Thursday, September 30, 2021

சருக்கரை

சருக்கரை, சக்கரம் போன்றவை தமிழல்ல என்று சிலர் கூறுவார். ஆனால் அது சரியல்ல. ஆழவே ஆய்ந்தால் சருக்கரை பற்றிய நுட்பியல் பெரும்பாலும் இந்தியாவின் தெற்கிலிருந்தே தொடங்கியிருக்க முடியும். இந் நுட்பியல் தொடர்பான பல சொற்களுள் தமிழுள்ளது. குப்தர் காலச் சங்கதம் இவற்றை மொழிபெயர்த்ததாலும், தமிழிலக்கியங்களை மேலையரிற்பலர் இன்றும் அறியாததாலும், சங்கத மொழிபெயர்ப்பின் முன் எது இருந்தென்று இன்னும் அறியாதிருக்கிறார். ஆங்கில விக்கிப்பீடியாவில் சங்கதவழிப் பாடங்களே பெரிதுஞ் சொல்லப் பெறுவதால், நம்மூராட்கள் மூலம் ஏதென்று தெரியாது தடுமாறுகிறார். 

சுல் எனும் வளைவுக்கருத்து வேரில் சாய்வு, வளைவு, கோணல், வட்டம், உருண்டை, முட்டை, உருளை எனப் பல கருத்துச்சொற்கள் எழுந்தன. பாவாணர் நூல்களைப் படித்தால் இவற்றைத் தெளியலாம். குறிப்பாக ”வேர்ச்சொற் கட்டுரைகள்” எனும் நூலில் (தமிழ்மண் பதிப்பகம், 2000) பக் 102 - 117 வரை படியுங்கள். இவற்றை மீண்டுமிங்கே நான்சொல்வதைக் காட்டிலும் பாவாணரை நேரே படிப்பது நல்லது. பாவாணரிலிருந்து நான் சற்று வேறுபடுவேன். ஆனாற் பெரிதும் அவரையே தழுவுவேன்.. 

இங்கே சக்கரம்>சருக்கரம்>சருக்கரை>சர்க்கரை>சக்கரை என்ற சொற்கள் அடிப்படையில் வட்டத்தைக் குறிக்கின்றன. படிகமாகிய சருக்கரைச் சாற்றுக் கலவையை வடிகட்டிய பிறகு கிடைக்கும் பாகை, வட்ட அச்சுகளிலூற்றிக் காயவைப்பர். அப்போது கிடைக்குங் கட்டி, சருக்கரைக் கட்டியானது. நாளா வட்டத்தில் கூட்டுச்சொல் பிரிந்து சருக்கரை என்றாலும் கட்டி என்றாலுமே sugar எனப் புரிந்து கொள்ளப்பட்டன. கட்டிக்கு இன்னொரு பெயர் கண்டம். இதுவும் வடக்கே பரவி, khanda என்றாகி, மேலையரிடம் அது பரவிக் candy என்றானது. சருக்கரையே jaggery எனத் திரிந்தது. 

தொடக்க காலத்தில் கருப்பஞ்சாறு கரும்பிலிருந்து எடுக்கப்படவில்லை. பனஞ்சாற்றிலிருந்தே எடுக்கப்பட்டது. பனை தமிழ்நாட்டிற் தோற்றங் கொண்டது. பனஞ்சாற்றின் பின் தான், அதியமான் காலத்தில் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து கரும்பு பெறப்பட்டுச் சாறெடுக்கப்பட்டது. பனஞ்சாற்றில் பெறுவது கருப்பட்டி. கருப்பென்ற தாவர நிறமே கரும்பிற்குப் பெயராகியது. கருப்பஞ் சாற்றைக் காயவைத்து, நீரை ஆவியாக்கி, சாற்றிலிருந்து சருக்கரையைப் படிகமாக்குவர். சருக்கரைப் படிகத்தை வடிகட்டிய பிறகு இருக்குஞ் சாறு, அதன் வழுவழுப்பின் (=மொழுமொழுப்பின்) காரணமாய் மொழுகு> மெழுகு (molasses) எனப்பட்டது.  இவையெல்லாஞ் செய்த இடம் ஆலையெனப் பட்டது. இத்தனை விவரங்களும் நம் சங்க இலக்கியத்தில் குறிப்பாகவுள்ளன. ஒரு சில கலைச்சொற்கள் அவற்றில் இல்லாது போகலாம். ஆனால் நுட்பந் தொடர்பான மற்ற கலைச் சொற்கள் உள்ளன. 

கருநிறங் காரணமாய் கருநல்>கன்னல் என்ற பெயரும் சருக்கரைக்குண்டு. கரும்பை இயந்திரங்களினூடே கொடுத்துச் சாறு பிழிவதால் இயந்திரத்தின் இன்னொரு பெயரான விசையால் விசையம்>விசயம் என்றும் சருக்கரைக்கு பெயர் ஏற்பட்டது. வட்டக்குழிகளில் பாகை ஊற்றுதற்கு மாறாய் குளிகை போல் கோளமாக்குவதால் குளம் என்ற பெயரும் சருக்கரைக்குண்டு. குள்>குளிகை. குள்>கொள்>கோள்>கோளம் என்ற சொற்கள் எழும். தவிர, சகரமுதற் சொற்கள் சகரந் தொலைத்து அகரமுதற் சொற்களாகி மக்கள் வழக்கில் இடம் பெறும். சக்கரம்> சக்காரம்> அக்காரம். அக்கார வடிசில் = சருக்கரைப் பொங்கல்.  

நுட்பியல் வளர்ச்சியில் மிகுநாள் கழித்து, கருப்பஞ் சாற்றொடு சுண்ணநீர் (Calcium Hydroxide) சேர்த்து, அதில் கரிப்புகையும் உள்ளனுப்பி நுரைக்கவிட்டால், கரிமவேற்றம் (carbonation) ஏற்படும். இதனாற் சாற்றிற் கிடக்கும் புரதங்களைத் (proteins) திரள வைத்து (coagulates), அதே பொழுது கலவைக்குள் உண்டான சுண்ணாம்புத் தூள்களின் (calcium carbonte) மேல், சாற்றிற் கரைந்துள்ள கெழுவங்களைப் (colourants) பரப்பொற்றிப் (adsorb) பிரித்து, பின் திண்மக் கழிவுகளை (solid residues) வடிகட்டி, வெள்ளைச் சருக்கரைச் சாற்றை பெற முடியும். இதற்கப்புறம் வெள்ளைச் சாற்றைப் படிமாக்கினால் வெள்ளைச் சருக்கரைக் குருணைகள் (granules) கிடைக்கும். வெள்ளைச்சருக்கரை வெல்லமென்றுஞ் சொல்லப் பெறும். இங்கும் வெள்ளைச் சருக்கரையை வடிகட்டிப் பிடித்துக் கிடைக்கும் நீர்மம் மெழுகென்றே சொல்லப் பெறும். சுண்ண நீர் சேர்ந்து அயனச்செறிவு (pH) 7 க்கும் மேல் உயர்த்தப்படுவதால் களரிமை (Alkalinity) கூடிக் குளுக்கோசு, விரக்டோசு போன்ற சில ஒற்றைச் சருக்கரைகள் (monosaccharide) சிறிதளவு சிதையலாம். 

வெள்ளைச் சருக்கரை செய்யும் நுட்பம், யுவான் சுவாங் தெற்கே வந்தபிறகு அதன் மூலம் வடக்கே பரவி பின் சீனத்திற்கும் பரவியது. சீனத்தில் வெள்ளைச் சருக்கரையே பெரிதும் விரும்பப் பட்டது. நாளடைவில் இப் புழக்கம் நம்மூரிலும் பரவி வெள்ளைச் சருக்கரையே சீனச் சருக்கரை>சீனி என்றும் சொல்லப்படலாயிற்று.     


No comments: