Friday, September 03, 2021

வாதம்

வாதம் வாதி என்பவை தமிழ்ச்சொற்களா? என்று ஒருமுறை  கேட்கப்பட்டது. இச்சொற்களோடு, வாய், வாயு, வாயித்தல், வாக்கு, வாக்கியம், வாகீசன், வாசித்தல், வாசகம், வாயாடல், வாது, வார்த்தல், வார்த்தை போன்ற சொற்களையும் பார்க்கவேண்டும். இவை தமிழ்வழிப்பிறந்த சொற்கள் என்றால் உடனே மறுத்து அவை சங்கதமென்று சொல்பவரே தமிழரில் மிகுதியாயுள்ளார். இந்த எந்த அளவிற்கு எனில், வாய் தவிர்த்து மேலுள்ள மற்ற சொற்களைச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியே கூட ஒதுக்கும் அளவிற்குப் போயுள்ளது. பேரகரமுதலியைத் தொகுத்தவரே தடுமாறிப் போனார் போலும். ஆழ்ந்து பார்த்தால் அப்படித் தடுமாறியிருக்கவேண்டாம். 

சரி, இவை சங்கதமா என்று பார்க்கப்போனால், vad என்பது பாணினியின் Dhaatupaatam xxiii 40 இலும், vac என்பது Dhatupaatam xxiv 55 இலும் குறிப்பிடப்படும். (இத் தாதுபாடத்தில் ஏறத்தாழ 2200 வேர்ச்சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. vad, vac என்ற இரண்டு வேர்ச்சொற்களுக்கும் speak, say, tell, utter என்று ஒரே பொருள் கொடுத்திருப்பர். இதைப் படித்தவுடன், ”ஒரே பொருளில் ஏன் இருவேறு வேர்ச் சொற்கள்?” என்ற கேள்வியெழும். (2200 வேர்ச்சொற்களின் இயலுமையைக் கிடுக்கி அலசிய ஒரு நூலைக் கூட நான் இதுவரை பார்க்கவில்லை. ஆயினும் பலரிதைக் கேள்வி கேட்கவியலா வேதநூல் போலப் பார்க்கிறார். 2200 வேர்ச்சொற்கள் ஓர் இயல்மொழியில் இருக்கமுடியுமா என்பதும் ஒரு கேள்வி.) 

பேசுதல், சொல்லுதல், கூறுதல், வெளிப்படுத்தலென்ற கருத்துமுதல் வினைச் சொற்கள் எப்படியெழுந்தன? இவற்றிற்கான பொருள்முதல் அடிப்படை என்ன? சங்கதம் பேசிய தொடக்கநிலை மாந்தனுக்கு இதுபோல் கருத்துமுதல் வினைகள் எப்படித் தோன்றின? (ஒரு தமிழ்மாந்தனுக்கு ’நலம்’ என்ற கருத்துமுதற் சொல் முதலில் தோன்றுமா? நெல் எனும் பொருள்முதற் சொல்லிலிருந்து. நெல்லம்>நல்லம்> நலம் எழுந்தது. சாப்பிடக் குறை இலாதவன் நலமோடுள்ளானென்றே நம்மரபில் பொருள்கொள்வோம்.) vad, vac என்ற இரு வேர்ச்சொற்களிலும் வாய் எனும் பேச்சுப் புலன்கருவி சங்கதத்தில் வரவே இல்லையே? வாயிலாது பேச்சுவினைகள் நடக்குமா? தெரியவில்லை. 

சங்கதத்தில் aas எனில் வாய். (அதுவும் ஆசனவாய். முகவாயில்லை) mukha, mukham எனில் முகமென்றும், வாயென்றும் பொருளுண்டு. (தமிழிலும் முகம் உண்டு. தமிழ்முறையில் தலையில் முன்னுவது முகம்.) வக்த்ரம் (vaktram), வதன (vadana) என்ற சொற்களும் முகம், வாயையே குறிக்கும். இச்சொற்களுக்கு வேர்ச் சொல் எதையும் மோனியர் வில்லிம்சு கொடுக்கவில்லை. வாய்க்குத் தனிச் சொல் இல்லாததாற்றான் mukha, mukham, vaktram, vadana போன்ற முகச் சொற்கள் வாய்க்குப் பயன்பட்டனவோ என்ற ஐயமெழும். இதைப் பார்க்காது எப்படிச் சிலர் வாக்கு, வாக்கியம், வாகீசன், வாசகம், வாசித்தல், வாது, வார்த்தல், வாயு போன்றவற்றைச் சங்கதமெனச் சொன்னாரோ தெரியாது. சங்கதமெனில் கேட்பாடு இல்லை போலும். தமிழெனில் எங்களால் முடிந்தவரை மறுமொழி சொல்வோம்.    

இன்னொரு விதமாயும் இச்சிக்கலை அணுகமுடியும். ஒருபக்கம் வக், வத் என்ற வேர்ச்சொற்கள் சுருக்கமாயிருக்க அவற்றைக் கையாளும் புலன்கருவிச் சொல்லோ ஏதோவொன்றின் வழிச்சொல் போல நீளமாயிருப்பது சற்று முரணாய்த் தோற்றுகிறது. (கருவிச்சொல்லான கை/செய் தமிழில் சிறிதாகவும் செய்கை, செய்தலென்ற வழிச்சொற்கள் பெரிதாகவும் இருக்கும். அதுவே இயல்மொழிகளில் வழக்கம்.) வாயெனும் தமிழ்மூலச் சொல்லிலிருந்தே (சங்கதத்தில் இல்லாத அதன் வேர்ச்சொல் விரிவைக் கீழே பார்ப்போம்.) வாய், வாயு, வாயித்தல், வாக்கு, வாக்கியம், வாகீசன், வாசித்தல், வாசகம், வாயாடல், வாது, வார்த்தல், வார்த்தை என்ற எல்லாச் சொற்களையும் சொற்பிறப்பியல் முறையில் நன்றாகவே இனங்காட்டலாம். இப்படிச்சொல்வதற்கு ஓர் ஏரணமும் உண்டு. ஒருமாந்தன் காற்றை உள்ளிழுப்பதும் வெளிவிடுவதும் மூக்காலும், வாயாலுந்தான். பேச்சென்பது வாய்வழிக் காற்றால் வருவது. நம்முடைய முந்தை நூலான தொல்காப்பியத்தில் 

உந்தி முதலா முந்துவளி தோன்றித்

தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப்

பல்லும் இதழும் நாவும் மூக்கும்

அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்

உறுப்புற்று அமைய நெறிப்பட நாடி

எல்லா எழுத்தும் சொல்லும் காலை

என்ற வரிகளின் வழி, ”உந்தியின் (உதரவிதானம். நன்றி: கனடா நாட்டு இளம் முனைவர் பல்மருத்துவர் மேரிகியூரி பாலின் அருமையான விளக்கம் https://www.youtube.com/watch?v=LU866aw5Ac8 ) அதிர்வால் நுரையீரல் விரிந்து சுருங்கி, முந்துவளி தோன்றி, தலை, தொண்டை, நெஞ்சில் (நுரையீரல்) நிலைத்து (பல், இதழ், நா, அண்ணம் சேர்ந்த) வாயாலும் மூக்காலும் உளப்பட்டு 8 வித முறைகளால் உறுப்புற்று, நெறிப்பட நாடி, எல்லா எழுத்தும் சொல்லப்பட்டன” என்பதால் சொல்வதற்கு வாய் கட்டாயம் தேவை என்ற இலக்கணம் விளங்கும். 

வளிக்கு இன்னொரு சொல் வாயு. வாயால் வருவது வாயு (இதையும் பல தமிழர் சங்கதமென்று எண்ணுகிறார்.). வாயித்தல்= வாயு வெளிப்பட்டு அமையும் ஒலிச் செய்கை. ”வாய்திறந்து பேசு, வாய்க்குள் முணகாதே” என்று பிள்ளைகளுக்குச் சொல்கிறோமே? வாயித்தல் என்பது பேச்சு வழக்கில் வா(ய்)கித்தல், வாசித்தலாகும். ககரமும், சகரமும் யகரத்தின் போலிகள். வாயால் காற்றை ஊதுகையில் ”வாஃக், வாஃக்” என்றே ஒலிப்போம். இருமும் போதும் இதேயொலி எழும். வாகித்தலின் பெயர்ச்சொல் வாக்கு. பொருள் நிறைந்து இயம்பின வாக்கு, வாக்கியமாகும். வாகித்தலில் பிறந்த இன்னொரு பெயர்ச்சொல் வா(க்)கீசன். (வாக்கிற்கு ஈசன்). சிவநெறியின் சமயக்குரவர் திருநாவுக்கரசருக்கு இதுவொரு சிறப்புப்பெயர். வாகு*>வாசு* = வாய்வழிக் காற்றோசை; (மூசுதலில் பிறந்த மூச்சுப்போல் வாசு என்பதும் சகரவோசை ஈறு கொள்ளும்.) வாசு+அகம் = வாசகம்; வாசித்தல் = எழுத்திலுள்ளதைப் படித்து ஒலியெழுப்புதல். வாயாடுதல் = வாயால் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளுதல். வாயாட்டு = வாயாடலின் பெயர்ச்சொல். அவள் ஒரு வாயாடி. வாயாட்டு> வாயாது> வாய்து> வாது = இருவேறு மாந்தர் ஒருவருக்கொருவர் வாயாடிக் கொள்வது வாது. வாதின் நீட்சி வாதம். வாயில் நீர் வடிவது/ வெளிப் படுதலை வார்த்தல் என்பார். ஒலிகளை நீராய் உருவகஞ் செய்து வார்ப்பது வார்த்தை. வார்த்தைகள் தொடர்வது வாக்கு. சுறறிச் சுற்றி வாயை ஒட்டியே இத்தனை சொற்கள்.       

இனி வாய் என்ற சொல் எப்படி வந்ததென்று பார்ப்போம். முகத்தில் இருப்பது மட்டும் வாயல்ல. எங்கெலாம் பிளவு தெரிகிறதோ, அதையெல்லாம் வாய் என்போம். ஆசனவாய், புண்வாய், மலைவாய், கணவாய், ஆற்றுவாய் இப்படிப் பல பிளவுகள் உண்டு. வள்ளுதல் என்ற வினை பிரித்தலைக் குறிக்கும். வெட்டுக்காயத்தின் வாயை இணைத்து தைக்கிறோம்/மருந்து போடுகிறோம். அவ்விடத்தில் புதுச் சில்கள் ஏற்பட்டு தோல் சேர்ந்துகொள்ளும் என்று முயல்கிறோம். வள்>வய்>வாய். வள்ளும் கருவி வாள் எனப்படுகிறது. வள்>வழி என்றாகிறது. ஒரு சில பிளவுகள் நீண்டுபோய் வழிகளை உருவாக்கலாம். சில பிளவுற்று ஓரளவில் நின்று போகலாம். பிளவு இயற்கையாலும், மாந்தனாலும் ஏற்படலாம். வள்ளுதலில் பிறந்த சொல் வாய். இந்தப் பொதுமையைச் சங்கதச் சொல் காட்டாது. தமிழில் இயல்பாய்க் காட்டமுடியும். 

வாய்வழி வேறு இந்தையொரோப்பியன் மொழிகளிலும் சில சொற்கள் இருக்கின்றன. காட்டு: voice (n.) late 13c., "sound made by the human mouth," from Old French voiz "voice, speech; word, saying, rumor, report" (Modern French voix), from Latin vocem (nominative vox) "voice, sound, utterance, cry, call, speech, sentence, language, word" (source also of Italian voce, Spanish voz), related to vocare "to call," from PIE root *wekw- "to speak." இன்னும் vocal, vocation, vociferous, vowel, vow, vote எனப் பல சொற்களைக் காட்டமுடியும். (இங்கே ஆங்கிலச் சொற்களைப் பட்டியலிட்டதற்கு வேறு காரணம் ஏதுமில்லை. படித்த தமிழருக்குச் சட்டென்று விளங்குமென்று அப்படிக்கொடுக்கிறேன். மற்ற இந்தையிரோப்பிய மொழிகளிலும் இருந்து கொடுக்கமுடியும். அதுபோல் வட இந்திய மொழிகளிலும் இருந்தும் கொடுக்கமுடியும். ஒரு கருத்தைப் புரிந்து கொள்ள ஒரு சொல் என்று நின்றுகொள்கிறேன்.. பானைச்சோறு வெந்ததற்கு ஒரு சோறு பதம்.)   

வாய் என்ற சொல்லே இல்லாத சங்கதத்திலிருந்து வாக்கு, வாக்கியம், வாகீசன், வாசகம், வாசித்தல், வாது, வார்த்தல், வாயு போன்ற சொற்கள் எழுந்தன என்பது அந்தரத்தில் கோட்டை கட்டுவதாகும். 

இராம.கி.


No comments: