Friday, January 29, 2021

Versus

Versus என்பதற்கான தமிழ்ச் சொல் என்ன? - என்று தமிழ்ச்சொல்லாய்வுக் களத்தில் ஒரு கேள்வி எழுந்தது. அதற்கான என் விடை இது.

-----------------------------   

versus (prep.)

mid-15c., in legal case names, denoting action of one party against another, from Latin versus "turned toward or against," past participle of vertere "to turn," from PIE *wert- "to turn, wind," from root *wer- (2) "to turn, bend."

வாழ்தல் = வழிப்படுதல்; வாழகை>வாடகை>வாரகை = ஓரிடத்தில் அல்லது ஒருவீட்டில் வாழ்தலுக்குக் கொடுக்கும் தொகை. வாழம்>*வாடம்>வாரம் = ஒரு குறிப்பிட்ட நிலத்தை விளைச்சலுக்காக எடுத்து வழிப்படுத்துவதற்குக் கொடுக்கும் தொகை அல்லது பகுதி விளைச்சல். இப்படி ஒரு தொகை கொடுப்பதால் வரம்பிற்குள்ளான உரிமையானது வாடகை, வாரத்தின் மூலம் கிடைக்கிறது. எனவே வாரத்திற்கு = (வரம்புடன் கூடிய) உரிமை என்ற பொருளும் வந்து சேரும். வரியும் (tax) ஒருவகை வாரமே. (அரசாங்க உரிமை). “நடையல்லா வாரங்கொண்டார்” என்பது கம்பராமாயணம் மாரிச.180. 

வாரத்திற்குப் பங்கு என்ற பொருளுமுண்டு. “வல்லோன் புணரா வாரம் போன்றே” - தொல்காப்பியம் பொருள் 622. உரை. 

முடிவில் வாரத்திற்கு (உரிமையின் சார்பால் எழும்) தடைப்பொருளுமுண்டு, (impediment, obstacle. ”வாரம் என் இனிப் பகர்வது” - கம்பரா. அயோத், மந்திரப் 39. 

வாரத்திற்கு வரம்பு என்ற பொருளும் உண்டு. 

வாரம்படுதல் = ஒருபக்கம் சார்தல். to be prejudiced or biased, to show partiality.  குற்றவாளியின் வாரம் போல். குற்றவாளிக்கு மாற்றுவாரமும் உண்டு. வீட்டில் தாழவாரம் என்பது ஒரு பக்கம் சாய்ந்த கூரை. இந்தப்பக்கம் அந்தப்பக்கத்திற்கு வாரமானது என்பதை எண்ணிப் பாருங்கள்.  

வாரம் பிரித்தல் = விளைச்சலைக் குடிவாரம், மேல்வாரம் என்று பிரித்துக்கொள்ளுதல். 

வாரித்தல் = தடுத்தல் to hinder, obstruct. ஆணையிட்டுக் கூறல் to swear.

வாரிப்பு = தடுப்பு/

வாரி = தடை impediment, obstruction.

வாரிது>வாரிதம் = தடை, obstacle. வாரிதத்தை வாரிதை என்றும் சொல்லலாம்.

வாரியிறைத்தல்/வாரிவிடுதல் = சிதறவிடுதல், எனவே அழித்தல்

வாருதல் = கவருதல் “மாதர் வனைதுகில் வாரு நீரால்” (கம்பரா. ஆற்று. 15)  

வழக்கு என்பது உரிமை கோருதல். அந்த வழக்கே versus இக்குச் சரியான இணைச்சொல்.  வாடகை, வாரம், வரித்தல், வாரித்தல், வாரிதம், வாருதல், வழக்கு போன்றவை தொடர்புள்ள சொற்கள் இந்தத் தொடர்பைப் புரியாது சொல்லாக்க முனையவேண்டாம். (வழங்குதலில் எழும் வழக்கும், சட்டச்சிக்கலில் உரிமை வழிவரும் வழக்கும் வேறுபட்டவை).

X versus Y = X வழக்கு Y (விரித்துச் சொன்னால், X ஓடு Y க்கான வழக்கு)

அன்புடன்,

இராம.கி.  

No comments: