Friday, January 30, 2026

சிராவத்தியும் சிராப்பள்ளியும்

கீழே வருவது 16 சனபதங்களைக் குறிக்கும் ஒரு படம். அதில் உள்ள சிராவஸ்தியைக் குறித்து இந்த இடுகையில் பேசுகிறேன். பாடலிபுத்ரம், வேசாலி, காசி போன்று உச்சத்தில் வைத்துப் பேசப்படும் ஓர் ஊர் சிராவஸ்தியாகும் . தமிழ், பாகதமொழிகளின் வழியே தான் அந்த ஊடின் பெயரைப் புரிந்துகொள்ள முடியும்.

பள்> ப(ள்ளி-த்தல்> படு-த்தல்< பது-த்தல்> பதி-த்தல் = வதி-(த்தல்). பது-> பதம், பதி = நிறைய மக்கள் வதியும் ஒரு நகரம்.
பள்ளு> பள்ளி> பட்டி என்ற பதியோடு தொடர்புள்ள சொற்களையும் இங்கே எண்ணிப் பார்த்துக் கொள்க.
சிர(வ)ம் = தலை (பாகதச் சொல்).
சிரா + வ(த்)தி = சிராவஸ்தி = கோசலம் என்ற சனபதத்தின் தலைநகர். இதைச் சேகேதம் என்றும் சொன்னார். இது இற்றை அயோத்திக்கு அருகில் உள்ள ஊர்.
அதுபோல் சிராப்பள்ளி = சிராப்பட்டி = அக்காலச் சோழர் தலைநகரான உறையூருக்கு அருகில் உள்ள (அற்றுவிகர், செயினர், புத்தர் என்ற) எல்லாச் சமணருக்கும் பொதுவான, பார்சுவருக்குச் சொந்தமான, தென்னகத் தலைமைப்பள்ளி இருந்த இடம்.
சிராவத்தியில் மற்கலி கோசாளரும், வர்த்தமான மகாவீரரும், சித்தார்த்த புத்தரும் பெரும் எண்ணிகையில் நாட்களைக் கழித்துள்ளனர். சிராவத்தியில் தான் தக்கணப் பாதை முடிந்தது. உத்தாப் பாதையும் இந்நகரைத் தொட்டுப் போனது.
அதேபோல் சிராப்பள்ளியும் தலைமையிடம் தான். சிலம்புக் காதையில் கோவலன், கண்ணகியைக் கூட்டிவரும் குந்தியார் இங்கு தான் தங்குவார். இற்றைத் திருச்சியில் அமையும் மலைக்கோட்டை, அருகிலுள்ள திருவரங்கம், திருநாவல்கா (-திருவானைக்கா) போன்றவற்றைச் சேர்ந்த பள்ளியை அறிய சிலம்பை ஆழ்ந்து படியுங்கள்.
தவிர, அற்றுவிகத்தின் தோற்றுநரான மற்கலி கோசாளர் பிற்ந்தவூர் திருப்பிடவூர் (திருப்பட்டூர்). சிராப்பள்ளிக்கு அருகில் தான் உள்ளது. அற்றுவிகருக்கு நெருக்கமான திருவெள்ளறையும் சிராப்பள்ளிக்கு அருகில் தான். அற்றுவிகத்திற்கு நெருக்கமான இன்னொரு ஊர் சித்தண்ண வாசல் அதுவும் இன்னொரு பாதையில் சிராப்பள்ளிக்குச் சற்று தொலைவில் உள்ளது. தமிழரின் நடுப்பட்ட ஊரும் சிராப்பள்ளி தான். சிராவத்தியும் சிராப்பள்ளியும் பெரிதும் தொடர்புள்ள ஊர்கள். ஆழ்ந்து ஒப்பிட்டால் இத் தொடர்பு விளங்கும்.
அற்றுவிகர் அழிந்தபின், புத்தர் இலங்கைக்கு நகர்ந்த பின்னால், சிராப்பள்ளி என்பது வெறும் செயினப்பள்ளி ஆனது. தேவார காலத்திற்கு அப்புறம், நெடுங்காலம் அது அப்படியே அறியப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில், இந்த ஊர் Trichinoppalli என்றும் விளிக்கப் பட்டது. அதாவது திருச்சிராப் பள்ளி என்று சிவ்நெறியாளரால் அழைக்கப்பட்ட ஊர் திருச்செயின>திருச்சினாப் பள்ளி என்றும் ஆனது. இதைச் சாரணர் பள்ளி என்றும் அழைத்தார். நீலகேசியின் தலைவி அற்றுவிகப் பூர்ணரோடு வாதம் செய்தது குக்குட நகரில் (கோழியூர் = உறையூர்) உள்ள சாரணர் பள்ளியில் தான்.

https://www.facebook.com/krishnan.ramasamy.31/posts/pfbid02PhMwabm7hKm4ua3YjpCTabHEqZaRYtfKUfueUfWN6FPpWgkZvfmac8dY8Tja7obMl?notif_id=1769726277304372&notif_t=feedback_reaction_generic&ref=notif

No comments: