Tuesday, January 05, 2021

கணையம் (pancreas)

இச்சொல்லுக்கான சொற்பிறப்பியலை நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். pancreas இன் பொருட்பாட்டைப் பார்க்குமுன், கணையத்திற்கான முந்தைப் பொருட் பாடுகள் என்ன என்று பார்க்கவேண்டும். அதில் முகன்மையானது முரட்டுக் கோட்டைக் கதவுகளை ஒட்டிவரும். ஒற்றைக் கதவாயின், நிலைச்சட்டத்தோடு (door frame) சேருமிடத்திலோ, இரட்டைக் கதவாயின், கதவுகள் சேருமிடத்திலோ நாம் பெரும்பாலும் தாளிடுவோம். தாள், தாள்ப்பாள்/தாழ்ப்பாள் என்பன தனித்த ஓருறுப்புகள் அல்ல. சில வளையங்களும், ஒரு தண்டும் சேர்ந்த கூட்டுச் சினையுறுப்பாகவே தாளைப் பயனுறுத்துவோம்.  

ஒற்றைக்கதவில் 2,3 வளையங்களையும்  நிலைச்சட்டத்தில் ஒரு வளையத்தையும் பொருத்துவர். இவ்வளையங்களுக்குள் சேர்ந்தாற்போல் தண்டு போகும். தண்டு ஒரே தடிமனில் இருக்கத் தேவையில்லை. தலை(க் குண்டு) பெரிதாகி உடல்சிறுத்து முடிவில் வால் ஒல்லியாகியும் இருக்கலாம். வளைய விட்டங்கள், தண்டின் குறுக்குச்செகுத்தம் (cross section) போகுமளவிற்கு இருந்தால் போதும், ஒரு தாளில் படம்போட்டு நான்சொல்வதைப் புரிந்து கொள்க. இதேபோல் தாழ்ப்பாளை இரட்டைக் கதவமைப்பிலும் செய்யலாம். இவ்வமைப்பில் று ஒவ்வொரு கதவிலும் ஒன்றுக்கு மீறிய வளையங்கள் இருக்கும். தாளிலுள்ள தண்டு, அடிப்படையில் நீண்ட கூம்புத்தண்டு தான்  

இது 2 கதவுகளை அல்லது 1 கதவு, நிலைச்சட்டத்தை இணைக்கிறது. இணைப்பதைக் கணுத்தல் என்றும் சொல்லலாம். கரும்பின் ஒவ்வொரு பகுதியும் கணுக்கியே வளர்கிறது. ஒவ்வொரு joint ஐயும் கணு என்கிறோம். கணுவின் வினைச்சொல் கணு-த்தல் என்றாகும்.  கணுவில் விளையும் இன்னொரு பெயர்ச்சொல் கணை. கள்>கண்>கணை என்பது கட்டும் தண்டு. இரு கதவுகளையோ, ஒரு கதவு-நிலைச்சட்டத்தையோ இது கட்டலாம். கள் எனும் வேர் கூட்டப்பொருளில், சேர்ப்புப் பொருளில், எழுந்தது. கணையில் பெரியது கணையம். தொடக்க காலத்தில் கணையம் என்பது, இரும்பால் ஆனதில்லை. பெரும் மரங்களால் ஆனது. இரும்புப் பயன்பாடு கொஞ்சங் கொஞ்சமாய்க் கூடியபின் ஏற்பட்டது. 

கோட்டைக் கதவுத் தாள்களில் பயன்படும் கணையத்தைக் கணையமரம் என்றும் சொன்னார். கணையமரத்தால் பூட்டப்பட்ட கோட்டைக் கதவுகளை உடைக்க ஒரு காலத்தில் யானைகள் பயன்பட்டன. பின் யானைகள் மோதி கதவுடைப்பதைத் தவிர்க்க, வலுவெதிர்ப்புத் தடந்தகை (defense strategy) ஆகக்  கதவுகளில் கூர்க்கூம்புகளைப் பதிக்கத் தொடங்கினார். பின் வலுக்காட்டும் தடந்தகை (offence strategy) ஆகப் யானைத் துதிக்கைகளில் பெருமரங்கள் பொருத்தி கோட்டைக்கதவுகளில் மோதத் தொடங்கினார். இதற்கு மாறாய் இன்னொரு வலுவெதிர்ப்புத் தடந்தகை எழுந்தது. நான் ஒவ்வொன்றாய் விவரித்துக் கொண்டே போகலாம். ஆனால் நீளும்.  ஒன்று மாற்றி ஒன்றென இத்தடந்தகைகள் வளர்ந்து கொண்டே போயின. கோட்டைப்போர்களில் (உழிஞை, நொச்சிப் போர்களில்) முதல்தொடக்கம் கோட்டைக் கதவை மூடித் தாளிடும் கணையமே. கணையம் பேசும் பாடல்கள் மிகுதி. 

இரும்புக் கணையம் கொல்லன் வார்ப்படத்தில் செய்யப்பட்டது. இன்றும் கணக்கற்ற கோயில்களில் கணையங்கள் (அவை நீண்ட உருளைத் தண்டுகளாகவோ, சதுரக் (square) குறுக்குச் செகுத்தம் (cross section) கொண்ட தண்டுகளாகவோ, செவ்வஃகக் (rectangular) குறுக்குச்செகுத்தம் கொண்ட பட்டைத் தண்டுகளாகவோ  அமையலாம்) அரசகோபுரக் கதவுகளை மூடி யுள்ளன. சாமணமாய் கோயிற் கதவுகளை மூடமுடியாது. பெரும் முயற்சி வேண்டும். நம் ஊர்ப்புறங்களில் பெருஞ்செல்வர் மாளிகைகளில், அரண்மனை வீடுகளில், இன்றும் கணையங்கள் உண்டு. செட்டிநாட்டில் பெரும்பாலான வீடுகளில் இவையுண்டு.  உடன் புரிந்துகொள்ளும் வகையில் ஒரு சிறு கணையை, விழியத்திற் காணும் படி கொடுத்துள்ளேன்.    https://www.facebook.com/watch/?v=1544571135592605. இன்னும் பென்னம்பெரிய கணையங்களைக் காட்டும்படி உங்களிடம் படம் இருந்தால் படிப்போர் கொடுங்கள்.



இப்போது கணையத்தோடு, pancreas க்கு ஏற்பட்ட உறவைப் பார்ப்போம். அடிப்படையில் இது ஓர் ஒப்பீடே. உடன் இணைத்துள்ள படங்களைப் பாருங்கள். கதவுகளைக் கணுக்கும் கணையம் போலவே ஒரு தலை, ஒரு கழுத்து, ஒரு உடல், ஒரு வால் இருக்கும் pancreas நம்முடைய கோட்டைக் கதவுக் கணையத்தோடு ஒப்புமை காட்டும். உடல் கணையம் என்பது உதரத்தில் (abdomen) உள்ள ஓர் உறுப்பு.  நாம் சாப்பிடும் உணவை   உடற் சில்களுக்கான எரிமமாய் (fuel for body cells) மாற்றும் உறுப்பாய்க் கணையம் வேலை செய்கிறது. செரிமானத்திற்கு உதவும் வகையில் இக்கணையத்தில் ஒரு புறச்சுரப்பி (exocrine) வங்கமும். (function) குருதிச் சர்க்கரையைக் கட்டுறுத்தும் (control) வகையில் ஓர் அகச்சுரப்பி (endocrine) வங்கமும் வேலை செய்கின்றன.  

ஆங்கிலத்தில் pancreas (n.) என்பதற்கு gland of the abdomen, 1570s, from Latinized form of Greek pankreas "sweetbread (pancreas as food), pancreas," literally "entirely flesh," from pan- "all" + kreas "flesh" (PIE root *kreue- "raw flesh"), probably so called for the homogeneous substance of the organ என்று சொற்பிறப்பியல் சொல்வார்.  *kreue- எனும் PIE வேருக்கு, “*kreuə-, Proto-Indo-European root meaning "raw flesh" என்று விளக்கம் சொல்வார். It is the hypothetical source of/evidence for its existence is provided by: Sanskrit kravis- "raw flesh," krura- "raw, bloody;" Greek kreas "flesh;" Latin crudus "bloody, raw; cruel," cruor "thick blood;" Old Irish cru "gore, blood," Middle Irish cruaid "hardy, harsh, stern;" Old Church Slavonic kry "blood;" Old Prussian krawian, Lithuanian kraūjas "blood;" Old English hreaw "raw," hrot "thick fluid, serum" என்றும் சொல்வர்.

https://valavu.blogspot.com/2021/01/heart-blood-4.html என்ற என் முந்தை இடுகையில் குரு> குரம்> உரம்= குருதி சார்ந்த வலிய தசை என்றும், blood க்கு மாற்றான gore (n.1) என்பதையும் பற்றிச் சொன்னேன். "thick, clotted blood," Old English gor "dirt, dung, filth, shit," a Germanic word (cognates: Middle Dutch goor "filth, mud;" Old Norse gor "cud;" Old High German gor "animal dung"), of uncertain origin பற்றியும் சொன்னேன்.  

இதையே, பேர்பெற்ற சொற்பிறப்பியலார் SKEAT தன் விளக்கத்தில்,  GORE (i), clotted blood, blood. (E.) It formerly meant also dirt or filth. It occurs in the sense of 'filthiness' in Allit. Poems, ed. Morris, ii. 306. <- A. S. gar, dirt, filth ; Grein, i. 520. + Icel. gor, gore, the cud in animals, the chyme in men. + Swed. gorr, dirt, matter. p. Allied to Icel. garnir, gorn, the guts ; Gk. xop5^, a string of gut, cord ; Lat. hira, gut, hernia, hernia. See Fick, i. 580; iii. 102; Curtius, i. 250. ^GHAR, of uncertain meaning. Hence Cord, Chord, Yarn, and Hernia are all related words. Der. gor-belly, q. v., gor-crow, q. v. Also gor-y, Macbeth, iii. 4. 51. G என்று குறிப்பார். 

இது ஒன்றும் தமிழுக்கு அயல் அல்ல. தமிழில் கோரம்  என்கிறோமே? அது என்னவென்று ஓர்ந்து பார்த்திருக்கிறீர்களா? குரு>குரம்>கோரம் என இச்சொல் குருதியோடு தொடர்பு காட்டும். cord என்பதை gore ஓடு ஸ்கீட் தொடர்பு உறுத்துவதையும் பாருங்கள். தமிழுக்கும் இந்தையிரோப்பியனுக்கும் கட்டாயம் ஏதோவொரு உறவு இருந்துள்ளது. நமக்கு அது புரிபடாது இருக்கிறது. மேலே குரம்>உரம் என்று தசைச்சொல்லுக்கும், குரு சார்ந்த அடையாளங் கண்டோமே? அதையும் நினைவு கொள்ளுங்கள்.  pancreas என்பதைக் ”முழுக்குருவம்” என்றும் பயன்பாடு கருதிச் சொல்லலாம். கணையம் என்ற உருவ ஒப்புமைப் பெயருக்கு மாற்றாய், இது பயன்பாட்டுப் பெயராய்  அமையும்.  pancreas ஓடு தொடர்புடைய மற்ற சொற்கள் creatine - குருவணை. குருதியில் இது எவ்வளவு இருக்கிறதென்று பார்ப்பர், நலமுள்ள ஆணுக்கு இது 0.7-1.3 mg/dL அளவிலும்,  பெண்ணுக்கு 0.6-1.1 mg/dL அளவிலும் இருக்கவேண்டும். creosote = குருவஞ் சேமி; cruel = குருவல்;  crude, raw = கரடு.

அன்புடன்,

இராம.கி. 






No comments: