Friday, January 09, 2026

சுந்தா நிலம் (Sundaland) என்ற கண்டம்

தென்கிழக்கு ஆசியா இன்று வெவேறு நாடுகளாய்ப் பிரிந்து இருந்தாலும், ஒரு காலத்தில் அவை சுந்தாநிலம் என்ற கண்டத்தில் இருந்து பிரிந்த நிலங்கள் என்று சொல்வர். இணையத்தில் பார்த்தால், சுந்தாநிலத்தின் சொற்பிறப்பாய், பெரும்பாலும் சங்கதத்தில் உள்ளதாய்ச் சொல்லப்படும் சுத்தத்தை அடையாளம் காட்டுவர்.  

The name "Sunda" originates from the Sanskrit word "Cuddha," meaning white. During the Pleistocene era, there was a large volcano named Mount Sunda located north of Bandung in West Java என்ற விளக்கம் தான் அது. தமிழ்வேர் பற்றிய இயலுமைக் குறிப்பே அங்கு இராது. குப்தப் பேரரசிற்கு முன்னால், துணைக்கண்டத்திற்கு வெளியே, சங்கதம் பெரிதாய் கடல் தாண்டிப் போகவில்லை. தமிழ் குறைந்தது பொ.உ.மு 2350 இல் இருந்நே நகர்ந்துள்ளது.

சுல்> சொல் என்பது ஒளியை, மலர்ச்சியைக் குறிக்கும் ஒரு வேர்ச்சொல். 2006 இல் எழுதிய “கொன்றையும் பொன்னுமெ”ன்ற தொடரின்  நாலாம் பகுதியில் [http://valavu.blogspot.in/2006/01/4.html] இவ்வகைச் சொற்கள் வரும். சுல்லில் எழுந்த இருபிறப்பிகள் சுல்>சுல்+த்+த்+அம்= சு(ல்)த்தம்> சுத்தம் என்பதும் சுல்+க்+அம்= சு(ல்)கம்>சுகம் என்பதுமாகும். சுத்தம் என்பது தூய்மைப்பொருள் கொள்ளும். சுகம் என்பது நலப்பொருள் கொள்ளும். இரண்டு சொற்களுமே வடமொழியில் புழங்கியவை, ஆனால் தமிழ்வேர் கொண்டவை. சுத்திகரிப்பு = தூய்விப்பு. சுல்> சு(ல்)து > சுதை என்ற வளர்ச்சியில் சுண்ணாம்புக்கல்.    சுதை = அமிழ்தம் சுதையணைய வெண்சோறு = கம்ப ராமாயணம், குலமுறை. 18. சுதை = பால்,  சுவை, சுண்ணாம்பு, வெள்ளி வெண்சுதை யிழுகிய மாடத்து (மணி 6:43, வெண்மை; விண்மீன், மின்னல், நெய் ஏனம்

சுர> குரு= வியாழன்; சுரகை = சுண்ணாம்பு சுள்>  சுர்> சுரம் = காய்ச்சல்;சுள்ளுதல் = காய்தல்; சுளுந்து   தீப்பந்தம்; சுள்ளி = நெருப்புக் குச்சி

சுல்லு = வெள்ளி

சுல் என்பது வெளுப்பைக் குறிக்கும் வேர்ச்சொல். சுல்>சுல்த்து என்பது மறுவுள்ள ஒரு துணியை வெள்ளையாக்குவது. இங்கும் சங்கத முறையில் சுத்திகரம் என்ற தொழிற்பெயர் எழும். தூய்விப்பு என்பது முற்றிலும் தமிழ்.

செழிப்பு, கொழுமை. பொலிவு, நலம், சுகம் என்ற சொற்கள் தமிழில் health ஐப் பொதுவாய்க் குறிக்கும். இந்தச் சொற்களின் உள்ளே புலப்படுவது பொன்நிற ஒளியே.  ”அவன் முகத்தைப் பாருங்கள். ஓர் ஒளி தெரிய வில்லையா? அவன் செழிப்பாய்/ கொழுமையாய்/ பொலிவாய்/ நலமாய்/ சுகமாய் இருக்க வேண்டும். இல்லெனில் அவன் முகம் இருளாகாதோ?” என்பது நாட்டுப் புறத்தார் மரபும் கூற்றுமாகும். (இத்தனை சொற்களையும் ஒதுக்கி இன்று சிலர் ஹெல்த் எனக் குறிக்க முற்படுவது முட்டாள் தனம். பல நாளிதழ்களும் அதையே செய்கின்றன. இல்லாவிடில் சுகாதாரம் என்கின்றன. ”ஆதாரம்” அங்கு எதற்கு? புரியவில்லை. சுகத்தின் ஆதாரம் சூழமைவு இல்லையோ? health, cleanliness ஐ விட மேம்பட்டதில்லையா? ”நன்றாய் இருங்கள்” எனில், “clean-ஆய் இருங்கள்” என்றா பொருள் கொள்கிறோம்? அதனின் மேம்பட்ட பொருள் அல்லவா நலம்? மேற்சொன்ன சொற்களில் துல்லியம் நமக்கு வேண்டாமா?.

கொல்>சொல் = சொலிப்பு, ஒளி; சொலித்தல் = ஒளி தருதல்; சொலிதை/ சொலிப்பு = வெளிச்சம். சொல்>solar = சூரியன் ஒளி; சொல்+ஐ = சொலை> சோலை> சுவாலை= flame; சொலி> சுவாலி = ஒளியிடு; இதை ஜ்வாலையாக்கி வடமொழி போல் சிலர் பலுக்குவர். நாமும் அங்கிருந்து இங்கு வந்தது போலும் என எண்ணிக் கொள்வோம். இப்படி நாம் தடுமாறும் சொற்கள் மிகப் பல. சொலை> சோலை = பொன்னிறப் பூக்கள் மலரும் மரங்களைக் கொண்ட காடு. சோலை மலை = அழகர் கோயில்; சொல்=ஒளி, நெல் (மஞ்சளாய் இருக்கும் கூலம்). சொல்> சொன்> சொன்றி = சோறு;  சொல்பட> சொற்பட> சொப்பட = நன்றாக. வெளிச்சம் பட; சொற்படுதல் = பலன் மிகுதல்.

சொல்+நம் = சொன்னம்> சொர்னம்> சொர்ணம் = தங்கம், நாணயம்; வழக்கம் போல வடமொழிப் பலுக்கு இங்கு உள்ளே வந்து சேரும். 

சொர்ணம்> சுவர்ணம்> சுவர்ணகா = வடமொழியில் கொன்றைக்கு உள்ள பெயர். 

சொன்னம்> சொன்னல்> சொனாலி = வங்காளியில் கொன்றைக்குப் பெயர். 

சொன்னல்> சொந்தல்> சொந்தால் என்றும் வங்காளியில் வரும். அசாமியிலே சொனாறு என்பார், (அந்தக் காலத்தில் அறுபதுகளில், "சோனாரே, சோனாரே" என ஒரு பேர் பெற்ற இந்தித் திரைப்பாட்டு வரியுண்டு, ஆராதனா என நினைக்கிறேன். ”தங்கமானவளே” என்று காதலியைக் கூப்பிடுவான்.) 

சொன்னம்> சொன்னகாரன் =  பொன் வேலை செய்யும் தட்டான்; 

சொல் +நை = சொன்னை> சோனை> சோணை= தங்க நிற ஆறு. விகாரை மாநிலத்தில் (பீகாரில்), பாடலிபுரத்துக்கு பக்கத்தில் இருக்கும் ஆறு. கங்கையும் சோனையும் அங்கே பண்பாட்டில் முகமை. கங்கை கருப்பு; சோணை வெளுப்பு; தங்க நிறம்;

சொல்+கு = சொக்கு = தங்கம். (சொக்குத் தங்கம்' என்பது இரட்டைக் கிளவி. தூய தங்கம் என்றும் பொருள் கொள்ளும். ) 

சொக்கு = தூய்மை; சொக்கம் = தூய்மை சொள்> சொகு> சொக்கம்; சொக்க வெள்ளி = தூய வெள்ளி. 

சொக்கத் தாண்டவம் = தூய நட்டம்; மதுரைச் சொக்கன் பொன்னானவன்; அதுதான் அவன் நிறம்; 

சொக்கிப் போனான் என்றால் சொலிப்பைக் கண்டு வியந்து போனான் என்று பொருள்; 

சொக்கம்> சொர்க்கம் = 'பொன்னுலகு' எனும் கற்பித மேலுலகு; இங்கும் வடமொழிப் பலுக்கு வருவதால் குழம்புகிறோம். தங்கம் கிடைக்காத, தங்கம் குறைத்துப் புழங்கிய நாட்டில் சொக்கம் என்ற சொல் எழவே எழாது. பொன்னுலகு எனும் கற்பிதம் முழுக்க முழுக்கத் தமிழ்க் கற்பிதமே.

சொக்கம்> சொகம்> சுகம் = பொலிவோடு மலர்ச்சியோடு இருக்கும் தன்மை; ”சுகமா இருக்கீங்களா?” என்றால் ”சோர்விலாமல் முகத்தில் ஒளிவிடுகிறாற் போல் இருக்கீங்களா?” என்று அருத்தம். 

health இற்கு இப்போது நாம் அச் சொல்லையே புழங்குகிறோம். (இதிலும் சிலர் சொக்கம், சொகம், சுகம் என்று சொல்லாமல் சௌக்கியம் என்று சங்கதமுறையில் ஒலிப்பார். நானும் சிலபோது அறியாமலும், சிலபோது அறிந்தும் சௌக்கியம் பயின்றுள்ளேன். அவ்வளவு சங்கதத் திரிவுகளை நம் முன்னோரும், உறவினரும், ஆசிரியரும் நமக்குள் ஏற்றியிருக்கிறார். மிகவும் சரவல் பட்டே இந்தத் தப்பான பழக்கங்களில் இருந்து வெளிவந்து சொக்கம், சொகம், சுகம் போன்றவற்றைப் பயில வேண்டியுள்ளது.)  

மேலையன் ”கொழிதா இருக்கீங்களா?” என்கிறான். கொழுது>கொழிது = health = செழிப்பு, நலம், சுகம்; 

சொக்கத்தில் விளைந்த இன்னொரு சொல் சொகுசு = நேர்த்தி, இதம், சிறப்பு. சொகுசுப் பேருந்து என்கிறோமே? சொகுசையும்  வடசொல் என்று சிலர் தவறாய்க் கொள்வர்.

Sundaland என்பதை சொலிதை நிலம் என்று சொல்வேன்.



No comments: