Saturday, September 25, 2021

Ammonia - நீர்க்காலகை

நம் மூக்கால் உறிஞ்சி நுரையீரலுக்குள் புகும்படி இழுக்கும் காற்று அடிப்படையில் ஒரு வளிக்கலவை ஆகும். இதிலுள்ள ஈரம், நுண்ணளவு வளிகள் ஆகியவற்றைத் தவிர்த்துப் பார்த்தால், ஏறத்தாழ 21% பங்கு அஃககமும் (oxygen), 79% பங்கு nitrogen உம் இக்காற்றிலுண்டு. அஃககமின்றி நாம் உயிர் வாழவே முடியாது. அதே பொழுதில்  nitrogen இன் இருப்பைக் காற்றில் தவிர்க்கவும் முடியாது. (nitrogen ஐ அமைதிக் கொலையாளி - silent killer - என்றும் சொல்வர்.) ஆங்கிலத்தில் தென்னமெரிக்கச் சிலியில் கிடைத்த Nitre எனும் உப்பிலிருந்து இவ்வளி முதலில் பெறப்பட்டதால் இதை Nitrogen (நைட்டரில் கன்றியது) என்றார்.  பிரெஞ்சு மொழியில் இதற்கு Azote - Inert Air என்ற பெயருண்டு. ”அசையாத, வினைசெய்யாத, ” என்று  பிரஞ்சுச் சொல்லின் பொருளமையும். 

தமிழில் இதற்குப் பெயர் தேடும்போது, பிரஞ்சைப் பின்பற்றிக் காலகம் (கால் = அசையாத காற்று) என்ற பெயரை 1969 இல் பரிந்துரைத்தேன். ஆங்கிலப் பெயரின் காரணத்தை அவ்வளவு பொருளுள்ளதாக அப்போது என்னால் ஏற்கமுடியவில்லை. (1969 இல் பல தனிமங்களுக்குத் தமிழ்ப்பெயர் உரைத்துத் எளிமங்களின் முறைப் பட்டியல் ஒன்றை உருவாக்கினேன். அதைச் சீர்படுத்தி வரும் நாட்களில் இணையத்தில் வெளியிடுவேன்.) நீரகம் என்பது முதல் எளிமமான Hydrogen ஐக் குறிக்கும். “நீரினை உண்டாக்கும் வளியம்” என்று அதற்குப் பொருள் தரும் hydro எனும் கிரேக்கச் சொல்லிலிருந்து இப்பெயர் ஏற்பட்டது. இதேபொருளில் தான் நாம் அதை ”நீரகம்” என்கிறோம்.

இற்றை வேதியலில் 1 பங்கு காலகத்தையும், 3 பங்கு நீரகத்தையும் சேர்த்து குறிப்பிட்ட வேதிவினை செய்து ammonia என்ற பொருளை உருவாக்குவர். வேளாண்மையில், அம்மோனியா பெரிதும் பயன்படுகிறது. நம்நாட்டில் பல்வேறிடங்களிலுள்ள உரத் திணைக்களங்களில் (fertilizer plants; நமக்குத் தூத்துக்குடியிலும், சென்னையிலுமுள்ள உரக் கும்பணிகளில்) அமோனியாவும், உமரி (urea)யும் வேறு பல உரங்களும் மானுறுத்தப் (manufacture) படுகின்றன,  அமோனியா திணைக்களம் அந்தக் கும்பணிகளில் பென்னம் பெரியது.

அமோனியா என்ற பெயர் எழுந்த விதம் விதப்பானது. Ammon என்ற கிரேக்க, உரோமச் சொல் எகுபதியரின் சூரியத் தெய்வமான அமுனைக் (இருளில் மறைந்துள்ளவன்) குறிக்கும். [கிரேக்கத்தில் இதேசொல் வியாழனைக் (அப்போலோ) குறித்தது.] பழங்கால எகுப்தில் அமென் ரா (Amen-Ra) என்றும் சூரியக் கடவுளைச் சொல்வர். இச்சொல்லின் வழியே அம்மோனியா என்ற பெயர் அமுன்>அமோன்>அமோனியா என்ற வ்ளர்ச்சியின் படி இடுகுறியாய் எழுந்தது. எளிதில் ஆவியாகக் கூடிய அம்மோனியா வேதிவினைகளில் இது களரியாய் (alkali) நடந்து கொள்ளும்.  அமோனியாவை நுகரும் போது சட்டென மூக்கில் குத்துவது போல் ஒரு நெடி தூக்கும். இந் நெடி வராத உரக் கும்பணிகள் உலகில் கிடையா. 1799 இல் சுவீடன் நாட்டு வேதியலார் Torbern Bergman என்பார்,  லிபியாவில், வியாழக் கடவுளின் கோயிலுக்கு அருகில்,  ammonium chloride உப்புப் படிவங்களிலிருந்து (sal ammoniac என்பதைச் சாரம் என்றும் தமிழில் சொல்லி யுள்ளார்) பெற்ற வளி இதுவாகும்.  

அமோனியா என்ற இடுகுறிப்பெயரை விரும்பாது,  ”நீர்க்காலகை” எனும் காரணப் பெயரை நான் 1969 இல் பரித்துரைத்தேன்.  நீர்க்காலகக் களரி, காடி(acid)யோடு வினைசெய்தபின் ammonium என்ற பொதியகத்தை (cation) உருவாகும். இதை ”நீர்க்காலய-” என்று சொன்னேன். நீர்க்காலகை, நீர்காலய  என்பனவற்றைப் பயன்படுத்துவதில் இதுவரை எச் சிக்கலையும் நான் காண வில்லை. மேற்சொன்ன தனிமங்களின் முறைப்பட்டியலில் "யம்" என முடிந்தால் மாழை என்றும், கம் என்று முடிந்தால் மாழையல்லாதது என்றும் வழக்கம் கொண்டிருந்தேன்.

அலங்க வேதியலில் (organic chemistry) அம்மோனியாவின் ஒரு நீரக அணுவைப் பிரித்து அவ்விடத்தில் ஒரு நீரகக் கரிம வேரியைச் (hydrocarbon radical) செருகினால் ஏற்படுவது நீர்க்காலனை எனப்படும். [amine "compound in which one of the hydrogen atoms of ammonia is replaced by a hydrocarbon radical," 1863]. அமோனியாவில் ஒரு நீரகத்தை எடுத்துவிட்டு, அங்கு ஓர் எளிமத்தையோ, அல்லது இன்னொரு வேரியையோ (radical) பொருத்தினால் வருவது நீர்காலதை (-amide; 1850, word-forming element denoting a compound obtained by replacing one hydrogen atom in ammonia with an element or radical). அதேபோல் imide ஐ நீர்க்காலசை எனலாம்.

அன்புடன்,

இராம.கி. 


No comments: