Wednesday, January 13, 2021

கடலை

 (வேர்க்) கடலைக்கான (Peanut) சொற்பிறப்பை ஒரு நண்பர் தனிமடலில் கேட்டார். நல்ல கேள்வி. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியில் இதைச் சொல்ல மறந்துவிட்டார். ஏன் மறந்தார்? - என்று தெரியாது, ஆனால் ”கடலைக்கட்டி, கடலைக்கம்பி, கடலைக்காடி, கடலைக்காய், கடலைக் கொட்டை, கடலைச்சுண்டல், கட;லைப் பட்டாணி, கடலைப் பணியாரம், கடலைப் பயறு, கடலைப்பருப்பு, கடலைப்புளிப்பு, கடலைமணி, கடலையிடல், கடலையுருண்டை, கடலையெண்ணெய்” ஆகிய கூட்டுச்சொற்களைக் கொடுத்துள்ளார். வேர்க்கடலை, நிலக்கடலை, கச்சான், கலக்கா, மல்லாட்டை, மணிலாக்கொட்டை என்றெலாம் அழைக்கப்படும் peanut நம்மூரில் உருவானதல்ல. நடுத் தென்னமெரிக்காவில் உள்ள  பிரசீலில் எழுந்து போர்த்துகேசியரால் உலகுக்கு எடுத்துச் செல்லப்பட்ட கடலை அதுவாகும், 

Peanut (n.) 1807; see pea + nut. Earlier, and still commonly in England, ground nut, ground pea (1769). The plant is native to South America; Portuguese traders took peanuts from Brazil and Peru to Africa by 1502 and it is known to have been cultivated in Chekiang Province in China by 1573, probably arriving with Portuguese sailors who made stops in Brazil en route to the Orient. பிலிப்பைன்சு நாடும் போர்த்துக்கேசியர் குடியேற்றத்திற்கு ஆட்பட்டதே. அதன் தலைநகரான மணிலா வழியாக 16 ஆம் நூற்றாண்டில் நமக்கு அறிமுகம் செய்யப் பட்டது. வேர்க்கடலைக்கு முன்  நம்மூர்க் கடலைகளைப் பார்க்கவேண்டும். 

அதற்கும் முதலில் pea (n.) என்ற சொல்லைப் பார்த்துவிடுவோம். "the seed of a hardy leguminous vine," a well-known article of food, early or mid-17c., a false singular from Middle English pease (plural pesen), which was both single and collective (as wheat, corn) but the "s" sound was mistaken for the plural inflection. From Old English pise (West Saxon), piose (Mercian) "pea," from Late Latin pisa, variant of Latin pisum "pea," probably a loan-word from Greek pison "the pea," a word of unknown origin என்று ஆங்கிலச் சொற்பிறப்பியலில் சொல்வார், Klein எனும் சொற்பிறப்பியலார் Thracian or Phrygian என்ற நடுக்கடல் நாடுகளைச் சேர்ந்த பழங்கால மொழிகளிலிருந்து கிளைத்திருக்கலாம் என்பார்..

எனக்கு வேறுமாதிரித் தோன்றுகிறது. தமிழில் வித்து என்பது வித்யு> விஜ்ஜு> bijju>biiju என வடக்கே திரியும். கிரேக்க pison க்கும், சங்கத biiju விற்கும் தொடர்பு இருப்பது போல் தோன்றுகிறது. பயற்று விதைகளைத் தமிழில் பருப்பு என்றே சொல்வோம். பாசிப்பருப்பு ( mudga- green gram), கருப்பு உளுந்து (māṣa- black-gram), கடலைப் பருப்பு (caṇaka- bengal gram), பட்டாணிப் பருப்பு (kalāya-field pea), எள்ளு (tila-sesame), ஆளி (atasī-linseed), கடுகு (sarṣapa- mustard) and மஞ்சிராகப் பருப்பு (masūra-lentils. இது வடக்கே துவரம் பருப்பிற்குப் பகரியாய்க் கொள்ளப்படும். இராகம் = அரத்த நிறம். மஞ்சு = மஞ்சள் நிறம். மஞ்சள், இரத்த நிறங்கள் கலந்த பருப்பு.)

கடலைப் பருப்பை,  கூர்ச்சரம்,  இராசத்தானம், அரியானம், உத்தர/மத்தியப் பிரதேசங்கள், பீகாரில் சணா (Chana) என்றும், பஞ்சாபில் சோலே ( Chhole) என்றும், மேற்கு வங்கத்தில் சோலா (Chola) என்றும்,  ஒடியாவில் பூத்து (Boot) என்றும், அசாமில் புத்மா (Butmah) என்றும்,  மராட்டியத்தில் அர்பரா ( Harbara) என்றும், ஆந்திரத்தில் சணகலு (Sanagalu) என்றும், கருநாடகத்தில் கடலெ (Kadale) என்றும், கேரளத்தில் கடல (Kadala) என்றும்  சொல்லப்படும். தமிழில் சணகம், சணாய் என்றும் சொற்களுண்டு. இரண்டாய்ப் பிளந்து பொட்டிய கடலையைப் பொட்டுக் கடலை என்பார். சங்கதச் சாரக சங்கிதையில்  சணக (Chanaka) என இச்சொல் பயிலும். இதன் விதப்புகளை, இந்தியாவில் வங்கக் குருமம் (Bengal gram. குருனை = grain, குருமம் = gram; பருப்பு = dal) என்றும், மேல்நாட்டில் garbanzo or garbanzo bean or Egyptian pea என்றும் சொல்வார். நடு ஆங்கில மொழியில் cycer என்றும், இலத்தீனில் cicer என்றும். கிரேக்கத்தில் krios, Macedonian கிளை மொழியில் kikerros என்றும்,  ஆர்மீனியனில் siseṙn என்றும் சொல்லப்பட்டுள்ளது.

Cicer arietinum என்று தாவரவியலில் சொல்லப்படும் கடலையானது, Fabaceae குடும்பத்தில், Faboideae துணைக் குடும்பத்தில், உள்ள ஆண்டுப் பயறாகும். (annual legume (n.) - plant of the group of the pulse family from French légume (16c.), from Latin legumen "pulse, leguminous plant," of unknown origin.  பொதுவாகக் குருனைகளைக் காட்டிலும் குருமங்களில் பெருதம் (protein) அதிகம். மரக்கறி சாப்பிடுவோர் குருமம்/ பருப்பை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்பார். கடலைப் பருப்பு, மிக முற்பட்ட காலத்திலேயே இந்தியாவில் பயிராக்கப் பட்டது. இந்தியாவில் பயிராகும் பருப்புகளில் 40% க்கும் மேல் விளைவது கடலைப் பருப்பே. 

நடுக்கிழக்கு நாடுகளில் 7500 ஆண்டுகளுக்கு முன் இருந்த கடலைப்பருப்பின் முந்தைய எச்சங்கள் கண்டுபிடிக்கப் பட்டூள்ள்ளன. கடலைப் பருப்பில் 2 வகைகளுண்டு.  பெரிதானதைக் கொண்டைக் கடலை (கொண்டை போல் மொத்தையானது.  வெளிர் தேன் நிறக் காபூலிக் கடலை - light tan Kabuli என்பர்) என்றும் , வெவ்வேறு நிறங்களில் சிறியதாய் இருப்பதைத் தேசிக் கடலை என்றும் சொல்வர், இரண்டாம் வகைப் பருப்பைச் செடி/கொடிகளிலிருந்து பறிக்கையில் பருப்புத் தோல் பச்சையாகவும். காய்ந்தபின் தேன் (tan), பீது (beige), புள்ளி (speckled), அடர் புகல் (dark brown) கருப்பு (black) என வெவ்வேறு நிறத் தோல்களும் கொண்டிருக்கலாம்.. https://agmarknet.gov.in/Others/bengal-gram-profile.pdf என்ற ஆவணத்தையும் படியுங்கள்.

இனிக் கடலையின் சொற்பிறப்பிற்கு வருவோம். செடி, கொடிகளில் காய்க்கும் கடலைப் பயறுகள் பருப்பிற்கு மேல் தோல்கொண்டதோடு, கடினமான தோடும் (pod) கொண்டிருக்கும். தோடுக்கும் தோல்போர்த்திய பருப்பிற்கும் இடையே சிறிது இடைவெளியிருக்கும். பறித்துக் காயப்போட்ட பின், இடை வெளி சற்று பெரிதாகும். அப்போது தோடோடு பருப்பைக் குலுக்கும் போது குடுகுடு சத்தம் எழும். குடுகுடு>கடுகடு என்பதைக் கடலுதல் = ஒலித்தல் என்பார். கடலும் ஒலியைச் செய்யும் பயறுகள் எல்லாமே கடலைகள் தாம். சங்கதத்தில் śimbīdhānya (grains with pods) என்றழைப்பார்.   பாசிப்பருப்பு, கருப்பு உளுந்து , கடலைப் பருப்பு பட்டாணிப் பருப்பு, எள்ளு, ஆளி, கடுகு , மஞ்சிராகப் பருப்பு  ஆகிய எல்லாமே தோடு கொண்ட கடலை வகைகளே. வெளிநாட்டில் இருந்து வந்த வேர்க்கடலையும் தோடுள்ளதே. காய்ந்த வேர்க்கடலையைத் தோடோடு சேர்த்துக் குலுக்கையில் தோட்டிற்குள் கடகட சத்தம் எழும்.

கடகட என்பது கணகண, சணசண என்றும் ஒலிக்கும். சணகம் என்ற சொற் பிறப்பு புரிகிறதா? கடகட>என்பது கக்கட என்றும் சொல்லப்படும். கக்கட> கக்கர என்பது   Macedonian கிளைமொழியில் உள்ள சொல்லான kikerros என்பதற்கு அருகிலுள்ளது. இதிலிருந்து cicer என்ற இலத்தின் சொல்லும், Cicer arietinum என்ற தாவரப்பெயரும் பிறக்கும். நம்மூர்க் கடலைப் பெயரைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்.

அன்புடன்,

இராம.கி. 


No comments: