங்கியவை, ஆனால் தமிழ்வேர் கொண்டவை. சுத்திகரிப்பு = தூய்விப்பு. சுல்> சு(ல்)து > சுதை என்ற வளர்ச்சியில் சுண்ணாம்புக்கல். சுதை = அமிழ்தம் சுதையணைய வெண்சோறு = கம்ப ராமாயணம், குலமுறை. 18. சுதை = பால், சுவை, சுண்ணாம்பு, வெள்ளி வெண்சுதை யிழுகிய மாடத்து (மணி 6:43, வெண்மை; விண்மீன், மின்னல், நெய் ஏனம்
சுர> குரு= வியாழன்; சுரகை = சுண்ணாம்பு சுள்> சுர்> சுரம் = காய்ச்சல்;சுள்ளுதல் = காய்தல்; சுளுந்து தீப்பந்தம்; சுள்ளி = நெருப்புக் குச்சி
சுல்லு = வெள்ளி
சுல் என்பது வெளுப்பைக் குறிக்கும் வேர்ச்சொல். சுல்>சுல்த்து என்பது மறுவுள்ள ஒரு துணியை வெள்ளையாக்குவது. இங்கும் சங்கத முறையில் சுத்திகரம் என்ற தொழிற்பெயர் எழும். தூய்விப்பு என்பது முற்றிலும் தமிழ்.
செழிப்பு, கொழுமை. பொலிவு, நலம், சுகம் என்ற சொற்கள் தமிழில் health ஐப் பொதுவாய்க் குறிக்கும். இந்தச் சொற்களின் உள்ளே புலப்படுவது பொன்நிற ஒளியே. ”அவன் முகத்தைப் பாருங்கள். ஓர் ஒளி தெரிய வில்லையா? அவன் செழிப்பாய்/ கொழுமையாய்/ பொலிவாய்/ நலமாய்/ சுகமாய் இருக்க வேண்டும். இல்லெனில் அவன் முகம் இருளாகாதோ?” என்பது நாட்டுப் புறத்தார் மரபும் கூற்றுமாகும். (இத்தனை சொற்களையும் ஒதுக்கி இன்று சிலர் ஹெல்த் எனக் குறிக்க முற்படுவது முட்டாள் தனம். பல நாளிதழ்களும் அதையே செய்கின்றன. இல்லாவிடில் சுகாதாரம் என்கின்றன. ”ஆதாரம்” அங்கு எதற்கு? புரியவில்லை. சுகத்தின் ஆதாரம் சூழமைவு இல்லையோ? health, cleanliness ஐ விட மேம்பட்டதில்லையா? ”நன்றாய் இருங்கள்” எனில், “clean-ஆய் இருங்கள்” என்றா பொருள் கொள்கிறோம்? அதனின் மேம்பட்ட பொருள் அல்லவா நலம்? மேற்சொன்ன சொற்களில் துல்லியம் நமக்கு வேண்டாமா?.
கொல்>சொல் = சொலிப்பு, ஒளி; சொலித்தல் = ஒளி தருதல்; சொலிதை/ சொலிப்பு = வெளிச்சம். சொல்>solar = சூரியன் ஒளி; சொல்+ஐ = சொலை> சோலை> சுவாலை= flame; சொலி> சுவாலி = ஒளியிடு; இதை ஜ்வாலையாக்கி வடமொழி போல் சிலர் பலுக்குவர். நாமும் அங்கிருந்து இங்கு வந்தது போலும் என எண்ணிக் கொள்வோம். இப்படி நாம் தடுமாறும் சொற்கள் மிகப் பல. சொலை> சோலை = பொன்னிறப் பூக்கள் மலரும் மரங்களைக் கொண்ட காடு. சோலை மலை = அழகர் கோயில்; சொல்=ஒளி, நெல் (மஞ்சளாய் இருக்கும் கூலம்). சொல்> சொன்> சொன்றி = சோறு; சொல்பட> சொற்பட> சொப்பட = நன்றாக. வெளிச்சம் பட; சொற்படுதல் = பலன் மிகுதல்.
சொல்+நம் = சொன்னம்> சொர்னம்> சொர்ணம் = தங்கம், நாணயம்; வழக்கம் போல வடமொழிப் பலுக்கு இங்கு உள்ளே வந்து சேரும்.
சொர்ணம்> சுவர்ணம்> சுவர்ணகா = வடமொழியில் கொன்றைக்கு உள்ள பெயர்.
சொன்னம்> சொன்னல்> சொனாலி = வங்காளியில் கொன்றைக்குப் பெயர்.
சொன்னல்> சொந்தல்> சொந்தால் என்றும் வங்காளியில் வரும். அசாமியிலே சொனாறு என்பார், (அந்தக் காலத்தில் அறுபதுகளில், "சோனாரே, சோனாரே" என ஒரு பேர் பெற்ற இந்தித் திரைப்பாட்டு வரியுண்டு, ஆராதனா என நினைக்கிறேன். ”தங்கமானவளே” என்று காதலியைக் கூப்பிடுவான்.)
சொன்னம்> சொன்னகாரன் = பொன் வேலை செய்யும் தட்டான்;
சொல் +நை = சொன்னை> சோனை> சோணை= தங்க நிற ஆறு. விகாரை மாநிலத்தில் (பீகாரில்), பாடலிபுரத்துக்கு பக்கத்தில் இருக்கும் ஆறு. கங்கையும் சோனையும் அங்கே பண்பாட்டில் முகமை. கங்கை கருப்பு; சோணை வெளுப்பு; தங்க நிறம்;
சொல்+கு = சொக்கு = தங்கம். (சொக்குத் தங்கம்' என்பது இரட்டைக் கிளவி. தூய தங்கம் என்றும் பொருள் கொள்ளும். )
சொக்கு = தூய்மை; சொக்கம் = தூய்மை சொள்> சொகு> சொக்கம்; சொக்க வெள்ளி = தூய வெள்ளி.
சொக்கத் தாண்டவம் = தூய நட்டம்; மதுரைச் சொக்கன் பொன்னானவன்; அதுதான் அவன் நிறம்;
சொக்கிப் போனான் என்றால் சொலிப்பைக் கண்டு வியந்து போனான் என்று பொருள்;
சொக்கம்> சொர்க்கம் = 'பொன்னுலகு' எனும் கற்பித மேலுலகு; இங்கும் வடமொழிப் பலுக்கு வருவதால் குழம்புகிறோம். தங்கம் கிடைக்காத, தங்கம் குறைத்துப் புழங்கிய நாட்டில் சொக்கம் என்ற சொல் எழவே எழாது. பொன்னுலகு எனும் கற்பிதம் முழுக்க முழுக்கத் தமிழ்க் கற்பிதமே.
சொக்கம்> சொகம்> சுகம் = பொலிவோடு மலர்ச்சியோடு இருக்கும் தன்மை; ”சுகமா இருக்கீங்களா?” என்றால் ”சோர்விலாமல் முகத்தில் ஒளிவிடுகிறாற் போல் இருக்கீங்களா?” என்று அருத்தம்.
health இற்கு இப்போது நாம் அச் சொல்லையே புழங்குகிறோம். (இதிலும் சிலர் சொக்கம், சொகம், சுகம் என்று சொல்லாமல் சௌக்கியம் என்று சங்கதமுறையில் ஒலிப்பார். நானும் சிலபோது அறியாமலும், சிலபோது அறிந்தும் சௌக்கியம் பயின்றுள்ளேன். அவ்வளவு சங்கதத் திரிவுகளை நம் முன்னோரும், உறவினரும், ஆசிரியரும் நமக்குள் ஏற்றியிருக்கிறார். மிகவும் சரவல் பட்டே இந்தத் தப்பான பழக்கங்களில் இருந்து வெளிவந்து சொக்கம், சொகம், சுகம் போன்றவற்றைப் பயில வேண்டியுள்ளது.)
மேலையன் ”கொழிதா இருக்கீங்களா?” என்கிறான். கொழுது>கொழிது = health = செழிப்பு, நலம், சுகம்;
சொக்கத்தில் விளைந்த இன்னொரு சொல் சொகுசு = நேர்த்தி, இதம், சிறப்பு. சொகுசுப் பேருந்து என்கிறோமே? சொகுசையும் வடசொல் என்று சிலர் தவறாய்க் கொள்வர்.
Sundaland என்பதை சொலிதை நிலம் என்று சொல்வேன்.
Thursday, January 08, 2026
Rajasekar Pandurangan என்பார் முகநூலில் தொடங்கிய உரையாடல்
"தமிழ் தேசியம்" என்ற சொல்லில் உள்ள நேரடி வடமொழி சொல்லான தேசியம் என்பதை ஏற்போர். தமிழின் திசைச் சொல்லான திராவிடத்தை எதிர்க்கும் மனநிலை ஏன்? - என்று முதலிலும்,
“இவர்கள் கூறும் தமிழ் தேசியத்தில் "தேசியம்", (தேஷ் தேசி சுவதேசி) என்று வடமொழியில் உள்ளதை குறிப்பிட்டால் தமிழில் இருந்து தான் வடமொழி உருவாகியது என்று ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத கூற்றை முன்வைப்பர்கள்” - என்ற அவர் கட்டுரைக்கு நடுவிலும் வரும் 2 கூற்றுக்களைப் பார்த்தேன்.
சற்று அதிர்ந்து போனேன். அவரின் முழுக் கட்டுரையையும் என்னால் மறுத்துக் கிடுக்க (critisize) முடியும் என்றாலும், நேரமின்மையால் அதைத் தவிர்க்கிறேன். பொறுமையாகச் சற்று ஆய்ந்திருந்தால் அடிப்படை உண்மை அவருக்கு விளங்கியிருக்கும்.
desh என்ற சொல் இந்தியத் துணைக்கண்டத்தில் மட்டுமே உண்டு. இந்தையிரோப்பியனில் அதற்கு இணையான cognates கிடையாது. கூகுள் செய்தால், கிடைக்கும் விடையை கீழே கொடுத்துள்ளேன். முதலில் அதைப் படித்து விடுங்கள். அப்புறம் என் விடை கீழே உள்ளது. காரணமில்லாது, ஒரு காலத்தில் திராவிடம் என்ற கருத்தை ஏற்ற எம் போன்றவர் இப்போது எதிர்க்கவில்லை. இனி எம் விடை.
-----------------------------
என் கேள்வி
Are there other Indo-european words corresponding to the word "desh" in Sanskrit?
-----------------------------
அதற்கு கூகுளின் செய் தெள்ளிகை சொல்லும் விடை கீழே.
There are no direct cognates of the Sanskrit word "deśha" (देश), meaning "land, place, or country," in most other branches of the Indo-European language family.
"Deśha" is an Indo-Aryan term, and while Sanskrit is an ancient Indo-European language, not all of its specific words have direct parallels in the European branches (such as Germanic, Romance, or Slavic languages).
The term and its derivatives are primarily found in languages of the Indian subcontinent and neighboring Indo-Iranian regions, such as:
Hindi, Bengali, and other modern Indo-Aryan languages use variations of desh (as seen in names like Bangladesh, "Land of Bengal").
Persian and Avestan, which belong to the Indo-Iranian branch, are close linguistic relatives and share a significant amount of vocabulary and grammatical structure with Sanskrit.
The concept of a "place" or "land" in other Indo-European languages generally stems from different Proto-Indo-European (PIE) roots. For instance, English "land" comes from a different Germanic root, and Latin terra (leading to Romance language words like tierra or terre) also has a separate origin.
Linguists use comparative methods to find cognates based on systematic sound changes from a hypothetical common ancestor (PIE), and in this case, no common PIE root for "desh" has been reconstructed across the diverse European and Indo-Aryan branches.
-------------------------------
இனி என் விடை கீழே தேசம் / தேசியம் என்பது தமிழில் எப்படி உருவானது என்று மட்டும் சொல்கிறேன். இதை https://valavu.blogspot.com/2008/04/2.html என்ற இடுகையில் குறிப்பிட்டிருந்தேன். இங்கு சிலவற்றை மட்டும் வெட்டி, ஒட்டியுள்ளேன்
---------------------------------
திக்கு, திகை, திசை என்று மூன்று சொற்களை ஒரு தொகுதியாகப் பார்க்கலாம். திரும்புதல் என்று முன்பார்த்த வினையின் அடிவேர்ச்சொல் துல்>தில் என்பதே.
தில்> திர்> திரு> திருக்கு,
தில்> திர்> திரு> திரும்பு,
தில்> திர்> திரு> திருத்து
எனப் பல்வேறு ஈறுகள் கொண்ட சொற்களை இங்கு எண்ணிப்பார்க்கலாம். அதே போல தில்> தில்க்குதல்> திக்குதல் என்பதும் to turn என்பதைக் குறிக்கும். ஒவ்வொரு திக்கும் ஒரு turning தான். இன்னொரு வளர்ச்சியில், தொடர்ந்து சீராய்ப் பேசிவந்த ஒருவன் மேற்கொண்டு அதே படி போக முடியாமல் தடுமாறுவதையும் திக்குதல் என்றே திசைப்பொருளில் (ஆனால் சிந்தனை ஒட்டத்தைக் குறிப்பது போல்) ஆள்கிறோம் அல்லவா?
திரிகை என்பது change என்ற பொருளைக் குறிக்கும். திருகு என்ற சொல் கன்னடத்தில் turning, திசை என்பதைக் குறிக்கும்.
திக்கு என்பது திக்கை என்ற பெயர்ச்சொல்லை மேலும் உருவாக்கி, மீண்டும் திகைதல் என்ற வினைச்சொல்லையும் உருவாக்கும். சில இடங்களில் திக்கை என்பது, ஒரு ‘முட்டுத் திக்கை’ ஆகிவிடும். அதனால் திகை என்பதற்கு முடிவு, எல்லை என்ற பொருள்களும் அமையும். திகைதல் = முடிதல், தீர்தல்.(தீர்தல் என்பதுகூடத் தில் எனும் வேரில் தோன்றிய சொல் தான்.) "அதன் விலை இன்னும் திகையவில்லை" என்பது தென்னாட்டு வழக்கு.
திகையம்> தெகையம்> தேயம்> தேசம் என்பது ஒரு திசையின் முடிவில் இருக்கும் இடம், மக்கள் கூட்டம்.
ஆகத் தேசம் என்ற சொல்லின் பிறப்பு தமிழில் உள்ளது. அதை அடையாளம் காணத்தான் ஆட்கள் இல்லை. பெருமை தெரியாமல் நாம் வெறுமையாய்க் கிடக்கிறோம். தேசத்தில் கிளைத்த சொற்கள் பல இந்திய மொழிகளில் உண்டு. இன்றைக்கு தேசம் என்பது nation என்றும், நாடு என்பது country என்றும் புரிந்து கொள்ளப் படுகிறது. இந்தியா என்பது ஒரு பல்தேச நாடு. இதில் ஒரு காலத்தில் 56 தேசங்கள் இருந்ததாய்ச் சொல்வது தொன்மம்.
தயக்கம்>தியக்கம் எனும் சொல் கூட திகு>தி்க்கு எனும் இச் சொற் குடும்பத்திற் சேர்ந்ததே. செய்வதறியாது நிற்கும் நிலையைக் குறிக்கும்.
ககர/சகரப் போலியில் திகை, திசையாகும். இற்றைத்தமிழில் பரவலாய் திசை அறியப்படும். திசையன்விளை = தென்பாண்டி நாட்டில் ஓர் ஊர்.
Sunday, December 07, 2025
கோவிலும், கோயிலும்
தமிழில் கோ என்பது இறைவனை (அன்றேல்) இனக்குழுத் தலைவனைக் (இவன் கோனா, மன்னனா, அரசனா, வேந்தனா என்பது வேறு வரையறுப்பு) குறிக்கும்.
இனி, இல் என்பது வீடு.
கோ+ இல் = கோயில்/ கோவில் ஆகித் தலைவன்/ இறைவன் வீடு என்று பொருள் கொள்ளும். அடுத்துக் கோயில், கோவில் ஆகிய இரு சொற்களில் ”எதை, எங்கு பயில வேண்டும்?” என்பதில் பலருக்கும் குழப்பம் வரும்.
இ ஈ ஐ வழி யவ்வும் ஏனை
உயிர்வழி வவ்வும் ஏமுனிவ் விருமையும்
உயிர்வரின் உடம்படு மெய்யென் றாகும்
எனும் நன்னூல் உயிரீற்றுப் புணரியல் 162 ஆம் நூற்பா தரும் இலக்கண விதிப்படி, இங்கு கோவில் என்பதே சரி. ஆயினும் ”கோயில்” எனும் வழக்காறு சங்ககாலத்தில் இருந்தே விடாது தமிழில் பயிலப் படுகிறது. அப்படியெனில் இரண்டுமே சரியா? - என்றால், அதற்கு விடை தருமுன் “இறைவீடு எனும் கருத்து எப்படி எழுந்தது?” என்ற கேள்விக்கு விடை தெரியவேண்டும்.
20000 ஆண்டுகளுக்கு முன் முந்தைத் தமிழனுக்கு ”இறைக்கருத்து” என்பது தோன்றியிருக்குமா? விளங்கியிருக்குமா? - என்பதில் பெருத்த ஐயமுண்டு. அதே பொழுது பழங்குடி மாந்தனுக்கு அவனுடைய 3,4 தலைமுறைக்கு முந்தையப் பாட்டன், பூட்டன் பற்றிக் கட்டாயம் தெரிந்திருக்கும். அம் முன்னோர் படு சூடிகையாய்ச் செயற்பட்டுத் தத்தம் குழுவை நடத்தி வந்ததும் தெரியும். முன்னோனை அடக்கம் செய்த கல்திட்டை அல்லது கற்பதுக்கை எங்குள்ளது என்றும் தெரியும். (நிலம் தோண்டி அமைவது கற்பதுக்கை. நிலத்தின்மேல் அமைவது கல்திட்டை). கல்திட்டைகள் என்பன இக்காலக் கோயிற் கருவறைகள் போல அமைக்கப்படும்.
கிழமை, வாரம், திங்கள், ஆண்டு எனும் வெவ்வேறு பருவ காலங்களில், முன்னோன் நினைவைக் கருதி வழிபடுவதும், அதனூடே உற்றார் சூழப் பள்ளிப் படையல்கள் இடுவதும் அவருக்குத் தெரியும். அம் முன்னோன் பெரிதும் விரும்பிய உணவுகளைச் செய்தும், அவன் பெருமைக்குத் தக்க ஆடைகளை உருவாக்கியும், இவை எல்லாவற்றையும் பதுக்கை/திட்டைக்கு முன் வைத்து வழிபட்டுப் படைப்பார்,
பதுக்கைகள் என்பன பூமியில் தோண்டப்பட்ட குழிகளாகலாம், அல்லது குயவினால் செய்யப்பட்ட தாழிகளும் ஆகலாம், பூமியின் மேல் அமையும் திட்டைகள் இயற்கைக் குழிகள்> குழைகள்> குகைகள் ஆகலாம். குகையைப் போன்ற செயற் கட்டுமானங்களும் இயற்கையை மாதிரிச் செய்யப்படலாம்.
குகை+ இல்கள் = குகையில்கள் என்பவை அவரவர் குலத்திற்கு முதன்மை ஆயின. குகையில்களில் கல், மண், மரம் எனப் பல்வேறு கட்டுமான வகைகள் உண்டு. குகைகளை அறைகள் (= அறுத்தவை அறைகளாகும்), பள்ளிகள் (பள்ளப் பட்டவை பள்ளிகளாகும்) என்றும் சொல்வார்.
இப் பள்ளிகள் முதலில் பள்ளிப்படைகளாகி, அடுத்துப் பள்ளிப்படைக் கோயில்களாகி முடிவில் பெருங்கோயில்கள் ஆகும். (சென்னைக்கு அருகிலுள்ள மாங்காடும் திருவேற்காடும் பள்ளிப்படைக் கோயில் வகைகளைச் சேரும்.)
தொடக்க காலத்தில் வெவ்வேறு குடும்பக்குழு மாந்தரின் முன்னோரே அவரவர் குலங்கள் போற்றும் குல தெய்வங்கள் ஆயினார். ஆண்டுகள் கூடக் கூடக் குலங்கள் பெருகின. அடுத்துக் குலங்கள் சேர்ந்த குடிகளாயின, கடைசியில் குடிகள் சேர்ந்த இனங்கள் ஆயின. கொஞ்சம் கொஞ்சமாய் குடிக்கோயில்களும், இனக் கோயில்களும் பெரிதாயின. கோயில்களின் நடுவில் குகை போன்ற குறுவறைகள்> கருவறைகள் உருவாகின.
குகையில் என்பது பேச்சுவழக்கில் குகயில்> கொகயில்> கோயில் என்றாவது தமிழர் பலுக்கில் எளிதே. கோய் என்ற சொல் குகையைக் குறிப்பதை இன்றும் பல அகராதிகளில் காணலாம்.
ஆக, தலைவன் வீட்டைக் கோவில் என்றும், இறைவன் வீட்டைக் கோயில் என்றும் முதலில் குறிப்பிட்டுப் பின் இரண்டையும் குழப்பிப் பயின்றதும் உண்டு.
Monday, November 03, 2025
நொகை, நொதுமல்
நண்பர் ஸ்டாலின் சௌந்தரபாண்டியன் இந்த இடுகையைச் சுட்டிக் காட்டினார். அவருக்கு நன்றி. மற்ற நண்பர்களுக்காக இதை முன்வரிக்கிறேன், Deep seek என்னும் செய்தெளிவிக்கை (AI) சொவ்வறையும் (software) இதைச் சரிபார்த்ததாம்.
கீழே வரும் சுட்டியை வெட்டி உங்கள் உலவியின் மூலம் கணித்திரையில் ஒட்டிப் படியுங்கள்.
https://ta.quora.com/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/answers/1477743889338708?ch=10&oid=1477743889338708&share=2d913ca0&srid=wJltr&target_type=answer
Friday, October 24, 2025
massage
உடம்புத் தசைகளின் பயன்பாட்டில், பல்வேறு எலும்பியக்கங்களை செயற்படுத்துவதும் ஒன்றாகும். மூளை, நரம்புகள், தசைகள், எலும்புகள் என்ற உறுபுகளின் வழி இந்த இயக்கங்கள் நடைபெறும். சில போது முறையிலா இயக்கத்தால் ஒன்றிற்கொன்றான நரம்புகள், தசைகள் போன்றவை பிசகிக் கொள்ளும் போது (பிறழ்ச்சி ஆகும்போது) வலி எழும்புவதையும், குறிப்பிட்ட இயக்கத்தை மேற்கொண்டு செய்ய முடியாதது போலதும் கூட நடக்கலாம். மொத்தத்தில் நடக்கவேண்டிய இயக்கம் நடக்கமுடியாது போவதைத் தான் நரம்பு/தசைச் சுளுக்கு என்பார். சுளுக்குப் பிடித்தல் என்றும் சொல்வார். இச் சுளுக்கைச் சரியாக்குவதில் தான் massage எனும் மருத்துவ நடைமுறை வருகிறது. சுளுக்கு எடுத்தல் என்றும், சுளுக்கு வழித்தல் என்றும், சுளுக்கு உருவுதல் என்றும், தசைகளை நெகிழ்த்தி விடுதல் என்றும் இம்முயற்சியைச் சொல்வார்.
சுல்>சுழு>சுளு சுளுக்கு> சுருக்கு/நரம்பு பிசகுதல்
அடுத்து, உருகு(/வு)-தல் (தன்வினை) = இளகுதல், நெகிழ்தல். சுளுக்குப் பாய்ந்தவிடத்தை விரல்களால் அழுத்தி மெதுவாய் நெகிழ்த்தி விடுதல், A gentle movement of the affected part by someone else pressing with fingers and drawing the hand down a number of times, paasive movement.
உருக்கு-தல் (பிறவினை) = இளகிவிழச் செய்தல், மனம்நெகிழ்த்தல்
உருவுகை (தொழிற்பெயர்) = சுளுக்கு முதலியவற்றைப் போக்கத் தடவுதல், to massage, draw the hand down over a sprained part of the body.
இன்னொரு விதமாய், தன்வினையில் நெகிழ்(வு)-தல்> நெகுழ்(வு)-தல்> நெகு(வு)-தல்> நிகு(வு) -தல்> நீவு-தல் என்றாகும். அதுவே பிறவினையில், நெகிழ்(வி)-த்தல்> நெகுழ்(வி)-த்தல்> நெகு(வி)-த்தல்> நிகு(வி)-த்தல்> நீவி-த்தல் என்றுமாகும்.
இன்னொரு விதமாய் நெகிழ்(வி)-த்தல் என்பதில் விகரம் ஒதுக்கி நெகிழ்த்துகை என்றும் இதைச் சொல்லலாம்.
நெகிழ்த்துகை = massage
Friday, August 08, 2025
சம்பவம்
இப்போதெல்லாம் ”சம்பவம்” என்ற இருபிறப்பிச் சொல் மக்களிடையே பெரிதாய்ப் புழங்குகிறது. இதன் தோற்றம் எப்படி எழுந்தது?
உம்முதல்> கும்முதல்> சம்முதல் = சேருதல், கூடுதல், உம் என்பது தமிழில் பன்மையைக் குறிக்கும் ஓர் ஈறு. அவனும் நானும் வந்தோம். சம் என்பது சங்கதத்திலும் பெரிதாய்ப் பயிலப் படுகிறது. மேலை நாடுகளில் com, cum என்று பயன்படும். தமிழிய, இந்தையிரோப்பிய மொழிக் குடும்பங்களில் இது பயன்படுகிறது.
புல்>புள்>.புழு> புகு>பூ-த்தல் = தோன்றுதல்; பூ- என்பது புகு->புவு- என்றும் திரியும். பூவைப் பூவு என்றும் பேச்சுவழக்கில் சொல்வோம். புவ்வு>பவ்வு-தல். ”புவ்வத் தாமரை புதையுங் கண்ணன்” என்பது 15 ஆம் பரிபாடலின் 49 அடியில் வரும். bhava = coming into existence. பவ்வு-நம்>பவ்வுனம்>பவனம் என்பது புதிதாய்த் தோன்றிய வீடு, அரண்மனை. நிலம், துறக்கம் போன்றவற்றையும் இது குறிக்கும். பவம் = புதிதாய்த் தோன்றிய கட்டுமானம்.
ஆக, சம்மும், பவமும் தனித்தனியே பார்த்தால், தமிழ் தான். அதே பொழுது, இரண்டையும் ஒன்றுசேர்த்த கூட்டுச்சொல்லைத் தமிழில் பயிலமாட்டோம். . சங்கதத்தில் கூடவே பயில்வார். கோயிலில் சங்கத மொழி வழி அருச்சனை செய்யும் போது வேண்டுதலில் ”பவதே” என்று வரும்.
சம்பவம் = கூடி உண்டாவது. = நிகழ்வு.
Thursday, August 07, 2025
சம்பந்தரும், சங்கத-பாகதங்களும்
கீழே எழுதுவதை அருள்கூர்ந்து சமயம் நோக்கி யாரும் மடைமாற்ற வேண்டாம். அது இங்கு பேசுபொருள் அல்ல.
பாண்டியனின் அழைப்பேற்று மதுரைவரும் சம்பந்தர், அரண்மனைக்குச் செல்கிறார். அரசன் அவரை இருக்கச் செய்து, "ஊர் யாது?" எனக் கேட்கிறான். ”சீர்காழி” என்கிறார் சம்பந்தர். சமணர் சம்பந்தரைச் சூழ்ந்து அப்போதே வாதுக்கு அழைக்கிறார். சம்பந்தரின் இளமையையும் சமணரின் கூட்ட எண்ணிக்கையையும் கண்ட அரசி ”சம்பந்தருக்கு என்னாகுமோ?” என அஞ்சுகிறார். பாண்டியனிடம், "முதலில் உங்கள் வெப்புநோயை இவர் நீக்கட்டும். பின் சமணரோடு வாதாடலாம்" என்கிறார். மன்னன் சமணரை நோக்கி, "வேறு என்ன வாது வேண்டும்? நீவிரும் சிவனடியாரான இவரும் முதலில் என் வெப்புநோய் தீர்த்து, அதன்மூலம் உம் சமய உண்மையை நிறுவுக" என்கிறான்.
சம்பந்தர் அரசியை நோக்கி, "என்னைச் சிறுவனென எண்ணிக் கலங்காதீர். ஆலவாய் அரன் எனக்குத் துணையாய் நிற்பான்” என்று பாடிய திரு ஆலவாய்ப் பதிகத்தின் (மூன்றாம் திருமுறை 39 ஆம் பதிகம்) 2 ஆம் பாடலில் தான் சங்கதம், பாகதம் ஆகிய சொற்கள் வரும்.
சமணரின் இயல் மொழி பாகதம். நின்றசீர் நெடுமாறன் காலத்தில் தமிழ் ஆட்சிமொழி என்றபோதும், அரசவையில் சங்கதப் புழக்கம் இருந்துள்ளது. (நெடுமாறனின் மகன் கோச்சடையன் அளித்த வேள்விக்குடி, சீவரமங்கலம் செப்பேடுகளில் முதலில் சங்கத மெய்கீர்த்தியும், பின் செப்பேட்டின் உள்ளீடும் வந்துள்ளன. எனவே அவன் தந்தை காலத்திலும் சங்கதத்தை விழையும் ஓர வஞ்சம் பெரும்பாலும் இருந்திருக்கும்.)
பொதுவாய்க் கடுங்கோன் காலத்திலிருந்து, சங்கதத்தில் பீற்றிக் கொள்வது என்பது அற்றை அரசர்க்கும், அவர் அதிகாரிகளுக்கும் இயற்கை தாம். அத்தகைய அரசரிடமும், அதிகாரிகளிடமும், “தாம் படித்தவர்” என நிறுவுவார் போல் சங்கதத்தையும் பாகதத்தையும் கலந்து அடித்துப் பேசுவது சமணருக்கும் வழக்கம் போலும். (இன்றும் நம்மில் பலர் அரசு அதிகாரிகள் முன் ”தாம் படித்தவர்” என் நிறுவும்படித் தமிழ் ஆங்கிலம் கலந்தடிப்போம். இப்படிக் கலந்தடிப்போரைக் கேலிசெய்வது சங்கதம் முற்றும் தெரிந்தவர்க்கு இயற்கை. சம்பந்தர் அதே உத்தியைக் கையாளுகிறார். (It is psychological attack.)
கோயிலில் அன்றி, ஓர் அரண்மனையில் நிற்கும் தனியாளை (இங்கு மங்கையர்க்கரசியார்) முன்னிறுத்திச் சம்பந்தர் பாடிய ஒரே பதிகம் இதுதான். வழக்கம் போல் சம்ணரைக் கேலிசெய்வது இந்தப் பதிகத்திலும் வரும். இதிலும் சமணர் பேச்சைச் சம்பந்தர் கேலி செய்கிறார்.
பல பதிப்புகளில் இப்பாட்டை #3212 ஆம் பாட்டு என்பார். வெவ்வேறு பதிப்புகளில் எண் மாறுவதைப் பார்த்துள்ளேன். பாடல் கீழே.
பாகதத்தொடு இரைத்து உரைத்த சனங்கள் வெட்குறு பக்கமா
மா கத கரி போல் திரிந்து புரிந்து நின்று உணும் மாசு சேர்
ஆகதர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே
”திரு ஆலவாய் அரன் என்னோடு நிற்பதால், ஆகமத்தோடு மந்திரங்கள் நிறைந்த சங்கதத்திற்குப் பங்கமாய் அதைப் பாகதத்தோடு கலந்து உரைத்த,
மக்கள் வெட்குறும் படி யானைபோல் திரிந்து, செயற்பட்டு உண்ணுகிற, அழுக்குமேனியை உடைய, ஆருகதருக்கு நான் எளியேன் அல்லேன்” என்பது பாட்டின் பொருள்.
Tuesday, August 05, 2025
இணைப்புகளுக்கான் தமிழ்ச்சொற்கள்.
மலேசியாவில் படிக்கும் ஒரு பல்கலைக்கழக மாணவர் சில ஆங்கில இணைப்புச் சொற்களைக் கொடுத்து அவற்றிற்குத் தமிழ் இணைச் சொற்களைக் கேட்டிருந்தார். வேறு வேலையில் ஆழ்ந்ததால் என்னால் உடனே மறுமொழி தர முடியவில்லை. பின்னால் மறந்தும் போய்விட்டேன். இப்போது வேறெதையோ தேடிய போது அவர் கொடுத்த சொல்வரிசை கிடைத்தது. என் சுணக்கத்தை அவர் பொறுத்துக் கொள்வார் என நம்புகிறேன்.கீழே அவருக்கான என் மறுமொழி.
Brochure = பொருத்துறை = பொருத்து + உறை(வது); உறைதல் = இருத்தல்.
Flyer = பறதை [பறத்தல்]
Leaflet தளிரிளை let = இளை. தளிர் = இலை
Pamphlet பரத்திளை = பரம் = பரவியிருப்பது.
Booklet பொத்திளை; பொத்து = சிறிய பொத்தகம்
Insert = உட்சேர்ப்பு. உள்ளே சேர்ப்பது.
Handbill = கைத்தாள்; தாள் தெரியாதா?
Handout = கரத்தாள்; கரம் = கை
Poster = பொதியை; பொதித்தல் = ஒட்டுதல்
Broadside = பரச்சிறை பரம் = அகலம்; சிறை = பக்கம்
Notice = நுவலிகை; நுவல்தல் = ஒன்றைச் சுட்டிப் பேசுதல்.
Sunday, June 01, 2025
Bio - வாழி
Bio என்ற சொல்லாட்சி பற்றிப் பேசவேண்டும். 50, 60 ஆண்டு காலமாய் ”உயிர்” என்றே நம்மூரில் இணைச்சொல் பழகினார். நானும் கூட நெஞ்சு நெருடல், கேள்வியோடு இச்சொல் பழகினேன். ”உயிரின் வரையறை என்ன? வேதியலோடு உயிர் சேருமா?” என்ற கேள்விகள் இயல்பாய் எழும். பொருள்முதல் வாதருக்கு உயிர் என்பது ஓர் இயக்கம், அல்லது மூச்சுக் காற்று. கருத்து முதல் வாதருக்கோ, அது உடலில் உறையும் ஆவி/ஆன்மா. ஆம். பின்னவர் கருத்தில், இதற்குத் தனியிருப்புண்டு.
இப்போது ஆழ்ந்து எண்ணிப் பாருங்கள். உயிர் உள்ள/ போன பொருளுக்கு வேதியலுண்டு. உயிருக்கு வேதியல் உண்டா?
”உயிருள்ள” என்பதைத் தானே ”வாழ்கிற” என்று நாம் சொல்கிறோம்? அப்புறமென்ன? எந்த நெருடலுமின்றி ”வாழியைப்” bio என்பதற்கு ஈடாய்ப் பழகலாமே? ஏன் சுற்றிவளைத்து உயிரை வேதியலோடு ஒட்டி நாம் ஆகுபெயர் ஆக்குகிறோம்? அது நம்மை நெருடவில்லையா? எங்கெலாம் bio வருகிறதோ, அங்கெலாம் ”வாழியைப்” பயிலலாமே?
காட்டு: வாழி வேதியல் (Biochemistry), நூக வாழியல் (Microbiology), வாழி நுட்பியல் (Biotechnology),
Tuesday, April 29, 2025
ஒரு நாத்திகரும் அல்குலும்
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல் அஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே
என்பது ஞான சம்பந்தரின் 3 ஆம் திருமுறையில் வரும் 24 ஆம் பதிகத்தின் முதல் பாடல்.
தமிழ்முறைத் திருமணங்களில் தாலிகட்டல் முடிந்தபின் ”இல்லற வாழ்வு தொடங்கும் இருவரும் எதிர்காலத்தில் சிறக்க வாழும்படி சொல்லி, இப் பதிகத்தின் முதல் பாட்டான இதை திருமணத்தை நெறிப்படுத்துவோர் பாடுவார். பதிகத்தின் மிஞ்சிய 10 பாடல்களும் இதே கருத்தில் போகும். நற்பொருள் சொல்லும் இப்பதிகத்தை (குறிப்பாய் இதில் பயிலும் தமிழ்ச் சொற்களின் பொருள்களை) ஒழுங்காய் விளங்கிக் கொள்ளாது ஒரு நாத்திகர் தன் அரைகுறைப் புரிதலால், முட்டாள்தனமான உந்தலால், பதிகத்தினுள் முறையற்ற (ஆபாச) காமச் சொற்கள் பயில்வதாய்ச் சொல்லியிருந்தார். கீழே ஆங்கிலத்தில் வந்த கருத்தை படியுங்கள்..
----------------
In the following poems, 'Dravida Shishu' Thiru Gnana Sambandhar, a Brahmin sage, is appealing to the youngsters attracted to Buddhism and Jainism. "What do you have in these religions? You have to live a dry, womanless life there. Come to Shaivism. My Lord himself is with a beautiful woman with big breasts, slender waist, long vulva and great character. No celibacy is needed here. You can live happily in our religion."
---------------
தமிழ் அறியாத பல நாத்திகர் இது போன்ற தவறான புரிதலில் இப்போதும் இருக்கலாம். இக்கூற்றிற்கான காரணம் வேறொன்றுமில்லை.
மற்று ஒரு பற்று இலை, நெஞ்சமே! மறைபல
கற்ற நல் வேதியர் கழுமல வள நகர்,
சிற்றிடைப் பேர் அல்குல் திருந்திழை அவளொடும்
பெற்று எனை ஆள் உடைப் பெருந்தகை இருந்ததே! 6
எனும் 6 ஆம் பாட்டில் ”அல்குல்” என்ற சொல் வந்துவிட்டதாம்; சம்பந்தர் கெட்ட வார்த்தை எல்லாம் பயின்று புத்த, செயின மாணவரை சிவ நெறிக்குள் அழைப்பதாய் இந்த நாத்திகர் அலறுகிறார். (கந்தனுக்குப் புத்தி கவட்டிற்குள்ளே ” என்ற சொலவடை நாட்டுப் புறங்களில் உண்டு.)
இப் பதிகமெழுந்த வரலாற்றையும் சூழ்நிலையையும் குறிப்பிட்ட நாத்திகர் அறியார் போலும். பாட்டெழுந்த காலத்தில் சம்பந்தருக்கு 14-15 அகவை இருந்திருக்கலாம். திருமறைக்காட்டுக் கோயிற் கதவைத் தம் பதிகங்களால் திறந்து மூடிய அப்பர் சம்பந்தரின் அருளிச் செயல்களுக்கு அப்புறம், அவரவர் வழியில் ஏகுவார். பாண்டிய அரசி மங்கையர்க்கரசி, முதலமைச்சர் குலச்சிறையார் ஆகியோரின் அழைப்பை ஏற்று மறைக்காட்டில் இருந்து சம்பந்தர் மதிரைக்கு ஏகுவார்.
மதிரையில் செயினரோடு வாதாடி, வெற்றி கொண்டு, அடுத்த நாள் ஒரு சிவமடத்தில் சம்பந்தர் தங்கியிருந்த போது அவருடைய தந்தை சிவபாத இருதயர் அங்கு வந்துசேர்வார். தந்தையைப் பார்த்த சம்பந்தருக்குச் சொந்த ஊரான சீர்காழியின் இறைவர் நினைப்பு வந்துவிடும்.பதிகப் 11 பாடல்களிலும் ”சட்ட நாதன் எப்படி இருக்கார்? நலந்தானே?” என்று குறும்போடு இறைவனைப் பற்றிச் சம்பந்தர் பேசுவார்.
நினைவில் கொள்க. தம் தந்தையாருக்கு முன்னால் சீர்காழி இறைவரை நினைந்து மதிரையில் சம்பந்தர் பாடும் பாட்டு இதுவாகும். தந்தைக்கு முன்னால் 14-15 அகவையில் உள்ள இளைஞர், அதுவும் ஒரு துறவி, காம எழுச்சியில் விழைவோர் சூழப் பாடுவாரோ? அப்படியோர் இழிந்த எண்ணம் இந் நாத்திகருக்கு ஏன் வந்தது? புரியவில்லை. ஒருவேளை விக்டோரிய காலத்துப் பழக்கமோ?
”அல்குல்” என்ற சொல்லுக்குப் பெண்குறி என்ற பொருள் திரிகடுகத்தில் தான் முதலில் எழுந்திருக்கிறது. சங்க காலத்தில் அப்பொருள் இல்லவே இல்லை. சிலப்பதிகாரம், மணிமேகலையிலும் கூடப் பெண்குறிப் பொருள் இல்லை. சீவக சிந்தாமணியில் 116 இடங்களில் அல்குல் பயின்றாலும் அது எந்தெந்தப் பொருள்களில் என்று நான் ஆயவில்லை.
சங்க காலத்தில் அல்குலைப் பயில யாரும் தயங்கியது போல் தெரியவில்லை. வெகு இயல்பாகவே இச்சொல்லைக் கையாண்டுள்ளார். தவிர, அல்குல் உறுப்பு பெண்களுக்கு மட்டுமானதல்ல. ஆண்களுக்கும் உண்டு. மாந்தவுடம்பில் ஒக்கல் (hip) என்றும், இடுப்பு (waist) என்றும் 2 வேறு இடங்களுண்டு. இடுப்பிற்கும் வயிற்றுக்கும் கீழே ஒரு முக்கோணம் போல் காட்சியளிக்கும், சற்று மேடான உறுப்பே அல்குலாகும். இதிலிருந்து தான் 2 தொடைகளும் மாந்தருக்கு வெளிவந்து நீள்கின்றன. முன்னும் பின்னும் புடைத்து நிற்கும் இப் பகுதி அல்குலாகும்.தவிர, அல்குலின் பின்பகுதி புட்டமாகும்.
இருப்பினும், இற்றை அகராதிகளில் பெண்குறிப் பொருள் கொடுத்திருப்பது உண்மை தான். சங்கம் மருவிய காலத்தில் (பொ.உ.4 ஆம் நூ.வில்) ஓர் இடக்கரடக்கலாய்ப் பெண்குறிப் பொருள் எழுந்திருக்கலாம். ஒரு தமிழ்ப் பாட்டில், உரையில் அல்குல் என்ற சொல்லைக் கண்டவுடன், இடம், பொருள் ஏவல், காலம் பார்க்காமல் பெண்குறிப் பொருள் கொள்வது வடிகட்டிய முட்டாள்தனம். பாடலின் சூழ்நிலையைப் பார்க்க வேண்டாமா? அல்குல் என்பதை இக்காலத்திற் பலரும் சொல்லத் தவிர்ப்பதோடு தப்பாகவும் புரிந்து கொள்கிறோம். பல அகரமுதலிகளிலும் தப்பான பொருளையே கொடுத்துள்ளார். உடற்கூறியல் தெரிந்தவர் இது போல் தவறாய்ச் சொல்ல மாட்டார்.
சரி, சொல்லின் சொற்பிறப்பியல் பார்ப்போம். உல்> ஒல்> ஒல்கு> அல்கு> அல்குதல் = ஒடுங்குதல், சுருங்குதல், சிறுத்தல். சங்க காலத்தில் துளைப் பொருளை யாரும் இதற்குப் பொருத்தியதில்லை. அல்குதல் என்பது இன்னும் திரிந்து அஃகுதல் (= ஒடுங்குதல், சுருங்குதல்) என்ற சொல்லும் எழும். அல்குதலோடு இன்னும் 2 சொற்களை நிகண்டுகளில் சொல்வர். முதற்சொல் கடிதடம்; இச்சொல் எப்படி எழுந்தது? கடி = இடுப்பு; தடம் = உயர்/மேல் இடம். கடிதடம் = இடுப்பை ஒட்டியுள்ள உயர்ந்த, மேலான இடம். இங்கே பெண்குறிப் பொருள் இல்லை. அடுத்தது நிதம்பம். இதன் பொருளும் உயரிடம் தான்
இனியாவது நாத்திகர்கள் தமிழ் படிக்கட்டும்.
Tuesday, April 08, 2025
கவடி> கbaடி
கவள்>கவள்+து = கவட்டு என்பது நம் உடம்பில், இடுப்பிற்குக் கீழே இரண்டாய்ப் பிரியும் மூட்டுப் பகுதியைக் குறிக்கும். வேடிக்கைச் சொலவடையாய் “கந்தனுக்குப் புத்தி கவட்டுக்குள்ளே” என்கிறோம் அல்லவா? கவட்டு என்பது கவடு என்றும் சுருங்கும், கவட்டை என்றும் நீளும். கவட்டியென்றும் திரியும்.
எந்நேரமும் கூடும் கவட்டைப் போலவே ஒரு அணியினர் வியகம் (>வ்யூகம்) வகுத்து ”மறு அணியிலிருந்து பாடிக்கொண்டே ஏறி வருபவனைக் (ஏறாளி = rider)” கவைத்து அமுக்கிக் கட்டிப்போடும் ஆட்டத்தைக் கவடி என்கிறோம். எதிரணிக்காரன் பாடிவரும் பாட்டிலும் கூடக் “கவடி, கவடி” என்ற சொல் விடாது சொல்லப்படும். கவடி>கbaடியாகி இன்று இந்தியத் துணைக் கண்டம் எங்கணும் பரவி நிற்கிறது.
கவடிப் பிடிப்பால் அந்த விளையாட்டிற்குப் பெயர் ஏற்பட்டது.
Friday, January 24, 2025
இணையதளம் தொடர்பான சொற்கள்
நண்பர் @Udhaya sankar தன் இடுகையில் சில சொற்களைக் கொடுத்து:
----------------------
இணையதளங்களை தமிழில் உருவாக்க நடைமுறை சிக்கல்கள். நான் பார்த்தவரை
Menu
Faq's
Features
Hear It
Tutorials
Promote
Timeline
Get in Touch
Stock Photos
Vector Images
அதிகம் தேவைப்படும் இது போன்ற வார்த்தைகளுக்கு எளிமையான தமிழ் வார்த்தைகள் நான் பார்த்தவரை இல்லை
------------
என்று கேட்டிருந்தார். கீழே வருவது என் பரிந்துரை.
--------------------
Menu = நுவநை [இன்னின்ன இதில் அடக்கம் என நுவலும் உணவுப் பட்டியல்; நுவ(ல்)நை]
Faq's = அகேவி (அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்)
Features = படிதோற்றுகள் (வினைத்தொகையாய்ப் புரிந்துகொள்க.)
Hear It = கேட்கவும்
Tutorials = சொல்லிக் கொடுப்புகள்
Promote = முன்நகர்த்து.
Timeline = காலக்கோடு
Get in Touch = தொடுப்பில் வருக.
Stock Photos = அஞ்சறைப் படங்கள்
Vector Images = வேயர்
வேயருக்கான விளக்கம்.
தென்பாண்டி நாட்டில் அக்காலத்தில் திறந்து கிடக்கும் (மாட்டு)வண்டிகள் பாரம் தூக்குவதற்கும், (மாடு அல்லது குதிரை இழுக்கும்) கூட்டு வண்டிகள் ஆட்களைக் கொண்டு செல்வதற்கும் பயனாகின. பெருந்தனக்காரர் வீடுகளில் 60/70 ஆண்டுகளுக்கு முன் கூட்டுவண்டி இலாத வீடே இருக்காது. கூட்டு வண்டியையே ஆங்கிலத்தில் wagon என்றார். மூங்கிற் கூரை கொண்டு வேயப்பட்ட வண்டி. ”கூட்டுவண்டி, வேய்ச்சகடு, வேய்வண்டி” என்று நம் மரபிற் சொல்லப் பெறும். பல நாட்டுப்புற வீடுகளில் வண்டியில் இருந்து கூட்டைக் கழற்றிப் பண்ணையிற் போட்டு வைத்திருப்பார். தேவைப்படும் போது, திறந்த வண்டியில் மூங்கிற் கூரையை எளிதாக மாட்டி ஆட்களைக் கொண்டுசெல்லும் வகையில் மாற்றிவிடலாம். ஆட்களைக் கொண்டு செல்வது (to carry) என்றாலே வேய்தல் வினை வேய்மாடம் போன்றவை உடனே வந்துவிடும். வேய்ச் சகட்டிற்குத் தேவையான மூங்கிலின் குச்சி, அம்பிற்கும் கூடப் பயன்படும். மூங்கிலைக் குறிக்கும் இன்னொரு சொல் வேய் ஆகும். அதோடு எச் சகட்டுப் பயணமும் (வண்டிப் பயணமும்) ஒரு திசை நோக்கியே அமையும். திசை, தொலைவு, கூடுகை என்ற மூன்று தன்மைகளையும் உணர்த்தும் சொல் வேய்> வேயர் என்றாகும் தொடர்புள்ள ஆங்கில விளக்கத்தைக் கீழே தருகிறேன்.
[ vector = "quantity having magnitude and direction," 1704, from L. vectophysics) r "one who carries or conveys, carrier," from pp. stem of vehere "carry, convey" (see vehicle) - vehicle 1612, "a medium through which a drug or medicine is administered," 1615 in the sense of "any means of conveying or transmitting," from Fr. véhicule, from L. vehiculum "means of transport, a vehicle," from vehere "to carry," from PIE *wegh- "to go, transport in a vehicle" (cf. O.E. wegan "to carry;" O.N. vegr, O.H.G. weg "way;" M.Du. wagen "wagon;" see wagon). Sense of "cart or other conveyance" first recorded 1656.]}
Wednesday, January 01, 2025
காரணம்
குல்>குரு->கரு->கரு-த்தல் என்பது தோன்றல் கருத்து வேர். இது பின்னால் அரும்புதலையும் செய்தல் கருத்தையும் சுட்டும் வண்ணம் விரிந்தது. தமிழரின் நிறமாய் நெடுங்காலம் கருப்பையும் ஊடே சிறு வகையில் சிவப்பையும் சொல்வர். உடல் உழைப்பு கூடக்கூடக் கருத்த தோல் மேலும் கருக்கும். சிவத்த தோல் மேலும் சிவக்கும். கருமம், கருக்குதல் போன்றவை செயலைக் குறிக்க எழுந்த பெயர்ச் சொற்களாகும். செய்தற்கு உரிய ஓர் உடல் உறுப்பான கையை கரமென்றும் சொல்வோம். கரணம் என்பது செய்முறையையும், செயலையும் குறிக்கும். கரணி என்பவன் செய்பவன் ஆவான். கரதலம் = கைத்தலம்.
கரு->கார்->காரம் என்பது இன்னொரு இயல்பான வளர்ச்சி. தரு->தார்->தாரம், வரு->வார்->வாரம் என்பது போல் இதுவும் அமையும். காரம் = செயல், தொழில். காரன் = செய்பவன். தொழிலன். சங்கதத் தாக்கத்தால் காரம்>கார்யம்> காரியம் என்று வடதமிழில் (பாகதத்தில்) இது திரியலாம். இன்னும் சிலர் கார்+இயம் = காரியம் என்று இதைக்கொண்டு முற்றிலும் தமிழென்பார். காரம் என்பதன் வழி, தொழில் செய்வானைக் கார, காரு, காரி, காரின், காரிள் என்றும் பாகதத்தில் சொல்வார்.
ஒரு செயலோ, ஒன்றிற்கு மேற்பட்ட செயல்களோ நடந்தால் தான், இன்னொரு செயல் நடக்கும் என்று இக்கு நிலை (if condition) அமைந்தால், முதற் செயலைக் காரணம் என்றும் இரண்டால் செயலைக் காரம் அல்லது காரியம் என்றும் வட தமிழில் சொல்வார், காரணத்தைத் தமிழென்று எற்காத பாவாணர் காரணத்திற்கு இணையாய் கரணியம் என்ற புதுச்சொல்லைப் படைத்தார். இன்றோ காரம், காரன் ஆகியவற்றை ஏற்கும் பொழுது காரணத்தையும் தமிழ்ச்சொல்லாய் ஏற்கலாம் என எம்போன்றோர் சொல்கிறோம். அணம் என்பது நெருங்கியிருப்பதைக் குறிக்கும் சொல்லாக்க ஈறு.
காவல்
Police - காவலர், Security - பாது காவலர், Watchman - காவலாளி, Bodyguard - மெய்காவலர், Bouncer - விடுதி காவலர் என்ற சொற்கள் பற்றி யாரோ ஒருவர் ஒருமுறை முகநூலில் கேட்டிருந்தார். காவலை வைத்தே எல்லாவற்றையும் நான் சொல்வது எவ்வளவு நாள் சரி என்று தெரியவில்லை. பயனாளர் பார்வையிற் சொற்கள் வேண்டுமென்றும் அவர் சொல்லியிருந்தார்.
நகரம், ஊரோடு police ஐ இணைத்துச் சொல்வது பொருத்தமாகும் தான். poly என்பது நகரத்தைக் குறிக்கும். நகரத்தைப் பள்ளி, பாழி என ஒரு காலத்திற் குறித்தோம். (பட்டி = சிறு ஊர்.) பாழிகர்/பாழியர் என்பார் நகரக் காவலர். இன்று இச்சொல்லைச் சொல்ல முடியாது. (பாழி/ பள்ளி என்ற சொற்கள் வேறு பொருளைக் கொள்கின்றன. இத்தனைக்கும் திருச்சிராப்பள்ளி இன்றும் புழக்கத்தில் உள்ளது தான்.) வேறு ஒரு சொல் வேண்டும். முயல்வோம்.
இப்போதெல்லாம் பல ஊர்கள் புரமெனப் படுகின்றன. எனவே புரவகர் என்று police ஐச் சொல்லலாம். புரத்தல்/ புரவுதல் = காத்தல். புரவர் என்பது நகரக் காவலருக்கும் பெருமிதத்தைத் தரும்.
Security என்பது உயிர்களின் சொத்துக்களின் சேமத்தை உறுதிசெய்வது. எனவே சேமுறுதி என்பது Securityக்குச் சரி வரும். சேமுறுதியார் Security ஆட்களுக்குச் சரி வரும்.
Watch = கண்ணுறல். Watchman = கண்ணுறுவார்
Bodyguard = மெய்க்காவலர்
Bouncer = வேண்டப் படாதவரை இழுத்துப் பிடித்துக் கட்டுபவர். புணைத்தல், பூணுதல் என்பன சேர்த்துக் கட்டுவதைக் குறிக்கும். புணையார் என்பது Bouncer க்குச் சரி வரும்.
எண்ணிப் பாருங்கள்.
Police = புரவர்
Security = சேமுறுதி
Watchman = கண்ணுறவார்
Bodyguard = மெய்க்காவலர்
Bouncer = புணையார்
காவல் என்பதை gaurd இற்கு மட்டும் பயன்படுத்தலாம்.
அன்புடன்,
இராம.கி.
Thursday, December 26, 2024
Pressure Cooker.
pressure cooker இக்குக் தமிழ் இணைச்சொல் கேட்கப் பட்டது.
குய்-தல் = வே-தல், எரி-தல், தாளி-த்தல் to boil, to burn, to fry. குய்-தல் சங்க இலக்கியத்தில் வெவ்வேறாய்ப் பயன்பட்டுள்ளது.
குரூஉ குய் புகை மழை மங்குலின் - மது 757
குவளை உண்கண் குய் புகை கழும - குறு 167/3
அமிழ்து அட்டு ஆனா கமழ் குய் அடிசில் - புறம் 10/7
சுவைக்கு இனிது ஆகிய குய் உடை அடிசில் - புறம் 127/7
குய் கொள் கொழும் துவை நெய் உடை அடிசில் - புறம் 160/7
குய் குரல் மலிந்த கொழும் துவை அடிசில் - புறம் 250/1
நெய் உற பொரித்த குய் உடை நெடும் சூடு - புறம் 397/13
குய்ய (1)
நெய் குய்ய ஊன் நவின்ற - புறம் 382/8
குய்யான் (1)
கனி குய்யான் கொழும் துவையர் - புறம் 360/5
குய்யிடு-தோறும் (1)
குய்யிடு-தோறும் ஆனாது ஆர்ப்ப - பதி 21/11
குய்யும் (1)
நெய்யும் குய்யும் ஆடி மெய்யொடு - நற் 380/1
குய்-தலின் நீட்சியாய், குய-த்தல் (= குயத்து + அல்), குய-க்கல் = (குயக்கு + அல்), குய-ப்பல் (= குயப்பு + அல்)
என்று மூ வகையாய்ச் சொல்ல முடியும். இதன் பெயர்ச் சொற்களாய் குயத்து = heat, குயக்கு = வெக்கு> வெக்கை = cook, குயப்பு = வெப்பு = சூடு, calory என்பனவற்றைச் சொல்லலாம்.
குயக்கி = cooker
pressure cooker = அழுத்தக் குயக்கி.
Saturday, December 14, 2024
திருகைகள் = nuts
Hex nut = அறுகைத் திருகை
Lock nut பூட்டுத் திருகை
Tuesday, December 03, 2024
By-law
ஒவ்வொரு குமுகாய அமைப்பிலும் அதில் பங்குபெறும் ஆட்கள், நடவடிக்கைகளுக்கு எனச் சில சட்ட திட்டங்கள் உண்டு. “இதற்கு இது அளவு” என வரும்போது நாம் எல்லைகள் பற்றிப் பேசுகிறோம். ஆங்கிலத்தில் இதை limit / boundary எனச் சொல்வார்.
law என்பது அளவுகளோடு (limit / boundary) தொடர்புடையது. இன்னின்ன செயல்களுக்கு இது எல்லை; இவ்வெல்லையை மீறினால் இன்னின்ன தண்டனை என்பது law வின் பகுதிகள் ஆகும். இதற்கு அளவை, விதி என்ற சொல்லை பழந்தமிழர் பயன்படுத்தினர். இன்றும் pre-determined என்பதற்கு ஈடாக ”விதி”யைப் பயன்படுத்தும் நாம், அளவை என்ற சொல்லை பெரும்பாலும் மறந்தே விட்டோம். எல்லாவற்ரையும் சட்டம் என்றே சொல்லப் பழகிவிட்டோம். சட்டம் என்பது அமைப்பு வரிதியானது. அளவைகளின் தொகுதி சட்டம். சட்டத்தின் பகுதிகள் அளவைகளாகும்.
அளவையோடு தொடர்புற்றது அளகை = logic. இதற்கு ஏரணம் என்ற மற்றொரு சொல்லும் உண்டு. law விற்கும் logic -ற்கும் நிறையக் கணுக்கம் (connection) உண்டு.
அளவையர் = lawyer. இதற்கு மாறாய் வழக்கறிஞர் என்று சொல்வது சற்று சரியில்லை. அதே பொழுது advocate என்பதற்கு வழக்குரைஞரே போதுமானது. இனி bylaw என்பதற்கு வருவோம். இதை
also by-law, late 13c., bilage "local ordinance," from Old Norse or Old Danish bi-lagu "town law," from byr "place where people dwell, town, village," from bua "to dwell" (from PIE root *bheue- "to be, exist, grow") + lagu "law" (see law). So, a local law pertaining to local residents, hence "a standing rule of a corporation or association for regulation of its organization and conduct." Sense influenced by by.
என்று ஆங்கிலத்தில் சொல்வர். ஒரு நிறுவனத்தை அமைக்கும் போது அரசின் சில அளவைகளுக்கும் அதிகமாய் இந்த நிறுவனத்திற்குள் அமையும் நடைமுறைகளுக்கு என சில எல்லைகள்/ வரம்புகளைக் குறியிருப்பர். இதற்கு உட்படும் அளவைகள் இவை என நிறுவன ஆவணத்தில் சொல்லியிருப்பர். அவையே by-laws எனப்படும்.
உட்படு அளவைகள் = by-laws. (வினைத் தொகை).
Sunday, December 01, 2024
திரு ஓங்கட்டும்.
சுழற்குறி (சங்கதத்தில் இது சுவத்திகம்> ஸ்வஸ்திகம்) என்பது செயினத்திற்கும் அற்றுவிகத்திற்கும் பொதுவான சொல். (இப்போது ”இந்து” என்ற கலவை மதத்திற்கும் கூட அதைச் சொந்தம் என்பார்.பொதுக்கை நெறி பின்பற்றிய அரசியற் கட்சிகளும் கூட ஒரு காலத்தில் இக்குறியைத் தமதாய் ஏற்றுக் கொண்டன.)
சுழற்குறி சுவற்குறியாகி ”ஓங்கட்டும்” என்ற பொருளில் நம்மூர்க் கல்வெட்டுகளில் இது பல காலம் குறிக்கப்பட்டது. கல்வெட்டுகளில் வெளி வரும் மெய்கீர்த்திகளில் முதற்சொல்லாய் வரும் ”சுவல்த்தி திரு” என்பது ”சுவல்த்தி திரு> சுவற்றி திரு> சுவத்தி திரு> சுவஸ்திஸ்ரீ” என்று திரிந்து சங்கதத்தில் வெளிப்படும். இக்குறியீட்டை எப்படி விளங்கிக் கொள்வது? - என்பதே இந்த இடுகையின் பொருண்மை.
தமிழியில் இருந்து 2 ஒகர எழுத்துகளை எடுத்து ஒன்றின் குறுக்காய் இன்னொன்றைப் போட்டால் சுவத்திக் குறி வந்துசேரும். அடுத்து நாகரிக் குறியீட்டில் அகரத்தோடு 2 புள்ளிகளை இட்டால் ”அம்” எனும் ஒலி வந்துசேருவதைப் போலவே, இங்கே சுவத்திக் குறியீட்டோடு 4 புள்ளிகள் இட்டால் ”ஓம்” என்ற ஒலி வந்து சேரும். ஓம் என்பது ஓம்புதலையும், ஓங்குதலையும் குறிக்கும்.
இக் குறியீட்டிற்குப் பக்கத்தில் ஸ்ரீ எனும் கிரந்தக் கூட்டெழுத்தை எழுதினால் ”திரு ஓங்கட்டும்” என்ற பொருள் வந்துவிடும். இதைத் தான் சுவஸ்திஸ்ரீ என்று கலவை எழுத்தில் எழுதினார். இரு வேறு மொழிகள், இரு வேறு எழுத்துகள் ஆகியவற்றின் கலவையே இச் சொல்.
Sunday, November 24, 2024
வனம்
இச்சொல்லின் முதற் பயன்பாடு என்பது சங்கத அகரமுதலியில் வால்மீகி இராமாயணத்தில் தான் காட்டப் படுகிறது. அதே பொழுது, வேறு எந்த இந்தையிரோப்பிய மொழியிலும் இச்சொல்லிற்கு இணையாய் இன்னொரு சொல் காட்டப்படவில்லை. ஆய்ந்து பார்த்தால், சங்கதத்திற்கே கூட இது கடனாய் வந்தது போல் தெரிகிறது. மற்ற வட இந்திய மொழிகளிலும் கூட இச்சொல் பயனாகிறது. பொதுவான தமிழ் அகரமுதலிகளிலும் இச்சொல் உண்டு. (ஆனால் செந்தமிழ்ச் சொற்பிறப்புப் பேரகரமுதலியில் இது ஏனோ இல்லை.)