Thursday, February 13, 2020

பொத்திகையும் (Plastic) நெகிழியும் (elastic) - 2

ஆங்கிலத்தில் plastic (adj.) என்பதற்கு, 1630s, "capable of shaping or molding," from Latin plasticus, from Greek plastikos "able to be molded, pertaining to molding, fit for molding," also in reference to the arts, from plastos "molded, formed," verbal adjective from plassein "to mold" (see plasma) என்று வரையறை சொல்வர். molding ஐப் புரிந்துகொள்ள நம்மூர் சுவாமிமலை செப்புப் படிம வேலைக்கு வரவேண்டும்.  முதலில்  மெழுகு முட்டம் அல்லது பாளத்தை (wax cake; கொழுப்பு அல்லது எண்ணெயிலிருந்து உருவாக்கப்படும் பொருள். எளிதில் இளகி உருகக் கூடியதாயும், பல்வேறு கீறல், செதுக்கல் வேலைகளுக்கு உகந்ததாயும் உள்ள பொருள்) எடுத்துக் கொள்ளவேண்டும், மெழுகின் சொற்பிறப்பு எளிது, முல்>மெல்> மெல்கு> மெல்குதல்=  மெதுவாதல், நொய்யாதல், இளகுதல்; மெல்கு> மெழுகு.

இலிங்க மெழுகு, மூசாம்பீர மெழுகு, இரச மெழுகு, தாம்பர மெழுகு, சிவப்பு மெழுகு, உப்பு மெழுகு, கத்தூரி மெழுகு, கோரோசனை மெழுகு, கந்தக மெழுகு, பாடாண மெழுகு, வீர மெழுகு எனப் பல்வேறு மெழுகுகள் வழக்கில் உண்டு.  மெழுகை எடுத்து, அதில் கீறி, செதுக்கிச்  சிற்ப வேலைப் பாடுகளால் படிமம் செய்வர். இதற்கு மெழுகுகட்டுதல் என்று பெயர்.  மெழுகுப் படிமத்தை மெழுகு பொம்மை என்றுஞ் சொல்வர். பின் அதைச் சுற்றி குறிப்பிட்ட வகை களிமண்ணைப் பூசுவார். இக் கருக்கட்டும் பசைமண்ணை மெழுகு மண் என்றுஞ் சொல்வர். மெழுகு மண்ணால் மெழுகுப் பொம்மையை மூடுவதால், பொத்துவதால், மூடும் அச்சை, மெழுகு மூழ்த்து, மெழுகுப் பொத்து என்றுஞ் சொல்லலாம்.

[நீருக்குள் அமிழ்வதை முழுகுதல், மூழ்த்தல் என்கிறோமே? நினைவிற்கு வருகிறதா? அதுவும் இதே பொருள் தான். அங்கே முழுப்பொருளும் நீருக்குள் அடங்குகிறது. இங்கே சேற்றுக் களிமண்ணிற்குள் மெழுகுச்சிலை மூழ்கிறது.  இம் மூழ்த்தில் / பொத்தில் ஓர் ஓட்டையும் போட்டுவைப்பர். மெழுகுச்சிலை உள்ளிருக்க அமையும்  மூழ்த்தை/ பொத்தை உலரவைத்துப் பின் சூளையில் இயட்டுச் சூடாக்குவர். மூழ்த்து/பொத்து சூடேறியபின் இறுகும். உள்ளிருக்கும் மெழுகு உருகும். நன்றாய் இறுகிய மூழ்த்தை/பொத்தைப் பின் எடுத்துத் தலைகீழாக்கி உருகிய மெழுகை வெளித்தள்ளுவர். பின் அதனுள் ஏதேனும் ஓர் உருகிய மாழையை (அது பொன், வெள்ளி, செம்பு, ஈயம், ஐந்துலோகம் என எதுவாயும் அமையலாம்) ஊற்றுவர். 

முடிவில் அதையும் குளிர்வித்து மூழ்த்தை/பொத்தைப் பிரித்து உலோகச் சிலையை வெளியில் எடுப்பர். கிட்டத்தட்ட இதே அமைப்புத்தான் இரும்பை வார்க்கும் வார்ப்பட ஆலைகளிலும் (foundry) நடைபெறுகிறது.  இங்கே உருகிய மாழையை ஊற்றுவதற்கு மாறாய்ப்  பாறைவேதிப் பொருளான plastic ஐயும் ஊற்றலாம். ஊற்றுவதற்கு மாறாய்,  plastic ஐ ஏதோ வகையில் மூழ்த்துள் அடைத்து அதிலேயே உருக்கியும் புதுப் படிமத்தை உருவக்கலாம்.  இப்படி நடப்பதில் plastic இற்கும் மாழைக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இங்கே plastic என்பது நெகிழவில்லை. இளகுகிறது. இளகுதலும் நெகிழ்தலும் வெவ்வேறு செலுத்தங்கள் (processes). நெகிழ்தல் plastic இற்கான குணமல்ல. நெகிழவே செய்யாத plastic கள் உண்டு.

இருவிதமான plastic கள் உண்டு. ஒன்று தெறுமப் பொத்திகை  (=  thermoplastic) A thermoplastic, or thermosoftening plastic, is a plastic polymer material that becomes pliable or moldable at a certain elevated temperature and solidifies upon cooling. கூர்ந்து கவனியுங்கள். இது உயர்வெம்மையில் மூழ்த்தக் கூடியதாய் அமையவேண்டும். இதில் நெகிழ்தல் பற்றிய  பேச்சே இல்லை. வேதியியலில்,  வேதிப்பொறியியலில் அப்படித் தான் புரிதல் இருக்கிறது . நெகிழ்தலுக்கும் plastic இற்கும் தொடர்பே யில்லை. இன்னொன்று தெறுமச் செறிக்கி = A thermosetting polymer, resin, or plastic, often called a thermoset, is a polymer that is irreversibly hardened by curing from a soft solid or viscous liquid prepolymer or resin. Curing is induced by heat or suitable radiation and may be promoted by high pressure, or mixing with a catalyst.
 
மூழ்த்தும் வேலை, மூழ்த்தம் (molding) ஆகும். மெழுகு, மூழ்த்தல் போன்ற தமிழ்க்கலையே மூழ்த்தம் (molding), வார்ப்படம் (foundry; உருகிய மாழையை மூழ்த்தின்/ பொத்தின்/ அச்சின் குழிகளில் ஊற்றிக் குளிர வைத்தல்), கம்மம் (forging; a die is used and forced on the melted metal when that metal is in its semi-solid state), அடைத்துக் கட்டல் (die-casting. This is a metal casting process characterized by forcing molten metal under high pressure into a mold cavity) போன்ற  நுட்பங்கள் வளரக் காரணம் ஆகும். நம்மூரின் செப்புச் சிலை நுட்பமே வார்ப்படம், அச்சு நுட்பியல் வளர்ந்ததின் தொடக்கம்.  இதையறியாது வெறுமே அரைகுறைப் புரிதலில் “நெகிழி  அது இது” என நாம் சொல்லிவருகிறோம்.  முகன நுட்பியல்களுக்கு முன் எந்தப் பழநுட்பியல் இருந்ததென்று ஓர்ந்து பாருங்கள். நம் தமிழ் நாகரிகத்தை நாமே உணராது இருப்பது பெருஞ்சோகம். நம்முடைய பழஞ்சிந்தனைக்கும் இற்றைச் சிந்தனைக்குமான தொடர்பை எடுத்துக் காட்டி தமிழ்ச்சொற்களைச் சொன்னால், சங்கத விழைவோர் தடுக்கென உள்நுழைந்து மறிக்கிறார். தமிழரும் தடுமாறிப் போகிறார்.  நாம் சங்கதத்திற்குத் தொடர்ந்து அடிமையாக வேண்டுமா, என்ன?  ஏன் யாரும் உரத்துப் பேசமாட்டேம் என்கிறார்?

இந்தக் காலத்தில் மூழ்த்த நுட்பியல் பெரிதும் வளர்ந்து சுழற்று மூழ்த்தம் (Rotational Molding), உள்தள்ளு மூழ்த்தம் (Injection Molding). ஊது மூழ்த்தம் (Blow Molding). அமுக்க மூழ்த்தம் (Compression Molding). வெளித்தள்ளு மூழ்த்தம் (Extrusion Molding). தெறுமஉருமிப்பு (Thermoforming) என்று பல்வேறு முறைகள் ஏற்பட்டுவிட்டன.  இதில் மாழைபோலவே சில குறிப்பிட்ட பாறைவேதியல் திண்மங்களும் (petrochemical solids) பயன்படுகின்றன.  பொத்து, மூழ்த்து என்பன அச்சு போன்றவை. பொத்தில், மூழ்த்தில், அச்சில் புகுந்து. பின் குளிர்ந்து வெளிவருவது பொத்திகை. இகுத்தல் = சொரிதல். பொத்து +இகை = பொத்திகை. வார்ப்படத்தில் வெளிவருவது வார்ப்பு (font). கம்மவுலையில் வெளிவருவது கம்மம். 

அவ்வளவு தான் ஐயா. இனிமேலும் நெகிழியை plastic இற்கு இணையாய்ப் பயன்படுத்தாதீர். அது elastic என்பதற்கு இணையானது.

அன்புடன்,
இராம.கி.

1 comment:

பெஞ்சமின் said...

காரணப் பெயரை அறிந்து கொண்டேன் நன்றி.