Friday, January 08, 2021

மாதுளை

இரானில் பொ.உ.மு.2500 இல்  தொடங்கி பின் எப்போதோ இந்தியா வந்த Punica granatum (பெர்சியனில் அந்நார்)  இன் தமிழ்ப்பெயரான ”மாதுளை”யின் சொற் பிறப்பியலை நேற்றொரு நண்பர் கேட்டார், பெர்சியப் பெயர், அழனியைக் குறிக்கும் anNar (அரபிச்சொல்) வழி  எழுந்திருக்கலாமெனச் சிலரும், பழத் தோலின் துரு (anar; பெர்சியன்) நிறப் பொருத்தத்தால் ”அந்நார்” எழுந்து இருக்கலாமெனச் சிலரும். பண்டை மெசபட்டோமிய அக்கேடியன் சொல் nurmû வோடும்,  சுமேரியன் சொல் nur அல்லது nurma வோடும் தொடர்பிருக்கலாமென சிலரும் சொல்வர். துருக்கி, அசேரி, இந்தி, பஞ்சாபி, உருது, குருது, புசுட்டோ போன்ற மொழிகளில் இன்றும் ”அந்நார்” திரிந்தவண்ணம் பயில்கிற்து,  

பல் விதைகளும், செவ் வழுக்கையும் (red-pulp) கொண்ட, பெரு உருண்டைப் பழத்தை பொ.உ. 1300 இலிருந்து  pomegranate என அழைக்கிறார். இலத்தீனில் ”பல்விதைப் பழம் (pomum granatum)” என்பார்,. pome= apple,fruit; grenate= having grains, from granum= grain (from PIE root *gre-no- "grain"). தமிழில் மொழிபெயர்த்தால் இது ”பல்குருணைப்” பழமாகும். பல மொழிகளிலும், தமிழிலும் கூடப் பழப்பெயர் அளவிறந்த விதையிருப்பால்  ஏற்பட்டுள்ளது. எப்போது இப்பழம் நம்மூர் வந்தது என்று தெரியவில்லை.  2300-2000 ஆண்டுகள்  காலப் பெரும்பாணாற்றுப் படையின் 308, 307 ஆம் அடிகளில், “சேதா நறு மோர் வெண்ணெயின் மாதுளத்து உருப்பு-உறு பசும் காய் போழொடு கறி கலந்து” என்று மாதுளங்காய் பேசப்படும். சிலம்பின் மதுரைக்காண்டம் 16/25 இலும் :”வாள் வரி கொடும் காய் மாதுளம் பசும் காய்” என்று இதே மாதுளங்காய் பேசப்படும். 

”ஓங்கு தெங்கு இலை ஆர் கமுகு இள வாழை மாவொடு மாதுளம் பல” என்பது அப்பர் தேவாரம் 201/3.  ”உடையார் கன மணியோடு ஒண் மாதுளம் பூ - நாலாயி” என்பது நாலாயிரப் பனுவலின் பெரியதிருமொழி :45/1. ”தங்கிய பொன் வடமும் தாள நன் மாதுளையின் பூவொடு பொன் மணியும் மோதிரமும் கிறியும்” என்பது அதே பெரியதிருமொழி 73/2. ”மாதுளம் கனியை சோதி வயங்கு இரு நிதியை வாச” என்பது இராமகாதை, பால காண்டம் மிகை:0 4/1. மாதுளையோடு கழுமுள் என்ற சொல்லையும் நிகண்டுகள் அடையாளங் காட்டும். பரல், காழ், வித்து என்பவற்றோடு ”முத்தும்”விதைகளை உணர்த்தும் முத்துப் பரல், முத்து வித்து எனும் சொல்லாட்சிகள் பார்த்தால் மாதுளையின் சொற்பிறப்பினுள் முத்தின் முகன்மை புரியும்.

முழுமுழு, மொழுமொழு, கொழுகொழு, கழுகழு என்பன ”உருள்” உணர்த்தும் இரட்டைக் கிளவிகள். ”முழு” என்பது நிறைவையும். கோண மூலையிலாத உருண்மையையுங் குறிக்கும். முழுத்து> முழ்த்து> முட்டு> முத்து என்பது ”முழு”வின் இயல்பு வளர்ச்சி, முட்டு>முட்டை, அடுத்த வளர்ச்சி.;  மொழு> மொழுத்து> மொழ்த்து> மொட்டு> மொத்து >மொத்தை= உருண்டை. இது வித்தையுங் குறிக்கும். முடிமழித்த தலையை மொட்டை என்கிறோமே? மழித்தல் கூட மொழுவித்தலில் பிறந்த சொல்லே. மொத்தம்= முழுமை.  மோத்தை= இளந்தேங்காய்; மொட்டு விரியாத பூ; மழுத்திருப்பது> மகத்திருப்பது> மாத்திருப்பது.> மாத்திரை= குளிகை. அளவைக் குறிக்கும் மாத்திரையும், குளிகையைக் குறிக்கும் மாத்திரையும் வெவ்வேறு பொருளன.

மொத்துளம்பழம்= முத்துகள் நிறைந்த பழம். முத்து விதப்பால் பழப்பெயர் உண்டானது, மொத்தளம்பழம்>மோதுளம் பழம்>மாதுளம்பழம்>மாதுளை. மோது,  உருண்டையைக் குறிக்கிறது. மோதகம்= கொழுக்கட்டை (”மோதகம்” சங்கதமெனச் சிலர் தவறாய் எண்ணுவார்.  அது தமிழே.) ”கவவொடு பிடித்த வகை அமை மோதகம்/தீம் சேற்று கூவியர் தூங்குவனர் உறங்க” என்பது மதுரைக் காஞ்சி 626,627. ”காழியர் மோதகத்து ஊழ் உறு விளக்கமும்” என்பது சிலப்பதிகாரம் புகார்க் காண்டம் :6/137. “முட்டா கூவியர் மோதக புகையும்” என்பது மதுரைக் காண்டம்: 13/123. முன்சொன்னது போல் குளிகை= உருண்டை; பெருங்குளிகையைக் குறிக்கும் கோளத்திற்கும் உருண்டைப் பொருளுண்டு. கொழுகொழு>கழுகழு = உருண்டையாக கள்>கழு>காழ் = விதை; கழுமும் உள் = விதைகள் நிறைந்தது; கழுமுள் = விதைகள் உள்ளியது, இச்சொல்லும் மாதுளம்பழம் போன்ற சொற்பிறப்புக் கொண்டதே. 

பரல், பல்லுக்கான பெயர், முத்துப்போல் பல் என்கிறோமில்லையா? பல், பல்+து= பற்று எனும் வினையின் பகுதி. (பல்= வெண்மை என்பது வழிநிலைப் பொரூள். கருத்துமுதல் காரணத்தால் சொற்கள் எழாது. பொருள்முதல் காரணத்தாலே சொற்கள் எழுகின்றன. பற்களின் முதல்வினை பற்றுதல் எனில்,  துண்டாகல் அடுத்தவினையாகும். துண்டி, துண்டாக்கும் பல்லிற்கு வேறு பெயராகும். துண்டி>தண்டி என்பது, சங்கதத்தில் தண்டின்> தந்தின் எனத்திரியும். தண்டி>தாடி>தாடை என்பது பல்லுள்ள எலும்புப்பகுதி, தந்தம் பல்லுணர்த்தும் சங்கதச்சொல். தாடிமாஃ என்பது பரல் போன்றமைந்த மாதுள மொட்டுக்களுக்கான பெயர். It's called daDim (दाडिम्) or daDimi (दाडिमी) in sanskrit. This is the root from where the Hindi/Marathi word 'dalimb' originates. dantabeeja दन्तबीज (the teeth seeded one) and rakhtabeeja रक्तबीज ( the red seeded one).

அன்புடன்,

இராம.கி.


No comments: