Thursday, August 07, 2025

சம்பந்தரும், சங்கத-பாகதங்களும்

கீழே எழுதுவதை அருள்கூர்ந்து சமயம் நோக்கி யாரும் மடைமாற்ற வேண்டாம். அது இங்கு பேசுபொருள் அல்ல. 

பாண்டியனின் அழைப்பேற்று மதுரைவரும் சம்பந்தர், அரண்மனைக்குச் செல்கிறார். அரசன் அவரை இருக்கச் செய்து, "ஊர் யாது?" எனக் கேட்கிறான். ”சீர்காழி” என்கிறார் சம்பந்தர். சமணர் சம்பந்தரைச் சூழ்ந்து அப்போதே வாதுக்கு அழைக்கிறார். சம்பந்தரின் இளமையையும் சமணரின் கூட்ட எண்ணிக்கையையும் கண்ட அரசி  ”சம்பந்தருக்கு என்னாகுமோ?” என அஞ்சுகிறார். பாண்டியனிடம், "முதலில்  உங்கள் வெப்புநோயை இவர் நீக்கட்டும். பின் சமணரோடு வாதாடலாம்" என்கிறார். மன்னன் சமணரை நோக்கி, "வேறு என்ன வாது வேண்டும்? நீவிரும் சிவனடியாரான இவரும் முதலில் என் வெப்புநோய் தீர்த்து, அதன்மூலம் உம் சமய உண்மையை நிறுவுக" என்கிறான். 

சம்பந்தர் அரசியை நோக்கி, "என்னைச் சிறுவனென எண்ணிக் கலங்காதீர். ஆலவாய் அரன் எனக்குத் துணையாய் நிற்பான்” என்று பாடிய திரு ஆலவாய்ப் பதிகத்தின் (மூன்றாம் திருமுறை 39 ஆம் பதிகம்) 2 ஆம் பாடலில் தான் சங்கதம், பாகதம் ஆகிய சொற்கள் வரும். 

சமணரின் இயல் மொழி பாகதம். நின்றசீர் நெடுமாறன் காலத்தில் தமிழ் ஆட்சிமொழி என்றபோதும், அரசவையில் சங்கதப் புழக்கம் இருந்துள்ளது. (நெடுமாறனின் மகன் கோச்சடையன் அளித்த வேள்விக்குடி, சீவரமங்கலம் செப்பேடுகளில் முதலில் சங்கத மெய்கீர்த்தியும், பின் செப்பேட்டின் உள்ளீடும் வந்துள்ளன. எனவே அவன் தந்தை காலத்திலும் சங்கதத்தை விழையும் ஓர வஞ்சம் பெரும்பாலும் இருந்திருக்கும்.) 

பொதுவாய்க் கடுங்கோன் காலத்திலிருந்து, சங்கதத்தில் பீற்றிக் கொள்வது என்பது அற்றை அரசர்க்கும், அவர் அதிகாரிகளுக்கும் இயற்கை தாம். அத்தகைய அரசரிடமும், அதிகாரிகளிடமும், “தாம் படித்தவர்” என நிறுவுவார் போல் சங்கதத்தையும் பாகதத்தையும் கலந்து அடித்துப் பேசுவது சமணருக்கும் வழக்கம் போலும். (இன்றும் நம்மில் பலர் அரசு அதிகாரிகள் முன் ”தாம் படித்தவர்” என் நிறுவும்படித் தமிழ் ஆங்கிலம் கலந்தடிப்போம். இப்படிக் கலந்தடிப்போரைக் கேலிசெய்வது சங்கதம் முற்றும் தெரிந்தவர்க்கு இயற்கை. சம்பந்தர் அதே உத்தியைக் கையாளுகிறார். (It is psychological attack.)  

கோயிலில் அன்றி, ஓர் அரண்மனையில் நிற்கும் தனியாளை (இங்கு மங்கையர்க்கரசியார்) முன்னிறுத்திச் சம்பந்தர் பாடிய ஒரே பதிகம் இதுதான். வழக்கம் போல் சம்ணரைக் கேலிசெய்வது இந்தப் பதிகத்திலும் வரும். இதிலும் சமணர் பேச்சைச் சம்பந்தர் கேலி செய்கிறார். 

பல பதிப்புகளில் இப்பாட்டை #3212 ஆம் பாட்டு என்பார். வெவ்வேறு பதிப்புகளில் எண் மாறுவதைப் பார்த்துள்ளேன். பாடல் கீழே. 

ஆகமத்தொடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமா
பாகதத்தொடு இரைத்து உரைத்த சனங்கள் வெட்குறு பக்கமா
மா கத கரி போல் திரிந்து புரிந்து நின்று உணும் மாசு சேர்
ஆகதர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே

”திரு ஆலவாய் அரன் என்னோடு நிற்பதால், ஆகமத்தோடு மந்திரங்கள் நிறைந்த சங்கதத்திற்குப் பங்கமாய் அதைப் பாகதத்தோடு கலந்து உரைத்த, 

மக்கள் வெட்குறும் படி யானைபோல் திரிந்து, செயற்பட்டு உண்ணுகிற, அழுக்குமேனியை உடைய, ஆருகதருக்கு நான் எளியேன் அல்லேன்” என்பது பாட்டின் பொருள்.

No comments: